Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 26

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 26

அத்தியாயம் – 26

 

தென்காசி பஸ்ஸ்டாண்ட்டில் இருட்டும் நேரத்தில் பஸ்ஸில் இருந்து ஒரு உருவம் இறங்கியது. மறைந்து மறைந்து இருட்டில் நடந்து யார் கண்ணிலும் படாதவாறு லாவகமாய் நழுவி ஒரு தெருவுக்குள் சென்றது. அந்தத் தெருவில் அனைவரும் உறங்க ஆரம்பித்ததை உறுதிப் படுத்திக் கொண்டு நீண்ட நாட்கள் யாரும் உபயோகப் படுத்தாமல் இருந்த வீட்டின் பின் பகுதியில் இருந்த கொட்டகைக்கு மறைந்து சென்றது. அங்கு அதற்கு முன்பே இருவர் அமர்ந்து காத்திருந்தனர். 

 

“திருநெல்வேலில இருந்து இங்க வர இவ்வளவு நேரமா?” கடுகடுத்தது ஒரு பெண்ணின் குரல்.

“சொல்லுவியே… எல்லாரு கண்ணுலையும் மண்ணைத் தூவிட்டு வர வேணாம்”

 

“போனா போன இடம் வந்தா வந்த இடம்னு இருந்தா எப்படி?” 

 

“சூ… ரெண்டு பேரும் சண்டையை நிறுத்துங்க. பசில காதெல்லாம் அடைக்கு. கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது. ஏதாவது சாப்பிட வாங்கியாந்தியா டா?” அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த மூன்றாவது பெண்ணின் குரல் ஆணையும் பெண்ணையும் அதட்டியது. 

 

“டீக்கடைல பன்னு மட்டும்தான் கிடைச்சது”

 

“பன்னா  கொண்டா கொண்டா… அவனது கையிலிருந்து பையைப் பிடுங்காத குறையாய் பறித்துக் கொண்டு அதிலிருந்த பன்னை நாய்கள் சண்டையிடுவதைப் போல அடித்துக் கொண்டு அப்படியே விழுங்கினர்” 

 

அவர்கள் யாரென்று தெரிகிறதா செம்பருத்தியின் அத்தை, அத்தை மகன் மற்றும் மகள்தான். 

 

அம்மா தண்ணியில்லாமல் விக்கல் எடுக்க, பாட்டிலில் இருந்த நீரைத் தந்தான். 

 

“யம்மா பக்கத்து வீட்டுக்காரனுக்கு சத்தம் கேட்டுறப் போவுது. இந்தத் தண்ணியைக் குடி” 

 

“இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பசியும் பட்டினியும்? என் வீட்டுக்காரன் எப்ப என்னை விரட்டி விட்டுட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ணப் போறானோ தெரியலையே” புலம்பினாள் இளையவள்.  

 

“அப்படி மட்டும் செஞ்சிருவானா? சுளையா இருபது  பவுனு போட்டு உன்னை அவனுக்குக் கல்யாணம் பண்ணித்தந்திருக்கேன். வரதட்சணை கேசில் தூக்கிப் போட்டுருவோம்” என்றாள் வயதான பெண்மணி. 

 

“க்கும்… “ கழுத்தை நொடித்துக் காட்டினாள் சிறியவள் “முதல்ல நீயும் உன் மகனும் வரதட்சணை கேசில் இருந்து வெளிய வர வழியப் பாரும்மா.. அதுக்கப்பறம் என் புருசனைத் தூக்கி ஜெயிலில் போடலாம்”

 

“இதெல்லாம் பூ..ன்னு ஊதித் தள்ளிடலாம்” கான்பிடென்ட்டாய் பேசிய அண்ணனைப் பார்த்து முறைத்தாள். 

