Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 31

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 31

அத்தியாயம் – 31

 

ன்று, லங்கையில் சேச்சியின் கதையை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும். இருட்ட ஆரம்பித்தது. ஒருவரின் முகத்தை மற்றவர் பார்க்க கூட முடியாத அளவிற்கு இருள் கனமான திரையை எழுப்பியிருந்தது. வெளியில் இருந்த மின்விளக்குகளை காளியம்மாள் ஓவியா மற்றும் வீட்டினர் அனைவரும் ஏற்றியிருந்தனர்.

 

செம்பருத்தி எழுந்து மின்விளக்குகளைப் போட்டாள். அந்த வெளிச்சத்தில் அங்கிருந்த அனைவரின் முக பாவனைகளும் அவர்களது மனதில் இருந்த உணர்ச்சியைத் தெளிவாக எடுத்துக்காட்டியது.

 

கதையினை உள்ளது உள்ளபடி எடுத்து கூறும் தீர்க்கம் சேச்சியின் முகத்தில். முன்பே தெரிந்திருந்த செய்தி ஆதலால் அமைதியான நதியினை போன்ற ஒரு தெளிவு அவினாஷின் முகத்தில். ஆச்சரியமான விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஆவல் ராதிகாவின் முகத்தில். அவளது கைகளைப் பற்றி இருந்த அபிராமின் முகத்திலோ உண்மையான வாரிசு மங்கைதான் என்று தெரிந்த பேரதிர்ச்சி. காவியாவின் முகத்திலோ உண்மைகள் வெளி வருகிறது நமது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவோ என்ற கலக்கம்.

 

“சொல்லுங்க லீலாம்மா, அப்புறம் என்ன ஆச்சு? அப்பா உங்க மங்கைய கல்யாணம் பண்ணிக்கல இல்லையா? எங்க அம்மாவ தான கல்யாணம் பண்ணிக்கிட்டாரு? எங்க அம்மாவும் அப்பாவும் தானே உண்மையா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? இவனோட அம்மா கூட நடந்தது கட்டாயத்  திருமணம் தானே? ” அவினாஷைச் சுட்டிக்காட்டி அபிராம் கேட்டான்.

 

°இதுக்கெல்லாம் பதில் சொல்லணும்னா முதல்ல என் உடம்பில் தெம்பு வேணும். காலையில இருந்து பட்டினியா இருக்கறதுனால எனக்கு இப்ப தெம்பு இல்ல” என்றார் சேச்சி.

 

°காலைல இருந்து பட்டினியாக சாப்பிடாமல் இருக்கீங்க உங்க உடம்புக்கு என்னாகும்?”

 

” நீங்க மாத்திரை எல்லாம் சாப்பிடணும் இல்ல ” என்று அவினாஷ் ஒரு புறமும், அபிராம் ஒருபுறமும் மாற்றி மாற்றி அவரைக் கடிந்துக் கொண்டனர்.

 

“இதெல்லாம் நல்லா பேசுங்க. நீங்க சாப்பிடாம எப்படி சேச்சி மட்டும் சாப்பிடுவாங்க?” என்று செம்பருத்தி அவர்கள் இருவரையும் கடிந்து கொண்டாள்.

 

“இன்னொரு திருத்தம் அபி சார். உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறதுல இருந்து சேச்சி மேரி மாதாவுக்காக ஃபாஸ்டிங் இருக்காங்க. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும்தான் சாப்பிட்டுட்டு இருக்காங்க” என்று சொன்னாள்.

 

 இதனை கேட்டதும் அபிராம் மனது கலங்கிவிட்டது.

 

காலை அவன் எழுந்ததும்  செம்பருத்தி மங்கையுடன் காலை உணவு அருந்த சென்றிருக்கிறாள் என்ற விஷயத்தை காவியாவின் மூலம் கேள்விப்பட்டதிலிருந்து மிகவும் கொதிப்புடன் இருந்தான். 

