Tamil Madhura சுகமதியின் இரவும் நிலவும் சுகமதியின் ‘இரவும் நிலவும் – 9’

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 9’

இரவும் நிலவும் – 9

 

சுபிக்ஷா, நவநீதனுக்கு தன்னை பிடிக்கும் என ஒரு சில விஷயங்களை நினைவு கூர்ந்து மகிழ்பவள், அன்று அவன் திருமணத்தை நிறுத்தி விடும்படி கோரிக்கையுடன் வந்ததை எண்ணி அச்சமும் கொள்வாள். ஒருவேளை குடும்பத்தினரின் கட்டாயத்தில் மணக்கிறானோ… அடிக்கடி அவளுள் தோன்றும் வினா இது மட்டும் தான்!

 

நவநீதன் கண்காட்சி தொடர்பாக ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்க, அவனுக்கு சுபிக்ஷா விரும்புவது போல எல்லாம் காதலிக்க நேரம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவள் எப்படியெல்லாம் விரும்புகிறாள் என்று கூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

 

சுபிக்ஷாவிற்கோ அவ்வப்பொழுது வரும் அலைப்பேசி அழைப்புகள் மட்டும் போதவேயில்லை. அவளின் காதல் சில சுகமான நினைவுகள் கிடைக்காமல் பசியில் வாடியது.

 

ஒருநாள் தயங்கியபடி, “வீடியோ கால்ல பேசுவோமா?” என்று கேட்டிருந்தாள். சமீபத்தில் அவனைப் பார்க்கவே முடியாத ஏக்கம் அவளை இவ்வாறு கேட்கத் தூண்டியது.

 

சில நொடிகள் யோசித்தவன், “கண்டிப்பா வீடியோ கால்ல பேசணுமா சுபி? கொஞ்சம் எனக்கு டிஸ்ட்ராக்ட் ஆகும்” என்று சொன்னவன் எதனால் எனத் தெளிவாகச் சொல்லாமல் விட்டு விட்டதால் அவள் மனம் வாடிப் போனாள்.

 

உண்மையில், நவநீதன் வரைந்த ஓவியங்களில் பெண் உருவங்கள் வெளிப்படும் இடங்களில் எல்லாம் சுபிக்ஷாவின் சாயலே நிறைந்திருப்பதைத் தாமதமாகத்தான் கவனித்தான். இப்படி ஒரே சாயல் முக அமைப்பைக் கொண்ட ஓவியங்களை எப்படி ஒரே கண்காட்சியில் வரிசைப்படுத்துவது? என்னதான் கிளாஸ் பெயிண்டிங், ஆயில், தஞ்சாவூர், ஆர்க்ளிக், பேஸ்டல், ஸ்ப்ரே எனப் பல வகைகளில்… இயற்கைக் காட்சிகள், பழங்கால தோற்றம், கடவுளின் திருவுருவங்கள், கிராமத்தின் எழில், காதல் எனப் பல கான்செப்டுகளை வைத்து அவன் உருவாக்கியிருந்தாலும், பெண்ணின் முகம் என வரும்போது அவனையும் அறியாமல் சுபிக்ஷா வந்திருந்தாள்.

 

மரம் மழையில் நனைவதாக நினைத்து உதடு பிதுக்கி அழும் ஒன்றரை வயது சிறுபிள்ளை ஓவியத்தின் முகச்சாயலில் கூட அவள்தான் இருந்தாள். அவனுக்கு அந்த ஓவியத்தை பார்க்கத் பார்க்க தெவிட்டவில்லை. அதை மட்டும் பிரத்தியேகமாக தனக்கென வைத்துக் கொண்டான். இன்னும் சொல்லப்போனால், தான் வரைந்த ஓவியங்களில் அவனாக இதை நாம் வைத்துக் கொள்வோம் என நினைத்தது இதை மட்டும் தான் முழுமனதோடு எடுத்தே இருக்கிறான்.

 

இப்பொழுது தான் சுபிக்ஷாவின் நினைவால் இடறியதை அவசரமாகச் சரி செய்து கொண்டிருக்கிறான். கண்காட்சி தொடங்குவதற்குள் இன்னும் சில ஓவியங்களைப் புதிதாக வரைய வேண்டியிருந்தது. முயன்று சுபியின் முகச்சாயலை ஒதுக்கி வரைந்து முடித்தாக வேண்டும். அதற்காகத்தான் அவளிடம் டிஸ்டராக்ட் ஆகிறது என்றான்.