 

“நீ செஞ்சிருக்கிறது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? “

 

“என்னடி என் மகன் பெருசா தப்பு செஞ்சுட்டான்? அவனோட மாமனாரு சொத்தில் பங்கு கேட்டான். கல்யாணம் பண்ணி வச்சதோட சரியா போச்சா? மாசா மாசம் அவளுக்கு சாப்பாடு போட யாரு பணம் தர்றது? ஒன்னு இவன் பொண்டாட்டி வேலைக்குப் போயி சம்பளப் பணத்தை எண்ணி வைக்கணும். அவ வேலைக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டா. அப்ப அந்தக் காசை இவனோட மாமனார் தானே தரணும்?” அம்மாக்காரி நியாயம் பேசினாள்.

 

“நாங்க என்ன அந்த மாதிரி மாசா மாசம் பணம் கேட்டுத் தொந்தரவு பண்ணுற அளவுக்கு ஈவு இரக்கம் இல்லாதவங்களா? ஏதோ நியாய தர்மப் படி நடக்குறதால அவங்க அப்பனோட தியேட்டரை மட்டும் இவன் பேரில் எழுதி வைக்கச் சொன்னோம்” 

 

மகன் தொடர்ந்தான் “அவளைக் காதலிச்சதே தியேட்டர்காரனோட பொண்ணுனு இருக்குற ஒரே தகுதில  தானே. அதுதான் நிலம் எல்லாம் அவங்கப்பனுக்கு இருக்கே. இதை எனக்கு எழுதி வைச்சா என்ன? மாட்டேன்னு சொன்னா அதுதான் லைட்டா தட்டினேன். போலீஸ்ல புகார் தந்துட்டா” 

 

“லைட்டா தட்டுனியா? நீ அடிச்ச அடியில் அவளோட கர்ப்பமே கலைஞ்சு போயிருச்சு. நான் என்ன அம்மா மாதிரி நல்லா நாலு போடு போடுடா. நீ அடிக்கிற அடில அவங்கப்பன் அலறிக்கிட்டு வந்து சொத்தை ரெஜிஸ்டர் பண்ணிட்டு போகணும்னு உன்னைத் தூண்டி விட்டுட்டா இருந்தேன். 

 

புருசன் பொண்டாட்டி இன்னைக்கு அடிச்சுக்குடுவாங்க நாளைக்கு பிடுச்சுக்குடுவாங்கன்னு தடுக்காம உக்காந்து சிவனேன்னு மகராசி சீரியல் பாத்துக்கிட்டிருந்த பாவத்துக்கு கேசில் என்னையும் உன் பொண்டாட்டி தூக்கிப் போட்டுட்டா… அவ விளங்குவாளா?” சாபம் அளித்தாள் தங்கை. 

 

செம்பருத்தியின் தகப்பனிடம் அடித்துப் பிடிங்கி, அதிகாரமாய் கேட்டு வாங்கி வாங்கி வாழ்க்கை நடத்தி, இப்படி அடுத்தவரின் உழைப்பை முழுவதும் எனக்குத் தா என்று உரிமையாய் கேட்கும் அளவுக்கு அந்தக் குடும்பத்தினரின் தராதரம் வளர்ந்திருந்தது. 

 

ஒருவருக்கு ஒரு தரம் கை தூக்கி விடலாம். ஒரு வருடம் கூட ஸ்திரம் ஆகும் வரை உதவி செய்யலாம். அது கூட பாத்திரம் அறிந்து பிச்சை இடாமல் போனால் இப்படித்தான். ஏன் உன்கிட்டத்தான் காசு இருக்கே எனக்குத் தந்தா என்ன? என்று கேட்கும் அளவுக்குப் பணப் பேயாக வளர்ந்து உதவி செய்தவர்களின் ரத்தத்தையே உறுஞ்சிக் குடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இத்தகைய மூட்டை பூச்சிகளை நமது வீட்டில் அண்ட விடவே கூடாது. 

 

“இப்ப என்ன பிளான். எவ்வளவு காலம் ஊருக்கு போயிருக்குற உன் பிரெண்டு வீட்டு கொல்லைல உக்காந்திருக்க முடியும்?”

 

“அதுக்குத் தான் நமக்கு சரியான வழி கிடைச்சிருக்கு” என்றான் ரமேஷ். 

