Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் 7’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் 7’

ஹோட்டல் அறையில் நடந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார் குமரேசன்.

“இது பச்சை துரோகம் அம்மா” கோபத்தில் முகம் சிவக்க வெடித்தாள் மீரா. 

“ரேச்சல் அப்பாவுக்கு பிஏ தானே… எப்படி மனைவின்னு கூசாம சொல்றா… உங்க மேரேஜ் சர்டிபிகேட்டை எடுத்துட்டு வந்து அவ முகத்தில் தூக்கி எறியிறேன். அப்பத் தெரியும் யாரு பொண்டாட்டின்னு”

கண்களில் நீர் வழிய பதில் பேசாமல் ஜன்னல் பக்கம் பார்வையைத் திருப்பினார் சுமித்ரா. 

“உங்கம்மா முறைப்படி திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பா. ஆனால் காலம் கடந்த ஞானோதயம்” என்றார் குமரேசன். 

“அம்மா… “

“அவங்கம்மா அப்பாக்கு பயந்து ஓடிட்டு இருந்ததால் நாங்க முறைப்படி பதிவு செய்வதைப் பெருசா எடுத்துக்கல. ரெண்டு மூணு தடவை முயற்சி செய்தும் ஆஃபிஸ்ல அவசர வேலையால முடியாம போயிடுச்சு. ஆனால் முறைப்படி கோவிலில் வச்சு மாலை மாத்திக்கிட்டோம்”

“மாலை மாத்துறது நமக்காக.பதிவு பண்றது சட்டத்துக்காக… எப்படிம்மா இவ்வளவு படிச்சிருந்தும் அதை மறந்திங்க”

“எனக்குத் தேவையான பணம் இருக்கு. உங்க அப்பா கடைசி வரை அன்பு குறையாம இருந்தார். அதைத் தவிர வேற ஒண்ணும் முக்கியமா படலை”

“இப்ப நீங்க அவரோட மனைவி, நான் மகள்ன்னு நிரூபிக்க முறைப்படி பதிவு செஞ்சிருக்கணுமே”

“கல்யாணம் நடந்தப்ப கோவிலில் நான் ரிஜிஸ்டர் செஞ்சிருந்தேன். அது கிடைக்குதான்னு பாக்கலாம்” என்றார் குமரேசன். 

“இருபத்தி நாலு வருஷம் முன்னாடி நடந்ததுக்கா… அப்ப சின்ன ரூமில் இருந்த கோவில் எல்லாம் பெரிய கட்டிடமா மாறியாச்சு. பேப்பர்ல இருந்த ரெக்கார்ட்ஸ் எல்லாம் எங்க வச்சுருக்காங்களோ இல்லையோ… நடக்குற விஷயமா பேசுங்க அங்கிள்”

“ப்ரூஃப் இல்லைன்னு தெரிஞ்சு தானே இந்த ரேச்சல் ஆடுறா… “என்றார் குமரேசன். 

“குமரேசன், ஆனாலும் அவளோட பொண்ணு ராஜீவின் அம்மா மாதிரியே  இல்ல… “

“அப்பா உங்க கிட்ட ரேச்சல் பத்தி சொன்னதில்லையா”

“என்னைப் பொறுத்தவரை அவள் அப்பாவோட சார்பா நமக்குத் தேவையானதை செய்யும் ஒரு வேலையாள். அதுக்கு மேல அவளுக்கு எப்போதும் முக்கியத்துவம் தந்ததில்லை. ஆனால் அவளுக்கு இது மாதிரி எண்ணம் இருந்ததே எனக்குத் தெரியாதே” என்றார் சுமித்ரா.

சற்று நேரம் கழித்து “உங்கப்பாவும் என்னிடம் சொல்லாமல் சில ரகசியங்கள் வைத்திருந்தார். ஒரு சில சமயம் பொம்மைகளை வாங்குவார். யாருக்கு என்று கேட்டதற்கு சரியான பதில் வந்ததில்லை”

“அம்மா நீங்கள் அப்பாவை…”

“ஒரு போதும் சந்தேகப் பட்டதில்லை. இனியும் மாட்டேன். அவர் எனது கணவர். என் மேல் உயிராய் இருந்தவர்… மத்தவங்க அவரைப் பத்தித்  தப்பா பேசுறதத்தான் என்னால தாங்க முடியல”

“யாரு தப்பா பேசினது”

