Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 16

அறுவடை நாள் – 16

This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.

அத்தியாயம் – 16

ஊருக்கு தெக்கிட்டு ஒத்த ஆலமரம் அங்காள நிக்கிற ராசம்மா

யாருக்கும் சொல்லாம மாமனும் வாராண்டி மயங்கி சொக்கிறா பாரம்மா

சூழ்நிலைக்கு பொருந்தாது பின்னணியில் எங்கோ திருவிழாவில் ஒலித்த ஒலிபெருக்கி பாட்டு.

அந்த அறையின் நடுவே இருந்த மேஜை நாற்காலியில் அமர்ந்திருந்தார் விஜயா அவருக்கு முன்பு கைகளை கட்டிக்கொண்டு அன்டிராயர், பனியனுடன் நின்றிருந்தான் ஆவுடையப்பன்.

ஒரு பொம்பள முன்னாடி இப்படி அரைகுறையா நிக்க வேண்டியது இருக்கே என்று கூனி, குறுகி  விஜயாவின் மேலிருந்த ஆத்திரத்தில் பெருமாள்சாமியை  முறைத்தான்.

‘அதுதான் மாசம் மாமுல் வாங்குறீங்க இல்ல? அப்புறம் என்ன டேஷுக்கு என்னை அரைகுறையா  நிக்க வச்சு இருக்க?’ 

நாக்கு வரை வார்த்தைகள் வந்து விட்டது. ஆனால் ஏட்டு, ‘டேய் வெளியூர் அம்மா பார்த்து நடந்துக்கோ இல்லாட்டி தூக்கி போட்டு மிதிச்சிட்டு  போய்கிட்டே இருக்கும்’ என்று சொன்னது ஒலித்தது. அதனால் கட்டுப்படுத்திக் கொண்டான்.

“என்ன ஆவுடை, அண்ட்ராயர்  பனியன் ஓட நிற்கிறது ரொம்ப  கூச்சமா இருக்கு, இல்ல”

“ஆமா மேடம் ரொம்ப கூச்சமா இருக்கு. என் சட்டை வேஷ்டியைத் தந்திங்கன்னா  உடுத்திக்குறேன். அப்புறம் உங்களுக்கு என்ன கேள்வி வேணுமோ கேளுங்க”

“உனக்கு கூச்சமா? பொம்பளை வச்சு பிசினஸ் பண்ணிட்டு இருக்க. அவங்க  தப்பிச்சு போய்ட கூடாதுன்னு   தங்கற இடத்துல பொம்பளைங்களோட சேலை உருவிட்டு தான் தங்க வைப்பியாமே. கேள்விப்பட்டேன்”

பதிலே சொல்லாமல் நின்றான்.

“ஏன் மானம் மரியாதை எல்லாம் ஆம்பளைங்களுக்கு தான் இருக்கா? பொம்பளைங்களுக்கு இருக்காதா? ரொம்ப துள்ளிக்கிட்டு திரியிற”

“இல்ல மேடம், அவங்க சம்மதத்தோட தான் தொழில் பண்றோம். சம்மதம் இல்லாத விஷயம் எதுவுமே நாங்க அங்க செய்றது இல்ல”

“என்ன செஞ்ச, என்ன செய்யல? எல்லாம் எங்களுக்கு தெரியும். ஒழுங்கா உண்மையை ஓத்துக்கிட்டா குறைஞ்ச தண்டனையோட போய்டும். பேசாம ஓத்துக்கிட்டு அப்ரூவராயிடு” 

“எந்த உண்மை?”  என்றபடி பேந்த பேந்த விழித்தான். 

“என்ன முறைக்கிற?”

“இல்லம்மா… வந்து, எந்த உண்மை?”

“எந்த உண்மைன்னு உனக்கு உண்மையாவே தெரியாது?”

“தெரியாதும்மா” 

“பெருமாள்சாமி இங்க வா… நீ சொல்லித்தானே கூட்டிட்டு வந்த?” 

“ஆமாங்க மேடம்.  தெளிவா சொல்லித்தான் கூட்டிட்டு வந்தேன்”

ஆவுடையப்பன் பதறினான் “சொல்லியா? ஐயோ ஒண்ணுமே சொல்லலம்மா. தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி, ‘உடனே கிளம்பி வா, உங்க க்ரூப்பு பொண்ணு ஒன்னை எஸ்ஐயம்மா பிடிச்சு வச்சிருக்காங்க. கேஸ் போடுறதுக்குள்ள மீட்டுடலாம்’னு கூட்டிட்டு இந்த இடத்துக்கு வந்துட்டாரும்மா” 

“என்ன பெருமாள்சாமி… ஆவுடை வேற என்னமோ சொல்றான்” 

“பொய் மேடம். எல்லாம் சொல்லித்தான் கூட்டிட்டு வந்தேன்”

“யோவ்! எங்கேய்யா சொன்ன?”

