அத்தியாயம் – 41
காலை பொழுது விடிந்தது.
சொற்ப நேரமே தூங்கி வெகு விரைவிலேயே எழுந்து ரெடியாகி மறுபடியும் பக்கத்து அறையில் அமர்ந்திருந்தனர் ராதிகாவும் செம்பருத்தியும். அவர்களுக்கு கட்டாஞ்சாயா எடுத்து வந்து பருகக் கொடுத்தார் சேச்சி.
அப்போது அவர்கள் கவனத்தைக் கலைத்தது அங்கு வந்த காவ்யாவின் கூச்சல். “என்ன நினைச்சுட்டு இருக்கிங்க? மந்தாகினி நடந்து வந்தா எத்தனை கம்பீரம், ஆளுமை. சேச்சி, அவங்க இருந்தவரை காலடில நாயாட்டம் சுத்திட்டு இப்ப எங்க அத்தையை கெட்டவன்னு கதை கட்டி விடுறிங்களா? உங்களை எல்லாம் சும்மா விடமாட்டேன்” என்று கத்தினாள்.
“மேடம் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வர்றிங்களா உங்களை நாங்க விசாரிக்கணும்” என்றபடி மாடிக்கே வந்து நின்றார் போலீஸ் அதிகாரி.
இவர் விசாரணை இன்னமுமா முடியல என்றபடி அவருடன் சென்றனர் காவ்யாவும் செம்பருத்தியும். அறையில் அவினாஷ் அமர்ந்திருந்தான். இன்னொரு ஓரத்தில் அவளது அத்தை, ரமேஷ் மற்றும் அவனது சகோதரி மூவரும் வாயை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
“சார்… முன்னாடியே உங்களுக்கு வாட்சப்ல தகவல் தந்த மாதிரி செம்பருத்தியோட சொந்தக்காரங்க மூணு பேரும் குற்றவாளிகள்னு அரெஸ்ட் செஞ்சு கூட்டிட்டு போறோம்!
“சபாஷ் இன்ஸ்பெக்டர்… அதே மாதிரி இவளையும் விலங்கு போட்டு இழுத்துட்டு போங்க”
“செம்பருத்தி மேல குற்றம் நிரூபணமாகலையே… அவங்க அறையிலும் , கை பையிலும் இருந்த குளிர்பானத்தில் எந்த விதமான போதை மருந்தும் இல்லை”
கடுப்பானாள் காவ்யா “அதெப்படி இதில் மாத்திரம் இல்லாம போகும்”
“ஒருவேளை அபிராம் தனியா வாங்கி வச்சிருந்த போதை மருந்தை கூல்ட்ரின்க்ஸ்ல கலந்து குடிச்சிருக்கலாம். அதனால நாங்க முதலில் எடுத்த பாட்டிலில் மட்டும் ட்ரக் இருந்திருக்கும்”
“இல்லை. இவ வாங்கிட்டு வந்த கூல்ட்ரின்க்ஸ்லதான் போதை மருந்து இருக்கு. நீங்க சரியா டெஸ்ட் பண்ணல”
“மேடம் ஆதாரமில்லாம குற்றம் சாட்டாதிங்க. செம்பருத்தி மேல குற்றமில்லை. நாங்க கிளம்புறோம்”
“ஆதாரம் இருக்கு அது என்னன்னு நான் சொல்றேன்” என்று மர்மச் சிரிப்புடன் சொன்னாள்.
“நீங்க மட்டும் சரியான ஆதாரம் தந்துட்டிங்கன்னா குற்றவாளியை விலங்கு பூட்டி கூட்டிட்டு போக நான் தயார்” என்றார் காவல் அதிகாரியும் சளைக்காமல்.
அந்த பாட்டிலில் ஒன்னை எடுத்துட்டு வாங்க.
“ட்ரக்கை கூல்ட்ரிங்ஸ்ல மாத்திரம்தான் டெஸ்ட் பண்ணிங்களா?”
