அத்தியாயம் – 30
கட்டிடக் கலையின் சாட்சியாக இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நிற்கும் பாகமங்கலம் அரண்மனை.அதன் முன்பு கார்கள் வழுக்கிச் செல்ல வாகாக விரிந்திருந்த தார்சாலை.
பாலைவனத்தைக் கூட சோலைவனமாக மாற்றும் திறன் படைத்த சிறந்த தோட்டக்காரர்கள் கண்கவர் பூந்தோட்டத்தை சாலையின் இருமருங்கிலும் தோற்றுவித்திருந்தார்கள்.
வண்டுகள் எந்தப் பூவினைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் வியக்க, தென்றல் காற்று மலர்களிடமிருந்து கொஞ்சம் வாசனையைத் திருடிக் கொண்டு வர, இயற்கை எழில் கொஞ்சும் பூந்தோட்டத்தைப் பார்த்து ரசித்தவண்ணம் காரிலிருந்து இறங்கினார் ஜோசியர்.
“வாங்க, வாங்க” என்று எதிர்கொண்டு அழைத்துச் சென்றார் மன்னர் பாகநேத்ர பூபதி. சுருக்கமாக இனி பூபதி.
“வணக்கம். உங்களின் அழைப்புக்கு நன்றி. உங்க குடும்பத்தோட முக்கியமான முடிவுக்காக ஜாதகம் பார்த்து சொல்றது என்னோட பாக்கியம்” என்றார் ஜோசியர்.
“சிரமப்பரிகாரம் செஞ்சுக்கோங்க. கோவிலுக்கு போன என் தங்கையும் வந்துடுவா. நம்ம ஜாதகத்தைப் பார்க்கலாம்” என்றார்.
அங்கு வந்த வேலையாள் ஜோதிடரை அவர் தங்க வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றான். செல்லும் வழி எங்கிலும் டச்சு நாட்டுப் பளிங்குக் கற்களால் இழைக்கப்பட்டிருந்தது. வெயில் காலத்தில் குளுமையாகவும், குளிர்காலத்தில் வெம்மையாகவும் இருக்கும் நமது ஆத்தங்குடியின் பூ வேலைப்பாடு நிறைந்த பூக்கற்களும் பல அறைகளில் பதிக்கப் பட்டிருந்தது.
பெரிய பெரிய தேக்கு மரத் தூண்களில் யாழியும், யானையும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. இயற்க்கை பொருள்களைக் கொண்டு வரையப்பட்ட பச்சிலை ஓவியத்தில் சொக்கனின் அழகில் மயங்கி வெட்கத்துடன் மீனாட்சி புன்னகைத்தாள்.
சுவற்றில் பல இடங்களில் மிருகங்களின் தலைகள் பாடம் செய்யப்பட்டிருந்தது. வேட்டை. பொழுதுபோக்கு என்று மன்னர்கள் கருத்தியதால், நேரம் கிடைக்கும்போது மற்ற பாளையக்காரர்களுடன் சேர்ந்து, காடுகளில் சென்று வேட்டையாடுவது வழக்கம். வேட்டையாடிய சிங்கம் புலி யானை தந்தங்கள் அனைத்தையும் பாடம் செய்து தருவதற்கு என்று ஒரு தனி குழு இருக்கிறது.
அது தவிர பெரிய பெரிய தேக்கு அலமாரிகளில் பாலிஷ் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன பரிசுப் பொருள்கள் கேடயங்கள் எல்லாம் பார்வைக்காக அடுக்கப்பட்டிருந்தன. சுவற்றில் மற்ற அரசர்களுடனும், வெள்ளைக்கார துரைகளுடனும் அரச குடும்பத்தினரின் புகைப்படங்கள் தொகுத்து அடுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே எதிரில் வந்த மற்றொருவன் இவனிடம் “கந்தா, நெல்லு மூட்டை எடுத்துட்டு வரணும். எத்தனை எடுத்துட்டு வர்றது” என்று கேட்டான்
அதற்கு கந்தன் ’10 மகாராஜா எடுத்துட்டு வா” என்றான்.
