Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 34

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 34

அத்தியாயம் – 34

 

மந்தாகினியின் அன்னை காலையிலிருந்து  இரவு தாமதமாக வீட்டுக்கு வந்ததை சொல்லிச் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார். 

 

“உங்கப்பன் என்னடான்னா ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு போற இடத்தில எல்லாம் பெட்டி தூக்க விடுறான். நீ என்னடான்னா என்னமோ மடத்தில் தங்கிருக்குற மாதிரி நினைச்ச நேரத்துக்கு போற வர. கேட்டா பிரெண்ட்ஸ் எல்லாரும் சேந்து விருந்துக்குப் போயிட்டு வரேன்னு கதை விடுற. 

 

இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீ இனிமே காலேஜுக்கு போக வேண்டாம். பம்பாய்ல  என் தங்கச்சிக்கு தெரிஞ்ச அழகு நிலையத்துல வேலைக்கு ஆள் தேவையாம். நீ அவ வீட்டுக்குக் கிளம்பு”

 

பேசியதைக் காதில் வாங்கி கொண்டே வீட்டினுள் நுழைந்தார் சுகுமாரன். 

 

“ ‘ராணி தேனீ’ நேத்து ராத்திரி கிட்டத்தட்ட நடுராத்திரி வீட்டுக்கு வந்திங்களாமே? எங்க மந்தாகினி போயிருந்த?” மனதில் எழுந்த  கோபத்தை அடக்கிக் கொண்டு மந்தாகினியிடம் கேட்டார். 

 

“ராணி தேனீக்கு ஏத்த ராஜாவைத் தேட வேண்டாமா?” என்றாள் சிரித்தபடி. 

 

“ஓவரா போற மந்தாகினி. பேசாம உங்க சித்தி வீட்டுக்குக் கிளம்பு”

 

“ச்சூ காரியம் கை கூடி வர்ற நேரம் சுகமாரண்ணா. வெண்ணை திரண்டு வர்ற நேரம் தாழியை உடைச்சுடாதே”

 

“அந்த நாகேந்திரன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டானா?”

 

“நேத்து தானே காதலே ஆரம்பிச்சிருக்கு. இனி விரைவில் கல்யாணமும் நடக்கும்”

 

நம்பிக்கையுடன் கிளம்பினாள் அதில் ஒரு பேரிடி விழப் போவதை அறியாமல். 

 

காலையில் கல்லூரி வாசலில் நாகேந்திரனை எதிர்பார்த்திருந்தவளுக்கு அவனைக் காணாமல் ஏமாற்றம். இங்கேதானே காலையில் நின்று தோழர்களோடு தம் அடித்துக் கொண்டிருப்பான். நேற்று தாமதமானதால் இன்று வரவில்லையோ?

 

ஏமாற்றத்தை மென்றவளின் கண்முன் வந்து நின்றான் ஜம்புலிங்கம். 

 

“என்ன மந்தாகினி, நாகேந்திரனைத் தேடுறியா?”

 

என்னிடமே இன்னும் காதலைத் தெரிவிக்கவில்லை. அதற்குள் நண்பர்களிடம் சொல்லியாகிவிட்டதா? இருக்கட்டும்… அடுத்த சந்திப்பில் பேசிக் கொள்கிறேன். 

 

மந்தாகினிக்கு தன்னை ஒருவன் மறுக்கக் கூடும் என்ற எண்ணமே இதுவரை இருந்ததில்லை. என் காலடியில் எத்தனை ஆண்கள் தங்கள் இதயத்தைக் காணிக்கையாக்கிக் காத்துக் கிடக்கின்றனர். அத்தகைய நானே மனமிரங்கி எனது காதல்  வரத்தை ஒருவனுக்குப் பொழிந்திருக்கிறேன். மாட்டேன் என்றா சொல்லப் போகிறான். 

 

“உன்னுடன் பேச வேண்டுமே மந்தாகினி” என்றான் ஜம்புலிங்கம். 

