Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 25

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 25

அத்தியாயம் – 25 

 

அந்த விடுதியே புதிதாகத் தெரிந்தது செம்பருத்திக்கு. ஒரு வேளை புதிய நபர்களுடன் இருப்பதாலோ, இல்லை அவர்களுக்காக புதிய விதமாக அலங்கரிக்கப் பட்டிருப்பதாலோ என்பது தெரியவில்லை. 

 

“வாங்கம்மா என்று எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்கள்” அவர்களைப் பார்த்தால் அங்கு வேலை செய்யும் வழக்கமான ஆட்களைப் போலத் தெரியவில்லை. 

 

“இவங்கல்லாம் எங்க காலத்து ஆட்கள்மா. எங்க நம்பிக்கைக்குப் பாத்திரமானவங்க. எங்க குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி” 

 

செம்பருத்தி மனதில் நினைத்ததைப் படித்தது போல மங்கை பதில் சொன்னார். 

 

“நம்ம சேச்சி மாதிரியா?” என்றாள் அவளும். 

 

“சேச்சி, லவங்கம், பாலன், கோபன், ஓவியாவும் அவ அம்மாவும் இப்படி எங்க குடும்பம் ரொம்பப் பெருசு”

 

நான் இதில் எங்கே? என்று மனது சற்று சுருங்கியது செம்பருத்திக்கு. கடைசியாக வந்தவள்தானே நான். அதுனாலதான் என்னை மறந்துட்டாங்க என்று சொல்லிக் கொண்டாள். அந்தக் கோட்டிக்காரி. 

 

காபியை எடுத்துக் கொண்டு ஒருவன் வரவும் “அய்யா எந்திருச்சுட்டாரா?” என்றபடி விரைந்தார் மங்கை. 

 

“குளிர் அதிகமா இருக்குறதால அவினாஷ் அய்யா கொஞ்ச லேட்டா எழுப்பி விட சொன்னாரும்மா. அதனாலதான் மெதுவா காப்பி கொண்டு வந்தோம்”

 

“சரி, நானே காப்பியைக் கலந்து தந்துக்குறேன். நீங்க எங்க மூணு பேருக்கும் டிபன் எடுத்துட்டு வந்துடுங்க”

 

“வழக்கம் போல இட்டிலி, இடியாப்பம், பிட்டு இப்படி அவிச்ச பொருட்கள்தானேம்மா”

 

“செம்பருத்திக்காக ஒரு சுவீட், அப்பறம் பூரி, தோசை, சப்பாத்தி எது பிடிக்கும் சொல்லும்மா”

 

“இல்லைம்மா எனக்கும் இட்டிலியே போதும். நானும் எண்ணெய் கொஞ்ச நாளா குறைச்சிருக்கேன்”

 

“லீலாம்மா சொன்னாங்க. காலைல நீர் மோர் தான் குடிப்பியாமே” இதெல்லாம் இவ்வளவு பெரியவங்ககிட்ட இந்த சேச்சி சொல்லணுமா? என்று வெட்கமாக இருந்தது செம்பருத்திக்கு. 

 

அவர்களது அறை அப்படி ஒரு அற்புதமாக இருந்தது. அவ்வளவு அழகான வரவேற்பறை. இத்தாலியன் சோபாக்கள். வேலைப்பாடுகள். பாகமங்கலம் குடும்பத்தைச் சேர்ந்த ராஜாக்களின் பெரிய பெரிய படங்கள். சிலவற்றில் ராணிகளுடனும் சிலவற்றில் தனியாகவும். 

 

“வாம்மா… செம்பருத்தி, படிப்பெல்லாம் எப்படி இருக்கு” என்று அழைத்தார்  நாகேந்திரன். குளிருக்கு மங்கி குல்லாய் போட்டிருந்தாலும் ஆஜானுபாகுவான உடல்வாகு. 

