செல்லம் – 10
அன்றிரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டாள் பார்கவி. வரதர் ஐயா கூறிச் சென்றதும், அன்று மனோராஜ் கேட்டதுமே சிந்தையில் சுழன்று கொண்டிருந்தது. கதை வாசித்தோ, பாடல்கள் கேட்டோ, பேஸ்புக்கை நோண்டியோ எந்த வேலையிலும் மனம் ஈடுபட மறுத்தது. சுற்றிச் சுற்றி அவர்கள் சொன்னவையே நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.
‘தனியாக வாழ்ந்து முடித்து விட முடியுமா?’ மனோ கேட்டது நியாயமான கேள்வி தான். என்றாலும் அவளுக்கு பதில் தெரியவில்லை. திருமணம் செய்ய நம்பிக்கை வர மறுத்தது. ஒருதரம் பட்ட அடி ஏழு ஜென்மத்துக்கும் மறந்துவிட முடியாத அடியாகவே அவள் மனதில் ஆழ பதிந்து இருந்தது. ஒருவாறு அவளை மீறி யோசனைகளின் மத்தியில் தூங்கியவள், அடுத்த நாள் எதுவும் நடவாதது போல வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கு இப்படியான வாழ்க்கைதான் பழகிய ஒன்றாகிற்றே.
நாம் என்ன நினைத்தாலும் தடுக்க முடியாதது இந்தப் பூமியின் சுழற்சியைத் தானே. அதனால் நாட்கள் நகர்ந்து கொண்டேதான் இருந்தன. ஆனால் மனோராஜ் அத்தோடு அந்த விடயத்தை விடுவதாக இல்லை. பார்கவியோடு தனியாகப் பேசக் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் அவள் திருமணம் பற்றித்தான் பேசினான். ஆனால் அவளோ அது காதில் விழாதது போலவே எதுவும் பதில் கூறாது சென்று கொண்டிருந்தாள். ஆனால் அன்றைக்கு அவளுக்கும் பொறுமை எல்லை கடந்தது.
“இங்க பாருங்கோ ராஜ்! இனிமேல் உங்களுக்கு அடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறன். ஆனால் திருப்பியும் கலியாணம் கிலியாணம் என்று ஏதாவது சொல்லிக் கொண்டு இருந்தியளோ நல்ல அடி வாங்குவியள் சொல்லிப் போட்டன். பிறகு என்னைக் கோவிச்சுப் பிரியோசனமில்லை..”
ஸ்டோர் ரூமில் உடைகளை உரியவாறு தட்டுகளில் அடுக்கிக் கொண்டிருந்தவள் வேலையைப் பார்த்தவாறே கூறினாள். அப்போது அவளை மிக நெருங்கி வந்த மனோ,
“பாரு..!”
அவள் காதருகே மெதுவாக கிசுகிசுத்தான். அவனின் நெருக்கத்தை எதிர்பார்த்திராதவளோ, கைகளிலிருந்த ஆடைகள் நழுவி விழ அவசரமாகப் பின்னகர்ந்து சுவரோரம் ஒதுங்கினாள். சுவரில் ஒட்டியபடி நின்றவளின் இரு புறமும் கைகளை வைத்து அவளை அசைய விடாது தடுத்தபடி, அவள் விழிகளை ஊடுருவி நேராகப் பார்த்தான். அவனின் இந்த எதிர்பாராத புதிய செய்கையில் அதிர்ச்சியோடு நின்றிருந்தாள் பார்கவி.
“என்ன ராஜ் இது.. ப்ளீஸ் விடுங்கோ..”
தட்டுத் தடுமாறியபடி கூறினாள்.
“உனக்கு வேற மாப்பிள்ளை வேணாம் பாரு.. என்னையே கல்யாணம் கட்டுறியா?”
ஆழ்ந்த குரலில் கூறியவனை பார்த்துக் கண்கள் விரிய மேலும் திகைத்தாள். அதெல்லாம் ஒரு நொடிதான். அவனின் நெஞ்சில் கை வைத்துத் தன் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டவள் அந்த அறையை விட்டே வெளியே ஓடினாள்.
மனது படபடத்தது. இதயத்தின் துடிப்பு கட்டுக்கு வந்தபாடில்லை. அலுவலக அறைக்குச் சென்று தன் இருக்கையில் அமர்ந்தவள், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள பெரிதும் போராடினாள். மேசையில் இருந்த ஒரு குவளை குளிர்ந்த தண்ணீரையும் கடகடவென குடித்து முடித்தவுடன்தான் கொஞ்சமேனும் அமைதி கிட்டியது. ஆனாலும் கோபம் அடங்குவதாக இல்லை.
