Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 1

அறுவடை நாள் – 1

அறுவடை நாள்

 

 

அத்தியாயம் – 1

 

காலை கதிரவன் கண் விழிக்கும் முன், அதற்குப் போட்டியாக தனது வேலையை ஆரம்பித்திருந்தார் விஜயா.

‘காக்க காக்க கனகவேல் காக்க’ என்று முணுமுணுத்தபடியே முருகனை வணங்கியவர், சூடாக காய்ச்சிய பாலை முதல் டிகாஷனில் கலந்து  நுரை ததும்ப ஆற்றியபடியே எடுத்து வந்து முத்துவேலனிடம் கொடுத்தார்.

 

“விஜி உன் கைக்கு மட்டும் எப்படிதான் இவ்வளவு ருசியா காபி கலக்க வருதோ தெரியல. அந்த ரகசியத்த கொஞ்சம் கத்துக் கொடுத்தேன்னா நீ ஊருல இல்லாத சமயத்துல நானும் பசங்களும் நல்ல காபி குடிப்போம்ல. என்னடி அதுக்குள்ளே காபி தீர்ந்து போச்சு. இன்னும் கொஞ்சம் தரியா? ” என்று பாராட்டியபடியே அடுத்த கப் காபிக்கு அடி போட்டார் .

 

“நீங்க என்னதான் ஐஸ் வச்சாலும் ரெண்டாவது காபி கிடையாது. நான் வீட்டுல இல்லன்னு ஒரு நாளைக்கு நாலு டம்ளர் காபி குடிச்சு வயிறைக் கெடுத்துக்காதிங்க. 

 

இந்த வார சாப்பாட்டுக்கு நேத்தே புளிக்காய்ச்சல், தக்காளி தொக்கு, புதினா தொக்கு, பசங்களுக்கு கருவாட்டு குழம்பு  எல்லாம் செஞ்சு வச்சுட்டேன். 

 

அப்பளம், கொத்தவரங்காய் வத்தல், மோர் மிளகா வறுத்து பேப்பர் போட்டு சம்படத்துல போட்டு மூடி வச்சிருக்கேன். சாப்பாட்டுக்கு எடுத்துட்டு மறக்காம காத்து புகுறாம மூடி வச்சிடுங்க. இல்லாட்டி நமத்து போயி அப்பளமெல்லாம்  பேப்பராட்டம் ஆயிரும்.

 

பெரியவன் ஸ்கூலுக்கு போயி  எப்படி படிக்கிறான்னு கணக்கு வாத்தியார் கிட்ட கேட்டுட்டு வாங்க. சின்னவன் ஹிஸ்டிரில பெயில் ஆயிட்டு வந்திருக்கான். என்னடான்னு கேட்டா நேற்றைய பழங்கதை  எனக்கு தேவை இல்ல நாளைய முன்னேற்றம்தான் முக்கியம்னு அகராதியா பேசிகிட்டுத்  திரியுறான். 

 

இதெல்லாம் கொஞ்சம் கவனிங்க. நீங்க மாத்திரை ஒழுங்கா சாப்பிடுங்க. நான் வீட்டுல இல்லைன்னு காபிக்கு சக்கரை போட்டு குடிக்காதிங்க. சரியா?”

 

மனைவி முகத்தில் மாறி மாறி தெரியும் உணர்ச்சிகளை ரசித்தவாறே அமர்ந்திருந்தார் முத்து.

 

“இங்க என்ன பார்வை?”

 

“இவ்வளவு வேலையையும் இழுத்து போட்டுக்கணுமா? நான் செய்ய மாட்டேனா? வேலைக்கும் போயிட்டு வீட்டு வேலையையும் செஞ்சிட்டு ஏன் இவ்வளவு கஷ்டப்படுறம்மா?”

 

“தினமும் உங்க கூடவே இருந்து உங்களுக்கும் நம்ம பசங்களுக்கும் நானே திருப்தியா சமைச்சு போடணும்னு ஆசையா இருக்கு.  பாக்கலாம் கொப்புடையம்மா தயவால இந்த வருஷமாவது எனக்கு நம்ம ஊருக்கே மாற்றல் கிடைச்சா நல்லா இருக்கும்”

 

“அதுக்குத் தகுந்தாப்புல நீயும் நடந்துக்கணுமே விஜி. போற இடத்தில் எல்லாம் வீறாப்பா நின்னா வெறுப்புதான்மா வளரும். எல்லாத் துறையிலையும் வளைந்து கொடுக்காம நேரா நிக்கும் மரம்தான் முதலில் வெட்டப்படும்”

 

“எத்தனை தடவை வெட்டுவாங்கன்னு பாக்கலாம். என்ன, என்னால நீங்களும் பசங்களும் கஷ்டப்படுறதைத்தான் தாங்க முடியல”

 

உணர்ச்சி வசப்படுவதை நிறுத்தி விட்டு நிகழ்வு உலகத்திற்கு வந்தவர் “என்னை பஸ்ஸ்டாண்டில் விட்டுட்டு, வர்ற வழில உங்கம்மாவை மறக்காம கூட்டிட்டு வந்துடுங்க. அவங்களுக்கு காரம் குறைவா சமைச்சு மூடி வச்சிருக்கேன். சோறு மட்டும் தினமும் நீங்களே வடிங்க” என்றார்.

