இரவும் நிலவும் – 13
சுபிக்ஷா வேலை முடிந்ததும் சற்று வேகமாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள். அவள் வாயிலை நெருங்கும்போதே அகல்யாவின் கைப்பேசி வழியாக கசிந்த பாடல்கள், உற்சாகத்தோடு அவளை உள்ளே நுழைய வைத்தது.
ஆனால், வாயிலில் கிடைத்த உற்சாகம் சுத்தமாக வடியும் வண்ணம் இருந்தது அகல்யாவின் தோற்றம். சோபாவின் மூலையில் கால்கள் இரண்டையும் கோர்த்துக் குறுக்கி அதில் தலை புதைத்து அமர்ந்திருந்தாள்.
சுபிக்ஷாவின் விழிகள் வீட்டை அலசியது. வீட்டின் சுத்தம் கண்ணில் பட்டது. அகல்யா தனக்கு பிடித்தமாக பாடல்களை ஒலிபரப்பு செய்துவிட்டு, வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கியிருப்பாள். கூடவே கீழே இருந்த அறையையும் சுத்தம் செய்ய முயன்றிருக்க வேண்டும்; அங்கு என் பொருட்களைக் காண நேர்ந்திருக்கும்;
என்ன நடந்திருக்கும் என்ற யோசனையில் காட்சிகள் கோர்வையாக கண்முன்னே விரிந்தன. சத்தமில்லாத ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டு அகல்யாவின் அருகில் அமர்ந்து, அவளின் தலையை ஆதுர்யமாக வருடினாள்.
திடுக்கிட்டவள் போலத் தலையை வேகமாக உயர்த்திய சின்னவள், “வந்துட்டீங்களா அண்ணி… சாரி நான் கவனிக்கலை” என்றாள் தடுமாற்றத்துடன்.
“அது பரவாயில்லை… ஆனா இதென்ன அகல்யா இப்படி? கதவைத் திறந்து போட்டுட்டு நீ பாட்டுக்கு கவனமே இல்லாம இருக்கடா… நீ வளர்ந்துட்ட இதெல்லாம் நான் உனக்கு சொல்லத் தேவை இருக்காதுன்னு நினைக்கிறேன்” எனச் சிறு புன்னகையோடு முரணாக கண்டித்தாள்.
“அச்சோ.. சாரி அண்ணி.. அவர் கிளம்பினதும் கதவை சாத்தவே மறந்துட்டேன். இனி கவனமா இருக்கேன்” என்று சொல்லிக்கொண்டே போனவள், சுபிக்ஷாவின் பார்வையில் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
பின் தயக்கமாக, “அ.. அது.. ரொம்ப வெயிலா இருக்கேன்னு உங்க அண்ணனை ஜூஸ் குடிச்சிட்டு போகச் சொன்னேன். அதை செஞ்சிருக்க கூடாதா அண்ணி…” தடுமாற்றமும் தயக்கமுமாகக் கேட்டாள்.
“ச்சு… நீ என்ன ஸ்கூல் பொண்ணு மாதிரி இதுக்கெல்லாம் விளக்கம் சொல்லிட்டு… நீ திடீர்ன்னு அவர்ன்னு சொன்னியா அதுதான் யாரை சொல்லறன்னு புரியாம பார்த்தேன்” சுபிக்ஷா சாதாரணமாகத் தான் கேட்டாள், ஆனால், அகல்யா தடுமாறிப் போனாள். முகமும் சிவந்துவிட, அதை மறைக்க தெரியாமல்,
“நீங்க பிரஷ் ஆயிட்டு வாங்க அண்ணி… நானும் கொஞ்சம் அசைன்மெண்ட் வொர்க் பார்க்க வேண்டியதிருக்கு…” என்று அவசரமாக எழுந்து கொள்ள, சுபிக்ஷாவும் உடைமாற்றி வரச் சென்றாள்.
சமையல் முடித்து, உண்டும் முடிக்கும் வரையும் பொதுவான பேச்சுக்கள் மட்டுமே! அதன்பிறகு, அகல்யாவே தான் தயங்கித் தயங்கி தொடங்கினாள்.
“அண்ணி… அண்ணாவும், நீங்களும் சந்தோஷமா தானே…” எனத் தொடங்கியவளிடம், “தெரியலை அகி” என்றிருந்தாள் சுபிக்ஷா உடனேயே!
