Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 16’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 16’

அத்தியாயம் – 16

 

இடைவிடாத பயிற்சியால் அடுத்த நாலைந்து நாட்கள் எப்படி ஓடியது என்றே யாருக்கும் தெரியவில்லை. சஷ்டி புலிப்பாய்ச்சலில் கற்றுக் கொள்ள , பிங்கு புளிப்பாய்ச்சலில் பின் நடந்துவர , மீரா புழிப் பாய்ச்சலில் அவர்களைப் பிழிந்து எடுத்துக் கொண்டிருந்தாள்

இன்னைக்கு இந்த சென்ட்டில் இருக்கும் மூலப் பொருட்களை ஒழுங்கா கண்டுபிடிச்சுட்டீங்கன்னா உங்களுக்கு ஜாப்பனீஸ் சுஷி செஞ்சுத் தருவேன் என்று ஆசை காட்டியிருந்தாள்..

“எனக்கு அதெல்லாம் வேணாம் சாதம்தான் வேணும்” என்று சஷ்டி அடம்பிடிக்க, சரி சொல்லியிருந்தாள். அது தந்த உற்சாகமோ என்னவோ  விடியற்காலையிலிருந்து  மாங்கு மாங்கென்று உழைத்து ரெண்டு பேரும் சமர்பித்த மூலப் பொருட்களின் லிஸ்ட் தொண்ணூறு சதவிகிதம் சரியாக இருந்தது.

“ச்சே… எவ்வளவு கஷ்டப்படும் நூறு பர்சண்ட் வாங்க முடியலையே” என்று பிங்கு அங்கலாய்க்க

“நூறு சதவிகிதம் கஷ்டம்தான்… சில ரகசியமான மூலப் பொருட்களை கண்டுபிடிக்கிறது கஷ்டம். ரொம்ப நேரம் வேலை செஞ்சுட்டோம் நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க. நான் சமைக்கிறேன்”

“எப்படியும் இன்னைக்கு ரிலாக்ஸ்தானே மீரா… ஒரு டம்ளர் மசாலா டீ போட்டுத் தாயேன் ப்ளீஸ்” என்று கெஞ்சினான் சஷ்டி.

“சரி அதில்லைன்னா காலைல சாப்பிட்ட பிரட் அப்படியே வயித்தில் தூங்குது. அது செரிக்கணும்னா ஒரு இஞ்சி டீ தாயேன்”

அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது மீராவுக்கு. ஓவராத்தான் போறோமோ. “அது மட்டும்தானா… “

“கூட ஒரு மிளகாய் பஜ்ஜி”

“சஷ்டி… கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணா ஓவரா போறீங்க” என்றவாறு அடுப்படிக்கு சென்றாள்.

“காப்பி வேணும்னா கேட்டேன். இந்த சென்ட்டு சாம்பிள்ல ஒண்ணு காப்பி வாசம். அதை மோந்து பாத்ததிலிருந்து ஒரு கப் காப்பி குடிக்கணும் போலிருக்கு. ஆசையை அடக்கிட்டு இருக்கேன்”

“காப்பிதானே தரேன்… “ என்று அங்கிருந்தே பளிப்பு காட்டியவள் பின்னர் சிரித்துக் கொண்டவளாக பிங்குவை அழைத்தாள்.

“டே பிங்கு உங்க ரெண்டு பேருக்கும் காப்பி போட்டிருக்கேன் இந்தக் கப்பைக் கொண்டு போயி சஷ்டிகிட்ட தா”

“சஷ்டிக்கு எதுக்கு காப்பி. அப்பறம் மூக்குல சென்ஸ் போயிடும். அதெல்லாம் வேண்டாம்”

“ஹேய் பாவம்டா அவர். எப்படி வாயக் கட்டிட்டு உக்காந்திருக்கார் தெரியுமா” சொல்லும்போதே மீராவின் கண்களில் தெரிந்த அபிமானம் கலந்த அன்பு பிங்குவை வெறுப்பேற்றியது.

