அத்தியாயம் – 37
அபிராம் வளர்ந்தான். அவன் வளர வளர நாகேந்திரனுக்கும் மந்தாகினிக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது.
அதற்குக் காரணம் மங்கை என்று மந்தாகினி சொன்னாலும் மந்தாகினியின் ஆசை என்று அடித்து சொல்வார் நாகேந்திரன்.
சிலரை சில நாள் ஏமாற்றலாம். பலரைப் பல நாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது அல்லவா? நாகேந்திரன் விழித்துக் கொண்டார்.
முதல் விழிப்பு மங்கைக்கான வரனை நாகேந்திரன் பார்க்க ஆரம்பித்ததும் தொடங்கியது.
மங்கை முதுகலை முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கல்யாணம் குழந்தை இதில் எல்லாம் நாட்டம் இல்லை. வெறியோடு படித்துக் கொண்டிருந்தாள். எல்லாவற்றிலும் முதல் மாணவி, தங்கப் பதக்கம் என்று அடித்து தூள் கிளம்பினாள். இவ்வளவு அறிவுள்ள ஒரு பெண்ணை குடும்பப் பொறுப்பு என்று சொல்லி வீட்டில் அடைக்க இருந்தோமே என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டார்.
மங்கையிடம் அவருக்கு சில வருத்தங்கள் கூட இருந்தன. படிக்கும்போதே சிறு சிறு வேலைகளையும் பார்த்தாள். காலடி எடுத்து வைக்கும் இடமெல்லாம் அவளுக்கு மெத்து மெத்தென்று இருக்க வேண்டும் என்று காஷ்மீரத்துக் கம்பளத்தை விரித்திருக்கும் அரண்மனையில் வசித்தவள், தட்டச்சு செய்து விரல் வலி என்று சொடக்கு போட்டுக் கொண்டிருப்பது அவருக்கு மிகவும் மனக்கஷ்டத்தைத் தந்தது.
“இதெல்லாம் தேவையாம்மா? நீ எப்படி வளர்ந்த பெண். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா”
“அத்தான், அதெல்லாம் அப்பாவோட பரம்பரை சொத்து. டைப் அடிச்சு நான் சொந்தமா சம்பாரிச்ச பணம் இருபத்தி அஞ்சு ரூபாய். நிஜம்மா அவ்வளவுதான் என் தகுதி. அதை இன்னமும் உயர்த்திக்க வேண்டாமா?”
அடுத்து சிறிய பிளாட் ஒன்றை வாடகைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டார். மங்கையை இப்படியே விடக்கூடாது. நல்லவனாகப் பார்த்து கல்யாணம் செய்து புகுந்த வீட்டிற்கு அனுப்பிவிட வேண்டும்.
நாகேந்திரன் அவரது நட்பு வட்டாரத்தில் மங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். உறவினர்களில் சில வரன்கள் இருந்தும் அவனது மாமா பூபதி, மங்கையின் தந்தை அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அவனுக்கே அவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. ஏனென்றால் பூபதி சிரத்தை எடுத்து மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகத் தெரியவில்லை. அதனால் நாகேந்திரன் தனது தம்பி மகேந்திரனிடம் மங்கைக்குத் திருமண ஏற்பாடு செய்யச் சொன்னால் முறைக்கிறான்.
நாகேந்திரன் மட்டுமல்ல மகேந்திரன் கூட காலாகாலத்தில் திருமணம் செய்து கொண்டு ஒரு பையனையும் பெற்று விட்டான். நம்மை மாதிரியே மங்கையும் குடும்பம் குழந்தை என்று இருந்தால்தானே அவளுக்கும் பாதுகாப்பு. மாமாவுக்கும் நிம்மதி.
‘ராஜா பட்டம்’ வேறு முள்ளாய் குத்துகிறது. சொத்துக்களைத் திருப்பி எழுதித் தருகிறேன் என்று சொன்னால் ‘கொடுத்ததைத் திருப்பி வாங்கும் பழக்கம் நமது பரம்பரைக்கே இல்லை’ என்று சொல்கிறார். வீட்டில் இருக்கும் பணப்பேய்க்கு இது தெரிந்தால் அவரே சொல்கிறாரே நீ எதற்குத் தர வேண்டும் என்று தகராறு செய்யும்.
