Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 7

அறுவடை நாள் – 7

This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.

அத்தியாயம் – 7 

 

காலை ஈத்தாமொழி டீக்கடையில் டீயுடன் வாங்கி வந்திருந்த  பேப்பரை மேய்ந்தார் விஜயா. 

 

 

முக்கிய சாலையில் செல்லும் வாகனங்களை கண்காணிக்க வசதியாக மரநிழல்களால் குடை பிடிக்கப் பட்டிருந்த தெருவில் ஒரு ஓரத்தில் கண் மறைவாக ஜீப்பை நிறுத்திக் கொண்டனர். 

 

“அந்த கஞ்சா வண்டி இந்தப் பக்கம்தானே கிரேஸ் வருது. நமக்கு வந்த தகவல் உண்மைதானே”

 

“ரொம்ப நம்பிக்கையான இன்பார்மர் மேம். இந்த தடவை சரக்கு கொஞ்சம் அதிகமா வரும் போல இருக்கு”

 

“நேத்து கன்னியாக்குமரி போயிட்டு வந்தேன். தக்கலை ஸ்டேஷன்ல என்னவோ திருவிழான்னு பேசிக்கிட்டாங்க. அதென்னது கிரேஸ்”

 

“ஆமாம் மேடம் அங்க முருகன் கோவில் திருவிழாவை சிறப்பா கொண்டாடுங்க. ஸ்டேஷனே அன்னைக்கு திருவிழா கோலத்தில் இருக்கும்”

 

“இப்படித்தான் பொதுமக்கள் கூட பழகணும். அப்பதான் அவங்களுக்கும் நம்ம மேல ஒரு நம்பிக்கை வரும்”

“நேரத்துக்கு எங்க போறது? ஸ்காட்லாண்டு யார்டுக்கு இணைன்னு சொல்லி சொல்லியே மண்டைல பாரத்தை ஏத்துறாங்களே மேடம்”

 

“உண்மைதான். அல்லி படிச்சு சொல்லிட்டு இருந்தது. ஜெர்மனில இருக்குற ஒரு ஸ்டேட்ல ரெண்டு கோடி பேரு கூட இல்லை. அவங்களுக்கு ஐம்பதாயிரம் போலீசாம். இந்திய மதிப்பில் இருபத்தி எட்டாயிரம் கோடி பட்ஜெட்”

 

“நம்ம ஊர்ல” என்றார் ட்ரைவர். 

 

“ஏழு கோடி பேருக்கு ஒரு லட்சம் போலீஸ். இப்பத்தான் எட்டாயிரம் கோடி அரசாங்கம் ஒதுக்கி இருக்கு”

“பொன்னு வைக்கிற இடத்தில் பூ வைக்கிறாங்க”

 

“ஒரு டிகிரி முடிச்சுட்டு கொஞ்சம் அனுபவம் இருந்தா நாப்பதாயிரம் அம்பதாயிரம் சம்பளம் ஈஸியா கிடைக்குது. அதில் பாதிதான் போலீஸ் தேர்வாகி கடினமா பயிற்சி எடுத்துட்டு வர ஆட்களுக்குக் கிடைக்குது. நம்ம அரசாங்கமும் இந்த சட்ட ஒழுங்கு துறைல சம்பள உயர்வு, தேவையான ஓய்வு கொடுத்தா பலர் ஆர்வத்தோடு வருவாங்க”

 

“சம்பளம் போதுமான அளவு கிடைச்சா பலர் வெளிய கை நீட்டுறதைக் குறைப்பாங்க மேம்”

 

“போலீஸ் துறைல www – Woman, Wine and Wealth இந்த 3ws வீட்டு வாசலிலேயே கைக்கு பக்கத்திலேயே நிக்கும் அதைப் பாக்காம கடந்து போற மனோ தைரியம் இருக்குறவங்கதான் இதுதாண்டா போலீஸ்னு தலை நிமிந்து நிப்பாங்க”

 

“அதிகாரம் இருந்தும் எதுக்கும் அடிபணியாம இருந்தால் அலைக்கழிக்கிறாங்களே இல்லை போட்டுத் தள்ளிடுறாங்க”

