Tamil Madhura சுகமதியின் இரவும் நிலவும் சுகமதியின் ‘இரவும் நிலவும் – 10’

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 10’

இரவும் நிலவும் – 10

தனிமை விரும்பி என்று தன்னாலேயே வரையறுக்கப்பட்டு… சொந்த மனைவிக்கே தனியறை தந்து விலகி நிற்கும் கணவனை எத்தனை நாட்களுக்கு ஒரு மனைவியால் பொறுத்துப் போக முடியும்?

 

என்னதான் சுபிக்ஷாவிற்கு நவநீதன் மீது கடலளவு நேசம் இருந்தபோதும்… அவனின் இந்த போக்கு அவளின் வாழ்வில் எத்தனை சலிப்பையும், வேதனையையும் கொண்டு வரும்? ஒவ்வொன்றாக அனுபவிக்க தொடங்கினாள்.

 

விடியலில் அவன் முகம் பார்த்து விழிக்க முடிவதில்லை! காலையில் காபி, தேநீர் என்ன குடிப்பான் என்றும் தெரியாமல், அவனை எழுப்பச் செல்லலாமா கூடாதா என்றும் புரியாமல் விழித்து நிற்பாள்.

 

சரி அவனாக வரட்டும் எனக் காத்திருந்து… காலை உணவு வேளை முடிவது தான் மிச்சம்!

 

அன்றும் அப்படித்தான் நடந்தது. வழக்கம்போல சத்தமில்லாத ஒரு பெருமூச்சுடன் தனக்கான உணவை மட்டும் முடித்துக்கொண்டு மதிய சமையலுக்கு ஆயத்தமானாள்.

 

அவள் சமையலைத் தொடங்கிய சிறிது நேரத்தில், நவநீதன் அவள் தோளை இடித்துக்கொண்டு வந்து நின்றான். தோள் உரசும் கணவனை நிமிர்ந்து பார்த்து மெலிதாக புன்னகைத்தவள், “குட் மார்னிங்” என வாழ்த்த,

அவனும் பதிலுக்கு வாழ்த்தியவன், “உனக்கு ஒரு சர்ப்ரைஸ்… என்கூட வா…” என கைப்பற்றி மாடிக்கு அழைத்துச் சென்றான். அவனது நடையில் துள்ளல் இருந்தது. முகமும் வழக்கத்துக்கு மாறாகப் பிரகாசித்தது. அதைக் கவனித்தபடியே சிறு புன்னகையுடன் அவனோடு இணைந்து மாடி ஏறினாள்.

அவனுடைய அறையைக் கடந்து ஓவிய அறைக்குச் செல்லும் முன் அவளது கண்களை தன் கரங்களால் சிறை செய்தான். அவளது புன்னகை விரிந்தது!

 

உள்ளே சென்றதும் விழிகளை விடுவிக்க, அறை முழுவதும் கண்காட்சிக்குத் தயாரான ஓவியங்கள். அவள் விழிகள் எதை அள்ள, எதைப் பருக எனப் புரியாமல் திண்டாடி தித்தித்தன.

 

“இன்னும் ரெண்டு நாளில் கண்காட்சி இருக்கு… இதோ இதெல்லாம் மட்டும் பிரேம் போட கொடுக்கணும். அதோட நம்ம வேலை முடிஞ்சது…” என சொல்லிவிட்டு இரண்டு கைகளையும் உயரத் தூக்கிச் சோம்பல் முறித்தான் நவநீதன்.

 

அவளோ அவன் சோம்பல் முறிப்பதை ஓர விழிகளால் அளந்தவாறே… ஒவ்வொரு புகைப்படங்களின் அருகில் சென்று ஆசையாகப் பார்வையிட்டாள். அவளோடு இணைந்த அவனும் மௌனமாக பின் தொடர்ந்தான்.

 

ஒவ்வொரு படத்தின் சிறப்பையும் அவள் சிலாகித்துப் பேசிக்கொண்டே வர… அவன் முகத்தில் குறுஞ்சிரிப்பு மட்டுமே!

