Tamil Madhura யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 6

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 6

செல்லம் – 06

 

ஞாயிற்றுக் கிழமைக்கே உரிய சோம்பலுடன் கண் விழித்தாள் பார்கவி. வீட்டிலே பார்க்க ஆயிரம் வேலைகள் குவிந்து கிடந்தன. ஆறு நாட்களும் கடைக்கே ஓடிவிட வீட்டுவேலைகள் நிறைந்து கிடந்தன. போட்ட துணிகள் எல்லாம் கூடையில் குவிந்து, ‘எங்களை வந்து கொஞ்சம் துவைத்து போடேன்’ என அழைத்தன. குளிர்சாதனப் பெட்டியோ காய்கறி எதுவுமின்றி வெறுமையாய் காட்சியளித்தது. ஆகவே சூப்பர் மார்கெட்டுக்கும் போக வேண்டியிருந்தது. வீட்டு முற்றமும் சரக்குகள் விழுந்து குப்பையாகக் கிடந்தது. பூஞ் செடிகளும் அவளது சிறு வீட்டுத் தோட்டமும் ‘எங்களுக்கு இந்த சுட்டெரிக்கும் வெயிலுக்கு கொஞ்சமேனும் தண்ணீர் தாராயோ’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தன.

 

ஆனால் எதையுமே செய்ய மனமின்றி கட்டிலிலேயே சோம்பி போய் அமர்ந்து இருந்தாள் பார்கவி. இன்று மதிய உணவிற்கு ரெஸ்டாரன்ட் செல்லத்தான் வேண்டுமா என்ற எண்ணம் மனதில் உதித்தது. நான்கு வருடங்களாக அவள் வெளியே எங்கு சென்றும் சாப்பிட்டதில்லை. வரதர் ஐயா கூட எத்தனையோ தரம் அவரது மகள் கனடாவில் இருந்து வந்து நின்ற நேரங்களில் அழைத்திருக்கிறார். ஆனால் இவளது பதில் எப்போதுமே மறுப்பு மட்டும்தான்.

 

கடையில் வைத்து மற்றவர்களோடு கலந்துரையாட நேரம் கிடைக்காத காரணத்தால் மட்டுமேதான் மனோராஜ் அழைத்திருந்தது புரிந்திருந்தால் கூட அவளுக்கு ஏனோ செல்ல மனம் விழையவில்லை. அதுவும் ஸ்டார் ரெஸ்டாரண்டுக்கு செல்வது என்பதை நினைக்க மனதில் சொல்லொணாத் துக்கமும் கோபமும் எரிச்சலும் வெறுப்புமாக எதிர்மறை எண்ணங்களே ஓங்கி நின்றது. இப்படியான ஒரு மனநிலையில் கடையின் முன்னேற்றத்தைப் பற்றி அவளால் யோசிக்க முடியுமா? இல்லை எதையாவது பேசத்தான் முடியுமா? 

 

கண்களில் கண்ணீர் மல்க தன் நிலையை எண்ணிப் பரிதாபத்திலும் பச்சாதாபத்திலுமாக அமர்ந்திருந்தாள் அந்தப் பேதைப் பெண். தொலைபேசியில் நேரம் ஒன்பது மணி ஆகிவிட்டது என்பதை அறிவிப்பதற்கு அலாரம் அடித்தது. எடுத்துப் பார்த்தவள் இதற்குமேலும் சோம்பி அமர்ந்து ஆகப்போவது ஒன்றுமில்லை என்று உணர்ந்து கொண்டவளாய் காலைக் கடன்களை முடித்துவிட்டு ஒரு தேநீரைப் பருகினாள்.

 

முற்றத்தைக் கூட்டி மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சியவள், வீட்டையும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்துவிட்டு துணிகளை துவைத்துக் காயப் போட்டாள். என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்று பட்டியலை தயார் செய்து விட்டுக் குளித்து ஆயத்தமாகினாள்.

 

குளிக்கும்போது கூட எண்ணங்கள் முழுவதும் ரெஸ்டாரன்ட் போவதைப் பற்றியேதான் இருந்தது. அதை ஒதுக்கிக் கடைக்குச் செய்யவேண்டிய மாற்றங்களைப் பற்றி சிந்திக்க தொடங்கினாள். ஆடை மாற்றித் தயாரானதும் அவள் கடையின் மாற்றங்கள் பற்றிக் குறித்து வைத்திருந்த பைலை எடுத்துக்கொண்டு ரெஸ்ட்ராரென்ட்டிற்குச் சென்றாள்.