 

அது அவளுக்குப் புரிய வேண்டுமே… மீண்டும் ஒருவித அச்சம் அவளுள் சூழ்ந்து கொண்டது.

 

தங்கையின் முகவாட்டத்தைக் கவனித்த வருண் மீண்டும் அவளிடம் பேசி பார்த்தான். “சந்தோசத்தையே மறந்தவ மாதிரி இருக்கியே சுபி… கொஞ்சம் யோசிம்மா… இப்பவும் எதுவும் கை மீறி போயிடலை. நான் எல்லாத்தையும் சமாளிக்கிறேன்” பரிவும், அக்கறையாக அவன் பேசப்பேச அவள் ஆட்சேபித்துத் தலையசைத்தாள்.

 

“நான் வருத்தப்படறது நிஜம் தான் அண்ணா. அது நம்ம வீட்டை, உங்க எல்லாரையும் பிரிய போறதை நினைச்சு… நீங்க ஏன் தான் கண்டதையும் யோசிக்கிறீங்களோ?” அழகாய் பொய்யுரைத்து உறுதியாக மறுத்தவளைப் பார்க்க வருணுக்குப் பரிதாபமாக இருந்தது.

 

விட்டில் பூச்சியின் கதை இதுதான் போலும்! என விரக்தியும் இயலாமையுமாக எண்ணியவன், தங்கை நல்லபடியாக வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டான்.

 

அண்ணனின் முகத்தில் தோன்றிய நிராசையும், தவிப்பும், அவனது கண்களில் இருந்த ஏக்கமும் அவளைச் சங்கடப்படுத்தியது.

 

“அண்ணா…” என்றாள் தவிப்பாக.

 

“நீ என்னை ஏமாத்தலாம் சுபி. ஆனா, பிளீஸ் உன்னை நீயே ஏமாத்திக்காத…” என்றவன் விருட்டென்று வெளியேறி விட்டான்.

 

அதன்பிறகு, தன் முக பாவங்களில், சுபிக்ஷா கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டாள்.

 

திருமணம் வரையிலுமே அவள் இதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டியதாயிருந்தது. ஏனெனில், அது வரையிலும் நவநீதனிடம் பெரிதாக எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை.

 

அனைவரும் எதிர்பார்த்த திருமணநாளும் வந்தது. இருபக்க உறவுகளும் நண்பர்களும் சூழ திருமணம் இனிதே நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் சுபிக்ஷாவின் மனதுள் எழுந்த ஆசுவாசம் சொல்லில் அடங்காதது. பெரும் மகிழ்ச்சி அவளுக்கு!

அவன் வசிக்கும் வீட்டில் தான் இரவுக்கான சடங்கு ஏற்பாடாகியிருந்தது! மாப்பிள்ளை வீடு சம்பிரதாயமும் இந்த வீட்டில் தான் நடந்தது! அந்த விஷயங்களை விடவும் சுபிக்ஷாவிற்கு அவனின் பெற்றோர்கள் இங்கு வந்த உடனேயே கிளம்பி விட்டது தான் மிகவும் உறுத்தியது. இங்கு இருந்த வரையிலும் அவர்கள் வெகு அசௌகரியமாக உணர்ந்ததும்!

அனைத்தையும் தனக்குள்ளே ஆலோசித்தவாறே தான் இரவு சடங்கிற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். ஆரஞ்சு வண்ண மென்பட்டில், மிதமான அலங்காரத்தில் கிளம்பியவளை உறவுப்பெண்கள் அவர்களுக்கான அறையில் விட்டனர்.

 

இரவும், நிலவும் இன்று நவனீதன் சற்று அண்ணார்ந்து ரசிக்கும் தொலைவில் இருந்தது. முதல் மாடியின் பால்கனியில் இருந்தபடியே ரசித்துப் பழகியவனுக்கு… தரைத்தளத்தில் ஜன்னல் கம்பிகளின் வழியே ரசிப்பது புதுவித அனுபவமாக இருந்தது. ஆனாலும் மேலிருந்து பார்ப்பது போலான சுகம் இதில் இல்லை.