 

செம்பருத்தி திரும்பி வந்த நிமிடம் வார்த்தைகள் தடித்து அவினாஷுடன் சண்டையாக வெடித்தது. மதியத்திற்கு மேல் தான் சேச்சி கதை சொல்ல ஆரம்பித்தது. இப்பொழுது இருட்டும் வேளையாகி விட்டது. ஆக வீட்டில் யாரும் காலையிலிருந்து உணவு உண்டிருக்கவில்லை என்பது அபிராமுக்குப் புலனாகியது.

 

அவனது வீட்டில் இருப்பவர்கள் பட்டினியாக கிடக்கலாமா? அது அவனுக்கு அவமானம் இல்லையா? என்ற விருந்தோம்பல் பண்பு உடனடியாக அபிராமின்  மனதில் தோன்றியது.

 

“யாரும் பட்டினி கிடக்க வேண்டாம் வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என்றான் அபிராம் தன் மனதைத் தேற்றிக்கொண்டு.

 

“ஹோட்டல்ல இருந்து சாப்பாட்ட எல்லாருக்கும் ஆர்டர் பண்ணிட்டேன்” என்றாள் செம்பருத்தி.

 

“எல்லாரும் யாருக்காக வெயிட் பண்றீங்க. வாங்க சாப்பிடலாம். எனக்கு ரொம்ப பசிக்குது” என்று   கிளம்ப, ஒரு இன்ச் கூட நகராமல், ஜன்னலின் வழியே  இருளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவினாஷை கண்களால் சுட்டிக் காட்டினாள் ராதிகா.

 

அபிராமுக்கு மனது சுருக்கென்று தைத்தது. 

“உன் பிரண்டையும் சாப்பிட கூட்டிட்டு வா செம்பருத்தி”

என்ற அவனின் வார்த்தைகள் அவினாஷின் மனக்காயத்தை ஆற்றவில்லை.

 

பொறுத்துப் பார்த்த அபிராம் அவனிடம் “ஏன் உன்னை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமா? இதுவும் உன் வீடுதானே? சாப்பிட வர மாட்டியா?” என்றான்.

 

அதில் தொணித்த உரிமை அவிநாஷின் மனதை அசைத்தாலும், அதைவிட பலமாக அவனது வார்த்தைகள் தாக்கியிருந்தது. கத்தியால் ஆழமாக குத்தி விட்டு ஆயின்மென்ட் போட்டால் புண் சரியாகிவிடுமா என்ன? அவனுக்கு வலியும் குறையவில்லை, காயமும் ஆழமாகவே இருந்தது.

 

அவனை சில வினாடிகள் ஆழ்ந்து பார்த்த அபிராம் “சாப்பாட்டை எல்லாம் இங்கே எடுத்துட்டு வந்துருங்க. நம்ம எல்லாரும் இங்கே உட்கார்ந்து சாப்பிடலாம்” என்றான்.

 

“போலீஸ்காரங்க?” என்று செம்பருத்தியிடம் மெதுவாகக் கேட்டான் அவினாஷ். 

 

“அவங்க எங்க அத்தை குடும்பத்தை விசாரிச்சுட்டு இருக்காங்க. வீட்ல இருக்குற மத்தவங்களுக்கு  காளியம்மா சாப்பாடு  போட்டுருவாங்க”

 

அடுத்த பத்து நிமிடங்களில் உணவு ட்ரேயை தள்ளிக் கொண்டு பணியாட்கள் பரிமாற வந்துவிட்டனர். தனது இருக்கையில் இருந்து எழுந்த அபிராம், உதவி செய்த செய்ய வந்த வேலையாட்களைத் தடுத்துவிட்டு,தானே தனது கையினால் ஒரு தட்டில் உணவினைப்  பரிமாறி, பழ ரசத்தையும் ஒரு டம்ளரில் நிரப்பினான். பின்னர்,சற்று தடுமாறியபடியே நடந்து சென்று, தனது கையில் இருந்த உணவு தட்டினையும் பழ ரசத்தையும் அவினாஷிடம் நீட்டினான்.

