Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 8’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 8’

அத்தியாயம் – 8

 

மண்புழுவிற்கு அது பிறந்த இடத்திலேயே அதன் எதிரியும் பிறந்திருக்கிறது. அதற்காவது எதிரியைப் பற்றிய அறிவு உண்டு. அந்த ஜீவனுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாமல் தான் ரேச்சலை நம்பியதை நினைத்து அவமானமாக இருந்தது மீராவுக்கு. 

ரீமாவின் சார்பில் ஆராய்ச்சி செலவுக்கென்று என்று ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் தரப்பட்டது. இந்தியாவை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற உத்தரவு வேறு. 

இருவரில் ஒருவருக்கு மட்டும் வாய்ப்பாக அங்கிருந்தே ஆராய்ச்சியைத் தொடர எண்ணம் என்றால் அதற்கு ஊரை விட்டுத் தள்ளியிருந்த அவர்களது லேபையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. 

ரே முந்திக் கொண்டு தான் அந்த பரிசோதனைக் கூடத்தையே உபயோகித்துக் கொள்வதாகவும் அவர்கள் அலுவலகத்தில் உள்ள சிலரையே அவளுக்கு உதவியாக போட்டுக் கொள்வதாகவும் சொல்லிவிட்டாள். அவளுக்கு பரிசோதனைக் கூடம் ஒதுக்கப்பட்டது. ஆட்களும் நியமிக்கப் பட்டார்கள். 

மீராவிடம் “அவர்களுக்கு லேப் தந்தாகிவிட்டது, உங்களுக்கு வெளியில் ஏற்பாடு செய்துத் தருகிறோம். வேண்டுமானால் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பெர்ஃப்யூமர்களில் ஒருவரையும், சில ஆட்களையும் நீங்க உங்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார் சைலேஷ், நரேஷின் உதவியாளர். 

ஒத்துக் கொள்ள வேண்டிய நிலமையில் மீரா. அவள் உதவியாக நியமிக்கப்பட்டவர்களிடம் பேசினாள். அவர்களது தகுதியை சோதித்தால் தானே எப்படி பயன் படுத்திக் கொள்வது என்று முடிவு செய்யலாம். 

“இதில் என்ன கலந்திருக்குன்னு சொல்ல முடியுமா?” என்று வாசனை திரவியத்தில் தோய்த்த சிறிய சாம்பிளை அவர்களுக்குத் தர

“பாதாம் சாரி ஆல்மண்ட்” என்றான் இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன். அவன் பெயர் பிஜேஷ். அவனையும் மற்றொரு பெண்ணையும்தான் அவளுக்கு உதவியாக நியமித்திருந்தார்கள். பதில் சொல்லாமல் மீரா அவனையே பார்க்கவும்

“இல்லை ஜாஸ்மின்” என்றான் 

“லேவென்டர்…” என்றாள் அந்தப் பெண். அவள் பெயர் ராணி.

இவர்கள் சொல்லியதற்கும் அந்த நறுமணத்திற்கும் துளி கூட சம்பந்தமில்லை. ஒரு கையாலாகாத உணர்வோடு “உங்க குவாலிபிக்கேஷன் என்ன? எப்ப வேலைக்கு சேர்ந்திங்க?”

 

“பாச்சுலர்ஸ் முடிச்சுட்டு ஒன் இயர் செர்டிபிகேட் கோர்ஸ் படிச்சோம். இப்பத்தான் மூணு மாசத்துக்கு முன்னாடி வேலைக்கு சேர்ந்தோம்” என்றனர். 

மூணு மாதத்துக்கு முன்பா…

“இதுக்கு முன்னாடி சென்ட் எல்லாம் பரிச்சார்த்தமா செஞ்சு பார்த்த அனுபவம் ஏதாவது”

இல்லை என்று உதட்டைப் பிதுக்கினார். 

“உங்க ரெண்டுபேருக்கும் பேசிக் பிரேக்ரன்ஸ் பத்தின புரிதலை ஏற்படுத்திக்கவே இன்னும் சில வாரங்கள் ஆகும். ஆனால் எனக்கு பிராஜக்ட்டை நாலு வாரத்தில் சப்மிட் பண்ணனும். உங்களுக்கு ஹெட் மாதிரி யாராவது ட்ரைனர் இருப்பாங்கல்ல… அவங்க உதவ முடியுமா” என்றாள் மீரா. 