 

ரசித்துக் கொண்டே வெகுநேரம் நின்றிருந்தவன், ஏதோ உந்த தலையை மட்டும் திருப்பிப் பார்க்க, தவிப்பான பாவனையில் அவனது மனைவி சுபிக்ஷா நின்றிருந்தாள்.

 

எத்தனை நேரம் காத்துக் கொண்டிருந்தாளோ தெரியவில்லை. “வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என கேட்டபடி அவளருகே வந்தான். அவள் தலையைக் குனிந்தவாறே இல்லை என்பது போலத் தலையசைத்தாள்.

 

“சாரி கவனிக்கலை. நீயாவது கூப்பிட்டிருக்கலாமே? வா, வந்து உட்காரு” என அவளை அமரச் செய்தவன் அவள் அருகிலேயே தானும் அமர்ந்து கொண்டான்.

 

புது மணப்பெண்ணுக்கே உரிய நாணம். முதலிரவிற்கென்றே பிரத்தியேக அலங்காரம். பதட்டத்தில் துளிர் விட்டிருந்த வியர்வைத் துளிகள்… என அவள் அவனிடம் தனி கவனத்தை ஈர்த்தாள். அவளை சில நொடிகள் இமைக்க மறந்து ரசித்திருந்தான்.

 

தூரிகை வேண்டும் என அந்த ஓவியனின் கரங்கள் பரபரத்தது. அவளின் தோற்றத்தை இப்பொழுதே தீட்டி விட வேண்டும் என்ற பேராவல் அவனினுள்.

 

அவனது கற்பனை சிறகுகளை நிலை நிறுத்தும் வண்ணம், சுபிக்ஷா அங்கிருந்த நிசப்தத்தை உடைத்தாள். “உங்களுக்குப் பால் குடிக்கப் பிடிக்குமா?” எனத் தயக்கமாகக் கேட்டவள், பால் கொண்டு வந்திருந்த தம்ளரில் பார்வையை நிலைக்க விட்டிருந்தாள். காலையில் சடங்கின் போது வேண்டா வெறுப்பாய் அவன் பால் அருந்தியது போல எண்ணம் அவளுக்கு.

 

என்னவோ அவளது தயக்கமும், நாணமும் அவனை வெகுவாய் ஈர்த்தது. ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே, வம்பு பேசிக்கொண்டே திரிந்தவளை இப்படிப் பார்க்கச் சுவாரஸ்யமாக இருந்தது. அதே மகிழ்வான மனநிலையில், “ம்ம்… கொடு குடிப்பேன்” என்றான்.

 

அவள் ஆர்வமாக நீட்ட, நிதானமாகப் பருகி, மீதியை அவள் அருந்தக் கொடுத்தான்.

 

அவள் குடித்ததும், “உனக்கு இந்த ரூம் பிடிச்சிருக்கா?” என கேட்க, ஆர்வமாய் அறையில் பார்வையைச் சுழல விட்டவள் மலர்ச்சியாய் தலையசைத்தாள்.

 

“இதுதான் உன்னோட ரூம்” என அவன் கூறிய பொழுது, ‘ஏன் நம்ம ரூம்ன்னு சொல்ல மாட்டாறாக்கும்?’ என மனதிற்குள் சுணங்கினாள் மனையாள்.

 

ஆனால், அதற்கான விளக்கத்தை அவள் கேட்காமலேயே அவனே கூறினான். “நீ இந்த ரூம் யூஸ் பண்ணிக்க. மாடியில எனக்கு ரெண்டு ரூம் இருக்கு. பெருசா பால்கனியோட ஒரு பெட் ரூம். அங்கிருந்தே போற மாதிரி என்னோட டிராயிங் ரூம். எனக்கு எப்பவும் பிரைவேட் ஸ்பேஸ் வேணும். அது என் மனைவியா இருந்தாலும். நான் ஒரு தனிமை விரும்பி. அதைத் தொந்தரவு செய்யும் யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். ஹோப் யூ அண்டர்ஸ்டெண்ட். என்னோட புரொபஷன் அந்த மாதிரி. அதோட நான் நைட் தான் நிறைய குறிப்பெடுக்கறது, வரையறது எல்லாம்… அதுக்கு தனியா இருக்கிறது தான் சரியா வரும்” என அவன் சொன்னத்தைக் கேட்டு அவள் அதிர்ந்து போனாள்.