 

“அவர் வரவில்லையா?”

 

“நாகேந்திரனுக்கு அவசரமாக ஊருக்கு செல்லும் வேலை வந்துருச்சு. நீ இப்ப பிரீயா இருந்தால் அந்த ஹோட்டலில் காப்பி குடிச்சுகிட்டே பேசலாம். உன் அண்ணன் கூட இறக்கிவிட்டுட்டு அங்க காத்திருக்கார் பார். அவரையும் கூப்பிடு. ஏன்னா நம்ம ரெண்டு பேரும் தனியா பேசினால் சரிவராது” என்றான். 

 

சுகுமாரனின் கேள்விப் பார்வைக்கு தனது கண்களால் பதில் அளித்தபடி அவனை அழைத்துக் கொண்டு ஜம்புலிங்கத்துடன் காபி அருந்தச் சென்றாள்.

 

காப்பி அருந்தும் வரை மனதில் பேச வேண்டியதை ஒத்திகை பார்த்துவிட்டு “மந்தாகினி நீ நாகேந்திரனுக்குத் தந்த பரிசு. இது அவனுக்குத் தேவைப்படாது” என்று அவளது பரிசினைத் திரும்பத் தந்தான் ஜம்புலிங்கம். 

 

அதிர்ந்தாள் மந்தாகினி. “அதை எப்படி நீங்க சொல்விங்க. நான் நாகேந்திரனிடம் பேச வேண்டும். இது வெறும் பொருள்னு நினைச்சிங்களா? என்னோட இதயம்.  என் முகத்தைப் பார்த்து என்னைப் பிடிக்கலைன்னு சொல்லி இதயத்தைத்  திருப்பித் தரட்டும். வாங்கிக்கிறேன்” என்றாள் ஆத்திரத்தில் முகம் சிவக்க. 

 

“ஏன் நாகேந்திரன் வரணும்? அவனோட பதில்தானே உனக்குத் தேவை. விருப்பமில்லாததை நேரில் சொல்லத் தயங்கித்தான் என்னிடம் சொல்லிருக்கான்”

 

“இதை நம்ப மாட்டேன். நான் அவரை நேரில் பார்த்துப் பேசியே ஆகணும். எத்தனை நாள் அவர் ஓடி ஒளியப் போறார். பரீட்சை எழுத வந்துதானே ஆகணும்”

 

“நாகேந்திரன் போன வருடம் கூட பரீட்சை சமயத்தில் சிங்கப்பூரில் ஒரு வியாபாரக் கூட்டத்தில் கலந்துக்கப் போயிட்டான். புரிஞ்சுக்கோ மந்தாகினி உனக்கும் எனக்கும்தான் இந்தப் பரீட்சை, பட்டம் எல்லாம் முக்கியம்.

 

 பட்டம் இல்லாம வேலை கிடைக்காது. வேலை தர்ற சம்பளம் இல்லாம வயிறு நிறையாது. ஆனால் நாகேந்திரன் மாதிரி பணக்காரர்களுக்கு இதெல்லாம் ஒரு அலங்காரக் காகிதம். 

 

நீ நாகேந்திரன் கிட்ட காதல் கடிதம் கொடுத்ததை மறந்துடலாம். இந்தக் காதல் எல்லாத்தையும் மறந்துட்டு படிக்கிற வழியைப் பார்” என்றவன் சுகுமாரனிடம் 

 

“சார் நீங்க நேத்து வராததால தான் இத்தனை பிரச்சனையும். உங்க தங்கைக்கு நல்ல புத்தி சொல்லுங்க” என்று ஒரு வார்த்தையால் குத்திவிட்டுக் கிளம்பினான். 

 

நேத்து நான் வரவில்லையா? எங்கு போகவில்லை? சுகுமாரனின் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள். விடையாக மனதில் பட்டது ஒன்றுதான் மந்தாகினி அவளது நாடகத்தில் அவருக்குத் தெரியாமலேயே அவரது பெயரைப் பயன்படுத்தி இருக்கிறாள்.  