“ஆமாம் அதில்தானே போதை மருந்து கலந்திருந்தது”
“நீங்க எல்லாம் இன்னும் முன்னேறவே இல்லை. பவுடரை வெளியே வச்சு தந்திருக்கா”
“தனியா பொட்டலம் கட்டி… “
“பாக்கெட் போட்டு இப்படி தந்திருக்கா… “ என்று சாம்பிள் பாட்டிலில் இருந்த பெயர் போட்டிருந்த லேபிளைக் கிழிக்க, அனைவரும் ஆச்சிரியத்தில் வாயைப் பிளந்தார்கள்.
இரண்டு ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்ட லேபிள். மேலே இருந்தது லேபிள். அதன் அடியில் லேபிள் அளவுக்கே ஸ்டிக்கரைப் போன்ற பிளாஸ்டிக் பாக்கெட் ஒன்று மறைக்கப்பட்டிருந்தது. அந்தப் பாக்கெட்டை கவனமாக எடுத்தவர் உடனடியாக டெஸ்ட்டுக்கு அனுப்பினார்.
“இதுதான் போதை மருந்தா… டால்கம் பவுடர் மாதிரி இருக்கு” என்றாள் செம்பருத்தி விழிகளை விரித்து வியந்தபடி.
“இவளை நம்பாதிங்க. எப்படி நடிக்கிறா பாருங்க” என்று பல்லைக் கடித்தபடி காவ்யா சொல்ல.
“அவங்க நிரபராதின்னு உறுதியாயிருச்சு. நீங்க வாங்க மேடம் போகலாம்” என்று தன்னிடம் சொன்ன இன்ஸ்பெக்டரைப் பார்த்து நம்பமுடியாமல் திகைத்து
“நானா? நான் எதுக்கு வரணும்?”
“இந்த பவுடரை இப்படித்தான் கலந்திருக்காங்கன்னு நாங்க கண்டுபிடிச்சுட்டோம். ஆனால் இந்த அளவுக்கு செயல் முறை விளக்கத்தோடு உறுதியா சொல்ல உங்களால் மட்டும்தான் முடிஞ்சது”
“யாருகிட்ட பேசுறிங்கன்னு தெரிஞ்சுதான் பேசுறிங்களா?”
“ஒரு ட்ரக் மாஃபியா வச்சு நடத்துற பொண்ணுகிட்ட பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறேன்”
“என்ன ட்ரக் மாஃபியாவா?”
“உங்க கூட்டாளி ரமேஷ் நேத்து ராத்திரி நாங்க தந்த ட்ரீட்மெண்ட் தாங்காம எல்லா உண்மையையும் கக்கிட்டான்”
“உண்மையா? என்ன உண்மை?”
“சில மாதங்களுக்கு முன்னாடி நாங்க ஒரு ட்ரக் சப்ளை பண்ற பொண்ணை வாட்ச் பண்ணோம். அவளோட காண்டாக்ட்ல நீங்க இருந்திங்க. அடிக்கடி போன் வேற பேசிருந்திங்க. முதலில் நீங்க சொந்த உபயோகத்துக்கு வாங்குறிங்கன்னு நினைச்சோம். பட் அப்பவே நீங்க எங்க வாட்ச் லிஸ்ட்ல வந்தாச்சு.
உங்க காண்டாக்ட்ல இருந்த ட்ரக் பொண்ணு அபிராம் சாருக்கு ஆக்சிடெண்ட் ஆகும்போது கூட இருந்ததா எங்களுக்குக் கிடைச்ச தகவல்கள் உறுதிப்படுத்துச்சு. கால் ஆக்சிடென்ட் ஆனபோது அவர் உபயோகிச்ச ட்ரக்ஸ் இப்ப கிடைச்ச ட்ரக்ஸ் எல்லாம் ஒரே வகைதான். சோ அதே பழக்கமான சோர்ஸ் மூலமாத்தான் சப்ளை ஆயிருக்கணும்னு உறுதியா நம்பினோம்.
உங்களுக்கும் அபிராமுக்கும் அந்தப் பொண்ணுதான் சப்ள்ளையர்ன்னு நாங்க எல்லாரும் சந்தேகப்பட, நீங்களோ செம்பருத்தியும், ரமேஷும் போதை மருந்து விக்குறவங்கன்னு சொன்னிங்க.
