Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 2

அறுவடை நாள் – 2

அத்தியாயம் – 2

 

மாட்டுத்தாவணி பஸ் நிலைய உணவகமான  ஆர்யாஸில் வடையைப் பிய்த்து சாம்பாரில் முக்கியபடியே 

“என்ன விஜயா இப்படி பண்ணிட்ட?” வருத்தப்பட்டார் தல்லாகுளம் போலிஸ் இன்ஸ்பெக்டர் செல்வராகவன். 

 

கைக்கடிகாரத்தை சரி செய்தபடி “அந்த ஆபாச வீடியோ கும்பலைப் பிடிச்சு கம்பியூட்டர் சென்டர சீல் வச்சாச்சே. இது நல்லதுதானே” என பதிலளித்தார்.

 

“என்ன நல்லது? களையை மேலாப்புல வெட்டி இருக்கோம். ஆணி வேர் மண்ணுக்குள்ளத்தான் இருக்கு. அடியோடு அழிக்கிற வரை வளந்துட்டேதான் இருக்கும்”

 

“அடியோட மண்ணுக்குள்ளே இருந்து தோண்டி… எடுத்து… இதுக்கெல்லாம் நமக்கு நேரமிருக்கா? 

இந்தத் தமிழ்நாட்டில் 700 நபர்களுக்கு ஒரு போலீஸ வச்சுக்கிட்டு தினம் தினம் சட்டம் ஒழுங்கை காப்பாத்துறதே  எவ்வளவு பிரச்சனை. இதில் இன்வெஸ்டிகேட் பண்ண நேரம், தெம்பு இதுக்கெல்லாம் எங்க போக”

 

“உண்மைதான்… மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வந்ததும் குடும்பப் பஞ்சாயத்தை எல்லாம் பெண்கள் தைரியமா வெளியே சொல்லுவாங்க அதை பெண் காவலர்களை வச்சு சால்வ் பண்ணலாம்னா… இப்ப இன்டர்நெட், முகநூல், இன்ஸ்டாகிராம் இதையெல்லாம் வச்சு சட்ட முறைக்கேடு இன்னும் அமர்களமா நடந்துகிட்டு இருக்கு. 

மகளிர் போலிசுக்கு முன்னை விட நாலு மடங்கு பணிச்சுமை. முக்கியமான ஸ்டேஷன்ல எல்லாம் போஸ்டிங் போடாம வேலைகள் தேங்கி இருக்கு. காவலர்கள் பணிச்சுமை தாங்காம தற்கொலை செய்துக்குறது அதிகமாயிருக்கு”

 

“உண்மைதான். ஒரு பக்கம் வேலை, இன்னொரு பக்கம் பொதுமக்கள் காவல்துறைல நடக்குற தப்புக்களால வெறுப்பாகி  நம்மை ட்ரீட் பண்ணும் விதம். குடும்பத்துக்கு முழு நேரமும் தர முடியாத கில்ட்  எல்லாம் ஒண்ணு சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொருத்தரையும் கொன்னுக்கிட்டிருக்கு”

 

“ஆமா விஜயா… ஏதோ கிளாஸ்மெட் நீயும் இந்த ஊரில் இருக்கவும் அப்பப்ப பிரச்சனைகளை ஷேர் பண்ணிப்போம். எம்எல்ஏ மச்சானோட கம்ப்யூட்டர் சென்டர்  எல்லாம் சீல் வச்சு அதுக்குப் பரிசா உனக்கும் ட்ரான்ஸ்பர் ஆயிருச்சு.”

 

“எனக்கு ஒரே கவலைதான் செல்வா. பெண் பிள்ளைக தைரியமா ஸ்கூலுக்கும்  காலேஜுக்கும்  போயிட்டு வரணும். எந்த இடத்தில் ஆண்களும் பெண்களும் ஒருத்தர் ஒருத்தர் ஆதரவா கை கோர்த்து நடக்குறாங்களோ அந்த சமுதாயம் சீக்கிரம் முன்னேறிடும். 

நம்ம பொண்ணுங்க இப்பத்தான் போராடி வெளிய வந்திருக்காங்க. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்குன்னு நிலை மாறி அப்பாக்களும் அண்ணன் தம்பிகளும் தைரியமா வீட்டுப் பெண்களை பள்ளிக்கும் கல்லூரிக்கும் அனுப்ப ஆரம்பிச்சிருக்காங்க. 