 

“என்ன நடக்குது மந்தாகினி” கண்களில் கனல் பறக்க சுகுமாரன் கேள்வி கேட்டார்.

 

அவள் திக்கித் திக்கி சொன்னதைக் கொண்டு நிலமையை அறிந்துக் கொண்டு “சரி, இது இத்தோட போகட்டும். அவன் நல்லவனா இருக்க போயி உன் பேரை எல்லாருக்கும் தெரிவிக்காம அமைதியா இதை விட்டுடலாம்னு சொல்லிருக்கான். நீயும் அவனை மறந்துட்டு உன் படிப்பை கவனி”

 

அவர்கள் எதிரே அவள் பரிசாகத் தந்த காதல் கிளிகள் அனாதையாக நின்றிருந்தன அவளது காதலைப் போல. 

 

“முடியாது சுகுமாரண்ணா”

 

“கோவத்தைக் கிளப்பாதே”

 

“அவர் எனக்கு தனி நடனம் ஆட வாய்ப்பு தந்ததை வச்சு அவருக்கும் எனக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கிறதா என் வகுப்புத் தோழிகள் கிட்ட சொல்லிட்டேன். கண்டிப்பா என்னை ஏளனம் செய்வாங்க” கேவினாள். 

 

“அதாவது அவன் சம்மதிக்கிறதுக்கு முன்னாடியே உங்களுக்கு காதல் இருக்கிறதா கதை கட்டிவிட்டிருக்க” என்றார் கடுப்போடு. என்னதான் பிரியம் என்றாலும் இவள் பொறுமையை அளவுக்கு மீறி சோதிக்கிறாளே.

 

“அவரைக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணத்தில்தான் இந்த மாதிரி அழுத்தம் தந்தேன்”

 

“யானைத் தன் தலைல மண்ணை வாரிப் போட்டுக்கும்னு சொல்லுவாங்க. இன்னைக்குத்தான் நேரில் பார்க்குறேன். இன்னைக்கு கல்லூரிக்குப் போக வேண்டாம் வீட்டுக்குப் போ…” 

 

சுகுமாரனும் மந்தாகினியும் ஹோட்டலில் இருந்து வெளியேறுவதையும் மந்தாகினியின் கலங்கிய கண்களையும் தூரத்தில் இருந்து பார்த்த சுதர்சன் என்னவோ ஏதோ என்று தவித்து போனான். 

 

மறுநாள் அவளை சந்தித்து விவரம் கேட்கலாம் என்று நினைத்திருந்தவனுக்கு பேரதிர்ச்சியாக அதன்பின் மந்தாகினி கல்லூரிக்கே வரவில்லை. நாகேந்திரனும் கூட வரவில்லை. 

 

கல்லூரியில் இருவரும் காதலித்து வந்ததாகவும் நாகேந்திரனின் குடும்பம் மந்தாகினியை மிரட்டி கல்லூரியை விட்டே வெளியே அனுப்பி விட்டதாகவும்  கிசுகிசுக்கப் பட்டது. அதன் நம்பகத்தன்மையை உறுதி படுத்தவேண்டிய நபர்கள் யாரும் அங்கு இல்லை. 

 

சுதர்சனும் படித்து முடித்துவிட்டு காவல்துறையில் பணியில் அமர்ந்தான். ஆனால் அவனது கேள்விகளுக்கு ஒரு நாள் விடை கிடைத்தது. அவளது உள்ளம் கொள்ளை கொண்ட மந்தாகினியை சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்தான். அவளது வாழ்க்கையை மீட்டெடுக்க வழி செய்ததில் அவனது மனம் மிகவும் மகிழ்ந்தது.

 

ந்தாகினி பம்பாயில் மேக்கப் உதவியாளராக பணியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. ஏற்கனவே அலங்காரத்தில் ஆர்வம் உள்ளவள் என்பதால் சுலபமாகவே கற்றுக் கொண்டாள். 

