அத்தியாயம் – 29
“அபி… “ ராதிகாவின் குரல் அபிராமை இந்த உலகிற்கு இழுத்து வந்தது.
ராதிகாவை நிமிர்ந்து பார்த்தான்.
“மௌனம் போதும் அபி.இதுவரை நடந்தது தப்போ சரியோ எனக்கு தெரியாது. ஆனா நீங்க மங்கை ஆன்ட்டியைப் பத்தி பேசுனது ரொம்ப ரொம்பத் தப்பு”
“உன் கூட ஒரு தடவை பேசுனதுமே நல்லவங்க ஆயிட்டாங்களா? அவங்க எங்க வீட்டை உடைச்சு எங்க அப்பாவ மறுமணம் செஞ்சிக்கிட்டவங்க. அதை நினைச்சாலே என் நெஞ்சு கொதிக்குது. உனக்கு எங்க வீட்டைப் பத்தி என்ன தெரியும் ராதிகா?”
“அப்படிப் பார்த்தா உங்களுக்குமே உங்க குடும்பத்தைப் பத்தி முழுசா தெரியாது போல இருக்கே அபி”
“இவங்க சொல்றதெல்லாம் சுத்த ஹம்பக். நான் யாரையும் நம்ப மாட்டேன்”
‘ஹைபியை கூடவா நம்ப மாட்டீங்க”
ஆத்திரத்தில் பல்லை கடித்தான் “அவ எப்படி அவினாஷோட கூட்டு சேர்ந்தா… நான் பெண்கள் விஷயத்தில் எப்படின்னு உனக்கு நல்லா தெரியும் ராதிகா. உன்னை கூடக் காதலோட தான் பார்த்தேன்.
ஆனா செம்பருத்தியையும், ஓவியாவையும் என் பொண்ணுங்களை மாதிரிதான் ட்ரீட் பண்ணேன். நடக்க கூட முடியாமல் இருந்தாலும் என்னோட வெற்றிகளை அவர்கள் மூலமாக தான் பார்த்தேன். அவங்க ஒவ்வொரு தடவையும் வெற்றி பெறும் போது என்னோட வெற்றியா மனசுக்குள்ள கொண்டாடுனேன் .
என் ஹைபி எப்படி நான் மனசார வெறுக்கிற மங்கை கூட உட்கார்ந்து சாப்பாடு சாப்பிட்டு வந்தா? என் மேல அன்பு இருந்திருந்தால் அப்படி செஞ்சிருப்பாளா? என்னால இன்னமும் நம்ப முடியல….
ஹாங்… இப்ப தெரியுது. அவளோட ஃப்ரெண்ட்ஷிப் சரியில்ல. முதல்ல பார்த்த அவினாஷ் கூட பிரண்ட்ஷிப் ஆயிடுவாளா? என்னை விட அவன் முக்கியம் ஆயிடுவானா? அதனால தான் எனக்கு அவ மேல பயங்கர கோபம்”
அம்மா உனக்கு என்னைய விட அண்ணனைத்தான் ரொம்ப பிடிக்கும் என்று தாயிடம் புகார் சொல்வதைப் போன்ற ஒரு குழந்தைத்தனம் அபிராமிடம் தெரிந்தது கண்டு ராதிகா மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
“நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க அபி.உங்களுக்கு இவ்வளவு நல்லது செஞ்ச அவினாஷ இன்னுமுமா வெறுக்கிறீங்க”
ரொம்ப யோசித்து பதில் சொன்னான்
“இந்த அவினாஷ் மட்டும் அவங்களோட மகனா இல்லாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். அவன் கொஞ்சம் நல்லவன்தான். அவனை வெறுக்கிறதுக்கு எந்த காரணமும் இல்லை.
பல தடவை அவன அவமானப்படுத்தி இருக்கேன். அப்படியும் அவன் அதை பொருட்படுத்தாமல் மறுபடி மறுபடி எனக்கு உதவி செஞ்சிருக்கான். அத நான் கண்டிப்பா ஒத்துக்கணும். இல்லன்னா எனக்கு மனசாட்சியே இல்லன்னு அர்த்தம்”
“சரி இப்ப அடுத்த ஆளு. நம்ம சேச்சி லீலாம்மாவை கூடவா உங்களுக்கு பிடிக்காது”
“அவங்களுக்கு மட்டும் தான் என் மனசுல இடம் இருக்கு”
“எனக்காக ஒன்னே ஒன்னு செய்வீங்களா அபி?”
அவனது மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டாள்.