 

“என் கண்ணுக்கு எல்லாமே அழகா தெரியுதே… உங்களுக்கு பீட்பேக் எதுவும் எதிர்பார்ப்பீங்களா?” என்றாள் தயங்கித் தயங்கி.

அவளது தோள்களைப்பற்றி தன்புறம் திருப்பியவன், அவளின் கன்னங்களை தன் இரு கைகளாலும் தாங்கி, “கண்காட்சி போகும் முன்னே இதுவரை நான் யார்கிட்டயும் காட்டி அபிப்ராயம் கேட்டதே இல்லை… என்னமோ பிடிச்ச மாதிரி வரைவேன். பொறுப்பை வினோதன் கிட்ட ஒப்படச்சிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போயிடுவேன்… முதல்முறை இந்த அழகான கண்கள் ரசிக்கிறதைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு…” அவளின் விழிகளை ஊடுருவிப் பார்த்த வண்ணம் உரைத்தவன், அவளின் கண்கள் இரண்டிற்கும் சின்னஞ்சிறு முத்தம் கொடுத்தான்.

அவளின் உள்ளம் குளிர்ந்தது. தன் தயக்கத்தைக் கூட கவனித்துக் களைய நினைக்கிறானே என பேருவகை கொண்டாள்.

 

கூடவே, இவன் ஏன் எப்பொழுதும் இப்படியே இருக்கக் கூடாது… என ஏக்கம் சுமந்தன அவளின் விழிகள்.

 

புருவங்கள் சுருங்க, “என்ன ஆச்சு?” என அவளின் ஏக்கம் புரியாமல் வினவினான்.

 

அவளோ அதற்குப் பதிலளிக்காமல், “இந்தமுறை எப்படி?” என அவனிடம் கேட்டாள்.

 

அவன் புரியாது பார்க்க, “இல்லை இந்தமுறை கண்காட்சிக்குப் போகும் எண்ணம் இருக்கா…” என வினவினாள்.

 

உதடுகள் புன்னகையில் விரிய, “இந்தமுறையும் எந்த மாற்றமும் இல்லை… அதோட அந்த மூணு நாளும் நான் வேற பிளான் வெச்சிருக்கேன்” என்று கண்ணைச் சிமிட்டி கூறியவன், அவள் முன்பு இரண்டு பிளைட் டிக்கெட்டுகளை நீட்ட, அவளின் விழிகள் விரிந்தன.

ஊட்டியில் தனி காட்டேஜ் புக் செய்திருந்தான். அவள் ஆச்சரியமாய் பார்க்க,

“இந்த மூணு நாள் தான் பிரீ… அதுதான் ஊட்டியிலேயே புக் பண்ணிட்டேன். வேற எங்கே தூரமா போனாலும் டிராவலிங்லேயே போயிடும். அதோட நம்ம என்ன ஊரை சுத்தி பாக்கவா போறோம்..” அவன் இயல்பாகத்தான் பேசி வைத்தான். அவளுக்குத் தான் முகம் சிவந்து போயிற்று.

சிவந்த முகத்தை ஆள்காட்டி விரல் கொண்டு கோலமிட்டவாறே… “இன்னொருமுறை உனக்கு பிடிச்ச இடத்துக்கு போயிட்டு வருவோம். இன்னும் ஒரு மாசத்துல அடுத்த செட் பெயிண்டிங்ஸ் முடிக்க வேண்டியதிருக்கு… அதுக்குள்ளே எங்கே போகணும் என்னன்னு முடிவெடுத்து சொன்னா… நம்ம டிராவல் அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் செய்துடலாம் என்ன?” என்று ஆசையும் கனிவுமாகக் கேட்ட கணவன் அவளை மொத்தமாகக் கொள்ளை கொண்டான்.

ஆசை மிக, சுபிக்ஷா அவனின் இடையைக் கட்டிக்கொண்டு தோளில் சாய்ந்து கொள்ள, “இருந்தாலும் நீ அநியாயத்துக்கு வெட்கப்படற…” என்று அப்பொழுதும் சீண்டினான்.