தெற்கு பகுதிக்கு ஜோதிடர் புதியவர் என்பதால் அவர்கள் பேச்சு வழக்கு சுத்தமாய் புரியவில்லை. கந்தனிடம்
“நெல்லு மூட்டை10 மகாராஜாவா, அப்படின்னா? இது உங்க ரெண்டு பேருக்குள்ளற ஏதாவது சங்கேத வார்த்தையா” என்றார்.
“சங்கேதமெல்லாம் ஒன்றும் இல்லைங்க ஐயா. அடுத்த வாரம் சமையலுக்கு நெல்லு எடுத்துட்டு வந்து அவிக்கணும். அது எத்தனை மூட்டை எடுத்துட்டு வர்றதுன்னு கேட்டான். அதுக்கு நான் 18 மூட்டை எடுத்துட்டு வான்னு சொன்னேன்.
அடுத்த வாரம் விருந்தெல்லாம் இல்லை. வீட்டு ஆளுங்க மட்டும் தான். அப்புறம் சமையல்காரங்க, வேலை செய்றவங்க. எங்களுக்கு மட்டும் தான் சாப்பாடு. அதனால 18 மூட்ட போதும் இல்லைங்களா” என்று பதில் கேள்வி அவரிடம் கேட்டான்.
ஏதேது இந்த அரண்மனையில் தினமும் கல்யாண சமையல்தான் போலிருக்கிறது.
“இருந்தாலும் நீ 18 என்று சொல்லலையே என்னமோ 10 மகாராஜான்னு தானே சொன்ன”
“அதுவா, நானு எட்டையபுரமுங்க. எங்க ஊர் பக்கம் 8ன்னு சொல்ல மாட்டோம். அதுக்கு பதிலா ‘மகாராஜா’ ன்னு சொல்லுவோம். இப்ப 7க்கு அப்பறம் மகாராஜா, 17க்கு அப்பறம் பத்து மக ராஜா”
“ஓ எட்டப்பன் ஊரா நீ” என்றார் ஜோசியர். கட்டபொம்மன் திரைப்படத்தில் எட்டப்பனின் செயல்களை அவரும் பார்த்திருக்கிறாரே.
“அதானங்க எட்டப்பன்னு கேவலமா பேசுறீங்க. எங்க ராஜாவுக்கு எப்படி இந்தப் பெயர் வந்தது தெரியுமா? அவர்கிட்ட ஒருத்தன் நான் செத்துப் போனா என்னோட எட்டு பிள்ளைகளையும் பார்த்துக்க ஆளில்லையேன்னு கவலைப்பட்டான். அந்த எட்டு பேரையும் நானே தத்து எடுத்து பாத்துக்குறேன் தத்து எடுத்து 8 பிள்ளைகளுக்கும் அப்பனா இருந்தாரு அதனாலதான் அவருக்கு பெயர் எட்டப்பன்”
கட்டபொம்மன் கதை இதெல்லாம் காமிக்கலையே என்று யோசித்துக் கொண்டிருந்தார் ஜோசியர்.
“நீங்க சினிமாவை பார்த்துட்டு எட்டப்பன் என்று சொல்லிட்டு இருக்கீங்களா எட்டப்ப நாயக்கருக்கும் கட்டபொம்மு நாயக்கருக்கும் எல்லை பிரச்சனை இருந்துச்சு. மூணு கிராமங்களுக்காக ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போட்டுப்பாங்க.
அதுக்காக தெற்கத்தி பாளையத்திலேயே முதல் பாளயமா 500 கிராமங்களை வைத்து ஆட்சி செஞ்ச எட்டயபுரத்து சமாஸ்தானத்து ராஜாவ சினிமால கெட்டவரா காமிச்சுட்டாங்க. அதனால எங்களுக்கெல்லாம் ஒரே வருத்தம்”
தங்கும் அறைக்கு அழைத்துச் செல்வதற்குள் ஒரு வரலாற்றுப் பாடத்தையே கந்தன் ஜோசியருக்கு எடுத்துவிட்டான்.