அவள் விக்கித்து நோக்க, “எங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு எனக்குப் புரியலை. எல்லாம் சரியா இருக்குன்னு நினைச்சாலும், நாங்க நார்மலா மத்த கப்பிள்ஸ் மாதிரி இல்லைன்னு எனக்கே தெளிவா தெரியுது… எனக்கு இதை யார்கிட்ட பேசணும் கூட தெரியலை அகி… உன்கிட்ட பேசறது சரியான்னும் தெரியலை. ஆனா, எனக்கு மூச்சு முட்டுது. என்னவோ நான் ரொம்ப பொறுப்பில்லாம இருக்கிற மாதிரி தோணுது…” உள்ளுக்குள் அழுத்திய பாரம் அவளை இவ்வாறு பேசத் தூண்டியது. பாதி பேசும்போதே தொண்டையை அடைக்க, தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
அகல்யாவுக்கு அண்ணியின் நிலை புரிந்தது. அண்ணிக்கு இதெல்லாம் ஏன் இப்படி எனத் தன்மூலம் தெரிய வேண்டும்! அதற்காகத்தான் இப்படி தன்னிடம் மனதைத் திறந்து சொல்கிறார் என அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆக, அவள் தனக்கு தெரிந்தளவில் அண்ணனைப் பற்றிச் சொல்ல நினைத்தாள். அது நிச்சயம் அண்ணனுக்கு ஏற்ற விதத்தில் அணுகும்முறையை அண்ணிக்குத் தெளிவுபடுத்தும் என்று நம்பினாள்.
ஒருவித எதிர்பார்ப்பும், கலக்கமுமாக சுபிக்ஷா நோக்க, அகல்யா நவநீதனைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.
அந்தோ பரிதாபம்! அகல்யாவிற்கு மேலோட்டமாக தான் தெரியும். இவள் பிறந்த பிறகு, இருவரையும் பார்த்துக்கொள்ள முடியாமல் அம்மா அண்ணனை பாட்டியிடம் விட்டு வளர்த்தார்கள். அந்த கோபம் அவனுக்கு என்றாள். உண்மையில் அவள் அறிந்தது அதுதான்!
அதோடு தனியாகவே இருந்திருந்து அதுவே பழகி விட்டது போல அண்ணி என்றாள். நான் ஓரளவு வளர்ந்த பிறகு அவனைப் பெற்றோர்கள் அழைத்தார்கள் தான், ஆனால், அப்போதும் அவன் எங்களோடு வந்திருக்க பிரியப்படவில்லை… ஏன், தாத்தா பாட்டி இறந்தபிறகு கூட எங்களோடு சேர்ந்திருக்க மறுத்து விட்டான் என்றும், அண்ணன் கொஞ்சம் பொசசிவ் என்றும் சொன்னாள்.
“அம்மா, அப்பாவைப் பார்க்கும் போது பாவமா இருக்கும் அண்ணி… அண்ணன் இந்த விஷயத்துல ரொம்ப பிடிவாதம் தான்! இப்படியே தனியாவே இருந்துடுவான்னு கூட நினைச்சு பயந்திருக்கேன். உங்களைப் பார்த்ததும் தான் கொஞ்சம் நம்பிக்கையே” என்றாள் பாவமாக.
இதையெல்லாம் கேட்க, இதில் என்ன இருக்கிறது. அதற்காக இப்படியா நடந்து கொள்வான் என்றுதான் சுபிக்ஷாவிற்கு தோன்றியது. இன்னும் சொல்லப்போனால், கோபம் கூட பொங்கியது. இது ஒரு காரணம் என்று பெற்றவர்களை இன்றுவரை ஒதுக்கி இருக்கிறானே என்று!
மேலோட்டமாக பார்த்தால், அகல்யா சொன்னது ஒத்துக் கொள்ளும்படியாக தான் இருந்தது. அதில் பெரும்பாலான தவறு நவநீதனின் புறம் என்றும் எண்ணத்தோன்றும்! ஆனால், உண்மையில் அவன் வாழ்வில் நடந்தது இன்னும் நிறைய! அவன் தனது சிறு வயதிலேயே நிறைய ஏமாற்றங்களைச் சுமந்தவன், நிராசையோடு அலைந்தவன்.
எல்லா மூத்த பிள்ளைகளைப் போலவும் ஆறேழு ஆண்டுகள் அன்னையிடம் செல்லம் கொஞ்சி, தந்தையைச் சுற்றிச் சுற்றி வந்து எனக் குழந்தைப் பருவம் மிகமிக மகிழ்ச்சிகரமாகவே அமைந்தது நவநீதனுக்கு.
