Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 6’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 6’

மீராவின் கண்களில் கண்ணீர் கரைகட்டியது. அதனூடே சோகச் சித்திரமாய் உட்கார்ந்திருந்த தாயின் உருவம் கலங்கலாகத் தெரிந்தது. 

“இப்படியே உட்கார்ந்திருந்தா எப்படிம்மா…. ஒரு டோஸ்ட் மட்டுமாவது சாப்பிடு”

உணர்வின்றி மரத்த நிலையில் எங்கேயோ பார்வை நிலை குத்தியவாறு அமர்ந்திருந்தார் அவர். 

அப்படியே தாயினைப் பார்த்தவாறு கண்களில் நீர் வழிய பார்த்தவண்ணம் எதிரே தெரிந்த சோபாவில் அமர்ந்தாள். 

“ப்ளீஸ் மா, இப்படி இருக்காதீங்க உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை ஆனால் இந்தக் காயத்திலிருந்து வெளிய வாங்கம்மா. எனக்காக… “ தனது காலடியில் அமர்ந்து கெஞ்சிய மகளை வெறித்தார். 

“மீரா ஒரே ஒரு உதவி எனக்காக செய்வியா”

“சொல்லுங்கம்மா”

“ஒரு தடவை மும்பை கூட்டிட்டு போறியா. உங்க தாத்தா பாட்டியைப் பாக்கணும். நான்தான் உங்க மருமக. இதுதான் உங்க பேத்தின்னு காமிக்கணும்”

விக்கித்துப் போனாள் மீரா. 

“அவங்க கூட நமக்கு தொடர்பே இல்லையேம்மா… அவங்களுக்கே நம்மைப் பத்தித் தெரிஞ்சிருக்கோ என்னவோ. தெரிஞ்சிச்சிருந்தா… “ துக்கம் தொண்டையை அடைக்க ஒரு மிடறு குளிர்ந்த நீரை கிளாசில் இருந்து எடுத்துப் பருக்கிவிட்டு சொன்னாள்

 

“தெரிஞ்சிருந்தா… நமக்குத் தகவல் தெரிவிக்காம இருந்திருப்பாங்களா… அப்பாவோட இழப்பு கூட சில நாட்கள் கழிச்சுத்தானே நமக்குத் தெரியவந்தது” சிவந்திருந்த கன்னங்கள் காய்ந்த பேப்பர் டிஷ்யூபட்டு மேலும் கன்றியது. 

 

“தெரியலைன்னா இப்ப தெரிவிக்கிறதுதான் முறை” என்றார் அவர் உறுதியாக. 

 

“நம்மை இனிமே ஏத்துக்குவாங்கன்னு நம்புறீங்களாம்மா”

 

“அவங்க ஏத்துக்கிட்டா என்ன ஏத்துக்கலைன்னா நமக்கென்ன… உங்கப்பா உன்னை அவங்ககிட்ட காமிக்கணும்னு ஆசைப்பட்டார். உன்னை அவங்ககிட்ட அறிமுகப்படுத்திட்டு அடுத்த பிளைட்டில் திரும்பி வந்துடலாம் மீரா… எனக்காக இதை செய்வியா” கண்களில் ஏக்கத்தைத் தேக்கிக் கேட்ட தாயின் கோரிக்கைக்குத் தலையசைப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை மீராவிற்கு. 

 

ராஜீவின் எதிர்பாராத மறைவால் அவர்கள் நிறுவனமே நிலை குலைந்திருக்க பிரான்ஸிலிருந்து முக்கியமாக அதிகாரிகள் அனைவரும் அடுத்தக்கட்ட ஆலோசனைகளுக்கென இந்தியா சென்றிருந்தனர். அதனால் அவளால் ரேச்சலைக் கூடத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளிருந்தாலாவது அவள் மூலமாக நரேஷ் மல்கோத்ராவை சந்தித்திருக்கலாம். இப்போது என்ன செய்வது என்று புரியாமல் அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இருவரும் கிளம்பினர்.

