Tamil Madhura யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 7

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 7

செல்லம் – 07

 

ரெஸ்டாரன்ட்டில் உணவு உண்டு முடித்ததும், பார்கவி நேராக பல்பொருள் அங்காடிக்குத்தான் சென்றாள். தேவையான பொருட்களை பார்த்துக் கூடைக்குள் போட்டபடி இருந்த போது,  பின்னாலே மனோராஜின் குரல் கேட்டது.

 

“பாரு! ஒரு நிமிஷம்.. உன்னோட நான் கொஞ்சம் கதைக்க வேணும்..”

 

“அதுதான் இவ்வளவு நேரமும் கதைச்சிட்டுத்தானே வந்தனான். வேற என்ன இப்ப கதைக்கக் கிடக்கு?”

 

கொஞ்சம் கோபமாகவேதான் கேட்டாள். 

 

“இது கடையை பற்றி இல்லை பாரு. எனக்கும் உனக்கும் உள்ள பிரச்சினையை பற்றி நாங்க ரெண்டு பேரும் கதைச்சு ஒரு முடிவுக்கு வரவேணும்..”

 

“எங்களுக்க என்ன இருக்கு..? ஒரு பிரச்சினையும் இல்லை.. எனக்குக் கதைக்க ஒண்டும் இல்லை..”

 

“சும்மா விளையாடாதை பாரு.. எடுத்த உடன என்னோட கோபப்படுறாய்.. அடிச்சுப் போட்டுத்தான் கதைக்கவே தொடங்கிறாய்.. ஒண்டும் இல்லாமல் தானே இதெல்லாம்..?”

 

அவன் சொன்னதைக் கேட்டு அவள் மௌனமாய் தலை குனியவும் அவனே தொடர்ந்தான்.

 

“நானும் நீயும் இப்பிடி எதிரும் புதிருமாய் இருக்கிறது கடைக்கும் நல்லதில்லை பாரு..”

 

“ஏன் கடைக்கு என்ன வந்ததாம்?”

 

“கொஞ்சமாவது நான் சொல்லுறத விளங்கிக் கொள்ளு பாரு.. உன்ர வீண் பிடிவாதத்தை விட்டிட்டு நான் சொல்லுறதைக் கொஞ்சம் காது குடுத்துக் கேளு..”

 

“கேட்காட்டில் என்ன செய்வியளாம்?”

 

பழைய குறும்பு சற்றே தலை தூக்கக் கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள். ஆனால் மனோவோ அதைக் கவனிக்காதவன் போல,

 

“இங்க பார் பாரும்மா.. நானும் நீயும் தான் கடையைப் பற்றி முற்றுமுழுதாக எல்லா விஷயத்தையும் பற்றி கதைச்சுப் பேசி முடிவெடுக்க வேண்டி இருக்கு. அப்பிடியிருக்க நீ இப்பிடி என்னோட எரிஞ்சு விழுந்து கொண்டிருந்தால் எப்பிடி நிம்மதியாக வேலையைப் பார்க்கிறது சொல்லு பார்ப்பம்..”

 

மௌனமே மொழியாய் அவள் அசையாது நிற்க, அவனே தொடர்ந்தான்.

 

“உனக்கே தெரியும் பாரு.. இப்ப என்ன நிலைமையில நான் கடையை வாங்கியிருக்கிறன் என்று.. அப்பா எனக்கென்று விட்டுப் போன சொத்தை வித்துத்தான் கடையை வாங்கியிருக்கிறன். மிச்சத்துக்கு வீடு, காணியை ஃபாங்கில அடகு வைச்சுத்தான் கடன் வாங்கி மிச்ச திருத்த வேலை எல்லாம் செய்ய வேணும். எனக்கு பிஸ்னஸ் மனேஜ்மென்ட் தெரியும் என்றாலும் கூட இந்தத் துணிக்கடை பிஸ்னஸ்ல அடியும் தெரியாது. நுனியும் தெரியாது. நீ இருக்கிறாய் என்ற துணிவில தான் துணிஞ்சு காலெடுத்து வைச்சிருக்கிறன். நீ மட்டும் இல்லையென்றால் தெரியாத ஒரு புது தொழில்ல இறங்கியிருக்கவே மாட்டேன் பாரு..”