“மீராக்கா… சஷ்டிக்கு இப்படி ரிலாக்ஸ் பண்ண, அப்பறம் எல்லாத்துலயும் ஸ்டிரைக் பண்ணுவாப்புல. நீ சீக்கிரம் ஆராய்ச்சியை முடிச்சு அனுப்பிவிடுற வழியைப் பாரு”

“அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ இந்தக் காபியக் கொண்டு போயித் தரியா இல்ல நான் தரட்டுமா?”

“சஷ்டி மாதிரி ஒரு திமிரு பிடிச்ச பிறவியை நீ எங்கயுமே பார்க்க முடியாது. இந்தக் காப்பியைத் தந்ததும் குடிப்பான்னு நினைக்கிறியா… காப்பியா இது, எங்கம்மா போட்டது மாதிரி இல்லைன்னு ஏகப்பட்ட குறை சொல்லுவான். அவனக் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு நிலமை பரிதாபம்தான்”

“பேசினது போதும். காபியே ஆறி போச்சு புதுசு சூடா போட்டுத் தரேன் சஷ்டிகிட்டத் தந்துடு” என்றவாறே புதிய காப்பியைத் தயாரித்துத் தந்தாள்.

“எனக்கு புது காப்பி மீராக்கா”

“உன்னாலதான் புதுசு போட்டிருக்கேன். அதனால நீ ஆறின காப்பியையே சுட வச்சு குடிச்சுக்கோ”

உனக்கு புது காப்பி எனக்கு சுட வச்ச காப்பியா இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு காட்டுரேண்டா… பல்லைக் கடித்தவண்ணம் காப்பி கப்பை எடுத்துக் கொண்டு போய் சஷ்டியிடம் தந்தான் பிங்கு.

“சஷ்டி மாமா… உனக்காக மீராக்கா ஸ்பெஷல் காப்பி போட்டுத் தந்திருக்காங்க”

“காப்பியா? எங்க குடு குடு” ஆவலாக வாங்கி ஒரு வாய் பருகிவிட்டு அதன் மணம் சுவையை கண்மூடி அனுபவித்தான் சஷ்டி.

“சூப்பர்டா… உங்க அக்கா காப்பி சூப்பரா போடுறாங்க”

“உங்களுக்காக மீராக்கா தனியா போட்டது”

“ம்… “ என்ற சஷ்டியின் முகத்தில் வெட்கம் தாண்டவமாடியது.

“சஷ்டிக்காக ஸ்பெசலா வாங்கின காப்பியாம் இது. பேரு ‘கோப்பி லுவாக்’ காப்பி. விலை எவ்ளோ தெரியுமா ஒரு கிலோ காப்பித்தூள் ஆயிரம் டாலர்”

“ஆயிரம் டாலரா? அப்படி என்னடா ஸ்பெஷல் இதுல? தங்கத்தூளைக் கலந்தாங்களா”

“சொல்றேன் சொல்றேன். இந்த மாதிரி அரிய தகவலை உன்கிட்ட சொல்றதை விட வேறென்ன எனக்கு வேலை. காப்பி பெர்ரி இருக்கே அது நல்ல சிவப்பா முழுசா பழுத்ததுதான் ஹை க்வாலிட்டி காப்பி தரும். அந்த மாதிரி முழுமையா பழுத்தது மட்டும் எடுத்து, காப்பிக் கொட்டையை அரைச்சு தயாரிச்சதுதான் இந்தக் காப்பி”

“ஒவ்வொரு செடிலயும் நூத்துக்கணக்கா காப்பி பெர்ரி இருக்குமே. அதில் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு நாள் பழுக்குமே… பாத்துப் பாத்துப் பறிக்கணும். பெரிய வேலைதான். இருந்தாலும் காப்பி நல்லாவே இருக்கு.”

“நூறு பெர்ரி இருந்தால் நூறு நாளைக்கு அதைக் கண்காணிக்க முடியுமா… அதுக்குத்தான் ஒரு குறுக்கு வழி இருக்கு”

“அதென்ன குறுக்கு வழி இப்பத்தான் ‘மெஷின் லெர்னிங்’ அது இதுன்னு சொல்றீங்களே அதை வச்சு ஒவ்வொரு பழமும் எப்ப பழுக்கும்னு கால்குலேட் பண்ணிப் பழம் பறிக்கிறானோ?”