“ராஜீவோட அண்ணின்னு நினைக்கிறேன். நான் மயக்கத்தில் இருப்பதா நினைச்சுட்டு ‘கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னு  வேஷம் போட்டுட்டே ஒன்னுக்கு இரண்டு பொண்ணுங்களோட குடும்பம் நடத்திருப்பான் போலிருக்கு’ன்னு  என்று பக்கத்தில் இருந்த ஆணிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவரோ… ‘வாயை மூட மாட்டியா’ என்று அவரை அந்தப் பக்கம் இழுத்து சென்றார். ராஜீவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுவதைத்தான்…”

அன்னையை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் மீரா

“எனக்கு சொத்தின் மேல் பெரிய ஆசையில்லை. ஆனால் உங்களோட கவலையைத் தீர்க்கவாவது இதில் இறுதி வரை போராடி நான்தான் ராஜீவின் வாரிசென்று நிரூபிப்பேன் அம்மா” 

***

ராஜீவின் குடும்ப உறுப்பினர்களும் அதே நேரத்தில் தூங்காமல் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். நரேஷ் – ரேணு, அவர்களது முதல் மகன் ரஞ்சித்-சுஷ்மா தம்பதியினர் மற்றும் நரேஷின் நம்பிக்கையான உதவியாளர் ஒருவர் இவர்கள் மட்டுமே இதில் பங்கு கொண்டனர். 

“முதல்கட்ட விசாரணை முடிவு வந்துருச்சு சார்” என்றார் நரேஷின் உதவியாளர் சைலேஷ். 

“ரெண்டு பொண்ணுங்களுக்கும் பாஸ்போர்ட், ஐடி கார்ட், ஸ்கூல், பல்கலைக்கழகம் எல்லா இடத்திலும் ராஜீவ் பெயர்தான் தகப்பன்னு தரப்பட்டிருக்கு. ரெண்டு பெண்களையும் ராஜீவ் சந்திச்சதுக்கு சாட்சிகள் இருக்கு. மேலும் விவரங்கள் கிடைக்க இன்னும் சில நாட்கள்  தேவைப்படும்”

“அந்தப் பெண் சுமித்ராவின் தவிப்பு நடிப்பில்லைன்னு என் மனசு சொல்லுது” என்றார் ரேணு

“ஏன் ரேச்சலும்தான் தான் கவலைப்பட்டா” என்றாள் சுஷ்மா. 

“ரெண்டு சிறு பெண்களும் கூட மனசுக்கு நெருக்கமாவே இருக்காங்க. குட்டி ரேணுவுக்கு என்னோட ஜாடைன்னா, மீராவுக்கு அப்பா தாத்தாவின் பிடிவாதம். இவங்க ரெண்டு பேரில் யார் ராஜீவின் மகள்னு நெனைச்சு நெனைச்சு தலையே வெடிச்சுடும் போலிருக்கு”

“ரெண்டு பேருமே ராஜீவின் மகளா இருக்கலாம். உங்க பய்யன் ஒரு ஊமைக் கோட்டான். அமைதியா இருந்துட்டு பொண்டாட்டி ஒண்ணு கீப்பு ஒண்ணுன்னு வச்சிருந்திருக்கலாம்” 

“சுஷ்மா வாயை மூடு” என்றான் ரஞ்சித். 

 

சுஷ்மாவுக்கு முன்னரே பிரான்சுக்கு செல்லும்போது ரேச்சல் நல்ல பழக்கம். ஷாப்பிங் செல்வது, பியூட்டி ட்ரீட்மெண்ட் ஏற்பாடு செய்வது இப்படி எல்லா வேலைகளும் செய்வது அவள்தான். அதுமட்டுமின்றி சுஷ்மாவுக்கு  ரேச்சலின் தேன் தடவிய பேச்சு மிகவும் பிடிக்கும். சற்று முன்னர் கூட 

“நானெல்லாம் என் வீட்டுக்காரர் எங்க போனாலும் விடாம கூடவே போய்டுவேன். வீட்டில் யாரு என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். பிள்ளைங்களை மாமியாரைப் பாத்துக்க சொல்லிட்டு பேக் பண்ண ஆரம்பிச்சுடுவேன். நீ ராஜீவை அவன் போக்கில் விட்டதுதான் இப்ப யார் யாரோ பொண்டாட்டி பிள்ளைன்னு வந்து நிக்குதுங்க” என்றாள். 

“நீ சொன்னது சரிதான் சுஷ்மா. எங்க ஊர் பக்கம் பிரைவசி எதிர்பார்ப்போம். அதே மாதிரி வீட்டிலும் பழகிட்டேன்” என்றாள் ரேச்சல் கலக்கக் குரலில். 

