அத்தியாயம் – 12
“வேணி, வீட்டுக்கு பொம்பளைங்க வந்தா ஜாக்கெட்டு பிட்டு வச்சு தருவியே… பட்டு ஜாக்கெட்டு பிட்டு இருந்தா மீராவுக்கு வச்சுத் தா”
“பட்டு ஜாக்கெட்டா… என்கிட்ட அதெல்லாம் இல்ல”
“போன தடவை இருபது வாங்கின… நாந்தானே வாங்கித் தந்தேன்”
“ரவிக்கை துணி வாங்கி அப்படியேவா வச்சுக்குவாங்க… எல்லாத்தையும் தச்சுக்கிட்டேன்”
மனைவியை சந்தேகமாகப் பார்த்த செந்தில் நாதன் பீரோ சாவியை அலமாரியிலிருந்து எடுத்து பீரோவைத் திறந்தார்.
“அடேங்கப்பா… தினமும் ஒரு சேலை கட்டினா கூட இந்த நாலு பீரோவில இருக்குற சேலையைக் கட்ட இன்னும் மூணு வருசமாகும் போலிருக்கே”
“கண்ணு வைக்காதிங்க”
“கண்ணு வைக்கல… எப்பிடியும் ஒரு ஏழெட்டு சேலை கட்டாம வச்சிருப்ப அதில் ஒண்ணை மீராவுக்குத் தா…”
கணவனை முறைத்தார்.
“முறைக்காதே பதிலுக்கு வாங்கித் தந்துடுறேன்”
“இப்ப நீயே எடுத்துத் தரியா இல்ல நானே ஒண்ணை எடுக்கவா”
“நானே தர்றேன்… “
பீரோவிலிருக்கும் புடவைகளைப் பார்த்தபடி யோசித்த மனைவியிடம்
“சீக்கிரம் சொல்லு, அந்தப் பொண்ணு இப்ப கிளம்பிடும்”
“நில்லுங்க, யோசிச்சு ஒண்ணு எடுத்துத் தரேன்… சிவப்பு, பச்சை, ஊதா, ஆரஞ்சு, ரோஸ் கலரு இதெல்லாம் எனக்குப் பிடிச்ச நிறம். அதனால இந்தக் கலரு பொடவை எல்லாம் யாருக்கும் தரமாட்டேன்”
“கருப்பு”
“கருப்பு தரக்கூடாது”
“அந்த சில்வர் கலர் புடவை… நீ கூட சின்ன பொண்ணுங்க கட்டுற மாதிரி இருக்குனு சொன்னியே”
“அதனாலதான் நம்ம பொண்ணுக்குத் தரலாம்னு இருக்கேன்” என்று கவுண்டர் அட்டாக் கொடுத்தார்.
“மஞ்சள்… மஞ்சள் புடவை கூட அங்க ஒண்ணு இருக்கே… அதை குடு”
“ஹாங் அது சஷ்டி வாங்கித் தந்தது. தரமாட்டேன்”
“அதைக் கலர் கட்டினா உன் நிறம் கம்மியா தெரியும்னு அன்னைக்கு சொன்ன”
“சொன்னேன்… ஆனால் அது விலை என்ன தெரியுமா… அதனால தர முடியாது. அதுவுமில்லாம கல்யாணமான பொண்ணுக்குத்தான் புடவை ரவிக்கை எல்லாம் வச்சுத் தரணும். சின்ன பொண்ணுதானே பூ மட்டும் வச்சுத் தரலாம்”
ஒரு முடிவுக்கு வந்தவராக மனைவியைப் பார்த்தவர் “நீ எவ்வளோ விலை புடவை தரியோ அதை விட டபிள் விலைக்கு இந்த வாரமே புது புடவை எடுத்துத் தரலாம்னு பார்த்தேன். சரி உனக்கு வேண்டாம்னா விடு… “ என்று எழுந்து சென்று விட்டார்.
சஷ்டியும் மீராவும் கிளம்பிவிட தட்டில் பூ குங்குமத்துடன் பச்சை நிறப்பட்டுப் புடவையுடன் வாயெல்லாம் சிரிப்பாக வந்தார்.
“என்னங்க இந்தப் பச்சை புடவை பத்தாயிரம் மாதிரியே இல்லைல. ரொம்ப சிம்பிளா இருக்கு பாருங்க” என்று கணவரிடம் கோடி காட்டி விட்டு
“மீரா… எடுத்துக்கோம்மா” என்று பாசத்துடன் தந்தார்.
