இரவும் நிலவும் – 11
“அண்ணா… அது ஒரு ஹெல்ப்…” சுபிக்ஷா வருணிடம் தயங்கிக் தயங்கி கேட்டு நிறுத்தினாள்.
முன்மாலை நேரத்தில், அலுவலகத்தில் வேலையில் இருப்பவனை அழைத்து… இத்தனை தயக்கத்தோடு கேட்டால் அவனுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் பதறி விட்டான். “என்னாச்சு சுபி?” அவனது பதற்றமான குரலை, அவளால் இனம் காண முடிந்தது.
அவசரமாக, “அண்ணா… உதவின்னு தானே கேட்டேன். பிரச்சினைன்னு சொன்ன மாதிரி இப்படி பதறறியே” என கடிந்து கொண்டாள்.
“ச்சு… என்னன்னு சொல்லு” என்று தளர்ந்தான் அவன். அவனை இன்னும் பதற வைப்பாள் தங்கை எனத் தெரியாத காரணத்தால்!
“அண்ணா… நான் ஆபிஸ் வந்தேன்…” ஜவ்வு எப்படி இழுக்கும் என நேரடி ஒளிபரப்பு செய்த தங்கை, அவனின் பொறுமையைப் பறித்தாள்.
அதில் உண்டான கடுப்போடு, “சுபி…” எனப் பல்லைக் கடித்தான் மூத்தவன்.
கேட்க முடியாமல் தானே இப்படி சுத்தி வளைக்கிறாள். இந்த அண்ணன் வேறு அதைப் புரிந்து கொண்டு அனுசரணையாக விசாரிக்காமல், அவசரம் காட்டவும், கடகடவென, “அது… அண்ணா… அகல்யாவை இன்னைக்கு நான் வீட்டுக்கு கூட்டிட்டு வரதா சொல்லியிருந்தேன். ஆனா ஆபிஸ்ல வேலையில மாட்டிக்கிட்டேன். அவளைத் தனியா ஆட்டோவில் எல்லாம் அனுப்ப மாட்டாங்கண்ணா… காலேஜ் பஸ் தான் எப்பவும்.
எனக்கு அவசரமா ஒரு மீட்டிங் வந்துட்டதால, இப்ப என்னால கூப்பிட போக முடியாது. பிளீஸ் எனக்காக நீ போயி அவளை பிக்கப் பண்ணி வீட்டுல டிராப் பண்ணிட முடியுமா? பிளீஸ்ண்ணா பிளீஸ்… பிளீஸ்…”அவன் மறுக்கவே சந்தர்ப்பம் தராமல் பிளீஸை அடுக்க…
“ஸ்ஸ்ஸ்… சுபி… வேற ஏதாவது அரேஞ் பண்ணு. ஒருநாள் ஆட்டோவில் போனா எல்லாம் ஒன்னும் ஆகாது. ஏன் நீ போறதில்லையா?” என வருண் சிடுசிடுத்தான்.
“அண்ணா… அவ சின்ன பொண்ணுண்ணா… அதோட நான் வருவேன்னு காத்திட்டு இருப்பாண்ணா” என்க, அதைக்கேட்டதும், “என்னது? அவளா?” என அநியாயத்துக்கு அதிர்ந்தான் வருண். கூடவே, “உனக்கு கண்ணு தெரியாது?” என்று கடுப்போடு கேட்டு வைத்தான்.
“அண்ணா… ஹெல்ப் செய்ய முடியுமா? முடியாதா?” சுபிக்ஷாவும் கடுப்பில் அதட்ட, அதற்கு கொஞ்சம் மதிப்பிருந்தது.
உள்ளே பற்றி எரிந்து கொண்டிருக்கும் எரிச்சலை அடக்கி, “போயி தொலைக்கிறேன். த்ரீ தேர்ட்டிக்கு தானே காலேஜ் முடியும்?” என கேட்டான்.