 

அவன் பேசப் பேச, அவன் கூறிய விடயங்களை கேட்டு என்ன சொல்வதென்று தெரியாது சமைந்து போய் நின்றிருந்தாள். கோடிக் கணக்கான பணத்தை நீ கூட இருக்கிறாய் என்ற நம்பிக்கையில் முதலிட்டிருக்கிறேன் என ஒருவன் சொல்லும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வது, என்ன மாதிரியான எதிர்வினையாற்றுவது என்றே புரியாது அவனையே பார்த்தபடி நின்றாள் பார்கவி. மனோவோ அன்று அவளை விடுவதாக இல்லை. பேசி முடித்து விடுவது என்ற முடிவோடு இருந்தவன்,

 

“நீயே சொல்லு பார்கவி.. நான் கடையை நல்ல நிலைக்கு கொண்டு வர வேணுமா?இல்லை இப்பிடியே விட்டுவிட வேணுமா? தயவுசெஞ்சு சொல்லு.. உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? என்ன நடந்தது? ஏன் இப்பிடி என் மேல கோவப்படுறாய்? முந்தி நீ என்னில எவ்வளவு பாசமா இருந்தனீ என்று உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். பிறகேன் இப்படி மாறிட்டாய்?  உன்ர தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நான் எதுவும் கேட்கேல்ல. எனக்கும் உனக்கும் இடையில என்ன நடந்தது என்றதைத்தான் நான் கேட்கிறேன் ப்ளீஸ் சொல்லு பார்கவி..”

 

இருவரும் பேசியபடியே பணம் செலுத்தும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். பணம் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொண்டவள், தனது ஸ்கூட்டி நிற்கும் இடம் நோக்கி நடந்தாள். அவளின் முன்னே விரைந்த மனோவோ அவள் முன்னால் நின்று இரு கைகளையும் அகல விரித்து அவளை மறித்தான்.

 

“பாரு..! இண்டைக்கு ஒரு முடிவு தெரியாமல் நான் உன்னை விடப் போறதில்லை. நீ எனக்கு ஒரு பதில் சொல்லியே ஆகோணும்..” 

 

அவனின் தீவிரம் உணர்ந்தவளாய் அருகிலிருந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்று ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மேசையில் அமர்ந்து கொண்டாள். மனோவும் அவளை பின் தொடர்ந்து அவள் எதிரே சென்று அமர்ந்தான். இவர்களைக் கண்டதும் வந்த பரிமாறுபவரிடம் ஐஸ்க்ரீம் வித் ப்ரூட் சாலட் ரெண்டு என்று கூறவும் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள் பார்கவி.

 

“நீங்க இத இன்னும் மறக்கலையா மனோண்ணா..?” 

 

அவளை அறியாது வார்த்தைகள் வந்து விழுந்தன.

 

“எப்பிடி மறப்பேன் பேபி? எத்தினை நாள் உன்னோட ஐஸ்கிரீமுக்காக சண்டை போட்டிருக்கிறன்..”

 

முன்பு பல்பொருள் அங்காடியில் வேலை செய்யும்போதும் இடைஇடையே ஏதாவது விசேஷ தினங்களில் எல்லோரும் பொதுவாக ஐஸ்கிரீம் வாங்குவது உண்டு. அதுவும் அருகில் இருக்கும் இந்த ஐஸ்கிரீம் பார்லரில் தான் வாங்குவார்கள். எப்போதுமே ஐஸ்கிரீம் வித் ப்ரூட்சாலட் பார்கவி வாங்க, மனோ தனக்கும் அதுதான் வேண்டும் என்று அவளோடு வம்பு வளர்ப்பான். அவளும் அவனோடு மல்லுக்கட்டி எப்படியாவது தானே வென்றிடுவாள்.

 

பழைய ஞாபகத்தில் இருவரின் முகங்களும் கனிந்தது. அவளின் மனோண்ணா அழைப்பு ஒரு பக்கம் இதம் சேர்க்க, மறுபக்கமோ சுருக்கென்று தைத்தது. 

 

“சரி இப்ப சொல்லு கண்ணம்மா.. என்னில என்ன கோபம் உனக்கு? முந்தி நானும் நீயும் எப்பிடிப் பழகினாங்கள் நீயே சொல்லு பார்ப்பம். எவ்வளவு சந்தோசமான காலம் அது..”

 

ஒரு ஏக்கப் பெருமூச்சோடு சொன்னான் மனோராஜ். அந்த குறுகிய நேரத்திற்குள் பார்கவியும் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். இந்தக் கோபதாபங்கள் எல்லாம் யதார்த்த வாழ்விற்கு உதவாது என்பதை இத்தனை வருட தனிமையான வாழ்வு அவளுக்கும் பாடம் புகட்டியிருந்தது. நேராய் அவன் கண்களை நோக்கியவள்,

 

“நான் கடையில தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புறியளோ? இல்லையோ?”

 

நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள்.