 

“நல்லாருக்கு சார்” 

 

“குட்… மேல்படிப்பு படிக்கக் கூட வாய்ப்பிருக்குன்னு சொன்னாங்க. உன் பேப்பர் ப்ரெசென்ட்டேஷன் பார்த்து எதோ ப்ராஜெக்ட் வந்துருக்காமே… வெளிநாட்டில் போயெல்லாம் ஆராய்ச்சி செய்ய வாய்ப்பிருக்குன்னு உங்க பிரின்சிபால் சொன்னாரு. அதில் உனக்கு சம்மதம்தானேம்மா”

 

“வெளிநாட்டு வாய்ப்பா? எனக்குத் தெரியாதே? வேற யாருக்காவது இருக்கும்” என்றாள் அசட்டையாக. 

 

கணவனைப் பார்த்து முறைத்தார் மங்கை. 

 

“என்ன முறைக்கிற? ஓ செம்பருத்திக்கு இன்னும் தெரியாதா? நீ நான் சொன்னதை மறந்துடும்மா… உங்க பிரின்சிபால் சொல்லுறப்ப புதுசா கேக்குற மாதிரி கேட்டுக்கோ” என்றார். 

 

 “அவருக்கு எங்க என்ன பேசணும், எப்படி நடந்துக்கணும்னு சுத்தமா தெரியாதும்மா”

 

சந்தோஷத்தில் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் செம்பருத்தி. இது நிஜமா? வாழ்க்கையில் ஒரு சந்தோசம், வெற்றி கூட கிட்டியதில்லை. இந்த செய்தி எவ்வளவு பெரிய அங்கீகாரம்… 

 

“நிஜம்மாவா சொல்றிங்க சார். ஒரு வேளை உண்மையா இருந்தால் அதெல்லாம்  எல்லாம் எங்க அபிராம் சாருக்குத்தான் சேரும். அவர்தான் என்னை கைட் பண்ணார்”

 

இருவரும் வாயடைத்து போய் அவளைப் பார்த்தார்கள். எதிர்பக்கம் ஒரு பதிலும் வராததைக் கண்டு 

“ஏதாவது தப்பா சொல்லிட்டேனா சார்” என்றாள் தணிந்த குரலில். 

 

“இல்லம்மா… அபிராம் பத்தி நீ சொன்ன விஷயத்தைக் கேட்டே எங்க மனசும் வயிறும் நிறைச்சிருச்சு. நீ சொன்னது உண்மைதான் மங்கை. அபிராமுக்கு வாழ்க்கைல ஒரு பிடிப்பு கிடைச்சுருச்சு” என்றார் உணர்ச்சி பொங்க. 

 

அதற்குள் சாப்பாடு வந்துவிட, “எனக்கு முதலில் காப்பி வேணும்” என்றார் சிறு பிள்ளையைப் போல 

 

“அதை, காலை பலகாரம் முடிஞ்சதும் குடிக்கக் கூடாதா?”

 

“காலைல முதல் வாய் காப்பிதான். அதுக்கப்பறம் சாப்பிடுறேன்” என்று அடம்பிடித்து காப்பியை வாங்கிக் கொண்டார். 

 

அப்படியே அந்த வாசத்தைப் பிடித்தவர் “இந்த வாசத்துக்கு நான் அடிமை. செம்பருத்தி இந்தக் காப்பிக்கு இன்னொரு பேரு காலை சாராயம்னு மங்கை வச்சிருக்காம்மா… “ என்றார் சிரிப்புடன். 

 

“உண்மைதான் சார். காப்பி குடிச்சு பழகினவங்களுக்கு அப்படித்தான். அபி சார் கூட உங்களை மாதிரிதான் சார். காலைல எந்திரிச்சதும் காப்பி வேணும்னு கேட்பார். இப்ப அவரைப் பார்த்தாலே பாவமா இருக்கு சார்”

 

அந்த இடமே அமைதியாக, மங்கை அமைதியைக் கலைத்தார். 

