Tamil Madhura யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 15 (நிறைவுப் பகுதி)

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 15 (நிறைவுப் பகுதி)

செல்லம் – 15

 

பேய்கள் உலாப் போகும் நேரம் என்பதை அங்கு நிலவிய நிசப்தம் நன்றாகவே உரைத்தது. மெதுவாய் கட்டிலை விட்டு இறங்கினான் மனோராஜ். அருகிலிருந்த கைத்தாங்கி ஊன்றுகோல்களை எடுத்தவன் அவற்றின் உதவியோடு மெதுவாய் மாடிப்படியேற ஆரம்பித்தான். 

 

சாதாரணமாக தோட்டத்தில் நடந்து பயிற்சி எடுத்து இப்போது சிறிது தூரம் நடக்கப் பழகியிருந்தாலும் கூடப் படியேறுவது கடினமாகவேதான் இருந்தது. ஊன்றுகோலின் சத்தம் வேறு கேட்காதவாறு மெதுவாக ஏற வேண்டியிருந்தது. கீழே படுத்திருக்கும் வரதர் ஐயாவையோ மேலே தூங்கிக் கொண்டிருக்கும் பார்கவியையோ எழுப்பாதவாறு அந்த அரைகுறை இருட்டில் நடப்பது இமாலய சாதனையாகத் தோன்றியது அவனுக்கு. ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்து மாடியை அடைந்த போது உண்மையிலேயே ஏதோ பெரிதாகச் சாதித்த உணர்வு எழுந்ததில் ஐயமில்லை.

 

முதலில் இருந்த அறையில் தான் பார்கவி இருப்பாள் என்று எண்ணி ஓசை படாமல் திறந்து பார்க்க அங்கே அவள் இல்லை. பூசை அறையைத்தான் உபயோகிக்கிறாள் போலும் என்று எண்ணியவாறு மெதுவாக அடுத்த அறையை நோக்கிச் சென்றான். அடுத்திருந்த அவனது அறையைக் கடந்துதான் பூசை அறைக்குச் செல்ல வேண்டும். 

 

அவனது அறையை அடைந்ததும் தானாக அவன் நடை தடைப்பட்டது. அவனது அறையைப் பார்த்து எத்தனை மாதங்கள் ஆகி விட்டது. இதை எப்படி மாற்றி வைத்திருக்கிறாளோ என்ற ஆவல் மேலோங்க சற்றே திறந்திருந்த கதவை மேலும் திறந்து உள்ளே நுழைந்தவன் திடுக்கிட்டுப் போனான். 

 

பார்கவியை அங்கே சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை அவன். அவனது கட்டிலில் அவனுடைய போர்வைக்குள் சுருண்டிருந்தாள். ஓசை எழுப்பாமல் பூனை போல நடந்து சென்றவன் கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டான். ஊன்று கோலை மெதுவாக கட்டிலின் கீழே வைத்தான். 

 

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று இதயம் ஒருபுறம் ராகம் பாட விழிகளோ அவளை பார்வையால் தழுவியது. ஒரு புறம் சரிந்து சிறு குழந்தை போல சுருண்டிருந்தவளின் கைகளை கவனித்தவன் கண்களில் கோடி மின்னல்களின் பிரகாசம். மனோ அன்று போட்டிருந்த சேர்ட்டை அணைத்தவாறுதான் படுத்திருந்தாள். 

 

இதற்கு மேலும் காத்திருக்கும் பொறுமையற்றவனாய் மெதுவாக நகர்ந்து அவளருகே படுத்துக் கொண்டான். விடிவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தெரிந்த அவள் முகத்தையே எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருந்தானோ தெரியவில்லை. 

 

தூக்கத்திலேயே திரும்பிப் படுக்க முனைந்தவளின் உடல் இவன் மீது உரச திடுக்கிட்டு விழித்தாள். அருகில் ஆணுருவைக் காணவும் அலற வெளிக்கிட்டவளின் வாயைப் பொத்தியவன், 

 

“நான் தான்டி.. கத்தாதை..”

 

என்றான். உடனே எழுந்து கட்டிலில் அமர்ந்தவள்,

 

“நீ… நீங்க எப்படி இங்க வந்தனீங்கள்? இப்பத்தான் நடக்கவே தொடங்கியிருக்கிறியள்.. யார் உங்களை படியேறி வரச் சொன்னது?”

 

“வந்தபடியால்தானே சங்கதி தெரிஞ்சுது..”

 

“என்ன தெரிஞ்சுது..?”

 

“அம்மணி என்ர அறையில படுத்திருக்கிற விசயம்..”