 

முதல் முறையாக தந்தையின் மண்ணை மிதிக்கும் நேரம் அவரில்லையே என்றெண்ணி மனதில் குமுறிய வண்ணம் மும்பையை வந்தடைந்தாள் மீரா. அவர்கள் பயண ஏற்பாடுகளை செய்து முடித்து இந்தியா வருவதற்குள் ராஜீவ் மறைந்து சில வாரங்கள் கடந்திருந்தது. 

 

கடைசி நேரத்தில் தகவல் சொன்னதால் ஊட்டியிலிருந்த குமரேசன் அவர்கள் இருவரும் மும்பைக்கு வரும் சமயத்தில் அவர்களுடன் கலந்து கொள்ள இயலாது போயிற்று. 

 

“சுமித்ரா… நீயும் மீராவும் ஹோட்டலில் ஸ்டே பண்ணுங்க நான் வந்து இணைஞ்சுக்குறேன். ராஜீவ் அம்மா அப்பாவை நான் ஒரு தடவை சந்திச்சிருக்கேன். அதனால் அவங்ககிட்ட பேச சுலபமா இருக்கும்” என்றார். 

 

“இல்ல அங்கிள் ரேச்சல் மும்பைல இருக்குறதா தகவல் கிடைச்சிருக்கு. அவங்களை சந்திச்சு அவங்க மூலமா தாத்தா பாட்டியை சந்திக்கலாம்னு நினைக்கிறேன். ரேச்சலுக்கு ஏற்கனவே அப்பாவின் குடும்பம் நல்ல அறிமுகம்” என்றாள். 

 

“அது கூட நல்ல யோசனைதான். ரேச்சலுக்கு என்னைவிட அங்க இருக்குறவங்களோட தொடர்பு அதிகமா இருக்கும்”

 

“ஆனால் அவங்களோட பிரான்ஸ் நம்பர்தான் என்கிட்ட இருக்கு. அதுவும் வாட்ஸ்ஆப்ல கூட அவங்களைத் தொடர்பு கொள்ள முடியல”

“ஒரு நிமிஷம்” என்றவர் எதையோ சரிபார்த்துவிட்டு சொன்னார் “ராஜீவ் நான் மும்பை வந்தப்ப அவங்க வீட்டு நம்பர் ஒண்ணு தந்தான். ரொம்ப நெருக்கமானவங்களுக்குத் தரும் நம்பர் போலிருக்கு. நீ அந்த நம்பரை ட்ரை பண்ணு”

எண்ணை வாங்கிக் கொண்டவள் ஒன்றிரண்டு நாட்கள் கழித்து ரேச்சலைத் தொடர்பு கொள்ள முடியாது வேறு வழியின்றி அந்த எண்ணை அழைத்தாள். ரேச்சலிடம் பேசவேண்டும் என்று தெரிவித்ததும் சில நொடிகள் கழித்து அவளே தொடர்பில் வந்தாள்.

 

“எப்படி இந்த நம்பர் கிடைச்சது?”

 

“குமரேசன் அங்கிள் கிட்ட வாங்கினேன். ரேச்சல் அப்பா பத்தி ஏன் நீங்க எனக்கு உடனே தகவல் சொல்லல” என்றாள் 

“ஹனி… இது எனக்கே ஷாக்கான விஷயம். அந்த சமயத்தில் எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. கிளம்பி வந்துட்டேன். ஆனால் இங்க சும்மா இல்லை. உன்னைப் பத்தியும் உங்கம்மாவைப் பத்தியும் ராஜீவின் பேரண்ட்ஸ் கிட்ட சொல்ல சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்துகிட்டே இருக்கேன்”

 

“இன்னும் எத்தனை நாளாகும். பேசாம நானும் அம்மாவும் நேரில் வந்து தாத்தா பாட்டியைப் பார்த்து பேசலாம்னு நினைக்கிறோம்”

 

