Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 3

அறுவடை நாள் – 3

This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.

அத்தியாயம் – 3

 

 

நாகர்கோவிலில் இருந்து சென்ற ஜீப் வழியில் டீக்கடை ஒன்றில் நின்றது. ட்ரைவர் ஆரோக்கியசாமி இருவருக்கும் டீ வாங்கச் சென்றார். 

 

“வீட்டில அம்மா தம்பி தங்கச்சி நல்லாருக்காங்களா அல்லி”

 

“நல்லாருக்காங்க மேடம்”

 

“இங்க கூட்டிட்டு வந்துட்டியா?”

 

“இல்ல மேடம் மயிலாடிலதான் இருக்காங்க. தம்பியும் தங்கச்சியும் ஸ்கூலுக்கு போயிட்டு இருக்காங்க.அடுத்த வருஷம் பாத்துக்கலாம்னு இருக்கேன்”

 

ஒரு கவலையும் இல்லாமல் கல்லூரி சென்றுக்  கொண்டிருந்த பெண்ணுக்கு திடீரென்று எவ்வளவு பெரிய பொறுப்பு. 

 

“காலேஜில் படிச்சுட்டு இருந்தியே… “

 

“பெர்மிஷன் வாங்கிட்டு கரெஸ்பாண்டென்ஸ்ல டிகிரி முடிச்சுட்டேன் மேம். அப்பாவோட கடமையைத் தொடரணுமே”

 

“பல வருடங்களுக்கு முன்னாடி நான் எடுத்த அதே முடிவு. இப்ப உன்னையும் தொடருது”

 

“குடும்பம் ஓடணுமே மேம்”

 

“சரிதான்… ஆமா  ஈத்தாமொழி எப்படி இருக்கு?”

 

“நமக்கு வேலைக்கு பஞ்சம் இல்லாம இருக்கு”

 

“பளு அதிகமோ?”

 

“கன்யாகுமரி மாவட்டத்தில் நிறைய போஸ்ட் இப்பத்தான் பில் பண்ணிருக்காங்க. அதனால வேலையெல்லாம் தேங்கி போயிட்டு. எஸ் ஐ இல்லாம எங்கிட்டு இருந்து டைரெக்ஷன் கிடைக்கிறது? அதுவும் எங்களுக்கு அதிகார வரம்பு கம்மிதான். எவனுக்கும் எங்களைக் கண்டு பயமில்லை. காவாலிப் பயலுங்களுக்குக் கூட பொம்பள கான்ஸ்டபிள்னா ஒரு இளக்காரந்தான் மேடம்” கொட்டித் தீர்த்துவிட்டாள். எத்தனை நாட்கள் மனதில் அடைத்து வைத்துக் கொண்டிருந்தாளோ. 

 

அவளது தோளைத் தட்டிக் கொடுத்த விஜயா “எல்லாத்துறைலயும் பொண்ணுங்க மரியாதையை வாங்க ரெண்டு மடங்கு கஷ்டப்படணும். படுவோம். மரியாதையை ரைட் ராயலா வாங்குவோம்” என்றார். 

 

“சாரி மேடம்… கோட்டி மாதிரி பேசிட்டேன்”

 

“தப்பில்லை… ஒரு மேலதிகாரியா உங்க மனநிலை எனக்குத் தெரியணும். அப்பத்தானே அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க முடியும்”

 

கிளம்பிய ஜீப் ஈத்தாமொழியை அடைந்தது. அங்கு ஸ்டேஷனுக்கு வெகு  அருகிலேயே நடக்கும் தொலைவில் ஒரு சிறிய வீட்டினை விஜயா தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். அவர்தான் காவல் நிலையத்திற்கு முடிந்த அளவுக்கு அருகிலேயே ஒரு இடம் வேண்டும் என்று கேட்டிருந்தார். 

 

சிலிண்டருடன் இணைந்த சிறிய வகை ஸ்டவ், சமைப்பதற்கென நாலைந்து பாத்திரங்கள், தட்டு, டம்ளர், இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகள், ஒரு மேஜை, பாய், தலையணை, போர்வை  இப்படி மிக அத்தியாவசியமான சில பொருட்கள் மட்டும். 

 

“எவ்வளவு பணம் ஆச்சு அல்லி?” பர்ஸைத் திறந்தபடி கேட்டார். 