 

“நீ வந்துட்டு போற ஒரு நாளுல இத்தனையும் செய்யணுமா? சோறு கூட எங்கம்மா வடிக்காதா?”

 

“வடிப்பாங்கதான்… ஆனா ஒவ்வொரு பருக்கை வேகுறப்பையும் என் பேரும் சேர்த்துல்ல வேகும்? வயசானவங்க…  வேலை அதிகம் செய்ய விடாதிங்க”

 

அவர் மனைவி எல்லாவற்றையும் செய்து வைத்துவிட்டுக் கிளம்புகிறாள். விஜயா சொல்வதும் உண்மைதான். உலை கொதிக்கும்போதே அவளது பெயரும் அல்லவா சேர்ந்து கொதிக்கும். 

 

இதோ போன வாரம் கூட வீட்டினுள் அடியெடுத்து வைத்ததும் முத்துவின் தாய் ஆரம்பித்து விட்டார். 

 

  “கிளம்பிட்டாளா உன் பொண்டாட்டி…. இவ உன்னைக்  கல்யாணம் பண்ணிகிட்டாளா…  இல்லை, வேலையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாளான்னு தெரியலையே? 

 

ரெண்டு புள்ளையைப் பெத்ததும்  கடமை முடிஞ்சுடுச்சா? ஒரு பொம்பளை சென்மத்துக்கு புருசனுக்கும் புள்ளைக்கும் பக்கத்தில் இருந்து பாத்து வடிச்சுக் கொட்டாம என்னடா வேலை வேண்டிக் கிடக்கு. ராஜினாமா பண்ணிட்டு வீட்டுல உக்கார சொல்லுடா. ”

 

“எம்மா… கல்யாணத்தப்ப எனக்கு சரியான வேலை கூட இல்லை. கவர்ன்மென்ட் வேலை பாக்குற பொண்ணை என் மாமியார் கட்டித் தந்ததே பெருசு. ஏதோ அவ சம்பளம் வர்ற தைரியத்துல வியாபாரத்துல இறங்கினேன்.

இப்பத்தான் கடைல ஓரளவு வருமானம் வருது.  தலைக்கு மேல கூரை ஒன்னை வேய்ஞ்சு உக்காந்திருக்கோம். ரெண்டு பசங்க படிப்பு வேற இருக்கு. 

பொம்பளை சென்மமா வீட்டுல உக்காந்திருந்தான்னா நம்ம குடும்பமே கேவுருக்கஞ்சிதான் குடிச்சு வயித்தை நிரப்பிக்கணும்”

 

“இப்படியே என்னை பயங்காட்டு… ஆம்பளை சிங்கம்னு ஒரு தகுதி போதாது கல்யாணத்துக்கு… நீயே உன்னைக் குறைவா நெனைக்கிறதாலதா உன் பொண்டாட்டி ஏறி மிதிக்கிறா… “

 

காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் “இன்னும் ஒரு தோசை ஊத்தவா?” என்றார்.

 

“ஊத்து. உன் பொண்டாட்டி வெண்ணை வாங்கி நெய் காய்ச்சினா போலருக்கு”

 

“அதெப்படிம்மா உனக்குத் தெரியும். கொடுத்து அனுப்பினாளா”

 

“நல்லா கொடுத்தனுப்புவா… இந்த வயசான கிழவி இருக்கே… அதுக்கு ஒரு பாட்டில்ல கொடுத்துவிடுவோமேன்னு ஒரு மட்டு மரியாதை தெரிஞ்சவளா அவ. 

நேத்து உன் மவன் ஒரு கொத்து முருங்கை இலையை பறிச்சுட்டுப் போனான். அதுலேருந்து நானே கண்டுபிடிச்சேன்”

 

“நீ பெரிய சிஐடிதான்  போ… அந்த நெய்யை ஊத்தித்தான் இந்த தோசையை சுட்டு எடுத்துட்டு வந்தேன். சாப்புடு”

 

“உன்னை எப்படி வளத்தேன். இப்ப அடுப்பு கிட்ட நின்னு தோசை சுட்டே  கறுத்து போய்ட்டியே… இதெல்லாம் பொம்பளைங்க செய்யுற வேலைடா… எனக்கு மட்டும் உடம்பு நல்லாயிருந்தா நானே எல்லா வேலையும் செய்வேன். 