“சேச்சி என்னமோ ஒரு உண்மையை தெரிந்து வச்சிருக்காங்க. அது கண்டிப்பா நமக்கு தெரியணும். அந்த உண்மை உங்க வாழ்க்கையோட கோணத்தையே மாத்திடும்னு உறுதியா நம்புறேன். உங்களோட வாழ்க்கையை இணைச்சுக்கணும்னு ஆசைப்படுற நான் அந்த உண்மை தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன்”
“நிஜம் வேற மாதிரி இருந்து நான் நிறைய தப்பு பண்ணி இருந்தா?நானு முழுசுமா தப்பான ஒரு ஆளா இருந்தா என்ன செய்றது ராதிகா? நீ என் மேல காட்டுற அன்பு மாறிடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு பேபி. என்னை வெறுத்திட மாட்டியே” குரலில் நடுக்கம்.
அவனை ஆறுதலாக அணைத்து கொண்டவள் “உண்மை எத்தனை பயங்கரமானதா இருந்தாலும் எந்த காலத்திலும் உங்களை வெறுக்க மாட்டேன் அபி”
கட்டி அணைத்தபடி அவர்கள் இருந்தது எத்தனை நிமிடமும் தெரியாது. மெதுவாக ராதிகா அவனிடம் கேட்டாள்
“சேச்சியை வரச் சொல்லட்டுமா?’
பெருமூச்சு ஒன்று அவனிடமிருந்து எழுந்தது. “சரி, வரச் சொல்லு ராதிகா”
சேச்சிக்கு சமையல் அறையில் முதுகு ஒடியும் அளவுக்கு வேலை இருந்தது. எல்லாம் இந்தக் காவியாவால் வந்தது. வீட்டினர் யாருக்கும் சாப்பிட மனம் இல்லாமல் பட்டினியாய் கிடக்கிறார்கள் ஊரில் இருந்து செம்பருத்தியின் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்த பேய்கள் மூன்று பேர் மற்றும் வீட்டிலேயே இருக்கும் பிசாசான காவியாவும் மட்டும்தான் மூக்குப் பிடிக்க தின்கிறார்கள்.
அதுவும் இந்த காவியா இருக்கிறாளே “சேச்சி நீங்க என்னமோ வெளிநாட்டில் எல்லாம் படிச்சிட்டு வந்தீங்களாமே, உங்க கைவண்ணத்தை இன்னைக்கு காமிங்க பாக்கலாம். எனக்கு ப்ரான் டெம்பூரா செஞ்சு எடுத்துட்டு வாங்க” என்று சொல்லியதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.
இப்படியா வீட்டு சூழ்நிலை கூட புரியாமல் ஒரு பெண் இருப்பாள் என்று மனதுக்குள் திட்டியபடியே இறால்கள் எதுவும் சமைக்கும்போது தீயில் பட்டு சுருண்டு விடாதபடி அதனை கவனமாக ஸ்லைஸ் செய்தார். பின்னர் அதற்குரிய மாவில் அவசரத்துக்கு சோடாவை ஊற்றி கலந்து மசாலாவை சேர்த்து பஜ்ஜியைப் போல இறால்களை முக்கி வறுத்து எடுத்தார்.
“ஏ காளியம்மா இங்க வாஅந்த ஸ்வீட் அண்ட் சில்லி சாஸ் கூட இந்த இறால பரிமாறிட்டு வா”
காளியம்மா எடுத்துக் கொண்டு செல்லும்போது சமையலறையில் நுழைந்த ரமேஷ் “அட, பிரான் டெம்போரா இதெல்லாம் வீட்டிலேயே செய்வீங்களா’ என்றபடி அந்த தட்டில் இருந்து இங்கீதம் இல்லாமல் ஒரு இறாலை எடுக்கப் போனான்.
“இது எங்க காவியா அம்மாவுக்கு. உங்களுக்கு வேணும்னா சேச்சிகிட்ட வாங்கிக்கோங்க” என்றபடி காளியம்மா முறைப்புடன் அவனது கையை தட்டி விட்டு காவியாவிற்கு பரிமாற எடுத்துச் சென்றாள்.
“என்னது காவ்யா அம்மாவுக்கா… நானும் அவங்களப் பார்க்கணுமே” என்றபடி காளியம்மாவைப் பின்தொடர்ந்தான். டேபிளில் வைத்துவிட்டு காளியம்மா சென்றுவிட்டாள்.
