Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 38

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 38

அத்தியாயம் – 38

சுகுமாரனுக்கு மந்தாகினியை பார்க்கவே பயமாக இருந்தது. 

“சுகுமாரண்ணா! சுகுமாரண்ணா!” என்று தன்னை சுற்றி வரும் அந்தக் கள்ளம்  கபடம் இல்லாத குழந்தை அல்ல இவள். பணத்தாசை, பதவி ஆசை, ராணி ஆசை என்று தனது ஆசையினாலேயே கொஞ்சம் கொஞ்சமாய் அழிவிற்குச் சென்று கொண்டிருக்கும் ஒரு பரிதாபமான பிறவியாக தோன்றினாள்.

அவளது யோசனைகள் திட்டங்கள் எல்லாம் அநியாயம் என்பதற்கு அடுத்தபடியாக கொடூரமாகவே தோன்றின அவருக்கு. இப்பொழுதெல்லாம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள எந்த நிலைக்கும் செல்லத்  தயாராக இருந்தாள்.

மந்தாகினியின் மகன் அபிராமை நினைத்தால் இன்னமும் பாவமாக இருந்தது. அவனை பாகமங்கலத்தின் வாரிசாக்க வேண்டும் என்ற வெறியில் யாரோ மந்திரவாதி சொன்னான் என்று  அவனை பூஜையறையில் இரவு முழுவதும் வாழை இலையில் படுக்க வைப்பதும். பூஜை அறைக்குள்ளே வலுக்கட்டாயமாகத் தள்ளி  அடைத்து வைப்பதும், இன்று அவளது போக்கே ஒரு மனநோயாளியைப்  போல தோன்றியது.

நாகேந்திரன் தொழில் விஷயமாக ஊர் சுற்றுவது இவளுக்கு வசதியாகிவிட்டது. சமீப காலமாக இவளைத் தவிர்க்கவே அவர் வீட்டை விட்டு கிளம்பி விடுகிறாரோ என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. 

சென்ற முறை சுகுமாரனுக்கு ஒரு இக்கட்டான நிலை. நாகேந்திரனின்  திருநெல்வேலி சொத்து ஒன்றின் லீஸைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது. வழக்கமாக பாகமங்கலத்தில் இளைய ஜமீன் மகேந்திரனின் பொறுப்பில்தான் இவை நடைபெறும். இந்த முறை பொறுப்பு இவரிடம் ஒப்புவிக்கப் பட்டிருந்தது. 

பாகமங்கலம் குடும்பத்தினரைப் பார்க்கும்போதே அவருக்கு மனதில் குத்துகிறது. மனசாட்சியை அடக்கி வைத்துவிட்டு வேலை செய்து வருகிறார். மந்தாகினியின் தயவு இல்லையென்றால் இன்னமும் பஜாஜ் ஸ்கூட்டரில்தான் சுற்றிக் கொண்டிருப்பார். 

இப்போது கடனெல்லாம் அடைத்துவிட்டு சொந்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். அதனால் இப்போதைக்கு அவளுக்குத் துணையாக நிற்போம். அவளைத் தப்பு செய்யாமல் முடிந்த வரை தடுப்போம். 

மனதை சமாதானப் படுத்திவிட்டு சென்றவருக்கு வக்கில் வீட்டில் பார்த்த பத்திரங்கள் தலையில் இடியை இறக்கியது. என்ன இந்த மங்கையின் பெயர் மங்கையற்கரசி வீரபாகு வா?

வக்கில் வேறு நக்கலாக “உங்க மந்தாகினியை சந்தித்ததா சொல்றதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே மங்கையற்கரசி  சட்டப்படி மனைவி ஆயிட்டாங்க. இதை சொல்லி உங்க தங்கை கல்யாணம் செல்லாதுன்னு சொல்ல ஒரு நிமிஷம் போதும். இன்னமும் இந்த குடும்பத்தில் பெண் பாவம் அது இதுன்னு நம்பிட்டு இருக்காங்க”