 

நேரத்தைப் பார்க்காது புறப்பட்டு இருந்தவள் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே போயிருந்தாள். வாயிலை அடைந்ததும் என்னதான் கட்டுப்படுத்த முயன்றும் அவளால் கடந்த கால நினைவுகள் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஸ்கூட்டியை அதற்குரிய தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு மெதுவாய் உள்ளே சென்றாள் பார்கவி. அந்த ஸ்கூட்டி தரிப்பிடத்தில் கண்ணீர் மல்க ஒருவனின் காலைப்பிடித்து கெஞ்சியது நினைவுக்கு வந்து இப்போதும் கண்களில் அருவி குளம் கட்டியது. 

 

மனதைத் திடப்படுத்திக் கொண்டு மெதுவாக உள்ளே சென்றாள். விழிகள் உள்ளே ஒரு வட்டமடித்து மனோவோ, மற்றவர்களோ வந்துவிட்டார்களா என்று பார்த்தன. அந்த ரெஸ்டாரண்ட் சிறப்பே இயற்கையோடு கூடியதாக ஆங்காங்கே சிறிய குடில் போல அமைத்து குடும்பம் குடும்பமாகவும் அல்லது நண்பர்கள் சேர்ந்தோ அமர்ந்து உண்ணக் கூடியது போல் அமைத்து இருந்தார்கள். சிலவற்றில் நான்கைந்து பேர்கள் ஒன்றாக அமரலாம். வேறு சிலவற்றில் பத்துப் பன்னிரெண்டு பேர் வரை சேர்ந்து உண்ணக்கூடிய மாதிரி அமைத்திருந்தார்கள்.

 

ஆறு பேர் அமரக்கூடிய ஒரு குடிலில் அமர்ந்திருந்த மனோ இவளை கண்டு விட்டு எழுந்து வந்தான். 

 

“ஹாய் செல்லம்! நான் இங்க இருக்கிறன்..”

 

கூறியபடியே அவளை நோக்கி வந்தவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் பார்கவி. சிரித்த முகமாக புன்னகை தவழ வந்தவன் அவளது செய்கையில் அதிர்ந்து போய் நின்றான். பொது இடத்தில் மறுபடியும் அவள் அறைந்ததை அவனால் கொஞ்சம் கூட ஏற்க முடியவில்லை. அறைந்ததால் ஏற்பட்டதை விட அவமானத்தால் முகம் சிவந்தது. 

 

இருந்தாலும் அவளை முன்பே நன்கு அறிந்தவன் என்ற படியால் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு,

 

“ஏண்டி இப்பிடிச் செய்யிறாய்? நீ ஏன் இப்படி மாறிட்ட பாரு.. என்னைப் பார்த்தாலே அடிச்சுட்டு தான் கதைக்கிறாய். அப்பிடி நான் உனக்கு என்னதான்டி செஞ்சனான்? ஏன் என்னைக் கண்டாலே இப்பிடி எரிஞ்சு விழுகிறாய்? அடிக்கிற அளவுக்கு அப்பிடி நான் உனக்கு என்ன செய்தனான் என்று சொல்லு பார்ப்பம்.. அதுவும் பொது இடம் என்றும் கூடப் பார்க்காம இப்பிடி அடிக்கிறியே பாரு.. இப்பவும் ‘இங்கே வா’ என்று தானே சொன்னனான்.. அதுக்குப் போய் ஏன்டி அடிக்கிறாய்? சத்தியமா எனக்கு ஒண்டும் விளங்கேல்ல பாரு..”

 

அவன் கோபப்பட்டு இருந்தால், அவள் இன்னமும் எகிறி  இருப்பாளோ என்னவோ தெரியவில்லை. ஆனால் மனோராஜ் அமைதியாகப் பேசவும் அவளுக்கு அழுகை விம்மி வெடித்து கொண்டு வந்தது. கடந்த காலத்தின் இயலாமையால் வந்த கோபத்தையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியாமல் அதற்கும் அவனையே சாடினாள்.

 

“உங்களுக்கு எத்தனை தரம் நான் சொல்லுறது இப்பிடி செல்லம், குட்டி என்று கூப்பிடாதையுங்கோ என்று. எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டீங்களே..”