டைனிங் டேபிளில் பத்திரிக்கையைப் பார்த்தபடி உணவைக் கொறித்தாள் காவியா.
“அட கடைசில நீ தான் காவியாவா?’ என்ற குரலைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்த்தாள்
“நீ… நீ… அந்த…” என்று தடுமாறியளிடம்
“நானேதான் பாட்னர். அப்புறம், நிதி நிறுவனம் நடத்தி சுருட்டிட்டு போன பணமெல்லாம் என்ன ஆச்சு?” மாட்டிக்கிட்டியா என்று குதூகலம் குரலில் தாண்டவமாடியது.
“ஷ்… “ என்றாள்.
“ஓ, இதெல்லாம் இந்த வீட்டுக்குத் தெரியாதா?” என்றான் ரகசியக் குரலில்
காவ்யா பிசினெஸ் பண்ணுகிறேன் என்று சொல்லி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்ததுதான் அந்த நிறுவனம். வேலை செய்ய சிலரைத் தற்காலிகமாக தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அதில் இவனும் ஒருவன். மூடுவதற்கு முன் தாராளமாகப் பணம் கொடுத்துத்தான் இவனை அனுப்பி இருந்தார்கள். இப்போது எங்கிருந்து இவன் முளைத்தான்?
“நீதான் செம்பருத்தியோட சொந்தக்காரனா?”
“அது நானேதான்… “
குரலைத் தணித்தாள்
“செம்பருத்தியைக் கையோட கூப்பிட்டுட்டு கிளம்பாம இன்னும் எதுக்கு இங்க நிக்கிற. உனக்கு சேர வேண்டிய பணத்தை கேஷா இப்பவே கொடுத்துடுறேன். எடுத்துட்டு இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்புற”
“அட, தங்க முட்டை போடுற வாத்தை எப்படி உடனே வெட்ட முடியும். கொஞ்சம் மெதுவா தங்கி ரிலாக்ஸ் பண்ணிட்டு போறேன்” அமைதிப்படை அமாவாசை ஸ்டைலில் சொன்னான்.
“மெதுவா எல்லாம் கிளம்ப முடியாது. ஒரு லட்சத்தை ரெண்டு லட்சமாக்கித் தரேன். வாங்கிட்டு திரும்பிப் பாக்காம ஓடிப் போற, அவளையும் இழுத்துட்டு” என்றாள் காட்டமாக.
“எனக்கு செம்பருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கணும். நாளைக்கே கல்யாணம் செஞ்சு எங்களை வாழ்த்தி, எனக்கு ஒரு வேலையோட, கல்யாணப்பரிசா கையில் ஒரு பத்து லட்சத்தைத் தந்து அனுப்பினாலும் ஒகே. இல்லை பத்து லட்சத்தைப் புரட்ட ஒரு வாரம் பத்து நாளாகும்னு சொன்னா கூட மெதுவா தங்கி வாங்கிட்டே கிளம்புறேன்” வில்லச் சிரிப்புடன்.
“இவரு உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சவராம்மா?” என்று கேட்டபடி பாலன் வர,
“அதெல்லாம் இல்ல. இவன் யாருன்னே எனக்குத் தெரியாது. இங்க சுத்திப் பாக்க எந்த இடம் நல்லாருக்குன்னு கேட்டுட்டு இருந்தான்”
“அவினாஷ் அய்யா உங்களை ஆபிஸ் ரூமுக்கு வரச் சொன்னாரும்மா” என்று சொல்லிவிட்டு
சமயலறைக்கு சென்று “சேச்சி உங்களை அபிராம் அய்யா உடனே வரச் சொன்னார்” என்று சொன்னதைக் கேட்டபடி வாஷ்பேஸினில் கை கழுவிய காவ்யாவுக்கு
அபிராம் எதற்காக சேச்சியை வரச் சொல்கிறான்? சேச்சியிடம் பழைய விவரங்களைக் கிளறுவானோ? விடக் கூடாதே… சீக்கிரம் அவினாஷிடம் பேசிவிட்டு அபிராமை சந்திக்க வேண்டும்.
வேகமாக அவினாஷ் இருக்கும் அறைக்குச் சென்றாள். அந்த அறையில் இருவர் அமர்ந்திருக்க
“இவங்க போலீஸ்காரங்க காவ்யா. இந்த ட்ரக் கேஸ் விஷயமா விசாரணைக்கு வந்திருக்காங்க. நீ தானே முதலில் சந்தேகப்பட்டது. அதனால உன்னைப் பாக்கணும்னு சொன்னாங்க”
“இந்த அறையிலேயே விசாரணை பண்ணலாமா சார்”
“தாராளமா… நான் இப்ப கிளம்பிடுவேன். பெல் அடிச்சு பாலனைக் கூப்பிட்டா அவன் ஒவ்வொருத்தரா இந்த அறைக்கு அழைச்சுட்டு வருவான்” என்றான்.