மனோராஜ் ஸ்டோர் ரூமிலேயே யோசனையோடு நின்றிருந்தான். பல நாட்களாக கேட்க எண்ணியிருந்த விடயம்தான். ஆனால் எங்கே கேட்டுவிட்டால் அவளுக்கும் அவனுக்கும் இப்போது இருக்கும் இந்த சாதாரண பழக்கம் கெட்டு விடுமோ என்ற பயத்திலேயே தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். ஆனால் அவளோ கொஞ்சம் கூட இளகுவதாக இல்லை என்பதும் புரிந்தது. நேரடியாகப் பேசாமல் இந்த விடயத்துக்கு ஒரு முடிவு வராது என்று புரிந்து கொண்டவனாய் இன்று கேட்டே விட்டான்.
ஆனால் அவள் பதிலேதும் கூறாமல் சென்றதும் சற்றே மனசு வலிக்கத்தான் செய்தது. அவளது பதில் எதிர்மறை என்பது தெரிந்திருந்தாலும் கூட, சம்மதித்துவிட மாட்டாளா என்ற ஏக்கம் ஒரு பக்கம் எழாமலில்லை.
ஒரு பெருமூச்சோடு அலுவல் அறையை அடைந்தான்.
அங்கு சிவந்த முகத்தோடு இருந்தவளை பார்த்தபோது இவனுக்கு உள்ளே லேசாகப் பயம் கவ்வத் தொடங்கியது. அதனைக் காட்டிக் கொள்ளாமல் தன் இருக்கையில் சென்றமர்ந்தான். அவளின் முறைப்பைக் கண்டு கொள்ளாதவன் போல கணினித் திரையில் வேலையில் ஆழ்ந்தது போல பாவனை செய்ய ஆரம்பித்தான். அவளோ அவனை வைத்த கண் வாங்காது முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ராஜ்..”
இப்போது அழைத்தது அவள் தான்.
“என்ன பாரு.. சொல்லு..”
எதுவுமே நடவாதது போல கேட்டவனை மேலும் முறைத்தாள்.
“தயவு செய்து இனிமேல் என்னோட இந்த மாதிரிக் கதைக்க வேண்டாம். இப்பிடிக் கதைச்சியள் எண்டால் நான் இனி வேலைக்கு வர மாட்டேன். நான் சும்மா விளையாட்டுக்கு சொல்லுறன் என்று நினைக்க வேண்டாம். உண்மையாத் தான் சொல்லுறன்..”
“பாரு..! நானும் விளையாட்டுக்கு சொல்லேல்லம்மா.. உண்மையாத் தான் கேட்டனான். இப்பவும் கேட்கிறன். என்னை கல்யாணம் கட்டுறியா? உனக்கும் யாரும் இல்லை. எனக்கும் யாரும் இல்லை. எங்கள் ரெண்டு பேருக்கும் கடையை விட்டா வேற உலகம் இல்லை. இதை விட நாங்கள் பொருத்தமான ஜோடியா இருக்க வேற என்ன வேணும் சொல்லு பாப்போம்..”
அவனின் கூற்றில் இருந்த நியாயம் உறைத்தாலும் ஒரு கணம் தயங்கியவள், மறுநொடியே பதிலிறுத்தாள்.
“இதெல்லாம் சரி வராது.. என்னில பரிதாபப்பட்டு யாரும் எனக்கு வாழ்க்கை தர வேண்டாம்..”
“லூசாடி நீ.. யார் இப்ப உனக்குப் பரிதாபப்பட்டு வாழ்க்கை தாறன் என்று சொன்னது? எனக்கு முந்தியே உன்னைப் பிடிக்கும்.. ஆனா அந்த வயசில சின்னப் பிள்ளை போல இருந்த உன்னில பாசம் தான் இருந்ததே தவிர காதல் இருக்கேல்ல.
ஆனா இப்ப தினம் தினம் உன்னைப் பார்த்து பழகேக்க வாழ்க்கை முழுவதும் என்னை சந்தோசமா வைத்திருக்கக்கூடிய துணையா எனக்கு நீதான் தெரியிறாய். என்ன பற்றிச் சரியாகப் புரிந்துகொண்டு நடக்கிறாய். எனக்கு இதை விட வேறு என்ன தேவை? அதனாலதான் நான் உன்ன கல்யாணம் கட்டச் சொல்லிக் கேட்டனானே தவிர மற்றும்படி பரிதாபம் பார்த்து இல்லை. இங்க யாரும் யாருக்கும் வாழ்க்கைப் பிச்சை போட ரெடியா இல்லை.. அத முதல்ல புரிஞ்சு கொள்ளு..”