 

“சுகுமாரன் சொன்னது படி பார்த்தால் காவ்யா மேல அபிக்கு ஒரு அட்டாச்மெண்ட் இருந்திருக்கணுமே. எனக்கு அப்படித் தோணலை.காவ்யா அபியை கவனிச்சுக்கிட்ட மாதிரி தெரியல. அவனோட அறை இருக்குற திசைக்குக் கூட வரல. அவனும் அவ கூட ஒரு வார்த்தை கூட பேசின மாதிரி தெரியல ” 

 

செம்பருத்திக்கு இட்டிலிகளைப் பரிமாறியவாறு கணவனிடம் சொன்னார். 

 

“இப்ப ராதிகா வந்ததும் அவன் முகத்தில் தெளிவு வந்திருக்குன்னு செய்தி வந்தது. நீ ஏன் இப்படி மனசைக் குழப்பிக்கிற?”

“இல்லைங்க… அபிராம் அம்மா அவனுக்கும் காவ்யாவுக்கும் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டாங்க. அபிக்கும் இதில் இஷ்டம்தான்னு சுகுமாரன் பேசினதை நம்பி நான் வேற காவ்யாகிட்ட அபியைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டதை என்ன சொல்ல… “

 

தான் ஒருத்தி இருப்பதை மறந்துவிட்டு இருவரும் குடும்ப விஷயங்களைப் பேச ஆரம்பித்ததைக் கண்டு ‘க்கும்’ என்றாள் தொண்டையை சரி செய்வதைப் போல. 

 

“இந்தா தண்ணி எடுத்துக்கோ செம்பருத்தி” என்று அவளை கவனித்துக் கொண்டே கணவருக்கும் ஒரு தட்டில் உணவினை பரிமாறி நீட்டினார் மங்கை. 

 

“காப்பி டேஸ்ட் மாறிடுமே… “ என்றார் நாகேந்திரன் மறுபடியும்.

 

“சாப்பிடுங்க. உங்களை சாப்பிட வச்சுட்டு நான் அபிராமைப் பாக்கக் கிளம்பணும்”

 

அப்போதுதான் தன்னை அவினாஷ் அனுப்பிய காரணம் நினைவுக்கு வர, “இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க மேடம்” என்றாள். 

 

கண்களை சுருக்கி செம்பருத்தியைப் பார்த்த மங்கை “அவினாஷ் சொல்லி அனுப்பினானா?” என்றார். 

 

அவள் பதில் பேசத் தெரியாது விழிக்க, 

 

“அவன் ஏதாவது காரணமாத்தான் சொல்லிருப்பான். நீ இன்னைக்கு இங்க தங்கி ரெஸ்ட் எடுத்துக்கோயேன்” மங்கி கேப்பை ஒரு வழியாகக் கழற்றிவிட்டு சாப்பிட ஆரம்பித்தார் நாகேந்திரன். 

 

அவரது முகத்தை முதல் முறையாகப் பார்த்த செம்பருத்தி அதிர்ந்து போனாள். இது இது உண்மையா… 

 

“சாப்பிடு செம்பருத்தி.. இன்னும் ஒரு இட்டிலி வைக்கவா?” 

 

“போ… போ..து..ம்ம்… நான் கிளம்பணும்”

 

“அதுக்குள்ளயா… “

 

“அவினாஷ் உங்களை பத்திரமா விட்டுட்டு சீக்கிரம் திரும்ப வரச் சொன்னார்” என்றாள் திக்கலுடன். 

 

“நான் கிளம்பவா மேம்… “

 

அவளை தீர்க்கமாகப் பார்த்தவர்கள் “கிளம்பும்மா… போனதும் இந்த டிபனை நீயே நேரில் பார்த்து அவினாஷ் கைல தந்துடு. எங்க அவினாஷை நீதான் அங்க பத்திரமா பாத்துக்கணும். உங்க அபி சாரால அவி மனசு உடைஞ்சுடாம பாத்துக்கோ” சொல்லி அனுப்பினார் மங்கை. 

