பேய் வீடு

பேய் வீடு

 

நான் தான் ‘வசந்த இல்லம்’. நான் நல்லவன். ரொம்ப ரொம்ப நல்லவன். ஆனா எனக்கு இன்னொரு பட்டம் இருக்கு. அந்தப் பேரை துடைச்சு எரியுறதா தீர்மானம் பண்ணிருக்கேன்.

வெயிட், என்னை சுத்திப் பார்த்து வாடகைக்கு வர ஒருத்தனை ப்ரோக்கர் கூட்டிட்டு வந்திருக்கான். யாருன்னு பாப்போம்.

வீட்டின் முன்னால் இருக்கும் போர்டிக்கோவில் நான்கு கார்கள் நிறுத்தலாம் போல பரந்து விரிந்திருந்தது. பழைய மாடல் என்றாலும் வரவேற்பறை, இரண்டு படுக்கை அறைகள் ஏன் ஸ்டோர் ரூம் கூட அம்சமாக அமைந்திருந்தது. சமையலறை ஷெல்ப்புகள் இப்போது மாதிரி கதவை போட்டு அடைத்து எதை எங்கு வைத்தோம் என்று விழிக்க வைக்காமல் கடைகளில் காணப்படுவது போல காற்றோட்டமான நீளமான அடுக்குகள்.

மொத்தத்தில் வீடு அப்படி ஒரு விசாலமாக இருந்தது. இந்த விலாசத்துக்கு வரவா இவ்வளவு தயக்கம்?

“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க” என்றான் அன்பு.

“நிஜம்மாவா சொல்றிங்க. வீட்டில் அவங்களையும் கூட்டிட்டு வந்து காமிச்சுட்டு அப்பறம் முடிவு செய்யலாமே” என்று தயங்கினார் ப்ரோக்கர்.

யோவ் குடிவர்றவரே சரின்னு சொல்லும்போது பூசாரி நீ நடுவில் புகுந்து ஏன்யா ஆட்டையைக் கலைக்கிற? என்று திட்டினேன். நான் திட்டுவது அவர்களுக்குக் கேட்கவா போகிறது?

“வீட்டுல  கிராமத்துப் பக்கம், இதெல்லாம் தெரியாது. நான் சொன்னா கேட்டுக்குவாங்க” என்று உடனே பதில் சொன்ன அன்பை அன்பாகப் பார்த்தேன். நான் நல்லவன்தான் அன்பு, அதை நீயே போகப் போகப் புரிஞ்சுக்குவ.

அடுத்து சில நாட்களில் அன்பும் அவனது மனைவி அமுதாவும் குடி வந்துவிட்டார்கள். அன்பு நான் எதிர்பார்த்தது போல இல்லாமல் பொண்டாட்டியிடம் வம்பு வளர்த்துக் கொண்டே இருந்தான்.

“ஏய் பட்டிக்காடு, இப்படியா துணியெல்லாம் போட்டு வைப்பாங்க”

“இதென்னடி டிபன் பாக்சில் குழம்பு சாதம்… உன் நாட்டுப்புறக் கைவண்ணத்தை இதில் காமிக்காதே. ஆபிசுக்கு சாண்ட்விச், நூடுல்ஸ் இப்படி மார்டன் லன்ச்சா தா.. “

“சமையல் ரூமா இல்லை போர்க்களமா. அண்டாவையும், குண்டாவையும் இறைச்சு வச்சிருக்க”

என்று ஏதாவது கத்திக் கொண்டே இருந்தான்.

அவனது ஏச்சுக்கு பயந்து மிரண்ட அமுதாவின் மேல் எனது பச்சாதாபம் கூடியது. அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

‘காலை ஆறு மணிக்கு குடி தண்ணீர் வரும், அமுதா தண்ணீர் பிடிக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறாளே’ ஜன்னல் கதவை படார் படார் என்று அறைந்து சாத்தினேன். ஓசையில் எழுந்த அமுதா மணியைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாகத் தண்ணீர் பிடிக்க ஓடினாள்.

மறுபடியும் ரவா உப்புமாவா? அன்பு நல்லா கத்தப்போறான். எறும்புகளை  எடுத்து எடுத்து ரவையில் விட்டேன்.

‘வறுத்த ரவையில் எப்படி வந்தது?’ வியந்தவண்ணம் அன்று பிரட் சாண்ட்விச்சை கொடுத்து அனுப்பினாள்.

மழை வருகிறதே, துணிகளை எடுக்காமல் டிவி பார்க்கிறாளே, அக்கறையோடு டிவி ஸ்விட்சை நிறுத்திவிட்டு ஜன்னலைத் திறந்தேன். ஜன்னலின் வழியே கருமேகத்தைப் பார்த்துவிட்டு வேகமாக மொட்டை மாடிக்குத் துணிகளை எடுக்க ஓடினாள்.

அன்று அன்பின் மேலதிகாரியின் குடும்பம் உணவருந்த வருகிறது என்று கஷ்டப்பட்டு அவருக்குப் பிடித்த மெனுவாக பல உணவு வகைகளைச் சமைத்தாள் அமுதா.

“அவரு கைலதான் என் ப்ரோமோஷன் இருக்கு. ஏதாவது தப்பு நடந்துச்சு தொலைச்சுட்டேன்” என்று மிரட்டி இருந்தான் அன்பு. அந்த பயம் வேறு அவளுக்கு சேர்ந்து கொண்டது.