தஞ்சாவூரில் கண்காட்சி நல்லபடியாக நடந்து முடிந்திருக்க, ஊட்டியில் அவர்களின் தேன்நிலவும் நல்லபடியாக முடிந்திருந்தது. மிகவும் ஆசையும் தாபமுமாகத் தன்னை சுற்றி வந்த கணவன் மேல் அவள் பித்தாகிப் போனாள்.

ஆனால், சற்று ஒதுக்கம் காட்டுவதில் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை. இரவில் இன்னமும் இரு வேறு அறைகள் தான்! சேர்ந்து உண்பது கிடையாது. கோயில், ஷாப்பிங், மூவி என ஒன்றாக வெளியே செல்வதெல்லாம் அரிதிலும் அரிது! பல விஷயங்களில் அவள் போக்கிற்கு விட்டு விடுவான். அவள் அம்மா வீடு போகப் பிரியப்பட்டால், வேண்டாம் என்று மறுக்க மாட்டான். ஆனால், அவள் மட்டும் தான் செல்ல வேண்டும்; இவன் வருவதில்லை. மீறி வந்தாலும் அவளைக் கொண்டு வந்துவிட வருவான். அவ்வளவே!

சுபிக்ஷாவிற்கு வாழ்வு கொஞ்சம் கொஞ்சமாகச் சலிப்பு தட்டத் தொடங்கியது. தனியே உண்டு… தனியே உலாவி… எல்லாம் எல்லாம் பிடிக்காமல் போகத் தொடங்கியது. நவநீதனிடம் கேட்கவும் பிடிக்கவில்லை.

என்னவென்று கேட்பது? இதெல்லாம் தானாகப் புரிந்து செய்ய வேண்டியதல்லவா? இவள் போய் கேட்டு… அவன் மாறுவதோ மறுப்பதோ எதிலும் அவளுக்கு விருப்பம் இல்லை. மாறினாலும் இவளுக்கு நான் சொன்னதால் ஒப்புதலுக்காகத்தானே மாறி இருக்கிறான் என உறுத்தலாக இருக்கும். அன்றி, மறுத்தாலோ, அல்லது தான் செய்வது தான் சரி என வாதாடினாலோ அவமானம் அல்லவா?

அலுவலகம் என்ற ஒன்றிற்குச் சென்று வராவிட்டால், பைத்தியம் பிடித்தாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை என்பது போலத் தான் அவள் நிலை இருந்தது.

தனிமை நவநீதன் விரும்பி அனுபவிப்பதாக இருக்கலாம். ஆனால், சுபிக்ஷாவின் வாழ்வில் திணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதை ஏற்க முடியாமல், தனக்குள் நத்தையாய் சுருங்க தொடங்கினாள்.

அன்று ஒரு ஞாயிறு விடுமுறை தினம்! நவநீதன் வேலை விஷயமாகச் சென்னை வரை சென்றிருந்தான். வர இன்னும் நான்கு நாட்கள் ஆகும். சும்மாவே கொல்லும் தனிமை இன்றும் அவளை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது.

பொழுது போகாவிட்டால் எதையாவது கிறுக்குவாள். இல்லையா ஏற்கனவே கிறுக்கியதைப் புரட்டி பார்ப்பாள். அப்பொழுதும் அப்படித்தான் அந்த நோட்டில், அவள் ஏற்கனவே கிறுக்கியிருந்த வரிகளை வருடிக் கொண்டிருந்தாள்.

“தீராக் காதல் உன்மீது…

தெவிட்டா நேசம் உன்மீது…

மாயவிசை உன்னுள்…”

இப்படி தொடங்கி நீண்டு செல்லும் கவிதை அது! நவநீதனைக் கண்டு பித்தான புதிதில் கிறுக்கியது. இன்றுவரை அவன்மீது கொண்ட நேசம் அவளுக்கு அதிசயமே!

ஆனால், நிலைமை இப்படியே சென்றால் எங்கே அந்த அதிசயத்தை ஆராயும் முன்பு அவன்மீது கொண்டிருக்கும் தீராக் காதல்… தேய்ந்து விடுமோ என்னும் அச்சம் பிரவாகமெடுத்தது அவளுள்.