அவனுக்கு ஏழு வயது இருக்கும்போது தேன்மொழி மீண்டும் கருவுற்றாள். அதற்கென காட்டிய சிறு சிறு ஒதுக்கங்களால், அவனுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. சற்று விவரம் தெரியத் தொடங்கும் வயது என்பதால், தனக்கு ஒரு தம்பியோ, தங்கையோ வரப்போகிறாள் என்று ஆவலாகவே காத்திருந்தவனுக்கு, அன்னையின் சிறு விலகல் வயிற்றில் இருக்கும் பாப்பாவிற்காக என்றளவு புரிந்து கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது.
ஆனால், ஒருமுறை உடம்பு முடியவில்லை என்று மருத்துவமனைக்குச் சென்ற தேன்மொழியை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், வயிற்றில் தண்ணி அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்று சொல்லி, குழந்தையை உடனே வெளியே எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இரு உயிருக்கும் ஆபத்து என்று சொல்லிவிட, ஏழரை மாத சிசுவை வெளியில் எடுக்க வேண்டிய நிலை!
அதன்பிறகு, ஏகப்பட்ட சிக்கல்கள், கவனங்கள் என பெரும் சோதனையை அனுபவித்தார்கள். தேன்மொழி பிரசவத்தின் பின்னர், தன் தாய்வீட்டில் இரு பிள்ளைகளோடு தங்கிக்கொள்ள, பாபு இரு வீட்டிற்கும் அலைந்தார்.
தேன்மொழியின் பெற்றோர்கள் கூட, “இங்கேயே இருங்க மாப்பிள்ளை..” என கேட்டுப்பார்க்க, “இல்லை மாமா அது நல்லா இருக்காது…” என நாசூக்காக மறுத்து விட்டார்.
தேன்மொழி ஓரளவு உடல் தேறியபோதும், அகல்யாவிற்கு தன் முழு கவனமும் தேவைப்படும் சூழல் என்பதால், மீண்டும் புகுந்தவீடு போகும்போது மகனை தன் அன்னையின் பொறுப்பில் விட்டுவிட்டு செல்ல, அதில் நவநீதனின் மனம் வெகுவாக காயப்பட்டது.
கிளம்பும்போது, “அம்மா நான் பாப்பாவை நல்லா பார்த்துப்பேன் மா. உங்களைத் தொல்லை செய்யவே மாட்டேன்…” எனக் கண்ணில் பெருகிய நீரோடு கேட்க,
“நீயே பார்க்கிற தானே தங்கம். பாப்பா இன்னும் இத்துணூண்டு தான் இருக்கா… அம்மாவுக்கு அவளைக் கவனிக்கவே சரியா இருக்கும். அப்பாவும் பாவம் இங்கேயும், அங்கேயும் அலையராரு…” என தன் நிலையை விளக்கி மகனைத் தேற்ற நினைத்தார்.
“அப்ப அப்பாவையும் இங்கேயே இருக்க சொல்லுங்க” மாப்பிள்ளை வீம்பு பற்றித் தெரியாத பிள்ளை, மூழ்கும் சமயம் கைக்குக் கிடைத்த கட்டையைப் பற்றிக்கொள்ளும் ஆர்வத்தோடு கேட்டான்.
“அது சரியா வராதே தங்கம்… நீ சமத்து பிள்ளையா இரு. சீக்கிரமே அம்மா வந்து உன்னை கூப்பிட்டுக்கறேன்” எனச் சொல்லித் தேற்றிச் சென்றார்.
அவனும் சீக்கிரம் தன்னை அழைத்துக் கொள்வார்கள் என மிகவும் நம்பினான். ஒருமாதிரி வளர்ந்தும் வளராத, ஓரளவு விவரம் தெரிந்த பிள்ளை என்பதால், தாய் தந்தையின் பாசத்திற்கும், அரவணைப்புக்கும் வெகுவாக ஏங்கினான். அது எட்டும் தூரத்தில் இருந்தும் கிட்டாதது அவன் துரதிஷ்டமே!
தேன்மொழிக்கு மகளை நினைத்து அப்பொழுது பெரும் கவலை. அவள் பிறந்தபோது ஒரு கிலோ எடை தான்! இந்த நான்கு மாதங்களாகத் தேற்றி இரண்டு கிலோ கூட இன்னும் எட்டவில்லை. குழந்தையை பார்க்க வருபவர்கள் எல்லாம்… பெற்ற தாயின் மனதை நோகடிக்கிறோம் என்ற வரைமுறையின்றி, “என்ன ஏலியன் மாதிரி இருக்கு உன் பொண்ணு” எனச் சொல்லிச் சொல்லி சிரித்தனர்.