 

“அப்ப நான் உன்னை செல்லம் எண்டு கூப்பிட்டதுக்குத்தான் அடிக்கிறியா? நான் அந்தக் காலம் இருந்தே அப்பிடித்தானே பாரு கூப்பிடுறனான்.. உன்னை மட்டும் இல்ல எல்லாரையும் தானே அப்பிடிக் கூப்பிடுறன்.. இதில என்ன வந்தது என்று இப்பிடிக் கோபப்பட்டு அடிக்கிறாய்? எனக்கெண்டால் ஒண்டும் விளங்கேல்லை பாரு.. சரி சரி இப்ப வா.. போய் இருப்பம். மற்றவையளும் வருகினம்.. எங்கட பிரச்சினையைப் பிறகு பார்த்துக் கொள்ளுவம்..”

 

ஆதவனும் கனகண்ணையும் கூடவே வரதர் ஐயாவும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை கண்டதும் முகத்தைக் கைக் குட்டையால் அழுந்தத் துடைத்து விட்டு முயன்று வருவித்த ஒரு முறுவலோடு அவர்களை நோக்கி நடந்தாள். ஆளாளுக்கு சுக நல விசாரிப்புகள் முடிய மனோராஜ் முன்பதிவு செய்திருந்த மேசைக்குச் சென்று அமர்ந்து கொண்டார்கள்.

 

வரதர் ஐயாவைக் கண்டது அவளுக்கு ஏனோ ஒரு விதத்தில் ஆறுதலாக இருந்தது எனலாம்.  

 

“இன்னும் நீங்க கனடாவுக்கு போகலையா ஐயா? போயிட்டீங்கள் என்றுதானே நினைச்சுக் கொண்டிருக்கிறன். கடைப் பக்கமும் பிறகு வரேல்ல..”

 

“உனக்கு சொல்லாம நான் போவனா கவிம்மா? இன்னும் கொஞ்ச கணக்கு வழக்கு முடிக்க இருக்கு.. வீடு வாசலையும் அப்பிடியே விட்டுட்டுப் போக ஏலாது தானே.. அதுக்குரிய அலுவலுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறன். அதாலதான் டிக்கெட் பின்னுக்குத் தள்ளிப் போட்டிருக்கிறன். கடைய மாத்திறது பற்றிக் கதைக்க வேணும் எண்டு மனோ கூப்பிட்டதால வந்தனான். போக முதல் நிச்சயம் உனக்கு சொல்லுவனம்மா..”

 

“சரி ஐயா..”

 

பரிமாறுபவர் வரவும் தேவையான உணவு வகைகளை குறிப்பிட்டுக் கொண்டு வருமாறு பணித்து விட்டு பேச ஆரம்பித்தார்கள். மனோராஜ் தான் ஆரம்பித்தான். 

 

“கடையை கொஞ்ச நாளைக்கு மூடலாம் என்று நினைக்கிறன். கடையில லிப்ட் போடுறதிலயிருந்து நிறைய திருத்த வேலை இருக்கு. ஸ்டோர் ரூமில இருந்து எல்லாம் திருத்த வேணும். எல்லா இடமும் றாக்கைகள் அடிக்க வேணும். எல்லாத்துக்கும் கடையை மூடினால்தான் சரி வரும் போல. நேற்று என்ர ப்ரண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்திருக்கிறவன் வந்து பார்த்து எஸ்டிமேட் போட்டு தரலாம் என்று சொல்லி இருக்கிறான். அவன் மேலோட்டமாக சொன்னதை வைச்சுப் பார்த்தா ரெண்டு மாசமாவது கடைய மூட வேண்டி வரும் போல கிடக்கு. அதுதான் நீங்க எல்லாரும் என்ன நினைக்கிறீங்கள் என்று தெரிஞ்சா எனக்கும் அடுத்தது என்ன செய்யிற என்று முடிவெடுக்க சுகம்..”

 

“சந்தோஷம் தம்பி.. கவிம்மா எப்பவுமே அதைச் செய்யுங்கோ, இதைச் செய்யுங்கோ என்று நிறைய சொல்லுவா. ஆனால் எனக்கு அதுக்கெல்லாம் வயசும் மனமும் இடம் கொடுக்கேல்ல.. இப்ப நீங்க கடையைத் திருத்தி எல்லா மாற்றமும் செஞ்சு கடைய வடிவா நடத்துறது எனக்குப் பெரிய சந்தோசம் தான் மனோ..”