 

“அது மற்ற அறையில ஃபான் வேலை செய்யேல்ல.. அதுதான்..”

 

“சரி நம்பிட்டேன்.. அப்ப என்ர சேர்ட் எப்பிடி இங்க வந்துச்சாம்?”

 

“அது நீங்கள் கழட்டிப் போட்டிருப்பியள்.. நான் கவனிக்காம படுத்திட்டன்..”

 

“நான் இந்த அறைக்கு வந்து ஆறேழு மாசம் ஆகுது.. இன்னும் எதுக்குப் பொய் சொல்லுறாய் பாரு..? என்னட்ட என்ன ஈகோ உனக்கு? நானே கல்லு மாதிரி முழுசா இருக்கேக்க என்னையே கட்டிப் பிடிச்சுக் கொண்டு நித்திரை கொள்ளலாம். எதுக்கு இந்த சேர்ட் எல்லாம்?”

 

மனோராஜ் சிரிப்புடன் கூறவும் பார்கவிக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. இப்பிடி இவனிடம் கையும் களவுமாக மாட்டி விடுவோம் என்று கனவிலும் அவள் எண்ணியிருக்கவில்லை. 

 

“வா இங்க..”

 

கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன் இரு கரங்களையும் விரித்து அவளை அழைத்தான். அதற்கு மேலும் தாங்கமாட்டாதவளாய் அப்படியே அவன் நெஞ்சில் அடைக்கலமானாள். அவளை அப்படியே இறுக அணைத்துக் கொண்டவன்,

 

“இன்னும் என்னில கோபமா பாரு..?”

 

“கோபம் என்றால் உங்கட வீட்டையே வந்து இருப்பனா இவ்வளவு காலமா?”

 

“அப்ப ஏன் என்னோட சரியாக் கதைக்கிறாயே இல்லை..”

 

“இது என்ன புதுக் கதை.. நான் கதைக்கிறனான் தானே..”

 

“ஓம்.. ஓம்.. கதைக்கிறனிதான். கடையைத் தவிர ஒண்டும் இல்லை. அதை விட்டால் எங்க நோகுது, எங்க வலிக்குதுதான்.. வேற என்ன கதைக்கிறனியாம்..?”

 

அவன் செல்லக் கோபத்தோடு கூற அவளும் மனம் திறந்தாள்.

 

“எனக்கு ஒரே குற்றவுணர்வா இருக்கு ராஜ்.. அண்டைக்கு நான் துலைஞ்சு போ என்று சொன்னதால தான் இந்த அக்சிடெண்ட் ஆகிட்டுதோ என்று.. அதுதான் உங்கட முகத்தைப் பார்த்துச் சந்தோசமாக எதையும் கதைக்கவே ஏலாம இருக்கு..”

 

“லூசாடி நீ.. உண்மையில நான் தான் குற்றவுணர்வில தவிச்சுப் போயிருக்கிறன். என்ர விளையாட்டுத் தனமான கதையால உன்ர வாழ்க்கையே அழிச்சுப் போட்டனே.. உனக்கு என்னில கோபம் இருக்கிறது நியாயம்தானே..”

 

“இல்லப்பா.. உண்மையில நீங்கள் என்ர வாழ்க்கைய அழிக்கல. சாரங்கன் எப்பிடிப்பட்டவன் என்று எனக்கு உணர்த்துறதுக்கு உதவிதான் செஞ்சிருக்கிறியள்.. நீங்கள் அண்டைக்கு மெசேஜ் போட்டு இருக்கேல்ல என்றாலும் வேறு வழியில அவன் தன்ர சந்தேகக் குணத்தைக் காட்டியேதான் இருப்பான். அதால என்ர கலியாணம் நின்று போனதுக்கு நீங்க பொறுப்பில்லை ராஜ்.. அப்பாவும் அம்மாவும் போய்ச் சேர்ந்ததும் வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.. ஏதோ வாழுறன் என்று கடமைக்கு வாழ்ந்து கொண்டிருக்கேக்க நீங்கள் திரும்பும் என்ர வாழ்க்கைக்க வந்தது நான் கனவிலும் எதிர்பார்க்காதது. 

 

ஆரம்பத்தில உங்களில சரியான கோபம் தான் வரும். ஆனா போகப் போக உங்களோட நெருங்கிப் பழக ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமாக என்ர கோபம் மாறிட்டுது. ஆனால் நீங்கள் கலியாணம் செய்யச் சொல்லிக் கேட்டது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஊர், சனம் என்ன சொல்லும் என்று சரியாவே குழம்பிட்டன். நான் விலகி விலகிப் போனன். ஆனா நீங்களோ என்னை விடாமல் கேட்கவும் தான் அண்டைக்கு அப்பிடித் திட்டிட்டன் ராஜ். என்னை மன்னிச்சிடுங்கோ..”