 

“இது தொடர்ந்தா நேர்மையான ஆட்கள் காவல் துறைக்கு வரத் தயங்குவாங்க. இப்ப ஆளுங்கட்சிக்கு சாதகமா வளைக்கப் பார்த்தா. நாளைக்கு ஆளும் கட்சி எதிர்கட்சிக்குப் போகும்போது அவங்களுக்கே திரும்பக் கிடைக்கும்”

 

“ஒரு லைனில் நிக்கக் கூட சிபாரிசு பிடிச்சுட்டு வந்து ‘நான் யாரு தெரியுமா’ன்னு நம்மை மிரட்டுற மனநிலை பப்ளிக்ல அதிகமாயிருச்சு. ஒரு டீச்சர் தப்பு செஞ்சா தனிநபர் குற்றம். ஒரு கான்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனி கட்டின கட்டிடம் இடிஞ்சு விழுந்தா  அது அந்தக் கம்பெனி விதியை பின்பற்றல அந்த நிறுவனத்தின் தப்பு. ஆனால் ஒரு போலீஸ் செய்யும் குற்றம் ஒட்டு மொத்த காவல்துறையின் குற்றம். எல்லாத்துக்கும் நம்ம சிலுவை சுமக்கவும் பதில் சொல்லவும் கடமைப்பட்டிருக்கோம். இதெல்லாம் பாக்கும்போது வேலையை ராஜினாமா பண்ணிட்டு காட்டுக்குள்ள குடிசை போட்டு நிம்மதியா வாழணும்னு சில சமயம் தோணுது மேடம்” என்றான் பெருமாள்சாமி விரக்தியுடன். 

 

“சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய நம்ம துறை ஒரு கட்டுக்கோப்போட இருக்கணும்னு மக்கள் நினைக்கிறதில் தப்பில்லை. குற்றத்தை தடுக்க வேண்டிய போலீஸ் குற்றவாளியா மாறுறது வெட்கக் கேடான விஷயம்தான். ஆனாலும் ஊடகத்தில் கூட நம்ம சாதனைகளை பெருசா சொல்றதில்லையே. கருப்பு பக்கத்தைக் காண்பிப்பதில் தான் குறியா இருக்காங்க.

 

வேலைக்கு சேர்ந்த புதுசில் இதெல்லாம் எனக்கும் இருந்ததுதான் பெருமாள்சாமி. நம்மளோட குமுறலை எல்லாம் ஓரம் கட்டிட்டு பாரு. இன்னமும் நம்மை நம்பி எத்தனை அப்பாவி ஜனங்க இருக்காங்க. அவங்களுக்கு எப்படியாவது உதவி செஞ்சு மனசை சமன் செஞ்சுப்பேன். அதுதான் இந்தப் பணி மேல இன்னமும் காதலை தக்க வச்சிருக்கு. முதலில் வேலையைக் காதலி. எவ்வளவு கஷ்டமிருந்தாலும் இந்தக் காதலி கூட குடும்பம் நடத்து”

 

“மேடம் சிவப்பு கார்” என்றார் ட்ரைவர். 

 

“மடக்குங்க… “

 

வேகமாய் ஜீப் அந்தக் காரைத் துரத்தியது. காவல் வண்டியைக் கண்டதும் வேகம் எடுத்த கார் அவசரத்தில் ஓரமாக சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தவரை மோதிவிட பொதுமக்களே அவர்களை மடக்கினர். 

 

சோதனையைத் தொடர்ந்தார் விஜயா “டிக்கில ஒன்னும் இல்ல. சரக்கை எங்கடா வச்சிங்க?”

“எங்களுக்கு ஒன்னும் தெரியாது”

 

அப்படியே அருகே இருக்கும் ஷெட்டுக்கு அவர்களை காருடன் அள்ளிச் சென்றனர். 

 

காரை அலசினார். 

 

“உங்க மொபைலைக் கொடுங்கடா” 

 

வாங்கி அவர்களை விட்டே அன்லாக் செய்து அழைப்புகள் குறுஞ்செய்திகள், வாட்சப் என்று ஆராய்ந்து பார்த்தார். 

