Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 5

அறுவடை நாள் – 5

This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.

அத்தியாயம் – 5

காலை வியர்க்க விறுவிறுக்க ஒரு சிறு நடை பயிற்சி மேற்கொண்டிருந்த விஜயாவைப் பார்த்து கையசைத்தார் எதிரில் வந்த மேரி. இந்த ஊரில் இருக்கும் பெரிய பணக்காரப் பெண்மணி. வயது அறுபது தாராளமாக இருக்கும். அவரது கணவர் அம்புரோஸ் லாஞ்சுகள் வைத்து மீன் பிடித்  தொழிலை செய்தவர். தூத்துக்குடியில் மேரியைக் கண்டு காதலில் விழுந்தவர் அப்படியே திருமணம் செய்து சொந்த ஊரில் வந்து தங்கிவிட்டார். ஈத்தாமொழியில் பல ஏக்கர் தென்னந்தோப்புகள் அவருக்கு சொந்தம். கணவர் மறைந்தும் அந்த ஊரிலேயே தங்கி அந்த மக்களையே தனது சொந்தங்களாக வரித்து வாழ்ந்து வரும் மகராசி. 

முக்கியமாக விஜயா தங்கி இருக்கும் வீடு அவருடையதுதான். விஜயாவுடன் இணைந்து கொண்டார் மேரி.

“என்ன மேடம் இன்னைக்கு நடை பயிற்சி எல்லாம்?”

“நேரம் கிடைச்சது. சரி நடக்கலாம்னு வந்துட்டேன்”

அப்படியே டீக்கடையில் பேப்பரை வாங்கிவிட்டு இருவருக்கும் டீ சொல்லப் போனார். 

“பக்கத்துலதான் வீடு இருக்கு. இன்னைக்கு டீக்கு பதிலா எங்க தோப்பு இளநியைக் குடிங்களேன்”

“டீ பழகிடுச்சு”

“தினமும் அந்த ஜீப்புலயே சுத்துறிங்க. ஊருல இருக்குற வெயில் எல்லாம் உங்க தலைலதான் காயுது. காலைல வெறும் வயித்தில் இளநி குடிச்சா சூடெல்லாம் கப்புன்னு இறங்கிரும். வாங்கம்மா” என்று அன்பு கலந்த அக்கறையோடு அழைக்கும்போது மறுக்கவா முடியும்?

குளு குளுவென மரங்களுக்கு மத்தியில் மலையாளப் பாணியில் கூரை வேயப்பட்ட வீடு. திண்ணையில் விருந்தினர்கள் இளைப்பாற இருக்கைகள் சென்டர் டேபிள். 

“தேனம்மா எங்க ரெண்டு பேருக்கும் நல்ல இளசா ரெண்டு இளனியை சீவி எடுத்துட்டு வா” என்று வேலைக்காரப் பெண்மணியை அனுப்பினார். 

“இவதான் எனக்கு இங்க ஒரே துணை. எனக்கு அவ ஆதரவு, அவளுக்கு நான் ஆதரவு” மேரி சொல்லிவிட்டு விஜயாவின் வீட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டார். 

“பிள்ளைகள் வந்தா அந்த வீடு எப்படி பத்தும்? எங்க வீட்டில் வந்து தங்கிக்கோங்க” என்று சொன்ன பெண்மணியின் விருந்தோம்பல் பண்பில் வியந்தார். 

“எங்க ஊர் எப்படி இருக்கு?” 

“அழகா இருக்கும்மா”

“குற்றங்கள் இல்லாம இருந்தால் சரி. களைகளை நீங்க எடுத்து எங்களைப் பாதுகாப்பிங்கன்னு நம்பிக்கைலதான் நிம்மதியா தூங்குறோம்”

“உங்க நம்பிக்கைக்கு பாத்திரமா நாங்களும் நடந்துக்கிறோம்”

“விஜயாம்மா எனக்கு ஒண்ணு புரியல. ஏன் நீங்கல்லாம் ஸ்டேஷனில் உக்காந்து வேலை பாக்கக் கூடாது. இங்கேயும் அங்கேயும் அலைஞ்சுகிட்டே இருக்கீங்க?”

சட்ட ஒழுங்கைக் காக்கும் போலீஸ்காரர்கள் எப்பொழுதும் ரோந்திலேயே இருக்க வேண்டும் எப்படி தேர்வு அறையில் கண்காணிப்பாளர் நடந்து கொண்டே எல்லா மாணவர்களையும் கண்காணிக்க வேண்டுமோ அதே போலத்தான் இவர்களும். சப் இன்ஸ்பெக்டர் பதவி வந்ததும் இருபத்தி ஐந்து சதவிகிதம் பேப்பர் வொர்க் செய்ய காவல் நிலையம் வருவார்கள். அதுவே இன்ஸ்பெக்டர் ஆகும்போது ஐம்பது சதவிகிதமாக உயரும். மற்றபடி அவர்களும் விசாரணை, ரோந்து என்று சுற்றிக் கொண்டேதான் இருப்பார்கள், இருக்க வேண்டும் என்று காவல் பணியின் தன்மை பற்றி சொன்னார். 

“பாவம்… சாப்பாடு தூக்கம் கூட இல்ல. இந்த சட்ட ஒழுங்கில் என்னவெல்லாம் வருது?”

“பொதுமக்கள், தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் எல்லாரோட பாதுகாப்பும் லா அண்ட் ஆர்டர் பொறுப்பு. உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் பந்தோபஸ்துக்கு நாங்கதான் காவல் காக்கணும். போராட்டக்காரர்களை கைது  செய்றதும் இதில்  அடக்கம். தினமும் பப்ளிக் தரும் புகார்களை பதியணும், விசாரிக்கணும். 

