Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 39

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 39

அத்தியாயம் – 39

 

அவினாஷ் பிறந்ததை சில வருடங்களுக்கு மட்டுமே நாகேந்திரனால் மந்தாகினியிடமிருந்து மறைக்க முடிந்தது. அதுவும் முதல் ஒன்றிரண்டு வருடங்கள் லண்டனிலேயே வளர்ந்தான். அதன்பின் மங்கை பாம்பாயில் தனது வேலையைத் தொடர விரும்பினார். அதுவரை அவர்களுடன் தங்கி லண்டனில் படித்துக் கொண்டிருந்த லீலாம்மா தனது வேலையை லண்டனில் தொடர விரும்ப இருவரும் பிரிந்தார்கள். 

 

பம்பாயில் வந்து மீண்டும் வேலை தேடியபோது வழக்கமாக பெண்களுக்கு ஏற்படும் அதே பிரச்சனை ஏற்பட்டது. குழந்தை பிறப்பு காரணமாகவும் அதன்பிறகு உடல்நிலை காரணமாகவும் ஏற்பட்ட சிறிய தடுமாற்றம் மற்றும் இரண்டு வருடம் வேலை பார்க்காமல் இருந்தது , அவரை முன்னேற்றத்தில் இருந்து சறுக்க வைத்து, மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டி இருந்தது. 

 

எமனையே போராடி வென்று வந்த மங்கைக்கு இந்த சிறு சறுக்கல் எம்மாத்திரம்? உபகார சம்பளத்துடன் மேற்படிப்புக்கு சேர்ந்தார். 

 

நாகேந்திரன் அவரை வீடு பார்த்து தங்க வைத்தார். இருந்தாலும் சிறிய பிளாட் ஒன்றில் மட்டுமே தங்குவேன் என்று பிடிவாதமாக இருந்த மங்கையை ஒன்றும் செய்ய முடியவில்லை. தனது பாகமங்கலம் பயணங்களைக் குறைத்துக் கொண்டு மகளுக்கு உதவியாக தங்கிவிட்டார் பூபதி. 

 

காலையில் பால் வாங்கி வந்து காய்ச்சி பூஸ்ட் போட்டு பேரனை மடியில் வைத்து சூட்டினை ஆற்றி ஆற்றி குடிக்க வைக்கும் இவரா பாகமங்கலம் ஜமீன்தார் என்று ஆச்சிரியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார் நாகேந்திரன். 

 

“நாகேந்திரா… உனக்கும் மங்கைக்கும் காப்பி போட்டு பிளாஸ்க்ல  வச்சிருக்கேன்”

 

“மாமா… என்னால நம்பவே முடியல. உங்களுக்கு சமையல் செஞ்சு தரவே டசன் கணக்கா ஆட்கள் வீட்டில் இருக்கும்போது. நீங்க எனக்கு காப்பி போடுறது… பச் … மனசே பிசையுது. எல்லாம் என்னாலதானே மாமா? இந்த பாவத்தை எங்க போயி கழுவுவேன்?”

 

“இந்த நிமிஷம், என் பேரனை மடியில் வச்சு கொஞ்சுற சந்தோஷமான தாத்தா. தினமும் அவினாஷை நடந்து போயி ஸ்கூலில் விட்டுட்டு கூட்டிட்டு வரப்ப எவ்வளவு விஷயங்களைத் தெரிஞ்சுக்குறேன் தெரியுமா? 

 

பால் காய்ச்சுறது, காப்பி போடுறது, ரசம் வைக்கிறது இதெல்லாம் புதுசா கத்துக்கிட்டு செய்யும்போது என்னவோ ஒரு நிறைவு. நிஜம்மா சொல்லப்போனா எந்த வித வெளிப்பூச்சும் இல்லாம, உணர்ச்சிகளை அடக்காம, மக்களோடு மக்களா கலந்து பழகும் இந்த வரத்தை என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்”

 

“சாபத்தையே வரமாக்கிக்கும் புத்திசாலித்தனம் உங்களுக்கும் மங்கைக்கும்  மட்டும்தான் இருக்கு மாமா! எனக்கும் கொஞ்சமாவது இருந்திருக்கலாம்” பெருமூச்சுடன் சொன்னார். 

 

“என்ன பெருமூச்செல்லாம் பலம்மா இருக்கு”

 

“நேத்து அவினாஷ் கூட மெரைன் ட்ரைவ் போயிருந்தப்ப கொச்சில இருந்து தெரிஞ்சவங்க ஒருத்தங்க பாத்துட்டாங்க. அவங்க மந்தாகினிக்கு பிரெண்டு”

 

“உண்மையை எத்தனை நாள் மறைச்சு வைக்க முடியும்?”