ஜோசியர் தங்கும் அறை அவ்வளவு நவீனமாக இருந்தது. பெரிய கட்டில்கள் அலங்கார நாற்காலிகள், பூக்குவளைகள், படுக்கையில் அமர்ந்து கொண்டே பெல் அடித்தால் வேலைக்காரர்கள் வரும் வசதி. அத்துடன் ஒரு பெரிய அலமாரி முழுவதும் உயர்ரக மது வகைகள்.
“கந்தா, இது யாரு ரூமு” என்று வியந்து பார்த்தபடி கேட்டார்.
“இது ஸ்பெஷல் அறை. இதுல தான் அந்த காலத்தில் துரைமார்கள் எல்லாம் வந்து தங்குவாங்க.
இங்க பாத்தீங்களா, அவங்களோட பேப்பர் எல்லாம் இஸ்திரி பண்றதுக்கு இஸ்திரி பெட்டி.
துரைமாருங்க படிக்க தினம் காலைல ட்ரெயின்ல இங்கிலீஷ் செய்தித்தாள் வரும். திருநெல்வேலியில் இருந்து வாங்கிட்டு வந்து அவங்க எந்திரிக்கறதுக்குள்ளார இஸ்திரி போட்டு, படிக்கிறதுக்கு ரெடியா வச்சிருப்போம்”
“அது சரி, எதுக்குய்யா பேப்பரை இஸ்திரி போடுறீங்க?” ஜோதிடருக்கு சுத்தமாக புரியவில்லை
“அப்புறம் பேப்பர் சரியா காயலைன்ன தொரைங்க படிக்கும் பொழுது கையில் இங்கு பட்டுருமே”
அதனாலதான் அந்த காலத்துல பெரிய தொரைன்னு நெனைப்புன்னு கிண்டல் பண்ணுவாங்களோ?
அரண்மனை பழக்கவழக்கங்கள் அனைத்தும் வித்தியாசமாகவே இருந்தது அவருக்கு.
ஓய்வெடுக்கும் போதே அங்கிருந்த நபர்களின் மூலம் மன்னர் குடும்பத்தின் கதையைப் பற்றி அறிந்து மன்னர் பூபதி மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது அவருக்கு.
பாகமங்கலம், நாகமங்கலம் இரண்டு சமஸ்தானங்களும் பல தலைமுறைகளாக பெண் கொடுத்து பெண் எடுத்து வருவது வழக்கம். அதன்படி தனது தங்கை, வடிவுக்கரசியை நாகமங்கலம் மன்னர் குடும்பத்தில் திருமணம் செய்துத் தந்தார் பூபதி.
தங்கைக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். ஆனால் தங்கையின் கணவன் கெட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி தனது சொத்து சுகத்தை இழந்து தெருவில் நின்றதை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஒருவழியாக தங்கை குடும்பத்துடன் பிறந்த வீட்டுக்கே வந்து சேர்ந்தார். பூபதிக்கும் இடைப்பட்ட காலத்தில் திருமணம் நடந்தது. அவரின் மனைவி கதைகளில் வர்ணிக்கும் இளவரசிகளைப் போல பேரழகி இல்லை. அது அவர்களது காதல் வாழ்க்கைக்குத் தடையாகவும் இல்லை.
இருவரின் அன்புக்கு சாட்சியாகப் பிறந்தவர்தான் மங்கை. மங்கைக்குப் பிறகு அவர்களுக்கு ஆண் மகவு பிறக்கவும். இல்லை.
மங்கை பிறந்து சில வருடங்களில் தாயும் கண் மூடினார். அவள் ஒரே பெண்ணாக வளர்ந்தாள். ஆண் பிள்ளைக்காக, உன் துணைக்காக என்று இரண்டாம் திருமணம் செய்யச் சொன்னவர்களிடம் என் தங்கையின் பிள்ளைகள்தான் எனது வாரிசுகள் என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார்.
