செல்லம் – 13
மனோராஜ் விபத்துக்குள்ளான செய்தி அறிந்ததும் வரதர் ஐயா கனடாவிலிருந்து உடனே புறப்பட்டு வந்திருந்தார். கடையையும் பெரும்பாலும் ஆதவனோடு சேர்ந்து அவர்தான் பார்த்துக் கொள்வார்.
“அந்தக் குளிருக்க கிடந்து நடுங்கிறதுக்கு நான் இங்க இந்தப் பிள்ளையளை கவனிச்சுக் கொள்ளுறன். மனோவுக்கும் சரி கவியம்மாவுக்கும் சரி யார் இருக்கினம்?”
ஆதவனின் அப்பாவிடம் ஆதங்கப்பட்டுக் கொண்டார் அந்த முதியவர்.
மனோராஜ் கண் திறந்த சில நாட்களில் அவனை சாதாரண அறைக்கு மாற்றி இருந்தார்கள். செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு அவன் இயல்பாக மூச்சு விட ஆரம்பித்திருந்தான். கை, கால்களில் இருந்த கட்டுகள் படுத்த படுக்கையாகத் தான் இருக்க வேண்டிய நிலை. முள்ளந்தண்டிலும் பட்ட அடி எழும்பியிருக்கவே மேலும் சில நாட்கள் செல்லலாம் என்றனர்.
சாதாரண அறைக்கு மாற்றியதும் பார்கவி தொடர்ந்து பார்த்துக் கொள்ள ஒரு வேலையாளை ஆதவனின் உதவியுடன் நியமித்தாள்.
“ஏம்மா பாரு.. கடையில் வேலை செய்றவங்கள், நாங்கள் எல்லாருமே பார்த்துக் கொள்ள மாட்டமே? எதுக்கு ஆள் வைக்கிறாய்?”
ஆதவனின் அப்பா அவளிடம் கேட்டே விட்டார்.
“இல்லப்பா.. தெரிஞ்சவை டொய்லெட் எல்லாம் சுத்தம் பண்ணுறது ராஜ்க்குக் கஷ்டமாக இருக்கும். அதை விட படுக்கையிலேயே வைத்து உடம்பு கழுவி டொய்லெட் எல்லாம் சுத்தம் பண்ணுறது எல்லாருக்கும் ஏலுமான வேலை இல்லை. இதையே தொழிவாக செய்றவை என்றால் பழக்கப்பட்டவை, முகம் சுளிக்காமல் செய்வினம். அதுதான்பா. தப்பா நினைக்காதையுங்கோ..”
“நீ சொல்லுறதும் சரி தான்மா.. எதுவும் என்றால் தயங்காமல் கேளும்மா..”
“நிச்சயமாகப்பா.. எங்களுக்கும் உங்களை எல்லாம் விட்டா வேற யார் இருக்கினம்? நீங்க எல்லாரும் உதவி செய்திருக்காட்டி நான் இப்போ எப்பிடி சமாளிச்சிருப்பனோ.. ரொம்ப நன்றிப்பா..”
“என்னம்மா நன்றி சொல்லி பிரிச்சுப் பாக்கிறாய்.. மனோ உன்னைத் தேடுறான் போல இருக்கு.. இடையிடையே போய் பாரும்மா..”
“ஒவ்வொரு நாளும் மதியம் போறனான். ஆனா அவர் நித்திரையாக இருக்கிறார்.”
“நிறைய மருந்துகள் குடுக்கினம். அதுதான் தூக்கம் போல.. வீட்ட போக ஒரு மாதம் என்றாலும் செல்லும் என்று டொக்டர் சொன்னார்..”
“சரிப்பா.. அதுதான் நானும் ராஜ் வீட்டுக்கு வர முதல் வீட்டை ஒருக்கால் ஒழுங்கு படுத்துவம் என்று.. ஆதவன் வீட்டுச்சாவி கொண்டு வந்தீங்களா?”
“இந்தாங்கோ கவியக்கா..”
“நன்றி ஆதவன்.. கடையில வேலை குறைவு என்றால் ரெண்டு பேரை அனுப்புங்கோ.. எதுக்கும் நான் ராஜ் வீட்ட போய்ட்டு தேவையென்றால் ஹோல் பண்ணுறன்..”
“சரிக்கா.. கவிதாவும் சும்மா தானே நிக்கிறாள்.. வரச் சொல்லவா?”
“சரி.. மத்தியானம் சாப்பிட்டு முடிய வரச் சொல்லுங்கோ. நானும் ராஜை வந்து பார்த்திட்டுத்தானே போக வேணும்.”