 

“உண்மை தெரியறதால எனக்குக் கவலையில்லை. மங்கையோட உயிரைக் காப்பாத்தவே பெரும்பாடு பட்டோம். இப்ப அவினாஷ்… இவன் சின்ன குழந்தை மாமா… மந்தாகினியோட விஷக்கண்ணில் பட்டுடக் கூடாது” தழுதழுத்தார். 

 

அவரது கவலையைப் புரிந்து கொண்டார் பூபதி. சற்று நேரம் யோசித்தார். 

 

“மங்கை ஆராய்ச்சி படிப்பெல்லாம் படிக்கணும்னு சொல்லிட்டிருக்கா. படிக்கட்டும் விடு. நான் அதைக் காரணம் காட்டி அவினாஷை பாகமங்கலத்தில் நம்ம ஸ்கூலில் படிக்க வைக்கிறேன். நம்ம குடும்பத்து பசங்க படிக்கிறதால பாதுகாப்பு பலமாவே இருக்கும்”

 

நல்ல யோசனையாகவே பட்டது நாகேந்திரனுக்கு. அவருக்கு ஒரு மகன் மட்டுமா இருக்கிறான். அவரது முதல் மகன் அபிராம். முதன் முதலில் என்னை அப்பா என்று மழலை மொழியால் அழைத்தவன். அவனை எப்படி காப்பாற்றப் போகிறேன். 

 

“அபிராம்தான் அப்பா இருந்தும் அம்மாவோட நிழலில் மட்டும் வாழுறான். அந்த பேய் நான் மங்கையைக் கல்யாணம் பண்ணிக்க அவளை விலக்கி வச்சிருக்குறதா அந்த ஊரில் ஒரு பிம்பம் ஏற்படுத்தி வச்சிருக்கு. அதை நம்பி அபி நான் பக்கத்தில் போனாலே ‘ஐ ஹேட் யூ’ன்னு கத்துறான் மாமா”

 

“அந்தப் பொண்ணு மந்தாகினி எப்படி இருக்காங்க”

 

“அவளை பத்தி கேக்காதிங்க மாமா… இந்த அறுநூறு சதுர அடி பிளாட் அன்பாலே நிறைஞ்சு இருக்கு. ஆனால் அங்க அரண்மனையே களை இழந்து போச்சு.  அதுவும் பூஜை ரூமா இல்லை பாதாள பைரவி குகையான்னு தெரியல. எப்பொழுதும் விளக்கு அணையாம எரியுது. கோழி எல்லாம் அறுத்து வீட்டில் பூஜை பண்றதா கேள்வி”

 

“சமீபத்துல கொச்சில திருட்டு கூட போனதா சொன்ன இல்ல”

 

“ஆமாம் மாமா”

 

யோசனையில் ஆழ்ந்தார் 

 

“ஒன்னு செய், நம்ப லவங்கத்து கிட்ட சொல்லி வேட்டை நாய்களை கொச்சில இருக்குற அரண்மனைல பாதுகாப்புக்கு வாங்கு”

 

“நானும் அத பத்தி யோசிச்சேன் மாமா. ஆனா அரண்மனைல நம்ம நாய்களை பார்த்துக்கிற அளவுக்கு பயிற்சி பெற்ற நபர்கள் யாருமே இல்லை”

 

“முதலில் நாய்கள கொண்டு போயி லவங்கம் விடட்டும். நம்ம ஊரு நாய்களா கவனிக்கிறதுக்கு ஒரு தனி தகுதி வேணும். அது அங்க இல்லனா நம்ம லவங்கத்தையே அனுப்பி விடலாம்.”

 

“புரியுது மாமா. லவங்கத்தின் பொறுப்பு அங்க நாய்களை பார்த்துக்கிறது மட்டுமில்ல, அபிராம் வீட்டில் இருக்கும் பொழுது அவனுக்கு ஒரு ஆபத்தும் நேராம காப்பது”

 

லவங்கம் அடுத்த சில வாரங்களில் கொச்சி அரண்மனையில் குடியேறினார். 

 

***

 

நாகேந்திரன் எந்த விஷயத்தை மந்தாகினிடம் சொல்லாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாரோ அது ஒரு நாள் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலைக்குக் காலம் தள்ளியது.

 

ஆம் அவரது அன்னை வடிவின் இறுதிச் சடங்கின் பொழுது தான்  அவினாஷும் நாகேந்திரனின் மகன் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

 

முதல் பேரன் என்ற உரிமையில் அபிராமும் மந்தாகினியும் வந்து இறங்க, அமைதியாக மங்கை காரியங்களை கவனிக்க, தன்னுடன் நெய் பந்தம் பிடித்துக் கொண்டு நின்றிருந்த சிறுவனை நட்போடு பார்த்து சிரித்தான் அபிராம்.