“அவங்க மட்டும் இரக்கப்படலைன்னா  மந்தாகினியோட நிலமை என்னாயிருக்கும்னு நினைச்சுப்பாருங்க. மங்கையோட கல்யாணம் நடந்தது யாருக்கும் தெரியாது. ஆனால் என் தங்கையின் மானம் பத்திரிகை வரை வந்துருச்சே. அவளை நீங்க இப்ப உயிரோட பார்த்திருக்க முடியாது”

“என்னவோ நடந்தது நடந்துருச்சு. செலவுக் கணக்கை பாக்கும்போது உங்க தங்கை கூட இந்த புது பணத்தையும் பதவியையும் என்ஜாய் பண்ற மாதிரித்தான் தெரியுது. அதுக்கு அடுத்தபடியா பாகமங்கலத்துக்கு அடி எடுத்து வைக்கிறதா வர்ற செய்திதான் சரியில்லை.  ஏன்னா அதுக்கு ஆசைப்படும் தகுதி உங்க வீட்டில் யாருக்குமே இல்லை.  நீங்க மங்கைக்கு விடுதலை தந்துட்டு வேற நல்ல வாழ்க்கையா அமைச்சுத் தாங்க. உங்க வீட்டில்  மனசாட்சின்னு ஒன்னு இருந்தா அதை மட்டும் செய்ங்க” என்று சொல்லி அனுப்பினார். 

மகேந்திரன் இந்த செய்தியைத் தெரிவிக்கத்தான் தனக்கு இந்த வேலையைத் தந்து வலுக்கட்டாயமாக வக்கீலை சந்திக்க வைத்திருப்பார் போலிருக்கிறது. ஐயோ இந்த வக்கீல்களும் டாக்டர்களும் இருக்கிறார்களே, பயங்கரமான உண்மையைக் கூட வாழைப்பழத்தில் ஊசியைப் போல இறங்குகின்றனர். 

இப்போது இந்த உண்மையை மந்தாகினியிடம் சொல்லி மங்கையை அவளது ஆட்டத்திலிருந்து விலக்கி வைக்க சொல்ல வேண்டும். இவள் பணத்திற்கு ஆசைப்பட்டாள், நல்ல பணக்காரனைக் கட்டிக் கொள்ள நினைத்தாள். ராஜவாழ்க்கையே கிடைத்திருக்கிறது. 

கஷ்டப்பட்டதை சொல்லிக் காட்டக்கூடாது இருந்தாலும் மந்தாகினி விஷயத்தில் முன்பு உணவுக்கே கஷ்டம். இப்போது இவ்வளவு கிடைத்தும் இன்னும் இன்னும் என்று கேட்பது பேராசை அல்லவா?

பதமாக மந்தாகினியிடம் சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. 

மங்கைதான் நாகேந்திரனின் முதல் மனைவி. இவர்களது திருமணம் செல்லுமா என்பது கூட சந்தேகம்தான் என்று சொல்லி முடிக்கும் வரை உணர்ச்சிகளைக் காட்டாமல் அமர்ந்திருந்த மந்தாகினி அதன் பின் சுகுமாரன் அங்கிருப்பதையே மறந்து சிந்தனையில் ஆழ்ந்தாள். 

யோசிக்கும்போது அவளது முகம் எத்தனையோ பாவனைகள் காட்டின. கண்களை சுருக்கினாள், கையால் நெற்றியைக் குட்டிக் கொண்டாள். கண் மூடி சாய்ந்து கொண்டாள். அரை மணி நேரம் ஆனது. முள்ளின் மேலே நிற்பது போல சுகுமாரன் அவதிப்பட்டார். 

“ஹா…ஹா…. ஹா….” பயங்கரமாக சிரித்தாள். 

“மந்தாகினி உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா?” 

“பைத்தியம் இல்லை சுகுமாரண்ணா… சந்தோஷம்…  இது சந்தோஷ சிரிப்பு”

“உன் வீட்டுக்காரன் இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிருக்கான். எப்படி உன்னால சிரிக்க முடியுது?”

“என்ன சொல்றிங்க… இவ்வளவு நாள் இந்த மங்கை யாரைக் கல்யாணம் பண்ணிக்குவாளோ? சொத்து கை விட்டுப் போயிருமோன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா? 

