Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 9’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 9’

அத்தியாயம் – 9

 

மறுநாள் காலை எழுத்து, குளித்துக் கிளம்பி பெட்டி படுக்கையை மூட்டை கட்டி வைத்துக் கொண்டு ரெடியாகி நின்றாள் மீரா. மணி ஒன்பதாகியும் சஷ்டி வரும் சுவடே இல்லை. போன் வேறு வாய்ஸ் மெசேஜுக்கு நேரடியாக அவளை இட்டுச் சென்றது. வேறு வழியின்றி குமரேசனை அழைத்தாள்.

“அங்கிள் பத்து மணிக்கு ரூமை காலி பண்ணனும். சஷ்டியை இன்னமும் காணோம்”

“சரியா போச்சு… இன்னைக்கு லீவு நாள் மீரா… பத்து மணிக்குத்தான் அவனுக்குப் பொழுது விடியும்”

“அய்யோ… காலை சாப்பாடு முடிஞ்சதும் வந்துடுறேன்னு சொன்னாரே“

“அட அதுவேறயா… இன்னைக்கு அவங்க வீட்டில் மீன் சமைச்சா பன்னெண்டு மணிக்குத்தான் மீனே வாங்குவாங்க. அதுக்கப்பறம் ரெண்டு மணிக்கு சமைச்சு சாப்பிட்டுட்டுதான் வருவான்”

“அப்ப லஞ்ச் முடிச்சுட்டுத்தான் வருவாரா… “

“காலைல முதல் சாப்பாட்டை அவன் பிரேக்பாஸ்ட்ன்னு தான் சொல்லிட்டு இருக்கான். அதை மத்தியானம் ரெண்டு மணிக்கு சாப்பிட்டாலும் அது அவனுக்கு பிரேக்பாஸ்ட் தான். உனக்கு ஒரு வேளை அதிர்ஷ்டம் இருந்தா… “

“அதிர்ஷ்டம் இருந்தா… “

“அவங்கம்மா கருவாட்டுக் குழம்பு வைக்க சான்ஸ் இருக்கு. அப்படி வச்சிருந்தா சீக்கிரம் சாப்பிட்டுட்டு வந்துடுவான்”

“அப்படின்னாலும் வர ஒரு மணிக்கு மேல ஆகும் அங்கிள்”

 

ஒரு தீர்மானத்தோடு “சஷ்டி வீட்டு அட்ரெஸ்ஸ எனக்கு அனுப்பி விடுங்க அங்கிள்” என்றாள் 

“எய் மீரா… அவன் வீட்டுக்கு போகப் போறியா என்ன… “

“என்னால இன்னொரு நாளை இழக்க முடியாது அங்கிள். அதுவும் என்னை கன்கொத்திப் பாம்பு மாதிரி சுத்திக்கிட்டே இருக்குற ஆட்கள் எப்ப என் காலை வாரி விடப் போறாங்களோன்னு பதட்டமாவே இருக்கு. அதனால சஷ்டியை நேரா கூட்டிட்டு இன்னைக்கு எத்தனை நேரமானாலும் வீட்டுக்கு வந்துடுவேன்”

“சரி சஷ்டி அம்மா கிராமத்து பழக்கவழக்கத்தில் ஊறினவங்க. அவங்களுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிட்டுப் போ. அல்ட்ரா மார்டனா போனா மிரண்டுடுவாங்க”

“அதெல்லாம் கலக்கிடுறேன். நீங்க லேபை ரெடி பண்ணிட்டீங்கல்ல”

“எல்லாம் தயாரா இருக்கு. நீ சஷ்டியைக் காரில் கடத்தித் தூக்கிட்டு வா”

 

சஷ்டி வீட்டில் அவன் குமரேசனின் ஆருடதின்படியே நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்க அவனது அப்பா ஹாலில் மனைவியிடம் கொதித்துக் கொண்டிருந்தார். 

“ராத்திரி நடுசாமம் வரைக்கும் உன் மகனுக்கு என்ன வெளில வேலை. பெருசா டாக்டர் வேலை பாக்குறானாக்கும் ராப்பகலா பேஷன்டுக்கு வைத்தியம் பாத்துட்டுக் களைச்சுப் போயி வரானாக்கும்” என…

“நேத்து என்னமோ படத்துக்குப் போயிட்டு வந்துருப்பானாட்டாயிருக்கு”

“சும்மா அவனுக்கு வக்காலத்து வாங்காதடி. ஒரு பொண்ணு ஒண்ணு இவனை நேத்து வந்து பாத்துட்டு போயிருக்கு. அதைப்பத்தி சொல்லாம இந்தக் கல்லூளிமங்கன் உக்காந்திருக்கான். எனக்கென்னமோ அந்தப் பொண்ணு கூட பழக்கமோன்னு சந்தேகமா இருக்கு”