 

“நான்  பேசின  வார்த்தை ரொம்ப தப்புதான். என்னை மாதிரியே தானே நீயும் உங்க அம்மா மேல பிரியம் வச்சிருப்ப. ஒரு அம்மாவை நான் அப்படி பேசி இருக்க கூடாது மன்னிச்சுக்கோ” என்றவனை அறையில் இருந்தவர்கள் அனைவரும் ஆச்சிரியத்துடன் பார்த்தார்கள்.

 

அபிராமுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா என்று வியந்து போய் பார்த்துக்கொண்டே நிற்க, அவினாஷின் கைகளைப்  பற்றி, அபிராமிடமிருந்து  தட்டினை வாங்கச் செய்தாள் செம்பருத்தி.

 

கதையின் ஆரம்பத்திலேயே அபிராமின் மனதில் இத்தனை மாற்றம் என்றால், கதை முடியும் போது என்ன ஆகும் என்று எண்ணியபடியே செம்பருத்தி பார்த்தாள். ஏனென்றால், அவளுக்கு தரப்பட்ட டாக்குமெண்ட்ஸ் மூலமும் கடிதங்கள் மூலமும் அந்தக் கதையின் போக்கினை ஓரளவு யூகித்தே வைத்திருந்தாள்.

 

இதுவரை கஞ்சி போட்ட போலீஸ் யூனிஃபார்ம் போல் மிடுக்காக இருந்த அபிராம், தனது நிலையில் இருந்து இறங்கி வரவும், அவினாஷும்  தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டான். 

 

அனைவரும் அமைதியாக சாப்பிட்டார்கள். இல்லை இல்லை… உணவைக்  கொறித்தார்கள். அதுவும் லீலாம்மா சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தினாலே அண்ணன் தம்பிகள் இருவரும் உண்டதாகப் பேர் பண்ணினார்கள். அவர்களின் வழியைப் பின்பற்றி, செம்பருத்தியும்  ராதிகாவும் நடந்தார்கள். 

 

சேச்சி எப்பொழுதுமே அளவுச் சாப்பாடு தான். அதனால் பெரிதாக ஒன்றும் சாப்பிடவில்லை. அதிசயத்திலும் அதிசயமாக காவியாவும் உணவை மிக மிகக்  குறைவாக எடுத்துக் கொண்டாள். அவள் வயிற்றில் சுரந்த பய அமிலம் காரணமாக இருக்குமோ?

 

உண்டு முடித்ததும், லீலாம்மா தனது கதையைத் தொடர்ந்தார். அவர் நாற்காலியில்  சாய்ந்து கொள்ள, பாட்டியிடம் கதை கேட்கும் பேரப் பிள்ளைகளைப் போல, அவரைச் சுற்றிலும் வளர்ந்த குழந்தைகள். இந்த முறை, கதை சென்னையில் ஆரம்பித்தது. அதுவும் எண்பதுகளில், நாகேந்திரனின் கல்லூரிக் காலத்தில் ஆரம்பித்தது.

 

ரு ஆணை நேருக்கு நேர் நிமிர்த்து பார்த்து விட்டாலே காதல். சக மாணவனிடம் ஹோம் ஒர்க் நோட் தா என்று கேட்டால் அதுதான் உரிமை. பெண்கள் தந்தை, உடன்பிறந்தவர்களைத் தவிர கணவனிடம் மட்டும்தான் அப்படி உரிமையாகக் கேட்க முடியும். அதனால அது கண்டிப்பாகக் காதல் தான். இப்படி 80களில் common பார்வையை எல்லாம் காமன் பார்வையாக்கிக் கொண்டாடியது தமிழ் கூறும் நல்லுலகம். 

 

எல்லா காலகட்டத்திலும்  புத்திசாலிகள் மற்றும் சுயநலக்காரர்கள் இந்த சமுதாயத்தின் கோட்பாடுகளைத் தங்கள் நலத்திற்காக வளைத்துக் கொள்ளவே செய்தார்கள்.

