இரவும் நிலவும் – 14
“அண்ணி… நான் பிறந்த பிறகு தான் இத்தனை பிரச்சினையும். அண்ணனுக்கு மனசளவுல நிறைய கஷ்டம் போல! ஆனா அம்மா அப்பாவுக்குமே அதேயளவு கஷ்டம் தானே அண்ணி! குடும்பத்துல எல்லாருக்கும் கஷ்டம் கொடுத்த என்மேல எல்லாரும் பாசத்தைக் கொட்டும்போது இன்னும் வலிக்குது அண்ணி…” அகல்யா மறுநாளே அவள் வீட்டிற்குக் கிளம்பியபோதும், அவள் சொல்லிச் சென்ற வார்த்தைகள் எல்லாம் சுபிக்ஷாவை ரீங்காரமிட்டது.
சுபிக்ஷா எத்தனை முறை யோசித்தும் இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்பதிலேயே வந்து நின்றாள். அவனின் வலிகளை உணர்வுகளை அவளால் கிரகிக்க முடியவில்லை.
ஆனால், ஏழு வயது சிறுவன் பெற்றோர்கள் இருந்தும் தனிமரமாய், வயதான தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளரும் கொடுமையை அனுபவித்தவனின் வலியும் வேதனையும் அவன் மட்டுமே அறிவான்!
பெற்றோர், உடன்பிறந்தவர்கள் எல்லாம் இல்லை என்பது வேறு! ஆனால், இருந்தும் அருகில் இல்லை என்பது முற்றிலும் வேறல்லவா! அதிலும் சின்ன தங்கையை அவன் மிகவும் தேடினான். தாயின் அரவணைப்புக்கும், சமையலுக்கும் வெகுவாக ஏங்கினான். தந்தையின் ஆதரவையும், கண்டிப்பையும் வேண்டினான். ஆனால், அவனுக்கு எதுவுமே கிடைத்திருக்கவில்லை.
ஒருவழியாக இதுதான் வழமை! தனிமை தான் நிரந்தரம் எனப் புரிந்து அதை நேசித்து வாழ துவங்கியவனுக்குப் பெற்றோர் மீது வெறுப்பு என்பதை விட, ஒரு பற்றற்ற தன்மை!
ஆறேழு வருடங்கள் சென்றபிறகு தங்களுடனே வந்தவிடுமாறு அழைத்தார்கள் தான். ஆனால், பிடிப்பு அற்றுப் போன பதின்பருவ பிள்ளைக்கு அது உவப்பாக இல்லை. வீம்புடன் மறுத்தான். ஆனால், அப்பொழுதே கொஞ்சி, கெஞ்சிக் கேட்டிருக்கலாம். குறைந்தபட்சம் கொஞ்சம் வற்புறுத்தி அவனும் முக்கியம் என உணர்த்தியிருக்கலாம். ஆனால், பெற்றவர்களுக்கு மகனிடம் அந்தளவு புரிதல் இல்லாததால், அவன் விருப்பம் என இலகுவாக விட்டு விட்டார்கள். அதோடு மகனும் செல்லம் கொஞ்சும் வயதினை கடந்திருந்தானே!
அவனுக்கு கோபமும், வலியும் இருக்கும் என்று கூட அவர்களுக்கு அனுமானமில்லை. அவனது ஒதுக்கம் பெற்றவர்களுக்குப் புரிந்ததே மூத்த தம்பதியரின் மறைவுக்குப் பின்னர் தான்! அவர்கள் மறைந்ததும், என்ன கேட்டுப் பார்த்தும், பெற்றவர்களுடன் செல்ல மறுத்து விட்டான். கூடவே பெரும் ஒதுக்கமும். அவர்கள் ஓர் இடத்தில் இருந்தாலே அவ்விடம் அவன் இருக்க மாட்டான்.
அன்றிலிருந்து தொடங்கியது பெற்றவர்களின் வேதனை காலம்!