“அதெல்லாம் கால்குலேட் பண்ணா ஒரு ஸ்பூன் காப்பி தூளே ஆயிரம் டாலருக்கு வந்துடும். சீஃப் அண்ட் ஈசியா இவங்க என்ன செய்றாங்கன்னா… சிவெட் காட்னு காட்டுப் பூனை ஒண்ணு இருக்கு அதைக் கேள்விப் பட்டிருக்கிங்களா”

“தென்னை மரத்தில் தேங்காயைப் பறிக்கக் குரங்குக்கு ட்ரைனிங் குடுத்த மாதிரி காட்டுப்பூனைக்கு பெர்ரி பறிக்க ட்ரைனிங் தர்ராங்களாக்கும்”

“முழுசா கேளுங்க சஷ்டி மாமா…. இந்தப் பூனையோட சாப்பாடே நல்லா பழுத்த காப்பி பெர்ரிதான். பூனை காப்பி தோட்டத்து பெர்ரி எல்லாம் சாப்பிட்டதும் வயத்தில் பழம் எல்லாம் செறிச்சுட்டு காப்பிக் கொட்டை மட்டும் அப்படியே இருக்குமா… “

சஷ்டியின் முகம் அப்படியே பொலிவிழந்து மாறியது “அதுக்கு”

“பூனைக்கு ஒரு குணம் உண்டு. அது காலைக்கடன் குத்து மதிப்பா ஒரே இடம்தான். அந்த இடத்தை மட்டும் மார்க் பண்ணிட்டு வெயிட் பண்ணா போதும். காலைல அதோட வயத்தில் இருந்து வெளிவர செரிக்காத காப்பிக் கொட்டையை எடுத்துக் காய வச்சு அரைச்சா சூப்பர் க்வாலிட்டி காப்பி தயார். அதுதான் நீங்க குடிச்சது”

அவன் முடிக்கும் முன் வாயைப் பொத்திக் கொண்டு பாத்ரூமுக்குள் ஓடிய சஷ்டி வயிற்றிலிருந்து குடல் வாய் வழியே விழுந்துவிடும் அளவுக்கு வாந்தி எடுத்தான்.

அவன் வாந்தி எடுக்கும் ஓசையைக் கேட்டு அறைக்குள் ஓடி வந்த மீரா “என்னாச்சு பிங்கு. சஷ்டி ஏன் வாந்தி எடுக்குறார்”

“சஷ்டிக்கு நீங்க போட்டுத் தந்த காப்பி வாந்தி வர்ற மாதிரி இருக்குதுன்னு சொன்னார். அப்படியே எடுத்துட்டார். மீராக்கா நீ ஸ்பெஷல் காப்பில அப்படி என்ன போட்ட”

“ச்சு சும்மா இருடா… சஷ்டி என்னாச்சு சஷ்டி? ஏன் வாந்தி எடுக்குறிங்க?”

அவளைக் கடுப்பாக முறைத்தவண்ணம் முகத்தைத் துடைத்தபடியே வெளியே வந்த சஷ்டி “அம்மா தாயே உன்கிட்ட தெரியாம காப்பி, டீ கேட்டுட்டேன். இனிமே எனக்கு நீ காப்பி டீ எதுவும் போட்டுத் தர வேண்டாம். வழக்கம் போல க்ரீன் டீ பாக் எடுத்து வச்சுரு. நானே சுடுதண்ணில போட்டுக் குடிச்சுக்குறேன்”

என்றவண்ணம் மிச்சமிருந்த காப்பியை சிங்கில் கொட்டியவனைப் பார்த்து கடுப்பானாள் மீரா.

“போனாப் போகுதுன்னு ஊரிலிருந்து வாங்கிட்டு வந்த ஸ்பெஷல் காப்பியை உங்களுக்குப் போட்டுத் தந்தேன் பாருங்க. என்னை சொல்லணும்”

“மீரா.. உன் கூட சண்டை போடக் கூடத் தெம்பில்லை. அதனால மத்தியானம் சாப்பாட்டையாவது சாப்பிடுற மாதிரி செய்” என்று சொல்லிவிட்டு சோர்வாக அறைக்குச் சென்றான்.