மாமா வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மங்கையின் நிலை அவரது ஆரோக்கியத்தை பாதித்திருந்தது. உடல் நிலை முன்புக்கு இப்போது வெகுவாய் தளர்ந்திருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டினால் ‘மங்கை உனது பொறுப்பு. எனக்கு என்ன நேர்ந்தாலும் நீ பார்த்துக் கொள்வாயல்லவா’ என்று கேட்கும் போது யாரோ கத்தியால் இதயத்தைக் குத்திக் கிழிப்பதைப் போன்ற வலி ஏற்படுகிறது.
இதை எல்லாம் நினைக்கும்போதே தனது குடும்பமே மாமா வீட்டில் ஒட்டுண்ணியாக வாழ்வதைப் போல அருவருப்பாய் இருந்தது நாகேந்திரனுக்கு.
அதனால் தானே மங்கையின் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். எப்படியாவது இந்த கள்ளமில்லா பெண்ணை நன்றாக வாழ வைப்பேன். ஒரு நான்கைந்து வரன்களை இதுவரை பார்த்தாகிவிட்டது. சிலர் பெண் பார்க்க வருவதாகக் கூட சொல்லி இருந்தனர். இருந்தும் ஒன்று கூட கை கூடவில்லை. கடைசி நேரத்தில் எப்படியோ தட்டிப் போயிற்று.
நல்லவேளை எல்லா முன்னேற்பாடுகளையும் முடித்துவிட்டு, இன்ப அதிர்ச்சியாக மணமகனை மாமாவின் முன்பும் மங்கையின் முன்பும் நிறுத்தலாம் என்றெண்ணி தகவல்களை மனைவியைத் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இல்லை என்றால் இன்னொரு ஏமாற்றமாக மங்கைக்கு இருந்திருக்கும்.
மந்தாகினிக்குக் கூட பணத்தின் மேல் கொஞ்சம் நாட்டம் அதிகம் என்றாலும் மங்கையின் திருமண விஷயத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறாள். மனிதர்களுக்கு சில பலவீனங்கள் இருக்குமல்லவா மந்தாகினிக்கு பணமும் அந்தஸ்த்தும் பலவீனங்கள்.
ஆனால் தடங்கலுக்கு காரணம் என்னன்னு தெரியலையே என்று புலம்பிக் கொண்டிருந்த பொழுது தான் சமய நேரம் கூடி வர, காரணங்கள் ஒவ்வொன்றாய் நாகேந்திரனுக்குப் புலனானது. மங்கைக்கு திருமணம் செய்வது எவ்வளவு கடினம் என்று உணர்ந்து திகைத்துப் போனார்.
ஒரு மாப்பிள்ளை மங்கையை பெண் பார்க்க வருவதாக சொல்லியிருக்க. உறுதி செய்ய அவர்களது வீட்டிற்கு சென்றபொழுது முதல்நாள் சொன்னதற்கு மாறாக இந்த சம்பந்தம் ஒத்து வராது என்றார்கள்.
“நேத்து வரைக்கும் சரின்னு சொல்லிட்டு இப்ப மறுக்கிறது சரியில்லை. உங்க கிட்ட நேர்மையில்லை” என்று முகத்திற்கு நேரே மாப்பிள்ளை வீட்டுக் காரர்களிடம் நாகேந்திரன் முகம் சிவக்க சொல்ல,
“நேர்மை இல்லாதது உங்களிடமா இல்லை எங்களிடமா? நாங்களே தன்மையா சொல்லி கல்யாணத்தை மறுக்கலாம்னு நினைச்சா எங்க மேலேயே குத்தம் சொல்றிங்களே இதுதான் உங்க நியாயமா?”
“அப்படி என்ன நேர்மை இல்லாத காரியம் செஞ்சோம்?”
“ராசி இல்லாத பெண்ணை எங்க தலைல கட்டி விடப் பாக்குறிங்களே இது நேர்மையான காரியமா?”
“ராசி இல்லாத பெண்ணா?”
“ஆமாம் உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ண நினைச்ச உடனே அவரே இறந்துட்டாராமே. அதனாலதான நீங்களும் உங்க தம்பியும் வெளிய பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டிங்க.”
“இல்லை… அவளுக்கு என் கூட தான் கல்யாணம் நிச்சயம் ஆயிருந்தது. ஆனால் அது நின்னு போனதுக்கான காரணத்தைக் கூட சொல்லியிருந்தேனே “
“அது உண்மையான்னுதானா?”
“நான் சொன்னது உண்மையில்லைன்னா வேற யாரு சொல்றது உண்மை?”