“அச்சோ நெசமா… என்னமோ ஒரு கதை கூட சொன்னானே… சுவாரஸ்யமா இருந்துச்சு… வில்லிக்கும் ஹீரோயினுக்கும் ஏதோ போட்டியாட்டமிருக்கு. யாரு மருந்து கண்டுபிடிக்கிறாங்களோ அவங்களுக்கு சொத்தாமா…”

“என்னடி இது தலையும் புரியாம வாலும் புரியாம ஒரு கதை”

“நான் நேத்துத் தூக்கக் கலக்கத்தில் கேட்டேனா. இப்படித்தான் காதில் வுளுந்துச்சு. இன்னைக்கு மத்தியானம் தெளிவா உக்காந்து கேக்கணும்”

“சுத்தம்… இப்படி கதை கேட்டு கேட்டேதான் அவன் டாக்டருக்குப் படிக்காம போனான். பொழுதன்னைக்கும் அம்மாவும் புள்ளையும் படத்தைப் பாத்துட்டு மூக்கை சிந்திட்டு இருந்தா அவனுக்கு எப்படி மத்ததில் புத்தி போகும். அவன் வயசில் எல்லாம் எனக்கு ரெண்டு பிள்ளைங்க எவ்வளவு பொறுப்போட இருந்தேன். நம்ம வீட்டு எருமைமாடு இன்னும் தூங்கிட்டு இருக்கு” என்று தனது சுப்ரபாதத்தை ஆரம்பித்தார். 

“அவனுக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கிறது… உங்களுக்கே கல்யாணம் நடந்தப்ப என் மகனுக்கு என்ன பொண்ணு கிடைக்காமயா போகும்”

“டாக்டர் பொண்ணு கிடைக்கட்டும் அப்பறம் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம். ஆனா அதுக்குள்ள ஏதாவது காதல் கீதல் வந்து நின்னான் நான் அருவாளைத் தீட்ட ஆரம்பிச்சுடுவேன்னு அவங்கிட்ட சொல்லி வை” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் கார் ஒன்று வந்து நின்றது.

கணவன் மனைவி இருவரும் வாய்பிளந்து ஆச்சிரியமாய் பார்த்துக் கொண்டிருந்த போது செஞ்சாந்துக் குழம்பைக் கொட்டி செய்த நிறத்தில் ஸிலீவ்லெஸ் சுடிதார் ஒன்றினை அணிந்த வண்ணம் மண்ணில் இறங்கும் சிறு மின்னல் போல காரை விட்டு இறங்கினாள் மீரா. 

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தம்பதியினருக்கு சிறு புன்னகையுடன் கை குவித்து வணக்கம் வைத்தவள். 

“வணக்கம். நான் மீரா. இது சஷ்டி வீடுதானே”

ஆமாம் என்று தலையசைத்தார் செந்தில்நாதன். 

“சஷ்டி இருக்காங்களா… அவரை ஒரு ப்ராஜக்ட் விஷயமா நேத்துப் பார்த்தேன். இன்னைக்கு மீட் பண்றதா பிளான்”

இதுவரைக்கும் ஏதோ ஒரு மோகினி ஒன்று வீட்டுக்கு வந்துவிட்டதோ என்று வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த வேணி “உள்ள வாம்மா” என்று அழைத்து சென்றார். 

“உக்காரும்மா… குடிக்க ஏதாவது கொண்டு வரேன்”

விருந்தோம்பல் செய்ய மனைவி சமயலறைக்கு ஓடிச் சென்றதைக் கண்டு ஒரே எரிச்சல் செந்தில்நாதனுக்கு. 

“சஷ்டி எப்படிம்மா உனக்குத் தெரியும்”

“குமரேசன் அங்கிள்தான் காண்டாக்ட் பண்ண சொன்னார்”

“சஷ்டியோட கைடா… தோட்டக்காரனாட்டம் பூ, செடி, மரமெல்லாம் நோண்டிகிட்டிருப்பாரே… “

“பாட்டனிஸ்ட்…  அதில் சர்வதேச அளவில் பேப்பர் எல்லாம் ப்ரெசெண்ட் பண்ணிருக்கார். சஷ்டி கூட பண்ணிருக்காரே… “

“என்னம்மா பேப்பர். என்ன இருந்தாலும் ஒரு டாக்டர் மாதிரி பேமஸ இருக்க முடியுமா… நான் கூட இந்தா இந்த ரோட்டோரமிருக்குற மூக்குத்திப் பூவை போட்டோ எடுத்து ஒட்டி வச்சுட்டு இந்தப் பூ சூப்பர், மருத்துவ குணம் இருக்குறது… சிராய்ப்பு, காயத்தில் போட்டா நல்லதுன்னு சொன்னா அதைக் கூடத்தான் ஒரு பேப்பர்” என்றார் ஏளனமாக. 

