Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 23

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 23

அத்தியாயம் – 23

 

“நீ உறுதியா சொல்றியா செம்பருத்தி” அவினாஷ் கூர்மைப் பார்வையுடன் கேட்டான். 

 

“இந்த கூல்ட்ரின்க்சை நான்தான் அபிராம் சாருக்கு வாங்கிட்டு வந்தேன்”

 

“அதெப்படி எங்ககிட்ட முன் அனுமதி பெறாம வாங்கிட்டு வரலாம்?” பாய்ந்தாள் காவ்யா. 

 

“இல்லம்மா முன் அனுமதி வாங்கியாச்சு” என்றார் சேச்சி. 

 

“எனக்கு அனுமதி வேண்டும் கடிதம் எதுவும் வந்ததா நினைவில்லையே. உங்களுக்கு வந்துச்சா அவி?” என்றாள். 

 

இல்லை என்று தலையசைத்து மறுத்தான் அவினாஷ். 

 

“நான்தான் அந்த பாட்டிலை எடுத்துட்டுப் போயி டாக்டர்கிட்ட காமிச்சு தரலாமா இதனால அவருக்கு கெடுதல் வராதேன்னு கேட்டுட்டு வந்தேன்” என்றார் சேச்சி.

 

“டாக்டர் இதில் கேஃபின் கன்டென்ட் அதிகமா இருக்குறதால வேண்டாம்னு சொல்லிருப்பாங்க. லிமிட்டா குடிக்கலாம்னு சொன்னதுக்கு அப்பறம்தான் நான் வாங்கிட்டு வர ஆரம்பிச்சேன்” என்றாள் செம்பருத்தி. 

 

“அவனோட ரெகுலர் செக் அப் போது வர்ற டாக்டருக்கு இது தெரியுமா?”

 

“சொல்லிருக்கோம். ஹெல்த் பைலில் சேர்க்காம தனிக் குறிப்பா உங்களுக்கு அனுப்புறேன்னு சொல்லிருக்கார். நான் செஞ்ச தப்பு இதைத் தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தெரிவிக்காததுதான்”

 

வேலை பிசியில் முக்கியம் என்று குறிப்பிட்டு வந்தது தவிர மற்ற கடிதங்களைப் படிக்க நேரமில்லை. தனிப்பட்ட மின்னஞ்சல்களை செக் செய்ய வேண்டும் என்று குறித்துக் கொண்டான் அவினாஷ். 

 

“நல்ல கதை. டாக்டர்கிட்ட அனுமதி வாங்கினங்களாம். ஆனால் அதை சீக்ரெட்டா பைல் பண்ணங்களாம். காதில் பூ வச்சுட்டு வர்றவங்க யாருகிட்டயாவது இந்தக் கதையெல்லாம் சொல்லு” ஏகப்பட்ட எகத்தாளம் காவ்யாவின் குரலில்.

 

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவினாஷிடம் “அபிராம் சாருக்குத் தன்னை எல்லாரும் அடக்கி வைக்கிறதாவும் அவங்களை எதிர்த்து ஏதாவது செய்யணும்னு ஒரே வேகம். அதனாலதான் இதை ரகசியமா விதிமீறலா செய்யுறதா அவருக்கு ஒரு சின்ன சந்தோஷத்தைத் தந்தோம். நாங்க செய்யாம இருந்திருந்தா வேற ஏதாவது ட்ரை பண்ணிருப்பார். எங்களுக்கு அது தெரியாமையே போயிருக்கும். அதனால அவருக்கு ஆபத்தில்லாத சில தப்புக்களைத் தெரிஞ்சே செய்யவிட்டோம். ஆனால் இது எங்களையும் மீறி நடந்த அசம்பாவிதம். எப்படின்னுதான் தெரியல”

 

“அதுதான் இப்ப பாயிண்ட். முதலில் அதுக்கு வா… எல்லாரையும் ஏமாத்திட்டு அபிக்கு ட்ரக்ஸ் கொடுத்திருக்க” கிளிப்பிள்ளையாய் திருப்பித் திருப்பி அதையே சொன்னாள். 