 

பெற்றவர்களுடன் இல்லாமல் அவன் தனியாக இருக்கிறான் என்று அவளுக்கு ஏற்கனவே தெரியும் தான். அதைக்காரணம் காட்டியே அவள் விருப்பத்தை அவளின் அண்ணன் நிராகரித்தான். முரண்டு பிடித்தது இவள் தான். ஆனால், இவன் மனைவியைக் கூட வேற்றாளாய் நினைத்து தனியறை ஒதுக்கித் தருகிறானே என எண்ணிச் சோர்ந்தாள்.

 

நவனீதன் தான் சொல்ல வந்ததை எல்லாம் சொல்லி முடித்ததும், “உனக்கு என்கிட்ட எதுவும் சொல்லணுமா?” என்று கேட்க, அவளுக்கும் வாய்ப்பு வழங்கிய அவன் பாங்கு அந்த நிலையிலும் அவளை மிகவும் கவர்ந்தது.

 

இதுதான் அவளுக்கே அவளிடம் புரியாத விஷயம். அவன் என்ன செய்தாலும் பிடித்தது. ஈர்த்தது. சிறிது நேரம் முன்பு தான், ‘அவன் ஏன் மனைவியான என்னை அந்நியமாக நினைத்து தனியறை தருகிறான்’ என வருந்தியவள், உடனே அதனை ஒதுக்கி வைத்து தனக்கு வாய்ப்பளிக்கிறானே எனப் பெருமிதம் கொள்கிறாள். இனிப்பைப் பெற்ற சிறுப்பிள்ளையாக மகிழ்கிறாள்.

 

இருந்தும் முந்தைய பேச்சின் வருத்தம் நினைவில் இருக்க, “உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?” என கேட்டாள். முதலிரவு அறையில் அமர்ந்து கேட்க வேண்டிய கேள்வி இல்லைதான். ஆனாலும் மனதை உறுத்த கேட்டு விட்டிருந்தாள்.

 

அவனுக்கும் சுபிக்ஷாவின் கேள்வி கேளிக்கையாக இருந்தது போலும். மென்மையாகச் சிரித்தான். வழக்கம்போல அவன் புன்னகையை அதிசயத்தைக் காண்பதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“உன் கேள்வி இந்த இடத்தில ஏன்னு எனக்குப் புரியலை? ஆனா, உங்கிட்ட பொய்யைச் சொல்ல எனக்கு மனசு வராததால, எனக்கு தோணினதை சொல்லறேன். உனக்கே தெரியும் என் தங்கை தான் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க சொல்லி என்கிட்ட கேட்டா. அப்ப என்னால அவகிட்ட உறுதியா மறுக்கவே முடியலை” என்றான் அவனது மனதை மறையாது.

உறுதியா மறுக்கவே முடியலை என்று அவன் குறிப்பிட்டது, அகல்யா கூறிய மணப்பெண் சுபிக்ஷா என்பதால்!

நவநீதன் இதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். உன்னைத்தவிர அகல்யா வேறு யாரை மணக்க சொல்லியிருந்தாலும் என்னால் ஏற்றிருக்க முடியாது எனக் கூறியிருக்கலாம். அதை ஏன் சொல்லாமல் விட்டான் என்று தெரியவில்லை.

 

அவனது பதிலில் அவளுக்குத் திருப்தி இல்லை. அவளுக்குக் காரணமே இல்லாமல் நவனீதனை மிகவும் பிடித்தது. அவன் எது செய்தாலும் பிடித்தது. அவன் மீது பைத்தியம் என சொல்லலாம். அவனுடைய ஒவ்வொரு செய்கையும் அவளை வசீகரித்தது. இதுவரை யாருடைய நினைவும் அவளை இந்த அளவு ஆட்கொண்டதில்லை என்று கூறலாம். இன்னும் இன்னும்… சொல்லிக்கொண்டே போகலாம்.

 

காதல் திருமணத்தில் கூடினால் சந்தோஷம் தான். ஆனால் அந்த சந்தோஷம் பலமடங்கு பெருகுவது, நாம் நேசிப்பவர்களும் நம்மை நேசிக்கும் பொழுது தானே? நவனீதனின் இன்றைய பேச்சை கேட்டபிறகு அவளுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எழவில்லை. அவனின் பதிலையும் இதுவரை அவன் பேசியவற்றையும் ஜீரணிக்க முடியாமல் சற்று திணறினாள்.