“நீ கவலைப்படாதே… உனக்கான இடத்தை வாங்கித் தரவேண்டியது என்னோட பொறுப்பு” என்று உறுதியளித்திருந்தாள். எனவே அவளது முழு ஆதரவும் ரேச்சலுக்கே. தான் அளித்த வாக்கினை உண்மையாக்க இந்தக் கலந்துரையாடலில் தீவிரமாக முயன்றாள் சுஷ்மா.

“அப்பா… பேசாம ஒரு டிஎன்ஏ டெஸ்ட் செஞ்சுடலாமா…” என்றான் ரஞ்சித். 

“அதுக்கும் ஏற்பாடு செஞ்சிருக்கேன்.ஆனால் ரகசியமா செய்யனும். இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா நம்ம பிஸினஸ்ல பிரச்சனை வரும். ரேச்சல் தான் யூரோப் மார்க்கெட் பாத்துக்குறவங்க. இதெல்லாம் யோசிச்சுத்தான் முடிவெடுக்க முடியும்” என்றார் சைலேஷ்

“அதுக்கும் நம்ம குடும்ப விவகாரதுக்கும் என்ன சம்பந்தம்”

“இன்னும் ரெண்டு மாசத்தில் நம்ம இந்தியாவில் அறிமுகப் படுத்தும் சென்ட் பத்தி பெரிய விளம்பரம் தந்துட்டு இருந்தோம். இந்த சமயத்தில் இப்படி ஒரு துரதிஷ்டமான சம்பவம் நடந்தது நம்ம போட்டி கம்பனிகளுக்கு சாதகமான விஷயம். நம்ம கீழ விழும் நாளை ஆசையா எதிர்பார்த்துட்டு இருக்காங்க. சிலர் நம்ம பெர்ஃபியூம் நிறுவனத்தை விலைக்குக் கூட கேட்டு வந்தாங்க. இந்த சமயத்தில் நிறுவனத்தில் குழப்பம் நேராம இருக்கணும். நம்ம எல்லாரும் சேர்ந்து இந்த புது திரவியத்தை வெற்றிகரமா சந்தைக்குக் கொண்டு வரணும்”

 

பெருமூச்சுவிட்டவாறே “சரி அப்படியே செய்வோம்” என்றபடி எழுந்தான் ரஞ்சித். 

 

“எங்கபோற உட்காரு… இனிதான் முக்கியமான பிரச்சனையே இருக்கு” என்றார் நரேஷ். 

 

“என்னப்பா… பிரச்சன…”

அவர் சொல்ல சொல்ல அவனது முகம் திகிலடித்தது போலாயிற்று. 

 

“அப்பா… “

“இதைத்தான் நம்ம தீர்க்கணும். அதுவும் நமக்கு பிரச்சனையைக் கொண்டு வந்த ரெண்டு பேரையும் வச்சே” என்றார் புதிர் சிரிப்புடன். 

“நாளைக்கு ரெண்டு பெண்ணுங்களையும் என்னை மீட் பண்ண ஏற்பாடு பண்ணு. முக்கியமான விஷயம். மீராவும் ரேவும் மட்டும்தான் அந்த சந்திப்பில் கலந்துக்கலாம். அம்மாக்கள் அவங்கவங்க வேலையைப் பார்க்கப் போகலாம். அடுத்த ரெண்டு மாசமும் பொண்ணுங்களுக்கு நம்மோட டெஸ்டிங் ஆரம்பம்னு சொல்லிடு”.

“ ரே -ன்னா ரேணுவா”

“ஆமாம்… என்னோட மனைவி பேரை வச்சு அவள் குழப்பம் செய்ய முடியாது. அதனால அவளை ரேன்னே எல்லா இடத்திலும் பதிவு பண்ணிடு”

விஷயம் தெரிவிக்கப் பட்டதும்

“அம்மா…. நீ கிளம்பு, நான் எதுவா இருந்தாலும் வெற்றிகரமா முடிச்சுட்டு உன்னை சந்திக்கிறேன்” என்று தாயை அனுப்பி வைத்தாள் மீரா. 

அவளுக்கு சற்றும் குறைவில்லாத தைரியத்துடன் “நான் தாத்தா பாட்டி கூடத்தானே இருக்கேன். நீ தைரியமா போயிட்டு வாம்மா” என்று அனுப்பி வைத்தாள் ரே.

அன்று இரவு நிலவொளியில் ஜொலித்த லானில் சாய்ந்து அமர்ந்தபடியே 

“வாங்க பெண்களே….. “ என்று நரேஷ் இருவரையும் வரவேற்றார். அக்னி நட்சத்திரம் போல அனல் பறக்கும் பார்வையோடு முறைத்துப் பார்த்தவண்ணம் இருவரும் அமர்ந்தார்கள். 