அவன் கூறியதைக் கேட்டதும் இப்போது கோபம் மறந்து கண்கள் கலங்கி அழுகை வர உதட்டை கடித்து அதை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டாள் பார்கவி. அதைக் கண்டவன் தாங்க மாட்டாதவனாய் அவள் இருக்கைக்கு விரைந்தான்.
“பாரு..! ஏண்டி அழுகிறாய்? எனக்கு முப்பது வயசு ஆச்சு. உனக்கும் இருபத்தைஞ்சு ஆச்சு.. இனியும் டீன் ஏஜ் பிள்ளைகள் போல காதல், மோதல் என்று திரிய நேரம் இல்லை எனக்கு. தனியாக வாழுற எனக்கு காலம் முழுவதும் சேர்ந்து வாழ ஒரு துணையைத் தான் தேடுறன். இரண்டு பேருமேதான் தொழிலை பார்க்கிறோம். கல்யாணம் செஞ்சு சந்தோசமா வாழ்க்கையையும் பார்க்கலாமே என்றுதான் கேட்டனான்டி.. அதுக்குப் போய் இப்பிடி அழாதை.. கஷ்டமாக இருக்கு கண்ணம்மா..”
அவளின் அழுகையோ நின்றபாடில்லை. அவள் கண்களை துடைத்து விட்டவன் தொடர்ந்தான்.
“எனக்கு உன்ர வாழ்க்கையில நடந்த விஷயம் எல்லாம் தெரியும் பாரு. உன்ர கல்யாணம் ரெண்டு நாளைக்கு முதல் நடக்காமல் நிண்டு போனது, அன்றைக்கே உன்ர அப்பா செத்துப் போனது, அப்பா செத்து ரெண்டு கிழமையிலே அம்மா செத்தது எல்லாமே எனக்கு தெரியும்டி. ஆனால் இதனால எல்லாம் உன்னில பரிதாபப்பட்டு கேட்கேல்ல.. உன்னில உள்ள விருப்பத்தில மட்டும் தான் கேட்கிறன்..”
அவன் சொல்லச் சொல்ல இவளது அழுகை அதிகமானதே தவிரக் குறைவதாக இல்லை. தொடர்ந்து அழுபவளை அடக்கும் வழி தெரியாது அப்படியே தன் வயிற்றோடு அணைத்து கொண்டு தலையைத் தடவி விட்டான். என்ன வார்த்தைகளை சொல்லி ஆறுதல் படுத்துவது என்பது புரியாது அவளே அழுது முடிக்கட்டும் என்றும் அவள் முதுகை வருடிவிட்டபடி அமைதியாகக் காத்திருந்தான்.
அவளும் சில நிமிடங்களில் அழுகை கட்டுக்கு வரத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஓய்வறைக்கு சென்று முகத்தை குளிர்ந்த நீரால் அடித்து கழுவினாள். முகம் சற்றே தெளிந்தது. அலுவலக அறைக்கு வந்தபோது சூடாக தேநீர் போட்டு வைத்திருந்தான் மனோராஜ்.
“முதல்ல இதைக் குடி பாரு..”
கொடுத்தவன் தனக்கும் ஒரு தேநீரை எடுத்துக் கொண்டு அவளையே பார்த்தவாறு அருந்த ஆரம்பித்தான். அவளிடமிருந்து விளக்கம் எதிர்பார்க்கிறான் என்பதை புரிந்தவள், சொல்வதா வேண்டாமா என்ற தயக்கத்தோடு அவனையே பார்த்தாள்.
“அந்தக் கல்யாணம் ஏன் நிண்டதென்று தெரியுமா?”
“ஏதோ சீதனப் பிரச்சினை என்று சொன்னவை..”
“இல்லை.. சீதனப் பிரச்சினை இல்லை. காரணம் நீங்கள் தான்..”
“பாரு..! ப்ளீஸ்.. சும்மா விளையாடதை.. நான் என்ன செஞ்சனான்..?”
அதிர்ந்து போய் கேட்டான் மனோராஜ்.