அதற்குள் அவளது அலைப்பேசி அடிக்க, சே இந்த ரமேஷ் தடியன். “ஒரு நிமிஷம் இந்த காலை அட்டென்ட் பண்ணிட்டு வந்துடுறேன். நீங்க ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க” என்றாள் காவலர்களிடம்.
பக்கத்து அறைக்கு சென்று கடுப்போடு அலைப்பேசியை எடுத்தாள்
“நீ உன் எல்லையைத் தெரிஞ்சு நடந்துக்குறது நல்லது.அப்பறம் பேசுறேன்” என்றாள்.
“நீ இன்னும் பத்து லட்சத்துக்கு பதில் சொல்லவே இல்லையே”
“என்ன விளையாடுறியா?”
“உன்னால முடியாதுன்னு சொல்லாதே. ஏன்னா நீ செஞ்ச பிசினெஸ் எல்லாத்தையும் நேரில் பாத்த சாட்சி நான். போலீசுக்கு போனேன் நீ கம்பி எண்ணனும், எந்த மொழில எண்ணுவ தமிழ், மலையாளம் இல்லை இங்கிலிஷ்?”
“தரேன். ஆனா இனிமே என்னைத் தொந்தரவு பண்ணாம ஓடிப்போயிரணும்”
யானை தன் தலையில் தானே மண்ணை வாரி இறைத்துக் கொண்டதை போல இது வேறு புது பிரச்சனை. இந்த நிதி நிறுவனம் எல்லாம் இங்கு யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. இவள் மாட்டிக் கொள்ள வழியில்லை. பின்னணியில் இவள் இருந்தது யாருக்கும் தெரியாது. ஒரே ஒரு நாள் அலுவலகத்திற்கு சென்றவளை எதேர்ச்சியாக பார்த்துவிட்டான் ரமேஷ். அதன் பலன்தான் இன்றைய நிகழ்வு.
இவன் ருசி கண்டு விட்டால் அடிக்கடி பிளாக் மெயில் செய்ய ஆரம்பிப்பானே? எப்படி தவிர்க்கலாம்.
குழப்பத்தை முகத்தில் காட்டாமல் போலீஸ்காரர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவள் “சொல்லுங்க சார். என்ன சந்தேகம் உங்களுக்கு?”
“எங்களுக்கு ரெண்டே கேள்விதான் உங்ககிட்ட கேட்க இருக்கு. ஒன்னு அந்த அசிஸ்டென்ட் பொண்ணுதான் குற்றவாளின்னு சொல்லிருக்கிங்க. ரெண்டாவது எப்படி மேடம் அந்த கூல் ட்ரிங்க்ஸ்லதான் ட்ரக் கலந்திருக்கும்னு உறுதியா சொன்னிங்க?”
“சிம்பிள் சார். இதுக்கு முன்னாடி வேலைல இருந்த அசிஸ்டென்ட் பொண்ணுதான் ட்ரக் தந்தது. இந்தப் பொண்ணு தினமும் கூல்ட்ரின்க்ஸ் வாங்கிட்டு வந்திருக்கு. இதெல்லாம் பார்த்தாலே உங்களுக்கு உண்மை தெளிவா தெரியலையா?
அதுவும் இல்லாம இந்த செம்பருத்தி குடும்பமே இந்த மாதிரி போதை பொருள் சப்ளையர்ஸ் தான். சுவீட் கடைல வேலை பார்த்தப்ப சைட்ல வாடிக்கையாளர்களுக்கு போதை மருந்தை மாட்டிக்காம தந்துருவா. இவளுக்கு இந்த ட்ராக்ஸ் வாங்கிட்டு வர்றது இவளோட அத்தை குடும்பம். உங்க அதிர்ஷ்டம் அவங்க இங்கதான் தங்கி இருக்காங்க. மெதுவா விசாரிங்க உண்மை வெளிவரும்” என்றாள்.