கண்கள் கண்ணீரில் நனைய, இந்த கழிவிரக்கம் வேண்டாமே என்று மூளை எச்சரிக்க, அந்த நோட்டைப் பழைய இடத்தில் வைத்துவிட்டு, சமையலறை சென்று சில பாத்திரங்களை உருட்டினாள். எதையும் சமைக்கவோ உண்ணவோ பிடிக்காதது போல இருக்க… குளிர்சாதன பெட்டியைத் திறந்து அங்கு வைத்திருந்த நீரை எடுத்து வயிறு முட்டக் குடித்தாள். குளிர்ந்த நீர் தொண்டை வழியாக வயிற்றில் இறங்க இறங்கக் கொஞ்சம் தேறினாற்போல உணர்ந்தாள்.

 

காலையிலேயே தன் வீட்டிற்கு அழைத்துப் பேசியாயிற்று! ஆக, இப்பொழுது அகல்யாவை அழைத்தாள். குரலில் துள்ளலைக் காட்டி, “என்ன மௌன மகாராணி இந்தப்பக்கம் வரதே இல்லை?” என விசாரித்தாள்.

 

“அ… அதெல்லாம்… ஒன்னும் இல்லை அண்ணி…” என சங்கோஜத்துடன் அகல்யா திணறினாள். பின்னே, புதுமண தம்பதிகள் அடிக்கடி சென்று தொல்லை தரக்கூடாது என்று அம்மா சொன்னதையா சொல்ல முடியும்?

 

“நீ சொல்லற பாவனையே என்னவோ இருக்குன்னு சொல்லுதே…” மூத்தவள் சீண்ட,

 

“அச்சோ இல்லை அண்ணி… நீங்க கொஞ்சம் செட்டில் ஆகட்டும்ன்னு தான்…”

 

“அதாவது… அந்த வீடாச்சு… அண்ணியாச்சுன்னு இருக்க?”

 

“அண்ணி…” என்றாள் விட்டால் அழுதுவிடுவேன் என்ற பாவனையில்!

 

“சரி… சரி… அந்த வீட்டுக்கு என்னை எப்பதான் கூட்டிட்டு போவீங்க?” சுபிக்ஷாவின் கேள்வியில் அகல்யா திடுக்கிட்டாள்.

 

“அண்ணி… நீங்களும் அண்ணாவும் அங்கே தான் எப்பவும் இருப்பீங்க…” என்றாள் தயக்கமாக.

 

“அது புரிஞ்சது. ஆனா அதுக்காக நீங்க இருக்க வீட்டை பார்க்கக் கூட கூட்டிட்டு போக மாட்டீங்களா என்ன?”

 

அவள் துள்ளிக் குதிப்பாள் என்றுதான் சுபிக்ஷா எதிர்பார்த்தாள். ஆனால், மாறாக பெரும் தயக்கத்துடன், “அண்ணா கிட்ட கேட்டீங்களா அண்ணி…” என அவள் கேட்கவும்தான்,விஷயம் ரொம்பவும் பெரியதோ என சுபிக்கு உறுத்தியது.

 

“புரியலை. அவர் என்ன சொல்லிட போறாரு?” ஸ்ருதி இறங்கியிருந்தது அவளின் குரலில்.

 

அகல்யா பதில் சொல்லாமல் மௌனம் காக்க, “ஏன் அகி… உங்க அண்ணாவும் நீங்களும் ஏன் தனித்தனியா இருக்கீங்க… அதோட உங்க அப்பா, அம்மா கிட்ட அவர் இயல்பா பேசி நான் பார்த்ததே இல்லையே… என்ன விஷயம்?” எனச் சற்று தீவிரமான குரலில் வினவினாள்.

இதுவரை சுபிக்ஷா நவநீதனின் கடந்த காலத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதில்லை தான்! அதற்கு முக்கிய காரணம், ஏதோ ஒரு விஷயம், அது சொல்லக்கூடியது என்றால், கணவன் கண்டிப்பாகச் சொல்லுவான் என்ற நம்பிக்கையில் தான்! ஆனால், இன்னமும் அப்படி நம்பிக்கொண்டிருக்க முடியவில்லையே! அப்படி இருவரும் அன்னியோன்ய தம்பதிகள் இல்லை என்பது ஒருபுறம் என்றால், அவன் மனம் விட்டுப் பேசுவான் என்று இன்னமும் நினைப்பது மடத்தனம் எனப் புரிந்து கொண்டாள்.