 

அவனைப்  பொறுத்தவரை பாகமங்கலத்தில் நிறைய தம்பி தங்கைகள் அவனுக்கு இருக்கிறார்கள். குறிப்பாக அவனது சித்தப்பா மகேந்திரனின் பிள்ளைகள். அவனுக்குப்  போட்டியாளர்கள். ஆனால் எத்தனை பேர் இருந்தாலும் அவன் தான் அந்த பாகமங்கலத்திற்கு வருங்கால ராஜா என்று அவன் அம்மா சொல்லி இருக்கிறார்.

 

இந்த குட்டி பையன் அங்கு  இருக்கும்  அனைவரையும் விட சிறுவனாக இருக்கிறான். எனவே இவனும் ஒரு தம்பியாகத் தான் இருக்க வேண்டும்

 

“நீங்க யாருண்ணா  உங்கள நான் பார்த்ததே இல்லையே” என்று மழலையாக கேட்டான். அந்த சிறுவன்

 

“நான்தான் அபிராம். இப்ப கொச்சில இருக்கேன். பெரியவன் ஆனதும் எங்க அம்மாவை கூட்டிட்டு இந்த ஊருக்கு ராஜாவா வந்துருவேன். உன் பேர் என்ன?” என்று கேட்டான்

 

“என் பெயர் அவினாஷ். நான் பம்பாய்ல படிச்சேன். இப்ப பாகமங்கலத்து ஸ்கூல்ல எங்க தாத்தா சேர்த்து விட்டுட்டார். நீ ஏன் கொச்சில இருக்க நீயும் இங்கே வரலாமே”

 

“செத்து போனாங்க இல்ல அந்த பாட்டி தான் எங்க அம்மா கொச்சில இருக்குறதுக்கே காரணம். அவங்க எங்க அம்மாவை அடிப்பாங்களாம். அதனால எனக்கு அந்த பாட்டியை பிடிக்கவே பிடிக்காது. இப்ப கூட வந்திருக்க மாட்டேன். ஆனால் நான் வரலைன்னா வேற யாராவது ராஜா ஆயிடுவாங்களாம் அப்படின்னு சொல்லி எங்கம்மாதான் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தாங்க.”

 

“அப்படியா, இந்த பாட்டி என்னை ரொம்ப பிரியமா பார்த்துப்பாங்க. அவங்க செத்துப் போனது  நினைச்சு எனக்கு ரொம்ப அழுகையா வந்தது.அழுதுகிட்டே இருந்தேன் தெரியுமா. இந்தப் பாட்டி ரொம்ப நல்லவங்க அபிராம். ஆனா சின்ன வயசில் எங்க அம்மா தப்பு பண்ணும் பொழுது இந்த பாட்டி தலைல குட்டுவாங்களாம். ஆனால் குட் கேர்ளா இருந்தா கொஞ்சுவாங்களாம். உங்க அம்மாவ ஏன் அடிச்சாங்க உங்க அம்மா எதுவும் தப்பு பண்ணாங்களா?”

 

“எங்க அம்மா தப்பே பண்ண மாட்டாங்க அவினாஷ். அதனால எங்க அம்மாவை கஷ்டப்படுத்துறவங்க யாரையும் எனக்கு பிடிக்காது. எங்க அம்மாவுக்கு பிடிக்காதவங்க எனக்கு எனிமிதான்”

 

“நீ வந்ததிலிருந்து ஒண்ணுமே சாப்பிடலையே. சரி இந்த பிஸ்கெட்டை சாப்பிடு”

 

“எங்க அம்மாவும் தான் சாப்பிடல. எங்க அம்மா சாப்பிடாம நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன்?”

 

குடுகுடுவென மந்தாகினிடம் ஓடிப் போன அவினாஷ் பிஸ்கட்டை  நீட்டி “ஆன்ட்டி இதை நீங்க சாப்பிடுறீங்களாஅபிராமயும் சாப்பிட சொல்றீங்களா? நீங்க சொல்லாம அவன் சாப்பிட மாட்டானாம்” என்றான்.

 

அந்த சிறுவனின் கன்னத்தில் தட்டி புன்னகைத்தவரே “அபிராம் சாப்பிடுறா. குட்டி பையன் சொல்றான் இல்ல” என்றாள்

 

அந்த அன்பு எல்லாம் அவிநாஷ் நாகேந்திரனின் இரண்டாவது மகன் என்று தெரிந்ததும் அப்படியே மாறியது.