 

கூறி முடித்தவள் அழுகிறாள் என்பது அவன் நெஞ்சை நனைத்த கண்ணீரின் மூலம் உணர்ந்தவன், அவள் விழிகளை துடைத்து விட்டான். 

 

“உன் உணர்வுகள் எனக்கு நிச்சயமாகப் புரியுது பாரு.. நீ செய்ததில எந்தத் தப்பும் இல்லை. அக்சிடெண்ட் ஆனதுக்கும் உனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல. அது கூட நன்மைக்குத்தான். இல்லை என்றால் நீ இப்பிடி மனசு மாறி என்னட்ட வந்திருப்பியா? நானும் இனிமேல் கவனமாகக் கதைச்சுப் பழக வேணும். ஒவ்வொரு சொல்லும் முக்கியம். ஒவ்வொரு உறவுக்கும் ஏற்ற போல கதைக்கிறது எவ்வளவு முக்கியம் என்று எனக்கு நல்லதொரு பாடம் கிடைச்சிட்டுது..”

 

“அதெல்லாம் சரி. யார் உங்களை இப்ப மேல ஏறி வரச்சொன்னது? 

 

“நித்திரை வரேல்ல.. உன்னைப் பாக்க வேணும் போலவே இருந்தது. அதுதான் வந்தனான்..”

 

“கூப்பிட்டிருந்தா நான் வந்திருப்பன் தானே”

 

“ஆனா இப்பிடி என்ர கட்டிலல என்ர ஊத்தைச் சேர்க்கைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு படுத்திருக்கிற அழகை நான் பாத்திருக்க முடியாதே..” 

 

இவ்வளவு நேரமும் தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவள் வெட்கத்தோடு அவன நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். 

 

“எத்தினை தரம் தான் இதையே சொல்லிக் காட்டுவியள்?அதெல்லாம் ஊத்தை சேர்ட் இல்ல.  உங்கட வாசம்தான் அதில இருக்கு..”

 

கூறியவள் அவனை மோர்ந்து பார்த்து அவன் நெஞ்சில் முத்தம் வைத்தாள்.  

 

அதுவரை உணர்ச்சிகளை அடக்கி வைத்திருந்தவன், அவள் முகத்தை தன்னை நோக்கி உயர்த்தியவன் மெதுவாக அவள் உதடுகளை நோக்கிக் குனிந்தன். அவளோ அடுத்த நொடியே அவனிடமிருந்து விடுபட்டுத் தானும் அவனருகில சாய்ந்த வாய்க்கில் அமர்ந்து கொண்டாள். 

 

“ஏன் பாரு.. இப்ப கூட ஒரு கிஸ் தர மாட்டியா?”

 

“அதெல்லாம் நான் என்ர புருசனுக்கு மட்டும் தான் குடுப்பன்..”

 

கூறியவள் முகம் அடுத்த கணமே சுணங்கியது. அவளின் முகமாற்றத்தைக் கவனித்தவன்,

 

“என்னம்மா..?”

 

“உண்மையைச் சொல்லுங்கோ ராஜ்.. நீங்க ஒண்டும் என்னில பரிதாபப்பட்டு, உங்களாலதான் என்ர வாழ்க்கை அழிஞ்சிட்டுது என்று நினைச்சு என்னை கல்யாணம் கட்ட விரும்பேல்லத்தானே..”

 

“இப்ப நான் சொல்லுறதைக் கவனமாக கேளு பாரு.. அக்சிடெண்ட் பட்டு இருந்த நேரம் எனக்கு எல்லாமே ஒரேயிருட்டா இருந்தது.. எங்கயாவது ஒரு வெளிச்சம் தெரியாத என்று பார்த்திட்டு இருக்கிறன். யார் யாரிடயோ குரல் எல்லாம் கேட்கும். ஆனா ஒண்டுமே தெளிவாக விளங்காது. அந்த இருட்டில இருந்து ஒரு சின்னத் துணுக்கு வெளிச்சம் கிடைக்காதா என்று நான் ஏங்கிட்டிருந்தன். அப்பதான் ஒரு தடவை உன்ர குரல் கேட்டுது.. உன்ர குரல் மட்டும்தான் எனக்கு அடையாளம் தெரிஞ்சுது. 