 

சென்னையின் ஜன சந்தடி நிறைந்த திருவல்லிகேணியின் தெருவில் நுழைந்தது அந்த பச்சை நிற பஜாஜ். மாடுகள் சாவதானமாகத் திரிய, பிளாட்பார்ம் சிறு கோவில்களில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டார்கள் மக்கள். ஐந்தாறு நிமிடப் பயணத்தில் அந்த சந்தடி சற்று குறைந்தது.

 

‘ராணித் தேனீ’ என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த பெரிய காம்பவுண்டுக்குள்  நுழைந்து, இருபுறமும் பத்து பத்து என்று கட்டப்பட்டிருந்த ஒற்றை அறை லைன் வீடுகள்  முன்பு வண்டியை நிறுத்தினார் சுகுமாரன்.  

 

எதிரே இருந்த டீக்கடையில் சிலர் அமர்ந்து, பள்ளி கல்லூரி செல்லும் பெண்களைப் பார்த்து  பாட்டுப் பாடிக் கொண்டிருந்தனர். 

 

ஹே ஆத்தாஆத்தோரமா வாறியா?

 நான் பார்த்தா பாக்காமலே போறியா?

அட அக்கம் பக்கம் யாரும் இல்ல

அள்ளிக்கலாம் வா புள்ள…

 

பற்களைக் கடித்தார் சுகுமாரன். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து பெண் பிள்ளைகளை வீட்டினுள் அடைத்து வைக்கவும் பொருளாதாரம் இடம் தர வில்லை. வெளியே அனுப்பவும் பகீரென்று இருக்கிறது. அவருக்கு மட்டும் பணம் இருந்தால் அவரது வீட்டுப் பெண்களை பத்திரமாக பல்லக்கில் வைத்து அழைத்து செல்வார். எப்போது அந்த அதிர்ஷ்டம் கதவைத் தட்டப் போகிறதோ தெரியவில்லை. 

 

அவர் தனது வீட்டுப் பெண்களை மட்டுமல்ல தந்தையின் நண்பரான கிருஷ்ணன்குட்டியின் மகள் மந்தாகினியைக் கூட முடிந்த அளவு பாதுகாப்பாகவே அழைத்துச் செல்வார். 

 

மந்தாகினி  அவருக்கு உடன் பிறவா சகோதரியைப் போன்றவள். இப்போதுதான் சில வருடங்களுக்கு முன்னர் மதராஸ் வந்து இறங்கி இருக்கிறார்கள். இங்கு இன்னும் எத்தனை நாள் வாசமோ தெரியவில்லை. ஏனென்றால் கிருஷ்ணன்குட்டி செய்த வேலை அப்படி. 

 

சீட்டு பிடிக்கிறேன் என்று அக்கம் பக்கம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டு ஊரை விட்டு குடும்பத்தோடு ஓடி வந்துவிட்டார். சுகுமாரனின் தந்தையும் அப்படியேதான். நண்பர்கள் இருவரும் இந்த மாதிரி குறுக்கு வழியில் சிந்திக்காமல் ஒரு குமாஸ்தா வேலைக்குச் சென்றிருந்தால் கூட சொந்த ஊரில் கவுரவமான வழியில் பிழைத்திருக்கலாம். 

 

காம்பவுண்டு வாசலில் ஒரு பெரிய பன்னீர் மரம் பூக்களை சிதற விட்டிருந்தது. பூக்களின் மணம் அந்தப் பகுதியில் எங்கும் நிறைந்து நான் இங்கிருக்கிறேன் பாரேன் என்று கூவியது. பன்னீர் பூக்கள் மணம் ஆரோமா தெரபி மாதிரி வேலை செய்து மனதை அமைதிப் படுத்தும். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் எரிச்சல் கோபம் என்று ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மிகவும் நல்லது. 