 

“சொல்லு சொல்லு”

 

“அம்மா… உன்னை வக்கீல் வீட்டில் சண்டை போட்டு செம்பருத்தி இருக்குற அட்ரஸ் வாங்கச் சொன்னேனே”

 

“ஆமாண்டா… இப்ப அதுக்கு என்ன?”

 

“ஒரு பொண்ணு போன் பண்ணி, செம்பருத்தி விலாசத்தைத் தந்து என்னை உடனே வர சொல்லி இருக்கு”

 

“எங்க?”

 

“கேரளாவுக்கு… செம்பருத்தியை அவ வீட்டில இருந்து கூட்டிட்டு போயிரணும். அதுதான் நம்ம ஒப்பந்தம். அதுக்கு பதிலுக்கு ஒரு லட்சம் பணம் கூட தரேன்னு சொல்லிருக்கும்மா. பேசாம இங்கிருந்து தப்பிச்சு கேரளாவுக்கு போயிரலாம். அங்க போனா நமக்கு புது வாழ்க்கைதான்”

 

“ஒரு லட்சத்தை வச்சுக்கிட்டு, இந்த செம்பருத்தியை வேற கூட்டிக்கிட்டு இதென்னடா பிளான். அவ பாட்டுக்கு ஸ்வீட்டு கடையோ சிப்ஸ் கடையோ வேலை செஞ்சு சோறு தின்னுட்டு இருக்கா. அவளைக் கூட்டிட்டு வந்து அவளுக்கும் சோறு போடணுமே. எப்படிடா  புது வாழ்க்கை?”

 

“உன்னை எதுக்காக வக்கீல் வீட்டுக்கு போயி மானம் போகக் கத்தி செம்பருத்தி அட்ரெஸை வாங்கச் சொன்னேன்”

 

“ஏதோ அவ பேரில் பணம் இருக்கிறதா சொன்ன… அப்பறம் என்ன ஒரு ஓட்டை வீடு இருக்கு. அந்த வாடகையை நம்ம வாங்கிக்கலாமா?”

 

“கடனில்லாத ஓட்டை வீடு” திருத்தினாள் மகள். 

 

“இப்ப கவிதா கூட காம்ப்ரமைஸ்கு போனா நம்ம குடி இருக்குற வீடு, கொஞ்ச நஞ்சம் இருக்குற பணம் எல்லாம் புடிங்கிக்குவா… “ என்றாள் மகள்.

 

“அடி ஆத்தி… அந்தக் கழுதைக்கு எதுக்குடி நம்ம வீட்டைத் தரணும்?”

 

“அப்படித்தான்… நம்ம கஷ்டப்பட்டு சம்பாரிச்சு சேர்த்த சொத்தா இதெல்லாம். மாமாவோட பணத்தை எல்லாம் நம்ம சொத்தா மாத்திக்கிட்டோம். அதெல்லாம் வந்த மேனிக்கு இப்ப கவிதாவுக்குப் போகும்”

 

“இதெல்லாம் உனக்கு எப்படிடி தெரியும்”

 

“நீங்க அடிச்சு விரட்டினப்ப அவ வீட்டு வாசலில் நின்னு என் பணம் நகை எல்லாம் புடுங்கிட்டு தெருவில் விரட்டி விட்டிருக்கீங்களா இதே மாதிரி உங்க சொத்தை எல்லாம் புடுங்கிட்டு நாய் மாதிரி நடுத்தெருவில் விடுறேன் பாருன்னு சபதம் போட்டுட்டுத் தான் போனா”

 

“அடக்கடவுளே… கோவத்தில் மக்கள் இப்படி எல்லாம் கத்துவாங்க தான். ஆனா பாதி பேரு புள்ளப் பூச்சிங்க. எதிர்த்து நிக்க தைரியம் இல்லாதவங்க. அதுவும் பொட்டப் புள்ளைய பெத்தவங்களுக்கு தைரியமே இருக்காது. பொறந்த வீட்டுக்கு நிரந்தரமா அனுப்பிட்டா? பொண்ணு வாழவெட்டியா வந்திருந்தா குடும்பத்துக்குப் பெருமையா?”