ஒரு வழியாக சஷ்டியை இழுத்துக் காரில் தள்ளிவிட்டுவிட்டுக் கிளம்பினாள் மீரா. அப்படியும் அவன் அடங்கி ஒடுங்கி ஒன்றும் வரவில்லை. விசுவின் வீட்டைக் கடக்கும்போது வண்டியை ஸ்லோ செய்ய சொல்லிவிட்டு
“மாமா இப்ப கூட ஒண்ணும் லேட் ஆவல. கட்டின கைலியோட வண்டில ஏறுங்க அத்தை தொந்திரவு இல்லாம ரெண்டு வாரம் இருந்துட்டு வரலாம்” என
“அடுத்த முறை கட்டாயம் வரேன். இப்ப அந்த பொண்ணு வேற உன்னை இறக்கிட்டு இருட்டுறதுக்குள்ள வீட்டுக்குப் போகணுமுல்ல” என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.
ஒரு வழியாக சஷ்டி கிளம்பிய பின்
“இந்த செந்தில்நாதன் ஹிந்தி பரீட்சைலாம் எழுதி இருப்பார்னு எனக்கு நம்பிக்கை இல்லை” என்றாள் கவிதா
“ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கு… “ என்றான் விசு
“அவங்கண்ணன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகிட்டா இவன் அதுக்கு ஏறுமாறா ஏதாவது செஞ்சு இவன் அண்ணன் எதிர்ப்பை காமிக்கணும்ல… அதனால காப்பி அடிச்சாவது பரிட்சையை பாஸ் பண்ணிருப்பான்” என்றார் விசுவின் தாய் வெத்தலையை இடித்தபடி.
கவிதாவுடன் அதிசயத்திலும் அதிசயமாய் அவளது மாமியாரும் அன்று மகனைத் திட்டுவதில் கூட்டு சேர்ந்து கொண்டாள்.
“எனக்கென்னமோ சஷ்டிக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏதோ கனெக்ஷன் இருக்கும்னு தோணுது”
“அதெல்லாம் இருக்காதுடி” என்றான் விசு
“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க”
“கல்யாணத்துக்கு முன்னாடி உன்னை பஸ்ஸில் பாக்க வந்தப்ப… அப்படியே உன் மூஞ்சியைப் பாத்துட்டே என் ஸ்டாப்பை மறந்துட்டு உன் வீடு வரைக்கும் வந்துட்டேன். நீ கூட என்னைத் திரும்பிப் பாத்து இன்னும் எத்தனை தூரம் பின்னாடியே வரதா உத்தேசம். மறந்து கிறந்து பின்னாடியே வீட்டுக்குள்ள நுழைஞ்சுடாதீங்க எங்கம்மா விளக்குமாறு பிய்ய பிய்ய அடிக்கும்னு சொன்னியே” நினைவு படுத்தினான் விசு.
“தூ… “ என்று வெற்றிலைச் சாறைத் துப்பினார் விசுவின் அம்மா…
“அதுக்கென்ன இப்ப…” என்றாள் கவிதா
“சூலூர் சுந்தரி உன்னையே நான் உலகத்தையே மறந்து பாத்துட்டு வந்தேன். உலக அழகியாட்டம் ஒரு பொண்ணு எதிர்ல உக்காந்திருக்கு, இந்த சஷ்டி இட்டிலி தட்டைப் பாத்துட்டு இருக்கான்.
இப்ப கூட பாரு காரில் அந்த பொண்ணு கூட ஜோடி போட்டுட்டு போவானா… என்னை துணைக்கு கூப்பிடுறான். இவனுக்கெல்லாம் காதல் ஒரு கேடா… “
“உங்களை மாதிரி பரக்காவெட்டியா அவன். டீசெண்ட்டா காதலிப்பான்”
“சஷ்டி அவன் கூடப் படிக்கிறதுங்க எல்லாமே மக்கு கும்பல்டி… அவன் கூட படிக்கிற பொண்ணுங்க எல்லாம் ரம்பை, ஊர்வசி, மேனகைதான். நானா இருந்திருந்தேன் இந்நேரம் அதில் ஒருத்தியை காதலிச்சு கல்யாணம் பண்ணிருப்பேன். இவன் என்னடான்னா காட்டு மேட்டில் கூட அந்தப் பொண்ணுங்களைத் திரும்பிப் பாக்க மாட்டான்”. என்றான் ரகசியமாக
“அது தெரிஞ்சுதான் உங்களுக்கு கடவுள் அந்த வாய்ப்பை எல்லாம் தரல” குத்திக் காட்டினாள் மனைவி.