“சரிதான் அங்கிள். உங்க பேப்பரை மேற்கொண்டு ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுத்து அந்த மூக்குத்திப் பூவோட மருத்துவத்தன்மையை ஆராய்ச்சி செஞ்சு… நிரூபிக்கப் பட்டால் அதை வச்சு ஒரு மருந்து கம்பனி மருந்து தயாரிச்சு சோதனைல அது வெற்றி அடைஞ்சதும் நீங்க சொல்ற டாக்டருங்க அந்த மருந்தை பேஷண்ட்ஸ்கு எழுதித் தருவாங்க”

விழித்தார் செந்தில்நாதன். 

“எல்லா படிப்பும் மனுஷனை மேம்படுத்தத்தான் அங்கிள்”

இவ்வளவு அறிவோட ஒரு பொண்ணு எப்படி இவனுக்கு ஃப்ரெண்ட் ஆனாள் என்ற ஆச்சிரியம் அவருக்கு. 

“அப்பா என்னம்மா செய்ராறு”

“அப்பா சில மாதங்களுக்கு முன்னாடி விபத்தில் தவறிட்டார்… அப்பாவோட அப்பா மும்பைல இருக்கார். என் அம்மா தமிழ் பொண்ணுதான். கல்லூரில பேராசிரியை. இப்ப அம்மாவும் நானும் பிரான்ஸ்ல இருக்கோம்” 

அவளது தடுமாற்றத்தை வைத்து ஊகித்தவர் பேச்சை திசை திருப்ப எண்ணி 

“பிஎம்டபிள்யூ உன்னிதாம்மா” 

“இல்லை இங்க வாடகைக்கு எடுத்தேன்” 

“இது காஸ்ட்லியா இருக்குமே. வேற மாடல் எடுத்திருக்கலாமே”

“வீட்டில் இதுவும் பென்சும்தான் இருக்கு. சோ இந்த கார்கள்தான் எனக்கு ஓட்ட ஈசியா இருக்கும்”

பென்சும் பிஎம்டபிள்யூவுமா வாயைப் பிளந்தார் செந்தில்நாதன்.

“வேணி… மீராவுக்கு பூஸ்ட் போட்டுக் கொண்டா… காபி எல்லாம் பிடிக்குமோ என்னமோ… “ என்று குரல் கொடுத்தார். 

“அப்பறம் உங்க தாத்தா என்னம்மா பண்றார்” அடுத்தக்கட்ட விசாரணையைத் தொடங்கினார். 

“ரீமா சோப்ஸ்னு ஒரு கம்பனி வச்சிருக்கார்”

தலைசுத்திவிட்டது செந்தில்நாதனுக்கு. “வேணி டிஃபன் ரெடி பண்ணு. மீரா சாப்பிட கேசரி ஏதாவது பண்ணும்மா… ஏம்மா நம்ம ஊரு சாப்பாடு சாப்பிடுவேல்ல… கேசரின்னா தெரியுமா… “

“அச்சோ… நான் சாப்பிட்டுட்டேன் அங்கிள். சஷ்டி இல்லையா… “

“இந்தா அவனை எழுப்பி விடுறேன்” இன்று இவனை மிதித்தாவது எழுப்ப வேண்டும் எப்பேற்பட்ட பணக்காரப் பெண்ணை இப்படிக் காக்க வைக்கிறானே. எரிச்சலுடன் சஷ்டியின் அறைக்கு ஓடினார் செந்தில்நாதன். 

“நேத்து பூரா ஒரே வேலைம்மா அவனுக்கு. எப்ப பாத்தாலும் படிப்பு ஆராய்ச்சி இப்படித்தான் அவன் சிந்தனை முழுசும். இப்படி ராத்திரி பூரா யோசிச்சு யோசிச்சு களைச்சு போயி காலைல கொஞ்சம் நேரம் தூங்குவான்” என்றார் வேணி பெருமையாக. மகனின் பெருமை பேசாத தாயார்கள் உலகில் உண்டா. 

“தெரியும் ஆண்ட்டி. அந்த அறிவாளி இன்னும் மூணு வாரம் ஒரு முக்கியமான பிராஜக்ட்ல என்கூட வேலை செய்யனும். எங்க கம்பனிக்காக. அதுக்கு உங்க பெர்மிசன் கிடைக்குமா”

“அட… சஷ்டி வந்து வேலை செஞ்சால்தான் அந்த ப்ராஜெக்ட் நடக்கும்னா, அவனை அங்கேயே வச்சுக்கோங்கம்மா திருப்பி கேட்டு உங்களை தொல்லை பண்ணவே மாட்டோம்” என்றபடி வந்தார் செந்தில். இதை சான்ஸாக வைத்து மகனை நன்றாக மிதித்து எழுப்பி விட்ட திருப்தி அவருக்கு. 