 

“ஏம்மா இதெல்லாம் உனக்கு இல்லையா… நீ மட்டும் ஒரு சீரும் சரியா செய்ய மாட்டிங்கிற, ஏதாவது கேட்டா சொந்தக்காரங்க முன்னாடி பேயாட்டம் ஆடுற”

 

“உன்னை கட்டிக் கொடுத்தாச்சுல்ல. இனிமே எதுக்கு உனக்கு செய்யணும். என்னைக்குத் தாலி கழுத்தில் ஏறுச்சோ இனிமே நல்லது கெட்டதெல்லாம் உன் பாடு. உன் வீட்டில் நீ சூதானமா குப்பை கொட்ட வேண்டியதுதான். காசு பணம்னு மனசால நினைச்சா கூட வீட்டில் சேர்க்க மாட்டோம்” 

 

“நீதான்மா நியாய தேவதை. உன் நியாயம் எல்லாம் பணம். அந்தப் பணம் உன்கிட்டயே இருக்கணும். அதுக்குத் தகுந்த மாதிரி நாக்கை வளைச்சு வளைச்சு பேசுவ”

 

“அதில் என்ன தப்பிருக்கு. பணம் இல்லாதவங்க பிணம்” என்றான் ரமேஷ். 

 

“இந்தக் குடும்பத்தில் பிறந்தத்துக்கு… எத்தனை ஜென்மம் பாவம் செஞ்சேனோ” 

 

“இவை கிடக்குறா… அடுத்த பிளான் என்ன கேரளா போறோமா?”

 

“ஆமாம். இப்பவே கிளம்புறோம்”

 

“அந்த செம்பருத்தியால என்னடா நமக்குப் பலன்? அவ படிச்ச படிப்புக்கு பெருசா என்ன வேலை கிடைச்சுடப் போகுது? இங்க பலகாரக் கடைல வேலை பார்த்த மாதிரி அங்க சிப்ஸ் கடைல வேலைக்குப் போவா”

 

“இப்படி நெனைச்சுத்தானே அசால்ட்டா விட்டோம். அம்மா.. இங்க பாரு… இது என்ன இடம் தெரியுதா? “ செல்லில் இருந்த ஒரு இடத்தைக் காட்டினான். 

 

“என்னமோ பேக்டரி வருதுன்னு சொன்னாங்களே அந்த இடம்தானே… நம்ம கூட அரை கிரவுண்டு கேட்டதுக்கு யானை விலை சொன்னானே”

 

“அதே இடம்தான்…. அங்க ரெண்டு கிரவுண்டு கிடைச்சா எப்படி இருக்கும்?”

 

“கோடிக்கணக்கா பெறுமே டா” அத்தைக்காரியின் கண்களில் கனவு மிதந்தது. 

 

“ உன் தம்பி சும்மா போகல. செம்பருத்தி பேரில் ரெண்டு கிரவுண்டு வாங்கி கிரயம் பண்ணிட்டுத்தான் போயிருக்கார்”

 

“எனக்குத் தெரியாம சொத்து வாங்கினானா? எவ்வளவு தைரியம்? அப்பா வீட்டு சொத்தில் எனக்கு பங்கு இருக்கு. உடனே ஒரு வக்கிலைப் பாத்து கேஸ் போடுறேன்”

 

“ஒரு பிடி மண்ணைக் கூடப் பிடுங்க முடியாது. ஏன்னா அது செம்பருத்தி பேரில் இருக்கு. அவ சம்பாத்தியத்தில் வாங்கினது”

 

“அவளுக்கு ஏதுடா இவ்வளவு காசு? தப்பு வழில எதுவும் போயிருப்பாளோ?”