 

 உன் பொண்டாட்டி ரெண்டு சம்பளம் இருக்குறதாலதான் வீடு கூட்ட, வாசல் பெருக்க வேலைக்காரியை வச்சுக்கிட்டு தண்ட செலவை உனக்கு இழுத்து விடுறா. 

 

நான் சொல்றதைக் கேளு, வேலைக்காரி எல்லாரையும் அனுப்பிரு. அவளை வேலையை விட்டு நின்னுட்டு வீட்ல உக்காந்து உன் வருமானத்துக்கு தக்கன குடும்பம் நடத்த சொல்லு. இந்தத்தரமாவது உன்னைப் பத்து மாசம் சொமந்து பெத்த தாய் சொல்றதைக் கேளுடா…“

 

யோசனையுடன் தாயிடம் “தாய் சொல்றதைத் தட்டக் கூடாது. ஆனால் எனக்கும் வியாபாரம் பெருசா ஒன்னும் ஓடல. அவ அரசாங்க வேலையை விட்டுட்டு வந்தா பண முடையாயிடும்னு யோசிக்கிறேன். ஒன்னு செய்மா,  நீ வாடகைக்கு விட்டிருக்கியே ஒரு வீடு  அந்தப் பணத்தை எனக்குக் கொடுத்துரு. இங்கனயே இருந்துரு. உன் மருமகளை வீட்டில் உக்கார சொல்லிடுறேன். உனக்கும் மருமகளை அடக்கினாப்புல இருக்கும்.”

 

“வாடக… வாடகையை முன்னாடியே வாங்கிதான் கண்ணு ஆப்பரேஷன் பண்ணிக்கிட்டேன்”

 

“யம்மா அதுக்கு நான்தான் பணம் கட்டுனேன்”

 

“அது வலது கண்ணுடா, அதுக்கப்பறம் இடது கண்ணில் பண்ணிக்கிட்டேன். அடுத்த வருசம் கடன் கழிஞ்சு வாடகைப்பணம் வர ஆரம்பிச்சுரும். அதுக்கப்பறம் அவளை வேலையை விட்டு நிறுத்திடலாம். அது வரைக்கும் அவளை அடஜஸ்ட் பண்ணிக்கோ” 

 

தாயும் மகனும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று உணர்ந்து அடங்கியது குடியிருந்த கோவில். 

 

இப்படி சொல்லித்தான்  தாயை அடங்குவார். இந்த அஸ்திரம் சில மாதங்களுக்காவது வேலை செய்யும். 

 

வேறென்ன செய்வது, விஜயாவுக்கு வேலை மேல் எவ்வளவு காதல் என்று அவருக்குத்தான் தெரியும். அவளது கனவுகளில் கூட அவரை விட அதிகமாக வேலைதான் வரும் என்பது அவரது எண்ணம். 

 

அவளுக்கு கனவெல்லாம் வருமா என்ன? இங்கிருந்து கிளம்பினால் ராப்பகலாய் வேலையைத்தான் பார்ப்பாள். 

 

இப்படி ஒரு மனைவி அமைந்தது அவருக்கு மகிழ்ச்சியே. உழைத்து, களைத்து, வார இறுதியில் கணவன் பிள்ளைகளைப் பார்க்கவென்று வேகு வேகென்று  பஸ் பிடித்து வரும் மனைவிக்கு தன் கையால் மீன் குழம்பை சமைத்து,  ஒரு வாய் ஊட்டி விட்டால்தான் அவருக்கு நிம்மதி. அந்த ஒரு வினாடி அன்பும் அக்கறையும் வாரமெல்லாம் பிரிந்திருந்ததை ஈடு செய்துவிடும். 

 

“இந்த வாரம் வேலை ரொம்ப கஷ்டமா இருந்ததாம்மா?” என்று மனைவியிடம் அன்புடன் கேட்பார். 

 

வெயிலாலும் அலைச்சலாலும் கருத்திருக்கும் விஜயாவின் முகத்தில் அவ்வளவு சோர்விருக்கும், இருந்தாலும் “இருந்ததுதான். இந்த ஒரு வாய் சோத்தில் என்னோட டென்சன் எல்லாம் போயிருச்சு மாமா”  என்பார் மனம் நிறைந்த காதலுடன். 

காதலுக்கு வயதென்ன, அழகென்ன அன்பு கொண்ட இரு மனம் மட்டும் போதுமே. அப்படியே கனவுலகத்தில் நின்றார் முத்து. 