“ஹெட், முன் அனுபவம் இருக்கவாங்க எல்லாரும் ரே மேடம் ப்ராஜெக்ட்ல வொர்க் பண்றாங்க. அவங்கம்மா ரேச்சல்தான் எங்க நிறுவனத்தின் யூரோப்பின் பிரதிநிதி. அதுமட்டுமில்லாம ரே மேடமும் கூட ஒரு பெர்ஃப்யூமர். அதனால எல்லாரும் அங்க வேலை பாக்குறாங்க மேடம்”

வேறு வழியின்றி அவர்கள் இருவரையும் வைத்து வேலையைத் தொடங்க. அவர்களுக்கு மீராவிற்குத் தெரிந்த விவரம் கூடத் தெரியவில்லை. அவர்களுக்கு முழு விவரமும் தெரியாவிட்டாலும் மீரா ஒரு முக்கியமான ப்ராஜெக்ட்டில் வேலை செய்கிறாள். அதற்குத் தாங்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது.  ஆனால் ரீமாவிலிருந்து உருப்படியான உதவியாளர் கிடைக்க வாய்பே இல்லை. 

“இந்தியாவில் யாராவது அனுபவசாலி ஆட்கள் இருந்தால் சில வாரங்கள் மட்டும் எனக்கு உதவிக்குக் கிடைக்குமா. ஹைதிராபாத்ல இருக்கும் பெர்ஃப்யூம் ஸ்கூல், பெங்களூர் இந்த மாதிரி” வேறு வழியின்றி அவளுக்கு ஒதுக்கபட்ட இருவரிடமே கேட்டாள்.

“சாரி மேடம். உங்களுக்கு உதவக் கூடாது… முடிஞ்சா இந்தப் பிராஜெக்ட்டையே ஃபெயில் பண்ணணும்னு தான் எங்களுக்கு மறைமுக உத்தரவு”

“என்ன… “

“ஆமாம் மேடம். உங்களைத் தாமதப்படுத்தணும், சரியான உதவி கிடைக்கக் கூடாதுன்னு திட்டம் போட்டு செய்ற மாதிரி தோணுது. ரேச்சல் அந்த அளவுக்குப் பவர்புல்லான ஆள்”

தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். 

பிஜேஷ் அவளிடம் “ஒண்ணு சொல்லட்டுமா மேடம். நீங்க இந்த பிராஜெக்ட்டை முடிக்கணும்னா வெளியே யார்கிட்டாயாவது ஹெல்ப் வாங்கியாகணும்” என்றான்.  

யாரிடம் கேட்பாள். அவளுக்குத் தரப்பட்ட தவணையில் இது நாலாவது நாள். 

அப்படியும் சிலரிடம் முயன்றே இருந்தாள். முதலில் பாசிடிவாக பதில் சொன்னவர்கள் அடுத்த முறை அழைக்கும்போது ஏதாவது சாக்கு போக்கினை சொல்லி தவிர்ப்பதைக் கண்டு தனது செயல்கள் கண்காணிக்கப் பாடுவதை அறிந்து கொண்டாள். ஒரு மிகப்பெரிய சக்தி தன்னை முன்னேறவிடாமல் முட்டுக்கட்டை போடுவதை உணர்ந்தாள். நான் இவர்களை நம்பியா பிறந்தேன். தடுக்கத் தடுக்கத்தானே அந்த செயலை முடிக்க வேண்டும் என்ற உத்வேகம் வரும்.

அதே சமயம் அனைவரும் ஒன்று கூடி ரே இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று உழைப்பதைக் கண்டு சிரிப்புத்தான் வந்தது அவளுக்கு. உண்மையான ராஜீவின் பெண்ணை இருட்டடிப்பு செய்து பொய்யை மெய்யாக்குவதற்க்குத்தான் எத்தனை பாடு படுகிறார்கள். 

வாய்மையே வெல்லும் என்று சொல்வார்களே. இந்த முறை நடக்கிறதா என்று பார்ப்போம். மனவிரக்தியில் யோசனைகள் இல்லாத சூனியமான நிலையில் யாராவது ஒரு நம்பிக்கையான நபரின் துணை அருகில் இருந்தால் அது தரும் தெம்பே தனிதானே.  

இரவு நீண்ட நேரம் யோசித்தவள் அதன்பின் குமரேசனை அழைத்தாள். அவரிடம் ஆலோசனை கேட்டாள். மறுநாள் பிஜேஷையும் ராணியையும் அழைத்தவள்

“நான் முக்கியமான ஒருத்தரை சந்திக்க வேண்டியிருக்கு. சில நாட்கள் இங்க இருக்க மாட்டேன். உங்க ரெண்டு பேருக்கும் பேசிக்கா செண்ட்டு எப்படித் தயாரிக்கலாம்னு சொல்றேன். இந்த ஆறு மூலப் பொருட்களைக் கொண்டு பேஸ் செண்ட்ஸ் இந்த காம்போசீஷண்ல அப்படியே அச்சு பிசகாம தயாரிச்சு வைங்க” என்றாள். 