 

வரதர் ஐயா மகிழ்ச்சியோடு தெரிவித்தார். ஆதவனும் அமைதியாகவே தலையாட்ட, கனகண்ணையும் வரதர் ஐயாவின் கூற்றை ஆமோதித்தார். பார்கவி மட்டும் அதிர்ச்சியோடு ராஜைப் பார்த்தாள். 

 

“இரண்டு மாசம் மூட வேணுமோ? ரெண்டு மாசமும் நாங்கள் என்ன செய்றது? எல்லோருக்கும் சம்பளம் என்ன போல? கடையில வேலை செய்யிற பிள்ளையளிட சம்பளத்தை நம்பித்தான் அவையிட குடும்பங்கள் இருக்கு. ரெண்டு மாசம் கடையைப் பூட்டினா அவை பிழைப்புக்கு என்ன செய்வினம்?”

 

“அவசரப்படாதை பாரு.. நான் இதை யோசிக்காம இருப்பனா? கடை தான் பூட்டுறமே தவிர மற்றபடி எங்கள் எல்லோருக்குமே வேலை இருக்கும். சாமான் எடுத்து ஒழுங்குபடுத்த, அடுக்க என்று வேலை இருக்கும் தானே. ஓரிரு கிழமைதான் லீவு கிடைக்கும். சம்பளத்தோட சேர்த்த லீவு தான். அதனால யாரும் பயப்பிடத் தேவையில்லை..”

 

அவன் பதிலுக்கு வெறுமனே புரிந்ததாக தலையசைத்து விட்டு குளிர்பானத்தை அருந்த ஆரம்பித்தாள்.

 

“எப்ப கடையை மூட யோசிச்சு இருக்கிறீங்கள்?”

 

ஆதவன் கேட்டான். 

 

“திருத்திற என்று முடிவெடுத்து முடிய எதுக்கு தாமதிக்க வேணும்?  என்ர ப்ரண்ட் எஸ்டிமேட் தந்தவுடன வேலையைத் தொடங்கலாம் என்று நினைக்கிறன்.”

 

அப்போது குறுக்கிட்டாள் பார்கவி.  

 

“எனக்கு ஒரு ஐடியா இருக்கு.. அவசரப்பட்டு உடனே மூட வேண்டாம். ஓரளவுக்கு விக்காம இருக்கிற உடுப்புகளை பார்த்து மலிவு விலை போடலாம். கழிவு கொடுத்து விக்கப் போடலாம். ஓரளவுக்கு அதில லாபம் கூட உங்களுக்கு வரலாம். இல்லை என்றாலும் நட்டம் வரப் போறதில்லை. வருசக் கணக்கா ஐயா சேர்த்து வைச்சிருக்கிறார்..”

 

பார்கவி, வரதர் ஐயாவைப் பார்த்துக் கொண்டே கூறவும், அவரும் சிரித்த படி பதிலளித்தார்.

 

“ஓம் மனோ.. கவிம்மா சொல்லுறது நல்ல ஐடியா தான். ஸ்டோர் ரூம்ல பார்த்திருப்பாய் தானே. பழைய ஸ்டொக், ட்ரெண்ட் போய்ட்டுது, ஃபஷன் போய்ட்டுது என்று எவ்வளவு விக்காமக் கிடக்கு என்று..”

 

“ஓமோம்.. இது நல்ல ஐடியாதான். பார்கவி அதற்குரிய முழுப்பொறுப்பையும் உங்களிட்டயே தாறன். நீங்களே ஸ்டொக் பார்த்து செய்ய வேண்டியதை செய்யுங்கோ.”

 

“சரி சேர்..”

 

மனோராஜ் பார்கவியிடம் கூறவும் அவளும் சம்மதித்தாள். 

 

“எனக்கும் ஒரு ஐடியா இருக்கு.. இப்ப எல்லாமே இன்டர்நெட், ஒன்லைன் காலம்தானே. நாங்க ஏன் ஒன்லைனில் விற்பனை செய்யக்கூடாது? கவி அக்கா சொன்னது போல கடையிலயும் வைச்சு விக்கலாம். அதேபோல பேஸ்புக்கில போட்டால் கூடப் போதும். வெப்சைட் கூட ஆரம்பத்தில தேவையில்லை. பேஸ்புக்கில போட்டோஸ் எடுத்துப் போட்டால் போதும். நாடு முழுக்க விற்பனை செய்யலாம். இப்ப ஒன்லைன் ஷொப்பிங் தானே ட்ரெண்ட்..”