 

அதனால்தான் அந்தக் காலத்தில் வீட்டின் முன்பு பன்னீர் பூ மரம் வளர்ப்பார்கள். ஆனால் பன்னீர் மரம் பணத்தைக் காய்ப்பதில்லையே. சீக்கிரம் அதனை வெட்டி விட்டு அந்த இடத்தில் ஒரு குடுத்தனத்தை வைக்க வீட்டுக்காரர் யோசித்துக் கொண்டிருக்கிறார். யாரையாவது குடி வைத்தால் மாதாமாதம் சென்னையில் சில நூறுகள் உத்திரவாதமாக வரும். 

 

வீட்டு வாசலில் தனது பச்சை நிற பஜாஜ் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வெளியே இருந்தே குரல் கொடுத்தார் சுகுமாரன்

 

“மந்தாகினி ரெடியா? காலேஜுக்கு லேட் ஆச்சு வா”

 

“வந்துட்டேன்”

 

அடி மேல் அடி எடுத்து வைத்து பூ மெத்தை போட்டு வைத்திருந்த வாச புஷ்பங்களின் மேல் நடந்தன அந்த முயல் குட்டி பாதங்கள். வெண்மையாய் மென்மையாய்  இருந்த பாதங்களில் உள்ள நகங்கள் ஒவ்வொன்றும் நகப் பூச்சியின் உதவியால் இளஞ்சிவப்பு முத்தாய் சுடர் விட்டன. பாதத்திற்கு மேலிருந்து கழுத்து வரை ஷிஃபான் புடவை தழுவி அவளது அழகை எல்லாம் மறைத்திருந்தது. 

 

மந்தாகினியின் முக அழகை வருணிக்காமல் இருக்க முடியவில்லை. சாண்டில்யனின் வருணனையில் ஒரு பெண்ணைப்  பார்த்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருப்பாள். 

 

கிரேக்க நாட்டின் சலவைக் கற்களால்  செதுக்கப்பட்ட தெய்வீக முகம் போன்றதொரு வதனம். அவளது கரிய புருவங்கள் வேண்டிய அளவுக்குத் திட்டமாக வளைந்திருந்தன. கண்ணிமைகள் சங்கு மலரின் மேல் மூடியைப் போல வெண்மையாக இருந்தன. இமை ரோமங்கள் மலரின் நுனிக் கருப்பைப் பெற்றிருந்தது.

 

 கடல், போகிற போக்கில் விசிறி போல ஒதுக்கும் கிளிஞ்சல்களின் வேலைப்பாடு உயர்ந்ததா இல்லை இவளது இமைகளின் அழகு உயர்ந்ததா என்று பஞ்சாயத்து கூட்டி முடிவு செய்யலாமா? 

 

கன்னங்களில் லேசாக ஆங்காங்கே எட்டிப் பார்த்து மறைந்த  பவளங்கள் சிகப்பா இல்லை அவளது ரத்த ரோஜா இதழ்கள் சிவப்பா என்ற கேள்விக்கு  கற்றறிந்த அறிஞர்கள் கூட பதிலளிக்க இயலாது திணறுவார்கள். 

 

“ராணி தேனீ வந்துடுச்சுடா” எங்கோ ஒரு குரல் ஒலிக்க பாட்டு மாறியது. 

 

மானஸ மயிலே வரூ 

மதுரம் நுள்ளித் தரூ!

 

மானே மதுர கரும்பே! 

மலர் தேனீ  மதன குழம்பே!

 

என்று ஒருவன் பாட, எங்கோ ஒரு ஸ்பீக்கர் அலறியது 

 

சினோரீட்டா ஐ லவ் யூ 

மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

அழகோ அழகு அதில் ஓர் உறவு

அருகே இருந்து தவிக்கும் மனது

 

தலைக்கேறிய கோபத்தை எல்லாம் காட்டி ஸ்கூட்டரை ஓங்கி உதைத்து ஸ்டார்ட் செய்தார் சுகுமாரன். 