“உங்க மனைவி. அவங்கதான் இந்த உண்மையை சொன்னாங்க”
“என் மனைவியா?” அதிர்ந்தார்.
“அவங்க இங்க வந்திருந்தாங்க. அந்த மகராசி சொல்லலைன்னா எங்களுக்கு இந்த உண்மை தெரிஞ்சிருக்காது. அவங்கதான் சொன்னதுன்னு உங்களுக்குத் தெரிஞ்சா அவங்களுக்கும் மகனுக்கும் ஆபத்துன்னு சொன்னதாலதான் நாங்க உங்ககிட்ட சொல்லத் தயங்கினோம்”
பேசக் கூட முடியாமல் அதிர்ச்சியில் அமர்ந்துவிட்டார். இப்படி நெஞ்சறிய பொய் சொல்லக்கூடியவளா அவர் மனைவி? பணமும் பகட்டும் இப்படியா ஒருத்தியை ஆட்டுவிக்கும்?
“இங்க பாருங்க நாகேந்திரன். யாரோ ஒரு சொந்தக்காரப் பெண்ணை வாழ வைக்கிறதுக்காக உங்களையே நம்பி வாழ வந்திருக்கும் மனைவியை வதைப்பது சரியில்லை. இனிமேல் மந்தாகினிகிட்ட நீங்க கடுமையா நடக்க அனுமதிக்க மாட்டோம்” என்று அவரையே முறைத்தனர்.
நானா? மனைவியை வதைப்பேனா? என்ன சொல்கிறார்கள்?
காலம் நாகேந்திரனுக்கு மந்தாகினியை அடையாளம் காட்டியதுடன் நிறுத்தவில்லை. அவரைக் கட்டம் கட்டி மந்தாகினிக்குத் திருமணம் செய்து வைத்த சுதர்ஸனுக்கும் உண்மை தெரிய வேண்டிய சமயம் வந்தது.
ஒரு வேலையாக நாக்பூருக்கு சென்றவன் எதிர்பாராத விதமாக ஜம்புலிங்கத்தை சந்தித்தான்.
சுதர்சனுக்கு பல நாளாகவே குழப்பங்கள் இருந்தன. அவன் திருமணம் செய்து வைத்த மந்தாகினிக்கு அவன் எழுதிய கடிதங்கள் ஒன்றுக்கு கூட பதில் இல்லை. ‘பாவம் மந்தாகினி, அவளால் என்ன செய்ய முடியும் அந்த முரடன் நாகேந்திரனின் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள்’.
இப்படித் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டிருந்த சுதர்சனுக்கு உண்மை ஜம்புலிங்கத்தின் மூலம் விளங்கியது.
நாக்பூரில் எதேர்ச்சியாக கடைவீதியில் ஜம்புலிங்கத்தை சந்தித்தான் சுதர்சன். ஜம்புவும் சென்னையில் இருக்கும் நண்பர்கள் உடன் தொடர்பில் இல்லாத காலம். தமிழ் பத்திரிகைகள் படிக்கும் வாய்ப்பும் இல்லை. இருந்தாலும் நாகேந்திரனுக்கும் மந்தாகினிக்கும் திருமணம் நடந்து விட்டது என்பதை மட்டும் கேள்விப்பட்டிருந்தான்.
அதற்கு சூத்திரதாரி சுதர்சன் தான் என்பதைக் கூட அவன் அறியவில்லை. அவன் °டேய் சுதர்சன் எப்படி இருக்க” என்று அரவணைத்துக் கொண்டதை வைத்து சுதர்சனும் ஜம்புவுக்கு இன்னும் உண்மை தெரியாது என்பதைக் கண்டு கொண்டான்.
நண்பர்கள் இருவரும் நாக்பூரைப் பற்றி பேசிய பின்பு ஜம்புலிங்கம் ஆரம்பித்தான் “நம்ம நாகேந்திரன் எப்படிடா மந்தாகினியப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டான்? அதுவும் காதல் கல்யாணம் என்று வேற சொல்றாங்க எப்படி காதல் பண்ணி இருப்பான்?”
“எல்லாரும் காதல் பண்ற மாதிரி தான். என்ன உயிர் நண்பன் உனக்கே தெரியாம காதல் பண்ணி இருக்கான்” என்றான் சுதர்சன் வெறுப்புடன்
“மந்தாகினி காதல் பண்ணான்னு வேணும்னா சொல்லு. நாகேந்திரன் அவளை காதலிச்சானு நான் சத்தியமா ஒத்துக்கவே மாட்டேன்”
“அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ற?”