 

“மேடம் நாங்க ஒரு தப்பும் செய்யாதவங்க. எங்க போனில் எதுவும் இருக்காது”

 

உண்மைதான் ஒரு க்ளூ கூட இல்லை. எல்லாத்தையும் க்ளீனா அழிச்சிருக்கானுங்க. இருந்தும் எதோ இருக்கும் என்று சொன்னதால் வாட்சப்பை மறுபடியும் பார்த்தார். 

 

எதையோ பார்த்தவர் முகம் பளிச்சிட்டது. இந்தக் காரில் கண்டிப்பா இருக்கு. 

 

ஒரு வினாடி யோசித்தவர் “கார்சீட்டைக் கிழிங்க”

 

கார் சீட்டைக் கிழிக்க ஆரம்பித்தனர். 

 

“ஸ்டெப்னியை கிழிச்சு பாருங்க”

 

எதுவும் அவ்வளவாக கிடைக்கவில்லை. ஆனால் நான்கு பெட்டிகள். அது முழுவதும் துணி மணிகள். 

 

“இதுதான் மேடம் கிடைச்சது” என்றார் கிரேஸ். 

 

எங்கே இருக்கும். என்னவா இருக்கும்? யோசி விஜயா… சில நிமிடங்கள் யோசித்தவர். 

 

“பெட்டியைத்  தொறங்க”  என்றார். 

 

நான்கு பெட்டிகளையும் வரிசையாகத் திறந்து வைத்துக் கொண்டு அப்படியே பார்த்தார். 

 

“இதில் எதுவும் இல்லை மேம். கிழிச்சு கூடப் பார்த்துட்டோம்” 

 

“என்னவோ வித்யாசமா இருக்கும்,  கண்டிப்பா இருக்கும். முதல்ல அந்த பெட்டில இருக்குற பொருள் எல்லாத்தையும் ஒண்ணு விடாம லிஸ்ட் போட்டு எடுத்துட்டு வாங்க”

 

சிகிரெட் பாக்கெட்டில் இருந்த சிகிரட்டைக் கூட ஒன்று விடாமல் பட்டியல் போட்டு எடுத்து அடுத்த இருபதாவது நிமிடம் விஜயாவிடம் தந்தார்கள். 

 

“கிரேஸ் இந்த லிஸ்டில் நெருடலா எனக்கு ஒன்னு படுது, நீயும் படிச்சுப் பாரு”

 

படித்துப் பார்த்தார் கிரேஸ் “முதல் பெட்டில அஞ்சு சட்டை, ரெண்டு வேஷ்டி, பனியன், ஜட்டி, துண்டு, டென்ட்டு, சிகிரெட் பாக்கெட் மூணு, விஸ்கி ஒரு பாட்டில்” 

 

“ரெண்டாவது லிஸ்ட் படி”

 

“ஒரு  பேண்ட், ரெண்டு சட்டை,  பான்பராக் பாக்கெட் பத்து, டென்ட்டு… “

 

“நிறுத்து அடுத்ததைப் பாரு”

 

வேகமாக மூன்றாவது நாலாவது லிஸ்டைப் பார்த்த கிரேஸ் “இந்த பெட்டியையும் டென்ட்டு இருக்கு மேடம்”

 

“ட்ரெஸ் எல்லாம் தனித்தனியா இருக்கலாம் தப்பில்லை. ஆனால் எதுக்கு ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டென்ட்டு வச்சிருக்கான்?”

 

“கரெக்டு தான் மேடம்”

 

“பெட்டியைப் பாரேன். அட்டைப்பெட்டில வச்சு பொருள் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கானுங்க”

 

“ஆமாம்.  ப்ராப்பர் சூட்கேஸ்ல வைக்காம எதுக்கு கார்டபோர்டு பாக்ஸில் வச்சிருக்காங்க. சந்தேகமா இருக்கு. கூப்பிட்டு கேட்கட்டுமா”

 

“கார்டுபோர்டு முதல்கொண்டு நார்கோடிக்ஸ்ல எல்லாத்தையும் செக் பண்ணி உடனே ரிசல்ட் சொல்லச்  சொல்லு. அதுவரைக்கும் இவனுங்களைக் காவலில் வை. சைக்கிளிஸ்ட்ட மோதினதில அந்த ஆளுக்கு அடிபட்டிருக்கு. அரசாங்க டாக்டர் அந்த ஆள் ஒகேன்னு சொல்ற வரைக்கும் இவனுங்க வெளிய போக முடியாது. ரெண்டாவதா குட்கா பாக்கெட் வச்சிருந்தானுங்கள்ல அதைக் காரணமா சொல்லு. எங்க வாங்கின கடை பேரு என்னன்னு கொஞ்சம் இழுத்தடி. 