“வீடு சூப்பரா இருக்கு. சாப்பாடும் பிரமாதம்” என்று பாராட்டினார் விருந்துக்கு வந்தவர்.

“நல்லா சொல்லுங்க சார். இந்த வீட்டைக் காலி பண்ணனும். பயம்மா இருக்குன்னு நச்சரிச்சுட்டு இருக்கா?”

“ஏம்மா?”

“இல்ல சார். தாப்பா போட்டு ராத்திரி மூடி வச்ச ஜன்னல் தானா திறக்குது. டப்பாவில் இருக்குற  ரவைல எறும்பு மொய்க்குது ஆனால் பக்கத்து தட்டில் இருந்த சுவீட்டில் ஒண்ணுத்தையும் காணோம். பாத்துகிட்டே இருக்கும்போது டிவி மட்டும் நின்னு பூட்டியிருந்த ஜன்னல் கதவு தானா திறக்குது. இதெல்லாம் பயம்மா இருக்கு”

இதெல்லாம் எப்படி சொதப்புனேன் என்னையே திட்டிக் கொண்டேன்.

“ பேய் படம் நிறையா பாக்குறிங்க போல இருக்கு, என்ன மிஸ்டர். தமிழன் சேனலா?” சிரித்துக் கொண்டே சொல்லி என்னைக் காப்பாற்றினார்  மேலதிகாரி.

“பால் பாயசம் கொண்டு வரேன்” கிண்டல் பிடிக்காமல் நகர முற்பட்டாள்.

“நாங்களே வந்து எடுத்துக்குறோம்மா” என்று சொன்னார் மேலதிகாரியின் மனைவி

“சமையல்ரூமில் இருக்கு”

“கிச்சனை நாங்க இன்னும் பார்க்கவே இல்லையே.”

அப்போதுதான் பாயஸப் பாத்திரத்தின் மேல் பல்லி ஒன்று அமர்ந்திருந்ததை கவனித்தேன். அப்படியே பாயசத்தில் விழ ஆரம்பித்தது. ஐயோ அமுதா தொலைந்தாள் அப்படியே பாத்திரத்திற்குள் விழுவதற்கு முன் பல்லியைக் கேட்ச் பிடித்தேன்.

அந்தரத்தில் நின்ற பல்லியை அப்படியே ஜன்னலுக்கு நகர்த்திக் கொண்டே  கவனித்தேன் சமையல் அறையில் அமுதா, அன்பு, மேலதிகாரியின் குடும்பத்தினர். அனைவரும் திகிலடித்துப் போய் நின்றிந்தார்கள்.

‘கிரீச்” காம்பவுண்டு கதவு கிரீச்சிட்டது.  திறந்து உள்ளே நுழைந்து என் முகத்தில் ‘டூ லெட்’ போர்டை மாட்டியவாறு “இந்தப் பேய் வீட்டில் புருசன் பொஞ்சாதி ஆறு மாசம் தாக்குப் பிடிச்சதே பெரிய விஷயம்” தனக்குள் பேசிக் கொண்டே நகர்ந்தார்.

நான் பேசிக்கா நல்லவன். ஏன் யாரும் நம்ப மாட்டிங்கிறாங்க. உங்களுக்குத்தான் தெரியுமே. நீங்களாவது அவங்க கிட்ட ரெக்கமென்ட் பண்ணக்கூடாதா?

12 thoughts on “பேய் வீடு”

  1. இப்படி தான் நல்லது செய்தா கூட அது பாக்குறவுங்க கண்ணுக்கு தப்பா தெரியுது…. என்ன செய்ய…. அருமை அருமை….

Leave a Reply to vijaya lakshmi Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அப்புவின் கதை : ரண்டி சோமராஜுஅப்புவின் கதை : ரண்டி சோமராஜு

அப்புவின் கதை : ரண்டி சோமராஜு (தெலுங்கு கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் முத்துத் தீவு என்று ஒரு சிறு கிராமம் இருந்தது. ஆனால் அந்த ஊரில் முத்துக்கள் சேகரிக்கப்படவுமில்லை; அது ஒரு தீவுமில்லை. அந்த ஊர் வெகு தூரத்தில் தன்னந்தனியாக

ராகுலன் : திரிவேணிராகுலன் : திரிவேணி

ராகுலன்  –  திரிவேணி (கன்னடக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் ராகுலன் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்த போது சிறு குட்டியாகத் தான் இருந்தது. என் பாட்டி சுத்தம் பற்றி அலட்டிக் கொள்கிறவள்; அழுக்குப் படிவது பற்றி தீவிரக் கருத்துகள் உடையவள்.

ப்ரிஜ்ராஜ் மஹால்ப்ரிஜ்ராஜ் மஹால்

      ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரில் அமைத்திருக்கும் ப்ரிஜ்ராஜ் மஹால் எனும் அரண்மனையைப் பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம். இந்த அரண்மனையை பிரிட்டிஷ் அரசாங்கம் 1830ல் கட்டியது. அந்தக்காலத்தில் இது ஆங்கேலயர்களின் கெஸ்ட் ஹவுஸாகப் பயன்படுத்தப்பட்டது. மன்னர்கள், வைஸ்ராய்கள்,