Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 13

அறுவடை நாள் – 13

This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.

அத்தியாயம் – 13

“அம்மா இந்தாங்க தேங்கா பன்னு. மேரி பாட்டி வீட்லயே செஞ்சாங்களாம் எங்க எல்லாருக்கும் சூடா கொண்டு வந்திருந்தாங்க. நாங்கல்லாம் சாப்பிட்டுட்டோம். உங்களுக்கு தனியா எடுத்து வச்சிருந்தேன்” வீட்டினுள் நுழைந்ததும் துள்ளிக் கொண்டு வந்தான் வெற்றிவேல். 

“ஐயோ இந்த ஆன்ட்டிக்கு எடுத்து வைக்கலையே” என்றான் பின்னால் வந்துகொண்டிருந்த கிரேஸைப் பார்த்தபடி. 

“தாங்க்ஸ் கண்ணு. நாங்க ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிட்டுக்குறோம். அம்மா முதலில் கை கால் கழுவிட்டு வந்துடுறேன். நீ ரெண்டு பேருக்கும் சமமா கட் பண்ணி பிளேட்டில் வச்சு எடுத்துட்டு வா பாக்கலாம்” மகனின் தலையில் முத்தமிட்டு அனுப்பினார். 

அந்த ஊரின் பெரிய மனுஷியான மேரி வீட்டிற்கு வந்திருக்கிறார் என்பதை மகன் கூறியதை வைத்துப் புரிந்துக் கொண்டார். அவருக்குத்தான் வெறும் கை வீசி வருவது பழக்கமில்லையே. தன்னிடம் வாங்கும் வாடகையில் பாதியை இப்படி வீட்டில் இருப்பவர்களுக்கு பொருளாகவே தந்துவிட்டு செல்கிறார். இதனை தயாள குணம் என்று பாராட்டுவார்களா? இல்லை இளிச்சவாய் என்று ஏளனம் செய்வார்களா? 

“பிள்ளையா குட்டியா சேர்த்து வைக்க… அதுதான் இருக்குற பணமெல்லாம் தாராளமா தூக்கித் தந்துடுவாங்க மேடம்” என்று கிரேஸ் விஜயாவின் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் சொன்னார். 

வீட்டின் பின்பக்கத்துக்கு சுற்றிக் கொண்டு சென்று கை கால் முகம் கழுவிக் கொண்டு கொடியில் இருந்த துண்டால் துவட்டிக் கொண்டு நுழைந்தார். வரவேற்பறையில் இருந்த கூடை நாற்காலி ஒன்றில் தென்னாடன் அமர்ந்து கொண்டு எதிரே இருந்தே மேஜையில் மடிக்கணினியை வைத்துக் கொண்டு என்னவோ தட்டச்சு செய்துக்கொண்டிருந்தான். 

புதிதாக நான்கைந்து மடக்கு நாற்காலிகள்… மேரியின் உபயமாக இருக்கும். 

“வாங்க தென்னாடன், மன்னிச்சுக்கோங்க ஒரு கேஸ் விசயமா விசாரிச்சுட்டு வர தாமதமாயிருச்சு. டீ போட்டுத் தரேன்”

“பரவால்ல மேடம் உங்க வேலை நெருக்கடி எனக்கும் புரியும். அல்லியோட அம்மா டீ போட்டுத் தந்தாங்க. சூடா நாலஞ்சு தேங்கா பன்னை வேற உள்ள தள்ளிருக்கேன்”

“கிரேஸ் வீட்டுக்குக் கிளம்பணுமா?”

“வேலை முடிஞ்சுது மேடம். ஆனாலும்  இந்த கேஸைப் பத்தின ஆர்வம் தாங்க முடியல. அதனால இருந்து நானும் விவரம் கேட்டுட்டு போறேன். உங்களுக்கு ஏதாவது தகவல் வேணும்னா ஒரே ஓட்டமா ஸ்டேஷன்ல போயி பைலை எடுத்துட்டு வந்துடுறேன்”

“லேட் ஆயிருமே கிரேஸ். தகவல் வேணும்னா அல்லி கிட்ட கேட்டுக்குறேன்”

“பரவால்ல மேடம். என் மகன் காலேஜ் ஹாஸ்டெலுக்கு  போன வாரமே கிளம்பி போயிட்டான். வீட்டுக்காரரும் ஊரில் இல்லை. அதனால பிரீ தான்”

