செல்லம் – 14
அடுத்த நாள் தாமதமாகத்தான் விடிந்தது பார்கவிக்கு. ஏழு மணிக்கு எழுந்தவளுக்கு அப்போதுதான் தான் இருக்கும் இடம் நினைவுக்கு வர அவசரமாக எழுந்து காலைக்கடனை முடித்துத் தயாராகினாள்.
காலை எட்டு மணி எனவும் கவிதாவின் குரல் கேட்டது. வாயில் கதவைத் திறக்கவும் கையில் பொதியோடு வந்து நின்றாள் கவிதா.
“இந்தாங்கோக்கா.. தோசையும் சம்பலும் இருக்கு. மாமி தந்து விட்டவ. கூடவே தேத்தண்ணியும் இருக்கு. ஆதவன் மனோண்ணாவைப் போய் பார்த்திட்டு வந்தவர். மனோண்ணா கடை நல்லபடியாக நடக்குதா என்று கேட்டவராம்..”
கவிதா கூறவும் பார்கவியின் மனதில் ஒரு மகிழ்ச்சி அலை பரவியது. கடையைப் பற்றிச் சிந்தித்து அதைக் கேட்கவும் செய்கிறான் எனில் நல்ல முன்னேற்றம் தானே.. அவளை மேலும் சிந்திக்க விடாமல் கவிதாவின் குரல் தடுத்தது.
“நானும் இங்கேயே சாப்பிடுவம் என்று எனக்கும் சேர்த்துக் கொண்டு வந்தனான் அக்கா. வாங்கோ சாப்பிடுவம்.. வீட்ட இருந்தே பிளேட், கப் எல்லாம் கொண்டு வந்தனான்..”
என்றவாறு வரவேற்பறையிலிருத்த டீப்போவில் சாப்பிட அனைத்தையும் எடுத்து வைத்தாள் கவிதா.
“கெதியாச் சாப்பிடுங்கோக்கா. ஒன்பது மணிக்கு மாமா வேலைக்கு ஆட்களைக் கூட்டிட்டு வருவார்..”
“ரொம்ப ரொம்ப நன்றி கவி..”
“இனிமேல் இப்பிடி நன்றி சொன்னால் நான் இந்தப் பக்கம் வரவே மாட்டன் சரியோ..”
“சரி.. சரி.. நன்றி வாபஸ்..”
சிரித்துப் பேசியபடியே இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் ஆதவனின் அப்பா ஆட்களோடு வந்தார்.
“பாரும்மா.. என்ன பிளான் வைச்சிருக்கிறாய் என்று சொல்லு.. நான் இவைய வைச்சுச் செய்திடுறன்.. மத்தியானத்துக்கு என்ர மனுசி சமைச்சிடுவாள். நீயும் வீட்ட வந்து சாப்பிடு.. மனோக்கும் அவளே சூப் செய்திடுவாள். நீ கொண்டு போய் குடுக்கிறியா? இல்லை ஆதவனை கொண்டு போகச் சொல்லவா?”
“இண்டைக்கு ஆதவனை கொண்டு போகச் சொல்லுங்கோ அங்கிள். நான் மனோவுக்குக் கட்டில் ஒன்று ஓர்டர் பண்ணியிருக்கிறன். ஆஸ்பத்திரியில கண்டிருப்பியள் அங்கிள். ரிமோட்ல தானாக இருக்கிறது போல சரிக்கலாம்.. உயரம் கூட்டிக் குறைக்கலாம். சாய்ஞ்ச போல இருக்க வைக்கலாம். பார்மஸி ஒண்டில போய்க் கதைக்க வேணும். மத்தியானம்தான் வரச் சொல்லியிருக்கினம். அவையயே வீட்டில கொண்டு வந்து பூட்டி விடச் சொன்னனான்.”