“யோவ்வா? பெருமாள்சாமி இந்த மாதிரி பொம்பளை ப்ரோக்கர் கிட்டெல்லாம் காசு வாங்கினா இப்படித்தான். மரியாதை கெட்டுடும். அடுத்து என்ன, ‘டேய்’ போட்டு கூப்பிடுவானா?”

“கூப்பிட்டுடுவானா? விடுங்க மேடம். உண்மையை எழுதி கையெழுத்து போட்டு வாங்குறேன். ஏண்டா நான் யோவ்வா” 

அடி  பின்ன ஆரம்பித்தான் பெருமாள்சாமி. ஆவடையப்பனின் அலறல் சத்தத்தைக் கேட்டபடி அறையிலிருந்து வெளியே வந்தார் விஜயா. 

பிளாஸ்கில் கொண்டு வந்திருந்த டீயை கண்ணாடி க்ளாசில் ரெடியாக எடுத்து வைத்திருந்த கிரேஸ் அவருக்கு கொடுத்துவிட்டு தனக்கும் ஒரு க்ளாசில் ஊற்றிக் கொண்டார்.

“ரொம்ப வலிக்குது சார். செய்யுற தப்புக்குத்தான் மாமூல் தந்துடுறேனே சார். அதைத்தவிர வேற ஒன்னும் செய்யல சார்” என்ற ஆவுடையின் அலறல் கேட்டது. 

“தப்புக்குத்தானே மாமூல் தர்ற. இது குற்றம். இந்த குற்றத்துக்கு தண்டனை உண்டு. முதலில் உன் நகத்தை அந்தக் கொரடை வச்சு ஒன்னொன்னா பிக்கலாம்னு பாக்குறேன்”

டீயினைக் ஒரு சிப் குடித்துவிட்டு “பொம்பளைங்களை வச்சு சம்பாரிச்சு சோம்பேறித்தனத்தில் ஊறி வளந்த உடம்பு. அடி தாங்காது. இன்னும் பத்து நிமிஷத்தில் உண்மையைக் கக்கிருவான்”

“அதுதான் மேடம். உண்மை, உண்மைன்னு சொல்றிங்களே அது என்ன? அப்படி என்ன உண்மையைத்தான் எதிர்பாக்குறோம்”

சிரித்த விஜயா “அதுதான் தெரியல கிரேஸ். அவன்கிட்ட சில ரகசியங்கள் இருக்கு. அது சின்னதாவும் இருக்கலாம் இல்லை பெருசாவும் இருக்கலாம். என்னன்னு தெரிஞ்சுக்கத்தான் அவனோட வாயைப் பிடுங்குறோம்”

“அது எப்படி மேடம் உண்மை புதைஞ்சிருக்குன்னு சொல்றிங்க. அதுவும் எதுக்காக இவனை இப்ப இங்க கூட்டிட்டு வந்தோம்?”

“ஒரு சின்ன சந்தேகம்தான். அதை ஊர்ஜிதப்படுத்திக்கத்தான் வச்சு வெளுத்து வாங்குறோம்”

“என்ன சந்தேகம்?”

“இந்த போட்டோவைப் பாரு”

“இது நம்பர் மூணு மண்டையோட்டு கேஸ் போட்டோதானே”

“ஆமா. இதில் இருக்கும் ஒரு பொருள்தான் ஆவுடை மேல சந்தேகத்தைத் தூண்டுச்சு”

“அப்படி என்ன பொருள்?”

மேஜையில் கைக்குட்டை ஒன்றில் மூட்டையாகக் கட்டப்பட்டிருந்த ஆவடையப்பனின் பொருட்களைத் தூக்கிப் போட்டார். அந்த மூட்டையைப் பிரித்தார் கிரேஸ். 

“சங்கிலியே பத்து பவுனு இருக்கும் போல. அதைத் தவிர மோதிரம் நாலு, வாட்ச்சு… மேடம் வாட்ச்சு, இந்த வாட்ச்சா… “

“ஆமாம்” என்று தலையசைத்தார் விஜயா. 

“வெளிநாட்டு வாட்ச்செல்லாம் இப்ப இங்கேயே சல்லிசா கிடைக்குது மேடம். அதனால கேசு நிக்கிறது சந்தேகம்தான். எங்க அந்தப் படத்தை மறுபடியும் காமிங்க”. 

படத்தை மறுபடியும் காண்பித்தார் விஜயா. 