 

ஒரு நபரைப் பற்றி பொய்யான தகவலை  பத்து முறை திருப்பித் திருப்பி பல இடங்களில் சொன்னால் அது உண்மையாகி விடும் என்பது ஆன்லைன் பாடம். அதை இங்கு கடைபிடித்தாள் காவ்யா. 

 

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே என்பது செம்பருத்தி இத்தனை வருட வாழ்க்கையில் கற்ற வாழ்க்கை பாடம். அவளா இந்தப் பழிக்குக் கலங்குவாள்.  தனது பையில் இருந்த பாட்டில்களை எடுத்து வைத்தாள். “சில சமயம் நான் வாங்கிட்டு வந்த கூல்ட்ரின்க்ஸ மாத்தி  வேற கடைல வாங்கிட்டு வந்த கூல் ட்ரிங்க்ஸை  சேச்சி வச்சுடுவாங்க. சேச்சி நான் வாங்கிட்டு வந்த ஒரிஜினல் கூல் ட்ரிங்க்ஸ் பத்திரமா வச்சிருக்கீங்களா சேச்சி?”

“இருக்கு மோளே. நான் அவினாஷ்கிட்ட டெஸ்ட்டுக்குத் தந்துடுறேன்” என்றார். 

 

இவ்வளவு வேலை நடந்திருக்கிறதா… அவினாஷ் எண்ணிக் கொண்டிருந்த போதே “இந்த பீடி கூட அய்யா ஆசைப்பட்டு சில நேரம் கேட்பாருன்னு நான் வாங்கிட்டு வந்து தருவேன் சின்னய்யா” என்றவாறு பாலன் பீடிக்கட்டை எடுத்து வைத்தான். 

 

அபிராமுக்கு பீடி பழக்கம் வேறா? எங்கிருந்துதான் தேடித் தேடி கெட்டுப் போகிறானோ  என்றெண்ணிக் கொண்டு அதையும் எடுத்து வைத்தான். 

 

“எல்லாத்தையும் லாப் டெஸ்ட்டுக்கு அனுப்புறேன். அது வர்ற வரைக்கும் யாரும் இந்த வீட்டை விட்டுப் போகக் கூடாது” என்றான் அவினாஷ். 

 

***

 

நீங்க பிரச்சனையே இல்லாம லவ்வில் குதிச்சு நெக்ஸ்ட் நெக்ஸ்ட் ஸ்டெப்புக்கு போனா விதின்னு ஒரு பெயரில் உங்க லைஃப்ல விளையாடுற எனக்கு என்ன மரியாதை இருக்கு என்று விதி விளையாடியதின் பயனாக திருநெல்வேலியில் அடுத்த காட்சி அரங்கேறியது 

 

“காணாமப் போனது எங்க பொண்ணு. அவளைப் பத்தித் தெரிஞ்சுக்குற முழு ரைட்டும் எனக்கு இருக்கு. ஒழுங்கு மரியாதையா அவ எங்கிருக்கான்னு சொல்லல நான் போலிஸைக் கூப்பிட்டுட்டு வருவேன்” 

 

வக்கிலின் ஆபிஸின் நடுவில் தலைவிரி கோலமாய் காளியின் அவதாரம் போல நின்று கொண்டு கத்திக் கொண்டிருக்கும் அந்த வயதான பெண்மணியைப் பார்த்த வண்ணம் அலுவலகத்தில் நுழைந்தார் சுகுமாரன். 

 

அந்தக் காளியின் உக்கிரம் தாங்க முடியாமல் முகம் சுளித்த வண்ணம் அலுவலகத்திற்கு வந்த வேகத்தில் அனைவரும் கிளம்பி சென்றனர். என்னப்பா இது, சந்தைக் கடை மாதிரி… என்று வரவேற்பறையில் கேள்வி கேட்கவும் மறக்கவில்லை. அது அது தானே அந்த பெண்மணிக்கும் தேவை. அவமானப்படுத்தினால் தானே அவளுக்குத் தேவையான விவரங்கள் கிடைக்கும். 

 

சுகுமாரன் அலுவலக அறைக்குள் நுழைந்ததும் “வாங்க சார்? உங்களுக்கு வேண்டிய விவரத்தை இந்த பைலில் போட்டு வச்சிருக்கோம்” என்றான் உதவியாளன். 

 

“அதை விடு, யாருப்பா இந்தம்மா இந்தக் கத்து கத்துது?”

