Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 33

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 33

அத்தியாயம் – 33

 

“மந்தாகினி இது சரியான முட்டாள் தனம்.மந்திரத்தால மாங்காய் பழுப்பது எல்லாம் கதைல வேணா நடக்கலாம். மந்திரம் செஞ்சு ஒருத்தரோட மனச எப்படி காதலிக்க வைக்க முடியும்? அதுவும் அந்த நாகேந்திரன் உன்னை திரும்பிக் கூட பாக்க மாட்டேங்கிறான்”

 

மந்தாகினி நாகேந்திரனை காதலிக்க வைக்க என்று கங்கணம் கட்டிக் கொண்டு நாகேந்திரனின் புத்தகங்கள், நோட்டு, கைக்குட்டை இப்படி எதையாவது பொருளை எப்படியோ திருடிக் கொண்டு வந்து நம்பூதிரி ஒருவனிடம் பூஜை செய்து, வசிய மந்திரங்களை சொல்லி, அவன் மனதைத் தன் வசப்படுத்தத்  துடிக்கிறாள்.

 

ஒரு காலத்தில் மக்கள் மூடநம்பிக்கையால் இவற்றை நம்பினார்கள். ஆனால் இப்பொழுது படிப்பறிவு பெற்ற மக்கள் இந்த மந்திரங்களை நம்புவதில்லை. ஆனால் இவளுக்கு மட்டும் எங்கிருந்து இந்த மாதிரி புதுப்புது யோசனைகள் தோன்றுகிறது என்பது அவருக்குப்  புரியாத புதிர்.

 

“அதுதான் சுகுமாரன். அவரைப் பாத்து பேச பழக ஆரம்பிச்சா போதும் நான்தான் வேணும்னு அவரே சொல்வார். நீயே சொல்லு… யாராவது ஒரு ஆண்மகன் என்னை வேணாம்னு சொல்லுவானா? எத்தனை பேர் என் காலடியில் விழுந்து கிடக்க தயாரா இருக்காங்க. நாகேந்திரனும் வருவார் ஆனா அதுக்கு முதல்ல அவர் என் முகத்தை பார்க்கணுமே? அந்த ஃபர்ஸ்ட் ஸ்டெப்ப எடுத்து வைக்கத் தான் இத்தனை பாடு படுறேன்”

 

“நீ போற போக்கு சரியில்லை. இருக்கிறத விட்டுட்டு பறக்கிறத பிடிக்க ஆசைப்படற. ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று எச்சரிக்கை செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை சுகுமாரனால்.

 

ஆனால் சுகுமாரன் சொன்னது உண்மை என்பதை விரைவிலேயே உணர்ந்தாள் மந்தாகினி.

 

நாகேந்திரன் கல்ச்சுரல்ஸ் செக்ரெட்டரி என்பதை தெரிந்து கொண்ட பின்பு தானும் ஒரு கலை விழாவில் கலந்து கொள்ள பெயர் கொடுத்தாள்.

 

நாடகத்தில் நடிக்க ஆர்வம் கொண்டவர்களுக்கு வசனத்தைக் கொடுத்து நடித்துக் காட்ட சொன்னார்கள். 

 

“கண்ணகி மறுப்பிலே வந்தூ, கறுப்பு தவறுனுல்லா “ என்று மந்தாகினி ஒப்பித்த  வசனத்தைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் அனைவரும். 

 

“அம்மாடி அது கண்ணகி மரபிலே வந்தவள் கற்பிலே தவறுவதில்லை” என்று எடுத்து சொன்னான் நாடகத்தின் டைரக்டர். 

 

தனக்கும் நாடகத்தில் ஏதாவது ஒரு சிறிய வாய்ப்பு தருமாறு தொல்லை படுத்திய மந்தாகினியை தனது கல்ச்சுரல் செக்கரேட்டரி அறைக்கு அழைத்தான் நாகேந்திரன். அங்கு நாடகத்திற்குத் தேவையான பொருட்கள் மலைபோல ஒரு ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுக்க உள்ளே வந்தும் சென்றும் கொண்டு இருந்தனர் ஆதலால் தனி அறை என்று சொல்வதற்கில்லை. மந்தாகினி மட்டுமல்ல வேறு எந்த ஒரு பெண்ணையும் தனியாக சந்திக்கும் வாய்ப்பினை நாகேந்திரன் உண்டாக்கிக் கொள்வதில்லை. 