நாகேந்திரன் நான் மங்கை பொண்ணு பாக்கப் போக விடாம மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள தடுத்து  நிறுத்தின தகவல் தெரிஞ்சும் வந்து அடிக்கல, திட்டல ஆனால் என்கிட்டே, ‘நம்பிக்கை துரோகம் செஞ்சுட்டம்மா… இனிமேல் உன்கிட்ட எதையும் பகிர்ந்துகிறதா இல்லை’ன்னு சொல்லிட்டார். அதிலிருந்து மங்கை என்ன ஆனாள்? பாகமங்கலம் என்னாச்சுன்னு நினைச்சு  எவ்வளவு பயந்துட்டு இருக்கேன் தெரியுமா. இப்பத்தான் தெரியுது அவளோட வாழ்க்கை பிடி என் கையில்”

“என்ன சொல்ற? அவதான் முதல் பொண்டாட்டி”

“இருக்கலாம். ஆனால் எனக்குத்தான் பிள்ளை இருக்கு. என் அபிராம்தான் இந்தக் குடும்பத்துக்கு வாரிசு”

“மங்கை?”

“மங்கைக்கும் இவன்தான் வாரிசா இருக்கணும்”

“நாகேந்திரன் அவளை அப்படியே விட்டுட மாட்டார். விடுதலை தந்து வேற வாழ்க்கை அமைச்சுத் தருவார்”

“அது நடக்கக் கூடாது. அவ கடைசி வரையிலும் ஒன்னு கல்யாணமாகாம இருக்கணும். இல்லை நாகேந்திரன் மனைவியா இருக்கணும்”

“போதும் மந்தாகினி. உன்னோட பேராசைக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. அந்தப் பொண்ணு பாவம். அவளோட பாவம் நம்மை சும்மா விடாது”

“அப்ப நான் பாவம் இல்லையா சுகுமாரண்ணா… என் வாழ்க்கை மட்டும் அடுத்தவங்க போடுற பிச்சைலயே நடக்கணுமா? எங்கப்பாவால எத்தனை இடத்துக்கு மாறி இருக்கோம்? உங்க அம்மா கூட எப்படி முகத்தை சுளிச்சுட்டு எனக்கு சாப்பாடு போடுவாங்க தெரியுமா? 

இந்த பணத்தாலதானே, இந்தப் பதவியாலதானே நான் கஷ்டப்பட்டேன். இப்ப அதை நான் அனுபவிச்சுட்டுப் போறேனே. பரம்பரை பரம்பரையா ராஜகுடும்பம்னு உக்காந்து சாப்பிடுறவங்க கொஞ்சநாள் நம்மை மாதிரி உழைச்சுத்தான் கஞ்சி குடிக்கட்டுமே. 

அவங்களுக்காக இரக்கப்படாதே. ஒருத்தன் ராஜாவா மாற எத்தனையோ பேரைக் காயப்படுத்திட்டுத்தான் அந்தப் பதவியில் ஏறி இருப்பான். இப்ப கடவுள் என் மூலமா தண்டனை தர்றார்னு நினைச்சுக்கோ

ஒரு வாழ்க்கை பாடத்தை நீ புரிஞ்சுக்கோ சுகுமாரண்ணா. நீ நல்லா வாழணும்னு ஆசைப்படு, மாறா நல்லவனா வாழணும்னு நினைச்சே நாய் படாத பாடு படணும்” என்று அவருக்கே புத்தி சொன்னாள்..

“நீ என்ன சொன்னாலும் எனக்கு சரியாப்படல. சப்பைக்கட்டு மாதிரிதான் தோணுது”

நீ இனிமே எனக்கு உதவ மாட்ட போலிருக்கே என்பது போல பார்த்தவள் சுதாரித்துக் கொண்டு

“சரி, நீ சொல்றதை யோசிக்கிறேன். அந்த மங்கை இப்ப எங்க இருக்கா? நம்ம வேணும்னா  போய் மன்னிப்பு கேட்கலாம்”

“அவ இன்னும் பம்பாய்லதான்  இருக்கா” 

மெதுவாக வக்கீலிடம் பேசியபோது அவர் அறிந்த விஷயங்களைப்  பற்றிய தகவல்களை வாங்கினாள். 