 

அப்பறம் ஸ்டேஷனில் யாரையாவது விட்டு இந்த மாதிரி டென்ட் எங்க கிடைக்கும்னு விசாரிக்க சொல்லு”

“சரி மேடம். நீங்க எங்க கிளம்புறிங்க”

 

“அடுத்த பிரச்சனை கிரேஸ். நம்ம ஸ்டேஷனில் ரெகார்ட் ஆனா பழைய கேஸ் பத்தி இன்பர்மேஷன் கேட்டிருக்காங்க. அது விஷயமா பேசத்தான் போயிட்டு இருக்கேன். அது சம்பந்தமான கோப்புக்களை அல்லிக்கிட்ட ஈமெயில் பண்ண சொல்லியிருக்கேன். படிச்சுக்கிட்டே போவணும்”

 

“எந்த கேஸ் மேடம்”

 

“மண்டையோட்டு கேஸ்”

 

“அதுவா சரியான மண்டையிடி கேஸாச்சே”

 

“அப்படியா?”

 

“ஒரு லீட் கூட கிடைக்காத வழக்கு”

 

“சரி நாளைக்கு நம்ம போயி எவிடென்ஸ் எல்லாத்தையும் இன்னொரு தடவை அலசிடலாம்”

 

மேலதிகாரியை சந்தித்துவிட்டு இரவு பதினோரு மணிக்கு ஈத்தாமொழிக்கு வந்த பொழுது சோர்வாகவே இருந்தது விஜயாவுக்கு. அவருக்காக வீட்டில் காத்திருந்தாள் அல்லி. 

 

“இன்னைக்கு கிளம்ப லேட்டாயிருச்சு,  எங்க ஊர் பஸ்ஸை நிறுத்திட்டாங்க மேடம். இங்க தங்கிக்கலாமா?”

 

“தாராளமா தங்கும்மா. சாப்பிட்டியா?”

 

“கடை ல தோசை மாவு பாக்கெட்  வாங்கி வச்சிருக்கேன். தொட்டுக்க மிளகாய் பொடி பாக்கெட் கூட  இருக்கு. ரெண்டு பேருக்கும் தோசை ஊத்தட்டுமா?”

 

“எதுக்கும்மா வீண் சிரமம். சாப்பாட்டை கடைலயே வாங்கிக்கலாம்”

 

“இன்னைக்கு மட்டும் மேடம்”

 

“சரி நான் குளிச்சுட்டு வந்துடுறேன். ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம். முதல்ல பாத்ரூம் போவணும். ஆம்பளைங்க மரத்துக்குப் பின்னாடி ஒதுங்கிடுறாங்க. நமக்கு சரியான டாய்லெட் வசதி இருந்தா நல்லாருக்கும்” என்றபடி குளித்துவிட்டு மஞ்சளில் வெள்ளைப் பூக்கள் அள்ளித் தெளித்த நைட்டியை அணிந்து கொண்டு வெளிவந்த பொழுது அல்லி இருவருக்கும் தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள். 

