Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 17’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 17’

அத்தியாயம் – 17

 

ஆன்ட்டிபயாடிக் கொடுத்த மருத்துவர் இன்னும் இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும் என்று சொன்னார்.

அடுத்துத் தொடர்ந்த இரண்டு நாட்கள் சஷ்டியால் படுக்கையை விட்டு எழவே முடியவில்லை.

“லொக் லொக்” என்று இருமிய சஷ்டியிடம் தன் கையிலிருந்த சிக்கன் சூப்பை நீட்டினாள் மீரா.

“என்ன இஞ்சி, மிளகு எல்லாம் போட்டுத் தந்திருக்க… இதுனால என் வாசனை பவர் எல்லாம் போயிடப் போகுது”

“இதுக்கு மேலத்தான் போகணுமா?” முகத்தை சுளித்துக் கொண்டு கப்பைப் பிடிங்கிச் சென்றாள்.

“அடேங்கப்பா… பாத்தும்மா முகம் சுளிக்கிக்கப் போகுது…” என்று சஷ்டி சொன்னாலும் அவன் மனது அவளது கோபத்தைக் கூட ரசிக்கவே செய்தது.

 

இரண்டு தினங்களாக அவள்தான் அவனை ஒரு அன்னையின் பரிவுடன் கவனித்துக் கொள்கிறாள். தன்னால் அவளது வேலைக்குத் தடங்கல் ஏற்படுவது அவனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டு இப்போது உணவு விஷயத்திற்காக சிறுபிள்ளைத்தனமாக பிங்குவுடன் சண்டையிட்டது எவ்வளவு வெட்கக்கேடு. ஆத்திரம் மீறும்போது செய்யும் செயல்களைப் பின்னர் ஆராய்ந்து பார்த்தால் வெட்கித் தலை குனியத்தான் வேண்டும்.

விரைவில் இந்த நிலமை குமரேசனால் ஒரு முடிவுக்கு வந்தது. அது சஷ்டிக்கும் மீராவுக்கும் தெளிவினைத் தந்தது மட்டுமின்றி பிங்குவின் வால்தனத்தையும் சற்று குறைத்தது.

“உனக்குன்னு ஒரு இனிஷியல் இருக்கு சஷ்டி. என்னதான் சண்டை போட்டாலும் நீ செந்தில்நாதன் மகன்தான். உங்கம்மாவும் அவர் மனைவிதான். அதே மாதிரிதான் பிங்குவும். அவனோட தறுதலைத்தனத்தையும் மீறி அவனைப் பாத்துக்க நான் இருக்கேன். அதனால மீராவோட வேதனையை உங்களால உணர முடியல.

பிறந்ததுல இருந்து அம்மாவோட தலை மறைவு வாழ்க்கை. அப்பாவை நினைச்ச நேரம் பார்க்க முடியாது, இன்ப துன்பங்களைப் பகிர்ந்துக்கக் கூட முடியாது. தந்தையின் நேரம் அவளுக்கு ரேஷன் முறையில்தான் கிடைச்சது.

ராஜீவின் காலத்துக்கு பிறகு அவளுக்கு அவளது அப்பாவின் மேல இருக்குற உரிமை மறுக்கப் பட்டது. அம்மாவோட கற்பு இங்க கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கு. இல்லை எங்கம்மா பத்தினிதான். நான் ராஜீவின் மகள்தான்னு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவளுக்குத்தானே. அதனாலதான் அந்த வேகம், வீச்சு… உன்னை படுத்தி எடுத்துட்டா… சாரி ஃபார் தட்…

ஓகே சஷ்டி. நான்தான் மீராவுக்கு தப்பா வழிகாட்டிட்டேன். நீ உடம்பு சரியானதும் கிளம்பு… நான் வேற யாராவது தொழில்முறை பெர்ஃப்யூமர் தேடுறேன்”

அவர் சொன்னது கேட்டு உறைந்து அமர்ந்திருந்தான் சஷ்டி. அவன் ஒப்புக் கொண்டதை விரைந்து முடிக்க வேண்டிய அவசியத்தை அவரது வார்த்தை உணர்த்தியது.

மீராவை அவன் கவனித்ததில் அவள் கண்களில் தெரிந்த வேதனை அவனது மனதையே கசக்கியது போலிருந்தது.