 

“உங்க கோவத்தைக் காண்பிக்க இது சந்தர்ப்பம் இல்லை பொண்ணுங்களா… நம்ம பெர்ப்யூம் நிறுவனம் பத்தித் தெரியும் இல்லையா” 

 

“ஆமாம் இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனம். வருடத்தில் ஒரு முறை ஒரு ஸ்பெஷல் சென்ட் விற்பனைக்கு வரும். இன்னும் நூறு நாட்களில்  புதிய சென்ட் அறிமுகம். அப்பா அதைப் பற்றி ஆராய்ச்சியைக் கூட முடிச்சுட்டார்ன்னு அம்மா சொன்னாங்க” என்றாள் ரே முந்திக் கொண்டு. 

மீராவுக்கு அப்பா வருடாவருடம் புதிய சென்ட் ஒன்றை அறிமுகப் படுத்துவார் என்பது தெரியும். ஆனால் ரேவுக்குத் தெரிந்த அளவுக்கு நுட்பமான தகவல்கள் அவளுக்குத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

“என்ன மீரா உனக்கு உங்கப்பா சொல்லலையா”

“இல்லை… நானும் அப்பாவும் எத்தனையோ விஷயங்களைப் பகிர்ந்திருக்கோம். அப்பல்லாம் சென்ட் பத்தி சொல்லிருக்காரே தவிர பிஸினஸ் பத்தியெல்லாம் ரொம்ப டீட்டெயிலா பேசினதில்லை”

“நீ அவர் மகளே இல்லை… இருந்திருந்தால்தானே சொல்லிருப்பார். எங்கப்பாவின் கனவு முழுக்க இந்த லான்ச்தான். அதனால் டென்சனா இருப்பார்” என்றாள் ரே ஏளக்காரமான சிரிப்புடன். 

“அதைப் பத்தி நீ சொல்லாதே… உங்கம்மா எங்கப்பவோட கம்பனி ஸ்டாப். உங்ககிட்ட பிஸினஸ் தவிர வேற என்ன பேச முடியும். எங்க குடும்பத்தில் எத்தனையோ முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துக்குவோம். அதில் இந்த லாஞ்ச் ஒரு சின்ன தகவலாத்தான் இருக்க முடியும்” என்று மீரா பதிலடி கொடுத்தாள். 

“ஆனால் அப்பாவின் இந்த சென்ட்…. “ என்று ஆரம்பித்த மீரா மற்றவர்கள் உத்துப் பார்ப்பதைக் கண்டு “நத்திங்” என்று முடித்துவிட்டாள்.

“இரவு உணவு நேரம் நெருங்கிவிட்டது.. ரே பாட்டியை அழைத்து வந்துவிடுகிறாயா… அவள் நேரத்திற்கு சாப்பிட வேண்டும். நாம் டின்னருக்குப் பின் நமது பேச்சைத் தொடரலாம்” என்றார் நரேஷ். 

 

ரே அங்கிருந்து நகர்ந்ததும் “இப்ப சொல்லு மீரா… “ என்றார். 

 

“அப்பா கண்டுபிடிச்சிருப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் எந்த அளவுக்கு முழுமையா இருக்குனு தெரியல”

“உனக்கேன் இந்த சந்தேகம்”

“ஒவ்வொரு தடவையும் புது சென்ட் கண்டுபிடிச்சதும் எனக்குத்தான் முதல் பாட்டிலைத் தருவார். இந்த முறை கிடைக்கல. அதனால முழுமை பெற்றிருந்தாலும் இன்னும் உற்பத்தி ஆரம்பிச்சிருக்காதுன்னு நினைக்கிறேன்” அவளைக் கூர்மையாகப் பார்த்தார். 

 

இரவு உணவிற்குப் பின் குடும்பத்தினர் அனைவரும் உறங்கச் சென்ற பின்னர் அவர்களது உரையாடல் தொடர்தது. 