இதெல்லாம் நவநீதனாக பகிராமல் சுபிக்ஷா அறிய வழியில்லையே! ஆக, அவள் தன்போக்கில், தன் நினைப்பில் இருந்தாள். நவநீதனுக்கு அவனின் பெற்றவர்கள் மீது வந்த பற்றற்ற தன்மை, அவளுக்கு இப்பொழுது அவனிடம் வந்திருந்தது.
நாட்கள் பெரிய பிரச்சினைகளின்றி நகர்ந்தது. தண்ணீரின் மேற்பரப்பைப் பார்ப்பவர்களுக்கு உள்ளே சேறும், சகதியும் இருக்கிறது என்பதைக் கூட ஊகிக்க முடியாதளவு இருக்குமே அதேபோல!
சுபிக்ஷா கருவுற்றிருந்தாள். நவநீதன் அகமகிழ்ந்து போனான். அவளை வெகுநேரம் கையணைப்பிலேயே வைத்திருந்து, உச்சியில் முத்தம் பதித்து, குழந்தையின் இதயத்துடிப்பை ஸ்கேனில் கேட்கும்போது கண் கலங்கி, அவளுக்குப் பரிசுப்பொருட்களை வாங்கி தந்து என தன் பரவசத்தை முயன்ற வரையில் அவளுக்கு உணர்த்தினான்.
ஆனால், தனியறை பழக்கத்தை இன்னும் ஒழித்திருக்கவில்லை. அவளுக்கு இரவில் தன் ஆதரவு தேவைப்படும் என்று கூட அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் நிஜம்!
உண்மையில், அவனுக்கு வேலைகள் இருக்கும். இரவில் திடுமென விழிப்பான்… சற்று நேரம் அந்த இரவு வேளையையும், நிலவையும் ரசிப்பான். அந்த நேரம் அவனுள் கற்பனைகள் விரியும், பிறகு அவனது ஓவிய அறையினுள் தஞ்சம் கொள்பவன், தன் கற்பனைகளுக்கு உருவம் கொடுப்பான். இதெல்லாம் மனைவியோடு தங்கியிருக்க நேர்ந்தால், அவளுக்கு சிரமமாக இருக்கும் என அவன் நினைத்தான்.
அதை அவளிடம் தெளிவாக எடுத்துரைக்காதது நிச்சயம் அவன் பிழையே!
கருவை சுமக்கும் ஆரம்ப காலகட்டத்தில், சுபிக்ஷா குடலே வெளியேறுமளவு வாந்தி எடுப்பதும், நள்ளிரவில் பசியால் அவதிப்பட்டு, எடுத்துத்தரக்கூட ஆளில்லாமல் சோர்வோடு அவளாகவே பாலை சூடு செய்து குடிப்பதோ அல்லது பழங்களை உண்பதையோ கூட அவன் அறிந்திருக்கவில்லை.
இதெல்லாம் அவளின் மனதில் நிறைய ரணங்களைச் சேர்ப்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை! சிறுக சிறுக சேர்க்கப்படும் வெடிமருந்து மிகப்பெரும் வெடிகுண்டை உருவாக்கும் வல்லமை கொண்டதல்லவா! அவளது மனதிலும் சத்தமின்றி வெடிமருந்துகள் சேர்ந்து கொண்டே இருந்தது. அது வெடிக்கும் நேரத்திற்காகக் காத்திருந்தது.
அவனுக்கு மனம் விட்டுப் பேசத் தெரியவில்லை! இவள் அவனாகப் பேசாத போது, நாம் ஏன் பேச வேண்டும் என்கிற வீம்பில் தன் தவிப்புகளை, வேதனைகளை அவனிடம் பகிரவில்லை. இருவரும் தங்களின் வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டிருந்தனர்.
அன்றையதினம், சுபிக்ஷாவை பார்த்துவிட்டுச் செல்ல, அவளின் குடும்பத்தினர் வந்திருந்தார்கள். அடக்கமும், அமைதியும், சோர்வும் சேர்ந்திருந்த மகளின் தோற்றம் தாய்மையின் அடையாளங்களாகவே பார்க்கப்பட்டது.