“சரிக்கா.. நான் போய்ட்டு வாறன்..”
ஆதவனும் தந்தையும் புறப்பட்டுச் செல்லவும் பார்கவி மனோவுக்கு சூப் செய்ய ஆரம்பித்தாள். திரவ உணவுகளாகத்தான் இப்போது கொடுத்துக் கொண்டிருந்தார்கள். செய்து முடித்து ஆற வைத்தவள், இன்னமும் பார்வையாளர் செல்வதற்கு நேரம் இருப்பதை உணர்ந்தவள் ஒரு சூட்கேஸில் தனது உடைகள், பற்பசை, பற்தூரிகை என்று அத்தியாவசியமான பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
அந்த சிறு சூட்கேஸையும் எடுத்துக் கொண்டு சூப்போடு மனோவைப் பார்க்கச் சென்றாள். அதிசயமாக இன்று விழித்திருந்தான். கொஞ்சம் கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தாலும் இவளிடம் ஒரு வார்த்தை பேசாது அவளையே வைத்த விழி வாங்காது பார்த்திருந்தான். பார்கவிக்கும் என்ன பேசுவது என்று புரியவில்லை.
மனோவைப் பார்த்துக் கொள்ளும் பையனை சாப்பிட அனுப்பியிருந்தாள். அதனால் அமைதியாக சூப்பை எடுத்துப் புகட்ட ஆரம்பித்தாள். அவனும் ஒவ்வொரு வாயாக சிறு பிள்ளை போல அருந்த ஆரம்பித்தான். முடிந்ததும் ஈரத் துணியால் அவன் வாயைத் துடைத்து விடவும் பார்வையாளர் நேரம் முடிந்ததற்கான மணி அடித்தது.
பார்கவிக்கோ அந்த இடத்தை விட்டுப் போகவே பிடிக்கவில்லை. அவனும் அவளையே தான் பார்த்திருந்தான். போய்தானே ஆக வேண்டும் என்ற உண்மை உறைக்க,
“நான் போய்ட்டு வாறன்..”
மென்குரலில் கூற அவனும் சரி என்பது போல ஒரு தரம் கண்களை மூடித் திறந்தான். கனத்த மனதோடு அங்கிருந்து புறப்பட்டாள் பார்கவி.
மனோவின் வீட்டை அடைந்த போது ஆதவனின் மனைவி கவிதா இவளுக்கு முன்பே காத்திருந்தாள்.
“ஹாய் பாரு அக்கா.. மனோண்ணா எப்பிடியிருக்கிறார்? நான் நாளைக்குப் போய் பார்ப்பம் என்று இருக்கிறன்..”
கேட்கவும் அவளுக்குப் பதிலளித்தவாறே கதவைத் திறந்து உள்ளே சென்றார்கள்.
அது ஒரு மாடி வீடு. முன்புறம் பூந்தோட்டம் பராமரிப்பற்று புதர் மண்டிப் போயிருந்தது. அதைக் கடந்து உள்ளே சென்று வீட்டுக் கதவைத் திறந்தார்கள். பெரியதொரு வரவேற்பறை உரிய தளபாடங்களுடன் இருந்தது. ஆனால் அது இருந்த கோலம் தான் இருவரையும் திகைக்க வைத்தது.
நிலமெங்கும் காலணிகளும் காலுறைகளும் பரந்து கிடந்தன. ஸோபாவில் துவாலையிலிருந்து அனைத்து வகையான அழுக்கு உடைகளும் கிடந்தன. ஸோபாவுக்கு முன்னால் இருந்த சிறு டீப்போவில் தேநீர் குடித்துக் காய்ந்து போயிருந்த குவளைகளும் சாப்பிட்டு விட்டுக் கழுவப்படாத கோப்பைகளும் கரண்டிகளும் நிறைந்திருந்தன. பல வாரங்களாக அப்படியே கழுவாமல் இருந்ததால் பூஞ்சணம் தன் வேலையை காட்டத் தொடங்கியிருந்தது.
கவிதாவும் பார்கவியும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் வாய் விட்டுச் சிரித்து விட்டார்கள்.
“அக்கா.. இது வீடா? குப்பைத் தொட்டியா? எத்தனை தடவை ஆதி கேட்டிருப்பார். வீட்டு வேலைக்கு ஒரு ஆளை அனுப்பிறன் என்று. வேணாம் வேணாம் என்று சொல்லிட்டு எப்பிடி இருந்திருக்கிறார் பாருங்கோவன்..”