 

அவளது எஜமானி இந்தியாவிலேயே மிகச் சிறந்த அழகுக்கலை நிபுணர். வெளிநாட்டில் எல்லாம் படித்து வந்திருக்கிறாள். அங்கிருந்து தருவிக்கும் க்ரீம்கள், பேஸ் பேக்குகள், தலை அலங்காரங்கள் இவற்றால் சாதாரண பெண்களைக் கூட தேவலோக ரம்பை, ஊர்வசி மேனகையாக மாற்றி விடுவார். அழகுப் போட்டிகளுக்குத் தயாராகும் பெண்களுக்கு இந்த அழகு நிலையம்தான் ஒரு ஆபத்பாந்தவன். 

 

மணப்பெண் அலங்காரம் இவர்களது ஸ்பெஷாலிட்டி. இரண்டு மணி நேரத்தில் முடிவதல்ல அலங்காரம். எனவே திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே சென்று மணப்பெண்ணுக்கு பெடிக்கியூர், மெனிகியூர், வாக்சிங், மருதாணி  போன்ற முன் ஏற்பாடுகளை செய்து தயார் படுத்தி வைத்திருப்பார்கள். 

 

ஐந்து நாட்கள், ஏழு நாட்கள் என்று நடக்கும் பெரிய குடும்பத் திருமணங்களை மட்டுமே இவர்கள் ஒத்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் அத்தகைய திருமணம் ஒன்றிற்கு செல்லுமாறு அவளது பாஸ் சொன்னாள்.

 

“நான் வெளியூர் போக மாட்டேன்னு சொன்னேன் மேடம்”

 

“மந்தாகினி வேற பொண்ணை தான் அனுப்பினேன். ஆனால் அவளோட அம்மா இறந்துட்டாங்கன்னு தகவல் வந்திருக்கு. அதனால வேற யாரும் அட்டென்ட் பண்ண வேண்டிய கட்டாயம். நான் திருமணத்துக்கு வந்துடுவேன். அதுக்கு முன்னாடி என்னென்னவோ பங்க்ஷன்  வச்சிருக்காங்க. அதுக்கு மட்டும் யாராவது அட்டென்ட் பண்ணனும். இந்த ஒரு தடவை மட்டும் போயிட்டு வா. இனிமேல் அனுப்பல”

 

போகாவிட்டால் வேலை போய்விடும். இந்த வேலையை வைத்துத்தான் அவளது குடும்பம் இருக்கிறது. படிப்பையும் பாதியில் நிறுத்தியாகிவிட்டது. வேறு வழியே இல்லை. சென்றுதான் ஆக வேண்டும். வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய் சம்மதித்தாள். 

 

“உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. உன்னை காரில் அழைச்சுட்டுப் போய் பத்திரமா தங்க வச்சு கல்யாணம் முடிஞ்சதும் ட்ரைன் ஏற்றி அனுப்பிடுவாங்க. கவுரவமான குடும்பம். உன் பாதுகாப்புக்கு நான் உத்திரவாதம் தரேன்” என்று சொல்லியே அனுப்பினார் அவளது பாஸ்.

 

யாரோ ஒரு அரசகுடும்பத்தைச் சேர்ந்த செல்வன் வீரபாகுவிற்கும்  செல்வி மங்கையற்கரசிக்கும் திருமணம் என்று பல வீர தீர பட்டங்களைப் போட்டு வந்திருந்த அந்தத் திருமணப் பத்ரிக்கையைப் பார்த்ததும் அவளது ராணித் தேனீ தலையைத் தூக்கினாள். அவளைத் தட்டி அமரவைத்துவிட்டுத் திருமணத்திற்குக் கிளம்பினாள் மந்தாகினி. 