கொலை கொள்ளை வழக்கு நாங்கதான் முதலில் புலனாய்வு செய்வோம். ஊரைப் பொறுத்து க்ரைமுக்கு தனி பிரிவே இருக்கு. சின்ன ஊருன்னா இந்த மாதிரி பிரிவு, அதிகாரி எல்லாம் இருக்க மாட்டாரு. 

 முக்கியமான கொலை வழக்கு விசாரணை எல்லாம் சூட்டோட சூடா புலனாய்வு செஞ்சா திருடனை கப்புன்னு பிடிச்சுடலாம். ஆனால் எங்களுக்கு இதை விட முக்கியமா அன்னைக்கு பாதுகாப்பு பணிக்கோ இல்லை கலவரத்தை அடக்கவோ போக வேண்டி இருக்கும். இப்படி எங்களோட பணிச்சுமை காரணமாவோ இல்லை பல காரங்களாலோ விசாரணை தாமதமாகும்போது தமிழக அரசுக்கு கீழ இருக்குற சிபிசிஐடி போலீசுக்கு போகும்”

“யம்மா… இவ்வளவு வேலையா? ஸ்டேஷனில் வேற உங்களை எல்லாம் இப்பதானே போட்டிருக்காங்க. முதலில் காலியா இருந்ததே”

“ஆமாம்மா… பல காவல் நிலையங்களில் வழக்குகள் அதிகம், போலிஸ் கம்மி”

யோசித்தவர் “சாரிம்மா… நான் கூட நீங்கல்லாம் பணிகளை சரியா செய்யலைன்னு திட்டிருக்கேன். ஆனால் உங்களுக்கும் ஒரு நியாயம் இருக்குன்னு இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டேன்”

“பிரச்சனை இல்லாதவங்க யாரும்மா. இப்ப நீங்க இந்த ஊரில் தனியா நின்னு எவ்வளவோ நல்லதைப் பண்ணிருக்கீங்களே. யாராவது பாராட்டுறாங்களா?”

“ச்ச… நான் அதை எல்லாம் எதிர்பார்க்கலை. எங்க ஊரு மக்கள் சந்தோஷமா இருந்தால் போதும்”

“எனக்கும் அதே தான். நான் வேலை பாக்குற ஸ்டேஷன் கண்ட்ரோல்ல இருக்குற பகுதில பப்ளிக் பயமில்லாம தினசரி வாழ்க்கையை நடத்தணும். குற்றவாளிகள் வாலை சுருட்டிக்கிட்டு இருக்கணும்”

“அப்ப நம்ம ரெண்டு பேரோட குறிக்கோள் எல்லாம் ஒண்ணுதான்னு சொல்லுங்க” சிரித்தார்கள் 

“ஈத்தாமொழி தேங்காய் உலக பேமஸ். புவிசார் குறியீடு கூட இருக்கு. ஊருக்கு போறப்ப சொல்லுங்க பிரெஷா தேங்காய் பறிச்சுத் தந்துவிடுறேன்”

“ஸ்டேஷன்ல கூட இந்த ஊரு மண்ணு வளத்தால காய் நல்ல பெருசா சத்து கூடி இருக்கும்னு சொன்னாங்க”

“ஆமா, மண்ணு பாருங்க நற நறன்னு இருக்கும். மரத்தில் விளைச்சல் கூடுதலா இருக்கும். காய் ருசியும் அதிகம். சங்கரன்கோவில், தின்னவேலி எல்லா ஊர்லயும் ஈத்தாமொழி காய் வகைதான் கேட்டு வாங்குவாங்க. பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை தேங்காயை விட இது விலை அதிகம் விக்கும்”

இளநியைப் பருகியவர் “இளநி ரொம்ப ருசி”

“தேங்காய் கூட நல்லாருக்கும். தேனம்மா அம்மாவுக்கு தேங்காய் எண்ணை பாட்டிலில் ஊத்திக் கொடுத்து விடு”

“அஞ்சு நிமிஷத்தில் கொண்டு வரேன்மா”

“அய்யோ நான் வீட்டில் சமைக்கிறதே இல்லை. எண்ணை எல்லாம் வேண்டாம்”

“தலைக்குத் தடவிக்கோங்க. உங்க ஸ்டேஷன்ல புதுசா சேர்ந்துச்சே அல்லி அதுக்கும் கொடுங்க. நேத்து தான் பாத்தேன், இடுப்பு வரைக்கும் முடியோட இங்க வந்த பொண்ணு, இந்த ஒரு வருஷத்தில் முடியெல்லாம் பாதி கழிஞ்சிருச்சு. நல்லா தலைல ஊற வச்சு குளிக்கச் சொல்லுங்க” 

வற்புறுத்தி அவரது தோட்டத்தில் விளைந்த காயில் கெமிக்கல் கலக்காது அரைத்த தேங்காய் எண்ணையைத் தந்து அனுப்பினார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அறுவடை நாள் – 2அறுவடை நாள் – 2

அத்தியாயம் – 2   மாட்டுத்தாவணி பஸ் நிலைய உணவகமான  ஆர்யாஸில் வடையைப் பிய்த்து சாம்பாரில் முக்கியபடியே  “என்ன விஜயா இப்படி பண்ணிட்ட?” வருத்தப்பட்டார் தல்லாகுளம் போலிஸ் இன்ஸ்பெக்டர் செல்வராகவன்.    கைக்கடிகாரத்தை சரி செய்தபடி “அந்த ஆபாச வீடியோ கும்பலைப்