 

“மந்தாகினி, இங்க வா… நாடகத்தில் நடிக்க நல்லா தமிழ் பேசத் தெரிஞ்சிருக்கணும்” என்று அவளை தேர்ந்தெடுக்க முடியாததற்கான தன்மையான விளக்கம் தந்தான். 

 

“இந்தக் கலை நிகழ்ச்சியில்  உங்க கூட இணைந்து நடிக்கலாம்னு ஆசைப்பட்டேன். அது முடியாதா?” அவளது கண்கள் கலங்கி விட்டன. 

 

“என்னமா இது… எதுக்கெடுத்தாலும் கண்ணீர் சிந்துற?”

 

அந்த அறைக்குள் எதையோ எடுக்க வந்த சுதர்சன் கண்ணீர் சிந்தும் மந்தாகினியையும், எதிரே அமெரிக்கையாக அமர்ந்திருந்த நாகேந்திரனையும் கண்டு திகைத்தான். 

 

“என் கண்ணீரையும் மனசையும் புரிஞ்சுகிட்டு வாய்ப்பளிப்பிங்கன்னு நம்புறேன்” என்றாள் கேவலுடன். 

 

சுதர்சனால் இந்தக் காட்சியை சகிக்க முடியாது அந்த இடத்தை விட்டு சென்று விட்டான். 

 

மந்தாகினியின் கண்ணீர் வேலை செய்ய, முதல் முறையாக அந்த நாடகத்தில் ஒரு பாடல் காட்சி இணைக்கப்பட்டு அதில் மந்தாகினியின் நடனம் இடம் பெற்றது. 

 

ஆடாத மனமும் உண்டோ? 

நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு 

ஆடாத மனமும் உண்டோ?

 

என்று வெண்ணிற உடை அணிந்து மேகத்தில் பூத்த வெள்ளை ரோஜாவாய் பார்க்கும் இளைஞர்களை எல்லாம் சுண்டி இழுத்தாள். 

 

முல்லைப் பூவில் ஆடும் கரு வண்டாகவே 

முகில் முன்னே ஆடும் வண்ண மயிலாகவே 

 

இருந்தும் கூட 

 

“மந்தாகினி மிக அருமையாக டான்ஸ் பண்ண” என்ற பாராட்டைத் தவிர ஸ்பெஷல் கவனிப்பு எதுவும் நாகேந்திரனிடம் அவளுக்குக் கிடைக்கவில்லை. 

 

இந்த வருடம் நாகேந்திரனின் படிப்பு முடிகிறது. கடந்த ஒரு வருடமாக அவரைக் கவர முயற்சித்தும் மந்தாகினியின் எண்ணம் பலிக்காத ஆத்திரத்தில் இருந்தாள். எப்படியாவது தனது மனதின் ஆசையை வெளிப்படுத்த தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து  காத்திருந்தாள். 

 

“கலைநிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட  எல்லாரும் பார்ட்டி கொண்டாடறதா கேள்விப்பட்டேன். நானும் கலந்துக்கலாம்னு ஆசையா இருந்தேன்”

 

“மந்தாகினி. இது ஆண்கள் மட்டும் கொண்டாட ஏற்பாடு செய்த  பார்ட்டி.முடிய நள்ளிரவாகும்”

 

“நாங்களும் நாலைஞ்சு பெண்கள் இருக்கோமே நாங்க கலந்துக்க ஏதாவது ஏற்பாடு செஞ்சிருக்கலாம்”

 

“இரவு உணவு முடிஞ்சதும் கிளம்புறதா இருந்தால் வாங்க. பாதுகாப்பா வீட்டில் கொண்டு விட யாராவது இருக்காங்களா?”