“என்ன சுபி குட்டி அங்க இருந்தபோது பேசிட்டே இருப்ப. இப்படி உன்னை அமைதியா பார்க்கவே அதிசயமா இருக்கு” என தந்தை தனராஜன் கூற, சுபி பதில் பேசாது மென்மையாக சிரித்தாள்.
அதைப்பார்த்துச் சிரித்த அவளுடைய அண்ணன் வருண், “பாருங்கப்பா இந்நேரம் நீங்க இப்படி சொல்லிட்டு வீட்டுல இருந்திருக்க முடியுமா? உங்களை உண்டு இல்லைன்னு செஞ்சிருப்பா. இப்போ சிரிக்கிறாப்பா! அதுவும் சத்தம் வராம! ஏதோ உலக அதிசயம் அதிசயம்ன்னு சொல்லுவங்களே… இங்க ஒரு அதிசயம் என் தங்கச்சி வடிவுல வந்து இருக்கே… இப்போ நான் என்ன பண்ணுவேன்?” என பரபரத்தான்.
அவனும் இப்பொழுது சுபிக்ஷா மகிழ்வாக இருப்பதாக நம்பத் தொடங்கியிருந்தான். ஏனெனில், நவநீதன் சென்னையில் இல்லாத நாட்களில் கூட பெரிதாக சுபிக்ஷா தாய்வீடு நாடி வராததால், அவளுக்கு இந்த வாழ்க்கைமுறை அத்தனை பிடித்திருக்கிறது என்று தானே பொருள் என நினைத்தான்.
இப்பொழுது சற்று சத்தமாகவே சுபி சிரித்தாள். கண்ணோரமாய் நீர் சேரும் அளவு. அதனை துடைத்தபடியே அமைதியாக இருக்க, “நிஜமாவே நீ ரொம்ப மாறிட்ட சுபிம்மா…” என அவளுடைய அன்னை புவனா ஆதுர்யத்துடன் கூற,
தனது கை விரல் நகங்களை ஆராய்ந்தபடியே, “அங்க கூட்டமா இருப்போம். பேசிட்டே இருக்க ஆள் இருந்தாங்க. இங்க…” என்றவள் சிறு இடைவெளியின் பின், “இங்க நான் தனியா தானே இருக்கேன். அதான் இப்படி மாறிட்டேன் போல” எனச் சொன்னவள் தன் உதட்டைக் குவித்து மூச்சுக் காற்றினை பெருமளவு வெளியிட்டாள். அவள் தனது அழுகையை கட்டுப்படுத்தும் உத்தி!
அதைச் சரியாக உணர்ந்து கொண்ட புவனாவின் மனம் கலக்கம் கொண்டது.
“சுபி குட்டி நீ…” என எதையோ கேட்க வந்தவர், சூழல் கருதி அதன் பிறகான வார்த்தைகளைக் கேட்க முடியாமல் விழுங்க,
சட்டென்று சுதாரித்தவள், “அச்சோ அம்மா ஐ எம் ஆல்ரைட். புது இடம். பழக வேணாமா?” என கண்சிமிட்டிச் சிரித்தாள்.
வருண் என்னதான் தன்னை தேற்றிக்கொள்ள நினைத்தாலும், தங்கையின் புதிர் நடவடிக்கை அவனை மீண்டும் மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. அதோடு புதிதாக முளைத்த காதல் வேறு முடிந்தமட்டும் அவனை இம்சிக்கத் தொடங்கியிருந்தது.
காதலில் வெற்றி வாகை சூட முடியாது என்றில்லை… ஆனால், தங்கையின் வாழ்வு எப்படி இருக்கிறது என உறுதியாகத் தெரியாமல், அவனால் மேற்கொண்டு அடுத்த அடியை எடுத்து வைக்க முடியவில்லை. ஒருவேளை அன்று அகல்யாவின் மௌனத்தின் பின்பும் இதே காரணம் தான் இருக்குமோ என அவனால் இப்பொழுது புரிந்து கொள்ள முடிகிறது.