 

சொடக்கு போட்டு கணவனின் கனவைக் கலைத்த விஜயா “என்ன மீன்குழம்பு நியாபகமா… மூச்… அடுத்த சனிக்கிழமை வரை  நினைச்சே பாக்கக் கூடாது”

 

 

“ சரிம்மா கிளம்பு லேட் ஆகுது பாரு ஆறரை மணி பஸ் பிடிச்சாத்தான் நீ வேலைக்கு சரியான நேரத்துக்கு போய் சேர முடியும்”

 

வேலை என்று கேட்டதும சுறுசுறுப்பான விஜயா, கட கடவென கரும்பச்சை நிற புடவையும் அதற்கு பொருத்தமான ரவிக்கையுமாய் ரெடியானார்.

 

“என்ன விஜயாக்கா, மதுரைக்கு கிளம்பியாச்சா” என்று வாசல் தெளித்தபடி விசாரித்த பக்கத்துக்கு வீடு உமாவிடம்

 

“உமா பசங்கள  கொஞ்சம் கவனிச்சுக்கோம்மா  ” என்று சொல்லியபடி ஒரு முழம் பூவைக் அவளது கையில் கொடுத்துவிட்டு புன்னகை மாறாமல் கிளம்பினார்.

 

காலை செக்காலை ரோட்டில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. இன்னும் காரைக்குடி மக்களுக்கு பொழுது புலரவில்லை.

 

 எல்லாரும் ராத்திரி பன்னெண்டு மணி வரைக்கும் டிவி  பார்த்துட்டு தூங்கினா காலைல எப்படி எழுந்திரிக்க முடியும்? மனதுக்குள்ளே கேள்வி கேட்டவாறே  இருவரும் பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். 

 

வழக்கம் போல பஸ்சில் ஏற்றிவிட்டுக்  கிளம்பினார் முத்துவேல். மதுரை மாட்டுத்தாவணியில் இறங்கிய விஜயா தான் போக வேண்டிய டவுன் பஸ்ஸில் ஏறி நின்றுகொண்டு, அந்த வாரம்   முடிக்க வேண்டிய வேலைகளை மனதில் பட்டியல் போட்டார். 

 

இதற்குள் பஸ்சில் கூட்டம் முண்டியடிக்க ஆரம்பித்தது. அலுவலகம் செல்ல வேண்டிய அவசரத்தில் ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு பஸ்சில் ஏறினர்.

 

விஜயா சற்று ஓரத்தில், டிரைவர் சீட்டின் பின்னே இருந்த உயரமான இடத்தில்  நின்று கொண்டார். மக்களை பார்வையாலையே அலசியவரின் கண்களில் பட்டான் அவன். 

 

முன் இருபதுகளில் இருந்த அவனின் கண்களில் ஒரு கள்ளத்தனம். கைகளில் புத்தகங்களுக்கு அடியில் எதையோ மறைத்து இருந்தாற்போல் பட்டது விஜயாவுக்கு. சரி எம்பி எட்டி பார்த்தவருக்கு அது மொபைல் போன் என்பதும், அதனை வைத்து நெரிசலில் நின்று கொண்டு ஆபாசமான கோணங்களில் பெண் பயணிகளை படம் பிடிக்கிறான் என்பதையும் ஊகிக்க முடிந்தது. 

அதுவரை இருந்த மனநிலமை மாறி கோவம் கொப்பளித்தது.

மெதுவாக முன்புறம் நகர்ந்து சென்று  

 

“டிரைவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டிய விடுங்க” என்றார் உறுதியாக.

 

பீக் அவர் டென்ஷன் தலைக்கேறி இருந்த டிரைவர்,

“ஏம்மா உன்னோட பொருள் ஏதாவது காணாம போச்சா?”

 

“இல்ல. மெதுவா பேசுங்க.ஆனா கண்டிப்பா போயாகனும்”

 

“இங்க பாரும்மா உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா சொல்லு. ஸ்டேஷன் பக்கத்துல நிறுத்துறேன். இறங்கிக்கோ. 

அதை விட்டுட்டு காலை  நேரத்துல போலிஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போய் எங்க எல்லாரோட வேலையையும் கெடுத்துடாதம்மா. அவங்க வேற எல்லாரையும் நிக்க வச்சு கேள்வி கேட்டு உயிரை எடுப்பாங்க”

 

“கண்டிப்பா கேட்க மாட்டாங்க அதுக்கு நான் கியாரண்டி. நாலாவது சீட்ல உக்காந்து இருக்குற கருப்பு சட்டை போட்டு இருக்குற பையன மட்டும் கூட்டிட்டு போய்டுறேன்”

 

இப்போது அந்த ஓட்டுனரின் கண்களில் மரியாதை  தெரிந்தது.

 

“நீங்க யாரும்மா?”

 

“நான் சப் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி”

4 thoughts on “அறுவடை நாள் – 1”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post