“பார்க்க எலும்புக் கூடே தான்… நிறையப் பாலை கொடு” என்று வண்டி வண்டியாக அறிவுரை வேறு!
“முகமாவது லட்சணமா இருந்திருக்கலாம். எலி முகம் கூட நல்லா இருக்கும் போல…” என்றெல்லாம் சொல்லிச் சிரித்தபோது அன்னையாக அத்தனை வேதனை கொண்டாள்.
பெற்றவள் கண்களுக்கு எப்பொழுதுமே பிள்ளை பேரழகு தானே! அவளின் மனம் நோகப் பேசிய வீரியமிக்க வார்த்தைகள் அதன் வேலையை செவ்வனே செய்ய, அவளுக்குப் பிள்ளையைத் தவிர மற்ற அனைத்துமே பின்னோக்கி சென்று விட்டது. இத்தனை நாட்களாய் அருமை பெருமையாய் வளர்த்த மகளின் நினைவு உட்பட!
இதுவும் தாய்ப்பாசம் தான்! மகன் வளர்ந்து விட்டான், இனி தன் அன்னை கண்காணிப்பு அவனுக்கு போதுமாக இருக்கும் என்று தான் அவளுக்கு அப்போது தோன்றியது. ஏனெனில் மகளுக்கு அந்தளவு கவனிப்பு தேவைப்பட்டது. ஆகையால், தன்போல மகனின் முக்கியத்துவம் பின்னோக்கி சென்று விட்டது! இதில் அவள்புறம் தவறென்றும் சொல்வதற்கில்லை!
என்ன தந்தையாக பாபு சற்று இறங்கி வந்திருக்கலாம். மகனுக்காக மாப்பிள்ளை வீம்பை மறந்து மாமனார் இல்லத்திற்கு வந்திருக்கலாம்! அது தேன்மொழிக்கும் இன்னும் உதவிகரமாக இருந்திருக்கும். ஆனால், ஊரார் என்ன பேசுவார் என்ற கவலை கொண்ட சாதாரண மனிதரால் அது முடியவில்லை! இதில் அவரையும் குற்றம் சொல்ல முடியுமா தெரியவில்லை!
ஆனால், முழுதாக பாதிப்படைந்தது நவநீதனே! திரும்பவும் அழைத்துக் கொள்கிறேன் என்று சொன்ன அன்னை அதை மறந்தே விட்டிருந்தார். உறவு போல வந்துபோகும் பெற்றவர்கள் மீதிருக்கும் ஏக்கத்தை ஒரு வயதிற்கு மேல் வெளிப்படுத்தவும் முடியவில்லை! தனிமையே அவனுக்கு நிலைத்து விட்டது. ஏங்கி ஏங்கி எதுவும் கிடைக்காது என்ற நிதர்சனம் புரிந்து தனக்குள்ளேயே இறுகிப் போனான்.
அவன் பழகிய ஓரிருவர் மீதும், மிகவும் பற்றுதல் வைக்க… அது அவர்களுக்கு தொல்லையாக அமைய, அவர்களாகவே விலகத் தொடங்கினார்கள். தன் தவறு புரிகிறது தான்! ஆக, அவனும் யாருடனும் ஒட்டி உறவாடுவதில்லை. அந்த நேரத்து அழுத்தத்தை போக்க, தனக்குப் பிடித்த ஓவியத்திற்குள் தன்னை புகுத்திக் கொள்ள இன்று தமிழகத்தில் மிகச்சிறந்த ஓவியர்களில் அவனும் ஒருவன்!
தனக்கிருக்கும் பொஸசிவ் குணம் சுபிக்ஷாவையும் தன்னிடம் இருந்து பிரித்து விடக்கூடாது என்ற அச்சத்திலேயே அவன் சற்று விலகி நின்று அவளை அவள் போக்கில், அவள் விருப்பம் போல விட்டான்! ஆனால், அது அவனது காதலை அவளுக்கு வெளிப்படுத்தாது என அந்தநேரம் அவனுக்குப் புரியாதிருக்க… இதோ! வலியும் வேதனையையும் அனுபவிப்பது அவன் சரிபாதியே!
Nice