 

“நான் போன் பண்ணி சொல்லிட்டா என்னை அழைச்சுட்டுப் போக எங்க அண்ணன் வருவாரு”

 

“சரிம்மா ஆபிஸ் ரூமில் போன் பண்ணி சொல்லிடு”

 

நாகேந்திரனை நண்பர்கள் அனைவரும் கடிந்து கொண்டார்கள் “டேய் அவளுக்கு நீ ரொம்ப இடம் கொடுக்குற. ஆம்பளைங்க பார்ட்டின்னு சொல்லியும் எதுக்கு அவ வரணும்னு சொல்றா? இப்ப பாரு இவளால் இன்னும் நாலு தொல்லைகளை கூப்பிட்டுட்டு போக வேண்டியிருக்கு”

 

“சில நேரத்தில் சிலதை தடுக்க முடியாது, இப்ப என்னடா… சாப்பிட்டுட்டு கிளம்ப போறா. அதுக்கப்பறம் நம்ம ராஜ்ஜியம்தான்” என்று உறுதி மொழி அளித்தார். 

 

ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. 

 

நெஞ்சம் பாடும் புதிய ராகம் 

தாளம் உன்னைத் தேடுதே!

 

மெல்லிசைக் கச்சேரி ஒன்று நடக்க, பாடலைக் கேட்டுக் கொண்டே அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் அவள் உண்ட உணவு வகைகள் பலவற்றின் பெயர் அவள் அறியாதது. 

 

இந்த பார்ட்டி முழு ஏற்பாடும் நாகேந்திரன்தான் என்று தோழிகள் கிசுகிசுத்தபோது சந்தோஷமாகவே இருந்தது. காலை உணவு அரிசிக்கஞ்சி என்பது மாறி திருமணத்திற்குப் பின் இதைப் போன்ற பெரிய விடுதிகளில் தயங்காமல் ஒவ்வொரு வேளையும் களிக்கலாம். 

 

தித்திக்க தித்திக்கப் பேசிக் கொண்டு, 

திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு 

வரவை மறந்து செலவு செய்து 

உயரப் பறந்து கொண்டாடுவோம்!

 

அப்போதே வானில் உயரப் பறப்பதை போன்ற ஒரு உணர்வு மந்தாகினிக்கு. 

 

இந்த வெள்ளை உடையில் வானத்தில் இருந்து தேவதை இறங்கி வந்ததைப் போல இருக்க என்று சுதர்சன் சொன்னது கூட அவளை ஒரு தேவதையாய் உணரச் செய்தது.

 

குடும்பமாக உணவு விடுதிக்கு வந்து செல்லும் நேரம் முடிந்துவிட்டதால் மெல்லிசைப் பெண் கிளம்ப, அடுத்ததாக ஆங்கிலப் பாடல்கள் ஆரம்பித்தது.

 

ஜமைக்கன் தொழிலாளிகளின் நாட்டுப்புறப் பாடல் துள்ளல் இசையுடன் ஒலித்தது. இரவு முதல் நட்சத்திரம் உதித்தவுடன் வாழைத்  தோப்புகளில் வாழைத்தார்கள் வெட்டும் தொழிலாளிகள் விழித்து இருப்பதற்காக பாடப்படும் பாடல் அது.

 

ஏழடி எட்டடி உயரத்தார்களை வெட்டி, கணக்கர் கணக்குகளை சரி செய்தவுடன் பனானா போட் எனப்படும் படகுகளில் ஏற்றிவிட்டு, விடியும் பொழுது கிளம்பி வீட்டுக்குச்.  செல்வார்கள். அவர்களது கவலைகளையும் வேதனைகளையும் மறைக்கப் பாடப்படும் பாடலே அது.

 

Work all night on a drink of rum

(Daylight come and we want go home)

 

Stack banana ’til the morning come

(Daylight come and we want go home)

 

Come Mister tally man, tally me banana

(Daylight come and we want go home)

 

அந்த அடிமைகளின் ஏக்கத்தைப் பொதித்த பாடல்களின் பொருளை கூட அறியாமல் அதன் இசைக்கேற்ப துள்ளி நடனமாடிக் கொண்டிருந்தார்கள் மாணவர்கள் அனைவரும்.

 

மற்ற பெண்கள் அங்கிருந்து கிளம்பியும் கூட சுகுமாரன் மந்தாகினியை அழைக்க வரவே இல்லை. 

 

தான் வழியில் அவளது வீட்டில் இறக்கி விடட்டுமா என்று கேட்ட தோழியிடம் தனது அண்ணன் வருவதாக சொல்லி அனுப்பி விட்டாள். 