“இப்படி வெட்டிப் பேச்சு பேசிட்டு இருக்குற நேரத்துக்கு சஷ்டி கூட கிளம்பி இருந்தா மேற்கொண்டு விவரம் தெரியும்ல” என்றார் அம்மா.
“யம்மா… அவன் கூட காட்டுக்கு ஒரு ஐம்பது பேரு சேர்ந்த படையே போகும். போற இடத்தில் கொசுக்கடி, வண்டு, குளவி, அட்டை இதெல்லாம் கடிக்கும். பாம்பும், பூரானும் சர்வ சாதாரணமா நம்ம மேல ஏறி போகும். கரப்பாம்பூச்சிக்கு பயம்னு சொல்ற பொண்ணுங்களை தானே பார்த்திருக்க… இவங்க ஒவ்வொருத்தரும் சிங்கம் புலி இருக்குற காட்டுக்குள்ள சர்வ சாதாரணமா தங்குற பிள்ளைங்க…”
“அவ்வளவு தைரியசாலியா” வியந்தார் தாயி
“தைரியமா இருந்து என்ன பிரோஜனம். மரியாதைன்னா கிலோ என்ன விலைன்னு கேப்பாங்க… “ என்றான் விசு எரிச்சலோடு.
“நிஜம்மாவா”
“பின்னே… எனக்கு எத்தனை வயசாச்சு. என்னமோ பொடியனைக் கூப்பிடுற மாதிரி பய்யா இதைப் பிடி, பய்யா ஆத்தில் தண்ணி பிடிச்சுட்டு வா, பய்யா பாத்திரம் கழுவித் தா… ன்னு சொல்லுதுங்க”
“மட்டு மரியாதை தெரியாததுங்க… நீங்க நல்லா திட்டி விட வேண்டியதுதானே” என்றார் விசுவின் அன்னை.
“ஏம்மா… என் வயசென்ன உன் வயசென்ன, என்னை ஏ பய்யா, போ பய்யான்னு கூப்பிடுறியே இதைத்தான் உங்க வீட்டில் சொல்லித் தந்தாங்களான்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டுட்டுதான் வந்தேன். சஷ்டி கிட்டயும் கண்டிஷனா சொல்லிட்டேன்.
ஆனாலும் இந்த சஷ்டியோட வாத்தியார், அந்த ஊட்டிக்காரன்…. என்னமா அவங்களுக்கு வக்காலத்து வாங்கினாரு தெரியுமா… அந்தப் பொண்ணுங்க ஊர்ல பய்யான்னா அண்ணாண்ணு அர்த்தம்னு சொல்லி என்னோட புகாரை ஒரே வார்த்தைல க்ளோஸ் பண்ணிட்டார்”
“கேட்டுட்டு சஷ்டி சும்மாவா இருந்தான்”
“நல்லா இருந்தான் போ… ஆமாம் மாமா பய்யான்னா ஹிந்தில அண்ணன் அப்படிங்கிறான். பாவம் அவனும் என்ன செய்வான். வாத்தியார் சொல்றதை தானே சரின்னு சொல்லணும்”
“நீ சொல்றதைப் பார்த்தா அந்தப் பொண்ணு வடக்குன்னா நம்ம சஷ்டி தெக்குன்னு சொல்ற”
“அதிலென்ன சந்தேகம்”
காலையில் சமையலறையில் பாத்திரங்கள் உருட்டும் சத்தம் கேட்டு எழுந்தான் கண்ணன். ஏசியை நிறுத்திவிட்டு சோம்பல் முறித்தவண்ணம் பால்கனிக்கு வந்தான். பாம் பாம்… , கீங்க்… கீங்க்… , கிணிங்க்… கிணிங்க்… என்று பலவிதமான வாகன ஒலிகள். அவன் தெருவில் கிட்டத்தட்ட எல்லா வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில்… பாதி வழி போக பாதி வழி எதிரே வரும் வாகனங்களுக்கு என்ற காமன் சென்ஸ் கூட இல்லாமல் ரோடு முழுவதும் ஆக்கரமித்து எந்த வாகனங்களும் நகர விடாமல் லாக் செய்திருந்ததைப் பார்த்து எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது கண்ணனுக்கு. வெளிநாட்டு கட்டுக்கோப்பினை எப்போது இங்கு கொண்டு வந்து எப்போது இந்தியா வல்லரசாகி… சலித்தபடி வீட்டுக்குள் நுழைந்து நேரே சமையலறைக்குள் சென்றான்.