“ஏன்னா… மந்தாகினி நாகேந்திரனுக்கு எழுதின காதல் கடிதத்தை நான் தானே படிச்சேன். அவனுடைய மறுப்பை மந்தாகினி கிட்ட சொன்னதும் நான் தானே”
அன்றைய சம்பவத்தை ஜம்புலிங்கம் சொல்ல சொல்ல, சுதர்சன் அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தான்.
“பணக்கார வீட்டுப் பையன்னு தெரியும். ஆனாலும் பயங்கர சிம்பிளா இருப்பான். நாகேந்திரனுக்கு மாமா பொண்ணு கூட திருமணம் நிச்சயமாயிருந்துச்சு. அந்தப் பொண்ணுக்கு 18 வயசு ஆனதும் திருமணம் அப்படின்னு என்கிட்ட சொல்லி இருக்கான். அவனோட அப்பா பெண்களோட சகவாசத்தில் சொத்துக்கள் நிறைய இழந்துட்டதா தகவல்.அதனால பெண்களிடம் ரொம்ப ரொம்ப கவனமா இருப்பான்.
பெண்களிடம் தனியாக இருக்கிற மாதிரி சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்க கூட மாட்டான்.இந்த மந்தாகினி அவனைத் தனியா சந்தித்து பேச எவ்வளவோ முயற்சி செஞ்சா.
கடைசியா ஒருநாள் நம்ம எல்லாரும் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல விருந்துக்கு போனோமே… அன்னைக்கு கூட யாருமே தன்னைக் கூப்பிட வரலை அப்படின்னு சொன்னாளே… நானும் நாகேந்திரனும்தான் அவள் வீடு வரை கூட்டிட்டுப் போயி பாதுகாப்பா இறக்கி விட்டோம்.
அப்பவும்கூட அவ கூட தனியா போகல. ஹோட்டல்ல வேலை செஞ்ச ஒரு பெரியவங்களகூட அழைச்சிட்டு தான் போகணும்னு சொல்லிட்டான். அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையா இருப்பான்.
அன்னைக்கு இந்த மந்தாகினி என்ன செஞ்சா தெரியுமோ? அவ வீட்டு வாசல்ல ராத்திரிஅவ்வளவு நேரம் கழிச்சு இறக்கி விடுறோம், இறங்கிட்டு நாகேந்திரன் கூட தனியா பேசணுங்குறா. கைல ஒரு பரிசும் லெட்டரும் கொடுத்து இந்த நீ மட்டும் தான் படிக்கணும் அப்படின்னு சொல்லி இருக்கா.
கடைசில அதை நான்தான் படிச்சேன். நாகேந்திரனுக்கு சுத்தமா அந்த பொண்ணு மேல விருப்பமில்லை. அவனே சொன்னா பிரச்சனை பெருசாகும் என்று நினைத்து நான் தான் அந்த பொறுப்பை கையில எடுத்துட்டேன். மறுநாள் அவகிட்ட சொன்னப்ப என்ன ஆங்காரமா கத்துனா தெரியுமா”
“ஒருவேளை மனசு கஷ்டத்தில் கூடஅப்படி கத்திருக்கலாம் இல்லையா” என்றான் சுதர்சன்
“உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம் எப்படிடா இவளை நம்புறிங்க? கல்லூரியில ரெண்டு வருஷம் அவ நமக்கு ஜூனியர் ஆக இருந்திருக்கா, அவளோட நடவடிக்கைகளை பார்த்தாலே உன்னாலே அவளைப் பத்தி புரிஞ்சுக்க முடியலையா?
காலேஜ்ல எத்தனை பசங்க அவ பின்னாடி சுத்துனாங்க தெரியுமா? அதில் பணக்கார பசங்க கூட மட்டும் தான் அவ பேசுவா. பலர் கூட நானே அவளை ஹோட்டலில் பார்த்து இருக்கேன்”
“நண்பர்களா இருக்கலாம் இல்லையா ஒரு பொண்ணு மேல அனாவசியமா பழி போடக்கூடாது”
“பொண்ணு மேல பழி போடக்கூடாது ஆனா மந்தாகினி பத்தின உண்மைய சொல்லலாம். உனக்கு ஏன்டா அவ மேல இவ்வளவு கரிசனம்?