 

“அபிராம் வாந்தி எடுறா… அந்த பிஸ்கட்ல என்ன கலந்து கொடுத்திருக்காங்களோ தெரியலையே… இந்தக்  குடும்பம் கொலைகார குடும்பம் டா.. வா இங்கிருந்து போகலாம்” என்று அவனைத் தரதரவென இழுத்துச் சென்றாள்.

 

குரங்கு கையில் சிக்கிக் கொண்ட பூமாலை போல மந்தாகினியின் கைகளில் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்ட அபிராமியின் கண்களில் கோபம். அந்த சினத்துடன் நாகேந்திரனையும் மங்கையையும் வெறித்தான். ஆனால் அவர்களுக்கு நடுவே பயந்தபடியே நின்று கொண்டு அபிராமை அன்புப்  பார்வை பார்த்த அவினாஷிடம் மட்டும்அவனால் கோபம் கொள்ளவே முடியவில்லை.

 

அந்த சம்பவத்திற்கு பின்னர் மந்தாகினியின் கொடூரம் பல மடங்காயிற்று.  நாகேந்திரன்அபிராமைத்  தரதரவென்று இழுத்துச் சென்ற மந்தாகினியின் செயலால் திகைத்துப் போயிருந்தார்.அபிராமை அவனது தாயிடமிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார். 

 

லீலாம்மாவை எதிர்பாராத விதமாக சந்தித்தவர் அவள்தான் அபிராமின் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்ள முடியும் என்று முடிவு செய்தார். அவளும் சம்மதிக்கவும் சுகுமாரனின் மூலம் அரண்மனையில் வேலைக்கு அனுப்பினார். இப்படித்தான் லீலாம்மா அபிராமுக்கு பெறாத தாயானார்.

 

***

 

ந்தாகினிக்கு மங்கைக்கு மகன் பிறந்ததே நம்பவே முடியவில்லை. நேரடியாக மங்கைக்கு எந்தவித கெடுதலும் செய்ய முடியாது. அப்படிச்  செய்தால் நாகேந்திரனின் நடவடிக்கை அபிராமுக்கு முற்றிலும் ஆபத்தாக முடியலாம்.எனவே மற்ற வழிகளை நாடினாள். ஒன்று, சட்டத்தின் துணை மற்றொன்று மந்திர மாயங்களின் துணை.

 

சட்டத்தின் துணையால் அவினாஷ் என்பவன் குடும்பத்திற்கு சம்பந்தமே இல்லாதவன். பாகமங்கலத்தின் ராஜா நாகேந்திரன். அதனால் அவருக்குப் பின்பு அவரது வாரிசாக அபிராம்தான் வரவேண்டும்.

 

 இந்த சொத்துக்கும் பதவிக்கும் உரியவன் அபிராம்தான்.மங்கைக்கு குழந்தை பெற முடியாது என்பதால் அவினாஷ் மங்கையின் மகனாக இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நாகேந்திரனுக்கு மகனாக இருந்தால் கூட முறையற்று பிறந்தவன்  என்பது போல் அவளது வாதம் நீண்டது.

 

அவினாஷ் தனக்கும் மங்கைக்கும் முறையாக பிறந்தவன். மங்கை பத்து மாதம் அவனை சுமந்து பெற்றெடுத்தாள் என்பதற்கான லீகல் டாக்குமெண்ட்சை நாகேந்திரனும் தாக்கல் செய்து அவளின் வாதத்தை முறியடித்தார்.

 

இதற்கே சில வருடங்கள் ஓடிவிட்டது.

 

மந்தாகினியின் செயலால் வெறுத்துப் போயிருந்தவர் சுகுமாரன்தான். ஊரே மந்தாகினியைத் திட்டிக் கொண்டிருக்க. இவரது மகள் காவ்யாவோ அத்தையை ரோல் மாடல் என்று சொல்கிறாள். இதனை எங்கு போய் சொல்வது.

 

இப்போது கூட மந்தாகினி சுகுமாரனை சட்டை செய்யாமல் காவியாவை மடியில் உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கிறாள்.