“சித்தி எப்ப எந்திருச்சிங்க…”
“எந்திரிச்சு ரெண்டு மணி நேரமாச்சு”
“அம்மா இன்னமா தூங்குறாங்க“
“உன் தங்கச்சி தூங்கினால்தானே. ராத்திரி பூராவும் கை வலிக்குது கால் வலிக்குதுன்னு ஒரே அனத்தல்”
“வெளிநாட்டில் எல்லாம் உதவிக்கே ஆள் இல்லாம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் தானே பிரசவம் பாத்துக்குறாங்க. இங்கதான் எல்லாத்தையும் ஒரு பெரிய விஷயமா மாத்தி எல்லாருக்கும் பிரச்சனை பண்ணிட்டு இருக்கிங்க”
“வெளிநாட்டு வாழ்க்கையை நம்ம நாட்டு வாழ்க்கை கூட கம்பேர் பண்றதே தப்பு. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி வாழ்க்கை. ஒண்ணு கூட மத்த ஒண்ணை எப்படி ஒப்பிட்டு அவங்கதான் சிறந்தவங்க இல்ல நாமதான் சிறந்தவங்கன்னு சொல்லுவ?”
“ஏன்னா எல்லாரும் மனுஷங்கதான். எல்லாருக்கும் ரெண்டு கை ரெண்டு கால் ரெண்டு கண்ணுதான் இருக்கு. அதனால ஒரு இடத்தில் நம்ம சமுதாயத்தை விட முன்னேறி இருந்தால் அவங்களை உதாரணமா எடுத்துக்கிறது தப்பில்லை சித்தி. உங்களை மாதிரி பழம் பெருமைகளில் ஊறிப் போனவங்கதான் நம்ம நாட்டை முன்னேற விடாம தடுக்குறது” பட படவென பொரிந்த அக்காள் மகனின் கையில் காப்பி கப்பைத் திணித்தாள்.
“காலைலேயே ஏன் டென்ஷன் ஆற. பால்கனில இருக்குற செடி பூ எல்லாம் பாரு பச்சை செடி கொடிகளைப் பார்க்கும் போது மனசே குளுமை ஆயிடும்”
“சித்தப்பா கூட சேர்ந்து நீங்களும் செடி கொடிகளுக்கு கொடி பிடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா”
“நீதானே நல்லதை யாரு சொன்னாலும் எடுத்துக்கணும்னு சொன்ன… “
“இந்த ரோஜா செடியைப் பாரேன். ஊட்டிலேருந்து எடுத்துட்டு வந்தேன். இங்க வளர மாட்டிங்குது. ஆனால் கொத்தமல்லி, கொய்யா எல்லாம் துளிர்த்துடுச்சு”
“ரோஜா இந்த வெயிலுக்கும் மண்ணுக்கும் எப்படி வளரும் சித்தி. இது உஷ்ணமான பூமி. அதுக்குத் தகுந்த மாதிரிதான் செடிகள் வளரும். இது உங்களுக்குத் தெரியாதா… “
“எனக்குத் தெரியும்… உனக்கும் புரிஞ்சா சரி”
“என்ன சித்தி புரியலைன்னு சொல்றீங்க”
“ஒரு சாதாரண செடி கொடிக்கே மண்ணுக்குத் தக்க வளர்ச்சி அமையுது, மனுஷனுக்கும் மண்ணுக்குத் தகுந்த மாதிரி வாழ்க்கை மாறாதா. பிரசவ சமயத்தில் ஆறுதலா பக்கத்தில் உக்காந்து ரெண்டு வார்த்தை பேச முடியாத உங்களை மாதிரியே வெளிநாட்டு ஆம்பளைங்க இருந்துட முடியுமா…
மெட்டனிட்டி லீவ் மாதிரியே பெட்டர்னிட்டி லீவ் தந்து… பொண்டாட்டியை கவனிச்சுக்கோ… சில வாரத்துக்கு தூக்கம் முழிச்சு கைபிள்ளைக்கு டயப்பர நீ மாத்துன்னு சொல்றாங்கல்ல. ஒவ்வொரு பொண்ணுக்கும் இந்த சமயத்தில் அன்பும் அரவணைப்பும் தேவை, என்ன நீங்க மாமியார் வீட்டுக்கு அவுட்சோர்ஸ் பண்ணிடுறீங்க”
சித்தியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் நகைக்கத் துவங்கினான் “மண்ணுக்கு தகுந்த மாதிரி நம்ம வாழ்க்கையும் மாறும் மாறும் மாறும்… சத்தியமா ஒத்துக்குறேன். ஆனால் எந்த மண்ணில் பிறந்தாலும் பொண்ணுங்களை ஜெயிக்க எங்களால் முடியுமா என்ன?” என்று சொல்லிவிட்டு காப்பியை அருந்தத் துவங்கினான்.