 

“சூப்பர் ஆதி.. நானும் இதைப் பற்றி யோசிச்சனான். நீயே அதைச் சொன்னதில எனக்கு சந்தோசம். இதைப் பற்றியும் என்ன செய்யலாம் என்று யோசிப்பம். சரியா? அப்ப இந்த விசயங்களை முடிச்சிட்டு அதுக்குப் பிறகுதான் கடையை மூடிக் கட்டிட வேலை செய்றதைப் பற்றி பார்க்க வேணும்.”

 

“கனகண்ணை..! நீங்க என்ன பேசாம இருக்கிறீங்கள். உங்களுக்கும் எதுவும் ஐடியா இருந்தா சொல்லுங்கோவன்.. ஏதோ பலமான யோசினையில இருக்கிறியள் போல கிடக்கு..”

 

“அது வந்து தம்பி.. நான் சொல்ல போறதைக் கேட்டு குறை நினைக்கக்கூடாது. கவிம்மாவும் ஆதியும் வியாபாரத்தில லாபத்துக்கு வழி சொல்ல, நான் செலவுக்கு ஒரு வழி சொல்ல போறேன் தம்பி. இந்த விக்காத துணிகளை ஒழுங்குபண்ணேக்க,  கொஞ்ச உடுப்புகளை அனாதை இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் கொடுக்கலாம். யோசிச்சு செய்யுங்கோ தம்பி. ஏதோ என்ர மனசில பட்டதைச் சொன்னனான்..”

 

“இதுக்குத்தான் உங்கள போல பெரியவங்க கூட இருக்கனும் என்று சொல்றது கனகண்ணை. நல்ல ஐடியா.. தாராளமாச் செய்யலாம்.  கவி இதையும் நோட் பண்ணிக் கொள்ளுங்கோ. சரி.. சாப்பாடும் வந்திட்டுது. எல்லோரும் ஆற முதல்ல சாப்பிடுங்கோ..”

 

வியாபாரத்தை விடுத்து பொதுவாகப் பேசிச் சிரித்தபடியே சாப்பிட்டு முடித்தவர்கள், சந்தோசமாகவே ஒருவரிடம் ஒருவர் விடைபெற்றுச் சென்றார்கள். 

 

மனோராஜ் இவ்வாறு அனைவரையும் அனுசரித்துப் போவதைப் பார்த்து பார்கவியின் மனதில் சிறு சுணக்கம் ஏற்பட்டது. அவனின் மேல் கொண்டிருக்கும் வெறுப்பு குறைய அவனின் நடவடிக்கைகளே காரணமாகி விடுமோ என்று பயந்தாள். என்னதான் அவன் நல்லவனாக இருந்தாலும் அவளின் வாழ்க்கையை அழித்ததை அவளால் மன்னிக்க முடியாது தானே.

 

கூடவே இருந்து பணிபுரியும் போது மனம் மாறுவாளா? இல்லை மேலும் வன்மம் வளர்ப்பாளா?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 14யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 14

செல்லம் – 14   அடுத்த நாள் தாமதமாகத்தான் விடிந்தது பார்கவிக்கு. ஏழு மணிக்கு எழுந்தவளுக்கு அப்போதுதான் தான் இருக்கும் இடம் நினைவுக்கு வர அவசரமாக எழுந்து காலைக்கடனை முடித்துத் தயாராகினாள்.   காலை எட்டு மணி எனவும் கவிதாவின் குரல்

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 3யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 3

செல்லம் – 03   மனோராஜைக் கண்டதும் வெறுப்பின் உச்சியிலும் கோபத்திலும் பார்கவியின் முகமே சிவந்து விட்டது. புது முதலாளியாக இவன் இருப்பான் என்று கனவிலும் இவள் நினைத்திருக்கவில்லை. அதிர்ச்சியை விட வெறுப்பே மண்டிக் கிடந்தது. வேலையாவது மண்ணாவது என்று எல்லாவற்றையும்

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 10யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 10

செல்லம் – 10   அன்றிரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டாள் பார்கவி. வரதர் ஐயா கூறிச் சென்றதும், அன்று மனோராஜ் கேட்டதுமே சிந்தையில் சுழன்று கொண்டிருந்தது. கதை வாசித்தோ, பாடல்கள் கேட்டோ, பேஸ்புக்கை நோண்டியோ எந்த வேலையிலும் மனம் ஈடுபட