 

காரில் தான் லங்கைக்கு செல்கிறாள். இருந்தும் கால்களை நகர்த்தக் கூட முடியாது பெரிய பாராங்கல்லைக் கட்டியதைப் போன்றதொரு பாரம். 

 

“அவி… இது உண்மையா… அபிராம் சாரை நான் எப்படி நேருக்கு நேர் பார்ப்பேன். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மாட்டி விட்டுட்டிங்களே” ஆயிரம் கேள்விகளையும் ஆதங்கத்தையும் சுமந்து கொண்டு பயணமானது செம்பருத்தியின் மனம். 

 

அங்கு, லங்கையில், பக்கத்து அறையில் காவ்யா இருப்பதைக் கண்டு கொண்டான் அபிராம். அவனது ப்ரெஷர் எகிறிவிடும் போலிருந்தது. சே துன்பத்துக்கு மேலே துன்பம். 

 

செம்பருத்தி சேர்ந்த சில வாரங்களில் நடந்த நிகழ்ச்சி அது. 

 

செம்பருத்திக்கு செல்போன் உபயோகம் என்பது புதிது போல. எங்காவது வைத்துவிடுவாள். அப்படித்தான் அன்று வேலை நேரம் முடிந்ததும் அபிராமின் அறையில் வைத்துவிட்டு சென்றுவிட்டாள். இரவு நேரத்தில் அலைபேசியின் அழைப்பைக் கேட்டு எரிச்சலோடு நிறுத்தப் போக அது எக்குத்தப்பாக ஆன் ஆனது. 

 

“என்ன செம்பருத்தி போன் பண்ணா எடுக்க மாட்டியோ.. உனக்கு வேலை, தங்க இடம், சாப்பாடுன்னு பிச்சை போட்டது நான் தெரிஞ்சுக்கோ. உனக்கு இருக்குற ஒரே தகுதி அந்த யானை உடம்பும், அசிங்கமான மூஞ்சும்தான். அதுக்கு இவ்வளவு பெரிய வேலை தந்தத்துக்கு நீ காலம் முழுக்க நாயாட்டம் என் காலை சுத்தி வரணும். அந்த அபிராம் என்ன செய்றான், யாரை மீட் பண்ணுறான் இந்தத் தகவல் எல்லாம் தினமும் எனக்கு மெயிலில் அனுப்பல, அந்த வீட்டை விட்டு போன வேகத்தில் வெளிய வருவ. 

அபிராம் நீ போனதில் இருந்து உன்னை விரட்டி விட்டுட்டு இருக்கான்னு எனக்குத் தெரியும். ஏன்னா நீ நிகிதா மாதிரி அவனைக் கைக்குள்ள போடுற வித்தை தெரிஞ்சவ இல்லை. அவனோட டேஸ்ட்டுக்கு முன்னாடி நீயெல்லாம் வேஸ்ட் பிகர். இந்த மூணுவேளை சாப்பாடு வேணும்னா நீ இதை செய்” என்று சொல்லிவிட்டு பதில் எதிர்பார்க்காமல் அலைப்பேசி அணைக்கப் பட்டது. 

 

அன்று முடிவு செய்தான் செம்பருத்தி உன்னை இந்த வீட்டை விட்டு அனுப்ப மாட்டேன். அனுப்பினால் உன்னால் சொந்தக் காலில் நிற்கக் கூடிய அளவுக்கு பயிற்சி கொடுத்தே அனுப்புவேன். 