“இப்படி சரணாகதி ஆயிட்டேன்னு பிராங்கா ஒத்துக்கிட்டது கல்யாணத்துக்கு பச்சை கொடி காட்டினதா எடுத்துக்கலாமா”
“கல்யாணமா… இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே… அதுவும் இந்த சமயத்திலயா… “
“பிரசவம் பாட்டுக்கு ஒரு பக்கம் நடக்கட்டும் அதுக்கு நடுவில் உனக்கு பெண்பார்த்துடலாம். உன் மனசில் யாராவது இருந்தாலும் சொல்லு… நான் அக்கா கிட்ட சொல்லிடுறேன்”
“மனசில் யாரும் இல்லை சித்தி. அப்படி யாராவது கண்ணில் பட்டா கூட்டிட்டு வந்துடுறேன். நீங்களே பார்க்கிறதா இருந்தாலும் சரிதான் எனக்கும் ரிஸ்க் இல்ல. என்ன கொஞ்சம் மார்டர்ன் திங்கிங் இருக்குற மாதிரி பாருங்க. இல்லைன்னா பெரிய நோ தான்”
“புரியலையே…”
“நான் வேலை பாக்குறதும் செட்டில் ஆறதும் கூட அப்ராட்தான். அதனால வெளிநாட்டு கலாச்சாரம், பண்பாடு எல்லாம் புரிஞ்சுட்டு அந்த வாழ்க்கைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறவளா இருக்கணும். அங்க வந்துட்டு பக்கத்து தெருவுக்கு போகக் கூட துணைக்கு கூப்பிடுற மாதிரி பொண்ணா இருந்தால் எனக்கு சூட் ஆகாது. என் மனைவி கேரியர் ஓரியன்டட்டா இருந்தால் நல்லாருக்கும். சப்போர்ட் பண்ணுவேன்”
யோசித்தவர் “ஹேய்… உனக்கு மீராவைப் பார்த்தா என்ன?”
“மீராவா… சித்தப்பவோட ஃப்ரெண்ட் பொண்ணு… பிரான்ஸ் பொண்ணு தானே”
“ஆமாம் அவளேதான்…. மீராவோட அம்மா சுமித்ரா உங்க சித்தப்பா கிட்ட நம்ம ஊர் பக்கம் நல்ல மாப்பிள்ளையா பார்க்க சொல்லிருந்தா… “
“அவளுக்கு இது வரைக்கும் பாய் ஃப்ரெண்ட் இல்லாமலா இருக்கும். என்ன சித்தி சொல்றீங்க”
“அதுக்கெல்லாம் அவளுக்கு நேரமே இல்லை. உனக்கு அவ ஓகேண்ணா சொல்லு. நான் டிஃபன் ரெடி பண்ணிட்டே விவரம் சொல்றேன்”
கண்ணன் டிபன் சாப்பிட்டுவிட்டு கை கழுவினான்.
“ஏண்டா மூணு பூரிதான் சாப்பிட்ட… இன்னும் ரெண்டு வச்சுக்கலாமே“
“காலைல சேவரி (கார உணவு வகைகள்) சாப்பிட்டு பழக்கம் விட்டுப் போச்சு… பிரெட் டோஸ்ட், க்ரோசாண்ட்ஸ், ஓட்ஸ் இதுதான் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு”
“நல்லா சாப்பிட்ட போ… நாளைக்கு உன் பொண்டாட்டி என்ன செய்யப்போறாளோ”
“ஏன் மீரா ஃபிரெஞ்ச் பிரேக்ஃபாஸ்ட் செய்யமாட்டாளா” என்று மறைமுகமாக தனது சம்மதத்தைத் தெரிவித்துவிட்டு தனது அறைக்கு சென்றான்.