 

“இது ஒரு தலைவலி சார். தினமும் வந்து நின்னு கத்தி கூப்பாடு போடுது”

 

“உங்க வக்கில் சார்கிட்ட சொன்னிங்களா?”

 

“சார் கிட்ட ரெண்டு மூணு தரம் அந்தப் பொண்ணோட அட்ரெஸைக் கேட்டுச்சு. அவரு சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாரு. இப்ப அவரு இல்லாத நேரத்தில் ஆபிசுக்கே வந்து கத்த ஆரம்பிச்சிருச்சு”

 

“எந்த பொண்ணுய்யா?”

 

“அதுதான் சார் அந்த செம்பருத்தி. நீங்களும் சாரும் சேர்ந்து தேர்ந்தெடுத்து அனுப்பினிங்களே”

 

“ஓ… அவளா? ஏதாவது சொல்லி அந்தம்மாவை அனுப்பி விடுய்யா… “

 

“முடியல சார்.ஆபிஸை விட்டு அனுப்பிச்சா ரோட்டில் நின்னு கத்துறாங்க. போலீசுக்கு போகலாம்னா பொண்ணு அவங்க வீட்டுப் பொண்ணுன்னு சொல்றாங்க. இதனால நமக்கு ஏதாவது வில்லங்கம் வந்துட்டா?” பரிதாபமாய் சொன்னான்.

 

“அந்தம்மாவோட அட்ரஸ வாங்கிட்டு சீக்கிரம் விசாரிச்சு சொல்றோம்னு சொல்லி அனுப்புய்யா”

 

அட்ரெஸ்ஸைத் தந்துவிட்டு அத்தையம்மாள் “இன்னும் ரெண்டு நாளில் செம்பருத்தி இருக்குற இடத்தை சொல்லல நான் டிவிக்காரங்களைக் கூட்டிட்டு வந்துடுவேன் பாத்துக்கோ” என்று மிரட்டிவிட்டுப் போனாள்.

 

அவள் சென்றதும் காவ்யாவை அழைத்தார் சுகுமாரன் “அங்க எப்படிம்மா நிலைமை இருக்கு?”

 

“நான் எதிர்பார்த்தது நடக்கத் தாமதமாகுதுப்பா, ஆனால் நான் எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கும் போல இருக்கு?”

 

“நீ என்ன எதிர்பார்கல? எதை எதிர்பார்த்த?”

 

“அபிராமைக்  கவனிக்க எந்த விதத்திலும் அவனோட டேஸ்ட்டுக்கு ஒத்து வராத செம்பருத்தியை அனுப்பினேன். அவனோட இந்த தற்கொலை முயற்சியை நான் எதிர்பார்த்தேன். ஏன்னா அவன் அந்த அளவுக்கு அவனைத் தனிமைப் படுத்திக்கிட்டு மன அழுத்தத்தில் இருந்தான். ஆனா பட்டிக்காட்டு செம்பருத்தியோட இந்த ட்ரான்ஸபெர்மஷன் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அவினாஷ் இங்க ரூம் ரெடி பண்ணிட்டு இருக்கான். அவங்க அம்மா வருவாங்க போல இருக்கு. இதையும்  நான் எதிர்பாக்கல.”

 

“அவங்கம்மாவா???” திடுக்கிட்டார் சுகுமாரன். 

 

“அவங்க இங்க வந்ததே இல்லைல?”

 

“வந்திருக்காங்க. ஆனா மந்தாகினியோட  கோட்டை ஆனதுக்கு அப்பறம் பாகமங்கலம் குடும்பத்தில் இருந்து யாருமே வந்ததில்லை. இளைய ஜமீன் ஆனந்த் மட்டும் கணக்கு வழக்கு பாக்க வரும்போது கொச்சில ராயல் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிட்டு அப்படியே போயிடுவான்”

 

“அப்ப கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் அபிராமைப் பாத்துட்டு போக வருவாங்கன்னு நினைக்கிறேன். ஆனால் அபிராம் அவங்களை உள்ள நுழைய விடுவானா?” கிண்டலாய் சிரித்தாள் காவ்யா. 