காலம் சென்றது. தங்கையின் மகன்கள் மகேந்திரன், நாகேந்திரன், யுகேந்திரன் மூவரும் வளர்ந்து கல்லூரி செல்லும் பருவத்தை நெருங்குகிறார்கள். மங்கையை கல்யாணம் செய்து கொடுத்து அவர்களில் ஒருவரைத் தனது வாரிசாக நியமிப்பதே பூபதி மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆசை. அதற்காக அனைவரின் ஜாதகத்தையும் ஆறுதலாகத் தங்கிப் பார்த்துச் செல்லவே ஜோசியர் குடந்தையிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்தார்.
மங்கையின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்.
“அருமையான ஜாதகம் அய்யா. இந்த மாதிரி ஒரு அமைப்பு இருக்கும் கட்டங்களைப் பாத்து பல வருடங்களாச்சு. இந்தப் பொண்ணு பெரிய பரோபகாரி, இவ வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரஸ்வதி இவ கூடவே இருப்பா. நிறைய படிப்பா… “
“அதுக்கெல்லாம் வாய்பில்லை. கல்லூரிக்கு அனுப்புற வழக்கம் எங்க குடும்பத்தில் இல்லை. மங்கைக்கு பதினெட்டு வயசில் கல்யாணம் பண்ணி வைக்கிறதா தீர்மானம் பண்ணிட்டோம்” என்று குறுக்கிட்டாள் வடிவு.
“தாராளமா பண்ணி வைங்க. இருந்தாலும் சரஸ்வதி இவளை அரவனைச்சுக்குறதைத் தடை போட முடியாது”
“நல்லது. அடுத்து புத்திர பாக்கியம், தாலி பாக்கியம், உடல் நலம் பத்தி சொல்லுங்க சாமி”
“அது எதுக்கும் குறைவில்லை.ஆனால் ஒரு பிரச்சனை என்னன்னா, இவங்க கல்யாணம் ஒரு பெரிய சஞ்சலத்துக்குப் பின்னாடிதான் நடக்கும். இறைவனை வணங்குங்க, நல்லதையே நினைங்க. கடைசியில் எல்லாமே நன்மையில் முடியும்.
புத்திர பாக்கியம் டாப் க்ளாஸா இருக்கு. அதுவும் இவங்க குழந்தை எப்படி இருப்பான்னு சொன்னா பொன்னியின் செல்வன்ல கல்கி சொல்ற வரிகள்தான் கட கடன்னு நினைவுக்கு வருது.
மகாவிஷ்ணுவின் அம்சத்துடன் இவள் வயிற்றில் ஒரு பிள்ளை பிறப்பான். இவளுடைய நாயகனுக்காவது பல இடைஞ்சல்கள், தடங்கல்கள், அபாயங்கள், கண்டங்கள் எல்லாம் உண்டு. ஆனால் இந்தப் பெண்ணின் வயிற்றில் அவதரிக்கப் போகும் குமாரனுக்குத் தடங்கல் என்பதே கிடையாது. அவன் நினைத்ததெல்லாம் கைகூடும்; எடுத்ததெல்லாம் நிறைவேறும், அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்; அவன் கால் வைத்த இடமெல்லாம் அவனுடைய ஆட்சிக்கு உள்ளாகும்; அவன் கண்ணால் பார்த்த இடமெல்லாம் புலிக்கொடி பறக்கும்.தாயே! இவளுடைய குமாரன் நடத்திச் செல்லும் சைன்யங்கள் பொன்னி நதியின் புது வெள்ளத்தைப் போல் எங்கும் தங்குதடையின்றிச் செல்லும். ஜயலக்ஷ்மி அவனுக்குக் கைகட்டி நின்று சேவகம் புரிவாள். அவன் பிறந்த நாட்டின் புகழ் மூவுலகமும் பரவும். அவன் பிறந்த குலத்தின் கீர்த்தி உலகம் உள்ள அளவும் நின்று நிலவும்!…”
இதனைக் கேட்டு அனைவரின் மனமும் நிறைந்தது.