 

அதன் பின்னரே நடனத்தில் ஆர்வம் கொண்ட ஓவியாவும் அவன் கண்ணில் பட்டாள். அவர்கள் இருவரின் வாழ்க்கைப் பயணத்திற்கும் அடித்தளம் போட்டான். ஓவியாவை தேர்ச்சி பெறும் அளவிற்கு கல்வி கற்க வழி செய்தான். செம்பருத்திக்கு அக்கவுன்டெண்சி, கம்யூனிகேஷன், மற்றவர்களுடன் பழகும் தன்மை இவை எல்லாம் கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தான். குழந்தைகள்  கண்ணில் படுமாறு பல விளையாட்டு பொருட்கள். அதில் ஓவியா சிலவற்றைத் தேர்ந்தெடுத்தாள். செம்பருத்தி சிலவற்றைத் தேர்ந்தெடுத்தாள். அவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அடுத்தபடி செல்வதைக் கண்டு ரசிக்கும் மன நிலையில் அவன். இதற்கு கைமேல் பலனாக அவனது போதைப் பழக்கமும், தாழ்வுணர்ச்சியும் கொஞ்சம் குறைந்திருந்தது. 

 

“ஜங்லி ராணி, எங்க போயிட்ட?” 

 

“இங்கதான இருக்கேன்” 

 

“ஹே பியூட்டி, என் ஹைபி  எங்க?”

 

“ஹைபியா”

 

“செம்பருத்திதான். செம்பருத்தி செம்பருத்தின்னு நீளமா கூப்பிட முடியல தொண்டை வலிக்குது ஹைபிஸ்கஸ சுருக்கி  ஹைபி. நீ பேபி அவ ஹைபி எப்படி”

 

டாக்குமெண்ட்ஸை மருத்துவரின் பார்வைக்கு அடுக்கியவாறு இருந்த அவினாஷ் ஹைபியா என்று எரிச்சலானான்.

 

“இவ்வளவு நீளமா பேச வருது செம்பருத்தின்னு கூப்பிட்டா தொண்டை வலிக்குமாம். நீ திருந்தவே மாட்டியா அபி”

 

“அழகு எங்கிருந்தாலும் ரசிக்கும் ரசிகன் நான். எதுக்குத் திருந்தணும்?”

 

“ஐயோ… நிறுத்து… செம்பருத்திக்குத் தெரிஞ்சா உன் மேல வச்சிருக்கிற மரியாதை என்னாகும்? உன்  காதல் மன்னன் வேலை எல்லாம் மூட்டை கட்டி வை”

 

தள்ளி நிற்கும் அவினாஷுக்கும், பக்கத்து அறையில் இருக்கும் காவ்யாவுக்கும் காதில் விழுமாறு சொன்னான். 

 

“அழகு பொண்ணுங்களைத்  தேடி நான் போறதில்லை  ஜங்லி. என் பார்வை பட்டாலே பொண்ணுங்க அழகாயிடுறாங்க. அதுனால நான் காதல் மன்னன் தானே. வேர் இஸ் ஹைபி” 

 

கடுப்போடு அங்கிருந்து அப்பால் அவினாஷ் நகர, ராதிகாவும்  முறைத்துக் கொண்டே நங்கென்று கையில் இருந்த பாத்திரத்தை அப்படியே வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். 

 

பக்கத்தில் யாருமில்லை என்று அறிந்ததும் விஷச் சிரிப்புடன் அபிராமின் அறைக்குள் நுழைந்த காவ்யா. 

 

“என்ன அபி எகத்தாளம் துள்ளுது. இன்னும் உன்னை நினைச்சு மயக்கத்தில் இருப்பேன்னு நினைக்கிறியா… என்னை மறுத்துட்டு போன உனக்கு பாரு நடக்கக் கூட முடியாம போச்சு. ஒண்ணே ஒன்னு அபி, சில சமயம் நான் இப்படி நினைப்பேன். நீ பைக் பின்னாடி உக்கார வச்சு சுத்திகிட்டு இருந்தியே என் பிரெண்ட், அவ விபத்து நடந்ததும் போன் பண்ணி உன்னைக் காப்பாத்த சொன்னதுமே, நான் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணிருந்தா, நீ நடந்திருப்பியோன்னு. பட் உன் கொழுப்புக்கு இது தேவைதான். இனிமே நீ ஆசைப்பட்டா கூட முடவனுக்கு இந்தக் கொம்புத்தேன் கிடைக்காது”

 

மின்னாமல் முழங்காமல் அவனது தலையில் அந்தப் பேரிடியை இறக்கினாள்..