“அப்ப ஒன்னு செய் அல்லி, டிரைவர்கிட்ட சொல்லி எல்லாருக்கும் ராத்திரி சாப்பாட்டுக்கு புரோட்டா, இட்டிலி, சிக்கன் குழம்பு வாங்கிட்டு வர சொல்லுங்க இன்னைக்கு ஓவர் நைட் போட்டு இந்த கேஸ் சம்பந்தப்பட்ட விவரங்களை அலசிடலாம். தென்னாடன் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே”

“இல்லை மேடம். இதை மட்டும் சால்வ் பண்ணிட்டிங்கன்னா  தடயவியல் துறைக்கே பெருமை தரக்கூடிய கேசா இருக்கும். இதில் அணிலாட்டம் சின்னதா என் பங்கு இருந்தால் கூட எனக்கு சந்தோசமா இருக்கும்”

“நாங்களும் ரெடி” பாயை தரையில் விரித்து அதில் படுத்துக்கொண்டு சின்னவர்கள் வெற்றிவேலும், கிள்ளியும் குரல் கொடுத்தார்கள். 

“நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. பெரியவங்க பேசுற இடத்தில் உங்களுக்கு என்ன வேலை”

“இந்தக் கேசைப் பத்தி பேப்பர்ல போட்டு நாங்கல்லாம் படிச்சுட்டோம். அதனால எங்களுக்கும் விவரம் தெரியும் ஆன்ட்டி. ப்ளீஸ், ப்ளீஸ்… “

“இங்க பாரு கான்பிடென்ஷியல் விஷயமெல்லாம் பேசுவோம். நீங்க இங்க இருக்கக் கூடாது” கிரேஸ் கண்டித்தார். 

“ம்ம்…. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ். அப்பறம் நாங்க எப்படி ஐபிஎஸ் ஆகுறது?” சிணுங்கினான் வெற்றி. 

“தென்னாடன் பொதுவான விசயம் பேசுவாரு. அதைக் கேட்டுட்டு, புரோட்டா சாப்பிட்டுட்டுத்  தூங்கப் போயிறணும். சரியா?”

“சரி, சரி”

தென்னாடன், விஜயா சொல்ல வந்ததைப் புரிந்துக் கொண்டான். பொதுப்படையாக குழந்தைகளுக்கு இன்ட்ரெஸ்ட் தரும் விசயங்களைப் பற்றி மட்டும் அவர்கள் முன்னே பேச வேண்டும். 

“எப்படி மாமா மண்டை ஓட்டை வச்சு ஆம்பளையா பொம்பளையான்னு கண்டு பிடிப்பிங்க?” ஆரம்பித்தான் கிள்ளி. 

அவர்களுக்கு விளக்கம் அளித்தான். 

“அது மட்டுமில்ல கிள்ளி ஒரு மண்டை ஓட்டை வச்சு அவங்க உணவுப் பழக்கம் முதல்கொண்டு கண்டு பிடிச்சுடலாம்”

“நான் இன்னைக்கு புரோட்டா சாப்பிட்டேன்னு கூட சொல்லுவிங்களா?” ஆச்சிரியத்தோடு கேட்டான் வெற்றி. 

“அப்படி சொல்ல முடியாது. ஆனால் சைவமா அசைவமான்னு சொல்லலாம்”

“அதெப்படி மாமா?”

“பாரென்சிக் ஆன்த்ரோபாலஜின்னு ஒன்னு இருக்கு. அவங்க அந்த காலத்தில் கிடைச்ச எலும்பெல்லாம் வச்சு இவங்க முக்கிய உணவா சோளம் சாப்பிடும் பழக்கம் இருக்குறவங்க. இவங்க மாமிச உணவுப்பழக்கம் இருக்கவங்கன்னு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ஞ்சு கண்டறிந்தார்கள்னு  பேப்பர்ல படிப்பிங்களே”

“ஆமா”

“அதெல்லாம் ஐசோடோப்ஸ் அனலஸிஸ் பண்ணி சொல்றது”

“டேய் கிள்ளி இதெல்லாம் கெமிஸ்ட்ரில நம்ம படிக்கிறோம்ல”

“ஆமா மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் இதெல்லாம் கூட இருக்குல்ல… வேதியல வச்சு இதெல்லாம் எப்படி மாமா கண்டுபிடிப்பாங்க?”