 

“இருந்தாலும்… சரி நான் யோசிக்கிறேன்” என்றபடி அலைபேசியை வைத்த சுகுமாரனின் நெற்றியில் சிந்தனை முடிச்சுக்கள். 

 

நிறைய சொதப்புற காவ்யா. அகந்தைல மட்டும் மந்தாகினி மாதிரியே இருக்க. காரியம் செய்வதற்கு முன் என்னைக் கலந்து ஆலோசிக்க வேண்டாமா? ஆரம்பத்திலேயே திருத்தி இருப்பேனே. இப்போது காவ்யாவும் பட்டுத்தான் பாடம் கற்கவேண்டும் என்றெண்ணிக் கொண்டார். ஆனாலும் மகளாயிற்றே பாழும் மனது அவள் தவறு செய்தாலும் தண்டிக்கப் படக்கூடாது என்று வேண்டுகிறதே!

 

***

 

விமானத்திலிருந்து இறங்கியதும் கொச்சியின் கடற்காற்று உடலில் உரசியபோது  மங்கயற்கரசியின் உடல் சிலிர்த்தது. எதையோ உணர்ந்தவரைப் போல அவரது கைகளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார் நாகேந்திரன். 

 

“இப்ப கூட சொல்றேன். நீ அங்க போக வேண்டாம். ஊர் உலகம் என்ன வேணும்னா சொல்லட்டும். நீ மதியாதார் தலைவாசலை மிதிக்காதே. வேணும்னா நான் போயிட்டு வரேன்”

 

“இல்லங்க இது நீண்ட நாளா பெண்டிங்ல இருக்குற பிரச்சனை. தள்ளிப்போடப் போட பிரச்சனை அதிகமாகும். இந்த தடவை முடிச்சு வச்சுடலாம்”

 

“இருந்தாலும் அபிராம் உன்னை ஏதாவது சொல்லிட்டான்னா?”

 

“மன்னிச்சுடலாம்” என்று சிரித்த மனைவியின் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார். 

 

அவர்களின் பேச்சு புரியாமல் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்த ராதிகாவுக்கு அவர்களது அன்பு பிரமிக்க வைத்தது. 

 

“வாங்கம்மா, வாங்கப்பா” என்று அவர்களை ஏர்போர்ட்டில் வரவேற்று அழைத்துச் சென்ற அவினாஷும் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தான். 

 

“மிஸ்டர். அவினாஷ், அபி இப்ப எப்படி இருக்கார்?” தயங்கி தயங்கி கேட்டாள். 

 

“உடல்நிலை கவலைப்படுற மாதிரி இல்லை. ஆனால் அவன் மனசு… ஏகப்பட்ட சிக்கலா இருக்கு. அதைத் தான் எப்படி சரி பண்றதுன்னு தெரியல” பெருமூச்சு விட்டான். 

 

அதன்பின் ராதிகா படிக்கும் காலத்திற்கே சென்று விட்டாள். அந்த விளையாட்டுப் பயிற்சி பள்ளி கல்லூரிக் காலங்களில் கனவுக் கண்ணனான அபிராமைச் சுற்றி பலாப்பழத்தில் ஈ மொய்ப்பதைப் போலப் பெண்கள் கூட்டம் சுற்றும். 

 

அவள் புதிதாக சேர்ந்த போது அவளது தந்தை பாரஸ்ட் ஆபீசர் என்று தெரிந்ததும் அபிராம் அவளுக்கு ஒரு பட்டப் பெயர் வைத்தான். அவனது பணம், அழகு எல்லாம் அவளை ஈர்த்ததே தவிர காதலில் விழும் அளவிற்கு அதற்கு முக்கியத்துவம் தரவில்லை ராதிகா. 

 

 ஒரு வாலெண்டைன்ஸ் டே அன்று காலை அவளுக்கு ஒரு கார்ட் வந்தது

 

வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து 

யாருக்கும் சொல்லாமல் பெண் ஆனோதோ?

 

அதன் பெயர் ராதிகாவோ!

 

அப்போது அந்த வரிகளில் விழுந்தவள்தான். சில பல மாதங்கள் கழித்துத்தான் வானவில்லின் ஒரு துண்டான ராதிகா மட்டும் இல்லை மேலும் பல துண்டுகளும் அவனுக்குத் தெரியும் என்பது தெரிந்து மனதில் வலியோடு விலகினாள். 