காவலர்கள் அதிர்ந்தார்கள் “தகவலுக்கு நன்றி மேடம். நாங்க இனிமே பாத்துக்குறோம்”
“அடுத்த ஸ்டெப் செம்பருத்தியை அரெஸ்ட் பண்ணறது தானே”
“வீட்டு ஆளுங்களை எல்லாம் விசாரிச்சுட்டுத்தான் தீர்மானம் பண்ண முடியும்”
“இப்ப நான் போலாமா இன்ஸ்பெக்டர்”
“போலாம் மேடம்” என்று அவளை அனுப்பி வைத்தார்.
ஓட்டமும் நடையுமாக அபிராமின் அறைக்குள் அனுமதி கூடப் பெறாமல் படாரெனக் கதவைத் திறந்துக் கொண்டு புயலென நுழைந்தாள்.
அந்த அறையில் அமர்ந்திருந்த அபிராமும் ராதிகாவும் சேச்சியும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தார்கள்.
மூச்சு வாங்க நின்ற காவ்யா “ஓ… எங்க அத்தையை வில்லியாக்குற ஸ்டெப் ஆரம்பமா? நான் விட மாட்டேன். நீங்க என்ன பேசினாலும் என் முன்னாடிதான் பேசணும்” என்றாள்.
“காவ்யா… “ என்று குறுக்கிட்ட ராதிகாவிடம்.
“நீ பேசாம இரு. இந்தக் கதை எங்க குடும்பக் கதை. தராசில் மங்கையற்கரசி பக்கம் ஸ்ட்ராங் ஆக்க எங்க மந்தாகினி அத்தையை தரக் குறைவா பேசுறதை ஒத்துக்கவே மாட்டேன்” என்று ஆவேசம் வந்தவளைப் போல கத்தினாள்.
“இங்க பாரு காவ்யா நான் எதுவும் பேசவே ஆரம்பிக்கல. யாரையும் நான் குறைக்கப் போறதும் இல்லை, புகழப் போறதும் இல்லை. நான் பார்த்ததை அப்படியே சொல்லப் போறேன். அவ்வளவுதான்.
அபி மோனே, நீ என்னைப் பத்தி ஒரு குற்றச்சாட்டை வச்ச, அதனால என்னோட கதைல இருந்து ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். இந்தப் பெண்ணை வச்சுக்கிட்டு என் கதையை சொல்ல எனக்கு விருப்பமில்லை. அதனால உங்க வீட்டு கதையை மட்டும் சொல்றேன். அதுவும் ஒரு பார்வையாளராக இருந்து மட்டும்”
“அது மட்டும் போதும் லீலாம்மா. உங்க கதையை நம்ம ரெண்டு பேரும் தனியா பேசிக்கலாம்” என்றான் அபிராம் கடுப்புடன்.
“அவினாஷைக் கூப்பிடு அபி” என்றார் சேச்சி அடுத்து.
“அவினாஷ் எதுக்கு?” ஆட்சோபித்தாள் காவ்யா. அபிராமும் அதையே நினைத்தான்.
“இது நல்லாருக்கே. ரத்த பந்தமில்லாத நீயே உன் அத்தையை குறைவா காட்டிடக் கூடாதுன்னு ஆவேசப்படுற. அதே மாதிரி அவினாஷும் அவங்கம்மாவைப் பத்தி நினைப்பான் இல்லையா. கூப்பிடு”
அவினாஷ் வர, கதவை யாரோ தட்டி உள்ளே வர அனுமதி கேட்டார்கள்.
“பரவால்ல நாகரீகம் தெரிஞ்சவங்க” என்றாள் ராதிகா.
உள்ளே கத்தை காகித பண்டில்களை எடுத்துக் கொண்டு வந்தாள் செம்பருத்தி.
“இவ எதுக்கு இங்க?” என்று முகம் சுளித்தாள் காவ்யா.
“இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் பிரிண்ட் அவுட் எடுக்க சொல்லிருந்தேன். சொல்லப் போனா இதை எல்லாம் இவதான் உங்களுக்கு ப்ரூப்போட காமிக்கப் போறா” என்றார் சேச்சி.
“செம்பருத்தி இருக்கலாம். இருக்கணும்” என்றான் அவினாஷ்.
காவ்யா மறுத்து பேச வழியின்றி அடங்கி அவளது நாற்காலியில் அமர்ந்தாள்.
செம்பருத்தியோடு ரமேஷையும் ஜெயிலுக்கு அனுப்பி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறாளா காவ்யா.
irukalam ma
Interesting aah erukku sis…next ud sikirama podalaamae
sorry for making you wait ma. Posted
Nice
Thanks ma
Nice,konjam konjam seekiram update podalam mam
sorry for making you wait Pranavlax. Posted