“பிங்கு நீ சொன்னது உண்மைதாண்டா… இந்த சஷ்டிக்குக் கொழுப்பு அதிகம்தான்”

“அந்தக் கொழுப்பைக் குறைக்க இப்பவாவது நான் சொல்ற மெனு படி சமை” என்றான் பிங்கு.

மதிய உணவு நேரத்தில் டைனிங் டேபிளில் இருந்த உணவினைப் பார்த்த சஷ்டி கடுப்பானான்

“மீரா நீ சொன்ன எல்லாமே ஒழுங்கா செய்றேன். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது நல்ல சாப்பாடு போடக் கூடாதா?”

“இதைவிட என்ன நல்ல சாப்பாடு? சஷ்டி சோறுதான் சாப்பிடுவேன்னு அடம்பிடிச்சாதால மீராக்கா எவ்வளவு கஷ்டப்பட்டு மோர்சாதமும் முட்டையும் செஞ்சிருக்காங்க. இன்னைக்குன்னு ஸ்பெஷல் ட்ரீட்டா அப்பளம் வேற… இதுக்கு மேல என்ன சாப்பாடு வேணும்” என்றான் பிங்கு.

“மோர்சாதத்துக்கு யாராவது வேக வச்ச முட்டையும், அப்பளமும் தொட்டு சாப்பிடுவாங்களாடா? “

“சரி சஷ்டி இது வேண்டாம்னா ரெண்டு டீஸ்பூன் சக்கரை போட்டு பால்சாதம் தரட்டுமா?” மீரா அப்பாவியாய் கேட்டாள்

“நாளைலேருந்து அரிசி கழுவின கழனித் தண்ணி இருந்தா அந்த சட்டில ஊத்தி வை. குடிச்சுட்டு வேலையைப் பாக்குறேன்” என்றான் சஷ்டி முகம் சிவக்க

“அதுவும் நல்லதுதான். உடம்புல இருக்குற கொலஸ்டிரால் குறையும்” என்றபடி பிங்கு சின்ன ஊறுகாய் பொட்டலத்தை மீரா கவனிக்காத சமயம் ரகசியமாய் சஷ்டியிடம் காட்டியபடி பிய்த்து நாக்கில் தடவிக் கொண்டான்.

“டேய் பிங்கு… இதெல்லாம் அநியாயம்… மீரா இவன் ஊறுகாய் சாப்பிடுறான் பாரு”

“சஷ்டி மாமா… நீ உன் மூக்கை காப்பாத்திக்க விரதமிருக்க… பட் நான் இங்க ஒரு சாதாரண எடுபிடிதான். அதுவும் மீரா அக்காவுக்காக மட்டும்தான். நான் ஊறுகாய், மீன் வறுவல், கோழிக் குழம்பு, மட்டன் பிரியாணி எது வேணும்னாலும் சாப்பிடலாம்” என்று வெறுப்பேத்தினான் பிங்கு.

சொல்லி அவன் முடிப்பதற்குள் காலிங்க்பெல் சத்தம் கேட்க, “அட ஆர்டர் பண்ண பீட்ஸா வந்துருச்சு போலிருக்கே… வர்ட்டா…”  சிறிது நேரத்தில் சீஸின் மணம் வீடெங்கும் பரவ விட்டபடியே ரசித்து கமெண்ட் செய்துக் கொண்டே சாப்பிட்டான் பிங்கு.

“மீராக்கா… வெளிய மழை அடிச்சு ஊத்துது… அந்த நேரத்தில் சூடா பீட்ஸா… அதுவும் இப்படி டேஸ்டா… ஒரு வெரைட்டியை  நான் சாப்பிட்டதே இல்ல”

“ஹே… நீ இதைக் காமிச்செல்லாம் என்னை வெறுப்பேத்த முடியாது தம்பி. எனக்கு பீட்ஸால்லாம் பிடிக்காது” என்றான் சஷ்டி கிண்டலாக

“சஷ்டி மாமா இது ஸ்பெஷல் தமிழ் பீட்ஸா”

“தமிழ் பீட்ஸான்னா… ஊத்தப்பமா”

“ஊத்தப்பம் மாதிரியே பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு காரசாரமா இருக்கு. உனக்குத்தான் மூக்கு நீளமாச்சே. இதெல்லாம் எட்டலையா”

அவ்வளவு நேரம் பசியில் காது மட்டுமின்றி மூக்கும் சேர்த்து அடைந்திருந்ததை உணர்ந்தான் சஷ்டி.

