Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35

அத்தியாயம் – 35 

ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள் மந்தாகினி. நாகேந்திரன் ராஜ வம்சத்தினன் என்பதாலா? அது மட்டும் அவளது ஆத்திரத்திற்குக் காரணமில்லை. அவன் பட்டாபிஷேகத்தினை ஒட்டி அவளுக்கு இழைக்கப்பட்ட அவமானம்தான்.

பட்டாபிஷேக விழா முடிந்து  நகர்வலமாக சென்று அவர்களது குலதெய்வமான முருகப் பெருமானின் கோவிலை அடைந்தனர். ராஜாவாக வீற்றிருந்த நாகேந்திரன் என்ற வீரபாகுவை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவர். ஒன்று மங்கையற்கரசிக்கு மணப்பெண் அலங்காரம் செய்ய வந்த மந்தாகினி. மற்றொருவன் சுதர்சன். 

சுதர்சன் சற்று தள்ளி இருக்கும் டவுனில் காவல் அதிகாரியாகப் பணியில் சேர்ந்திருந்தான். ராஜ குடும்பத்தின் திருமணம் பட்டாபிஷேகம் என்று கேள்விப் பட்டதும் வேடிக்கை பார்க்க வந்திருந்தான். அவனுக்கும் நாகேந்திரன் தான் அந்த ராஜா என்பது தெரியாது. நாகேந்திரனைப் பார்த்தது முதல் அதிர்ச்சி என்றால் அங்கு மந்தாகினியைக் கண்டது இரண்டாவது அதிர்ச்சி. 

“மந்தாகினி நீ எங்க இங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் சுதர்சன்.

“ஓ நாகேந்திரனின் பட்டாபிஷேகத்துக்கு அழைப்பு வந்ததா?அவனை பார்க்கத்தான் வந்தியா?ஆனா பட்டாபிஷேகம் முடிஞ்சதும்  கல்யாணம்னு கேள்விப்பட்டேனே! உன் காதல் நிறைவேறுவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்”

“உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சுதர்சன். ஆனால் இதில் எந்த விழாவிற்கும் எனக்கு முறையான அழைப்பு  இல்லை. நான்தான் வேறு வழி இல்லாமல் இங்கு வந்து இருக்கேன். அதுவும் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும் ஒரு பணி காரணமாக”

அதிர்ந்தான் சுதர்சன். “நீ என்ன சொல்ற மந்தாகினி…. உங்களோட காதல் என்ன ஆச்சு? காதலியை, தான் கல்யாணம் பண்ணிக்க போற பட்டத்து அரசிக்கு அலங்காரம் பண்றவளா வரவழைத்து இருக்கானா நாகேந்திரன். இவ்வளவு கேவலமானவனா அவன்?”அருவருப்பில் சுதர்சனின் முகம் சுழிந்தது.

“தயவு செய்து இதுக்கு மேல என்னைய வேற எதுவும் கேட்காதீங்க. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதிங்க” 

“சரி கேக்கல. இந்தா என்னோட விசிட்டிங் கார்டு. நான் இதுக்கு பக்கத்தில் இருக்கிற டவுனில் வேலை பார்க்கிறேன். அடுத்த வாரம் எனது ஐபிஎஸ் பயிற்சிக்காக செல்ல இருக்கிறேன். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் சொல்”

அதற்குள் அங்கு ஓடி வந்த ஒரு சிறு பெண் மந்தாகினியிடம் “அக்கா உங்கள கூட்டிட்டு வர சொன்னாங்க” என்று சொன்னாள்.

“வரேன் சுதர்ஷன். கண்டிப்பாக எனக்கு உதவி தேவைப்படும் போது உங்களை அழைப்பேன். அப்போது என்னை இந்த ஆட்சி அதிகாரத்திற்கு பயந்து கைவிட்டு விடாதீர்கள்”

என்று கண்கள் கலங்க சொல்லிவிட்டுக் கூட்டத்தில் மறைந்தாள் மந்தாகினி.