ஓஹோ… அந்த லிஸ்ட்ல நீயும் ஒருத்தன? நிராகரிச்சிருப்பாளே…. அவ இருக்குறதுலயே டாப்பான ஒருத்தனைத் தேடிக்கிட்டு இருந்தா. நம்ம செட்டில் நாகேந்திரன் தானே அது. ஆனால் அவன் ஜமிந்தார்னு நம்ம கிட்ட வெளி காட்டிக்கிட்டதே இல்லையே… எப்படி இவ கண்டு பிடிச்சு போனா?°
ஜம்புலிங்கத்தை சந்தித்து விட்டு திரும்பிய பின் சுதர்சனுக்கு நடந்த சம்பவங்கள் எல்லாம் யோசித்தபோது, தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோமோ என்ற சந்தேகம் துளிர் விட ஆரம்பித்தது. அவரது போலீஸ் புத்தியை வைத்து நன்றாக அவள் வேலை செய்த இடத்தில் விசாரித்துப் பார்த்து, தான் ஏமாற்றப்பட்டதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்.
அதனை மேலும் உறுதி செய்யும் விதமாக அடுத்த மாதமே மும்பையில் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்ள நேரிட்டது சுதர்சனுக்கு.
மும்பை தமிழ் சங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மங்கையர்கரசி என்ற பெண்ணை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக மாலையில் கல்வி கற்றுத் தருகிறாள் இந்த பெண் என்று சொன்னதும் மனமாரப் பாராட்டினான்.
“எனக்கு நண்பர்கள் பலர் அந்த ஏரியால இருக்காங்கம்மா. உனக்கு என்ன உதவி என்றாலும் தயங்காம என்கிட்ட கேளு”
ஆனால் மறுநாளே அவன் பைக்கில் சென்ற போது கண் முன்னே இருவர் அவளைக் கத்தியால் குத்தி விட்டு செல்ல, ரத்த வெள்ளத்தில் மிதந்த மங்கையைக் காப்பாற்றி, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டு, குத்திய ரவுடிகளை மடக்கிப் பிடித்து விசாரித்தான்.
அவன் பார்த்த வரை மங்கை நூல் போல சின்ன சங்கிலி மட்டுமே அணிந்த, கல்வியும் நற்பண்புகளும் மட்டுமே தனது அழகாகவும் ஆபரணமாகவும் கொண்ட பெண். எனவே இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம் வேறு ஏதோ…
பாலியல் தொழில் செய்து வரும் சிலரின் பெண்களுக்கு கல்வி கற்பிக்கிறாள் என்று சொன்னார்களே. அது பிடிக்காத யாரோ கொலை முயற்சியில் இறங்கினார்களோ?
இவர்கள் இருவரும் அம்புகள் என்று அவனுக்கு தெரியும். எய்தவன் பற்றி தெரிய வேண்டாமா?
எய்தவர் யார் என்று தெரிந்த போது அவனது இதயமே சுக்கல் சுக்கலானது. மந்தாகினிக்கு உதவி செய்வதாக நினைத்து, நாகேந்திரனைப் புதை குழியில் தள்ளி விட்டதை உணர்ந்துகொண்டான்.
மருத்துவமனையிலோ மங்கை அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, மகளின் நிலை கண்டு மாரடைப்பு ஏற்பட்டு பூபதியும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மங்கைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நாகேந்திரனிடம் கையெழுத்து வாங்கினர். அதில் திருமதி மங்கையற்கரசி வீரபாகு என்று பெயர் எழுதி இருந்ததைக் கண்டு திகைத்து நின்றார் நாகேந்திரன். அவரது கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்ட மகேந்திரன் விளக்கத்தைத் தர ஆரம்பிக்க, அவருக்கு மட்டுமில்லாமல் நாகந்திரனின் மன்னிப்பை வேண்டி வந்த சுதர்சனின் மனதிலும் பூகம்பத்தை உண்டாக்கியது.
சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டதை பூச்சிகள் உணர ஆரம்பித்தன. ஆனால் தப்பிக்கவே முடியாத இந்த வலையில் தான் மட்டுமல்லாது மங்கையும் வசமாக சிக்கிக் கொண்டதைக் கண்டு மீளும் வழியறியாது திகைத்தார்.
கதை ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு, very nice. Fast updates கொடுங்க மதூரா…
Thanks KPN will do