 

“குருமா வாசம் அடிக்குது”

 

“நாலு பரோட்டா சால்னா வாங்கிட்டு வர சொன்னேன். ராத்திரி பரோட்டா சாப்பிட மாட்டிங்கன்னு தெரியும். தோசைக்கு சால்னாவைத் தொட்டுக்கலாம்ல”

 

“தள்ளு, நான் தோசை ஊத்தித் தரேன்”

 

“மத்தியானம் கூட நீங்க சாப்பிடலைன்னு ட்ரைவர் சொன்னார். அதனாலதான் ஒரு ஆம்பலேட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன்”

 

“தாங்க்ஸ் அல்லி. உங்கப்பா மாதிரியே அக்கறை”

 

“தாங்க்ஸ் மேடம். இந்தாங்க சாப்பிடுங்க”

 

“உனக்கு”

 

“எனக்கு பரோட்டா பா.. ஒரே ஒரு தோசை ஊத்தி வச்சிருக்கேன்”

 

இருவரும் ஹாலில் இருந்த சுவற்றில் எதிர் எதிரே சாய்ந்தபடி அமர்ந்து கொண்டனர். 

 

“உங்க முகமே வாட்டமாயிருக்கு மேடம். மேலதிகாரிங்க ஏதாவது கடுமையா பேசிட்டாகளா?”

 

“அதெல்லாம் பழகிருச்சு அல்லி. ஆனால் இந்த முறை இத்தனை கடுமை தேவையே இல்லை”

 

விஜயாவுக்கு தெரியும். இது தொடர்ந்து வரும் பனிப்போர். அவரது தற்போதைய மேலதிகாரி ராஜாராமுக்கும் அவருக்கும் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தடவை உரசல் ஏற்பட்டது. கொஞ்சம் வளைந்து கொடுக்க சொன்னதைக் கேட்காமல் போனதால் ராஜாராமுக்கு பொருளாதார ரீதியாகவும், துறை ரீதியாகவும் சறுக்கல் ஏற்பட்டது. அன்றிலிருந்து விஜயாவை வறுத்தெடுக்க காத்துக்கொண்டிருக்கிறார். இப்போது வகையாக சிக்கிக் கொண்டார்.

 

“இதென்ன உங்க ஏரியால இருக்குற இந்த மண்டையோட்டு கேஸை இன்னமும் சால்வ் பண்ணாம வச்சிருக்கிங்க”

 

“நான் இந்த நிலையத்துக்கு இன்சார்ஜ் எடுத்து ரெண்டு மாசம்தான் ஆச்சு சார். இப்பத்தான் பழைய கேஸ்களை பார்த்துட்டு இருக்கேன்”

 

“ரெண்டு மாசம். அறுபது நாட்கள் முடிஞ்சுடுச்சு. இன்னமும் கேஸை முடிக்கத் துப்பில்லாம சாக்கு போக்கு சொல்லிட்டு இருக்கிங்க”

 

“வழக்கமான பணிகளை கவனிக்க நேரம் சரியா இருந்ததால பேக் லாகை கிளியர் பண்ணத் தாமதமாகுது”

 

“அப்பாவி பசங்களை கட்டப்பஞ்சாயத்து செஞ்சு அடிச்சு உதைக்க நேரமிருக்கு. கேஸை கவனிக்க நேரமில்லையோ?”

 

அப்பாவி பசங்களா? கட்டப்பஞ்சாயத்தா?

 

“ரெண்டு காலேஜ் பசங்களைத் தூக்கி செல்லில் போட்டு காசு கேட்டு பேரன்ட்ஸ மிரட்டிங்களாமே? தரலைன்னா ஈவ் டீசிங், 354 ல தூக்கி போட்டுருவேன்னு நீங்க சொன்னதெல்லாம் என் காதுக்கு வந்துச்சு. நான் இருக்குற வரை இந்த மாதிரி கலெக்ஷன் பிசினெஸ்ல இறங்கினிங்க என் நடவடிக்கை கடுமையா இருக்கும்”

 

ஓ அந்த பெரும்புள்ளி இங்கு போட்டுத் தந்துவிட்டானா?