“மீரா புரியாம பேசாதே… ஏற்கனவே உங்க தாத்தா பாட்டி உங்கம்மாவையும் உன்னையும் கொல்ல நினைச்சவங்க. இந்த மாதிரி சூழ்நிலையில் உடனே எப்படி உங்களைப் பத்தி சொல்ல முடியும். உங்க பாதுகாப்பிற்கு நாந்தானே பொறுப்பு. ராஜீவ் உங்களைப் பாத்துக்கும் கடமையை என்கிட்ட ஒப்படைச்சிருக்கார். என் இறுதி மூச்சு இருக்கும் வரை அதுக்காகப் பாடுபடுவேன்” என்றாள் உருக்கமாக. 

 

“ரேச்சல்… ஒரு முறை ட்ரை பண்ணலாமே… எங்களைக் கொன்னாக் கூடப் பரவால்ல”

 

“மீரா…. சிறுபிள்ளைத்தனமா பேசாதே… நீ இப்போதைக்கு அவங்களை சந்திக்க வேண்டாம். இன்னும் ஒரு மாசத்தில் அவங்களுக்கு உண்மையை சொல்லிட்டு உங்க வீட்டுக்கே அழைச்சுட்டு வரேன்” என்று சற்று கடுமை நிறைந்த குரலில் சொல்லிவிட்டு போனைக் கட் செய்தாள்.

 

என்றைக்கும் இல்லாத விதமாக இந்த முறை ரேச்சலிடம் பேசியது சற்று நெருடலாகவே இருந்தது மீராவுக்கு. அவர்கள் வருவதைத் தடுக்க முயல்வதைப் போலவும் தோன்றவும் கண்டிப்பாக தந்தையின் பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்ற பிடிவாதம் தோன்றியது அவள் மனதில்.

மறுநாள் குமரேசனிடம் சொல்லி அவர் மூலமாக வேறு ஒரு நண்பரின் பெயரில் நரேஷ் மல்கோத்ராவின் வீட்டில் அவரையும் அவரது மனைவியையும் சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கினாள். பலர் வந்து அவர்களை சந்தித்து துக்கம் விசாரித்து செல்வதால் அவர்களுக்கும் சற்று சுலபமாகவே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

அரண்மனை போன்ற அந்த மாளிகை வீட்டின் காம்பவுண்டில் டாக்ஸி நுழைந்தபோதே சுமித்ராவின் கைகள் நடுங்க ஆரம்பித்தன. அழுகையில் கண்கள் சிவக்க, உதடுகள் கோணின. அவரது கைகளை ஆறுதல் படுத்தும் விதமாக அழுத்திப் பற்றிய மீராவின் கைகளில் தெரிந்த அழுத்தத்தில் ஒரு போரை எதிர்கொள்ளத் தயாரான தீவிரம் தெரிந்தது. 

வரவேற்பறையில் பேரைத் தந்துவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்த பின் இருவரையும் உள்ளே அழைத்தனர். 

இரண்டடி நடந்து வந்த சுமித்ரா நடக்க முடியாமல் கால்கள் துவள,மீரா “அம்மா” என்று பதறியவண்ணம் அவளைத் தாங்கிப் பிடிக்க, பக்கத்து அரையிலிருந்து அப்போதுதான் வந்த ரேணு வேகமாக வந்து மற்றொரு புறம் தாங்கிக் கொண்டாள்.

வீட்டில் பெரியவர்களை கவனித்துக் கொள்ள நியமித்திருந்த செவிலியர் ஒருவர் விரைந்து வந்து முதலுதவி செய்ய, சில நிமிடங்களில் சுய உணர்வுக்கு வவ்ந்தார் சுமித்ரா.

 

“மன்னிச்சுக்கோங்க… அவர், அவர்… “ என்னென்னவோ பேச எண்ணி மகளை அழைத்து மாமனாரின் வீட்டிற்கு வந்தவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. 