நீங்களும் போதை மருந்து உபயோகிக்கிறவர்ன்னு நாங்க சந்தேகப்பட்டதால உங்களோட குற்றச்சாட்டு உண்மைன்னு நினைச்சு அந்த கோணத்தில் விசாரிச்சோம். அப்பத்தான் அந்த உண்மை வெளிவந்தது”
“என்ன உண்மை”
“சில வருடங்களுக்கு முன்னாடி நீங்க தமிழ்நாட்டில் ஒரு பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிச்சு பணத்தை சுருட்டிட்டு ஓடுனீங்களே அந்த உண்மையை உங்க பார்ட்னர் ரமேஷ் ஒத்துக்கிட்டார்”
“பார்ட்னர் ரமேஷா?”
“ஆமாம் வெறும் தொழில் பார்ட்னர் மட்டுமில்ல, உங்க லைஃப் பார்னரும் கூட”
“என்ன உளறுறீங்க”
“நீங்க ரமேஷுக்கு இந்த விலாசத்தைத் தந்து வாங்க வாங்கன்னு அழைச்சது எல்லாம் வாட்சப்ல தெளிவா இருக்கு. அவனோட பொண்டாட்டியை அடிச்சு விரட்டிட்டு உங்களுக்காக ஊரை விட்டு ஓடி வந்திருக்கான். அதனால தமிழ்நாட்டில் வரதட்சணை கேஸ் இவங்க மூணு பேரு பேரிலும் ஓடிட்டு இருக்கு. அதில் உங்களையும் சீக்கிரம் குற்றவாளியா இணைச்சிருவாங்க”
“டேய் ரமேஷு யாருடா உன் பொண்டாட்டி. செம்பருத்தியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சுத்திட்டு இருந்த”
“டார்லிங் உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு. நீயும் ஓத்துக்கோ”
“டார்லிங்கா? செருப்பு பிஞ்சுடும்”
“உஷ்… உங்க நாடகத்தை நிறுத்துங்க. சைபர் க்ரைம்ல கேட்டு ரமேஷ்கிட்ட பேசினது நீங்கதான்னு உறுதியும் பண்ணிக்கிட்டோம். விசாரணையைத் தொடங்கலாம் வாங்க” என்று கறார் குரலில் சொல்ல.
அவினாஷிடம் திரும்பி “சார் இவங்களோட குற்றங்கள் நீண்டுகிட்டே போகுது. அதனால விசாரணைக்கு அழைச்சுட்டுப் போறோம்” என்று தகவல் சொன்னார்.
“அவினாஷ் நம்ம குடும்பத்தையே அவமானப் படுத்துறாங்க. பாத்துட்டு நிக்கிறிங்களே”
“பொய் புகாரனா நீ ஏன் கவலைப்படுற காவ்யா. செம்பருத்தி தலை நிமிர்ந்து நின்ன மாதிரி நீயும் நில்லு”
ரமேஷ் பாதி உண்மை பாதி பொய் என்று கலந்து கட்டி அடித்ததில் தானும் மாட்டிக் கொண்டதை நினைத்து கூசிப் போய் காவல் அதிகாரியிடம் வண்டியில் ஏறினாள்.
“நான் உன் காதலியா? எனக்காகதான் உன் பொண்டாட்டியை விரட்டி விட்டியா? ஏண்டா பொய் சொல்லி என்னை இப்படி மாட்டி விட்ட” அடிக்குரலில் சீறினாள்.
“இங்க பாரு காவ்யா. எங்களை காப்பாத்துற அளவுக்கு ஆள் பலமும் பண பலமும் இருக்குற ஒரே ஆள் நீதான். உன்னை அவ்வளவு சுலபமா விட்டுற முடியுமா? நீ தப்பிக்கிறப்ப என்னையும் காப்பாத்துவ, காப்பாத்தணும்” வில்லாதி வில்லச் சிரிப்பு சிரித்தான் ரமேஷ்.
எத்தனுக்கு எத்தன் இந்த காவ்யாவும் ரமேஷும்.
Thanks @helenjesu