அனைவரையும் உறுத்தும் சுபிக்ஷாவின் மௌனம், நவநீதனையும் உறுத்தத் தொடங்கியது. “சுபி… ஆர் யூ ஆல்ரைட்?” என்று அவளின் அருகில் அமர்ந்து விசாரித்தான்.
“எனக்கென்ன?” சுரத்தேயின்றி வந்தது அவளின் பதில்.
“அதை நீ தான் சொல்லணும். முன்ன மாதிரி நீ இல்லை… ஒருவேளை இந்தமாதிரி நேரத்துல பொண்ணுங்க இப்படித்தான் இருப்பாங்களா?” என அக்கறையுடன் விசாரித்தான். பதிலாக எதையும் சொல்லாமல் தோளைக் குலுக்கினாள்.
“உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா சுபி? குழந்தை ரொம்ப படுத்துதா?” இதமாக அவளின் மேடிட்ட வயிற்றை வருடியபடி கேட்டவன், “செல்லம்… அம்மாவை கஷ்டப்படுத்தாம சமத்தா இருங்க… அம்மா பாவம் தானே…” எனப் பிள்ளையிடம் உரையாடினான்.
கூடவே, “எனக்கு மறுபடியும் தனியா இருக்கிற மாதிரி தோணுது சுபி… ஏன்னு தெரியலை… என்னவோ நிறைய மிஸ்ஸிங்… அதுல உன் காதலும் ஒன்னு மாதிரி இருக்கு…” என்றான் ஆழ்ந்த குரலில்.
சுபிக்ஷாவிற்கு எங்கிருந்து தான் அத்தனை கோபமும் ஆத்திரமும் வந்ததோ… விழிகள் சிவக்க, காளி அவதாரம் எடுத்து, அவனை உறுத்து பார்த்தவளின் முகம் கோபத்தில் பாறையென இறுகியிருந்தது.
அவளின் தோற்றத்தில் நவநீதனின் நெற்றி சுருங்கியது. “இல்லைடா… எனக்கு தோணினதை தான் சொன்னேன். முன்ன மாதிரி நீ இல்லைன்னு தோணுச்சு அதுதான்…” என அவன் முடிக்க கூட இல்லை, அவனது டீ ஷர்ட் காலரை ஆவேசமாகப் பற்றி தன்னருகே இழுத்தவள், தன் முகத்தை அசூயையாகச் சுழித்து, அவனை அருகில் இழுத்த அதே வேகத்தில் பின்னால் தள்ளி விட்டாள்.
நிலை தடுமாறிய நவநீதன் கீழே கரணம் அடித்து விழுந்தான். விழுந்தவன், “ஆ… அம்மா…” என அலறியபடியே, “இதுதான் மூட் ஸ்விங்கா… இது தெரியாம இப்படி வந்து வாண்டேடா மாட்டிக்கிட்டேனே…” எனப் பரிதாபமாக உரைக்க,
அதற்கும் அவள் உறுத்து விழிக்க, தாவி வந்து அவளின் காலை கட்டிக் கொண்டவன், “பிளீஸ்… பிளீஸ்… காம் டவுன்… நோ வயலண்ஸ்… இது ரொம்ப வீக் பாடி… பாட்டி சமைச்ச உப்பு சப்பில்லாத சாப்பாட்டை அரைகுறையா சாப்பிட்டு வளர்ந்த டம்மி பீஸ்… அடி வாங்கற அளவெல்லாம் எனக்குத் தெம்பில்லை சுபிம்மா…” எனப் பாவமாக முகத்தை வைத்து உரைக்க,
அப்பொழுது அவன் சொன்னதை யோசிக்கும் மனநிலையில் அவள் சுத்தமாக இல்லை. ஆனால், பாவம் என விட்டுவிடும் மனநிலைக்கு வந்திருந்தவள், தனக்கென ஒதுக்கப்பட்ட அறையினுள் வேகமாகச் சென்று மறைந்து கதைவடைத்துக் கொண்டாள்.