அவள் எதுவும் பதில் பேசாதிருக்க, அவள் எதுவோ கேட்பதற்காக யோசிக்கிறாள் போலும் என நினைத்தவன், “வேற ஏதாவது கேட்கணுமா?” என அவளிடம் கேட்க, ஒன்றுமில்லை என்னும் விதமாய் இடமும் வலமுமாய் தலையசைத்தாள்.

 

“ஒன்னுமே இல்லாததையா இத்தனை நேரம் யோசிச்ச?” எனப் போலி வியப்புடன் அவன் கேட்க, ‘என்னது யோசிச்சிட்டு இருக்கேனா? அப்படியா உங்களுக்கு தெரியுது? நான் நம்ம வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு பயப்படறது உங்களுக்குப் புரியலையா’ என அவனது புத்திக்கூர்மையை இகழ்ச்சியாக எண்ணியவள், தவிப்புடன் அவனை ஏறிட்டாள்.

 

“என்ன குடையுது இந்த தலைக்குள்ள? பயமாக இருக்கா? நான் வேணும்ன்னா என்னோட ரூமுக்கு போயிடவா?” என்று அவன் மேலும் அறிவாய் கேட்க,

 

அதில் பதறியவள், “நாம தனியா இருக்கும்போது உங்க ரூமில் தூங்கிக்கங்க. இப்படி வீட்டுல எல்லாரும் இருக்கும்போது… அது… நான் உங்களோட தனிமையையோ, சுதந்திரத்தையோ பறிக்கிற எண்ணத்துல சொல்லலை. அது… மத்தவங்களோட பார்வையில நாம ரெண்டு ரூமில் தங்கறது தவறா தெரியும். உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்” எனத் தவிப்பாகக் கேட்டு நிறுத்தினாள்.

 

“ஒரு விஷயம் புரிஞ்சது. இன்னொன்னு புரியலை” என்றான்.

 

‘என்ன?’ என அவள் பார்க்க, “வீட்டுல யாரும் இருக்கும்போது நம்ம ரெண்டு பேரும் ஒரே ரூமை தான் உபயோகப் படுத்தணும்ன்னு எனக்கு புரிஞ்சது. ஆனா இப்ப உனக்குப் பயமாக இருக்கா? நான் ஒதுங்கி இருக்கணுமா இல்லையான்னு புரியலை” என்றவனது பார்வை நிச்சயம் உரிமையுள்ளவனின் பார்வை.

 

அதில் சிலிர்த்து சிவந்தவளோ தலையைக் கவிழ்ந்து கொள்ள, “பயம் இருக்கு தான், அது அந்த நிலவு நம்மை கவனிக்கிறதேன்னு…” என மென்று விழுங்கியவளைக் கண்டு இம்முறை சத்தமாகவே சிரித்தவன் ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு வந்தான்.

1 thought on “சுகமதியின் ‘இரவும் நிலவும் – 9’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 4’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 4’

இரவும் நிலவும் – 4   காலில் அடிபட்டு வீட்டில் ஓய்வாகக் கிடந்த இந்த இரண்டு வார கால கட்டத்துக்குள் பூமி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கிறதோ என்று சுபிக்ஷாவிற்கு பலத்த சந்தேகம் வந்து விட்டது.   அந்தளவு பழைய மாதிரி உம்மணாமூஞ்சியாக

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 5’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 5’

இரவும் நிலவும் – 5   தங்கை அகல்யாவை என்ன சொல்லி சமாளிக்க என்று புரியாமல் மிகுந்த குழப்பத்துடன் அமர்ந்திருந்தான் நவநீதன்.   அகல்யா மட்டுமாக காலையிலேயே வீட்டிற்கு வருகை தந்திருந்தாள். அன்னை, தந்தை மீது அவனுக்கிருக்கும் கோபமும், வருத்தமும் குடும்பத்தில்

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 3’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 3’

இரவும் நிலவும் – 3   சுபிக்ஷா மௌனமாகவே இருந்தாள்.   அதை அவன் மதிப்பதாக இல்லை. “எப்படி வீட்டுக்கு போவேன்னு கேட்டேன்” என்றான் மீண்டும் அழுத்தமாக.   அவனை அண்ணாந்து பார்த்தவள், “டாக்ஸி பிடிச்சு போயிப்பேன்” என்று அவனை விட