“நல்லது பாரு.. எழும்பி இருக்கக் குறைஞ்சது ஆறு மாசமாவது செல்லும் என்று டொக்டர் சொல்லுறார். நடக்கிறதும் கேள்விக்குறிதான்.. இப்பிடி ஒரு கட்டில் இருந்தா நல்லம் தான்..”
“ஓம் அங்கிள். தெரிஞ்ச மேசன் இல்லாட்டில் கட்டிட வேலை செய்யிற யாரையும் கூட்டி வர்றீங்களே அங்கிள். கீழயும் ஒரு பாத்ரூம் கட்டுவம் என்று யோசிக்கிறன்..”
“சரிம்மா.. நான் விசாரிச்சிட்டு நாளைக்குக் காலமை கூட்டிட்டு வாறன். இப்ப தோட்டத்தில என்ன செய்ய வேணும்?”
“முன்னுக்கும் பின்னுக்கும் புல்லு புதராக் கிடக்குது. முதல்ல அது முழுக்கவும் வெட்டச் சொல்லுங்கோ. பிறகு முன்னுக்கு பூமரங்களும் பின்னுக்குத் தோட்டமும் போட கொத்தி விடச் சொல்லுங்கோ.. வீட்டு வேலைக்குக் கேட்டிருந்தனே அங்கிள்..”
“ஓமோம் சொல்லியிருக்கிறன்.. வந்திடுவா..”
அவர் கூறிக்கொண்டிருக்கவே ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் வந்தார்.
“இந்தா வந்திட்டா..”
அவரை அழைத்துச் சென்று பாத்திரங்களை கழுவி வீட்டைத் தூசி துடைத்து கூட்டிச் சுத்தம் செய்யச் சொல்லிப் பணித்து விட்டு கவிதாவையும் அழைத்துக் கொண்டு பார்மஸிக்குச் சென்றவள் கட்டில் பற்றிப் பேசி பணம் செலுத்தி விட்டு வீட்டுக்குத் திரும்பினாள்.
மதியம் கடந்திருக்கவே ஆதவன் வீட்டில் போய் உணவருந்தினாள். மறுபடியும் மனோவின் வீட்டுக்குச் சென்றவள் கவிதாவோடு சேர்ந்து ஆலோசித்தவாறு வீட்டில் செய்ய வேண்டிய திருத்தங்கள் பற்றி முடிவெடுத்தாள். அத்தோடு வீட்டுக்கு வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் ஒரு குண்டூசியிலிருந்து தவற விடாது பட்டியல் போட்டாள்.
கவிதா வளவளவென்று எதையாவது பேசிக் கொண்டிருக்கவே பார்கவிக்கும் களைப்புத் தெரியாது வேலை நன்றாகவே சென்றது. வீட்டு வேலைக்கு வந்த தேவியைத் தினமும் வருவதற்கு கேட்டு மாதச் சம்பளமும் பேசி முடித்தாள். அதேபோல தோட்ட வேலை செய்ய வந்தவர்களோடு பேசி நிரந்தரமாக ஒரு தோட்டக்காரரையும் ஒழுங்கு செய்தாள்.
மனோ வீட்டிலேயே தங்கிக் கொண்டவளுக்கு அங்கிருந்தபடியே வீட்டு வேலைகளை பார்வையிடுவது இலகுவாக இருந்தது. அடுத்த நாளே ஆதவன் அப்பா ஊரின் சிறந்த கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவரைக் கூட்டி வரவும் சமையலறைக்கு அடுத்திருந்த சாப்பாட்டறையையும் அதற்கு அடுத்து இருந்த ஸ்டோர் ரூமையும் நடுவே இருந்த சுவரை உடைத்து ஒன்றாக்கச் சொன்னாள்.
அத்தோடு ஒரு அட்டாச் பாத்ரூமையும் நல்ல விசாலமாகக் கட்டச் சொன்னாள். பின்புறம் தோட்டம் என்பதால் நன்கு இடம் இருந்தது. வெளிப்புறமாகக் கட்டி அறையோடு கதவு வைத்து இணைத்தார்கள்.