மீராவை அழைத்தார் குமரேசன். அவர் ஒரு வார்த்தை சொன்னதும். ஓவென அழுது விட்டாள் மீரா “அங்கிள் நான் என்ன தப்பு செஞ்சேன்… எனக்கு ஏன் இத்தனை தடங்கல். கெடு முடிய இன்னும் ரெண்டு வாரம் கூட முழுசா இல்ல… சஷ்டி ஸ்டிரைக் பண்றார். என்னால கண்டுபிடிக்க முடியலைன்னா நான் எங்கப்பாவுக்கு மகள் இல்லைன்னு ஆயிடுமா… ”

“பைத்தியம் மாதிரி பேசாதே மீரா… டிஎன்ஏ டெஸ்ட் இல்ல… ராஜீவ் உன் அப்பான்னு நிரூபிக்க தாமதமாகும் அவ்வளவுதானே தவிர அவன் உன் அப்பா இல்லைன்னு யாரும் நாக்குல பல்லு போட்டு சொல்ல முடியாது”

“இருந்தாலும் அப்பாவோட பிராமிஸ்… அவர் கடைசியா தயாரிச்ச சென்ட் சொன்ன நாளில் விற்பனைக்கு வரலைன்னா பெரிய பிரச்சனையாகுமே”

“யெஸ்… அதுக்கு நீயும் சஷ்டியும் கொஞ்சம் ஒத்துழைக்கணும். ம்யூச்சுவல் அக்ரீமெண்ட்”

சரி என்று இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

“மீரா… சஷ்டியை முதலில் பட்டினி போடாதே… ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. சஷ்டி உனக்கு உதவத்தான் வந்திருக்கான். அது மட்டுமில்லாம அவன் ஒரு சிற்பி, ஓவியன் இந்த மாதிரின்னு வச்சுக்கோயேன். நீ இதுவரைக்கும் பார்த்த பெர்ஃப்யூமர் எல்லாம் பாடமா கத்துகிட்டு எஸ்டாப்லிஷ் ஆனவங்க. ஆனால் இவனோ தானா கத்துகிட்டவன். இவனுக்கு ரூல்ஸ் தெரியாது ஆனால் உணர்ந்து அனுபவிச்சு அதே வேலையை செய்ய முடியும்.

இன்னொன்னு தெரிஞ்சுக்கோ உங்கப்பாவும் இப்படித்தான் வேலையை ரசிச்சு செய்றவன். அவனால முடிஞ்சா ஏன் சஷ்டியால முடியாது.

 

சக்திக்கு ப்ரீடம் ரொம்ப முக்கியம். அவன் மனசு முழுசும் நீங்க செய்ற சின்ன சின்ன இடையூறுல டிஸ்டர்ப் ஆனால் நஷ்டம் என்னவோ உனக்குத்தான்”

தலை குனிந்தாள் மீரா.

“சஷ்டி… நீ கேம்ப்பிங் பாரெஸ்ட் ஏரியா போகும்போது இப்படித்தான் இட்லி வேணும் பிரியாணி வேணும்னு அடம் பிடிப்பியா”

இப்போது தலை குனிவது சஷ்டியின் முறை.

“பழம், பன்னு, பிஸ்கட் டீன்னு எத்தனை வாரம் பசியோட சுத்திருக்க… அப்பெல்லாம் சாப்பாட்டை உன் மனசு தேடுச்சா”

இல்லை என்று சஷ்டிக்கு அப்போதுதான் உரைத்தது. குமரேசனே தொடர்ந்தார்

“இருந்திருக்காது… ஏன்னா அப்பல்லாம் முழு மனசும் செய்ற வேலைல இருந்தது. இப்ப சின்ன சின்ன விஷயதுக்கும் டென்ஷன் ஆறன்னா முழு மனசும் உன் வேலைல இருக்கா… முழு ஈடுபாடு இல்லைன்னா நீ நாளைக்கே ஜல்லிப்பட்டிக்குக் கிளம்பு” என்றார் கறார் குரலில்.

 

“சாரி மீரா… நாளைலேருந்து வேலை ஆரம்பிக்கிறோம். நாளைக்கு முதல் வேலையா உங்க அப்பாவோட சென்ட்டைக் காமி” என்றான்.