 

“இந்த இடத்தை மாத்தி வேற பகுதிக்குப் போகணும்”

 

“வேற பகுதின்னா” என்றாள் மந்தாகினி. 

 

“கொஞ்சம் பாஷா… வெறிக்க வெறிக்க பாக்குற, பின்னாடி சுத்துற கூட்டம் இல்லாத பகுதிக்கு”

 

“போயஸ் கார்டன், திநகர் இப்படி”

 

“நிம்மதியா போகலாம்”

 

“பஸ்ஸில் போனா கூட இப்படித்தான். ஒரு நல்ல கார்”

 

“நான் ஸ்கூட்டரே போதும்னு நினைச்சேன். கார் அமைஞ்சா சூப்பர்”

 

“சமையலுக்கு ஆள், ட்ரைவர் இதெல்லாம்”

 

அவள் விளையாடுகிறாள் என்று அப்போதுதான் கண்டுகொண்டார் சுகுமாரன். 

 

“இதெல்லாம் சாத்தியமா? ஒண்டு குடுத்தனத்துக்கு வாடகையே தர ததிங்கினத்தோம் போட வேண்டியிருக்கு. நான் சொன்னதை யோசிச்சியா? பேசாம கல்யாணம் பண்ணிக்கோ”

 

“எனக்கு பசிக்குது. சாப்பாடு வேணும்” என்றாள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல். வீட்டிலிருந்து வருபவள் சாப்பிடாமலா வருவாள்?

 

பையில் நூறு ரூபாய் வைத்திருக்கிறார். அதுவும் அவசரமாக வீட்டு செலவுக்குத் தேவை. மந்தாகினி இப்படித்தான் நிலமை புரியாமல் பேசுவாள். 

 

“சாயந்தரம் போலாமா?”

 

“இப்பத்தான் பசிக்குது. பசிக்கிறப்பத்தானே சாப்பிடணும். பயப்படாம வண்டியை புகாரிக்கு விடு. என்னை சந்திக்க ஒருத்தர் அங்க காத்திருக்கார்”

 

புரியாமல் அவளுடன் சென்றார் சுகுமாரன். அங்கு பரிட்சை ரிசல்ட் பார்க்கும் பதட்டத்துடன் காத்திருந்தான் ஒருவன். 

 

காலை புகாரியில் மசாலா தோசை, பூரி, திருப்தியாய் பில்டர் காபி உண்டு முடிக்கும் வரை அவனிடம் பல கேள்விகளைக் கேட்டாள் மந்தாகினி. 

 

பேசி முடித்ததும் “சாரி மோகன். நம்ம ரெண்டு பேருக்கும் திருமணம் சரிப்பட்டு வராது. உங்களுக்கே இது புரியும்னு நினைக்கிறன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். 

 

“இதென்னது மந்தாகினி. யாரிவன்?”

 

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு கேட்டான். திருச்சி பக்கம் ஒரு கிராமத்து மிராசுதாரர் மகன். ஒரு வாரமா தினமும் சாயந்தரம் சந்திச்சு  பேசிட்டு இருக்கோம். இன்னைக்கு முடிவு சொல்றேன்னு சொல்லிருந்தேன். முடியாதுன்னு சொல்லத்தான் உன்னைக் கூப்பிட்டேன். ஆஜானுபாகுவா ஒரு அண்ணன் பக்கத்தில் இருக்கான்னு சொல்லணும் இல்லையா?”

 

பயத்தில் வேர்த்து உணவு தொண்டைக்கு அருகே வந்து விட்டது சுகுமாரனுக்கு. 

