அத்தியாயம் – 2
“மீரா… சஷ்டி கொஞ்சம் கரடு முரடானவன்தான். ஆனால் எப்படியாவது அவன்கிட்ட முதலில் உன் நிலையைப் பத்தி சொல்லு. அவனால உனக்குக் கண்டிப்பா உதவி பண்ண முடியும்னு நான் நம்புறேன்” என்று குமரேசன் சொல்லியே அனுப்பிருந்தார்.
முதல் தினம் நடந்து சம்பவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே அந்தக் கல்லூரியின் காரிடரில் நடந்தாள் மீரா.
“எப்படி அங்கிள்… எவ்வளவோ பேரு முடியாதுன்னு போயிட்டாங்க. சஷ்டியைப் பத்தி நீங்க சொல்றதைப் பாத்தா அவருக்கு இதில் எல்லாம் எந்த அளவுக்கு ‘இண்டெர்ஸ்ட்’ இருக்கும்னு தெரியல. முடியாதுன்னு சொல்லிட்டார்ண்ணா…”
“முடியாதுன்னு சொல்லிட்டா மாற்று வழியை யோசிக்கலாம். முடியும்னு சொல்லிட்டான்னா”
யோசித்தாள் “முடியும்னு வாயால சொன்னா மட்டும் போதாது அங்கிள். அதை முடிச்சுக் காட்டும் தில்லு வேணும். உங்க சஷ்டிக்கு அது இருக்கா”
புதிராகப் புன்னகைத்தார் குமரேசன் “அவனைப் பாரு, பேசு. அப்பறம் நீயே சொல்லு”
மாடியில் சஷ்டியின் அறை என்று அவர்கள் சுட்டிக் காட்டிய அறைக்கு செல்லும்போதே பக்கத்து வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த இளம் வாலிபனை ஓரக் கண்ணால் நோட்டம் விட்டாள் மீரா. அவனது குரலும் பேசிய விஷயங்களும் காதில் விழுந்தது. தாவரவியல் மேல் படிப்பு பற்றி பொறுமையாக மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.
பரவாயில்லை டீஸண்ட் ஆளாகத்தான் தெரிகிறான். நமது டீலுக்கு ஒத்துக்கொள்வான் என்றது அவளது மனம். அது தந்த ஆறுதலுடன் சஷ்டியின் அலுவலக அறையில் நுழைந்தாள். அந்த அறை அவ்வளவு பெரிதாக இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. நல்ல விசாலமாக இருந்தது. அலங்காரமான மேஜை வேறு. அதில் கோப்புக்கள், தொலைபேசி வேறு. இதெல்லாம் வழக்கொழிந்து போனதாக அல்லவா மீரா நினைத்துக் கொண்டிருந்தாள்.
“அந்த சேர்ல உட்காருங்க மேடம். சார் கிளாஸ் முடிஞ்சு வந்துடுவாங்க” என்று குரல் கேட்டது. ஒரு தடியாள் அவளிடம் பவ்யமாக சொன்னான். இண்டெர்காமில் தகவல் வந்திருக்கும் போல என்று நினைத்தவாறு அவன் சுட்டிக் காட்டிய நாற்காலியில் அமர்ந்து சுற்றிலும் நோக்கினாள்.
அம்மாம் பெரிய அறையின் ஒரு ஓரத்தில் சில நாற்காலிகள் அதில் சில நபர்கள் உட்கார்ந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்தனர். அவர்களைத் திகைப்புடன் பார்த்தாள் மீரா. ஏனென்றால் அவர்கள் முன்னே மலை போல ஒரு நூறு செல்போன்களாவது இருக்கும் அவை அனைத்தையும் திறந்து கருமமே கண்ணாய் வீடியோக்களில் எதையோ தேடிக் கொண்டிருந்தனர்.