 

“பரவால்லம்மா… அவன் இத்தனை அன்பை சம்பாதிச்சு வச்சிருக்கிறதை நினைக்கும்போது பெருமையா இருக்கு. உனக்கு எப்படிம்மா ராஜீவ் தெரியும்” என்றார் ரேணு அன்புடன். 

 

“லண்டனில் படிக்கும்போது பழக்கம். எங்கம்மா பேரு சுமித்ரா. உங்களுக்குத் தெரியாதா”

 

அந்தப் பெயர் பரிச்சியமானது போலக் கூடத் தெரியவில்லை இருவரின் பாவனைகளிலும். 

“வயசாச்சுல்ல… நினைவில்லை… “

“உன் பேர் என்ன குழந்தை. உங்கப்பா என்ன பண்றார்” என்றார் அன்புடன் ரேணு. வயதான சிங்கம் ஒன்று குடும்ப உறுப்பினர்களை நோட்டம் விடுவதைப் போல இவர்களைப் பார்த்தபடி மௌனமாய் அமர்ந்திருந்தார் நரேஷ். 

 

“என் பெயர் மீரா… எங்கப்பா இப்ப இல்லை”

 

வருத்தத்துடன் “கடவுள் இப்படித்தான் சில சமயம் கொடூரமா நடந்துக்குறான்”

 

கண்கள் கலங்க பெரிய மூச்சை உள்ளிழுத்து தனது உணர்வுகளை அடக்க முயன்றவாறு “ஆமாம் பாட்டி.. கடவுள் இப்படித்தான் சில சமயம் விளயாடுறான். மீரா மல்கோத்ராவையும், சுமித்ரா மல்கோத்ராவையும் அவங்க குடும்பத்தை இப்படி இக்கட்டான நிலையில் சந்திக்க வச்சிருக்கான் பாருங்க” என்றாள் மீரா. 

 

“ஹா … “ பேச்சே எழாமல் ரேணு திகைத்து விழிக்க… நரேஷின் பார்வை கூர்மையாக அவர்களை நோக்க… சிறிது நேரம் பொறுத்து பார்த்துவிட்டு தாயிடம் சிடுசிடுத்தாள் மீரா. 

“அப்பாவோட ஆசையை நிறைவேத்தியாச்சுல்லம்மா… கிளம்பு வீட்டுக்குப் போகலாம்” என்றாள். 

“க்கும்… “ தொண்டையை செருமினார் நரேஷ். 

“எத்தனை பேர் இப்படி கிளம்பிருக்கிங்க”

“வாட்” என்றாள் மீரா திகைத்து 

“என் மகனுக்கும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது உண்மை. அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறதும் உண்மை. இதைத் தெரிஞ்சுகிட்டு எத்தனை பேரு ராஜீவ் என் கணவன், என் அப்பான்னு வந்து நிப்பிங்க” என்றார் ஏகத்தாளமாக. 

“எத்தனை பேருன்னா… உங்க கேள்வியே புரியல” என்றாள் மீரா. 

உதவியாளனை அழைத்து ஏதோ சொன்னார். பின்னர் மீராவைப் பார்த்து 

“உட்காரு… “ என்றார்.

“நான் சவகாசமா உக்காந்து பேச வரல” என்றாள் மீரா வெடுக்கென்று. 

“எனக்கும் உன்னை உக்கார வச்சு கதை பேச விருப்பமில்லை. என் மகனோட வாரிசுன்னு சொல்லிட்டு வந்திருக்கும் நீ இதை மாதிரி வெளிய சொல்லி எங்க குடும்பத்துப் பேரைக் கெடுக்கக் கூடாது. இது என்னோட கட்டளை”

 

“இதென்ன கதையா இருக்கு. ராஜீவ் மல்கோத்ராவோட பொண்ணு அவளோட அடையாளத்தை சொல்ல நீங்க எப்படி தடை போட முடியும்” என்றாள் மீரா கோபமாக. 