 

பத்து மணியை நெருங்கிய போது சுதர்சன் அவளிடம் வந்து தான் வேண்டுமானால் வீட்டில் இறக்கி விடவா என்று கேட்டான்

 

“மந்தாகினி, ஒரு முறை எனது மனச வெளிப்படுத்துனதை வச்சு என்னோட நடத்தையை மோசமா நினைக்க வேண்டாம். நான் போலீஸ்காரர் பையன் என்பதால் ஆட்டோக்காரர்கள் அனைவரையும் தெரியும். தெரிந்த ஆட்டோக்காரரிடம் சொல்லி பத்திரமாக வீட்டில் இறக்கி விடுறேன். உன் அருகில் அமர்ந்து கூட நான் வரமாட்டேன். பின்னாடி வேற ஆட்டோல வரேன்”

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தூரத்திலிருந்து கவனித்த நாகேந்திரனின் முகத்தில் சுருக்கம். ஏனென்றால், சுதர்சன் மந்தாகினிடம் பேசும் பொழுது அவள் காண்பித்த உடல் மொழிகள்தான். அவளுக்கு சுதர்சனை சுத்தமாக பிடிக்கவில்லை என்று காண்பித்தது.

 

மந்தாகினியின் பாதுகாப்பு அவரது பொறுப்பாயிற்றே. இந்த சுதர்சன் என்ன செய்து கொண்டிருக்கிறான். சற்று எரிச்சலுடனையே அவர்களை நெருங்கினார்

 

“என்ன மந்தாகினி,  எனி ப்ராப்ளம்?” என்றுஅமைதியான குரவிலேயே கேட்டார்.

 

‘நாகேந்திரா! வாடா திருட்டு பயலே… மந்தாகினி கிட்ட யாரையும் பேசக்கூட விட்றாத’ என்று எண்ணியவாறு நாகேந்திரனை முறைத்தான் சுதர்சன்.

 

“யாரும் வரவில்லையா, நான் வேண்டுமானால் வீட்டில் கொண்டு வந்து விடட்டுமா என்று சுதர்சன் கேட்டார்.நான் என் அண்ணன் வந்து விடுவார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்” என்றாள் அமைதியாக

 

“தட்ஸ் இட் முடிஞ்சிடுச்சு. சுதர்சன் மந்தாகினியோட அண்ணன்தான் பிக்கப் பண்ண வரேன்னு சொல்லி இருக்காரே. நீங்க உங்க வீட்டுக்குப் போங்க. மந்தாகினியோட பாதுகாப்பு என்னோட பொறுப்பு அத பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்”

 

நாகேந்திரன் பேசுவது கத்தரிப்பது போல் இருந்ததால் சுதர்சன் வேறு வழியின்றி மந்தாகினியை பார்த்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

 

அவன் சென்றவுடன் “என்ன மந்தாகினி உங்க அண்ணன் இன்னும் வரல” என்று கேட்டார் நாகேந்திரன்.

 

“தெரியல எனக்கும் கூட ஏன் இன்னும் காணோம்னு ரொம்ப பயமா இருக்கு. இதுவரைக்கும்இப்படி ஆனதே இல்ல. அவருக்கு வழியில ஏதாவது ஆயிருக்கும்னு பயமா இருக்கு” என்றாள் கலங்கிய கண்களுடன்.

 

கண்ணீர் என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை சரியாக பயன்படுத்தி இருக்கிறாளே நாகேந்திரனின் எரிச்சல் அப்படியே மறைந்தது

 

“இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் அவர் வரலைன்னா உன்னை வீட்டில் பத்திரமா கொண்டு போய் விடுறதுக்கு நானே ஏதாவது ஏற்பாடு செய்கிறேன். இத்தனை நேரம் கழித்து இந்த இடத்தில் தனியா நீ இருப்பது சரி இல்லை” என்றார்.

 

அடுத்து அரை மணி நேரம் ஆகியும் சுகுமாரன் வரவே இல்லை. ஏனென்றால் அவள்தான்  சுகுமாரனிடம் தன்னை அழைத்துச் செல்ல வரும்படி சொல்லவே இல்லையே.