***
சஷ்டிக்கு ஆத்திரம் தலையில் ஏறி உட்கார்ந்திருந்தது. அத்துடன் இந்த முதலாம் வகுப்பு மாணவர்கள் வேறு. மரியாதை என்பது பெற்றோர் கற்றுத் தர வேண்டியது. அவர்கள் தவறியதால் இனி இந்தப் பிள்ளைகள் வெளியுலகில் அடிபட்டு கற்றுக் கொள்ள வேண்டியதுதான். முதலிலேயே எல்லாரையும் சரிபடுத்திவிட வேண்டும் என்று எண்ணத்துடன் முதல் ஆண்டு வகுப்புப் பாடத்தை அவனே நடத்துவது வழக்கம். அதுவும் தாவரவியல் பிரிவு என்றால் அவன் மனதில் ஒரு நெருக்கம் எப்பொழுதுமே உண்டு.
வகுப்பினை முடித்ததும் ‘எதற்காக பி.எஸ்ஸி பாட்டனி தேர்ந்தெடுத்தீர்கள்?’ என்றுதான் கேள்வி கேட்டான். வந்த பதில் எல்லாம் ஒரு தினுசாகவே இருந்தது.
‘நான் வாங்கின மார்க்குக்கு இதுதான் கிடைச்சது’ என்றான் ஒருவன்.
‘எனக்கு படம் வரையுறது பிடிக்கும் சார். மார்கழி மாசம் நடக்குற ரங்கோலி போட்டில கலர் காலரா பூ வரைஞ்சு பிரைஸ் எல்லாம் வாங்கிருக்கேன்’ என்றாள் ஒரு பெண்.
‘இன்னும் ஆறு மாசத்தில் கல்யாணம், அதுவரைக்கும் ஜாலியா என்ஜாய் பண்ணத்தான் காலேஜ் வந்தேன்’ என்றாள் ஒருத்தி.
‘எதுக்கு இந்தப் பாடத்தை எடுத்தேன்னே தெரியல. டிகிரி முடிச்சதும் அரசாங்க வேலைக்கு பரீட்சை எழுதணும்’ பரிதாபமாக சொன்னான் ஒரு மாணவன்.
இப்படி குறிக்கோள் இல்லாமல் பொழுதை வீணாக்குகிறார்களே என்ற வருத்தம் அவனுக்கு.
“ஒரு பந்தயம் வச்சுப்போமா… அடுத்த பீரியடிலிருந்து நீங்க ஃப்ரீ… ஃப்ரீக்கு அர்த்தம் என்னன்னா இன்னைக்கு ஒரு நாள் முழுசும் சும்மாவே எதையும் செய்யாம உக்காந்திருக்கணும். யாரும் கிளாஸ் எடுக்க மாட்டாங்க. அதே சமயம் நீங்க அரட்டை அடிக்கக் கூடாது, காண்டீன் போகக் கூடாது, பிக் பாஸ் நிகழ்ச்சி மாதிரி டிவி, சினிமா, போன் எதுவும் கிடையாது.. உங்களால் முடியுமா” என்ற அவனது கேள்விக்கு
“பிக் பாஸில கலந்துக்கிட்டா சும்மா இருக்க சம்பளம் தருவாங்க. அதெப்படி நாங்க ஒரு நாளை சும்மாவே உக்காந்து வேஸ்ட் ஆக்குறது” என்று எங்கிருந்தோ குரல் வந்தது.
“இங்க சம்பளம் தரமாட்டோம். அதுக்கு பதிலா சும்மா உக்காந்துட்டு போறதுக்குத்தான் நீங்க பீஸ் கட்டுறீங்க. அப்ப பணமும் கட்டிட்டு, வகுப்பில் இருக்கும் முப்பது பேர் ஆளுக்கு மூணு வருஷம். ஆக மொத்தம் தொண்ணூறு வருஷங்களை வீணாக்குறது சரியா” என்றான் இழுத்துப் பிடித்துக் கொண்ட பொறுமையுடன்.
“இந்த மூணு வருஷம் காசையும் பாழாக்கிட்டு சும்மா உக்காந்துட்டு போறதுக்கு பதில் எத்தனையோ உருப்படியான விஷயங்களை செய்யலாம். உங்க அப்பா வியாபாரம் செஞ்சா கூட உக்காந்து தொழில் கத்துக்கலாம். புது மொழி ஒண்ணைக் கத்துட்டு சரளமா பேசலாம். சமையலைக் கத்துக்கிட்டு நிபுணர் ஆகலாம். அறிவியல் அடிப்படைகளைப் படிச்சுட்டு எல்எம்இஎஸ் மாதிரி குழந்தைகளுக்குக் கத்துத் தரலாம். விவசாயம் பண்ணலாம். இது மாதிரி உங்க மனசுக்குப் பிடிச்ச எத்தனையோ விஷயங்களைப் பண்ணலாம்.
