Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 10’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 10’

அத்தியாயம் – 10

மருதமலை முருகன் கோவிலைப் பற்றி பேசிய செந்தில் நாதனிடம் “அப்பா இருந்தப்ப போயிருக்கோம் அங்கிள்” என்று மீரா கதை கூறிக் கொண்டிருந்தாள். 

அந்தப்பக்கம் நின்று கேட்டுக் கொண்டிருந்த வேணியின் கண்களில் கண்ணீர். மூக்கினை உடுத்தியிருந்த பருத்தி சேலைத் தலைப்பில் துடைத்துக் கொண்டார். கண்களையும்தான். 

மனைவியை ஏறிட்டுப் பார்த்த செந்தில் கனிவான குரலில் “வேணி துணியை துவைக்கப் போட்டுட்டியா… “

 

“இன்னைக்கு துணி அதிகம். அதான் பாதி வாஷிங் மெஷின்ல போட்டிருக்கேன்”

 

“துவைச்ச துணியை வேலைக்காரம்மாட்ட தந்து மொட்டை மாடில காயப் போட சொல்லு. அப்பத்தான் மத்தியானத்துக்குள்ள காயும்” என்று சொல்லி அனுப்பினார். மனைவி சென்றதும் பரிதாபமான பார்வையுடன் மீராவிடம்

 

“மீரா.. ஒரு வேண்டுகோள். இன்னைக்கு மட்டும் எமோஷனலா எதுவும் சொல்லிடாதாம்மா…”

 

“இன்னைக்கு மட்டுமா”

“ஆமாம்மா… என் கழுத்தில் இருக்குற துண்டைப் பாத்தியா…”

“ஷைனிங்கா பளபளன்னு இருக்கு”

“இதுக்கு பேரு அங்கவஸ்திரம். வெளிய போறப்ப போட்டுக்குறது. வீட்டில் காசித்துண்டுதான் போட்டுக்குவேன்”

“இப்ப நீங்க வெளிய கிளம்புறீங்களா…”

“அதல்லாம் இல்லம்மா… நேத்து கிழக்கு சீமையிலே படம் டிவில பாத்துட்டு உன் ஆன்ட்டி பொங்கிப் பொங்கி அழுது… அந்தக் கண்ணீரைத் துடைச்சே வீட்டில் இருக்குற துண்டெல்லாம் நனைஞ்சுடுச்சு. துவைக்கப் போட்டிருக்கேன். இனி அது காஞ்சு வர்ற வரைக்கும் அங்கவஸ்திரம்தான்”

“ஆன்ட்டி அவ்வளவு சாஃப்ட்டா”

“க்கும்… நல்லவேளை சஷ்டி நேத்து வெளிய போயிட்டான். அவன் மட்டும் வீட்டில் இருந்திருந்தா… அம்மாவும் மகனும் சோகப் படத்தைப் பாத்து அழுது அழுது காசித்துண்டு முடிஞ்சதும் என் சலவை வேட்டி எல்லாம் எடுத்துக் கண்ணைத் துடைச்சிருப்பாங்க. துணி காயிற வரை நான் அழுக்கு வேஷ்டில சுத்தணும்”

முதல்நாள் இரவு அவளது கதையைக் கேட்டுவிடு கண்கள் கலங்க சஷ்டி உன் கதையைக் கேட்டு அழுதேன்னு நினைச்சியா பிரியாணிலா காரம் அதிகம் என்று சொன்னது… மீரா வாய்விட்டு, மனதுவிட்டு சிரித்தாள். 

செந்தில்நாதனிடம் சொல்ல… “பச்சை மிளகாயை வெறும் வாயில கடிச்சுத் திம்பான்… இவனுக்கு பிரியாணி காரமா இருந்ததாமா…”

 

“அம்மா இன்னைக்கு மீன் வாங்கல… மீன் குழம்பு வாசமே அடிக்கலயே. சாம்பார் வச்சிருக்க போலிருக்கு. அதுவும் பாசிப்பருப்பு சாம்பார்… ” வீட்டில் விருந்தினர் வந்திருப்பதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் வீட்டின் ஒரு மூலையிலிருந்து சஷ்டி கத்த, சமையலறையிலிருந்து வேணி பதிலளித்தார். 

“இன்னைக்கு கிருத்திகை கண்ணு. மீனு கிடையாது. நாளைக்கு உங்க கைடு வீட்டில் சமைக்கச் சொல்லி சாப்பிட்டுக்கோ… “ குடியிருந்த கோவில் பதிலளித்தது.