“ இப்ப நீ வீட்டுக்குப் போயி தூங்கு. அடுத்த வாரம் ஒரு நாள் போயிட்டு வரலாம்”

அவர் வீட்டிற்கு சென்றதும். பயங்கரமாக நடந்து கொண்டே யோசித்தாள். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தூங்கினாள். 

மறுதினம்  ஒருவனைக் கூப்பிட்டு அனுப்பினாள். அவன் அவளுக்குப் பழக்கமான நம்பூதிரியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். 

“இந்த போட்டோவைப் பிடி. இவள் பம்பாய்ல இந்த கல்லூரியில் படிக்கிறா. இவளைப் பின் தொடர்ந்து போயி ஆள் ஆரவாரம் இல்லாத இடத்தில் கத்தியால வயித்தில் குத்திடு”

“கத்தியால நெஞ்சில் குத்தலாமே?”

“முட்டாள் வயித்தில்தான் குத்தணும். ஒரு வேளை அவ பிழைச்சுகிட்டா கூட அவளால் குழந்தை பெத்துக்க முடியக்கூடாது. அது மாதிரி உன் வேலை இருக்கணும்”

அந்த நபர் சென்றவுடன் தனக்குள் சொல்லிக் கொண்டாள். “சுகுமாரண்ணா… உனக்கு இன்னொரு உண்மை சொல்லட்டுமா… ராணித்தேனீ ஒரே சமயத்தில் ஒண்ணே ஒன்னு மட்டும் உருவாகாது. பல தேனீக்களை  ஒரே சமயத்தில் ராணித்தேனீயாக்க முயற்சி நடக்கும். 

இதில் ஒரே ஒரு ராணித்தேனீ மட்டும் முந்திகிட்டு வெளிவரும். வெளிவந்த ராணித்தேனீயோட முதல் வேலை என்ன தெரியுமா? மத்த ராணித் தேனீகளை வெளியவே வரவிடாம  கொல்லுறதுதான். அதுக்கு பேர் கொலை இல்லை. இயற்கையோட கணக்குப்படி சர்வைவல். அதைத்தான் நானும் செய்றேன்”

மந்தாகினியின் திட்டம் பலித்துவிட, மங்கையற்கரசியை கூலிப்படையை சேர்ந்த இருவர் வயிற்றில் பலமாகக் குத்தினார்கள். ஆனால் சுதர்சன் தக்க சமயத்தில் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்துக் கொண்டார் மங்கையற்கரசி. ஆனால் அவரது ஓவரியில் ஒன்று முழுமையாக சேதமாகி விட்டது. வயிற்றிலும் பல இடங்களில் சேதங்கள். ஆறு மாதங்கள் அரும்பாடுபட்டு அவளை ஆளாக்கி கொண்டுவந்தார்கள். 

கொச்சிக்கு சென்று மந்தாகினியிடம் கடுமையான குரலில்  விசாரித்தார் நாகேந்திரன். ஆனால் அவளோ அசராமல் சாட்சியம் கேட்டாள் அவள்.

“உயிர் பிழைச்சுட்டா இல்லையா. அதுக்கப்பறம் என்ன வேணும்? அவளை கத்தில குத்தினதில் குழந்தை பிறக்காதுன்னா அதுக்காக நான் என்ன செய்றது? எதுக்காக என் மேல பழி போடுறிங்க?”

 மங்கையற்கரசியைத் திருமணம் செய்து வைப்பதற்காக அவர்கள் அனைவரும் திட்டம் போட்டு அவள் மீது பழி போடுவதாகக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.

ஓரளவு விவரம் தெரிய ஆரம்பித்திருந்த அபிராமைக் கட்டிக் கொண்டு ஓ வென்று தலைவிரி கோலமாய் அழுகையைத் தொடங்க, அழுதுகொண்டே அம்மாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டு அப்பாவைப் பார்த்த அபிராமின் கண்களில் கோபம். 

“நீங்க அம்மாவை அடிச்சிங்களா?” என்று மழலை மொழியில் கேட்கும் மகனிடம் எப்படி தன் நிலையை விளக்குவது?  