இரண்டு அறைகளையும் ஒன்றாக்கி இப்போது அறை மிகப் பெரிதாகியிருந்தது. தோட்டப் பக்கமாக முன்பேயிருந்த யன்னலை மேலும் பெரிதாக்கி கம்பிகளை நீக்கி விட்டு கண்ணாடி யன்னலாய் போடச் சொன்னாள். மரத்தாலான கதவும் போட பாதுகாப்புக்கும் குந்தகம் இல்லாமல் இருந்தது.
சமையலறைச் சுவரில் சிறிய சிறிய அலுமாரிகள் அடித்து விட்டு தேவையற்ற அலுமாரிகளை அப்புறப்படுத்தினாள். இப்போது நிறைய இடம் கிடைத்தது. சமையலறையில் சாப்பாட்டு மேசை கதிரைகளையும் போடச் சொன்னாள்.
முழு வீட்டுக்கும் மறுபடியும் பெயின்ட் அடிக்கச் சொன்னவள் கவிதாவின் உதவியோடு உரிய வண்ணங்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்தாள். சமையலறைக்குப் பக்கத்து அறையில் தான் மனோவைத் தங்க வைப்பதாக முடிவெடுத்தாள் பார்கவி. அதற்குத் தகுந்த போலவே அறையைப் பார்த்து பார்த்து தயார்படுத்தினாள்.
வானத்தையொத்த மெல்லிய நீல நிறம் சுவருக்குத் தெரிவு செய்தாள். கருநீலத்தில் ஆங்காங்கே நட்சத்திரங்களை புள்ளிகளாக தெளித்து விட்டது போல ஒரு திரைச்சீலை யன்னல்களுக்கு. முகட்டில் கலெக்சி பெயின்டிங். மனோவின் அறை தயாரானதும் வந்து பார்த்த வரதர் ஐயாவிலிருந்து ஆதவன் குடும்பத்தினர் வரை எல்லோரும் பார்கவியைப் பாராட்டித் தள்ளி விட்டார்கள்.
“ஒரு இடத்தில இருக்காம ஓடித் திரிஞ்ச ஆள் ராஜ். இப்ப அறையே கதியாக் கிடக்கேக்க அதே டிப்பிரசன் ஆக்கி விட்டிடும். அதுதான் கொஞ்சம் பார்க்க மனசுக்கு இதமாக இருக்கிறது போல செய்யச் சொன்னான்..”
“நீ இவ்வளவு யோசிச்சுச் செய்யிறது சந்தோசமாக இருக்கும்மா. எப்பிடியோ மனோ எழுந்து நடமாட முடிஞ்சா அதுவே போதும் ஆண்டவா..”
தளதளத்த குரலில் கூறினார் வரதர் ஐயா.
“என்னால தான் ஐயா அவனுக்கு இந்த நிலைமை. அண்டைக்கு நான் கொஞ்சம் கடுமையாகப் பேசிப் போட்டன்..”
“எல்லாம் விதி கவிம்மா.. நீ சும்மா தேவையில்லாம எல்லாத்தையும் உன்ர தலையில தூக்கிப் போடாதை..”
“ஹூம்.. எனக்கு என்ன செய்யிற என்றே தெரியேல்ல ஐயா. ராஜ் கேக்கேக்க அப்பவே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருந்தால் இந்தப் பிரச்சினை ஒண்டும் வந்திராது இப்ப.. நான்தான் சனம் என்ன கதைக்கும், சாரங்கன் சொன்னதே உண்மையாகப் போய்டும் என்று யோசிச்சுத் தேவையில்லாம குழம்பிட்டன்..”