பெரிதாக்கி இரண்டு படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தவர். “ஆமா மேடம், நம்பர் 3 வாட்ச்சும் இதுவும் ஒரே மாதிரி இருக்கு” 

“அதுவும் லேடிஸ் வாட்ச்சு. அந்தப் பக்கம் பெருசா கட்டுறது ஒரு பேஷன் போலருக்கு”

“ஐயோ ஆமாம். இது லேடிஸ் வாட்ச்சா? இவன் கிட்ட எப்படி லேடிஸ் வாட்ச் வந்தது. டூப்ளிகேட் வாட்ச்சா இருக்கப் போகுது” 

“இது சீக்கோ வாட்சு பழைய மாடல். இதுக்கு பின்னாடி ஒரு சீரியல் நம்பர் இருக்கு. அதை வச்சு இதை பத்தின விவரங்களை எடுக்க முடியும். நீ இந்த வாட்ச்சை போட்டோ எடுத்து அந்த வீட்டு ஆளுங்ககிட்ட அனுப்பி, இது நம்பர் 3 வாட்ச்சு தானான்னு உறுதி செஞ்சுக்கோ. அப்படியே நம்ம அவங்க கிட்ட கேட்டமாதிரி  தலையை மட்டும் போகஸ் பண்ணி எடுத்த எக்ஸ்ரே படம் ஏதாவது அனுப்பி இருந்தால் தென்னாடானுக்கு பார்வேர்டு பண்ணிவிடு. அவர் டைமென்ஷன் மேட்ச் பண்ணி பாக்கட்டும்”. 

“நானும் அத்தனை தடவை ஆவுடையப்பனைப் பாத்திருக்கேன். ஆனால் இந்த வாட்ச்சு என் கண்ணில் பட்டதே இல்லை. உங்களுக்கு எப்படி தோணுச்சு”

“போலீஸ் புத்தி. எதைப் பாத்தாலும் சந்தேகக் கண்ணோடையே பாக்கச் சொல்லுது. 

ஆவுடை கைல வாட்சைப் பாத்ததும் விலை உயர்ந்த இந்த வாட்ச் எப்படி இவனுக்குக் கிடைச்சிருக்கும்னு நினைச்சேன். 

மூணாம் நம்பர் பொண்ணு போட்டோல வாட்ச்சைப் பார்த்ததும் எனக்கு இவன் நினைவுதான் வந்தது”. 

“அப்ப குற்றவாளிகள் எல்லாம் நம்ம பக்கத்திலேயேதான் சுத்திகிட்டு இருக்காங்க” 

“நிச்சயமா”

“இப்ப என்ன மேடம் செய்றது”

“ஆவுடை வாயில இருந்து உதிரும் க்ளூக்காக காத்திருக்க வேண்டியதுதான்”

யாருக்கும் சொல்லாம மாமனும் வராண்டி மயங்கி சொக்குறா பாரம்மா…

இழுத்து கிண்டுற கேப்பைக்களி போல மனச கிண்டுது தன்னாலே 

பாட்டை ரசித்துக் கொண்டிருந்த பொழுது வேகவேகமாக வந்தான் பெருமாள்சாமி. 

“என்ன ஒத்துக்கிட்டானா”

“ம்ம்… ம்ம்…. “

பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கட கட வெனக்  குடித்தான். 

“அப்பாடா… உண்மையை சொல்லிட்டானா? அந்தப் பொண்ணு வாட்ச்தானா?” 

ஆர்வம் தாங்காது கிரேஸ் கேள்வி கேட்டாள்.

“அட நீங்க வேறக்கா… அவன் ஒத்துக்கிட்டதே வேற… நீங்களே வந்து கேளுங்களேன்”

தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அரை மயக்கத்தில் இருந்த ஆவுடையின் மேல் ஊற்ற, திடுக்கிட்டு எழுந்தவன் இரண்டு கரங்களாலும் தண்ணீரைப் பிடித்துக் குடித்தான். 

“ஒத்துக்கிறியா?”

“ஒத்துக்கிறேன் மேடம்”

“அப்ப வாக்குமூலம் வாங்கிடலாம். கிரேஸ் மொபைல் ரெக்கார்டிங் ஆன் பண்ணும்மா. சொல்லு ஆவுடை”

“வந்து, யாரு தலைவன்னு எல்லாம் தெரியாது மேடம். ஆனால் காரில் சரக்கை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு தரமும் ஒவ்வொருத்தர் வருவாங்க. பத்திரமா அவங்களை தூத்துக்குடி வரை கொண்டு போயி விட்டுடனும். தூத்துக்குடி போற வழில சிலசமயம் வேற யாராவது அவங்களைப் பிக்கப் பண்ணிக்குங்க”

இவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் கிரேஸ் பார்க்க, எலிப்பொறி வச்சா அதில் புலியே மாட்டுதே என்று எண்ணியவண்ணம் தனது அதிர்ச்சியை வெளிகாட்டிக் கொள்ளாது 

“எப்படிடா. அதில் சரக்கைக் கலந்திங்க? இதுக்கெல்லாம்  பெரிய டெக்னாலஜி வேணுமே” 

அவன் சொல்வது குட்கா கேஸ்தான் என்பதை  சடுதியில் புரிந்து கொண்டு விசாரணை டிராக்கை மாற்றினார் விஜயா. 