சரியென மீரா தலை அசைத்ததும்தான் சஷ்டிக்கு நிம்மதியாக இருந்தது. அவனுக்கு இன்னொரு பெரிய சோதனை வேறு புதிதாக முளைத்திருக்கிறது. இந்தக் காதல் நறுமணம் வேறு அவனை பல நாட்களில் தூங்க விடுவதில்லை.

இந்த மீரா வேறு ஒவ்வொரு முறையும் வாசனை திரவியத்தை அவளது  கைகளில் தடவிக் கொண்டு சோதித்துப் பார்க்க சொல்கிறாள். அதுவே வர வர பெரும் சோதனையாக சஷ்டிக்குப் படுகிறது. அதன் விளைவால்  தினமும் விதவிதமான உடைகளில் கனவில் கூட மீரா வர ஆரம்பித்திருக்கிறாள்.

அதுவும் காய்ச்சலின் போது அன்புடன் கவனித்துக் கொண்ட சமயத்தில் முத்தமிடும் நெருக்கத்தில் கனவில் வந்த பெண்ணின் முகம் மீராவின் முகம் போலவே தோன்ற திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.

இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லையே என்ற கவலையோடே சஷ்டி நடமாடிக் கொண்டிருக்கிறான்.

***

காலை உணவின் போது இட்லி சட்னியைத் தனது தட்டில் கண்டதும் கேள்வியோடு மீராவைப் பார்த்தான் சஷ்டி.

“சாரி சஷ்டி. உங்களை சிரமப் படுத்தும் வேலை எதுவும் செய்ய மாட்டேன். இதுவரை உங்களோட வொர்க்ல எந்த ஒரு தேக்கமும் இல்லை. அதே ப்ளோல போகலாம்”

“புரியல”

“இந்த கேமில் விளையாடுற எல்லாருக்கும் ஒரே கோல், ஒரே வேவ்லெந்த் இல்லைன்னா கஷ்டம் சஷ்டி. உங்களுக்கு விருப்பமில்லைன்னா தொடர வேண்டாம். நான் தப்பா நினைக்க மாட்டேன்”

அவளை ஆழ்ந்த பார்வை பார்த்தவன் “ஒரு வேலையை ஆரம்பிச்சுட்டு பாதில விடுறது எனக்குப் பிடிக்காது. நீ ஆரம்பிச்ச, நான் உன்னோட இணைஞ்சேன், நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வெற்றிகரமா முடிக்கிறோம்” என்றான் உறுதியான குரலில்.

ஒரு விள்ளல் உணவை எடுத்து உண்டான்

“மிளகாய் சட்னி இருக்கு. உங்களுக்குப் பிடிக்குமே” கிண்ணத்தை அவனருக்கே நகர்த்தினாள்.

“இன்னைக்கு யார் சமைச்சது”

“சமயலுக்கு அங்கிள் ஒரு லேடியை ஏற்பாடு பண்ணிருக்கார்”

“சரி… காரம், மசாலா இல்லாம உப்பு, புளிப்பு அளவோட போட்டு சமைக்க சொல்லு. முக்கியமா மிளகாய் சட்னி வேண்டாம்” என்றான் அவள் கண்களை நேருக்கு நேர் சந்தித்தவாறே.

“நம்ம ரெண்டு பெரும் இனிமே முழு மூச்சோட வேலையை ஆரம்பிக்கலாமா”

“யெஸ் சாப்பிட்டுட்டு லேபுக்கு போயிடலாம்”

மீரா காண்பித்த அந்த இளஞ்சிவப்பு திரவியத்தை பார்த்தவன் அப்படியே முகர்ந்து பார்த்தான்.

“நீங்க மறுபடியும் என் கூட சேர்ந்து வொர்க் பண்ணுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை சஷ்டி”

“நானும் நினைக்கல, அதுவும் நீ அன்னைக்கு சிவெட் காப்பி தந்தனுப்பி அதை வாந்தி எடுத்தேனே…. அதுக்கப்பறம் இந்த சோதனை எல்லாம் தேவையான்னு நினைச்சு எத்தனையோ நேரம் காண்டாயிருக்கேன்”

“ஓ மை காட்… சிவெட் காப்பியா அதெல்லாம் உங்களுக்குத் தருவேனா சஷ்டி, இப்படியெல்லாம் யாரு கதை சொன்னது… பிங்குவா…”

“வேற யாரா இருக்க முடியும்”