கைகளைக் கட்டிக்கொண்டு மந்தாகினியை உறுத்துப் பார்த்த நாகேந்திரன் சொன்னார் “நான் அவளுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லைன்னு சொல்லவே இல்லை. உனக்கெப்படி தெரியும்? சோ, நீதான்… நீதான்… மங்கையோட இந்த நிலைக்குக் காரணம் இல்லையா?”

“அவளுக்காக நீங்க ஏன் வக்காலத்து வாங்குறிங்க?”

“அவள் என் மாமா பெண். என் மாமா எனக்குத் தகப்பனை விட மேலானவர். என் கதை முழுக்க உனக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைக்க உனக்கு எப்படி மனசு வந்தது மந்தாகினி? உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா?”

“எனக்கென்னமோ அவ மாமாவின் பெண் என்பதைவிட மனைவி என்கிற உரிமையும், கடமையும்தான் உங்களுக்கு அதிகமா இருக்கிறதா படுது”

“அதுதான் நீ செஞ்ச கொடூரமான செயலுக்குக்கான விளக்கமா? இதை என்னிடமே கேட்டிருக்கலாமே… மங்கைக்கு விடுதலை தந்து வேற இடத்தில் திருமணம் நம்ம ரெண்டு பேருமே செஞ்சு வச்சிருக்கலாமே. அவளோட எதிர்கால வாழ்க்கையை அழிக்க நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ”

சற்று குரலைத் தணித்தாள். “அபி, நீ போயி விளையாடு. நான் அப்பாகிட்ட முக்கியமான விஷயம் பேசணும்”

நாகேந்திரனிடம் திரும்பினாள். 

“இப்போது அவளுக்கு நீங்க மணவிலக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை”

“மங்கைக்கு எதோ வாழ்க்கையை அமைச்சுட்டுப் போறா. அதையும் நாம ஏன் தடுக்கணும்”

“அவளுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஆனால் அவள் உங்களுக்கு மனைவியா இருந்தால்தான் நீங்க பாகமங்கலத்து ராஜா. அபிராம் அடுத்த ராஜா… விவாகரத்து செஞ்சுட்டா இந்த வாரிசு போட்டியில் உங்க தம்பி மகேந்திரனின் மகனும் வந்துடுவான்”

“ஆக மங்கை அவளுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை, சந்தோஷம், குழந்தை இது எல்லாம் தாரைவார்த்துக் கொடுத்துட்டு ஒரு உயிரற்ற ஜடமா வாழ்ந்து மடியணும்”

“அப்படி சொல்லலையே. அவளுக்கு இப்ப என்ன குறை. உங்களுக்கு மனைவின்னு ஒரு பதவி. மனசார என் கணவனை விட்டுத் தரும் நான். பெறாத பிள்ளையாய் அபிராம். அபிகிட்ட நீதான் மங்கையை கவனிச்சுக்கணும்னு சொல்லி வளர்க்கலாம். இன்னமும் பாகமங்கலத்து ராஜ குடும்பம்னு ஒரு கவுரவம். இப்படி அவளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை நினைச்சு சந்தோஷமா வாழலாம்”

“இதையே நானும் உன்கிட்ட சொல்லலாமே… உனக்கு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை நினைச்சு நீ சந்தோஷமா வாழ்ந்திருக்கலாமே. ஏன் சுதர்சன் மூலமா எனக்கும் மங்கைக்கும் நடக்க இருந்த கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தின. சூழ்ச்சி செய்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?”

திகைத்து போனாள் மந்தாகினி. இது பழங்கதை அல்லவா… இந்த உண்மை எப்படி நாகேந்திரனுக்குத் தெரிந்தது. இனி அவளது வாழ்க்கை…

“சுதர்சன்தான் மங்கையைக் காப்பாத்தி பிழைக்க வச்சது. உண்மை ஒரு நாள் வெளிய வந்தே தீரும் மந்தாகினி. ஒருவரை அழிச்சு இன்னொருத்தர் வாழ்ந்தா சரித்திரமே இல்லை. உன் முகத்தை பார்க்கவே வெறுப்பா இருக்கு. ஆனாலும் அபிராமிற்காக இந்த விஷத்தை விழுங்கி இருக்கேன். நான் கிளம்புறேன்”

“எங்க கிளம்புறிங்க? எனக்கும் என் மகனுக்கும் பதில் சொல்லுங்க”