அங்கு இருந்த பெண்கள் இரண்டு பேருக்கு மருதாணி வைக்க வேண்டியது இருந்தது. அந்த வேலை முடிந்ததும் ஓய்வு எடுத்து வருவதாக சொல்லி விட்டுஅந்த அரண்மனையில் பூனை போல் பதுங்கி, நாகேந்திரனை தேடத் துவங்கினாள்.

அந்த வீட்டில் ஒரு சிறுவனை கொச்சப்பா என்று அனைவரும் அழைத்தார்கள். கொச்சப்பா லீலாம்மாவின் தம்பி. அக்காவை அப்படியே உரித்து வைத்திருந்தான்

“கொச்சப்பா இங்க வா” என்று அவனை அழைத்தால் மந்தாகினி.

மலையாளத்தில் யாரோ அவனை அழைத்து பேசியதும் கொச்சப்பனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. 

“நீங்களும் எங்க ஊர் தானா” என்றான்

“ஆமா, கொச்சப்பா நீ எனக்கு ஒரு சகாயம் செய்யணுமே” என்றாள்

“சொல்லுங்க சேச்சி”

“லெட்டரை கொண்டு போயி அங்க உட்கார்ந்திருக்கிறாரே நாகேந்திரன் அவர்கிட்ட கொடுக்குறியா” 

அவனும் நாகேந்திரனிடம்   கொடுத்தான். காலையிலிருந்து பட்டாபிஷேகம் கோவில் விழா என்று அழைச்சலில் இருந்த நாகேந்திரன் அப்பொழுதுதான் உணவருந்தி விட்டு சற்று பொறுமையாக அமர்ந்திருந்தார்.

“என் கேள்விக்கு என்ன பதில்? ஒரு பெண்ணின் கேள்விக்கு விடை தர முடியாது பயந்து ஓடி ஒளிந்த ஒரு நபர் ராஜாவாம்! வியப்பாகத்தான் இருக்கிறது. இப்பொழுதாவது என் கேள்விக்கு பதில் சொல்லும் தைரியம் உங்களுக்கு வந்துவிட்டதா. 

வந்துவிட்டது என்றால் ஒரு முறை என் கண்களைச் சந்தித்து, உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்கள். அதன் பின் உங்கள் பார்வையிலே பட மாட்டேன். வெகு தூரம் சென்று விடுகிறேன்.

இப்படிக்கு

உங்களை அன்றும் இன்றும் என்றும் காதலிக்கும் ஒரு அபலைப் பெண்

கடிதத்தைப்  படித்ததும் அது மந்தாகினியிடமிருந்து வந்தது என்று புரிந்து கொண்டார் நாகேந்திரன். இவள் எங்கே கல்யாண சமயத்தில் இங்கே என்று திகைப்பில் ஆழ்ந்தார். 

ங்கு ராஜ குடும்பத்தினர் என்று வந்த பெண்களுக்கெல்லாம் அலங்காரம் செய்வதற்குள் மந்தாகினிக்கு முதுகே ஒடிந்தது. சாதாரணமான நாள் என்றாலும் பரவாயில்லை இன்று அவள் கண்ட கனவெல்லாம் களைந்து, மௌனமாய் மனதால் செத்துக் கொண்டிருந்தாள். தான் மனதில் விரும்பியவனை மணக்கப்  போகும் பெண்ணுக்கு அலங்காரம் செய்வது எவ்வளவு துன்பம் தரும் என்பதை எவராலும் கூற இயலாது.

“மங்கை உன்னை கல்யாணம் பண்ணிக்கிறவரும் நீயும் எங்கேயாவது வெளியில் போயிருக்கீங்களா?”

“போயிருக்கோமே திருவிழா கல்யாணம் எல்லாம் போயிருக்கோம்” 

பொறாமையில் வயிறு காந்தியது மந்தாகினிக்கு

“வெளிய போறப்ப அவர் கிஃப்ட் எதுவும் உனக்காக வாங்கி கொடுத்தாரா?”