 

“உன் கண்ணுல பட்டதால  அழகியான அந்த ஹைபி எங்கன்னு தெரியுணுமா அபிராம். வெளிய போயிருக்கா, ஒருத்தங்க கூட, சரியா சொல்லப் போனா ஒரு ஜோடி கூட  விருந்து சாப்பிட, அதில் லேடி பேரு  மங்கையற்கரசி. 

அவங்க நீ மயக்கத்தில் இருந்தப்ப இங்கதான் தங்கி இருந்தாங்க. உன் ரூமில் தான் இருந்தாங்க. உனக்கு முழிப்பு வந்ததும் செம்பருத்தியோட சேர்த்து வெளிய அனுப்பிட்டான் அவினாஷ். 

முக்கியமான விஷயம் திருநெல்வேலிலேயே செம்பருத்திக்கும் அவினாஷுக்கும் அறிமுகம் உண்டு. அவன்  தேர்ந்தெடுத்து அப்பாயிண்ட்மெண்ட் பண்ணவதான உன் ஹைபி. நிஜ முதலாளி போயிட்டு வரச் சொல்லும் போது உன்னை மாதிரி டம்மி முதலாளிக்காக மாட்டேன்னு சொல்ல முடியுமா. தகவல் போதுமா இல்லை இன்னும் வேணுமா?”

 

காவ்யா இன்னொரு இடியையும் இறக்கிவிட்டு அப்படியே நகர்ந்தாள். 

 

அபிராமின் முகம் கோபத்தால் சிவக்க ஆரம்பித்தது. “அவினாஷ்… “ வீடு அதிர அவன் கத்தியத்தைக் கேட்ட அனைவரும் பயத்துடன் அவனது அறையை நோக்கி ஓடி வந்தனர். 

 

அதே நேரத்தில் செம்பருத்தியும் சரியாக வீட்டிற்கு வர, மற்றவர்களுடன் சேர்ந்து அபிராமின் அறைக்கு ஓடினாள். 

 

கண்கள் சிவக்க அனைவரையும் பார்த்த அபிராம் அங்கு செம்பருத்தி நிற்பதைப் பார்த்து முதல் முறையாக அனைவரின் முன்பும் தட்டுத்தடுமாறி நடந்து வந்தான். ஓடி வந்து அவனைத் தாங்க வந்தவர்களை மறுத்துவிட்டு நேர் பார்வை பார்த்தவண்ணம் செம்பருத்தியிடம் வந்தான். 

 

“எங்க போயிட்டு வர செம்பருத்தி?”

 

“ஹோ… ஹோ…ட்டல்ல  சாப்பிட்டு…” திக்கித் திணறினாள். 

 

“நீயும் என்னை ஏமாத்திட்டேல்ல… “ அவன் கண்களில் தெரிந்த ஏமாற்றம். 

 

“இல்ல… இல்ல சார் எனக்குத் தெரியாது” இருதலை கொள்ளியாய் துடித்தாள். 

 

யாருக்கு சப்போர்ட் பண்ணுவாள் உள்ளம் கவர்ந்தவனுக்கா இல்லை ஊனும் உயிரும் தந்தவனுக்கா?

 

“அபி அவளுக்கு ஒன்னும் தெரியாது. அவளை ஒன்னும் சொல்லாதே” என்று இடையிட்டான் அவினாஷ். 

 

“நீ பேசாம இருடா… உங்கம்மா எதுக்குடா இங்க வந்தா… என்னைக் கொல்லுறதுக்கா?”

 

“மரியாதை அபி.. மரியாதை… “

 

“அவளுக்கெல்லாம் என்னடா மரியாதை? அவ என்னடா மரியாதை தர்ற அளவுக்கு நடந்தா”

 

“அபி வேண்டாம்.. வேண்டாம்… ரொம்பப் பேசுற “ என்று சேச்சி தடுத்தார். 