 

“என்னை விட்டு விலக நினைச்ச முதல் பொண்ணு நீதான் ராதிகா.எப்போதும் உனக்கு என் வாழ்க்கையில் ஸ்பெஷல் இடம் உண்டு. என்னை பாக்கணும்னா கொச்சில எப்ப வேணும்னாலும் என் வீட்டுக்கு வா… நானா விருப்பப்பட்டு  வீட்டு அட்ரஸ் கொடுக்குற முதல் பொண்ணு நீதான்”

 

“ஒரே பொண்ணு நீதான்னு உங்களால சொல்ல முடியலைன்னா எனக்கு இந்த விலாசம் தேவை இருக்காது அபிராம்” என்று சொல்லி விலாசத்தை வைத்துவிட்டு ஒரேடியாக விலகி வந்துவிட்டாள். 

 

இல்லை வந்து விட்டதாக நினைத்தாள். ஆனால் காதலன் என்றோ கணவன் என்றோ வேறு யாரையும் நினைக்க முடியாமல் தவித்தது வஞ்சி மனது. 

 

கல்யாணம், குழந்தை குட்டி என்று வற்புறுத்தும் பெற்றோர்களிடமிருந்து விலகி எங்கெங்கோ தொடர்கிறது அவளது வாழ்க்கை. வாலண்டியரிங் அது இதுவென்று தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொண்டு இந்த உலக வாழ்க்கையிலிருந்து தப்பிக்க நினைக்கிறாள். 

 

இரவு ஆரம்பித்த அந்த நேரத்தில் லங்கையில் இருக்கும் அந்த வீட்டினுள் நுழைந்தபோது அவளை வரவேற்றாள் ஒரு அழகிய பெண். மாநிறம்தான் ஆனால் அவளது செய்கைகளில் ஒரு கம்பீரம், அழகு. 

 

“வாங்க மேடம்… வாங்க மிஸ். ராதிகா பயணம் சுகமா இருந்ததா?”

 

“செம்பருத்தி… எப்படிம்மா இருக்க“ என்று அழைத்த மங்கையற்கரசி சற்று குள்ளம் என்று கூட சொல்லலாம். நிறம் கூட அதிகமில்லை. ஆனால் பார்வையில் அப்படி ஒரு தீர்க்கம். அவினாஷுக்கு இவரிடமிருந்து தான் இந்தப் பார்வை கிடைத்திருக்கும் போலும். 

 

“நல்லா இருக்கேன் மேடம்” என்றாள். 

 

“அம்மா… நல்லாருக்கிங்களா” ஒரு ஓரத்தில் நின்று லீலம்மா கேட்க, 

 

“அய்யா சுகமா? உங்க பெட்டி படுக்கை எல்லாம் எடுத்து வைக்கிறேன்மா… “ என்று பாய்ந்து ஓடினார் லவங்கம். 

 

அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாக இருந்தது அந்த கொச்சு வீடு. 

 

“சாப்பாடு தயார்மா… “

 

“வேண்டாம் லீலா, நம்ம விடுதியில் அவினாஷ் டின்னர் ஏற்பாடு செஞ்சிருந்தான். சாப்பிட்டுட்டேன். ராதிகாதான் சரியா சாப்பிடல, சாப்பாடு தா… ராதிகா, ராதிகா எங்க?”

 

“அந்தப் பொண்ணு அபிராம் ஐயாவைப் பாக்கணும்னு சொன்னதால செம்பருத்தி கூட்டிட்டு போயிருக்காங்கம்மா”

 

“அபிராம் எங்க?”

 

“தூங்குறார்மா”

 

“அவனுக்கு ரெஸ்ட் வேணும்மா”

 

“ம்ம்… “

 

மெதுவாக அபிராமின் அறைக்குள் சென்றவருக்கு அவன் நைந்த துணியாக படுக்கையில் இருப்பதைக் கண்டு மனது வலித்தது. 

 

“நம்மை திட்டுறதுக்காவது அபி சீக்கிரம் குணமாகனும் அவி” என்றார். 

“நீங்க ரெஸ்ட் எடுங்கம்மா… நாங்க எல்லாரும் ஷிப்ட் போட்டு அவனைப் பாத்துக்குறோம்” என்றான். 