“ஹூம்.. சோம்பேறிக் கழுதை..”
“அக்கா இதுதான் சாட்டென்று அண்ணாவைத் திட்டுறீங்களா..? அண்ணா வந்ததும் சொல்லிப் போடுவன்..”
“ஓமோம்.. சொல்லு.. சொல்லு.. உங்கட அண்ணாட்ட வீடு கிடந்த கோலத்தையும் மறக்காமல் சொல்லு..”
“ஹி.. ஹி.. சரி.. சரி வேலையைப் பார்ப்பம் அக்கா..”
“பொறு கவிதா.. முதல்ல வீட்டை ஒருக்கால் சுத்திப் பார்த்திட்டு வேலையை தொடங்குவம்.. என்ன எங்க இருக்கு என்று ஒண்டும் தெரியேல்ல..”
“அதுவும் சரிதானக்கா..”
இருவரும் வரவேற்பறையைக் கடந்து சென்றால் ஒரு புறம் அலுவலக அறை போல ஒன்றும் மறுபுறம் பெரியதொரு சமையலறையும் அதை அடுத்து சாப்பாட்டறை, களஞ்சியப்படுத்தும் அறை போன்றவை காணப்பட்டன. சமையலறையைத் திறந்தால் தோட்டதுக்குச் செல்ல ஒரு வழி தென்பட்டது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்திருந்த தோட்டம் காடாகக் காட்சியளித்தது. வருடக் கணக்காகப் பராமரிக்கப்படாமல் இருப்பது பார்த்த மாத்திரத்தில் புரிந்தது. பார்கவிக்குத் தன்னையறியாமலேயே பெருமூச்சொன்று வெளியேறியது.
ஆதவனின் அப்பாவுக்கு அழைத்தவள்,
“அங்கிள்.. நாளைக்கு தோட்ட வேலை செய்யத் தெரிஞ்ச ஒரு நாலு அல்லது அஞ்சு பேரை அனுப்ப முடியுமா? அதோட வீட்டு வேலை செய்ய யாராவது பொம்பிளை இருந்தாலும் அனுப்புங்கோ..”
கூறி விட்டு மேல்மாடிக்குச் சென்றாள். வரவேற்பறையிலிருந்து மேலே செல்லப் படிகள் சென்றது. அங்கு மூன்று பெரிய படுக்கை அறைகள் இணைந்த குளியலறைகளோடு இருந்தன. ஒரு அறை பூஜை அறையாக உபயோகிக்கப்பட்டிருந்தது போலும். காய்ந்து சருகாகிய பூக்களோடு தெய்வங்கள் காட்சி தந்தன. ஒரு அறையில் வெறும் தூசி மட்டுமே இருக்க வேறு எந்த விதமான அலங்கோலமும் இன்றி இருந்தது.
இன்னொரு அறைதான் மனோவின் படுக்கை அறை போலும். அங்கும் உடைகள் குவிந்து கிடந்தன. படுக்கையிலும் உடைகள் குவிந்து கிடந்தன.
மூன்று அறைகளையும் தாண்டிச் செல்ல ஒரு அறையில் சலவை இயந்திரமும் துடைப்பம், மொப்பர் போன்ற உபகரணங்கள் இருந்தன.
“அக்கா.. இங்க பாருங்கோ.. வோசிங் மெசின் இருக்குது.. வேலை செய்யுமோ என்று பாருங்கோ.. எப்பிடிப் பாவிக்கிறது என்று சொல்லுங்கோ.. நான் இந்த உடுப்பெல்லாத்தையும் முதல்ல தோய்ச்சுப் போடுறன்.. இருந்தாலும் மனோண்ணா சுத்த மோசம்.. உடுப்புக் கடைக்காரர் என்றதுக்காக இப்பிடியா உடுப்புத் தோய்காமல் நாளைக்கு ஒவ்வொரு உடுப்பாகப் போடுவார்..”
அங்கு கிடந்த உடைகளை முதலில் ஒவ்வொன்றாக பொறுக்கிக் கொண்டே பார்கவியை அழைத்தாள். சலவை இயந்திரம் இயங்கும் முறையை ஆராய்ந்தவள், சலவைத் தூளைத் தேடிப் பிடித்து ஒரு பகுதி உடைகளை தோய்க்க போட்டு விட்டு ஸ்டோர் ரூமுக்குச் சென்று கயிறு தேடி எடுத்தாள்.