“நீயே சொல்லிட்டேயே மங்கை என் மனைவின்னு. எனக்காகவே வாழ்ந்திட்டு இருக்க அந்தப் பெண்ணை  உயிரோட   நடமாட வைக்க இன்னும் ஏகப்பட்ட சிகிச்சை தர வேண்டியிருக்கு. என் மனைவி மங்கை உயிரோட இருக்கணும். நல்லபடியா குணமாகணும்னு வேண்டிக்கோ. அவளுக்கு உன்மூலமா இன்னொரு முறை ஏதாவது நடந்தது… அபிராம் அனாதை ஆயிடுவான்”

கடகடவென மாடிப்படியிலிருந்து இறங்கி இருளில் மறைந்து அவர் சென்ற திக்கை வெறித்து நோக்கியபடி நின்றாள் மந்தாகினி. 

கண்விழித்துப் பார்த்த மங்கையின் முன் ஒரு பெண் சுடிதார் அணிந்து கொண்டு குட்டையாக முடியை வெட்டிக் கொண்டு நின்றாள். அவளது முகமும், கழுத்து எல்லாம் ஆழமாக வெட்டுக் காயம். 

“நீ… நீ… “

“மங்கை, நம்ம லீலாம்மா… “ 

“முகத்தில் என்ன காயம்?”

“ போன வாரம் பாகமங்கலம் போயிருந்தேன். அப்ப குடும்பத்தில் தகராறு. ஜெயன் வெட்டிட்டான். ”

ஜெயன் லீலாம்மாவின் கணவன். 

“அவ வீட்டில் இருந்தவங்க”

“அவங்களையும் வெட்டிட்டான். ஒருத்தர் கூட உயிரோட இல்லை. இவளை மட்டும்தான் என்னால காப்பாத்திக் கூட்டிட்டு வர முடிஞ்சது”

அவரது கண்களில் என்ன புரிந்து கொண்டாரோ…

“அவ வாழ்க்கை”

“இனி நம்ம கூடத்தான்மா…”

“நம்மன்னா… “

“நீ, நான், மாமா, நம்ம கூட இனி இவளும் ஒருத்தி”

“உங்க மனைவி…”

“மங்கையற்கரசி வீரபாகு நீதானே? அப்ப நீதானே என் மனைவி”

“வேண்டாம் அத்தான். நான் இப்படியே இருந்துடுறேன். படிப்பு, வேலை இது போதும்”

“உனக்கு உரிமையானதை நீ கேட்டு வாங்கணும் மங்கை”

“இருந்தாலும்…”

“மந்தாகினிக்குத்தான் பணம் மட்டும் போதும். ராஜாவா இல்லாத நான் தேவையே இல்லை. ஆனால் நீயும் அப்படியே சொல்றியே”

“நானா? எப்ப அப்படி சொன்னேன்?”

“உனக்கும் படிப்பு மட்டும் போதும் இல்லையா? நான் வேண்டாமில்ல”

“அப்படியெல்லாம் இல்லை அத்தான். உங்க வாழ்க்கையை மந்தாகினியோட  நான் பங்கு போட விரும்பல”

“ஆனால் காலம் இப்படித்தான் நடக்கணும்னு விதிச்சிருக்கே மங்கை. சரி, எதையும் யோசிக்காத… இப்ப படுத்துத் தூங்கு”

மங்கையைப் பார்க்க வந்த சுதர்சன் நாகேந்திரனிடம் கேட்டான் “மந்தாகினியை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை. இனி என்ன செய்யப்போற? அவளை விவாகரத்து செஞ்சுட்டு மங்கை கூட வாழப்போறியா?”

“இல்லை… அவ விவாகரத்து தரமாட்டா… “

“அப்பறம்”

“செல்லாத திருமணத்தில் இறுதிவரை வாழுறதுதான் மந்தாகினிக்கு நான் தரும் தண்டனை. எனக்காக நீ ஒரு உதவி செய்யணும் சுதர்சன். சுகுமாரன் மூலமா வீட்டில் அபிராமைப் பாத்துக்க நம்பிக்கையான ஆளை ஏற்பாடு செய்யணும்”

“அவர் மந்தாகினியின் அண்ணன் இல்லையா?”