“நீயே யோசிச்சு இதைப் புரிஞ்சு கொண்டதில எனக்கு சந்தோசம் தான் கவிம்மா. நீ அநாதையாக நிக்கேக்க ஒரு சனமும் உனக்கு வந்து உதவி செய்யேல்ல. நீயாகத்தான் இண்டைக்கு இந்த நிலைமையில உன்னை வளர்த்து வைச்சிருக்கிறாய்.. சனத்துக்கு நாக்கிருக்குது என்று எதை வேணும் என்றாலும் கதைக்குங்கள். அதுக்கெல்லாம் காது குடுத்தால் அழியிறது எங்கட வாழ்க்கை மட்டும் தான். உன்ர மனட்சாட்சிக்கு நீ நியாயமாக நட. அது போதும்..”
“ஹூம்.. உண்மை தான் ஐயா. ராஜ்க்கு இப்பிடி ஆகி முடியவும் தான் எனக்குப் புத்தி வந்திருக்கு.. ராஜ் வீட்டுக்கு வந்ததும் நீங்களும் இங்க வந்து கொஞ்ச நாளைக்குத் தங்குறீங்களா ஐயா.. கல்யாணம் கட்டாமல் நான் இங்க தனியாகத் தங்கினால் பிறகு அது வேற எங்கட சனத்துக்கு வாய்க்கு நல்லா மெல்லக் கிடைச்ச அவலாப் போய்டும்..”
“என்ன கவிம்மா.. இப்பத்தான் சனத்தைப் பற்றி அக்கறைப் படாத போல கதைச்சாய்.. அதுக்குள்ள என்ன நடந்தது..? பிறகு இப்பிடிச் சொல்லுறாய்..?”
“அப்பிடி இல்லை ஐயா.. எப்பிடியோ நாங்கள் இந்தச் சமூகத்தோட தானே ஒத்து வாழ வேண்டிக் கிடக்கு. நாளைக்கே எங்கட பிள்ளையளிட்ட உன்ர அம்மா கலியாணம் கட்டாமத்தானே குடித்தனம் நடத்தினவ என்று பிள்ளையளுக்கு அறியாத வயதில கண்டதையும் சொல்லி விட்டால் என்ன செய்யிறது? அதுதான்..”
“ஹூம்.. இருந்தாலும் நீ நிறைய யோசிக்கிறாய் கவிம்மா. நான் வந்து தங்கிறன்.. எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையம்மா..”
“ராஜ் சாதாரணமாக எழும்பி இருக்கத் தொடங்கினதும் ரெஜிஸ்டாரை கூப்பிட்டு ரெஜிஸ்டர் மரேஜ் பண்ணிடலாம் ஐயா. ஒற்றைக் கையால தாலி கட்டுறது கஷ்டம். ராஜ்க்கு அது மனசுக்குக் கஷ்டமாக இருக்கும்..”
“சரிம்மா. எப்ப என்று நீ சொல்லு. நான் முழு ஆயத்தமும் செய்திடுறன்..”
“உங்களை நான் சந்திச்சது நான் செய்த புண்ணியம் ஐயா. எப்பவோ செத்திருக்க வேண்டிய ஆள் நான். உங்களுக்கு எப்பிடித்தான் நன்றிக்கடன் செலுத்தப் போறனோ தெரியேல்ல..”
“பிள்ளைக்குச் செய்யிறது அப்பனிட கடமை. அதுக்கு எல்லாம் யாரும் நன்றிக் கடன் செலுத்திறேல்ல.. சரி நான் கடைக்குப் போய்ட்டு வாறன்..”
நாட்கள் உருண்டோட மனோராஜும் ஒருவாறு வீடு வந்து சேர்ந்தான். வீட்டுக்கு வந்தும் சில வாரங்கள் படுத்த படுக்கையாகவே இருக்க வேண்டிய நிலை. அவனை பராமரிக்க ஒரு ஆள் வைத்துக் கவனித்துக் கொண்டாள் பார்கவி. தானே சமைத்து ஊட்டி விடுவாள்.
இருவருக்கிடையேயும் சிறிய விலகல் ஒன்று இழையோடிக் கொண்டிருந்தது. யார் அதை உடைத்து வெளிவருவது என்று தெரியாமல் சாதாரண பேச்சோடு காலத்தை ஓட்டினார்கள்.