“வேணி அது பாசிப்பருப்பு சாம்பாரா… “ ஆச்சிரியமாய் கேட்ட செந்தில் மீராவிடம் “சாப்பிட்ட எனக்கே அது பாசிபருப்பு சாம்பார்னு இப்பத்தான் தெரியுது. இவன் எப்டி அந்தக் கோடிலெருந்து இந்தக் கோடிக்கு மோப்பம் பிடிக்கிறான் பாரும்மா” மீராவிடம் குறை பட்டுக் கொண்டார் செந்தில். 

மாறாக “என்ன ஒரு டாலண்ட் பாருங்க அங்கிள். கிட்சன் பக்கம் கூட எட்டிப் பாக்கல ஆனா வாசம் பிடிச்சே என்ன சாம்பார்னு சொல்லிட்டார். குமரேசன் அங்கிள் இந்த ப்ராஜெக்ட்டுக்கு எதனால சஷ்டியை தேர்ந்தெடுத்தார்ன்னு இப்ப புரியுது” என்று சிலாகித்தாள் மீரா. 

கையில் ஒரு சொம்பை எடுத்துக் கொண்டு சமயலறையிலிருந்து வந்த வேணியிடம் “வேணி அந்தத் தண்ணியை என்கிட்ட குடு… உன் மவனுக்கு வேற சொம்பில் தண்ணி எடுத்துட்டுப் போ” என்றார். 

 

“அய்யே…. இது காப்பி. சஷ்டிக்கு இதைக் குடிக்கக் குடுத்துட்டு உங்களுக்குத் தண்ணி எடுத்துட்டு வரேன்”

 

“என்னது காப்பியா… சொம்பு புல்லாவா…” அதிர்ந்தார்

 

“காலைல சாப்பாட்டை வேறக் கட்டித்தர சொல்லிட்டீங்க… புள்ள இனிமே என்னேரத்துக்கு சாப்பிடுறானோ… அதுவரைக்கும் பசி தாங்கணுமில்ல” கணவருக்கு விளக்கமளித்தார் வேணி. 

“அப்ப சாய்ந்தரம்தான் சாப்பிடுவான்னா தவலைல காப்பி தருவியா… அதைக் கொண்டு போயி நாலு டம்ளரில் ஊத்தி எடுத்துட்டு வா… நம்ம எல்லாரும் ஆளுக்கு ஒரு வாய் குடிக்கலாம்“ என்று மனைவியை அவர் வந்த வேகத்திலேயே சமயலறைக்கு அனுப்பினார். வேணியும் கணவனை முறைத்துக் கொண்டே சென்றார். 

“அங்கிள் தவலைன்னா ப்ராக் தானே… அதில் எப்படி காபியை”

“இது வேற தவலைம்மா… இது பேரு குடம். தவளை தான் ப்ராக். குடம் தெரியுமா… தண்ணி பிடிச்சு வைக்கிற பெரிய பாத்திரம்” 

“சினிமால பாத்திருக்கேன் அங்கிள். ஹால்ஃப் சாரி கட்டிட்டு ஆத்தில் தண்ணி பிடிச்சுட்டு வருவாங்களே… “

“அதேதான்… குடம், அம்மி, ஆட்டுக்கல் எல்லாம் இனிமே பழைய தமிழ் சினிமாத்தான் சொல்லித்தரணும் போலிருக்கு… ஆமாம் கருவாடு மட்டும் எப்படிம்மா தெரிஞ்சது”

“அதுவும் தெரியாது அங்கிள். மாவடு மாதிரி ஏதோ ஃபுட் வெரைட்டின்னு நினைச்சேன்.  கருவாடுன்னா என்ன… “

செந்தில்நாதன் அவளுக்கு கருவாடு பற்றிய விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் பையில் உடைகளைத் திணித்துக் கொண்டு, சட்டை பட்டன் போட்டபடி சஷ்டியும் வந்துவிட்டான். 

 

சஷ்டி மட்டுமின்றி அவர்கள் வீட்டினரையும் மிகவும் பிடித்துவிட்டது மீராவிற்கு. அவர்கள் நடவடிக்கையில் தெரிந்த ஒரு வெள்ளந்தித்தனம் அவளைக் கவர்ந்ததில் வியப்பில்லைதானே. 