ஆனால் நீங்க இது எதையும் தேர்ந்தெடுக்காம தாவரவியல் படிப்பைப் படிக்கணும்னு வந்துட்டிங்க. அது தப்பில்லை. ஆனால் பிடிக்குதோ, பிடிக்கலையோ, செய்வதைத் திருந்த செய்யலாமே… இந்த மூணு வருடங்களை உருப்படியா படிக்க முயற்சி பண்ணுங்களேன். யாரு கண்டது பாட்டனியே உங்களுக்கு வருங்காலமா கூட இருக்கலாம்”
“பாட்டனி படிச்சு என்ன செய்றது சார். அதிகபட்சம் டீச்சர் வேலை கிடைக்கும். இல்லை உங்களை மாதிரி லெச்சரர் ஆகலாம். அதுவும் கூட எல்லாருக்கும் அந்த வேலை வாய்ப்பு கிடைக்காது. மத்தவங்க சேல்ஸ் ரெப், கம்ப்யூட்டர் துறை, தனியார் பேங்க்ன்னு கிடைச்ச வேலையை செய்ய வேண்டியதுதான்”
“இப்படி பேசுறது உங்க அறியாமையைத் தான் காட்டுது. காற்று மாசு, சுற்றுப் புற சூழல் மாசு இதைப் பற்றின ஆராய்ச்சி துறை. என்வீரான்மெண்ட்டல் கண்சல்டண்ட்ஸ், பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா, விவசாயத்துறை ஆராய்ச்சி, பாரஸ்டரி, ஒஷெனோகிராபில வேலை வாய்ப்பு. இப்படி பல வாய்ப்புகளை வாரி வழங்குற துறை தாவரவியல். இதைப் பத்தி எல்லாம் தெரியாமலேயே இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திட்டீங்க…
ஒரு காரியத்தைத் தொடங்குறதுக்கு முன்னாடி முழுமையான விவரங்களைத் தெரிஞ்சுக்கிறதுதான் வெற்றிக்கு உதவும். அதனால அடுத்து வரும் ஒவ்வொரு கிளாஸ்லயும் ஒவ்வொரு வேலைவாய்ப்புத் துறை பற்றி ஒவ்வொருத்தாரா படிச்சுட்டு வந்து பாடம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி முதல் அஞ்சு நிமிடங்கள் சொல்லணும்” என்று சொல்லி முடித்தான்.
“கண்டிப்பா சார். இவ்வளவு வாய்ப்பு இருக்குனு இப்பத்தான் தெரியும்” என்று அவர்கள் சம்மதிக்கவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. வகுப்பை விட்டு வெளியே வந்தான்.
இந்தத் தலைவலி முடிந்தது. இனி அடுத்த தலைவலி காத்திருக்கிறது. தனது அறைக்குள் நுழையும்போதே “சகாயம் எல்லாம் முடிச்சாச்சா. வர சொல்லிட்டீங்களா” என்று குரல் கொடுத்தான். அங்கே அவன் சற்றும் எதிர்பார்க்காத ஒரு விருந்தினள்.
“என்னம்மா புது அட்மிசனா… பிஜியா?” அவனால் வேறு எதுவும் ஊகிக்க முடியவில்லை. கோவை எல்லாம் விட்டுவிட்டு ஜல்லிப்பட்டிக்கு வந்திருக்கும் இந்த வித்தியாசமான அல்ட்ரா மார்டர்ன் பெண்ணைப் பற்றி வேறென்ன அவனால் நினைக்க முடியும்.
“அம்மா வந்ததால… “ இழுத்தார் சகாயம்.
“பக்கத்து ரூம் காலியாத்தானே இருக்கு” என்றான் சகாயத்திடம்.
“அங்க கூட்டிட்டு வாங்க. நான் வரேன்” என்று அவரிடம் சொல்லிவிட்டு மீராவிடம் திரும்பினான்.