“ஆமா… ஆமா…” என அவசரமாகச் சொன்னவள், “ஆமா உனக்கெப்படி தெரியும்?” எனப் பதிலுக்குக் கேட்க,
“இதை கண்டுபிடிக்க கோர்ஸா முடிப்பாங்க. வையு… நான் கிளம்பறேன். நேரம் ஆகுது” என்றவன் அலுவலகத்தில் பர்மிஷன் போட்டுவிட்டு, அகல்யாவின் கல்லூரிக்கு கிளம்பி விட்டான்.
அண்ணனுடன் பேசி சம்மதம் வாங்குவதற்குள் மதியம் உண்ட அனைத்தும் ஜீரணமாகி விட்டது சுபிக்ஷாவிற்கு! முன்தினம் அகல்யாவிடம் பேசியபோது, தான் அனுமானமாய் எதையோ கேட்கப்போய்… அது இளையவளின் மனதைக் கனக்கச் செய்திருக்க, அவள் அழுத அழுகை… ஹப்பா… இப்பொழுதும் அந்த சூழலை சுபியால் யோசிக்கவே முடியவில்லை! அருகிலிருந்து சமாதானமும் செய்ய முடியாமல், என்ன செய்வதென்றும் புரியாமல் போதும் போதும் என்றாகிவிட்டது.
வெகுநேரம் கழித்து, அவளே சமாதானமாகி, திரும்ப அழைத்து, “சாரி அண்ணி… நீங்க அப்படி கேட்கவும் ரொம்ப கஷ்டமா போச்சு…” என்றாள் கரகரத்த குரலில் தேம்பலோடு.
“பரவாயில்லை விடு… ரொம்ப சாரிடா. உன்னை ஹர்ட் பண்ணனும்ன்னு நான் கேட்கலை. என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு தான்…” என்று சுபி சொல்ல,
அகல்யாவிற்கு தன் சுயநலம் இப்பொழுது பூதாகரமாகத் தெரிந்தது. திருமணமாகி இத்தனை வாரங்கள் கழித்து, அண்ணி இதுபோல கேட்கிறார்கள் என்றால், அவர்களுக்குள் என்னவோ சரியில்லை என்று தானே அர்த்தம்! கூடவே அண்ணனாகவும் அண்ணியிடம் எதுவும் பகிர்வதில்லை என்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறதே! தான் தவறு செய்து விட்டோமோ என்று உறுத்தியது.
“இல்லை அண்ணி… உங்க மேல தப்பில்லை… நான் தான் சின்ன பிள்ளைத்தனமா நடந்துட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க அண்ணி… ரொம்ப சாரி…” என்று மன்னிப்பு கேட்டாள்.
“பரவாயில்லை விடு…” என்று முடித்துவிட்ட சுபிக்கு, மேற்கொண்டு அதைப்பற்றிப் பேசவே முடியாமல் எதுவோ தடுத்தது.
அதை உணர்ந்தாற்போல, “நாளைக்கு நான் காலேஜ் முடிஞ்சதும் அங்கே வந்துடறேன் அண்ணி… நாம நேரில் பேசிக்கலாம்…” என அகல்யா சொல்லியிருக்க, இவள் போய் அழைத்துக் கொள்வதாக ஏற்பாடு! அது சொதப்பவும் அண்ணனை உதவிக்கு அழைத்திருந்தாள்.
உண்மையில் அது அகல்யாவிற்கு உதவியா? உபத்திரவமா?
நேற்றைய இரவு அகல்யாவுக்கு குற்றவுணர்வில் உறக்கமே பிடிக்கவில்லை. மூடிய விழிகளுக்குள், அவனைக் குற்றம் சாட்டிக்கொண்டு வருண் வந்து நின்றான். அப்படி அமைதியின்றி உறங்கியவளை எதிர்கொள்ள இன்று அவனே அவளின் கல்லூரி வாசலில் காத்திருந்தான்.
ரோட் சைட் ரோமியோ மாதிரி காத்துட்டு வேற நிக்கணுமா? கல்லூரி விட்டு வெளியேறுபவர்களின் பார்வை தன்மீது ஆர்வமாகவும், ஆராய்ச்சியாகவும் படிய வருண் மிகவும் எரிச்சலுற்றான்.