அதோடு சாதாரண உரசலாக இருக்கலாம் என்று எண்ணி இருந்தவளுக்கு, நவநீதன் தன் பெற்றவர்களை முற்றிலும் தவிர்ப்பது மிகுந்த கலக்கத்தைத் தந்தது. அதனால் தான் அகல்யாவிடம் கேட்டு விட்டாள்.

இந்த நேரடி கேள்வியை அகல்யா எதிர்பார்க்கவில்லை போலும்! வெகுவாக திணறிப் போனாள்.

அவளின் அமைதியைத் தொடர்ந்து, “ஒருவேளை உங்க அண்ணன் சொந்த பிள்ளை இல்லையா அகி தத்து பிள்ளையா?” அவளுள் இப்படி ஒரு ஊகம் தான் இருந்து வந்தது! ஆக, நேரடியாக கேட்டு விட்டாள்.

“அண்ணி…” என்று அவள் கேட்ட கேள்வியின் அதிர்ச்சி தாங்காமல் அகல்யா கத்தி விட்டாள். அவளின் குரல் நடுங்கியது. விழிகள் கலங்கிப் போனது.

“இல்லை அகி… தோணுச்சு… அதுதான் கேட்டேன்… சாரிடா… தப்பா எடுத்துக்காத…” அவசரமாக மன்னிப்பு கேட்டாள் மூத்தவள்.

அகல்யாவுக்கு தாளவே முடியவில்லை. அண்ணியால் எப்படி இந்த மாதிரி கேட்க முடிந்தது? அண்ணனுக்கான எங்களுடைய தவிப்பு, தேடல் எல்லாம் அவருக்கும் இத்தனை நாட்களில் புரிந்திருக்குமே? இருந்தும் இப்படி கேட்கிறார் என்றால், அது போலத் தோற்றம் பிரதிபலிக்கும்படி தானே எங்கள் செய்கை இருந்திருக்க வேண்டும்?

எல்லாம் என்னால் தான்! நான் ஒருத்தி பிறந்தே இருக்கக் கூடாது. என்னால் தான் இப்படி அண்ணன் தனியாக இருக்கிறான். அம்மா, அப்பா அண்ணனின் அன்பு இல்லாமல் ஏங்குகின்றனர். எல்லாம் என்னால் வந்தது என்று கழிவிரக்கத்தில் தேம்பி தேம்பி அழலானாள்.

1 thought on “சுகமதியின் ‘இரவும் நிலவும் – 10’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 14’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 14’

இரவும் நிலவும் – 14 “அண்ணி… நான் பிறந்த பிறகு தான் இத்தனை பிரச்சினையும். அண்ணனுக்கு மனசளவுல நிறைய கஷ்டம் போல! ஆனா அம்மா அப்பாவுக்குமே அதேயளவு கஷ்டம் தானே அண்ணி! குடும்பத்துல எல்லாருக்கும் கஷ்டம் கொடுத்த என்மேல எல்லாரும் பாசத்தைக்

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 6’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 6’

இரவும் நிலவும் – 6   சில நொடிகள் மௌனமாய் கழிய, சுபிக்ஷா தன்னுள்ளே நடக்கும் போராட்டத்தை வெளியில் இம்மி கூட காட்டாதவளாய், “ஏன்?” என்று வினவினாள்.   இவளுக்கு எப்படி எடுத்துச் சொல்வது என்ற குழப்பத்தில் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 12’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 12’

இரவும் நிலவும் – 12   வீட்டு வாசலில் வந்து வண்டி நிற்கவும் தான் அகல்யாவுக்கு சுவாசமே சீரானது. எங்கே வழியில் விழுந்து வைப்போமே என அவள் பயந்ததை அவள் அல்லவா அறிவாள். வண்டியிலிருந்து இறங்கிய பிறகும் கை, கால்கள் நடுங்குவது