“யெஸ்… சொல்லுங்க. என்ன விஷயமா என்னைப் பாக்க வந்திங்க” என்றான்.
“குட் மார்னிங் மிஸ்டர். சஷ்டி. நான் மீரா.என்னைக் குமரேசன் அங்கிள் உங்களைச் சந்திக்க சொல்லி அனுப்பினாங்க”
“ஊட்டிலேருந்து குமரேசன் சாரா” சஷ்டியின் குரலில் இப்போது மரியாதை.
“யெஸ். அவர்தான்”
குமரேசன் அவனது கைட். எத்தனையோ உதவிகள் செய்தவர். அவர் அனுப்பிய ஆளென்றால் முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும்.
“சொல்லுங்க மிஸ். மீரா”
“வந்து… “ தயங்கினாள். அறையில் யார் யாரோ இருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் பேச வேண்டிய விஷயமா இது.
“சொல்லுங்க” புரிந்து கொள்ளாமல் சஷ்டி மறுபடியும் சொல்ல…
முழுவதுமாய் சொல்லாமல்
“உங்களுக்கு ரீமா இண்டஸ்ட்ரீஸ் பத்தி தெரியுமா”
“கேள்விப் பட்ட பேரு மாதிரி இருக்கு. ஆனால் சட்டுன்னு நினைவு வரல”
“எனக்கு தெரியுமே…. லா லா லால்லாலா ன்னு ஒரு பொண்ணு நீச்சல் டிரெஸ்ல பாட்டு பாடிட்டே சோப்பு போட்டு குளிக்குமே அந்த கம்பனிங்களா” என்று சொன்னான் சகாயம்.
“அதேதான்” என்றாள் நெளிந்துகொண்டே. அந்த அறையிலிருந்த மற்ற நபர்களும் அவளை சுற்றிக் கொண்டனர்.
“யாருங்க அந்தப் பொண்ணு. வெள்ளக்காரியாட்டம்… செம அழகு. எங்க காலேஜ் ஆண்டுவிழாவுக்கு இந்த தடவை வர சொல்றீங்களா” என்று இன்னொருவன் கேட்க.
முறைத்த சஷ்டி “ஏண்டா… கல்லூரி ஆண்டுவிழாவுக்கும் அந்தப் பொண்ணுக்கும் என்ன சம்பந்தம். நீங்க போயி ஆவுற வேலையைப் பாருங்க. நான் சொன்னவங்களைக் கூட்டிட்டு வந்து பக்கத்து ரூமில் அசெம்பிள் பண்ணுங்க” அனுப்பிவிட்டான்.
சஷ்டியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அங்கிருந்து நகர்ந்தாலும் பேச்சு காதில் விழும் தூரத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தனர். அதனால் எப்படி மேற்கொண்டு தகவல்களைத் தெரிவிப்பது என்றே மீராவிற்குப் புரியவில்லை.
“நீங்க சொல்லுங்க மீரா. ரீமா சோப்புக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. எவ்வளவு அழகி அதைப் போட்டு குளிச்சாலும் நானெல்லாம் லைஃப்பாய்தான்”
அடக்கடவுளே என்ற பார்வை பார்த்தவள் “சஷ்டி சார். நீங்க ரீமா உபயோகிக்கிறதா இல்லைன்னாலும் உங்களுக்கு அந்த நிறுவனத்தின் சிஸ்டெர் கான்செர்ன்ல ஒரு வேலை தரதா முடிவெடுத்து இருக்காங்க. நீங்க சம்மதிச்சா இப்பவே வேலைக்கு சேர்ந்துடலாம்” என்றவளை ஏதோ ஒரு அபூர்வமான ஜந்துவைப் பார்ப்பது போலவே பார்த்தான் சஷ்டி.
“தம்பி… இந்த காலேஜை விட்டுட்டு நீங்க வேற வேலைக்குப் போறீங்களா… என்கிட்ட சொல்லவே இல்லையே… அய்யாவுக்குத் தெரியுமா” என்று சகாயம் கேட்க, மற்றவர்கள் திகைப்புடன் பார்க்க, மீராவின் மேல் பயங்கர கோபம் சஷ்டிக்கு. ஆனால் குமரேசனின் முகம் அவளைத் திட்ட விடாமல் தடுத்தது.