இந்த நிலை வர எத்தனையோ நூற்றாண்டு ஆயிருக்கு. இப்ப இந்த நாயி ஸ்கூலுக்கு போற பச்சை பிள்ளைகளைக் கூட விட்டு வைக்காம வீடியோ பிடிச்சுட்டு இருக்கு. விக்குறதுக்கு இருந்த மார்க்கெட்தான அந்தக் கம்பியூட்டர் சென்டர். மூடியாச்சு இனி எங்க போவானுங்கன்னு பாக்குறேன்”

 

“வாங்குறவனும் விக்கிறவனும் இருக்குற வரை வியாபாரம் ஜோரா நடக்கும். நம்ம பொருள் கைல கிடைக்க டிலேதான் பண்ணுறோம். என்னைக்கு வாங்குறவன் நிறுத்துறானோ அன்னைக்கு விக்கிறவன் வேற பொழைப்பை பாத்துட்டுப் போயிடுவான்”

 

“இதெல்லாம் என்னைக்கு உணர்ந்து, திருந்தி, நிறுத்தி…  அஞ்சு வயசுல பசங்களை வளைச்சு திருத்த வேண்டிய வாத்தியார்லயே குற்றவாளிகள் அதிகமாயிட்டு இருக்குறதுதான் இப்பத்திய நிலமை” 

 

பேசிப் பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்து தங்களது குடும்பத்தைப் பற்றிய டாப்பிக்கிற்கு வந்தார்கள்.

 

“இந்த வாரம் ஸ்டேஷன்லேருந்து ரிலீவ் ஆகுறதால ஊருக்குப்  போக முடியல. பசங்களுக்குப் பரீட்சைன்னு அவராலையும் இங்க வர முடியல.

 

 ஏதோ அவர் எவ்வளவோ அடஜஸ்ட் பண்ணிக்கிறதால எனக்கு குடும்பம்னு ஒன்னு இருக்கு செல்வா. முக்கியமான பரிட்சை சமயத்தில் கூட பிள்ளைக  கிட்ட  இருக்க முடியாம என்ன வேலைன்னு சில சமயம் தோணுது ”

 

“கஷ்டம்தான். உறுத்துற  மனசாட்சியை ரெண்டு கேஸ் சால்வ் பண்ணி சரி படுத்திக்கோ. வா… ட்ரெயின் ஏத்திவிட்டுட்டுக் கிளம்புறேன். ஹே திருநெல்வேலில  வேலை பார்த்தாரே செழியன் அவரை நினைவிருக்கா?”

 

“மறக்க முடியுமா? கலவரத்துல இறந்து போனாரே”

 

“அவரேதான். அவரு பொண்ணு அல்லிக்கு நீ போற ஸ்டேஷன்லதான் கான்ஸ்டபிள் போஸ்டிங் போட்டிருக்காங்க”

 

“ஓ… ரொம்ப நல்ல மனுஷன் செல்வா. நம்ம பொழைப்புத்தான் இப்படி இருக்கு. நம்ம பிள்ளைகளைப் படிக்க வச்சு வேற வேலைக்கு அனுப்பணும்னு சொல்லுவார். இப்ப பொண்ணுக்கு இதே துறைல வேலை. இதைத்தான் தலை எழுத்துன்னு சொல்றது. அவங்க பாமிலி எப்படி இருக்கு?”

 

“எல்லாம் உன் குடும்பம் மாதிரிதான். இவதான் பெரிய பொண்ணு. இனிமேல் குடும்பத்தைக் காப்பாத்தணும். படிக்கணும்னு கனவெல்லாம் வச்சிருந்த பொண்ணு. இப்ப வேலைக்குப் போக வேண்டிய நிலமை. நீ ட்ரைன் பண்ணு”

 

“நீ சொல்லவா வேணும். சரி, உன்னை ‘பார்’ பக்கம் பார்த்ததா கேள்விப்பட்டேன்…  மெட்றாஸ்க்கு போன் போட்டுருவேன். உன் வீட்டம்மா வெளுத்துருவாங்க பாத்துக்கோ. 

 

முன்னாடியெல்லாம் ஊருக்கு நாலு பத்திரிகை, நாட்டுக்கு ஒரு தூர்தர்ஷன். இப்ப ஒவ்வொரு மொபைல் போனும் ஒரு மீடியா, பிரெஸ். நீ குற்றவாளிகளை பெண்டு நிமுத்தி ஸ்கூல் பக்கம் போதை மருந்து சப்ளை, சிறுமிகள் கடத்தல் எல்லாம் குறைச்சிருக்குறது யாரு கண்ணுலையும் படாது. குடிகார போலிஸ்ன்னு தலைப்பு போட்டு வீடியோ போட்டாத்தான் ரீச் கிடைக்கும்”

 

 “ப்ரெஷர் அதிகமாயிருச்சு விஜயா. என்னைக்காவது பார்ட்டி போனாதான் தண்ணியைத் தொடுறது. கறியைக்  கூட டாக்டர் நிப்பாட்ட சொல்லிட்டாரு. மீன் குழம்புதான் இப்பல்லாம். 