“தெரியலையே! அப்ப நான் சின்ன பிள்ளை. அதனால எதுவுமே நினைவில்லை”

மங்கையர்கரசியின் நகங்களைச் சீர்படுத்திய படி மேலும் தொடர்ந்தாள்.

“சின்ன குழந்தைல போனதைக் கேட்கல. சமீபத்துல உங்க கல்யாணம் உறுதியானதும் எங்கேயும் வெளில போயிட்டு வந்தீங்களா?”

“அது எப்படி வெளியில அனுப்புவாங்க? திருமணத்துக்கு முன்னாடி எங்கேயும் தனியா அனுப்புறது வழக்கம் இல்லையே”

“சரி அதுக்கு முன்னாடி உங்க அத்தான் கல்லூரியில் படிச்சப்ப எப்போதாவது”

“அத்தான் தான் வெளியூர்ல படிச்சாரே”

“ஓ  அப்ப நீ எங்கும் அவரோட வெளியில போனதில்லன்னு சொல்லு. சரி ஏதாவது பேசி இருக்கியா? அவருக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது ஏதாவது உனக்கு தெரியுமா? முதல்ல அவருக்கு உன்ன பிடிக்குமான்னு தெரியுமா”

மங்கை முகத்தில் கலக்கம். “அவருக்கும் புடிச்சதனாலதான கல்யாணமெல்லாம் நடக்குது நீங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க” என்றாள்

அவ்வளவு நேரம் அங்கு பொறுமையாக உதவி செய்து கொண்டிருந்த லீலாவுக்கு ஆத்திரமாக வந்தது.

இந்த மந்தாகினி வந்த பொழுது எல்லாரையும் போல லீலாவுக்கும் அந்தப் பட்டினத்துப் பெண்ணின் அழகில் மயக்கம் இருந்தது. 

ஆனால் மங்கையர்கரசியை இந்தப்  பெண் சரியாக நடத்தவில்லை என்பது பார்க்கும் போதே புரிந்தது. அதை எப்படி எங்களது இளவரசியை நீ வா போ என்று இந்த பெண் கூப்பிடுகிறாள் என்று ஆச்சரியமாக இருந்தது. அது மட்டுமில்லை தலை அலங்காரம் செய்யும்போது விருட் விருட்டென்று வலிக்க வலிக்க இழுக்கிறாள். அன்று கொண்டை ஊசியை அழுத்தமாகக் குத்தி மங்கையின் தலையில் காயம். 

“லீலா இந்த அலங்காரம் எல்லாம் வேண்டாம் டி. இனிமேலா என்னைக் கிளியோபாட்ராவா மாத்த முடியும். அதுவும் இந்தப் பெண் முடியை வேகமா அங்கேயும் இங்கேயும் இழுக்குறப்ப கழுத்தே சுளுக்கிருச்சு” என்று தனியாக இருக்கும்போது மங்கை சொன்னதை வடிவிடம் ஒப்பித்து இருந்தாள் லீலா. 

மந்தாகினியின் மேல் அவ்வளவு மனவருத்தம் இருந்தாலும் அன்பு மாறாமல் மங்கையால் எப்படி பேச முடிகிறது என்று தெரியவில்லை. இது தானே நாசூக்கு, தன்மை என்றெல்லாம் சொல்கிறார்களோ?

உணவு நேரம் வந்து விட்டது வழக்கமாகஉணவு அனைவருக்கும் அந்த அறைக்கே வந்துவிடும். மங்கையர்கரசிக்குத் தங்கத்தட்டில்ஒரு 50 வகை உணவுகளை சமைத்து இருப்பார்கள்.

அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே மந்தாகினி மற்றவர்கள் எல்லாம் மற்றொரு தட்டில் அதில் பாதி வகை உணவு வரும். அன்றுதான் மந்தாகினி, மங்கையர்க்கரசி தங்கத் தட்டில் உண்ணுவதையும், தாங்கள் சாதாரண தட்டில் உண்ணுவதையும் கண்டு கொண்டாள்.