அலுவலகத்திற்குச் சென்றிருந்தபடியால் பக்கா பார்மல் ட்ரெஸ்; அடர் சாம்பல் நிற பேண்ட்டில், செருலீன் நீல வண்ண செக்குட் சட்டையை டக்கின் செய்திருந்தான். வெயிலில் நிற்பதால் அணிந்திருந்த கூலர்ஸ் ஆகட்டும், அலட்சியமாக பைக்கில் சாய்ந்து காலை குறுக்காகப் போட்டு நின்றிருந்த அவனது தோரணை ஆகட்டும் அவனை அட்டகாசமாகக் காட்ட, இளம்பெண்களின் கண்கள் தன்னைப்போல அவனை வட்டமிட்டது.
சுபிக்கு அழைத்துத் தான் காத்திருக்கும் இடத்தை சொல்லலாம் என வருண் தன் கைப்பேசியை எடுக்க, அவளே சில பல மெஸேஜ்களை தட்டி விட்டிருந்தாள்.
மீட்டிங் செல்வதால், கால் செய்ய வேண்டாம் என்றும்… அகல்யாவிற்கு கல்லூரி முடியும் முன்பு மீட்டிங் செல்லவிருப்பதால் அவளுக்கு அழைத்துச் சொல்ல முடியவில்லை என்றும் சொல்லிவிட்டு, அவளின் எண்ணையும் அனுப்பி, அவனையே தொடர்பு கொள்ளும்படி அனுப்பி… அவனின் மொத்த பொறுமையையும் சோதித்திருந்தாள்.
அவன் பற்களைக் கடித்த வேகத்திற்கு, அகல்யா மட்டும் அப்பொழுது எதிரில் வந்திருந்தால் தீர்த்துக் கட்டியிருப்பான்.
அவளின் போதாதா காலம், அவன் கண்ணில் அப்பொழுதே பட்டு விட்டாள். அதுவும் அவள் மட்டும் தனியாக இல்லாமல்… விட்டு விலகி வேகமாக நடந்து வரும் அவளையும், பின்னாலேயே எதையோ தொணதொணத்துக் கொண்டு வரும் இளைஞனையும் சேர்த்தே பார்த்திருந்தான் அவன்.
அவசரமாகக் கல்லூரிக்கு வெளியே வந்த அகல்யா, என்னவோ உறுத்தச் சாலையை அலச, சுபிக்ஷாவை எதிர்பார்த்தவள், எதிர்கொண்டது வருணின் துளைக்கும் பார்வையை. விக்கித்து நின்று விட்டாள்.
“உங்க அண்ணி வரதுக்குள்ள ஒரே ஒரு காபி” அவள் நின்னதை சாதகமாகப் பயன்படுத்தி, அவளை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த இளைஞன் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
அதை கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை! அவளது பார்வை முழுவதும் தாடை இறுக நின்றிருந்த வருணிடம் மாத்திரமே! அவளுக்குள் பற்பல ரயில் வண்டிகள் தடதடத்து வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
இவளின் பார்வையைத் தொடர்ந்து அந்த இளைஞனும் அவனை ஏறிட்டுப் பார்த்து, “யார்?” என விசாரித்தான்.
அவனுக்கு பதிலளிக்காமல் முன்னிலும் வேகமாக அவனை விட்டு விலகி ஓடி வந்து வருணிடம் நின்றவள், இப்பொழுது இவனிடம் விளக்கம் சொல்வதா வேண்டாமா என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.
வருணோ சாவகாசமாக வண்டியில் அமர, “அ.. அது… அ… அது… வேற டிப்பார்ட்மெண்ட் பையன். எனக்கு அவனை பெருசா தெரியாது. என் பிரண்டோட பிரண்ட்… ரொம்ப அவாய்ட் பண்ணவும் முடியலை. சொன்னா புரிஞ்சுக்கவும் மாட்டேங்கறான்” எனத் திக்கித்திணறிய போதும், அகல்யா முழுதாக ஒப்புவித்திருந்தாள்.
எனக்கென்ன வந்தது என்ற அசுவாரஸ்ய ஃபாவம் தான் வருணிடம்.