வீட்டின் பின்புறம் சென்றவள் கவிதாவின் உதவியோடு ஐந்து நிரைகளாகக் கொடிகளை கட்டினாள். கட்டி விட்டு ஆதவனுக்கு அழைத்தவள்,
“ஆதவன், வேலை முடிஞ்சு கவிதாவைக் கூட்டிக் கொண்டு போக வரேக்க எனக்கு ஏதாவது சாப்பாடு கொண்டு வாங்கோ.. அதோட துணி காயப் போடுற கிளிப் அஞ்சு பக்கெட் வாங்கிட்டு வாங்கோ..”
என்று கூறினாள். கவிதா தோய்த்த உடைகளை கொடியில் காயப் போட ஆரம்பித்தாள். இவள் வரவேற்பறையிலும் குவிந்து கிடந்த உடைகளை தோய்க்கும் இடத்தில் போட்டு விட்டு பாத்திரங்களை கொண்டு சென்று சமையலறை ஸிங்கில் போட்டாள்.
மாடிக்குச் சென்றவள் மனோவின் அறைக்கு அடுத்து இருந்த அறையை தூசு தட்டிச் சுத்தப் படுத்தினாள். கூட்டி மொப் பண்ணி விட்டு மறுபடியும் ஆதவனுக்கு அழைத்தாள்.
“ஆக்கினைப் படுத்துறன் என்று குறை நினைக்காதையுங்கோ ஆதி. எனக்கு கட்டிலுக்கு விரிக்க ஒரு ஃபெட்சீட், தலயணையுறை, போர்த்துறதுக்குப் போர்வை இதுவும் கொண்டு வாங்கோ ப்ளீஸ்..”
“இதில என்ன இருக்குக்கா.. உங்களுக்குத்தான் நல்ல வேலை போல.. வேறயும் என்னவும் வேணும் என்றா உடன ஹோல் பண்ணுங்கோ..”
நல்லகாலம் அந்த அறையை மனோ பூட்டியே வைத்திருந்ததால் வெறும் தூசியோடு தப்பியிருந்தது. இல்லை என்றால் இரவுக்கு தூங்குவதற்கு கூட பார்கவிக்கு இடம் இருந்திராது.
“என்ன வாழ்க்கையப்பா வாழ்ந்திருக்கிறியள்? என்னோட அராத்திக் கொண்டு திரிஞ்ச நேரத்துக்குக் கொஞ்சமாவது வீட்டைக் கவனிச்சிருக்கலாம். மவனே சுகமாகி வாங்கோ.. உங்களுக்கு இருக்கு சங்கதி..”
மனதிற்குள் மனோவோடு செல்லச் சண்டை போட்டவாறே தான் உறங்குவதற்கு ஏற்றவாறு அறையைத் தயார் செய்தாள். கவிதா இரண்டு முறை தோய்க்கப் போட்டுக் காயப் போட்டிருந்தாள். அதற்குள் மாலை நேரமாகி விட்டது. ஆதவன் கேட்டிருந்த பொருட்களோடு வந்திருந்தான்.
காயப்போட்ட உடைகள் கீழே விழாமல் கிளிப்பை மூவருமாகப் போட்டார்கள்.
“மனோண்ணா இப்படியொரு வாழ்க்கை வாழ்வார் என்று கனவுல கூட நினைச்சுப் பார்க்கல. நான், கொஞ்சம் கூடக் கவனம் எடுத்திருக்கலாமோ என்று இருக்கு இப்ப.”
ஆதவன் கவலையோடு சொன்னான்.
“எனக்கும் சேர்த்துச் சாப்பாடு கொண்டு வா என்று எத்தனையோ தரம் கேட்டவன். நான்தான் அவன் என்னோட விளையாடுற என்று நினைச்சு.. ப்ச்.. நடந்ததை நினைச்சு இனி ஒரு பிரியோசனமும் இல்லை ஆதவன்.. இனிமேல் நான் கூடவே இருந்து பார்த்துக் கொள்ளுறன்..”
“பாரு அக்கா.. உண்மையாவா? அப்போ மனோண்ணாவைக் கல்யாணம் கட்ட ரெடியா?”
மெல்லிய முறுவலைச் சிந்தவிட்டவள்,
“முதல்ல அவன் சுகமாகி வீட்டுக்கு வந்து சேரட்டும் கவி.. ஐயாட குடுமி என்ர கையில தான் மாட்ட வேணும் என்று விதியிருந்தால் யார் என்ன செய்ய முடியும்..”