 

“சுகுமார் அண்ணா காவ்யாதான் என்னோட வாரிசு. எங்களுக்கு அப்புறம் பாகமங்கலத்துல ராஜாவும் ராணியும் அபிராமும் காவியாவும் தான். காவ்யா அத்தை பேரை காப்பாத்துவல்ல” என்றாள்

 

“ப்ராமிஸ் அத்தை. பெரியவள் ஆனதும் நான்தான் பாகமங்கலத்துக்கு ராணி”

 

“ராணியாகிறது லேசில்லை காவ்யா. அதுக்கு ஸ்பெஷல் தகுதிகள் நிறைய வேணும். அது எல்லாத்தையும் அத்தை உனக்குக்  கத்துத் தரேன்”

 

‘நாசமா போச்சு ஒரு மந்தாகினியே  சமாளிக்க முடியல. இதில் இவரது செல்லப் பெண் வேறு இன்னொரு மந்தாகினியாக வேண்டுமா’

 

“சாப்பிட்டது போதும் போய் விளையாடு நான் அத்தை கூட பேசணும்” என்றார் சுகுமாரன் கறார் குரலில்

 

“மாட்டேன் நான் அத்தை மடியில தான் உட்கார்ந்துப்பேன்”

 

“அவ மடியிலே உட்கார்ந்து கட்டும் நீங்க சொல்ல வந்தது சொல்லுங்க அண்ணா”

 

“அவள வச்சுட்டு சொல்ல முடியாதும்மா நிலைமையோட சீரியஸ்னஸ் உணர்ந்து அவளை அனுப்பி விடு. உன் கிட்ட நான் தனியா பேச வேண்டியது இருக்கு”

காவ்யா விளையாட ஓடியதும். 

 

“உனக்கு அறிவிருக்கா மந்தாகினி. கோர்ட்டில் நாகேந்திரன் தனக்கு முறையாகப் பிறந்தவன் அப்படின்னு மட்டும் நிரூபிச்சிருக்கார். இன்னும் அவரை சீண்டின, செல்லாத திருமணத்தில் பிறந்தவன் அபிராம்னு சொன்னால் என்ன செய்வ? இதெல்லாம் அபிராமுக்குத் தெரிஞ்சா என்னாகும்?” என்று நன்றாக தங்கையிடம் கத்தினார் சுகுமாரன். 

 

புத்திமதியை அப்படியே ஏற்றுக் கொண்டால் அது மந்தாகினியாக இருக்க முடியாதே.  சுகுமாரன் சொன்னதின் அர்த்தத்தை உணர்ந்து அதன் பின்னர் குறுக்கு வழியை நாடினாள். அவினாஷ்  என்று ஒருவன் உயிரோடு இருந்தால்தானே அபிராமுக்கு போட்டியாக வருவான். அவனையே  இல்லாமல் செய்து விட்டால்…

 

நம்பூதிரி சொல்லி இருக்கிறான். ஊடு என்று பொம்மைகளை வைத்து பூஜைகளை செய்தால் ஒருவன் கொஞ்சம் கொஞ்சமாக விபத்து போல் இறந்துவிடுவார்களாம் அல்லது தானே தற்கொலை செய்து கொள்வார்களாம். இந்த காரியத்திற்காக  இரவு பகலாக பூஜை செய்ய வேண்டியது இருக்கிறது.  அவளுக்கு வேண்டிய வாழ்க்கையைத் தந்த மந்திரவாதம் இதையும் நிறைவேற்றினால் அவினாஷ் என்ற ஒருவன் இல்லாமலேயே போய்விடுவான். 

 

அபிராமை விடுமுறைக்கு வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

 

வேலையாட்களை எல்லாம் அப்புறப்படுத்தினாள். பூஜைக்கான வேலைகளைத் தொடங்கினாள். 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 16தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 16

அத்தியாயம் – 16   விடியலில் எழுந்த செம்பருத்தி அவளது டைரியில் சம்பவங்களை எழுதிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சோதனைகள் அவற்றை கடந்த விதம் எல்லாம் அதில் பதிக்கப் பட்டிருந்தன.    பின் ஒரு காலத்தில் நான் சுயசரிதை எழுதினா

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37

அத்தியாயம் – 37   அபிராம் வளர்ந்தான். அவன் வளர வளர நாகேந்திரனுக்கும் மந்தாகினிக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது.    அதற்குக் காரணம் மங்கை என்று மந்தாகினி சொன்னாலும் மந்தாகினியின் ஆசை என்று அடித்து சொல்வார் நாகேந்திரன்.    சிலரை

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35

அத்தியாயம் – 35  ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள் மந்தாகினி. நாகேந்திரன் ராஜ வம்சத்தினன் என்பதாலா? அது மட்டும் அவளது ஆத்திரத்திற்குக் காரணமில்லை. அவன் பட்டாபிஷேகத்தினை ஒட்டி அவளுக்கு இழைக்கப்பட்ட அவமானம்தான். பட்டாபிஷேக விழா முடிந்து  நகர்வலமாக சென்று அவர்களது குலதெய்வமான முருகப்