 

முதல் முறையாக அவள் கலந்து கொள்ளும் திருமண விழா. இதுவரை பார்லரில் புருவம் திருத்திவிட்டும், மருதாணி போட்டுவிட்டும், கை கால் நகங்களை வெட்டிவிட்டுமே பெரும்பாலான நாட்கள் சென்றுவிட்டன. இத்தகைய பணக்கார இடங்களுக்கு சென்று வருவது நன்றாகத்தான் இருக்கிறது. ஹப்பா எப்படி தங்கத்திலும் வெள்ளியிலும் அரண்மனையை இழைத்திருக்கின்றனர். 

 

இயல்பாகவே அழகான மந்தாகினி பாம்பாய்க்குச் சென்றதும் தன்னை மேலும் அழகு படுத்திக் காட்டவும் நவநாகரீக உடைகளை அணியவும் பழகி இருந்தாள். 

 

அங்கிருந்த பெண்களுக்கு அவளது அழகினைக் கண்டு மூச்சே அடைத்தது. “உங்க தோல் எப்படி இவ்வளவு மாசு மருவில்லாம மிருதுவா இருக்கு? முடி அப்படியே அலை மாதிரி விழுதே தினமும் ஷாம்பூ போடுவிங்களா? நாங்கல்லாம் சீயக்காய்தான்” என்று அவளிடம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டனர். 

 

அந்தப் பெண்களில் மணப்பெண்ணும் அடக்கம். ஆனால் அவளது கேள்விகள் வேறு விதமாக இருந்தது. 

 

“பொண்ணுக்கு அலங்காரம் பண்ணப் போறிங்களா? எங்க மங்கையை மட்டும் அழகாக்கிட்டிங்க பாகமங்கலம் சமஸ்த்தானத்தில் பாதி எழுதி வச்சுருவோம்” பகடி பேசி சிரித்து சென்றதன் அர்த்தம் சில நிமிடங்களிலேயே புரிந்தது மந்தாகினிக்கு. 

 

மணப்பெண்ணை பார்த்ததும் மந்தாகினியின் பொறாமை மீண்டும் தலை தூக்கியது. சிண்ட்ரெல்லா கதைகளில் ஸ்னோ வைட் கதைகளில் காணப்படும் மாசு மருவில்லாத இளவரசியை எதிர்பார்த்து இருந்தவளுக்கு கருப்பாய் குட்டையாய் கொஞ்சம் குண்டாய் இருந்த அந்த சிறு பெண்ணைப் பார்த்ததும் ச்சே என்றாகிவிட்டது. 

 

படிப்பறிவில்லாதவளாய் வேறு இருக்கிறாள். “நீங்க என்ன படிச்சிருக்கிங்க? பாம்பாய்ல பெரிய காலேஜெல்லாம் இருக்காமே? அங்க பொண்ணுங்களும் படிப்பாங்களாமே?” என்று மங்கையற்கரசி அவளைக் கேட்டுத் துளைத்துவிட்டாள். 

 

“ஆமாம் நிறைய கல்லூரி இருக்கு. பெண்களும் அங்க ஆண்களுக்கு சமமாய் படிப்பாங்க. சென்னைல கூட அதே மாதிரிதான்”

 

“அப்பறம் ஏன் என்னை மட்டும் படிக்க வைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க?”

 

“அது உன் அப்பாவைக் கேட்க வேண்டிய கேள்வி. இப்ப கைகளைக் காட்டுறியா நகத்தை சீர் படுத்தி விடுறேன்”

 

மங்கையின் மேல் மரியாதை குறைந்திருந்தது மந்தாகினிக்கு. நீங்கள் நீ என்றானது. 

 

“நாளைக்கு என்னவோ பங்க்ஷன் போலிருக்கே. உன் பேரைப் போட்டு விழா ஒன்னு நடந்திருக்கு. திருமணவிழா ஏன் இத்தனை நாள் நடக்குது. என்னைக்குத்தான் முழுமையா முடியும்?”

 

அந்த சிறு பெண்ணால் அவளது குரலில் இருந்த பொறாமையும் இளக்காரத்தையும் கண்டு கொள்ள முடியவில்லை. 