 

வேணி காப்பியைத் தரும் வழியைக் காணோம் என்றவுடன் தானே எழுந்து சென்று காப்பி டம்ளரை ஊற்றிக் கொண்டு வருவதாய் செந்தில் நாதன் சமையலறைக்குள் சென்ற கேப்பில் வேணி வெளியே வந்து சஷ்டியை உண்ணச் சொல்லி வற்புறுத்தினார்.

 

“சஷ்டி கண்ணு… ரெண்டு இட்டிலி சாபிட்டுட்டு போடா… “ வேணி கொஞ்சினார். 

 

“போம்மா… சாம்பாரை வச்சுட்டு சாப்பிட சொன்னா எப்படி”

“சரி உனக்குன்னு ரெண்டு நிமிஷத்தில் ஸ்பெசல் சட்னி அரச்சு வைக்கிறேன். சாப்பிட வா” என்று கெஞ்சி விட்டு உள்ளே சென்றார் வேணி. அப்படி என்ன ஸ்பெசல் சட்னி என்று வியந்தாள் மீரா.

அவரின் கெட்ட நேரமோ என்னவோ சட்னி அரைக்கும் முன்பே கரண்ட் நின்றிருந்தது. 

“அம்மா கரண்ட்டு வேற நின்னுடுச்சு… ஸ்பெஷல் சட்னியை என் ஊரிலிருந்து வந்ததும் செஞ்சு தா… நான் கிளம்புறேன் “ என்று சஷ்டி மறுமுறை அழுத்தமாகச் சொல்ல. 

“கரண்ட்டு இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துடும் அதுக்குள்ள சாப்பிட்டுட்டு கிளம்பு. நல்ல காரியத்துக்குப் போகும்போது நல்ல நேரத்தில் கிளம்பு” என்று தந்தை அதட்டலாய் சொன்னதும். 

“சாம்பார் வேண்டாம்” என்று சொல்லியபடி காற்றில் வாசம் பிடித்தவன் 

“மம்மி… சட்டினியை அம்மிலயே தட்டிட்ட போலிருக்கு. அல்லியம் செபா, அல்லியம் சாடிவம், சோடியம் குளோரைட், செசமம் இண்டிகம் எண்ணையை ஊத்தி” அடுக்கிக் கொண்டே போக 

“காப்ஸிகம்” என்றார் வேணி மகனிடம் பெருமையாக. அவருக்குத் தெரிந்த ஒரே தாவரவியல் பெயர் அதுதான். பொருட்களின் பட்டியலைக் கேட்ட மீராவின் முகம் காரத்தை நினைத்தே சிவந்துவிட்டது. இத்தனை காரம் சாப்பிடுபவன் எப்படி வாசனையை நுகரப் போகிறான். இதை எதுவும் அறியாத சஷ்டி வேணியிடம் 

“எப்படிம்மா செஞ்ச”

“வெங்காயம், பூண்டு, மிளகாய் எல்லாம் உப்பு சேத்து அம்மில வச்சு ரெண்டு தட்டு தட்டுனேன் தங்கம். நேத்து செக்குல ஆட்டிட்டு வந்த புது நல்லெண்ணை வேற ஊத்திருக்கேன் வாசம் தூக்குது பாரு. ” என்றார் பெருமையாக. 

“எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மம்மியா வரணும். ஆனா அடுத்த ஜென்மத்திலயாவது ஒரு நல்ல ஆளா கல்யாணம் பண்ணிக்கோ” என்று வேணியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துக் கொஞ்ச 

“டேய் இப்ப எந்திருச்சு வந்தேன் ரெண்டு தலை உருளும் பாத்துக்கோ” கெத்து காட்டினார் செந்தில்.

சட்டை செய்யாமல் அம்மாவின் பின்னாலேயே போய் இட்டிலிகளை எடுத்து வைத்துக் கொண்டான். 

“மீரா சாப்பிட வாங்க…. “ என்று அவளையும் அழைக்க, 

“நான் காலைலயே சாப்பிட்டுட்டேன் சஷ்டி. நீங்க நல்லா வயிறு நிறைய சாப்பிடுங்க. அடுத்து மூணு வாரம் கழிச்சுத்தான் இந்த மாதிரி சாப்பிடவே முடியும், ஆன்ட்டி சமையலை சொன்னேன்” என்றாள் பூடகமாக

சஷ்டி நகர்ந்ததும் 

“ஏம்மா… குமரேசன் பொண்டாட்டி சமைக்காதா என்ன… இத்தனை பில்ட் அப் கொடுக்குற” செந்தில் நைசாக விசாரித்தார்.