“நீ ராஜீவ் மல்கோத்ராவோட பொண்ணா… அப்ப நான்” என்றபடி டாக் டாக் என்று செருப்புக்கால் சப்திக்க நடந்து வந்த பெண்ணைப் பார்த்துத் துள்ளி எழுந்தாள் மீரா.

பக்கத்தில் அமர்ந்திருந்த ரேனுவே ஐந்தே முக்காலடி உயரத்தில், ரின் போட்டு வெளுத்த வெண்மையில், பட்டு போன்ற பிரவுன் முடியில், அல்ட்ரா மார்டனாய் வந்து நின்றாள் எப்படி இருக்கும். அது போல நின்றாள். 

“நான் ரேணு மல்கோத்ரா… நான் பிறந்ததும் எங்கப்பா அவரோட அம்மா பேரு இருக்கணும்னு பார்த்து பார்த்து வச்சது. நீ யாருடி எங்க டாடியை சொந்தம் கொண்டாடிட்டு வந்து நிக்கிற” என்று திமிராய் கேட்க… மீராவிற்கு கோபம் உச்சியை எட்டியது. 

“என்ன.. எங்கப்பாவை எப்படி நீ உங்கப்பான்னு சொல்லலாம்.. “ என்று பாய… 

“மாம்… “ என்று கத்தினாள் அந்த குட்டி ரேணு… 

 

“டார்லிங்… ஈசி டார்லிங்… ஈஸி… “ என்றபடி அங்கு வந்த ரேச்சலைப் பார்த்து விக்கித்து நின்றனர் சுமித்ராவும் மீராவும். 

 

“நான் ரேச்சல், ராஜீவின் மனைவி… இவள் என் மகள் ரேணு, ராஜீவின் வாரிசு… யார் நீங்க. பணத்துக்காகத்தான் இந்த நாடகம்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்” என்று அவர்களைப் பார்த்து கேட்டவளிடம் என்ன பதில் சொல்வார்கள் இவர்கள் என்று பார்த்தபடி நின்றிருந்தனர் பெரியவர்கள் இருவரும். 

6 thoughts on “தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 6’”

  1. ரேய்ச்சல் ஏன் இப்படி பொய் சொல்றா…அவங்க யாரும் மீராவையும் சுபத்ராவையும் பார்த்ததில்லை..அத வச்சு இப்படி ஒரு சதிய பண்றாளா

  2. இது என்ன எதிர்பாராத திருப்பம்.ரேச்சல் ஏன் இப்படி பொய் சொல்ல வேண்டும்.பணத்திற்கு ஆசைப்பட்டா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 12’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 12’

அத்தியாயம் – 12 “வேணி, வீட்டுக்கு பொம்பளைங்க வந்தா ஜாக்கெட்டு பிட்டு வச்சு தருவியே… பட்டு ஜாக்கெட்டு பிட்டு இருந்தா மீராவுக்கு வச்சுத் தா” “பட்டு ஜாக்கெட்டா… என்கிட்ட அதெல்லாம் இல்ல” “போன தடவை இருபது வாங்கின… நாந்தானே வாங்கித் தந்தேன்”

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’

அத்தியாயம் – 4 நரேஷ் மல்ஹோத்ரா மும்பையின் மிகப் பெரிய புள்ளி. ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட், ஐடி போன்ற இன்றைய பணம் கொழிக்கும் தொழிலில் முதலீடு செய்து சமீபத்தில் பணக்காரர் ஆனவர் இல்லை. தலைமுறைப் பணக்காரர். அவரது தாத்தா காலத்தில்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 17’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 17’

அத்தியாயம் – 17   ஆன்ட்டிபயாடிக் கொடுத்த மருத்துவர் இன்னும் இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும் என்று சொன்னார். அடுத்துத் தொடர்ந்த இரண்டு நாட்கள் சஷ்டியால் படுக்கையை விட்டு எழவே முடியவில்லை. “லொக் லொக்” என்று இருமிய சஷ்டியிடம் தன் கையிலிருந்த சிக்கன்