 

“என்ன கேள்வி இது டார்லிங்.. திரும்பவும் சொல்லுறன். சத்தியமாக நான் உன்னை நம்பி மட்டும்தான் இந்தக் கடையை எடுத்திருக்கிறன் பாரும்மா. பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்பறிவும் சூப்பர் மார்க்கெட்டில வேலை பார்த்த அனுபவ அறிவும் இருக்குத்தான். நான் இல்லையென்று சொல்லேல்ல. ஆனால் துணிக்கடை எண்டுறது எனக்கு முழுசாவே புது விஷயம்.. நீ இல்லையென்றால் என்னால நினைச்சுக் கூடப் பார்க்க ஏலாது செல்லம். புரிஞ்சு கொள்ளு ப்ளீஸ்…”

 

மறுபடியும் மறுபடியும் அவளுக்குச் சொன்னதையே சொன்னான் மனோராஜ்.

 

“சரி சேர்! நான் நாலஞ்சு வருஷமா இங்க வேலை செஞ்ச அனுபவத்தோடு உங்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவியும் செய்வேன். கடையை நல்ல நிலைமைக்கு கொண்டு வாறதுதான் என்ர கனவும். ஆனால் நான் தொடர்ந்து வேலை செய்யிற எண்டால் அதுக்கு சில கொண்டிசன்ஸ் இருக்கு. அதுக்கு நீங்க ஒத்துக்கொண்டால் மட்டும் தான் வேலை செய்வேன். இல்லையென்றால் நான் வேலைய விட்டுட்டுப் போறன்..”

 

“என்ன டார்லிங்.. இப்பிடிச் சொல்லுறாய்? நான் என்ன செய்ய வேணும் என்று சொல்லு.. நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்.. எனக்கு நீ என்னோட இருந்தால் போதும் பேபி..”

 

“நீங்கதான் இந்த கடைக்கு முதலாளி. நான் முதலில் சொன்னது போல அதுக்குத் தக்க மாதிரி நீங்க நடக்க வேணும். உங்கட சில பழக்கவழக்கங்களை நீங்க மாற்றிக்கொள்ளவேணும். யாரையும் பேபி, டார்லிங், செல்லம், ஹனி என்றறெல்லாம் கூப்பிடக்கூடாது. எல்லோருக்கும் பேர் இருக்கு. அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் போதும்..”

 

அவளின் கோரிக்கையைக் கேட்டு மனோராஜ் கொஞ்சம் அதிர்ச்சியடையத் தான் செய்தான். 

 

“இந்த கண்டிஷன் மட்டும் தானா? இல்லை வேற ஏதும் இருக்கா?”

 

“இது மட்டும் தான் சேர்..”

 

 அதைக் கேட்டவன்,

 

“அதுக்கு என்ன டார்லிங் ஒத்துக்கொண்டால் போச்சுது. எனக்கு முழு சம்மதம். நான் இனிமேல் யாரையும் அப்படி கூப்பிட மாட்டேன். ஓகேயா பேபி..?”

 

“என்ர கடவுளே! நீங்க இந்த ஜென்மத்துல திருந்த மாட்டீங்கள். இது சரிவராது.. நான் போறன்..”

 

ஸொரி.. ஸொரி.. பாரு! எனக்கு கொஞ்சம் டைம் தாவன்.. நீண்ட கால பழக்கத்தை உடன மாத்த ஏலாதுதானே. நான் கொஞ்சம் கொஞ்சமா என்னை மாற்றிக்கொள்ளுறன். எனக்கு குறைஞ்சது ஒரு மாசமாவது டைம் தா.. ப்ளீஸ்..”

 

ஒத்துக்கொண்டதாகத் தலையசைத்தாள் பார்கவி. அவர்கள் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் வந்திருக்க மெதுவாய் அதை ருசிக்க ஆரம்பித்தார்கள். 

 

“இன்னொரு விஷயம் பார்கவி.. கடையில முற்றுமுழுதாக நாங்க இரண்டு பேரும் தான் எல்லா வேலையும் பார்க்கப் போறோம். நானும் நீயும் இப்பிடி கீரியும் பாம்பும் போல முகத்தை தூக்கி கொண்டு இருந்தால் அது சரி வராது. என்னால நீ என்னமோ பெரிதாகக் காயம் பட்டு இருக்கிறாய் என்று எனக்கு நல்லாவே தெரியுது. நீ என்ன என்று விளக்கம் சொல்லாட்டிலும் அது எனக்கு விளங்குது. அது என்ன விசயம் என்று தெரியாமல் உன்னட்ட என்னால மன்னிப்பு கேட்கவும் ஏலாது. அதை மறந்து விடு என்று சொல்லவும் ஏலாது. 