 

“இதென்னது? வர வர உனக்கு அசட்டுத் துணிச்சல் அதிகமாயிருச்சு”

 

“இந்த ஊரை விட்டு எப்ப போவோம், எப்படி போவோம்னு தெரியாம வாழுற வேதனையை விட, இது அசட்டுத் துணிச்சல் இல்லை சுகுமாரண்ணா”

 

“மந்தாகினி, சொல்றதைக் கேளு என்னோட ஆடிட்டர் கூட உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறார். பணக்கார வாழ்க்கை வேணும்னா அவரைக் கல்யாணம் பண்ணிக்கோ”

 

“ஓ… நாப்பது வயசு கிழவனுக்கு இருபது வயசுப் பொண்ணு கேட்குதோ?”

 

“சின்ன வயசு பணக்காரன் நம்ம வீட்டில் சம்பந்தம் பண்ணிப்பானா? நீ புத்திசாலி மந்தாகினி. யோசிச்சுப் பாரு. நம்ம நிலைல கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை சரிப்பட்டு வராது”

 

“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். ஒரு கிராமத்து மிராசுதாரர் மகன் என்னைக் கல்யாணம் செஞ்சுக்குறேன்னு சொல்றான். உங்க ஆடிட்டருக்கு இவன் தேவலாமில்ல”

 

“ஆனா நீதான் வேண்டான்னு சொல்லிட்டியே”

 

“ராணித் தேனீ… இந்த ராணித் தேனீயை தன்னுடையவளா ஆக்கிக்கிறது அவ்வளவு சுலபமா சுகுமாரண்ணா?”

 

கல்லூரி வாசலில் இறக்கிய சுகுமாரன் கேட்டார். 

 

“உன் மனசில் என்னதான் இருக்கு? யாருதான் இருக்கா?”

 

மந்தாகினி கண்களைச் சுழற்றிக் காட்டினாள். அந்த திசையில் நண்பர்களுடன் பேசியவாறு தம்மடித்துக் கொண்டிருந்தார் நாகேந்திரன். 

 

6 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 31”

  1. ஹாய் மாம் ஒரு மூணு மாசம் முன்னாடி தான் உங்க நாவல்ஸ் படிக்க ஆரம்பிச்சேன் உங்கள் நாவல்களில் நான் முதல் படித்தது சித்ரங்கதா நாவல் அந்த கதையில் இருந்து நான் வெளிவர ஒரு மாதம் பிடித்தது அதிலிருந்து உங்களை அனைத்து நாவல்களையும் நான் படித்திருக்கிறேன் செம்பருத்தி நாவலின் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் தினமும் வெயிட் பண்றேன் உங்களோட சீக்கிரம் அப்டேட் கொசுரும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ஐ லவ் யூ சோ மச் மேன்

    1. தங்களது நேரத்துக்கும் அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சங்கீதா. ஐ லவ் யூ டூ பங்காரம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18

அத்தியாயம் – 18   அவினாஷ் விமானப்பயணத்தின் முடிவில் டோக்கியோவில் இறங்கியபோது மிகுந்த களைப்புடன் காணப்பட்டான். அவனுக்கு ஓயாத வேலைகள். அவனது வேலைகளைப் பார்ப்பதுடன் சேர்த்து அபிராமின் தொழிலையும் கவனிக்க வேண்டும். இது அதிக சுமைதான். ஆனால் சுமையைத் தாங்கும் வயதுதானே

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 28தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 28

அத்தியாயம் – 28    அவர்கள் மூவரையும் அவினாஷ் அவனது அறையில் சந்தித்த பொழுது  “நீதான் இந்த வீட்டு பெரிய மனுஷனோ… எங்கய்யா எங்க வீட்டுப் பொண்ணு” என்று பாய்ந்தாள் அத்தை.    “உங்க பொண்ணா யாரது?”   “கட்டிக்கரும்பா ஒண்ணே

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 34தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 34

அத்தியாயம் – 34   மந்தாகினியின் அன்னை காலையிலிருந்து  இரவு தாமதமாக வீட்டுக்கு வந்ததை சொல்லிச் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்.    “உங்கப்பன் என்னடான்னா ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு போற இடத்தில எல்லாம் பெட்டி தூக்க விடுறான். நீ என்னடான்னா என்னமோ