“தாங்ஸக்கா.. எங்க அண்ணா இப்பிடியே இருந்திடுவாரோ என்று சரியாக் கவலைப்படுவன்.. நீங்களும் இப்பிடியே தனியாகவே வாழ்ந்து முடிச்சிடுவியளோ என்று கதைப்பம். இப்பத்தான் நிம்மதியாக இருக்கு.. எல்லாம் நன்மைக்கே என்றது போல அக்சிடெண்ட் ஆகினதும் நல்லதுக்குதான் போல..”
ஆதவன் பெருமூச்சோடு முடித்தான். மற்ற இருவருக்கும் கூட ஆதவன் கூற்றை ஆமோதிக்கத்தான் தோன்றியது.
“நீங்க தனியாக நித்திரை கொள்ளுவீங்களாக்கா? நான் வேணும் என்றால் உங்களோட தங்கவா?”
“நீ இவ்வளவு உதவி செய்ததே போதும் கவி.. நான் இனிப் பார்த்துக் கொள்ளுவன். என்ர வீட்டயும் தனியாகத்தானே படுக்கிறனான். வடிவாப் பூட்டிப் போட்டுப் படுத்தால் பயம் இல்லை..”
“அப்பாவை வேணும் என்றால் வரச் சொல்லவாக்கா..?”
“வேணாம் ஆதவன். எனக்கு இது பழக்கம் தான். போனை பக்கத்திலயே வைச்சிருக்கிறன். என்னவும் என்றால் உடன ஹோல் பண்ணுறன். அடுத்த வீட்டில தானே இருக்கிறியள். பிறகு என்ன பயம்? கூப்பிட்டா அடுத்த நிமிசம் வந்திடப் போறியள்..”
“சரியக்கா.. கவனம். எதுவும் என்றா கூப்பிடுங்கோ.. நாங்கள் போய்ட்டு வாறம்..”
ஆதவனும் கவிதாவும் புறப்பட்டுச் செல்ல ஆதவன் கொண்டு வந்த மெத்தை உறை, தலையணை உறையைப் போட்டு படுக்கையை ஒழுங்காக்கினாள்.
ஆதவன் கொண்டு வந்திருந்த உணவை உண்டவள் மனோவின் அறைக்குச் சென்றாள். அவன் இல்லாத நேரம் அங்கு செல்வது அத்துமீறல் போல உணர்ந்தாலும் தவறு என்று தெரிந்தே செய்தாள்.
உடைகளை முதலே தோய்க்கப் போட்டிருந்தபடியால் இப்போது கொஞ்சம் பார்க்கும் படியாக இருந்தது. அவனது அறை மிக விசாலமாக இருந்தது. கட்டிலுக்கு நேர் எதிரே ஒரு தொலைக்காட்சி சுவரில் போருத்தப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் மூவர் அமரக்கூடிய ஸோபா ஒன்று போடப்பட்டிருந்தது. இன்னொரு பக்கச் சுவரில் பெரியதொரு அலுமாரி. மேசை ஒன்று காகிதங்களால் குப்பைத் தொட்டியாய் காட்சி தந்தது.
மறுபடியும் எந்தப் பக்கமிருந்து ஒதுக்குவது என்று புரியாமல் ஒரு நொடி விழித்தாள். மேசையில் இருந்து தொடங்கலாம் என்று முடிவெடுத்தவளாய் ஒவ்வொரு காகிதமாய் வாசித்து அது என்ன கடிதம், பத்திரம் என்று பார்த்து கட்டிலில் பரத்தி அடுக்கினாள். நாளைக்கு பைல்கள் வாங்க வேண்டும் என்று மனதுக்குள் குறித்துக் கொண்டவள் ஒருவாறு மேசையைச் சுத்தப்படுத்தி அடுக்கி முடித்தாள்.
வேலையை முடித்து நேரத்தைப் பார்க்கவும் மணி பன்னிரெண்டரை என்றது. நித்திரை வர மாட்டேன் என்று அடம் பிடித்தாலும் கூட உடல் ஓய்வுக்குக் கெஞ்சியது. அடுத்த அறையில் சென்று படுத்தவளுக்கோ ஒரு பொட்டுத் தூக்கம் வரவில்லை. மறுபடியும் எழுந்து மனோவின் அறைக்கு வந்தவள் தூசி போகக் கட்டிலைத் தட்டினாள். அங்கேயே அவன் அழுக்குப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்தவள் ஏதேதோ எண்ணங்களில் ஆழ்ந்து கொண்டே தூங்கிப் போனாள்.
அவள் கனவுகள் பலிக்குமா?