நாம் யார் என்று கேட்டால் நமக்குப் பதில் சொல்லாமல், எதுவுமே கேட்காமல் நின்றிருப்பவனிடம் போய் யார்? என்ன? என்று விளக்கம் சொல்கிறாளே என்ற எரிச்சல் போல அந்த இளைஞனுக்கு… வருணை நன்றாக முறைத்தபடி அவளருகே வந்தான்.
இப்பொழுது அவளை நெருங்கிய இளைஞனிடம் வருண் கேட்டான், “என்ன வேணும்?” என்று திடமாக; கொஞ்சம் திமிராகவும்!
நெஞ்சை நிமிர்த்தி, “நான் அவளோட பிரண்ட்” என்றான் அவனும்.
“அதுக்கு…?” என வருண் இளக்காரமாக இழுக்க,
“ம்ப்ச்… நீங்க யார் சார் முதல்ல… இப்படித்தான் காலேஜ் முன்னாடி வந்து நிக்கிறதா? அவளோட அண்ணி வர நேரம் ஆச்சு முதல்ல கிளம்புங்க சார்…” என்றான் அந்த சாலையை போட்டவனே நான் தான் என்ற தோரணையில்.
வருண் திரும்பி அகல்யாவை முறைக்க, அதற்குள் அந்த இளைஞன், “இப்படி அவளை பாஃலோ எல்லாம் பண்ணாதீங்க பிளீஸ். அவ ரொம்ப நல்ல பொண்ணு” என சர்டிபிகேட் கொடுக்க, அகல்யாவுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
வேகமாக அந்த இளைஞனின் முன் வந்தவள், “அரை லூசு மாதிரி பேசாத பிரதீப்… முதல்ல இங்கிருந்து போ. இன்னைக்கு எங்க அண்ணி வரலை போல. அதுதான் என்னை கூட்டிட்டு போக இவர் வந்திருக்காரு” என அடிக்குரலில் சீறியிருந்தாள். வருண் இங்கு வர அந்த ஒரு காரணம் மட்டும் தான் இருக்கும் என்று புரிய பிரதீப்பை அதட்டி விரட்ட முயற்சித்தாள்.
அவனோ துளியும் அசையாமல், “இவருன்னா யாரு…?” என விசாரித்தான்.
அவனை அனுப்பியாக வேண்டுமே… ஆக, “அண்ணியோட அண்ணன்…” என உடனேயே அவசரமாகப் பதிலளித்திருந்தாள்.
அப்போதும் அந்த பிரதீப் துளியும் நகராமல், “ஓ… முறை பையனா… புதுசா வந்த முறை… அதுதான் காலேஜ் வாசல் வரை வந்து தவம் இருக்கிறாரு…” என்று நக்கலாகச் சொல்ல, அவன் கன்னம் பழுக்குமளவு ஓர் அறை விழித்திருந்து வருணின் கையால்.
கடந்து சென்றவர்கள் திரும்பிப் பார்த்துவிட்டுச் செல்ல, அகல்யா செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள். அவளுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.
வருணோ, பிரதீப்பை பார்த்து ஒற்றை விரலை நீட்டி, “பாரு… இனி அவ பின்னாடி உன்னை பார்க்கக் கூடாது. மீறி பார்த்தேன்னா அத்தை, மாமாவோட வந்து பிரின்சிபில் கிட்ட கம்பிளைன்ட் பண்ணிடுவேன்” என்று உறுமலாகக் கூறியவன், வண்டியில் அமர்ந்து, அதன் கிக்கரை வேகமாக உதைத்து, எக்ஷிலேட்டரை முறுக்க,
பதறியபடி அதில் அகல்யா ஏறி அமர்ந்திருந்தாள். வருணுக்குக் கோபமும் எரிச்சலும் இன்னமும் தணியாததால், வாகனம் அவன் கையில் சீறிப் பாய்ந்தது.
பள்ளம், மேடு, ஸ்பீட் பிரேக்கர் எதையும் கண்டுகொள்ளாமல் அவன் ஓட்ட, நொந்துபோனது அகல்யா தான்! அவன் மீதான உரசல்களையும் தடுக்க முடியவில்லை; அதோடு எங்கே விழுந்து விடுவோமோ என்ற பயமும் வேறு! வீடு வந்து சேர்வதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
Nice