 

ஆனால் தயவு செஞ்சு இந்தக் கடையிட முன்னேற்றத்துக்காகவும் அங்க வேலை செய்ற, நீ குடும்பமா பழகுற ஆக்கள் எல்லாரிட முன்னேற்றத்துக்காகவும், உன் கோபம், வெறுப்பைக் கொஞ்ச நாளைக்கு ஒதுக்கி வைச்சிட்டு, முந்தி சூப்பர் மார்கெட்டில வேலை செய்யேக்க எப்பிடிக் கலகலவென்று சந்தோஷமாக இருப்பியோ, அது போல நீயும் என்னோட பழையபடி பழக வேணும் என்று நான் ஆசைப்படறேன். நாங்க சந்தோஷமா இருந்தால் தான் கடையையும் சந்தோசமா நடத்த முடியும். நீ இப்படி கோவப்படுறதைப் பார்த்துக்கொண்டு என்ன காரணம் என்று ஒண்டும் விளங்காம என்னால முழுமூச்சோட முழுமனதாக வேலை செய்ய முடியேல்ல செல்லம். தயவு செஞ்சு புரிந்துகொள்ளு..”

 

அவன் இறங்கிய குரலில் கூறவும், அவன் சொன்னதிலுள்ள நியாயம் உறைக்க சம்மதமாய் தலையசைத்தாள்.

 

“எனக்கும் கொஞ்சம் டைம் வேணும். நீங்களும் புரிஞ்சு கொள்ளுவீங்க என்று நினைக்கிறேன்..”

 

அவள் கூறவும் சம்மதமாய் தன் கை விரலை உயர்த்திக் காட்டினான் மனோராஜ். இருவர் மனதிலும் பெரும் ஆசுவாசம்  குடி வந்தது.

 

“நான் காசு குடுக்கவா மனோ சேர்..?”

 

“ஓம்! நீ பே பண்ணலாம். ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன். இண்டையில இருந்து நீ என்னை சேர் என்றோ அண்ணா என்றோ கூப்பிடக் கூடாது. ஏதோ நான் அரைக் கிழவன் போல பீல் ஆகுது. வயசு வேற முப்பதை நெருங்குது.. கூப்பிடுறதில மரியாதையைக் காட்டாம இந்த கன்னத்தைப் பதம் பாக்கிறதை நிப்பாட்டினாலே போதும் செல்லம்.. ஸொரி.. ஸொரி.. பாரு..”

 

அவன் கூறியதைக் கேட்டுச் சிரித்தவள், 

 

“சரி ராஜ்.. இனிமேல் அடிக்க மாட்டன். அழாதையுங்கோ..!”

 

அவன் பெயரின் பின்பாதியோடு ஒத்துக் கொண்டவளை சிறு மகிழ்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தான்.

 

“நன்றி பாரும்மா..” 

 

அவளும் சிறு புன்னகையோடு மேசையை விட்டு எழுந்தாள். அவனிடம் விடைபெற்றுக் கொண்டு கவுண்டருக்குச் சென்றவள் உரிய பணத்தைச் செலுத்தி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

 

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மனோராஜின் மனதோ இனம் புரியாத ஒரு உணர்வில் தத்தளித்தது. ஸ்கூட்டியில் ஏறியமர்ந்த பார்கவியின் மனதும் நீண்ட காலத்துக்குப் பிறகு லேசாகி இருந்தது. இத்தனை நாளாய் உள்ளே வெதும்பிக் கொண்டிருந்த கோபமும் எரிச்சலும் வெறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்தது போல ஒரு எண்ணம். பெரிய பாரம் ஒன்றை இறக்கி வைத்தது போல ஒரு உணர்வு. மனதிலே நிம்மதி பரவ வீட்டை அடைந்தாள் பார்கவி.

 

இனியாவது இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்களா? இல்லை மறுபடியும் சண்டைதானா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 6யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 6

செல்லம் – 06   ஞாயிற்றுக் கிழமைக்கே உரிய சோம்பலுடன் கண் விழித்தாள் பார்கவி. வீட்டிலே பார்க்க ஆயிரம் வேலைகள் குவிந்து கிடந்தன. ஆறு நாட்களும் கடைக்கே ஓடிவிட வீட்டுவேலைகள் நிறைந்து கிடந்தன. போட்ட துணிகள் எல்லாம் கூடையில் குவிந்து, ‘எங்களை

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 12யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 12

செல்லம் – 12   கடையில் அந்த மாதக் கணக்குகளின் வரவு செலவைச் சமப்படுத்தும் முயற்சியில் முனைந்திருந்தாள் பார்கவி. கடையின் தொலைபேசி அழைக்கவும் எடுத்துக் காதில் வைத்தாள்.   “ஹலோ..”   “ஹலோ.. ஓம் சொல்லுங்கோ..”   “உங்கட கடையில வேலை

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 3யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 3

செல்லம் – 03   மனோராஜைக் கண்டதும் வெறுப்பின் உச்சியிலும் கோபத்திலும் பார்கவியின் முகமே சிவந்து விட்டது. புது முதலாளியாக இவன் இருப்பான் என்று கனவிலும் இவள் நினைத்திருக்கவில்லை. அதிர்ச்சியை விட வெறுப்பே மண்டிக் கிடந்தது. வேலையாவது மண்ணாவது என்று எல்லாவற்றையும்