தனது தட்டில் இல்லாத உணவு வகைகள்  எல்லாம் மந்தாகினியின் தட்டில் இருப்பதை பார்த்து அவளுக்கு வியப்பு

நிஜம் என்னவென்றால் மணப்பெண்ணாக போகிறவருக்கு உடல் பலம் பெருகும் பொருட்டு, சில வகையான பதார்த்தங்களை சமைத்து வைப்பது வழக்கம். அப்படியான சில வகைப்  பதார்த்தங்களை தான் மங்கையர்கரசிக்கு வைத்திருந்தனர்.

ஆனால் இதனைப் பற்றி எதுவும் தெரியாத மந்தாகினியோ ஒரு சாப்பாட்டில்கூட ஏன் இப்படி ஒரு பாராபட்சம் காட்டுகிறார்கள் என்று புழுங்கினாள்.

“அதென்ன ஐட்டம்? பார்க்கவே ஆசையாக இருக்கிறதே”

“நமக்கான பதார்த்தங்கள் எல்லாம் அங்க இருக்கு. எடுத்துக்கோங்க” என்றாள் பரிமாறும் பணியாள். 

நானும் இங்கு எடுபிடி வேலை செய்பவளும் ஒன்றா? 

மங்கையர்கரசி தான் விவரம் தெரியாதவளாயிற்றே? இவர்கள் தராவிட்டால் என்ன? மங்கையிடமிருந்து நேரடியாகவே பெற்றுக் கொள்கிறேன். அப்படி என்ன நான்  சாப்பிட கூடாத ஒரு பலகாரங்கள் என்ற அவளது எண்ணம் தலை தூக்கியது.

“என்ன மங்கை உன்னை ராணி தேனியாக்க முயற்சி நடக்குது போல் இருக்கிறதே” என்றாள்  இளக்கரமாக

“எனக்கு புரியலையே நீங்க என்ன சொல்றீங்க” 

“ஓ… நீ தான் படிக்கல இல்ல… உனக்கு இதை பத்தி எல்லாம் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லை. அதாவது பிறக்கறப்ப எல்லா உயிரும் ஒரே மாதிரி தான் மங்கை. தேனீயும்  அதுக்கு விதிவிலக்கு இல்லை. எல்லா முட்டையும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் சில முட்டைகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அதுக்கு ஸ்பெஷலான சாப்பாடு தந்து அதை ராணி தேனீயா வளர்ப்பாங்க

ஸ்பெஷல் கவனிப்பு பெற்ற எந்த தேனியாக இருந்தாலும் அது ராணி தேனி ஆயிடும். ராணி தேனீதான் அந்த கூட்டத்துக்கே தலைவியாகவும் ஆகும். அது மாதிரி உனக்கும் ஸ்பெஷலான சாப்பாடெல்லாம் கொடுத்து ராணி தேனீ ஆக்குறாங்கன்னு நினைக்கிறேன்” என்றாள் தனது மனதில் இருக்கும் குரோதத்தை மறைத்துக் கொண்டே

“கதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனா இது அப்படி எல்லாம் ஸ்பெஷலான சாப்பாடான்னு எனக்குத்  தெரியல. எல்லாரும் சாப்பிடறது தான் எனக்கும் நினைச்சேன்” 

“ஸ்பெஷல் இல்லனா நான் சாப்பிடுவதற்கு தடை இல்லையே” மங்கையின் தட்டில் வைக்கப்பட்டிருந்த உணவை அப்படியே  கையால் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்  மந்தாகினி. இந்த மரியாதைக் குறைவான செயலை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். 

இது எப்படி வடிவின் காதிற்கு சென்றது என்று தெரியவில்லை மறுநாள் உணவு இடைவேளையின் போது மங்கையர்கரசி தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே அவருக்கு உணவு பரிமாறப்பட்டது.