 

நானும் காரைக்குடி பக்கம் போக வேண்டிய வேலை இருக்கு. அப்படியே அண்ணனையும் பசங்களையும்  பாத்துட்டு வர்றேன். என்ன… இவ்வளவு தூரம் தள்ளி உன்னை டிரான்ஸ்பர் பண்ணிருக்காங்க. அதைத் தடுக்க முடியாம போயிருச்சு. ஒரு வருசம் பல்ல கடிச்சுக்கிட்டு வேலை பாரு. அப்பறம் இங்குட்டு சிவகங்கை பக்கமா மாத்தல் வாங்க முடியுதான்னு பாக்கலாம்”

 

என்னவோ இது போன்ற நிச்சயமற்ற சமாதானங்களை நம்பித்தான் அடுத்த சில வருடங்கள் ஓட வேண்டும். 

 

“இன்னைக்கு ஹாண்ட் ஓவர் பண்ண வேண்டியிருந்தது. மத்தியானம் ஒன்னும் சாப்பிடல.ஒரு பிளேட் இட்லி சொல்லு செல்வம்.  எண்ணை அதிகமா சாப்பிட்டா நெஞ்சு கரிக்கும். ட்ராவல் வேற பண்ணனும்”

 

 சர்வரை அழைத்து “இட்லி இருந்தா ரெண்டு பிளேட் கொண்டு வாப்பா” என்றார். 

 

“சார் இட்லி  முடிஞ்சிருச்சு. மணி ராத்திரி பதினொண்ணு ஆச்சுங்களே. வேணும்னா தோசை கொண்டு வரவா?”

 

“சரிப்பா, கொண்டு வா… எண்ணெய் கம்மியா ஊத்தி ரெண்டு ஊத்தப்பமா கொண்டு வா“ என்று விஜயாவே ஆர்டர் கொடுத்தார். 

 

நடுத்தர வயது வந்துவிட்டால் ஒரு நன்மை, அதுவும் தலையில் ஏழெட்டு வெள்ளி முடிகள் மற்றும் வெகு சாதாரண சேலை பொதுமக்கள் நமது கற்பினைப்  பரீட்சித்துப் பார்ப்பதையும், தீர்ப்பு சொல்வதையும்  நிறுத்திவிடுவார்கள். ஐஸ்வர்யா ராய்க்கும் நமது எஸ் ஐ விஜயாவின் வயதுதான். அவரால் உடன் வேலை பார்ப்பவருடன் இப்படி இரவு பதினோரு மணிக்கு உணவு உண்டுவிட்டு ட்ரெயின் ஏற்றி விட சொல்ல முடியுமா?

 

படிக்கும்போது உடன் படித்தவர்களும், காவல்துறை பயிற்சியின் போதும் கான்ஸ்டபிள் போஸ்டிங்கின் போது கூட சேர்ந்து வண்டை வண்டையாய் எஸ் ஐ யிடமும் மேலதிகாரிகளிடமும் திட்டு வாங்கியவர்களும் தான் தோழமைகள். அதுவும் சேர்ந்து சென்று கற்பழிப்பு, குடும்பத்தகராறு என்று விசாரிக்கும் போதும், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் விவரங்கள் விசாரித்து வந்து சொல்லும்போதும்  ஆண் பெண் பேதம் எல்லாம் மறைந்து ஓடி விடும். 

 

“தே… பய,  கற்பழிக்கிறேன்னு மாரு பூரா பிளேடில் கீறிருக்கான் விஜயா…  இவனை எல்லாம் பதிலுக்கு தினவெடுத்த இடத்திலேயே பிளேடால கோடு போடணும்” என்று செழியன் சொன்னதெல்லாம் நினைவில். 

 

செழியனின் பெண் அல்லி எப்படி இருப்பாள் என்று எண்ணியபடியே நள்ளிரவு ரயிலைப் பிடித்து விடியும் வேளையில்  நாகர்கோவிலில் இறங்கியதும் அவளை அழைத்துச் செல்ல அந்த அல்லிமலரே வந்துவிட்டாள்.

 

“வாங்க மேடம். பயணம் சுகமா இருந்ததா?” என்ற அந்த பெண் அவளது தந்தை செழியனைப் போன்று நல்ல உயரத்துடன், நெடு நெடு உடலுடன் இருந்தாள். 

 

விஜயாவின் பெட்டியை இயல்பாக எடுத்துக் கொண்டவள் “இங்குட்டு வலதுபுறமா போனா பாத்ரூமு வரும். டாய்லட் செட் ஒன்னு கொண்டு வந்திருக்கேன். சின்ன பேஸ்ட், ப்ரஷ், பவுடர் டப்பா, சீப்பு எல்லாம் இருக்கு. முகம் கழுவிட்டு வாங்க மேம். ஜீப் வந்திருக்கு வெளிய போயி சூடா டீ சாப்பிடலாம்” என்று  தேவை தெரிந்து செயலாற்றிய அல்லி முதல் சந்திப்பிலேயே மனதை அள்ளிக் கொண்டாள்.

3 thoughts on “அறுவடை நாள் – 2”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post