வரதர் ஐயாவும் இவர்களோடேயே தங்கிக் கொண்டார். பார்கவி காலையில் எழுந்து காலை உணவு தயாரித்து விடுவாள். மனோராஜும் இப்போது கட்டிலை சரித்து அவனை அமர வைத்து அவனுக்கு முன்னால் சிறு ஸ்டூலை வைத்து உணவை வைத்தால் ஒரு கையால் அவனே எடுத்து உண்ண ஆரம்பித்து இருந்தான். பார்கவி அவன் இலகுவாக உண்ணக் கூடியது போல பிசைந்து கரண்டி வைத்துக் கொடுத்து விடுவாள். மூவரும் கடையைப் பற்றியோ, பொது விடயங்களையோ பேசிக் கொண்டு உண்பார்கள்.
மதியம் சமைத்து வாழை இலையில் பொதி செய்து வைக்கும் உணவை, ஆதவனின் தந்தை அவனுக்கு மதிய உணவு கொண்டு சென்று கொடுக்கும் போது பார்கவியிடமும் வந்து வாங்கிக் கொண்டு சென்று வரதர் ஐயாவுக்குக் கொடுப்பார். மனோவைக் கவனித்தபடியே பார்கவியும் அவனோடு சேர்ந்து சாப்பிடுவாள்.
இடைப்பட்ட நேரங்களில் இருவருமாக மனோவின் அறையிலேயே தொலைக்காட்சி பார்ப்பார்கள். இல்லையோ பார்கவி ஒன்லைன் பிஸ்னஸ் பற்றி மனோவோடு கலந்தாலோசிப்பாள்.
மேக்கப்புக்கு செல்லாத நாட்களில் கவிதா இங்கே வந்து விடுவாள். இயல்பிலேயே கலகலப்பான குணமுடையவள், ஏதாவது வாய் ஓயாது பேசிக் கொண்டிருப்பாள். மனோவுக்கும், அவள் வந்து பேசிக் கொண்டிருப்பது ஆறுதலாக இருக்கும்.
“கவிதா.. நேற்று வீட்டுப் பக்கம் ஒரே சத்தமாகக் கிடந்துச்சு.. என்ன விசயம்..?”
“அது பெரிய கதை மனோண்ணா.. அதைச் சொல்லத்தானே வந்தனான்.. கொஞ்ச நாளைக்கு முதல் ஒரு பொம்பிளைப் பிள்ளை வந்துச்சு என்னட்ட.
அக்கா.. நச்சுரலாத் தெரியிற போல மேக்கப் பண்ணி விடுங்கோ என்று. நானும் பண்ணி விட்டன்.. அது என்னடா என்றால் அதை போட்டோ எடுத்து மாப்பிள்ளை பார்க்க அனுப்பிருக்குது.. பிறகும் என்னட்ட அடிக்கடி வந்து மேக்கப் பண்ணிட்டுப் போகும். சிலவேளை ஒவ்வொரு நாளும் கூட வரும். நானும் எனக்கு வருமானம் தானே என்றிட்டு செஞ்சு விடுவன்..
ரெண்டு நாளைக்கு முதல் அந்தப் பிள்ளைக்குக் கலியாணம். பாரு அக்காவை கூட உதவிக்குக் கூட்டிக் கொண்டு போனனே.. நேற்று அந்த மாப்பிள்ளை என்னட்ட வந்து கத்துறான். நீ டெய்லி மேக்கப் போட்டு என்னை ஏமாத்திப் போட்டாய்.. மனுசி நித்திரையால எழும்பேக்க பார்த்தால் வேற ஆள் போல கிடக்காம் என்று ஒரே கத்தல்.. அந்தப் பிள்ளை பின்னால அழுது கொண்டு நிக்குது.
எனக்கென்றால் என்ன செய்யிற என்று தெரியாமப் போச்சு. அவன் வேற பிரான்ஸ் மாப்பிள்ளை போல. அப்ப மாமாதான் டக்கென்று ஒரு ஐடியா சொன்னார்.