ஏற்கனவே இந்தப் பம்பாய் பெண் நாகேந்திரனுக்கு ஏதோ சீட்டு எழுதிக் கொடுத்ததாக கேள்விப்பட்டிருந்தார். அரண்மனையின் காற்று கூட உளவு சொல்லும். அது என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு உணவு கொண்டு சொல்லும் பணியாள் மூலமாக மந்தாகினி மங்கையின் தட்டிலிருந்து உணவினை எடுத்து உண்ட செய்தி வந்தது. 

கணவனை கண்டிக்காததின் பலன், சொத்துக்களை இழந்து அண்ணன் வீட்டில் நிரந்தரமாக தங்கியது. மகனையும் தாரை வார்த்துத் தரத் தயாராக இல்லை. மங்கை சிறு பெண் அவளுக்கு இதைப் போன்ற குணக் கேடான மனிதர்களைச் சந்தித்துப் பழக்கம் இல்லை. ஆகையால் மந்தாகினிக்கு அவளது இடத்தை உணர்த்த அவரே வந்துவிட்டார். 

அம்மா பாசம், பணம், குடும்பம் இப்படி எல்லாம் தளைகளைப்  போட்டு நாகேந்திரனைப்  பூட்டி வைத்ததால்தானே என்னைக் காதலிப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டேன் என்கிறான் என்று ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு வடிவை வெறித்தாள் மந்தாகினி. 

இந்த முட்டாளைக் காப்பாற்ற நீ வந்தால் பயந்துவிடுவேனா? என்று நேர் பார்வை பார்த்தபடி. 

“இன்னைக்கும் சாதாரண சாப்பாடுதானே. அது என்னன்னு நானும்தான் ருசி பார்க்கிறேன்” என்று அசராமல் எழுந்தாள். 

மங்கையுடன் சேர்ந்து உணவருந்த எழுந்த மந்தாகினிடம் வடிவு சற்று கடுமையான குரலில் “ இந்தாம்மா பம்பாய் பொண்ணு. எங்க வருங்கால ராணிக்காக அங்க உணவு பரிமாறப்படுது. லீலா, இந்தப் பெண்ணை பணியாளர்களுக்கு உணவு பரிமாறும் இடத்திற்கு அழைத்துச் செல்”என்றார்

அவர் சென்றதும் லீலா வழக்கம் போல் கிண்டலாக  “அச்சச்சோ மந்தாகினி சேச்சி, அங்க ஸ்பெஷல் உணவு எதுவும் இருக்காது நாங்க சாப்பிடுற சாதாரண உணவு தானே இருக்கும்”  என்றாள்.

ஒரே ஊரினள் என்ற கிண்டலில் தான் லீலா அவ்வாறு சொன்னாள். ஆனால் உணவு விஷயத்தில் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக மந்தாகினி கொந்தளிக்க தொடங்கினாள். “வாய மூடு… எனக்கு சாப்பாடே வேண்டாம். இந்த மானங்கெட்ட சாப்பாட்ட சாப்பிடுவதற்கு பட்டினியா கிடந்து உயிரை விடுவேன்” 

மதியம் உணவு உண்ணாமல் அமர்ந்திருந்த மந்தாகினியின் மனதில் ஆத்திரம் வினாடிக்கு வினாடி வளர்ந்தது. 

அவளது ஆத்திரத்தை எல்லாம் சேர்த்து அந்த அப்பாவி மங்கையிடம் காட்டினாள்.வேக்சிங் செய்ய ஆரம்பித்தவள் கொதிக்க கொதிக்க வேக்சினை சூடு செய்து, மங்கையின் கைகளில் தடவியதில் அவளது தோல்  அப்படியே சூட்டில் வெந்து போனது. 

“ஆ… “  என்று வலியில் அலறினாள்  மங்கை. 

விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்து பார்த்த வடிவு, அங்கிருந்த பணியாட்கள் முன்பு மந்தாகினியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

“உனக்கெல்லாம் ராஜா வீடுன்னா என்னன்னு தெரியுமா அரசு குடும்பத்தில் கல்யாணம்னா என்னன்னு தெரியுமா உனக்கு?

 படிச்சு படிச்சு சொன்னேன் வெளியூரிலிருந்து யாரையும் வச்சுக்காதீங்க. நம்மளே அலங்காரத்தை செஞ்சு விட்டுக்கலாம் அப்படின்னு .

இவள மாதிரி ஒரு அரைகுறையை… ஆத்திரம் புடிச்சவள கூட்டிட்டு வந்து, இப்ப கல்யாணத்துக்கு முதல் நாள் தீக்காயம் பட்டுட்டு மணப்பெண் நிக்கிறா.  

 வெளியில யார்கிட்டயும் சொல்லக் கூட முடியாது. லீலா போய் நம்ம வைத்தியரை ரகசியமா அழைச்சிட்டு வா. சிகிச்சையை கொடுக்கலாம் யார்கிட்டயும் இந்த விஷயம் வெளிய தெரியாம பாத்துக்கோ. சொந்தக்காரங்க காதுல பட்ட இதே பெரிய அபசகுனமா பேசுவாங்க”

மந்தாகினியைப் பார்த்து “ இன்னும் என்னடி இங்க நிக்கிற … ஒரு நிமிஷம் கூட இனிமே இருக்க கூடாது. உன் பெட்டி, படுக்கையை  எடுத்துட்டு வெளியே போ”என்று ஆத்திரத்தில் கத்தினார் வடிவு.

அவமானத்தில் முகம் சிவக்க கண்கள் கலங்க பெட்டியினை எடுத்துக் வீட்டை விட்டு  வெளியே சென்ற மந்தாகினி அக்கணம் முடிவு செய்தாள். 

‘இந்த கல்யாணத்தை எப்படி நீங்க நடத்துறீங்கன்னு பாக்குறேன். நாகேந்திரன் எனக்கு கிடைக்காட்டி வேற யாருக்குமே கிடைக்க மாட்டார். உங்க ராணி இனிமேல் நித்திய கன்னி தான்’

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35”

  1. ada raama. enna idthu. mandakini mangaiyai ivlo tease panninala. anal mangai ippavum romba gentle akathan abiyidam nadanthu kolkirarar. kalyanam nichayam nagendranudan nadakkavillai endre ninaikiren.yaar anda athrishtasal. may be nagendran younger brother?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 12தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 12

ஹலோ பங்காரம்ஸ், கதையைப் பற்றிய உங்களது கருத்துக்களுக்கும் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் சொன்னபடியே செம்பருத்தி உங்களது வாழ்க்கையிலும் ஏதோ ஓரிடத்தில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்துவாள் என்று நம்புகிறேன். சாரிப்பா, சென்ற வாரம் அலுவலக வேலைல பிஸி. அப்டேட்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 26தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 26

அத்தியாயம் – 26   தென்காசி பஸ்ஸ்டாண்ட்டில் இருட்டும் நேரத்தில் பஸ்ஸில் இருந்து ஒரு உருவம் இறங்கியது. மறைந்து மறைந்து இருட்டில் நடந்து யார் கண்ணிலும் படாதவாறு லாவகமாய் நழுவி ஒரு தெருவுக்குள் சென்றது. அந்தத் தெருவில் அனைவரும் உறங்க ஆரம்பித்ததை

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 10தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 10

அத்தியாயம் – 10   காலை குளிக்கும்போது கூட அதே நினைப்பு செம்பருத்திக்கு. யார் இந்த சிங்கம்? ஏன் இவ்வளவு பில்ட் அப் இவனுக்கு. இதுவரை சொன்னதில் ஒருத்தன் கூட நல்லவிதமான அபிப்பிராயத்தை சொல்லல. தான் அறிந்த விஷயங்களைப் புள்ளியாய் எடுத்துக்