 

“நீங்க வேறம்மா அவ வாங்கினப்ப சில லட்சம் தான். இப்ப சமீபத்தில் பாக்டரி காரன் வந்து விலையை ஏத்தி விட்டுட்டான். கால் க்ரவுண்டு கூட நம்மால வாங்க முடியல”

 

செம்பருத்தியின் அதிர்ஷ்டத்தை நினைத்து வயிறெரியாமல் இருக்க முடியவில்லை அவர்களால். 

 

“பேசாம உன் பொண்டாட்டியத் துரத்தி விட்டுட்டு செம்பருத்தியை கட்டிக்கோ. அவ இருக்குற பக்கமாவே ஒரு வேலையைப் பாத்துகிட்டு போயிரலாம். அஞ்சாறு வருசம் கழிச்சு வந்து இந்த பூமியை வித்துட்டு போயிரலாம். இப்பயே கோடிக்கணக்கா இருந்தா அப்ப ஒரு அஞ்சாறு கோடிக்கு விக்கலாம்ல”

 

“நீங்க ரெண்டு பேரும் இப்படி கனவு கண்டுக்கிட்டே இருந்தா என்னோட வாழ்க்கை?”

 

“ஒன்னொன்னா பாக்கலாம். முதல்ல செம்பருத்தி. அவ எங்கேடா இருக்கா?”

 

“கொச்சி பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம்”

 

“உனக்கு அட்ரஸ் தெரியுமா?”

 

“அந்தப்  பொண்ணு வாய்ஸ் மெசேஜ்ல  அனுப்பி இருக்கு”

“போலீசா இருக்கப் போகுதுடா”

 

“இல்லம்மா… நான் அந்தப் பொண்ணுகிட்ட வாய்ஸ் மெசேஜ் மட்டும் அனுப்ப சொல்லிருக்கேன். உடனே கிளம்பி வர சொல்லுக்கு”

 

“யாருடா அந்த நல்லவ?”

 

“காவ்யான்னு சொன்ன நினைவு. ஆனால் அந்தப் பொண்ணை போட்டுத் தரக் கூடாதுன்னும் டீல்”

 

“சரி, கவிதாவால விட்டதைக் காவ்யாவால பிடிக்கலாம்”

 

மூவரும் சத்தம் போடாமல் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினர். அடுத்த ஐந்தாறு மணி நேரத்தில் கேரளாவின் கொச்சி செல்லும் பஸ்ஸில் தூக்கத்தில் சாமியாடியபடி மூவரின் பயணம் ஆரம்பித்தது.

1 thought on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 26”

  1. ஆபிராமிடம் வாங்கப்போறாங்களோ அவினாஷிடம் வாங்கப்போறாங்களோ தெரியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35

அத்தியாயம் – 35  ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள் மந்தாகினி. நாகேந்திரன் ராஜ வம்சத்தினன் என்பதாலா? அது மட்டும் அவளது ஆத்திரத்திற்குக் காரணமில்லை. அவன் பட்டாபிஷேகத்தினை ஒட்டி அவளுக்கு இழைக்கப்பட்ட அவமானம்தான். பட்டாபிஷேக விழா முடிந்து  நகர்வலமாக சென்று அவர்களது குலதெய்வமான முருகப்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 11

அத்தியாயம் – 11   இப்போது என்ன செய்வதென்றே செம்பருத்திக்கு ஒன்றும் புரியவில்லை. கெட் அவுட் என்றால் இப்போதைக்கு அறையை விட்டு கெட் அவுட்டா? இல்லை நிரந்தரமாக வீட்டை விட்டே கெட் அவுட்டா?    யாரிடம் கேட்கலாம்? இவளை இந்த வேலைக்குச்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 8தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 8

அத்தியாயம் – 8    ஜாம்நகர் ட்ரெயின் சற்று பழசாகத்தான் இருந்தது. ஜன்னல் கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து, கழிவறைக் கதவுகள் கூட அப்படித்தான். முதல் வகுப்பு என்பதால் சற்று சுத்தமாக இருந்தது. இதுவே மற்ற வகுப்புக்களுக்கும் இருக்குமா என்பது சந்தேகம்தான்.