 

“முன்னாடி இங்க தங்கின எஸ் ஐ உபயோகிச்சதுதான் இந்த பொருளெல்லாம். பாய் தலையணை போர்வை  மட்டும்தான் புதுசு வாங்கினேன்”

 

“நீ எங்க தங்கி இருக்க?” 

 

“நான் மேலசூரன்குடில என்னோட சொந்தக்காரங்க வீட்ல தங்கிருக்கேன். இனிமேல்தான் தங்க இடம் பார்க்கணும்”

 

“இங்கிருந்து பக்கம்தானே. இங்கதான்  ஒரு ரூம் எஸ்ட்ரா இருக்கே. தேவைப்பட்டதுன்னா அந்த ரூமில் தங்கிக்கோ”

 

“சரி மேடம். நீங்க தூங்கி ரெஸ்ட் எடுத்ததும் சொல்லுங்க.நான் டிபன் வாங்கிட்டு  வந்துடுறேன்”

 

அடுத்த இரண்டு மணி நேரத்தில் டிபன் வாங்கி வந்த பொழுது சாந்தமான அம்மா தோற்றம் மறைந்து மிடுக்கான சீருடையில் கம்பீரமாக நின்ற விஜயலட்சுமியை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றாள் அல்லி. 

 

ஏஎஸ்ஐ விபத்து ஒன்றின் காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். 

 

“வணக்கம் மேடம் நான் குமாரசாமி ஹெட் கான்ஸ்டபிள். நான்தான் உங்களைக் கூப்பிட வந்திருக்கணும். என் பொண்ணு கல்யாணத்துக்காக லீவில் இருக்கேன். இன்னைக்கு நீங்க ஜாயின் பண்றதால உங்களை சந்திக்க காலைல வந்தேன்”

 

“குட் மார்னிங் மேடம். நான் கிரேஸ் மேரி கான்ஸ்டபிள் கிரேட் 2”

 

மற்றவர்கள் அனைவரையும் சந்தித்து அறிமுகப் படுத்திக் கொண்டார். 

 

தான் குளவிக் கூட்டில் கல்லெறிந்து விட்டதற்கு பலனாகத்தான் வீட்டை விட்டு மிகத் தள்ளி இங்கு கன்யாகுமரிக்கு மாற்றல் தந்திருக்கிறார்கள் என்று விஜயாவிற்கும் தெரியும். இங்கிருப்பவர்களும் அரசல் புரசலாக அறிந்திருக்கலாம். அவர்கள் என்ன நினைப்பார்களோ என்பது பற்றி அவருக்குக் கவலை இல்லை. 

 

இந்த நிமிடத்திலிருந்து இந்த காவல் நிலையம் இவரது ராஜ்ஜியம். இதன் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதும், குற்றங்கள் நடக்கும் முன்னரே தடுப்பதும், நடந்த குற்றங்களைத் துப்புத் துலக்கி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர ஆவன செய்வதும்தான் இவரது கடமைகள். இதற்குத் துணை நிற்கும் படை வீரர்கள்தான் இந்த நிலையத்தில் பணி புரியும் மற்ற காவலர்கள். 

 

மீட்டிங் முடிந்து கோப்புக்களை பார்வையிட ஆரம்பித்தார் விஜயா. எல்லாம் வழக்கமான பிரச்சனைகள்தான். சிறு திருட்டுகள், சண்டை சச்சரவுகள், கொலை கொள்ளைகள், மிஸ்ஸிங் என்று தனித்தனியாக அல்லி பிரித்து வைத்திருந்த தகவல்கள் அவ்வளவு உபயோகமாக இருந்தது. 

 

டாக்குமெண்ட் செய்வது இருக்கிறதே அது ஒரு கலை. அதை இந்தப் பெண் நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறாள். 

 

அப்படியே இரவு ஆரம்பித்ததும் ரோல் கால் முடித்தார். 

 

“சைபர் கிரைம் கேஸல்லாம் பார்த்தேன். ஹாண்ட்லிங் ப்ரொசீஜர் தெரியுமில்ல?”