 

வேறு வழியே இல்லை. தான் தான் அவளை பத்திரமாக வீட்டில் சேர்ப்பதற்கு பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார் நாகேந்திரன்.

 

 ஏனென்றால் இன்னும் சற்று நேரத்தில்தண்ணி பார்ட்டி ஆரம்பித்து விடும். நிலைமை இன்னும் மோசம் ஆகும். இப்பொழுதே அவரது நண்பன் ரகசியமாகக் குடிக்க ஆரம்பித்து விட்டான்.அவர்கள் அனைவருக்கும் மந்தாகினி அங்கு இருப்பது பயங்கர எரிச்சல்.

 

A beautiful bunch of ripe banana

(Daylight come and we want go home)

Hide the deadly black tarantula

(Daylight come and we want go home)

 

என்று பாட்டு இப்போது எப்படி கனிந்த வாழைப்பழத்தினுள் உயிரையே பறிக்கும் விஷத் தன்மை கொண்ட கருப்பு சிலந்தி ஒளிந்துக் கொண்டிருக்கும் என்று சொன்னது. 

 

“டேய் ஜம்போ, வா நம்ம ரெண்டு பேரும் போயி மந்தாகினிய பத்திரமா வீட்ல விட்டுட்டு வந்துரலாம்” என்று தனது நண்பர் ஜம்புலிங்கத்தை அழைத்தார்

 

“இது என்னடா இவளோட பெரிய தலைவலியா இருக்கு. நம்ம கால்ல சுத்துன பாம்பாட்ட நம்ம பின்னாடியே சுத்திட்டு இருக்கா இன்னொரு தடவை மந்தாகினிய எதுக்கும் கூப்பிடாத. அவளே வரேன்னு சொன்னா கூட மூஞ்சில அடிச்ச மாதிரி வராதன்னு சொல்லிடு அதான் உனக்கும் நல்லது நமக்கும் நல்லது” என்றார்

 

“அதேதான் நானும் நினைக்கிறேன் ஜம்பு, நான் அவ கூட தனியா போயிட்டு வர முடியாது. இந்த நேரத்துல வேற பொண்ணுங்களும் இங்க இல்ல. அதனால தான் உன்னை கூட கூப்பிடுறேன்” என்றார்

 

“ஜம்பு பேசாம உங்க அம்மா கிட்ட சொல்லி இவளை பத்திரமா வீட்ல விட்டுட்டு போ வர சொன்னா என்ன நம்ம ரெண்டு ஆண்களும் ஒரு பெண்ணை வீட்டில் இறக்கி விட்டால் சரிப்பட்டு வராதே” என்றார்

 

“டேய் பார்ட்டிக்கு வந்தா எங்க அப்பா என்னை வீட்டை விட்டு துரத்துவதற்கு வழி சொல்றியே. பார்ட்டிக்கு பொம்பள பிள்ளைகளும் வந்து இருக்குன்னு தெரிஞ்சதுன்னா எங்க வீட்டுல செருப்பால அடிப்பாங்கடா”

 

இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டதை நாகேந்திரனும் உணர்ந்தார். “சரி ஒன்னு செய்யலாம். இந்த ஹோட்டல்ல வேற பெண்கள்  யாராவது இருந்தா அவங்களையும் கூட ஏத்திக்கலாம். இதனால அந்த பொண்ணு பேரு கெட்டுப் போகாதில்லையா”

 

அவர்களுக்குத் தோதாக மெல்லிசை பாடி முடித்திருந்த பாடகியும் சிக்கினார். நாகேந்திரன் விதியினை அவரை அறியாமலேயே முறியடிக்க முயற்சிக்கிறார். ஆனாலும் விதி வலியது அல்லவா? 

 

ந்தாகினிக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. கார் பயணத்தில் நாகேந்திரனிடம் தனது மனதைத்  திறந்து காட்டிவிடலாம் என்று பெரிதும் நம்பி இருந்தாள். ஆனால் இந்தப் பயணம் நான்கு நபர்களுடன் கூட்டமாக அமையும் என்று அவள் கனவு கூட காணவில்லை. 