“இந்த உலகத்தில் நம்ம பாக்குற எல்லாமே வேதியல் பொருளால் ஆனதுன்னு படிச்சிருக்கிங்களா?”

யோசித்தவாறே “ஆமா”

“செல்கள், உணவு, செரிமானம் இதெல்லாம் வேதியல் ரியாக்ஷன் தானே. சொல்லப்போனால் நமக்கு உடம்பு சரியில்லாம போனா தரும் மாத்திரைகள் கூட வேதியல் பொருட்களோட கலவைதானே?”

“அட, ஆமாம் மாமா”

“சாப்பிடும் உணவில் இருக்கும் வேதியல் பொருள்கள் நம்மோட எலும்புகளில் அதோட முத்திரையைப் பதிக்குதுன்னா நம்புறியா?”

“நிஜம்மாவா”

“அந்த எலும்போட சாம்பிள் எடுத்து கார்பன், நைட்ரஜன், ஸ்ட்ரோன்ஷியம் ஐசடோப்புகளை செக் பண்ணுவோம். கார்பன்ல சி3, சி4ன்னு ரெண்டு வகை இருக்கு. சி4 நிறையா இருந்தால் சோளம்தான் அவங்களோட முக்கிய உணவு. அதுகூட நைட்ரஜனும் அதிகம் இருந்தால் அசைவ உணவு சாப்பிட்டு இருக்க  வாய்ப்பு இருக்கு. இதே மாதிரி உணவு பொருட்களை வச்சு இவங்க கடல் சார்த்த உணவு சாப்பிட்டு வளர்ந்தவங்க இப்படித் தோராயமா கணிக்கலாம்”

“ஏன் உறுதியா சொல்ல முடியாதா”

“நமக்கு கிடைக்கும்  சாம்பிள் சுத்தமா இருக்கணும். தூசிகளால் கண்டாமினேட் ஆயிருந்தால் நம்ம முடிவை அது கண்டிப்பா பாதிக்கும். அதே மாதிரி இன்னும் சில விஷயங்களில் கணிப்பு நூறு சதவிகிதம் சரின்னு உறுதிப் படுத்த முடியாம இருக்கோம். அசைவ உணவுன்னு சொல்றோமே பால் பொருட்களை நிறையா சாப்பிடுறவங்களுக்குக் கூட அந்த வேதியல் பொருட்கள் எலும்பில் படிஞ்சிருக்கும். அதனால அந்த பகுதியில் இருக்கும் மற்ற ஆராய்ச்சி முடிவுகளோட ஒப்பிட்டு பார்த்துத்தான் சொல்ல முடியும்”

“சூப்பர்”

“அது மட்டுமில்லை. ஒரு ஆள் பிறந்ததும் எப்ப திட உணவு சாப்பிட ஆரம்பிக்கிறான்? அப்படின்னு ஒரு லேயர் மாதிரி படிஞ்சிருக்கும். அதுக்கு மேல கடல் சார்ந்த இடத்தில் வாழ்ந்தா கடல் உணவுகளின் தடங்கள் படிஞ்சிருக்கும். அதுக்கப்பறம் வேற இடத்துக்கு குடி பெயர்ந்து சைவ உணவை மட்டும் சாப்பிட ஆரம்பிச்சா அதுக்கு மேல சைவ உணவின் படிமங்கள் இப்படி… 

ஒரு மரத்தை அறுத்தா நடுவில் இருக்கும் வளையங்களை வச்சு வயசை சொல்லுவாங்களே அது மாதிரி கற்பனை பண்ணிக்கோ. 

நாங்க டெஸ்ட் பண்ணும்போது லேட்டஸ்ட்டா இருக்குறது ஸ்ட்ராங்காவும், பழசு கொஞ்சம் வீக்காவும் இருக்கும். அதை வச்சு இவரு கடல் சார்ந்த நிலத்துக்கு குடி பெயர்ந்திருக்கார்னு சொல்லலாம். இதெல்லாம் அறிவியலில் சாத்தியம்”

“பயங்கர இன்டரெஸ்டிங்கா இருக்கு மாமா. இதுவரை கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் படிக்கும்போது  எதுக்குடா இதை எல்லாம் எங்க குட்டி மண்டைல திணிக்கிறாங்கன்னு கடுப்பாயிருக்கேன். நீங்க சொல்றதைப் பாத்தா நாங்க படிக்கிற சின்ன சின்ன பகுதி கூட பெரிய பெரிய ஆராய்ச்சிக்கு அடித்தளம் போலருக்கு”