“கல்யாணத்திற்கு ரெண்டு நாளைக்கு முதல் தான் சாரங்கன் சுவிஸ்ஸில இருந்து வந்திருந்தவன். என்னை நேரில பார்க்க வேணும் என்று சொல்லி நான் ஸ்டார் ரெஸ்டாரண்டுக்கு போய் மீட் பண்ணினான். அப்ப சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க, ஃபேஸ்புக்கில எனக்கு உங்கட மெசேஜ் வந்திருந்தது.
நீங்கள், ‘ஹாய் செல்லம்’ என்று மெசேஜ் அனுப்பி இருந்தனிங்கள். சாரங்கன்தான் போனை எடுத்துப் பார்த்தவன். உங்கட மெசேஜ் ஓபன் பண்ணி பார்த்தால் நீங்க எப்பவுமே பாரு குட்டி, செல்லம், டார்லிங், குட் மார்னிங் ஹனி, என்ன செய்ற பேபி என்று தானே மெசேஜ் பண்ணுவீங்கள். நீங்கள் வழக்கமாகவே கதைக்கிறது இப்பிடித்தான் என்றபடியால எனக்கு உங்கட மெசேஜ்ல வித்தியாசம் ஒண்டும் தெரியேல்ல. நீங்கள் குட் மார்னிங் போட்டு இருந்தால் நானும் குட் மார்னிங் போட்டு இருந்தன்..
ஆனா அது எல்லாத்தையும் வாசிச்ச சாரங்கனுக்கு அது பிழையாத் தெரிஞ்சது. உடனே என்னோட சண்டை பிடிச்சான். ‘ஆர் இவன்..? எதுக்கு உன்னை செல்லம், டார்லிங் என்று கூப்பிடுறான்’ என்று கத்தத் தொடங்கிட்டான். அவனுக்கு நான் உண்மையைச் சொன்னன். ஆனா அவன் நம்பேல்ல. ‘நீ இடம் கொடுக்காமல் எப்பிடி ஒருத்தன் உன்னை செல்லம்,பேபி, டார்லிங் என்று கூப்பிட ஏலும்? நீ கொடுத்த இடம் தானே’ என்று கத்தினான்.
நானும் முடிஞ்ச அளவுக்குச் சொல்லிப் பார்த்தன். ‘நீங்க சூப்பர் மார்க்கெட்டில போய் பாருங்கோ.. மனோண்ணா எல்லாரோடையும் அப்பிடித்தான் கதைக்கிறவர்.. அவர் எனக்கு பேஸ்புக்கில மெசேஜ் போடுற யாரோ முகம் தெரியாத ஆள் இல்லை. என்ர முதலாளி..’ என்று அதுக்கு அவனோ,
‘முதலாளி என்ற படியால் தான் அவன் என்ன சொன்னாலும் பேசாமல் இருந்திருக்கிறாய் போல.. மெசேஜ்ல செல்லம், குட்டி எண்டு கிஸ் ஸ்மைலி போடுறவன் நேரில என்ன எல்லாம் செய்திருப்பான்?
நீ வடிவில்லை, கறுப்பு, குண்டா இருந்தால் கூட பரவாயில்லை என்று சுவிஸில பொம்பிளை எடுக்காமல் வேலை மெனக்கெட்டு ஊருக்க பொம்பளை எடுக்க வந்தது ஏனென்றால் நீ ஒழுக்கமான ஆளாய் இருப்பாய் என்று தான். வேலை செய்யிற படிச்ச பிள்ளை என்றுதான் வடிவில்லை என்றாலும் பரவாயில்லை என்று உன்னைக் கட்டுறதுக்கு ஓகே சொன்னனான். ஆனால் நீ இப்பிடிக் குணங்கெட்ட ஆளாய் இருப்பாய் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கேல்ல.
இந்த அரிசி மூட்டை உடம்பை வைச்சுக் கொண்டே பேஸ்புக்ல செல்லம், குட்டி என்று கொஞ்சிற ஆள், சுவிஸ்க்கு வந்தால் என்ன கூத்துப் போடுவியோ? உன்னோட எல்லாம் எந்த நம்பிக்கையில நான் குடும்பம் நடத்த முடியும்?’
என்று தாறுமாறாகக் கத்தத் தொடங்கிட்டான். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தன். ‘செல்லம், குட்டி, ஸ்மைலியைத் தவிர தப்பா அதில வேறு எந்த சாட்டும் இருக்காது.. வடிவாப் பாருங்கோ’
என்று கெஞ்சினன். ஆனால் அவன் நான் சொன்ன எதையுமே காதில விழுத்தேல்ல.