தம்பி.. உன்ர மனுசி பிரான்ஸ் வர முதல் இங்க மேக்கப் வகுப்புக்கு அனுப்பு. எப்பிடி நச்சுரலா டெய்லி மேக்கப் போடுற என்று பழகிக் கொண்டு வரட்டும். பிரான்ஸ்ல இல்லாத மேக்கப் ஐட்டமே. நல்லதா எல்லாத்திலயும் வாங்கிக் குடு என்று.. அவனும் அது நல்ல ஐடியா என்று சொல்லி ஒரு மாதிரிப் போய்ட்டாங்கள்..”
இப்படி தினம் தினம் ஏதாவது சொல்ல கவிதாவிடம் ஆயிரம் கதை இருக்கும். மாலையில் கடையைப் பூட்டி விட்டு ஆதவனும் வரதர் ஐயாவும் வந்து விட்டால் அன்றைய நாள் பற்றி முழுவதும் மனோவிடம் சொல்லிக் கொண்டிருக்க, பார்கவி இரவுணவு தயாரித்து விடுவாள். சில நேரங்களில் ஆதியும் கவியும் கூட இங்கேயே உண்டு விட்டுச் செல்வார்கள். இவ்வாறு அனைவருமே மனோவுக்கு தனிமை நேராதவாறும் அவன் எதையும் எண்ணிக் கலங்கிடாதவாறும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டார்கள்.
மனது நல்ல நிலையில் இருக்க அவனின் உடலிலும் ஆரோக்கியம் திரும்ப ஆரம்பித்தது. எழுந்து அமர ஆரம்பித்தவன், காலூன்றி சுவரைப் பிடித்துக் கொண்டு நிற்க ஆரம்பித்தான். வீல் சேரில் இருக்க வைத்து மாலை நேரங்களில் தோட்டத்தில் உலாவுவார்கள். பூக்கத் தொடங்கியிருந்த காய்கறித் தோட்டம் மனோவை வியக்க வைத்தது.
“எப்பிடிப் பாரு.. உனக்கு இதெல்லாம் செய்ய வேணும் என்று ஐடியா வந்தது..? காடாகக் கிடந்த வளவு. இப்பிடி தோட்டமாகப் பார்க்கேக்க எவ்வளவு சந்தோசமாக இருக்குத் தெரியுமா..? அம்மா, அப்பா இருந்திருந்தால் இப்ப சரியான சந்தோசப்பட்டிருப்பினம்..”
“உங்கட அனுமதியில்லாம வீடெல்லாம் மாத்திட்டன் என்று உங்களுக்கு கோபம் வருதோ தெரியேல்ல என்று நினைச்சன்..”
“லூசாடி நீ.. இது உன்ர வீடும்தானே.. நீ ஆசைப்பட்ட போல, அதுவும் என்ர வசதிக்காகத்தானே மாற்றி இருக்கிறாய். அதுக்கேன் நான் கோபப்படப் போறன்..? அதுசரி செலவுக்கு என்ன செய்தனீ..?”
“அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே என்ர வீடென்று. அதால என்ர வீட்டுக்கு நான் செலவழிக்கிறதைப் பற்றி நீங்கள் ஒண்டும் யோசிக்கத் தேவையில்லை..”
உண்மையில் இத்தனை வருடங்களாக அவள் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் சந்தோசமாகவே வழித்துத் துடைத்திருந்தாள். மனோவுக்கோ அவள் செய்திருந்த எல்லாவற்றையும் பார்க்கவே அவள் மனமும் புரிந்து விட்டது. தனது வீட்டிலேயே தங்கி விட்டவள், தன்னை ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று புரிந்தாலும், வாய் வார்த்தையாகக் கேட்க இன்னமும் தயக்கம் இருந்து கொண்டே தானிருந்தது.
தயக்கம் உடைப்பானா? காரிகையின் சம்மதம் பெறுவானா?