 

“கைட்லைன்ஸ் வந்திருக்கு மேடம். நாங்க அதைத்தான்  பாலோ பண்ணுறோம்”

 

மேலும் சில கோப்புக்களை எடுத்துக் கொண்டு தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். டிவி எதுவும் இல்லை. மொபைலில் செய்தி சேனலை போட்டுவிட்டு காதில் வாங்கியபடியே பால் பவுடரில் டீ ஒன்றைப் போட்டுக் கொண்டார். 

 

வீட்டிற்கு அழைத்து கணவரிடமும், குழந்தைகளிடமும் பேசினார். “இனிமே வாரா வாரம் வீட்டுக்கு வர மாட்டிங்களாம்மா?” என்று கவலையாய்  கேட்ட இளைய மகனிடம்.

 

“அதுக்கு பதிலா அரைப்பரிட்சை லீவுக்கு நீங்க எல்லாரும் இங்க வந்து தங்குவிங்களாம். இங்க வீடு ரூமு எல்லாம் பெருசா இருக்கு. பச்சை பசேல்னு கிராமம். கன்யாகுமரி, திருவனந்தபுரம் எல்லாம் போயிட்டு வரலாம் சரியா?” என்று கவலையை வேறு பக்கம் திசை திருப்பினார். 

 

“செல்வா வந்திருந்தார் இன்னும் கொஞ்ச நாளில் இந்த பக்கம் மாத்திக்கலாம்னு நம்பிக்கை சொல்லிருக்கார். பாப்பம்” என்றார் முத்துவேல். 

 

“இது எனக்குத் தந்திருக்கிற பனிஷ்மென்ட்டுங்க”

 

“பனிஷ்மெண்ட்டா அனுப்புற அளவுக்கு அந்த ஊருக்கு என்ன குறைச்சல். பச்சை பசேல்னு இருக்குனு சொல்லிருக்க… மக்களும் நல்ல மாதிரி போலிருக்கு”

 

“அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் குடும்பத்தை விட்டு தள்ளி இருக்கறதுதா பனிஷ்மெண்ட். மத்த ஊராயிருந்தா சனிக்கிழமை ஓடோடி வந்துடுவேன். இப்ப பயணமே ஒரு நாளாயிரும். அடிக்கடி ஊருக்கு வர முடியாததுதான்  கஷ்டமா இருக்கு”

 

“நீ வேணும்னா பாத்துகிட்டே இரு. தண்டனை தரத்தானே புள்ள குட்டிகளை விட்டுத் தள்ளி உன்னை அங்க அனுப்பிருக்காங்க. அந்தப் பணியே உனக்கு இன்ஸ்பெக்டர் ப்ரமோஷன் தரப் போகுது பாரு”

வீட்டுக்காரரின் வார்த்தைகள் அவருக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தந்தது. அதே வேகத்துடன் முக்கியமான கோப்புக்களைப் படிக்க ஆரம்பித்தார். 

 

போஸ்டிங் போடத் தாமதமானதால் ஏகப்பட்ட கேஸ்கள் குமிந்து கிடந்தன. அதைத் தவிர வழக்கமான பாதுகாப்பு, பராமரிப்பு, ரோந்துப் பணிகள் வேறு. இதில் விஜயாவின் கெட்ட நேரத்திலும் ஒரு அதிர்ஷ்டமாக அவரது நிலையத்தில் இருக்கும் காவலர்கள் அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறவர்கள். ஒருவர் எத்திக்ஸ் இல்லாது போனாலும் அழுகின பழத்தை எடுத்து நல்ல பழங்களின் இடையே வைத்தார்போலத்தான். ஸ்டேஷனே கெட்டுக் குட்டிச்சுவராகிவிடும். 

 

 

பணிகள் சுலபமாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது. முக்கியமான வேலைகளை எல்லாவற்றையும் முடுக்கிவிட்டு அடுத்த சில வாரங்கள் கழித்து எஸ்கலேஷன் போன புகார்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் எடுக்க வேண்டும். 

 

இன்னும் சில வாரங்களில் எக்கச்சக்கமான வேலைகள் வரப்போவதையும், ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் மீடியாவின் பார்வை அவரது அந்த சிறிய காவல்நிலையத்தைத் தொடர போவதையும் தெரியாமல் இரவு பார்சல் வாங்கி வந்திருந்த இட்டிலியை சாப்பிட்டு உணவை முடித்துக் கொண்டு தூங்கச் சென்றார். 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post