“டேய்… மஷ்ரூம் மசாலா கூட போட்டிருக்கு போல”

“பரவால்ல… உன் மூக்கு பவர்புல் மூக்குன்னு நான் ஒத்துக்குறேன்”

“டேய் பிங்கு… இதெல்லாம் வேணும்னே சஷ்டியை வெறுப்பேத்தத்தானே பண்ற” என்றாள் மீரா கடுப்பாக

“அய்யோ மீராக்கா சத்தியமா சஷ்டியை வெறுப்பேத்தத்தான் பண்றேன். சஷ்டியால எத்தனை அடி வாங்கிருக்கேன் தெரியுமா… அதுக்கெல்லாம் பழி வாங்க வேண்டாம்… பழிக்குப் பழி, புளிக்குப் புளி…

இதுக்கே அசந்தா எப்படி சஷ்டி? நாளைக்கு வேற புளியோதரையும், உருளைக்கிழங்கு கார வறுவலும் என் பிரெண்டு எடுத்துட்டு வர்றான்”

கோவமாய் எழுந்து சென்ற சஷ்டி பிரிட்ஜைத் திறந்தான் அதில் சாக்கோபார் ஐஸ்க்ரீம் தவிர வேறொன்றும் இல்லை. அதை அப்படியே எடுத்தவன் வராண்டாவில் அமர்ந்து கொண்டு கோவமாக அப்படியே கடித்து சாப்பிட ஆரம்பித்தான்.

“சஷ்டி… “ பதறியவாறே மீரா அவனருகில் வர

“பேசாதே மீரா… காரம் சாப்பிடத்தான் தடை. நான் இன்னைக்கு இந்த ஐஸ்கிரீம் முழுசும் சாப்பிடத்தான் போறேன்”

தடுக்க இயலாது மீரா நிற்க, பீட்ஸா சாப்பிடுவதைக் கூட நிறுத்திவிட்டு பிங்கு அவனையே பார்க்க, குளிர் மழையில் நனைந்தவாறே ஏதோ ஒரு வேகத்தில் ஐஸ்க்ரீம்கள் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவன் வேகமாய் சென்று அவனறையில் படுத்துக் கொண்டான். மறுநாள் காலை காய்ச்சல், மூக்கடைப்பு தொண்டைவலி அனைத்தும் சஷ்டியை அன்போடு அரவணைத்துக் கொண்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 18’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 18’

அத்தியாயம் – 18 “உங்க தாத்தாவும் பாட்டியும் உங்கம்மா சுமித்ராகிட்ட பேசினது எனக்கு வியப்பாவே இருக்கு” “அவரைப் பத்தி லேசா நினைக்காதிங்க அங்கிள். ஆழம் பார்ப்பாரா இருக்கும். பாசத்தை எல்லாம் வெளிய காட்டும் டைப் மாதிரி தெரியல… அப்படி இருந்திருந்தால் எங்கப்பா

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 24’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 24’

அத்தியாயம் – 24 மறுநாள் மாலை நரேஷின் வீட்டில் அனைவரும் குழுமி இருக்க… தீர்ப்பு சொல்ல வந்த வெள்ளைக்காரனிடம் வாயெல்லாம் பல்லாக பேசிக் கொண்டிருந்தாள் ரேச்சல். “ட்ரை திஸ் ட்ரிங் மைக். யோகர்ட் வித் மேங்கோ. ஐ லவ் திஸ் மேங்கோ

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 2’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 2’

அத்தியாயம் – 2   “மீரா… சஷ்டி கொஞ்சம் கரடு முரடானவன்தான். ஆனால் எப்படியாவது அவன்கிட்ட முதலில் உன் நிலையைப் பத்தி சொல்லு. அவனால உனக்குக் கண்டிப்பா உதவி பண்ண முடியும்னு நான் நம்புறேன்” என்று குமரேசன் சொல்லியே அனுப்பிருந்தார்.  முதல்