“வேற யாராவது நீங்க எங்கன்னு கேட்டா… “

“மீரா மேடம் எங்களுக்கு ஐடியா சொல்லிட்டு அவசர வேலையா ஊருக்குப் போயிருக்காங்கன்னு சொல்லிடுறோம். வேணும்னா உங்க பாய் பிரெண்டை பாக்கப் போறீங்கன்னு சொல்லட்டுமா” ஆவலுடன் கேட்டாள் ராணி. 

“எந்தக் கழுதையைப் பாக்கப் போறேன்னு சொன்னாலும் எனக்குப் பிரச்சனை இல்லை… எனக்கு இப்போதைக்கு யோசிக்க நேரமும், ஒரு மாரல் சப்போர்ட்டும் தேவை. எனெர்ஜி லெவல் ரொம்ப லோவா இருக்கு” என்றபடி கிளம்பினாள்.

பின்னர் குமரேசனின் ஆலோசனைப்படி ஊட்டியில் அவரது வீட்டில் சில நாட்கள் தங்கி வருவதாக பெரியவர் நரேஷிடம் சொன்னாள் மீரா.

பேக் செய்து கிளம்பும் சமயம் அவள் காதில் விழுமாறு உரக்க,

“இவ்வளவு அவசரமான வேலைகள் இருக்கு. இருந்தும் அங்க போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்… ஒண்ணு அவ இந்தப் பணத்தை எடுத்துட்டு ஓடப்போறா இல்லை அவளுக்கு அங்க யாரோ பாய் ஃப்ரெண்ட் இருக்காங்க” என்றாள் ரே சுஷ்மாவிடம். 

எப்படித்தான் மனிதர்கள் தனக்குத் தெரியாத கதைகளை இட்டுக்கட்டி உண்மையைப் போல புனைக்கிறார்களோ… என்றெண்ணியபடி கிளம்பினாள்.

கோவையை இரவு வந்தடைந்தவள் நட்சத்திர விடுதி ஒன்றில் அறையை வாடகைக்கு எடுத்தாள். பின்னர் தனது உபயோகத்திற்கென்று ஒரு பிஎம்டபிள்யூவை வாடகைக்கு எடுத்துக் கொண்டாள். 

“அங்கிள் நான் ஒரு கெமிஸ்ட். மூலப்பொருட்களை தோராயமா சொன்னால் கூட பெர்ஃபெக்ட் பண்ணி துல்லியமா அந்த காம்பினேஷன்ல சென்ட்டை உருவாக்க முடியும். ஆனால் ஒரு நல்ல பெர்ஃப்யூமரால் மட்டும்தான் ஸ்மெல் பண்ணி கரெக்ட் காம்போஸிஷன் சொல்ல முடியும். இப்ப என்ன செய்றது அங்கிள்”

“உன் வாக்குப்படியே நீ ஒரு நல்ல கெமிஸ்ட். இப்ப உனக்குத் தேவை ஒரு நல்ல மூக்கு, அத்தோட அந்த மூக்குக்கு சொந்தக்காரனுக்கு வாசனைகள் பற்றியும் அதனோட காம்பினேஷன் பத்தியும் நல்ல புரிந்துணர்வு, அதை அப்படியே ரிப்ளிகேட் செய்ய உனக்கு எல்லா விதத்திலும் உதவி செய்யும் திறமை,  இது எல்லாத்துக்கும் மேல உனக்கு எல்லாவிதத்திலும் சப்போர்ட் பண்ணக்கூடிய ஒரு ஸ்ட்ராங்க் மைண்ட்… 

இந்த எல்லாவிதமான குவாலிபிகேஷன்சோட ஒரு ஆள் ரெடியா இருக்கான். ஆனால் அவனை சம்மதிக்க வைக்கிறதும் வேலை செய்ய வைக்கிறதும்தான் பெரும்பாடு” என்ற பீடிகையுடன் குமரேசனால்  அடையாளம் காட்டப்பட்டவன்தான் சஷ்டி. 

 

“இப்ப சொல்லுங்க சஷ்டி. எனக்கு இவர்தான் எங்கப்பான்னு நிரூபிக்கவும், ஒரு தம்பதியினரோட ஆத்மார்த்தமான அன்பு கொச்சைப் படுத்தபடாம இருக்கவும்தான் உங்க உதவி இப்பத் தேவைப்படுது”

“இன்னொன்னை விட்டுட்டீங்களே… பொய் உண்மையை ஜெய்க்காம இருக்க நான் உதவி பண்றேன். நீங்க தோத்தா ரேச்சல் சொன்ன பொய் உண்மையா ஏத்துக்கப்படும். அதை நடக்கவிடக் கூடாது” என்று சொல்லிய சஷ்டியின் கண்களில் தெரிந்த தீவிரம் அவன் மீராவுடன் கைகோர்த்து விட்டான் என்பதை அவளுக்குத் தெரியப்படுத்த, அவளைச் சூழ்ந்திருந்த இருளுக்கு மத்தியில் கீற்றாக ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்தது.  