 

“ராஜீவ் புது பெர்ஃப்யூம் கண்டுபிடிச்சது உண்மைதான். ஆனால் அது முழுமை பெறவில்லை என்பதுதான் நிஜம். அவனோட கண்டுபிடிப்பை பத்தின தகவலை எங்க நிறுவனத்திற்கு சமர்பிக்கவில்லை. அதனால் நாங்க இன்னும் உற்பத்தியைத் தொடங்கவில்லை”

 

“ஓ மை காட்… இப்ப ஆரம்பிச்சா கூட இன்னும் மார்கெட்டுக்கு வர ரெண்டு மாசத்துக்கு மேலாகுமே. பார்முலா இல்லையா இல்லை தெரியலையா”

“தெரியலை… “

“அவரோட லேப்டாப், புக்ஸ், டைரி இப்படி எல்லா இடத்திலும் தேடிப் பார்த்திங்களா” என்றாள் ரே 

 

“பார்த்தாச்சு… ஆனா எங்கயும் தகவல் இல்லை”

 

“டோன்ட் வொர்ரி… இப்ப காம்போசீஷன் கண்டுபிடிச்சு சொல்ல மெஷின்ஸ் எல்லாம் இருக்கு. ஒரு சொட்டு திரவம் போதும் அதில் என்னென்ன இருக்குனு அக்குவேற ஆணிவேறாயா பிரிச்சு சொல்லிடும்” என்று ரே நம்பிக்கையாய் சொல்ல  

 

“அது அவ்வளவு ஈசி இல்ல. அப்பாவோட காம்போஸிஷன் ரொம்ப காம்ப்ளிகேட்டட். அவ்வளவு சுலபமா கண்டுபிடிச்சுட முடியாது” என்று மறுத்தாள் மீரா. 

 

“யூ ஆர் ரைட் மீரா… எங்களால் கண்டுபிடிக்க முடியல… எங்க டீம் முழுக்க வேலை செஞ்சுட்டு இருக்கு”

 

“இப்ப என்ன செய்யப்போறீங்க” என்று ரே வினவ… 

 

“செய்யப்போறது நானில்லை. நீங்கதான்… நீங்க ரெண்டு பேரும்தான் அந்த பார்முலாவைக் கண்டுபிடிச்சு லாஞ்ச் பண்ணப் போறீங்க”

“நானா…. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை” என்று மீரா சொல்ல… 

“ஐ கேன் டூ இட். ஏன்னா எங்கப்பா மாதிரியே நானும் ஒரு பெர்ஃப்யூமர்” என்றாள் ரே வெற்றிச் சிரிப்புடன். 

“க்கும்… “ என்று தொண்டையைக் கணைத்தார் நரேஷ். அவரது உதவியாளர் ஒருவர் இரண்டு சிறு வேலைப்பாடுடன் கூடிய கண்ணாடிக் குப்பியில் இளம் சிவப்பு திரவத்தை அடைத்துக் கொண்டு வந்தார். மீரா கையில் ஒன்றும் ரேவின் கையில் மற்றொன்றும் திணிக்கப் பட்டது. 

 

“உங்க ரெண்டு பேருக்கும் சரியா இன்றிலிருந்து முப்பது நாட்கள் அவகாசம். அதற்குள் இந்த பார்முலாவைக் கண்டுபிடிச்சு எங்க நிறுவனத்துக்கிட்ட ஒப்படைக்கிறிங்க. அப்பாவுக்குத் தப்பாம பிறந்த பொண்ணு யாருன்னு பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். 

5 thoughts on “தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் 7’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 22’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 22’

அத்தியாயம் – 22 மலை கிராமத்து மனிதர்களிடம் கழித்த பொழுது நன்றாகவே இருந்தது சஷ்டிக்கும் மீராவுக்கும். பொழுது போக்கு ஒரு பக்கம் இருந்தாலும் எடுத்துக் கொண்ட பணியினை விடுவதாக இல்லை இருவரும். விவரம் தெரிந்தது போலத் தெரிந்த நாலைந்து பேரிடம் அந்த

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 13’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 13’

அத்தியாயம் – 13 ஊட்டி, குமரேசனின் வீடு.  “முடியாது, முடியாது, முடியாது… முடியவே முடியாதுப்பா“ கத்திக் கொண்டிருந்தான் குமரேசனின் மகன் பிங்கு.  “என்னடா சத்தம் ஓவரா இருக்கு” “அந்த சஷ்டி கூடெல்லாம் என்னால ரூம் ஷேர் பண்ண முடியாது. அவனை வெளில

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 18’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 18’

அத்தியாயம் – 18 “உங்க தாத்தாவும் பாட்டியும் உங்கம்மா சுமித்ராகிட்ட பேசினது எனக்கு வியப்பாவே இருக்கு” “அவரைப் பத்தி லேசா நினைக்காதிங்க அங்கிள். ஆழம் பார்ப்பாரா இருக்கும். பாசத்தை எல்லாம் வெளிய காட்டும் டைப் மாதிரி தெரியல… அப்படி இருந்திருந்தால் எங்கப்பா