“ஆமாம் ஆனாலும் எனக்குத் தெரிஞ்சு கொஞ்சம் மனசாட்சி இருக்கவர். அவளோட கொலை முயற்சி இதெல்லாம் அவரோட பங்கில்லாம இவளே செஞ்சுருக்கான்னு நினைக்கிறன். அது தவிர மந்தாகினி அவரை ஓரளவு நம்புவா… “

“சரி, நானே நேரில் போயி பாத்துட்டு வரேன். மந்தாகினியை சந்திச்சு தனிப்பட்ட முறையில் எச்சரிச்சுட்டு வர்றேன். 

ஆனால் மங்கையோட நிலை என்ன?”

“தெய்வாதீனமா மங்கைக்கு ஒரு ஓவரிதான் கத்திக்குத்தால்  பாதிப்படைஞ்சிருக்கு.மற்றொரு ஓவரி காப்பாத்தப்பட்டிருக்கு. கர்பப்பைல கூட சில காயங்கள் இருக்கு. இந்த நிலமைல மங்கையே மனசு மாறி சம்மதிச்சாலும் அவளைத் திருமணம் செய்துக்க தகுதியான நபர்கள் முன் வருவது கஷ்டம். 

அதனால… “ சற்று இடைவெளி விட்டார். 

ஒரு பெருமூச்சுடன் “காலம் எப்படியோ எனக்கும் மங்கைக்கும் முடிச்சுப்  போட்டு இணைச்சிருக்கு. அதை நான் அப்படியே ஏத்துக்கிறதா முடிவு செஞ்சுட்டேன். இனி மங்கையும் என் மனைவிதான். 

மங்கையை குணப்படுத்த லண்டனுக்குக் கூட்டிட்டுப் போறேன். எந்த மங்கைக்கு குழந்தை பிறக்கக் கூடாதுன்னு இத்தனை கிரிமினல் வேலை செஞ்சாளோ அந்த மங்கைக்கு ஒரு வாரிசு வேணும். என்னோட பிரச்சனைகளை எல்லாம் தீர்க்க ஒரு வாரிசு வருவான்”

லண்டனில் மகப்பேறு மருத்துவர்களின் முயற்சியால் அதி நவீன டெக்னாலஜியின் உதவியுடன் மங்கைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

நாகேந்திரனின் வாக்கு பலித்தது. மருத்துவர்களின் விடா முயற்சியால் மங்கைக்கு அழகிய மகன் பிறந்தான். எத்தனையோ சூழ்ச்சிகள், எதிர்ப்புகள் மற்றும் சதிவேலைகளைத் தாண்டி மங்கைக்கும் தனக்கும்  பிறந்த மகனைத் தூக்கிக்  கொஞ்சினார் நாகேந்திரன். 

“நீ எந்த சக்தியாலும் அழிக்க முடியாதவன்,தீமையை நாசம் செய்ய வந்தவன். அதனால உன் பெயர் அவினாஷ்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 4தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 4

அத்தியாயம் – 4   ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு முகத்தையும் தலைமுடியையும் சீர்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்  செம்பருத்தி. அப்படியே பாத்ரூம் வழியாக ஓடிப் போகக் கூட முடியவில்லை. ஜன்னல்கள் இல்லை, இருந்த சிறு ஜன்னலில் இவள் நுழைந்து

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 1தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 1

அன்புத் தோழமைகள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் அனைவருக்கும் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும்  அமைய வாழ்த்துக்கள். செம்பருத்தி – இது தான் கதையின் பெயர், நாயகியின் பெயர். நாம் தினமும் பார்க்கும் ஒரு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 39தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 39

அத்தியாயம் – 39   அவினாஷ் பிறந்ததை சில வருடங்களுக்கு மட்டுமே நாகேந்திரனால் மந்தாகினியிடமிருந்து மறைக்க முடிந்தது. அதுவும் முதல் ஒன்றிரண்டு வருடங்கள் லண்டனிலேயே வளர்ந்தான். அதன்பின் மங்கை பாம்பாயில் தனது வேலையைத் தொடர விரும்பினார். அதுவரை அவர்களுடன் தங்கி லண்டனில்