 

“இன்னைக்குத்தான் வாளுக்கு மாலை போடுற விழா நடந்து முடிஞ்சது. நாளைக்கு அத்தானுக்கு பட்டாபிஷேகம். முறைப்படி பாகமங்கலத்து ராஜாவா பிரமாணம் எடுத்துப்பார். பட்டாபிஷேகம் முடிஞ்ச அடுத்த நாள் தாலி கட்டுறது நடக்கும். ஆனால் எங்க குடும்பத்தில் மட்டும் அடுத்த நாள் குலதெய்வ வழிபாடு. அதுக்கடுத்த நாள் தாலி காட்டுவார்.   அதுக்கப்பறம் பட்டிணத்துப் பழக்கப்படி  ரிசெப்ஷன்னு சொன்னாங்க”

 

பட்டாபிஷேகமா? பார்த்துட்டு வர வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டாள். 

 

அங்கு ஊரே திரண்டிருந்தது. கட்டிளங்காளையாய் பட்டும் தங்கமும் இழைத்து நவரத்தினங்கள் பதித்த உடையில் நாகேந்திரன் கம்பீரமாக நடந்து வர, அவர்கள் குலதெய்வத்தின் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு விநாயகர் காலடியில் வைக்கப்பட்டிருந்த வைர கிரீடம் அனைவரின் ஆசீர்வாதத்துடன் நாகேந்திரனின் தலையில் சூட்டப்பட்டது. பட்டப் பெயராக வீரபாகு என்று முடியும்படி அவரது பெயர் மாற்றப்பட்டது. 

 

அன்னை மீனாட்சியின் கையில் ஆசீர்வதித்து தந்ததாக வழங்கப்பட்ட வைர செங்கோலும், மதுரை மீனாட்சி அம்மையின் கழுத்தில் அணிவித்து எடுத்து வரப்பட்ட வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அவரது கழுத்தில் சூடப்பட்டது. 

 

பாலகனாக வீட்டை விட்டு வெளியேறி, குருகுலத்தில் பயின்று, வீரத்தை நிரூபித்து, பங்காளிகளை போட்டியில் வென்று, மக்கள்  மனதைக் கவர்ந்து  இப்படி பலவாறு பட்ட கஷ்டத்திற்கு தரப்படும் வெகுமதிதான் பட்டாபிஷேகம் என்று சொல்வார்கள்.  

 

ஆனால் இன்று ஒரு பட்டாபிஷேகம்தான் நாகேந்திரனின் கஷ்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது. 

4 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 34”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 13தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 13

ஹலோ பங்காரம்ஸ்,   அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அன்புடன், தமிழ் மதுரா   அத்தியாயம் – 13   துள்ளிக் குதிக்க வேண்டும் போல மகிழ்ச்சியில் மிதந்தாள் செம்பருத்தி.  பழைய கடிதங்களை ஆராய்ந்து தானே அய்யாவின் பெயர் அபிராம்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 32தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 32

அத்தியாயம் – 32   நாகேந்திரன் தனது வீட்டை விட்டு சென்னைக்குப் படிக்க வந்ததே ஒரு கதை. பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்பு திக்விஜயம் அனுப்புவதைப் போல இவரை மதராஸ் கல்லூரியில் முதுகலை படிக்க அனுப்பி இருந்தார்கள். அதற்கு ஒரே காரணம் மங்கை

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 7தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 7

அத்தியாயம் – 7    எர்ணாகுளம் செல்ல முதல் வகுப்பில் ட்ரெயின் டிக்கெட் எடுத்து தந்திருந்தார்கள். பயணத்திட்டம் ஒன்றும் அப்படி சோர்வு தரும் விஷயமாகத் தோன்றவில்லை செம்பருத்திக்கு.    திருநெல்வேலியிலிருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு செல்லும் தொடர்வண்டியில் காலை 8 மணிக்குக் கிளம்பினால்