 

இதற்காக எவ்வளவு பெரிய ரிஸ்க்குகளை எடுத்து இருக்கிறாள். ஆண்கள் மட்டுமே பங்கு கொள்ளும் விருந்தில் வலுக்கட்டாயமாக தன்னையும் இணைத்துக் கொண்டது. அண்ணனை வரச் சொன்னேன் என்று பொய் சொன்னது. தோழிகள் அனைவரையும் அனுப்பிவிட்டு தனியாக காத்திருந்தது

 

தனியாக நிற்கும் தன்னிடம் சுதர்சன் பேச வருவான் என்று தெரிந்தே ஒரு ஓரமாக நின்று நாகேந்திரனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுத்தது. இத்தனை திட்டங்களும் எதற்காக அவளும் நாகேந்திரனும் தனியாக பேசும் அந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக மட்டுமே.

 

இவளுக்கு இன்னும் ஒரு வருடம் படிப்பு இருந்தாலும் நாகேந்திரன் அந்த வருடம் கல்லூரி படிப்பு முடிந்து தனது ஊருக்குச் செல்கிறான். இனிமேல் அவனை எப்படி பார்ப்பாள். அருகில் இருந்தே அவனுடன் பேச முடியவில்லை ஊருக்கு சென்றவனை எங்கிருந்து தேடி கண்டறிந்து தனது மனதினை சொல்வாள்.

 

கார் கிளம்பியதும் இருளில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த சுதர்சன் கோவத்தில் தனது ஸ்கூட்டரை ஓங்கி ஒரு உதை விட்டான். 

 

கடைசில மந்தாகினியை இரவு நேரத்தில் தனியா கூட்டிட்டு போற அளவுக்கு உங்க உறவு வளந்துடுச்சா? இனிமேல் மந்தாகினியை மறந்துட்டு வேண்டியதுதான். கண்களில் நீர் வழிய கீழே கிடந்த ஸ்கூட்டரை எடுத்து ஸ்டார்ட் செய்யக் கூடத் தோன்றாமல் தள்ளிக் கொண்டே தனது வீட்டிற்கு சென்றான். 

 

காரில் இருந்து இறங்கும் முன் தனது கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அழகான மயக்கும் சிரிப்புடன் 

 

“நாகேந்திரன், ஒரு நிமிஷம் கீழ இறங்க முடியுமா?” என்றாள் மந்தாகினி.

 

புரியாமல் கீழே இறங்கினார் நாகேந்திரன். அவளது கையில் ஒரு அழகான பை இருந்தது. அதனை நாகேந்திரனிடம் தந்தாள். 

 

“எனக்காக எவ்வளவோ உதவி செய்து இருக்கீங்க. பதிலுக்கு நான் தரேன் இந்த கிப்ட் நீங்க கண்டிப்பா ஏத்துக்கணும். தயவு செய்து வீட்ல போயி தனியா இருக்கும்போது  இந்த கிப்ட்ட  பார்த்துட்டு உங்களுக்கு புடிச்சிருக்கான்னு  என்கிட்ட நாளைக்கு சொல்றீங்க. நான் உங்களோட பதிலுக்கு காத்திருப்பேன்” என்றாள்.

 

புரியாமல் அந்த பரிசினை வாங்கிக் கொண்ட நாகேந்திரன் “சரிம்மா பத்திரமா போயிட்டு வா” என்றார்.

 

மறுபடியும் பார்ட்டிக்கு வந்தவர் அந்தப் பரிசினைப் பற்றி மறந்தே போனார். இரவு வீட்டிற்கு சென்றபோது ஜம்புலிங்கமும் அவருடன் இணைத்துக் கொண்டார். 

 

“வீட்டுக்கு போனேன் இன்னைக்கே எனக்குத் தலை முழுகிடுவாங்கடா. நைட்டு உன் வீட்டில் தங்கிக்கிறேன்”

 

“அப்படி எதுக்குடா குடிக்கணும்” 

 

“விடுடா… கல்லூரி முடிச்சாச்சு. நாக்பூர்ல வேலையும் கிடைச்சுருக்கு. அடுத்த மாசம் கிளம்பனும். அதுக்காகத்தான் இன்னைக்கு ஒரு நாள் ஜாலியா என்ஜாய் பண்ணேன்” என்றார் ஜம்புலிங்கம். அவரது கையில் மந்தாகினி தந்து சென்ற பரிசு தட்டுப்பட்டது. 