 

“நீ பேசாதே லீலாம்மா… உனக்கும் எங்கப்பாவுக்கும் கூடதான்  உறவு இருக்குன்னு ஊரெல்லாம் பேசுது. நான் உன்கிட்ட ஏதாவது கேட்டேனா… உன்னை எவ்வளவு மரியாதையோட நடத்துறேன். ஆனால் இவனோட அம்மா இருக்காளே. மரியாதைக்கு கூடத் தகுதி இல்லாதவ…. “

 

“டேய் மரியாதையா பேசு… எங்கம்மாவைப் பத்தி உனக்கென்னடா தெரியும்?உனக்கு உங்கம்மாவைப் பத்தியே தெரியாது எங்கம்மாவைப் பத்தி என்னடா தெரியும்”

 

“என்னடா தெரியாது. குடும்ப சொத்துக்காக ஏற்கனவே கல்யாணமான எங்கப்பாவை இழுத்துகிட்டு ஓடினவதானே. ஓடிப் போயி மும்பைல உக்காந்துக்கிட்டா பண்ண துரோகம் எல்லாம் மறைஞ்சுடுமா? ஆமா இப்ப எதுக்கு என் வீட்டுக்கு வந்திங்க? என்னைக் கொன்னுட்டு அரண்மனையும், மத்த சொத்துக்களையும் எடுத்துக்கத்தானே இந்த நல்லவங்க வேஷம். ஓடுகாலிக்குப் பொறந்தவனே”

 

“டேய்… “ என்று அவினாஷ் கொதிக்க 

 

பளார் என்று அபிராமின் கன்னத்தில் அறை விழ, அப்படியே அதிர்ந்து போனான். அவன் எதிரே அனல் பறக்கும் கண்களுடன் லீலாம்மா நின்றுருந்தாள். 

 

“லீலாம்மா… “ என்று அவினாஷ் திகைக்க. 

 

“அபி அவனைப் பாத்து என்ன வார்த்தை சொல்லிட்ட… அவன் வாரிசுடா… இந்த பாகமங்கலம் சாம்ராஜ்யத்து வாரிசு. உங்க குடும்பத்தால இப்ப ஒரு வேலைக்காரனாட்டம் இங்கேயும் அங்கேயும் ஓடிக்கிட்டு இருக்கான். இந்தப் பாவம் எல்லாம் உங்களை எப்படிடா சும்மா விடும்”

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 25”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 30தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 30

அத்தியாயம் – 30   கட்டிடக் கலையின் சாட்சியாக இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நிற்கும் பாகமங்கலம் அரண்மனை.அதன் முன்பு கார்கள்  வழுக்கிச் செல்ல வாகாக  விரிந்திருந்த தார்சாலை.    பாலைவனத்தைக் கூட சோலைவனமாக மாற்றும் திறன் படைத்த சிறந்த தோட்டக்காரர்கள்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 14தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 14

அத்தியாயம் – 14   அடுத்த சில வாரங்கள்  எப்படி ஓடியது என்றே செம்பருத்திக்குத் தெரியவில்லை. காலை எழுந்து ரெடியாகி காளியம்மாவின் பழைய சோறு நீராகாரத்திற்குப் போட்டியாக அவளும் சென்று நிற்பாள். அபிராமின் கடிதங்களைப் பிரித்துப் படித்து அவன் சொல்லும் பதிலைக்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 16தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 16

அத்தியாயம் – 16   விடியலில் எழுந்த செம்பருத்தி அவளது டைரியில் சம்பவங்களை எழுதிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சோதனைகள் அவற்றை கடந்த விதம் எல்லாம் அதில் பதிக்கப் பட்டிருந்தன.    பின் ஒரு காலத்தில் நான் சுயசரிதை எழுதினா