“சிவெட் காப்பி வாங்கித் தர்ர அளவுக்கு எல்லாம் எனக்கு வசதி இல்லை. எங்க ஊரு ஸ்பெஷல் காப்பிதான் தந்தேன்”

இருவரும் பேசிக் கொண்டே மீராவின் அறைக்கு செல்ல, தனது தந்தையின் பெர்ஃப்யூமை எடுத்துக் காண்பித்தாள். அப்படியே தனது கைகளில் சிறிது தடவிக் கொண்டு “இதை நம்ம மேல தடவும் போது நம்ம உடம்போட வாசத்தோட கலந்து ஒரு பிரேத்யேகமான வாசம் வரும். இது பெண்களுக்கான சென்ட் அதனால பெண்கள் தடவும்போது வரும் வாசம் மனசை மயக்கும்” என்றாள்.

அந்த சின்னஞ்சிறு பாட்டிலின் மூடியைத் திறந்த சஷ்டி, இளையராஜாவின் இன்னிசையை ரசிப்பது போல கண்மூடி ரசித்து முகர்ந்தான். அப்படியே அந்த வாசம் அவன் மனதில் நுழைந்தது. இதுவரை அவன் அறிந்திருந்த உலகத்தின் சிறந்த இயற்கை மணம் அனைத்தும் ஒன்றாய் கலந்தது போல அப்படியே அவனது மனதில் பதிந்தது.

 

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்.

இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்.

 

அவனது கரங்கள் அப்படியே மீராவின் கரங்களைப் பற்றியது. பார்த்தாலே தள்ளாட வைக்கும் ஒரு பூங்கொத்தாய் தோன்றினாள் அவள்.

“இந்த சென்ட்தானே இப்ப உன் கைல தடவியிருக்க மீரா” என்று மெதுவாகக் கேட்ட சஷ்டி அவள் பதிலளிப்பதற்கு முன்பே அவளது கரங்களைப் பற்றி முகர்ந்தான். பெர்ஃப்யூமின் மணம் அவளது இயற்கை வாசத்துடன் கலந்து சஷ்டியை சொர்க்கலோகத்திற்கே இழுத்துச் சென்றதைப் போன்ற ஒரு உணர்வு.

 

“மீரா… உன் வாசம் பூ வாசமா இல்ல பூவெல்லாம் உன் வாசமா… “ அவன் கண்கள் தன்னால் மூடின.

நம்ப முடியாத உணர்வில் “சஷ்டி… “ என்றாள் மீரா.

“உஷ்… “ என்று அவனது விரல்கள் அவளது இதழ்களில் மூடின. அப்படியே அவற்றின் வடிவத்தை அளந்தன.

“எங்கிருந்து வந்து என்னை இப்படி மயக்குற மீரா… “ என்றான் தாபத்தோடு.

இருவரின் மனதிலும் ஒரு விதை விழுந்து அந்த வேகத்திலேயே முளைத்து வளர்ந்து காதல் பூ மலர்ந்து மனம் நிறைய மணம் பரப்பியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’

அத்தியாயம் – 3 சஷ்டிக்கு குமரேசன் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவனது தந்தை செந்தில்நாதன் மருத்துவத் துறையை தேர்ந்தெடுக்காததால் பல சமயங்களில் கடுப்பாகி பணம் அனுப்பத் தகராறு செய்வார். ஒவ்வொரு முறை மேல்படிப்பிற்கும் ஷஷ்டி அவரிடம் போராட்டமே நடத்த வேண்டி

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’

அத்தியாயம் – 4 நரேஷ் மல்ஹோத்ரா மும்பையின் மிகப் பெரிய புள்ளி. ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட், ஐடி போன்ற இன்றைய பணம் கொழிக்கும் தொழிலில் முதலீடு செய்து சமீபத்தில் பணக்காரர் ஆனவர் இல்லை. தலைமுறைப் பணக்காரர். அவரது தாத்தா காலத்தில்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 23’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 23’

அத்தியாயம் – 23 நரேஷின் மும்பை இல்லம். இரவு உணவின் போதுதான் மீரா மற்றும் குட்டி ரேணுவின் டிஎன்ஏ ரிசல்ட்டைப் பற்றி குடும்பத்தினர் பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு பெண்களும் அந்தக் குடும்பத்தினர்தான் என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல அதில் சொல்லியிருந்தனர். “இதை