ஏதோ நினைவு வந்தவளாக மீரா “ஆன்ட்டி உங்க வீட்டில் இன்னைக்கு மீன் குழம்பா இல்லை கருவாட்டுக் குழம்பா” கேட்க, வேணி திகைத்துப் போய் பார்த்தார் 

“ஏம்மா… இன்னைக்கு கிர்த்திகைன்னு சாம்பார்தான் வச்சிருக்கேன். அடுத்த முறை வரும்போது மீன் குழம்பு வச்சுத் தரேன்” உறுதியளித்தார். 

“எனக்கில்லை ஆண்டி. இன்னைக்கு சாய்ந்தரம் இருட்டுறதுக்குள்ள நாங்க ஊட்டில இருக்கணும். நீங்க மீன் குழம்பு வச்சா லேட்டா சாப்பிட்டுட்டு சஷ்டி கிளம்புவாருன்னு கேள்விப்பட்டேன். அதான் கேட்டேன்”

“அதைப்பத்தி நீ கவலைப்படாதம்மா… அவன் கிர்த்திகைக்கு விரதம்”

“இது எப்போதைலேருந்து” என்று வேணி ஆச்சிரியமாகக் கேட்க 

“இன்னைலேருந்துதான். நல்ல பொண்டாட்டி வேணும்னு மருதமலை முருகனுக்கு விரதமிருக்கான்”

“அதெல்லாம் இல்ல… எனக்கு சாப்பாடு ரொம்ப முக்கியம். இன்னைக்கு என்னம்மா சமைச்சிருக்க… “ என்றபடி இடுப்பில் ஒரு துண்டும் தலையில் ஒரு துண்டைத் துவட்டிக் கொண்டும் அவன் அறையிலிருந்த குளியலறையில் குளித்துவிட்டு அப்படியே ஹாலில் நுழைந்தவன் அங்கிருந்த மீராவைக் கண்டு திகைத்துப் போனான். 

இதுவரை அவனைப் பார்க்க ஆண்கள் மட்டுமே வீட்டிற்கு வந்திருக்கின்றனர். இன்று காலை அவன் அப்பா ஃப்ரெண்ட் வந்திருப்பதாக மிதித்து எழுப்பி விட்டுக் குளித்து வரச் சொன்னார்… ஆனால் அந்த ஃப்ரெண்ட் மீராவா. 

தலை துவட்டிக் கொண்டிருந்த துண்டை எடுத்து சடாரென்று மேலே போர்த்திக் கொண்டு. 

“வாங்க மீரா… இந்தா டிரெஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்று ஓடினான். 

“வேணி ஒரு கப் காபியை அவன் வாயில் ஊத்திட்டு, அப்படியே மூணு வாரத்துக்குத் துணிமணியை எடுத்து வச்சுட்டு வரச் சொல்லு” அமர்த்தலாக சோபாவில் அமர்ந்துக் கொண்டு மனைவியிடம் கட்டளையிட்டார். 

“சாப்பாடு… “ இழுத்த மனைவியிடம்

“அந்த இட்டிலியை டிஃபன் பாக்ஸில் வச்சுக் கட்டிக் குடு. போற வழில சாப்பிட்டுக்கட்டும்” 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 15’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 15’

அத்தியாயம் – 15 ராஜீவின் லேப் மிகவும் நேர்த்தியாகவும் தேவையான பொருட்களுடனும் இருந்தது.  “எல்லாம் சரியா இருக்காமா? இல்லைன்னா சொல்லு நானும் பிங்குவும் எங்கன்னாலும் போயி வாங்கிட்டு வந்துடுறோம்” என்றார் குமரேசன்.  “இருக்கு அங்கிள். நானும் சில பொருட்களை வாங்கிட்டு வந்திருக்கேன்”

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 19’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 19’

அத்தியாயம் – 19 “என்ன செஞ்சிருக்கீங்க சஷ்டி” உரக்கவே கத்திவிட்டாள் மீரா. “இப்ப என்ன மீரா ஆச்சு” மீராவுக்கு பார்முலா கண்டுபிடிக்கத் தரப்பட்ட சென்ட் பாட்டிலிலிருந்து ஒரு சிறிய குப்பியில் ஊற்றிக் கொண்டிருந்தான் சஷ்டி. அப்போது சில துளிகள் கீழே சிந்திவிட்டது.

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’

அத்தியாயம் – 4 நரேஷ் மல்ஹோத்ரா மும்பையின் மிகப் பெரிய புள்ளி. ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட், ஐடி போன்ற இன்றைய பணம் கொழிக்கும் தொழிலில் முதலீடு செய்து சமீபத்தில் பணக்காரர் ஆனவர் இல்லை. தலைமுறைப் பணக்காரர். அவரது தாத்தா காலத்தில்