“எனக்குத் தெரியாதும்மா அதை செஞ்சுத்தரவெல்லாம் வேற க்ரூப் இருக்கு. நான் நடுவில் கொஞ்ச தூரம் அவங்களைப் பாதுகாப்பா கூட்டிட்டுப் போவணும் அவ்வளவுதான்”

“உன்னை எப்படி தேர்ந்தெடுத்தாங்க”

“என்னைப் பாக்க பல கஸ்டமர்ஸ் வந்து போயிட்டு இருப்பாங்க. நான் வண்டில போனா கஸ்டமர் கூட போறேன்னு போலீஸ் நினைச்சுக்கிருவாங்க. சந்தேகம் வராது. அதான்”

“சரி, வெளிநாட்டில் இருக்குற கடத்தல் கும்பலைப் பாத்து மூலப்பொருள்களோட மருந்து கலந்து டென்ட்டு செஞ்சுட்டிங்க. அதைப் பிரிச்சு எப்படி எடுப்பிங்க?”

“தெரியல மேடம். டென்ட்டு இங்கிருந்து தூத்துக்குடி வழியா பல இடத்துக்கும் போவுது”

கிரேசும், பெருமாள்சாமியும் ஆ வென்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். 

“உன் கான்டெக்ட் ஆள் பத்தி சொல்லு”

“நாங்க எல்லாரும் பாப்லோ எஸ்கொபார் க்ரூப் மேடம்”

“I am a decent man who exports flower இதுதானே க்ரூப் மெசேஜ்.நாங்க கைது பண்ண நாலு பேரும் இந்த க்ரூப்ல இருந்தாங்க. பாப்லோதான் அந்த க்ரூப் போட்டோ”

“ஆமாம்மா. பாப்லோ மேல சத்தியம் செஞ்சுட்டுத்தான் க்ரூப்ல இணையணும்”

“எஸ்கோபார் க்ரூப்பாடா நீங்க” சொல்லிக்கொண்டே ரெண்டு மிதி மிதித்தான் பெருமாள்சாமி.

 “அது யாருன்னு தெரியுமாடா?”

“வெளிநாட்டு காட்பாதர்ன்னு சொன்னாங்க. அம்மா வெளிய சொன்னா என்னைக் கொன்னே போட்டுருவாங்க”

“எங்க எல்லாரையும் முட்டாபீசுன்னு நினைச்சுட்டியா ஆவுடை. ஏட்டு லஞ்சம் வாங்கிட்டு உன்னை விட்டது, டாக்டர் பணம் வாங்கிட்டு ரிப்போர்ட் தந்தது எல்லாம் எங்க ஆபரேஷன்தான். 

இது நடக்க சாதகமா என் மகனைப் பாக்க நான் ஊருக்குப் போனேன். அப்படியே அந்த டெண்ட்டோட சாம்பிளை கத்திரிச்சு எடுத்துட்டு போயி மதுரை நார்கோடிக்ஸ் டிபார்ட்மென்ட்ல தந்து போதை மருந்து கலந்த பொருட்களில் தயாரிச்சதை ஊர்ஜிதம் செஞ்சாச்சு. உன் கூட்டாளிங்களைக் கூண்டோட இப்பத்தான் அரை மணி நேரம் முன்னாடி வளைச்சுப் பிடிச்சாங்க. 

இதில் நீ ஒரு அம்புதான்னு எனக்குத் தெரியும். இப்ப இந்த வாட்சைப் பத்தின விவரத்தை சொல்லு”

திருதிருவென விழித்தான் ஆவுடையப்பன் வாட்ச்சா? கைக்கடிகாரத்தைப் பத்தின விசாரணையா இது? 

“அப்ப வாட்ச்சைப் பத்திக் கேக்கத்தான் என்னை இந்த அடி அடிச்சிங்களா. டென்ட்டைப் பத்தி நானாத்தான் உளறிட்டேனா?” 

“திஸ் ஐஸ் கால்டு போட்டு வாங்குறது. என்ன பெருமாள்சாமி இவனை உள்ள வச்சு வெளுத்தா ஈத்தாமொழில இருக்குற பாதி கேஸ் சால்வாயிடும் போலருக்கே. ஆவுடை வாட்ச் பத்தின தகவலை இப்ப ஆரம்பிக்கிறீயா இல்ல பெருமாள்சாமி அடுத்த ரவுண்டு முடிச்சதும் ஆரம்பிக்கிறியா?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post