சஞ்சலங்களும், சச்சரவுகளும் இல்லாத சுப நிகழ்ச்சி ஏது? எல்லாம் நல்லபடியாக முடிந்தால் நல்லது. அதனால் விரைவில் கல்யாணம் செஞ்சு வச்சுடலாம்.
மூத்தவன் மகேந்திரனுக்கு இயற்கையிலேயே பூஞ்சையான உடல். அடிக்கடி மருத்துவமனை சென்று வருபவன். அவனால் இந்த சுமையைத் தாங்கிட முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்குள். அதனால் இரண்டாவது வாரிசான நாகேந்திரனுக்கு பட்டம் கட்டுவது என்று முடிவானது.
“அப்ப மங்கையை நாகேந்திரனுக்குத்தான் கட்டித்தரணும் அண்ணா”
“செஞ்சுட்டாப் போச்சு” என்றார் பூபதி.
இடையில் குறுக்கிட்டார் ஜோசியர் “அய்யாவுக்குத் தெரியாதது இல்லை. உங்க மகனா இல்லாத ஒருத்தர் வாரிசாகணும்னா ஒண்ணு அங்கயற்கண்ணி சொக்கநாதனைக் கட்டிக்கிட்டது மாதிரி கல்யாணம் பண்ணிட்டு பட்டம் கட்டணும். ராணியைக் கட்டிக்கிட்டதால அவரும் வாரிசாயிடுவாரு”
“அது முடியாது ஜோசியரே. என் பொண்ணு ரொம்ப சின்னப் பொண்ணு. பால்ய விவாகம் பண்ணுற எண்ணம் எனக்கு இல்லை. அது மட்டும் இல்லாம அது சட்டப்படி குற்றமும் கூட. நானே சட்டத்தை மதிக்கலேன்னா நம்ம ஊரில் இருக்கிற மத்தவங்க எப்படி மதிப்பாங்க”
“இல்லைன்னா பேசாம உங்க மருமகனை மகனா தத்து எடுத்துக்கோங்க. மகளக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கூட அவசியமில்லை. என்ன நான் சொல்றது?”
அவர் சொன்னது பூபதிக்குப் பிடித்ததோ இல்லையோ அவரது தங்கை வடிவுக்குப் பிடிக்கவே இல்லை. மருமகனாக நாகேந்திரன் சென்றால் இவள் உரிமையோடு அண்ணன் வீட்டிலேயே தங்கிவிடலாம்.
அவர்கள் பழக்கப்படி மகனாக தத்து கொடுத்து விட்டால், அவள் அந்த வீட்டை விட்டுவெகு தூரம் இருக்கும் வேறு ஒரு வீட்டிற்கு குடி பெயர்த்து செல்ல வேண்டும். மகனை தத்துபுத்திரனாக தந்ததற்கு ஈடாக, அவளுக்கு வீடும் நிலமும், ரொக்கமும் கொஞ்சம் நஞ்சம் அல்ல ஏராளமாகவே அரசு குடும்பத்தினர், அதுவும் அவளது அண்ணன் தருவார்.
ஆனால் இவை அனைத்தும் இருந்தாலும் அவள் ஒரு சாதாரண பிரஜையாகி விடுவாளே! இப்போது இருப்பது போல ராஜாவின் தங்கை என்ற மதிப்போடு இந்த அரண்மனையில் தங்க இயலாதே.
இவர்கள் எல்லோரும் ஒரு கணக்குப் போட, அங்கு சென்னையில், விதி மந்தாகினி ரூபத்தில் வேறு ஒரு கணக்கு போட்டுக் கொண்டிருந்தது.
Nice
Thanks
Waiting for the next ud.
Posted ma
Nice 👍
Thanks ma