“அவங்க அக்கா பொண்ணுக்கு டெலிவரி. ஹெல்புக்கு கூப்பிட்டு இருக்காங்க” விளக்கமளித்தாள்.

“ஓ.. சமையல் யாரு பண்ணப் போறா… ஹோட்டல்லயா”

“நான்தான் அங்கிள் சமைக்கப்போறேன். அதுவும் மூணு வாரம் சஷ்டியோட வாசனை உணர்வு பாதிக்காத மாதிரி அரை உப்பு போட்ட…  காரம், எண்ணை இல்லாத பத்திய சாப்பாடு. உங்க பையன் எத்தனை கிலோ எடை குறையணும் சொல்லுங்க. அதுக்கு ஏத்த மாதிரி சமைச்சுடுறேன்”

இந்த பொன்நாளை எதிர்பார்த்துத்தான் இத்தனை வருஷம் காத்திருந்தேன் என்பது போல ஆனந்த கண்ணீருடன் மீராவைப் பார்த்த செந்தில்நாதன் “அவனோட கொழுப்பைக் குறைச்சாலே போதும்மா… தேவதை மாதிரி குதிச்சு இத்தனை உதவி செய்யுற இதுக்கெல்லாம் நான் எப்படி கைமாறு பண்ணப் போறேன்னே தெரியல மீரா”

சஷ்டி அவனுக்கெதிராக நடக்கும் சதியைப் பற்றி அறியாமல் தெரியாமல் தட்டில் எட்டு இட்டிலிகளை நிரப்பிக் கொண்டு மேலே சட்டினியைக் கவிழ்த்தபடி ஹாலில் இருக்கும் சோபாவில் அமர்ந்து கொண்டு டிவி ரிமோட்டை செந்தில்நாதனிடமிருந்து பிடிங்கியபடி “மத்தியானதுக்கு போற வழில பிரியாணி பார்சல் வாங்கிக்கலாம் மீரா” என்றான். 

“ஆமாம் மீரா இன்னைக்கு மட்டும் அவன் கேக்குறதெல்லாம் வாங்கிக் கொடுத்துடும்மா” என்று மகனுக்கு சப்போர்ட் செய்தார் செந்தில்

அந்த அப்பாவி ஆடு அதை கவனிக்கவே இல்லை.

6 thoughts on “தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 10’”

    1. கண்டிப்பாக இந்த வார இறுதியில் பதிவு உண்டு. நன்றி முகமது அவர்களே

  1. Ha ha sashti oda reply super.pavam ipidi taste sapidra oru pacha pullaya inthe ponnu enatha sapida kuduthu ena panna poralo3.pavamda sashti nee unaku enna appu kathirukune theriyama jora kilambura.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 11’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 11’

அத்தியாயம் – 11 “ஏம்ப்பா  மீரா வந்து முக்கால் மணி நேரம் ஆயிருக்காது” என்று சஷ்டி ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கேட்டான் சஷ்டி.  “இல்லடா நாற்பத்தி ரெண்டு நிமிஷம்தான் ஆச்சு… முக்கால் மணி நேரம் ஆனால் உளவுத்துறைல டாண்ணு விசாரணைக்கு வந்திருப்பாங்களே”

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் 7’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் 7’

ஹோட்டல் அறையில் நடந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார் குமரேசன். “இது பச்சை துரோகம் அம்மா” கோபத்தில் முகம் சிவக்க வெடித்தாள் மீரா.  “ரேச்சல் அப்பாவுக்கு பிஏ தானே… எப்படி மனைவின்னு கூசாம சொல்றா… உங்க மேரேஜ் சர்டிபிகேட்டை எடுத்துட்டு வந்து

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 12’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 12’

அத்தியாயம் – 12 “வேணி, வீட்டுக்கு பொம்பளைங்க வந்தா ஜாக்கெட்டு பிட்டு வச்சு தருவியே… பட்டு ஜாக்கெட்டு பிட்டு இருந்தா மீராவுக்கு வச்சுத் தா” “பட்டு ஜாக்கெட்டா… என்கிட்ட அதெல்லாம் இல்ல” “போன தடவை இருபது வாங்கின… நாந்தானே வாங்கித் தந்தேன்”