 

“இது அபாண்ட குற்றச்சாட்டு சார். அப்பாவி பசங்களா இல்லையான்னு என்கிட்டே விளக்கம் கேட்டிருந்தா தெரிஞ்சுருக்கும். இதுவரை யாருகிட்டயும் கை நீட்டி காசு வாங்கியதில்லை. அது உங்களுக்கும் நல்லாவே தெரியும்”

 

“அதைப்பத்தி பேச உங்களைக் கூப்பிடல. உங்க ஏரியால மிஸ்ஸிங் கேஸ் எக்கச்சக்கமா இருக்கு. மிஸ்ஸிங் லிஸ்டை அடுத்த வாரம் எனக்கு வந்தாகணும். இன்னும் மூணு வாரத்தில் இந்த மண்டையோட்டு கேஸை எடுத்துட்டு ப்ரோக்ரேஸ் சொல்றிங்க. வழக்கை சால்வ் பண்ண முடியலைன்னா எனக்கு கேப்பபிலிட்டி இல்லை இதை சிபிசிஐடி கிட்ட தந்துடுங்கன்னு எழுதித் தந்துட்டு போயிட்டே இருங்க”

 

தேவையே இல்லாத திட்டு. மனவருத்தம் அதிகம்தான். வீட்டில் கணவரின் மடியில் ஆறுதலாக சாய்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். 

 

வரும் வழியில் ட்ரைவர் டீ குடிக்கச் சென்ற கேப்பில் முத்துவேலனை அழைத்துப் பேசிவிட்டார். அவரும் ஆறுதலாக “விடும்மா நீ நல்லதுக்குத்தானே செஞ்ச… அவங்க பசங்க கிரிமினல் ஆகாம தடுக்கப்பாக்குற… அவனுங்க மேல இருந்த கேஸை வாபஸ் வாங்கியாச்சு. பசங்க ரெண்டு பேரும் வெளியூருக்குப் படிக்க போனதால அந்தப் பொண்ணுக்கு இனிமேல் பயமில்லை. பொண்ணு காம்பென்சேஷன் வாங்கிட்டு ஹேப்பியா இருக்கு”

 

“மேடம்… இன்னும் ஒரு தோசை” என்று நினைவுலகத்திற்கு கொண்டு வந்தாள் அல்லி. 

 

“போதும் அல்லி. இதுவே அதிகம்”

 

“தினமும் ராத்திரி இட்டிலிதான் சாப்பிடுறிங்க. கொஞ்சம் சத்தா சாப்பிடுங்க மேடம்”

 

அன்புடன் பேசியவளை மகளை போல பார்த்தார் விஜயா.

 

“வயசுப்பிள்ளை நீ நல்லா சாப்பிடு. இந்த அலைச்சலுக்கு ஊட்டமா  சாப்பிடணும்”

 

“மண்டையோட்டு கேஸ் பத்தி சொன்னிங்களே மேடம்” நினைவு படுத்தினாள். 

 

“ஆமாம் அல்லி இன்னும் மூணு வாரம் கெடு கொடுத்திருக்காங்க. நீ அனுப்பின டாக்குமெண்ட் எல்லாம் படிச்சு பார்த்தேன். லீட் எதுவும் கிடைக்கலனு க்ரேஸ் சொன்னாங்க. எனக்கும் அப்படித்தான் தோணுது. பாரன்சிக்ல ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி எவிடென்ஸ் இல்லையேம்மா”

 

“ஆமாம் மேடம்”

 

“நாளைக்கு நானும் கிரேசும் ஏதாவது கிடைக்குதான்னு பாக்குறோம்”

 

“மேடம் அந்த கேஸ் போதே எனக்கு ஒரே சந்தேகம் இருந்தது. அதுக்கப்பறம் நானும் என் பிரெண்டும் இந்த கேஸை பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணோம்.  ப்ளீஸ் ப்ளீஸ் நானும் இன்வெஸ்டிகேஷன்ல ஜாயின் பண்ணிக்கவா?”

 

“என்ன டிஸ்கஸ் பண்ணிங்க? யாரு உன் பிரெண்ட்?”

 

“என் பிரென்ட் தென்னாடன். பாரன்சிக்ல ஜாயின் பண்ணிருக்கான். நான் போலீஸ்ல சேர்ந்ததால் இந்த கேஸைப் பத்தி ஒரு நாள் டிஸ்கஸ் பண்ணோம். என்னன்னா… “

 

அல்லி பாயிண்ட் பாயிண்டாக சொல்லி முடித்ததும் யோசிக்க ஆரம்பித்தார் விஜயா. 

3 thoughts on “அறுவடை நாள் – 7”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post