 

‘பாரு.. பாரு..!’ எண்டு கத்துறன். ‘கடவுளே! ஒரு தடவை என்னை பிழைக்க வைச்சிடு.. என்ர பாருட்ட நான் அவளை எவ்வளவு விரும்பினேன் சொல்லிட்டு வந்திடுறன்’ என்று வேண்டினான். அப்ப தான் நீ ‘திரும்பி வந்திடு ராஜ்’ என்று அழுதிட்டு இருந்தனி.. எனக்கும் எங்கேயோ தூரமாக ஒரு வெளிச்சப் புள்ளி தெரியிற போல இருந்தது. அதுக்குப் பிறகுதான் கண்ணைத் திறக்க வேணும் என்ற உணர்வே வந்தது.

 

நான் உயிர் பிழைத்து வந்ததுக்கு ஒரேயொரு காரணம் உன்னோட சேர்ந்து வாழ வேணும் என்றது மட்டும் தான் பாரு.. அதுக்குக் காரணம் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. அவ்வளவுதான். மற்றபடி நான் கடந்த காலத்தைப் பற்றி நினைச்சு எங்கட ரெண்டு பேரிட வாழ்க்கையையும் வீணாக்க விரும்பேல்ல. நடந்தது நடந்து போச்சு. இனி நடக்க இருக்கிறதை மட்டும் யோசிப்பம். 

 

இப்ப சொல்லுறன் பாரு.. இனி இந்த ஜென்மத்துல என்ர வாய்ல இருந்து செல்லம், குட்டி, ஹனி என்றெல்லாம் எதுவுமே வராது. என்னை கல்யாணம் கட்டுறியா?

 

“நோ.. முடியாதுடா..”

 

“இப்ப என்னடி..?”

 

“இனிமேல் நீங்கள் என்னை மட்டும் தான் செல்லம், குட்டி, டார்லிங், பேபி எல்லாம் கூப்பிட வேணும். அதுக்கு நீங்கள் சம்மதிச்சால் நான் ரெடி..”

 

கூறி விட்டு கள்ளச் சிரிப்போடு அவனை பார்த்தாள். ஆனால் இப்போது மறுப்பது அவன் முறையாயிற்று.

 

“நோ.. முடியாதுடி..”

 

“ஏனாம்..?”

 

“எங்களுக்குப் பிறக்கப் போற பிள்ளையளை நான் பிறகு எப்பிடிக் கொஞ்சிறதாம்? என்ன சொல்லிக் கூப்பிடுறதாம்..?”

 

அவன் கவலையோடு கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியாகச் சிரித்தவள், 

 

“என்னையும் பிள்ளையளையும் கூப்பிட மட்டும் அனுமதி.. டீல் ஓகேவா?”

 

என்றாள். அவனோ சிறிதும் தாமதிக்காது அவள் வலக் கரத்தை தன் கையில் ஏந்தியவன், 

 

“ஹாய் செல்லம்..! என்னைக் கல்யாணம் கட்டி நான் கிழவனாகிக் கட்டையில போற வரை என்னோடயே இருந்து என்ர உயிரை எடுக்க ரெடியா..? வில் யூ மரி மீ ஹனி?” 

 

கேட்கவும் சிரித்துக் கொண்டே சம்மதமாய் அவன் மார்பில் சரண் புகுந்தாள். அந்த செல்லங்களின் கொஞ்சல்களுக்கு இடையூறு செய்யாமல் நாமும் விடைபெறுவோமாக. 

 

~ சுபம் ~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 2யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 2

செல்லம் – 02   காலையில் வழக்கம் போல அலாரம் அடிக்கவும் துடித்துப் பதைத்து எழுந்து வேலைக்குத் தயாரானாள் பார்கவி. இரவும் உணவு உண்ணாதது வயிறு தன் வேலையைக் காட்ட, அவசரமாக குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தாள்.    தோசைமா நான்

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 4யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 4

செல்லம் – 04   மனோராஜூம் பார்கவியும் கடையைப் புனரமைப்பதற்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள்.   “நீ சொல்லுறது போல கல்யாண புடவைகளை மூன்றாம் மாடிலயே வைப்பம். அங்க நிறைய இடமும் இருக்கு..”   “கல்யாண உடுப்பு எடுக்க வாறவை உடன

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 9யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 9

செல்லம் – 09   நாட்கள் அதுபாட்டில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. அன்று வரதர் ஐயா கடைக்கு வந்திருந்தார். அடுத்த நாள் கனடாக்குப் புறப்படுவதனால் எல்லோரிடமும் விடைபெற்றுச் செல்ல வந்தவரைப் பார்த்து எல்லோர் கண்களும் கலங்கின. போக முதல் பார்கவியோடும் தனியாகப்