“உங்க கம்பனில வேலைக்கு அப்ளை பண்றவங்களுக்கு வேலை தாங்க. அதை விட்டுட்டு தமிழ்நாட்டோட ஒரு மூலைல ஒதுங்கி இருக்கவனைக் கூப்பிட்டு வேலை தரேன்னு சொல்றீங்க. இது சுத்த பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு”
“பைத்தியக்காரத்தனம்தான் மிஸ்ட்ர்.சஷ்டி… ஆனால் அது மறுக்க முடியாத உண்மையும் கூட. இதைப் பத்தி மேற்கொண்டு உங்ககிட்ட பேசணும்”
“இல்லிங்க. இந்த காலேஜ்ல நான் பொறுப்பேத்து இருக்கேன். நீங்க சொல்றதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. குமரேசன் சார்கிட்ட நான் சொல்லிக்கிறேன்” என்றான்.
“தம்பி பசங்கல்லாம் பக்கத்து ரூமில் காத்துகிட்டு இருக்காங்க” என்றான் சகாயம் மெதுவாக.
“சரிங்க உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி” கிளம்பலாம் என்பதைப் போல எழுந்தான்.
அவளது கைப்பையிலிருந்து விசிட்டிங் கார்டை எடுத்து வேகவேகமாக நீட்டினாள் மீரா. “ஒருவேளை உங்க மனசு மாறினால். இது கோவைல நான் தங்கியிருக்கும் ஹோட்டல். இன்னும் ரெண்டு நாள்ல ஊட்டி கிளம்புவேன்” அதனை வாங்கி சட்டைப்பைக்குள் போட்டவன். அதன்பின் மேஜை இழுப்பறையிலிருது பெரிய பேஸ்பால் பேட் போன்ற ஒன்றை எடுத்தான். பின்னர் பக்கத்து அறைக்கு சென்றான்.
இவன் என்ன வாத்தியாரா இல்லை அடியாளா அதிர்ச்சி பக்கத்து அறைக்கு அவன் செல்வதை வெறித்துப் பார்த்தாள்.
சிறிது நேரத்தில் “படிக்கிறது ஃபர்ஸ்ட் இயர். அப்பவே கூட படிக்கிற பிள்ளைங்களையும், டீச்சர்களையும் ஏடாகூடமான போஸ்ல போட்டோவா எடுக்குறீங்க. இதுக்கு வாட்ஸ்அப் க்ரூப் வேற கேக்குதா… என் காலேஜ்லயே ஒழுங்கீனமா…” என்று சஷ்டியின் கடுமையான குரலும்.
“அய்யோ… இனிமே செய்ய மாட்டோம் சார். எல்லா பொண்ணுங்களும் எங்களுக்கு அக்கா தங்கச்சி மாதிரி சார்” என்ற அலறலும் கேட்டபடியே அறையை விட்டு வெளியே வந்தாள்.
“சஷ்டி சார் இப்படித்தான். படிக்கிற பிள்ளைங்களுக்கு நல்லா ஹெல்ப் பண்ணுவார். வசதி இல்லைன்னா பீஸ் கூட கட்டிடுவார். ஆனால் ஒழுக்கக் கேடானவங்களை சாட்டை எடுத்துத் திருத்திருவார். அதனாலதான் கோ எட்னாலும் நம்ம காலேஜ்ல பொண்ணுங்க அதிகம் படிக்கிறாங்க” என்று சீனியர் மாணவி பக்கத்து வகுப்பறையில் ஜூனியர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க. அநியாயம் பொறுக்காமல் பொங்கி எழும் சஷ்டியால் தனக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை மீராவுக்குப் பலபட்டுக் கொண்டே வந்தது. ஆனால் உதவுவானா?
Hi Madhura
Interesting
One request,
Can you please add a tag in each story title in every episode, so that when we click on that tag, all the episodes for that particular novel is available. Thanks in advance
Thanks Sindu. I have created the tags already. There is a category drop-down. You can select the title there. Give me a shout if the theme is not user friendly.
Nan kooda enada hero va villain range ku katreengalenu ninachen ana sir semma ponga.real life la yaravathu ipidi pannina evlo nalla irukum.
thanks Selva .Nallathaan irukum.