‘வடிவில்லாத பெட்டை என்றால் லவ், கிவ் என்று திரிஞ்சிருக்காது என்று பார்த்தால் இந்தக் காலத்தில ஒருத்தியையும் நம்ப முடியாது போல கிடக்கு.. சுவிஸ் மாப்பிள்ளை எனக்குப் பொம்பிளை தர எத்தனையோ பேர் கியூவில நிக்கினம், அப்பிடி இருக்க எதுக்கடி நான் உன்னைக் கல்யாணம் செய்ய வேணும்? இப்பவே இந்தக் கல்யாணத்த நான் நிப்பாட்டுறேன்’
என்று சொன்னவன் சொன்னபடி உடனேயே வீட்ட வந்து கல்யாணத்த நிப்பாட்டச் சொன்னான். ரெஸ்டாரண்ட் பார்க்கிங்கில வைச்சு அவன்ட காலை பிடிச்சுக் கூட கதறினான். கடைசி நேரத்தில இப்பிடிக் கல்யாணம் நின்று போனால் அப்பா, அம்மா தாங்க மாட்டினம்.. கடனெல்லாம் வாங்கி எல்லா ஒழுங்கும் செய்திருக்கினம் என்று..’
அதுக்கு அவன், ‘பிள்ளைய ஒழுங்காக வளர்க்கேலையே’ என்று சொல்லிட்டு, நேரா வீட்ட போய், அப்பாவை பார்த்து கண்ட பாட்டுக்கு கத்திப் போட்டான்.
‘பொம்பிளைப் பிள்ளைய வேலைக்கு அனுப்பிறியளோ? இல்லை வைச்சுத் தொழில் செய்யுறிங்களோ? போனை பார்த்தால் மெசேஜ் முழுக்க செல்லம், குட்டி என்று தான் வந்து கிடக்கு. இப்படிப்பட்டவளை என்ன நம்பிக்கையில நான் கலியாணம் செய்யிறது?’
என்று தாறுமாறாக் கத்திட்டுப் போய்ட்டான். அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள், கல்யாணத்துக்கு வந்திருந்த சொந்தக்காரருக்கு முன்னால அவன் இப்படி அவமானப்படுத்தி பேசவும் அப்பாக்கு அதைத் தாங்க முடியாமல் ஹார்ட் அட்டாக் வந்திட்டுது. நாங்கள் உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோயும் அவரைக் காப்பாத்த ஏலாமப் போச்சு.. கல்யாணமும் நின்று போச்சு..
அம்மாவுக்கு ஏற்கனவே சுகர், பிபி, கொலஸ்ரோல் எல்லாம் இருந்தது. ரெண்டு கிழமையில அவவும் போய்ச் சேர்ந்திட்டா என்னைப் பற்றி யோசிக்காமலேயே. ஒரு நாள் இரவு படுத்தவ, விடிய எழும்ப ஆள் பேச்சு மூச்சில்லை..
எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.. இனி ஊர்ச்சனம் என்ன கதைக்குங்கள் என்ற பயம் வேற.. என்னைப் பற்றித்தானே தப்பாக் கதைப்பினம் என்று உயிரோட வாழவே பிடிக்கேல்ல, ரெயில்ல விழுந்து சாகலாம் என்று போகேக்க தான் வரதர் ஐயா கண்டிட்டு என்னை காப்பாத்தி கடையிலயும் வேலை போட்டுத் தந்தார். ஆன்ட்டியும் ஐயாவும் நான் அவையிட வீட்ட போக மாட்டன் என்றதும் என்ர வீட்டயே வந்து தங்கி என்னை கொஞ்சம் கொஞ்சமாக சாதாரண நிலைக்குக் கொண்டு வந்திச்சினம்.. நானும் ஒரு வழியாக பழசெல்லாத்தையும் தூக்கிப் போட்டிட்டுக் கடையே என்ர வாழ்க்கையா வாழ ஆரம்பிச்சன்..
இப்ப சொல்லுங்கோ ராஜ்.. நான் எப்பிடி உங்களை கல்யாணம் கட்டுறது?”
பார்கவி சொன்ன கதையைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தான் மனோராஜ். அவள் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது விழித்தது இப்போது அவனது முறையாயிற்று.
அவர்கள் வாழ்வில் இனி நடக்கப்போவது என்ன?