“ஆமாம் வெற்றி. எ,பி,சி,டி,1,2,3 படிக்கிற மாதிரிதான் நம்ம படிக்குற பாடமெல்லாம். அந்த அடிப்படை எழுத்துக்களை வச்சுத்தான் கணக்கு, அறிவியல், பூகோளம் எல்லாம் பிற்காலத்தில் படிப்போம். எல்லாம் தனித்தனியா இருக்குற மாதிரி இருந்தாலும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இருக்குறதுதான்”

“ஆமாம் மாமா ஆன்த்ரோபாலாஜின்னா மானுடவியல்னு தெரியும். அதில் கெமிஸ்ட்ரியை வச்சு அவங்களோட பழக்க வழக்கங்களை, வாழ்க்கை முறையைக் கண்டு பிடிக்கலாம்னு நினைச்சா ஆச்சிரியமா இருக்கு”

“ஒவ்வொரு பாடத்திலையும் அப்ளிகேஷன்னு குறிப்பிட்டு இருப்பாங்க. இந்த கான்செப்ட் இதில் உபயோகிப்பாங்க. இயற்பியலில் இதுதான் ஏரோநாட்டிகளில் உபயோகப்படுத்துறதுன்னு ஒரு சின்ன வரி இருக்கும். அதை ஸ்கிப் பண்ணாம ஒரு பார்வை பார்த்தா உனக்கு உபயோகமா இருக்கும்”

கிள்ளியும் வெற்றியும் புதிதாக அறிந்து கொண்ட செய்தியைப் பற்றி ஆர்வத்தோடு பேசியபடியே பரோட்டாவை உண்டுவிட்டு தூங்கிவிட்டனர். 

சிறுவர்களோடு சேர்ந்து சிறுவர்களாக தென்னாடனிடம் கதை கேட்டுக் கொண்டிருந்த விஜயா, அல்லி, கிரேஸ் சுறுசுறுப்பானார்கள். 

“சொல்லுங்க தென்னாடன். கேசில் என்ன பிராக்ரெஸ்”

தனது மடிக்கணினியைத் திறந்தவன், அதில் சில படங்களைக் காண்பித்தான். 

664 B.C. Egyptian Mummy Finally Gets a Face

பலவிதமான முக ஜாடையுடன் இருக்கும் பெண்கள் படம். 

“இத்தனை படங்களை வரைஞ்சிருக்கிங்களே. எங்களுக்கு ஏதாவது ஒரு படம் இருந்தால்தானே விசாரிக்க முடியும். இதில் எந்த படத்தைக் கொடுத்து விசாரணையை ஆரம்பிக்கிறது” என்றார் கிரேஸ். 

“ஐரோப்பாவை சேர்ந்த பெண்ணா இருக்கும்னு சந்தேகப்பட்டதால அது மாதிரி மாடல் கிரியேட் பண்ணோம். ஆனால் கிழக்கு ஐரோப்பா, பிரிட்டிஷ், பிரெஞ்சு, கிரீக் இவங்களுக்கு எல்லாம் வேறுபாடு இருக்கும். தலை முடி, கண் நிறம் , புருவம், மூக்கு இப்படி வேறுபாடு இருக்குறதால, பேசிக்கா ஒரு படம் வரைஞ்சு அதில் பல காம்பினேஷன்களை போட்டு கிரியேட் பண்ணிட்டோம். இதில் ஏதாவது ஒன்னு கண்டிப்பா பொருந்தும்னு நம்புறேன்”

“குட் ஜாப் தென்னாடன். இது மிகப்பெரிய உதவி. ஒண்ணுமே இல்லாம பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிச்சிருக்கோம். இப்ப அடுத்த படியா இதில் ஒரு முகத்தோற்றம்தான் அந்தப் பெண்ணுக்கு இருக்கும்னு குறிப்பு கிடைச்சிருக்கு”

“அடுத்த ஸ்டெப் என்ன மேடம்”

கண்களை மூடி ஒரு வினாடி  யோசித்த விஜயாவின் முகம் ப்ரகாசமாகியது.

2 thoughts on “அறுவடை நாள் – 13”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post