“சரி மீரா ரொம்ப லேட்டாச்சு நீங்க ரூமுக்குப் போங்க”

“நீங்க வீட்டுக்குக் கிளம்பலையா”

“கிளம்பனும் அதுக்கு முன்னாடி கிச்சனுக்குப் போயி ஒரு சமையல் டிப்ஸ் தரணும்”

“உங்களுக்கு சமையல் கூடத் தெரியுமா சஷ்டி”

“சமயல் டிப்ஸ் தர நல்லா ருசிச்சு சாப்பிடத் தெரிஞ்சிருந்தா போதும். சமையல் தெரியணும்னு அவசியமில்லை. பிரியாணி செஞ்சுத் தர சொன்னா மசால் சாதம் செஞ்சிருக்கான். பட்டை கிராம்பு, நெய், ஏலக்காய், புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய், காய்கறி எல்லாம் அளவோட இருந்தால்தான் அது பிரியாணி இல்லைன்னா அதுக்கு வேற பேருதான் வைக்கணும். ஸ்பைசஸ் மட்டும் கொஞ்சம் ஓவர் பவரிங்கா இருந்தால் கூட உணவின் சுவை கெட்டுப் போயிடும்”

அவன் சொன்னதை கவனமாகக் கேட்டுக் கொண்டாள் மீரா. இவனிடம் என்னவோ விஷயம் இருக்கிறது. இல்லையென்றால் சஷ்டியை உதவிக்குத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார் குமரேசன் அங்கிள். 

“அப்ப நாளைக்குக் காலைல ஊட்டிக்கு கிளம்பலாம்”

“சரி காலைல டிஃபன் முடிச்சுட்டு மீட் பண்றேன்”

“சஷ்டி இன்னும் மூணு வாரம்தான் டைம் இருக்கு. அதுக்குள்ள நம்ம இதில் ஜெயிக்கணும்” என்று சொல்லி அவன் வயிற்றில் புளியைக் கரைத்தாள் மீரா.

5 thoughts on “தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 8’”

 1. Hello அன்பு தோழி தமிழ் மதுரா.
  எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம் இருந்ததில்லை. Collg books and syllabus completion and project இதற்காக மட்டுமே வாசிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் ஒரு நாள் liberary இருந்து சித்ரங்காத புத்தகம் வசித்த பின் நான் தங்களுடைய படைப்புகளுக்கு பெரிய fan. உங்களுடைய அவ்வொரு படைப்பும் ரொம்ப என்ஜாய் பண்ணி படிச்சிருக்கேன்.. எனக்கு எவ்ளோ மனகஷ்டம் problems இருந்தாலும் உங்க novels பெரிய stress buster…. thanks for the wonderful novels ……keep rocking mam. …A big salute to you mangeing all the works of a women.. but still not giving up your passion of writing..💕
  😊

  1. அன்பு தோழி பூர்ணிமா, தங்களது நேரதிற்கும் அன்பான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி. உங்களைப் போன்றோரின் சொற்கள் மட்டுமே என்னை இயக்கும் மந்திரம்.
   அன்புடன்,
   தமிழ் மதுரா

 2. மகன மிதிச்சு எழுப்பிவிட்டாரா…ஹாஹா…எத்தனை நாள் கடுப்போ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 20’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 20’

அத்தியாயம் – 20 மறுநாள் காலை சஷ்டியும் மீராவும் அவர்களது ஆராய்ச்சியைத் தொடங்கியபோது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எதுவுமே தெரியாமல் வழக்கம் போல அன்றைய நாளைத் தொடங்கினார்கள். புத்தம் புதிதாக பூத்த பன்னீரில் நனைந்த ரோஜாவைப் போல பிங்க் நிற

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 11’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 11’

அத்தியாயம் – 11 “ஏம்ப்பா  மீரா வந்து முக்கால் மணி நேரம் ஆயிருக்காது” என்று சஷ்டி ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கேட்டான் சஷ்டி.  “இல்லடா நாற்பத்தி ரெண்டு நிமிஷம்தான் ஆச்சு… முக்கால் மணி நேரம் ஆனால் உளவுத்துறைல டாண்ணு விசாரணைக்கு வந்திருப்பாங்களே”

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 6’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 6’

மீராவின் கண்களில் கண்ணீர் கரைகட்டியது. அதனூடே சோகச் சித்திரமாய் உட்கார்ந்திருந்த தாயின் உருவம் கலங்கலாகத் தெரிந்தது.  “இப்படியே உட்கார்ந்திருந்தா எப்படிம்மா…. ஒரு டோஸ்ட் மட்டுமாவது சாப்பிடு” உணர்வின்றி மரத்த நிலையில் எங்கேயோ பார்வை நிலை குத்தியவாறு அமர்ந்திருந்தார் அவர்.  அப்படியே தாயினைப்