 

“டேய், இது என்னடா ஒரு கிப்ட். யாரு தந்தது? வித்யாசமா ஏதோ காப்புக் கயிறு மாதிரி ஒரு கயித்துல கட்டிருக்கு”

ஏனென்றால் மந்தாகினி மூடத்தனத்தின் உச்சத்தில் மந்திரித்த கயிற்றால் பரிசினைக் கட்டியிருந்தாள். மந்திரம் சொன்னால் நாகேந்திரன் வந்துவிடுவானா? என்ன ஒரு நம்பிக்கை அவளுக்கு. 

“அந்த மந்தாகினி என்னவோ தாங்க்ஸ்னு சொல்லி இதைக் கொடுத்தா. பாத்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்ல சொன்னா” என்றார் நாகேந்திரன் அலட்சியமாய்.

 

“பிடிச்சிருக்கான்னு சொல்லச் சொன்னாளா? அவ போக்கே சரியில்லை. எங்க அந்த கிப்ட்டை பிரி”

 

“அவ என்னை மட்டும்தாண்டா பிரிச்சுப் பாக்க சொன்னா”

 

“அதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு. அவகிட்ட என்னமோ கள்ளத்தனம் இருக்குடா.  உன்கூட இருக்குறவாங்க யாருக்கும் தெரியாம உன் கைல கொடுத்தருக்கான்னா எனக்கென்னமோ சரியா படல. என் கண்ணு முன்னாடியே பிரி”

 

வேறு வழியின்றி பிரித்துப் பார்த்தார்.  பெரிய இதயம், அதன் நடுவே இரண்டு காதல் கிளிகள் அலகோடு அலகு சேர்த்து முத்தமிட்டுக் கொண்டிருந்தன. 

 

அத்தோடு ஒரு சிறு கடிதம். 

 

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நொடியும் சொல்லத்தான் நினைக்கிறேன். வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்.  இன்று சொல்ல முடியாவிட்டால் சொல்ல முடியாமல் இனி சொல்ல முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்துடன் மனதை தைரியப்படுத்திக் கொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 

 

நாம் பார்ப்பது கொஞ்சம் நேரமே என்றாலும் அதில் என்னை மறந்து விடுகிறேன். அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்தக் கொஞ்சம் நேரம் விரைவில் கொஞ்சும் நேரமாக மாறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். 

 

எதிர்பாராத இந்தக் கடிதத்தைக் கண்டு அதிர்ந்தார் நாகேந்திரன். 

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 33”

Leave a Reply to Sumathi mathi Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35

அத்தியாயம் – 35  ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள் மந்தாகினி. நாகேந்திரன் ராஜ வம்சத்தினன் என்பதாலா? அது மட்டும் அவளது ஆத்திரத்திற்குக் காரணமில்லை. அவன் பட்டாபிஷேகத்தினை ஒட்டி அவளுக்கு இழைக்கப்பட்ட அவமானம்தான். பட்டாபிஷேக விழா முடிந்து  நகர்வலமாக சென்று அவர்களது குலதெய்வமான முருகப்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 42 (நிறைவுப் பகுதி)தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 42 (நிறைவுப் பகுதி)

அத்தியாயம் -42 நாட்கள் உருண்டோடி வாரங்களானது. அன்பானவர்கள் ஆறுதலாலும் தேறுதலாலும் அபிராம் மீண்டு வந்தான். ஆனாலும் பல நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.  நாகேந்திரன் அவன் உடல் தேறும்  வரை அங்கிருந்து விட்டுத்தான் சென்றார். மங்கையும் நாகேந்திரனும் அவனை அப்படியே விட்டு

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 10தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 10

அத்தியாயம் – 10   காலை குளிக்கும்போது கூட அதே நினைப்பு செம்பருத்திக்கு. யார் இந்த சிங்கம்? ஏன் இவ்வளவு பில்ட் அப் இவனுக்கு. இதுவரை சொன்னதில் ஒருத்தன் கூட நல்லவிதமான அபிப்பிராயத்தை சொல்லல. தான் அறிந்த விஷயங்களைப் புள்ளியாய் எடுத்துக்