 

“ம்ம்… “ என்று அறைக்குள் சென்றார் மங்கையற்கரசி. காரிடாரில் தொங்கிய மந்தாகினியின் ஆளுயரப் படத்தை ஒரு சில வினாடிகள் நின்று ரசித்தார். 

 

“அம்மா… “ என்றபடி வந்தார் லீலம்மா.

 

“மந்தாகினி நல்ல அழகு இல்லையா லீலா”

 

“ஆமாம்மா பாம்பு மாதிரி”

 

“அப்படியெல்லாம் பேசக்கூடாது. இது அவங்க வீடு. உங்களை பாக்க அனுப்புச்சதே அவங்களை கவனிச்சுக்கத்தான் லீலா” 

 

“பாம்புக்குத்தான்  வீடு கட்டத் தெரியாதே. கரையான் கஷ்டப்பட்டுக் கட்டின புத்தில் போயி ஜாலியா உக்காந்து என்ஜாய் பண்ணும். விரட்ட வர்றவங்களைக் கொத்தும். எப்படி பாத்தாலும் நான் சொன்னது கரெக்ட்டுதான்மா” என்றார். 

 

“இந்த மாதிரி பேசாதே லீலா… கட்டினது வேற ஆளா இருந்தாலும் இப்ப யாரு இருக்காங்களோ அவங்களுக்குத்தான் சட்டப்படி சொந்தம்”

 

“சட்டத்தை வச்சு விளையாடிட்டே இருக்கவங்களுக்கு நியாயம் தர்மம்னு ஒன்னு இருக்குறது தெரியுமா?” 

 

“பேசாம போயி தூங்கு. நானும் தூங்குறேன்”

 

“இந்தங்கம்மா… “ கையில் ஒரு பாட்டில் தண்ணீரைத் தந்தார். 

 

“இந்த வீட்டில் பச்சைத் தண்ணி கூடக் குடிக்க மாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். இது கடைல வாங்கி வச்சிருக்கேன். இந்தப் பைலை பிஸ்கெட், பழம் இருக்கு. சாப்பிடுங்க”

 

லீலம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்ட  மங்கையற்கரசி “லீலா… தாங்க்ஸ் நீ செஞ்ச எல்லாத்துக்கும்” என்றார்

 

அவரும் சொன்னார் “தாங்க்ஸ்மா… நீங்க எனக்குத் தந்த அடையாளத்துக்கு” என்றார். 

 

இருட்டு பிரியாத அதிகாலை நேரத்தில் அபிராமின் அறைக்கு வந்து மங்கையற்கரசி பார்த்தபொழுது ஏற்கனவே அங்கு ராதிகா நின்று கொண்டிருப்பதைக் கண்டார். 

 

“நீ என்னம்மா இங்க… “

“தூக்கம் வரல மேடம்.. இங்க வந்தேன். பெட் ஈரமாகி இருக்கு. அபி ட்ரெஸ் எல்லாம் நனைஞ்சிருக்கு”

 

வந்து தொட்டு பார்த்தார். வளர்ந்த குழந்தையாக இருந்தான். 

 

“இங்க இருந்த நர்ஸ் எங்க?” 

 

“ஷிப்ட் முடிஞ்சிருச்சுன்னு இப்பத்தான் கிளம்பி போனாங்க. செம்பருத்தி அடுத்த ஷிப்ட் நர்ஸ காண்டாக்ட் பண்ண போயிருக்காங்க. அவினாஷ் மிட் நைட்டுக்கு மேலதான் தூங்கப் போனார்”

 

அபிராம் ஈரத்தின் அசௌகரியத்தில் சற்று நெளிய, 

 

“அவர் கஷ்டப்படுறார் மேடம். நம்மளே மாத்திடலாம். ஒருத்தர் அவரைத் திருப்பிப் பிடிச்சுக்கலாம் இன்னொருத்தர் அடியில் துடைச்சுட்டு வேற உடை போட்டு விட்டுரலாம். நல்லா தூங்குறார்”

அவர் சம்மதம் சொல்வதற்குள் அவனை சாய்த்துப் பிடிக்க ஆரம்பித்து இருந்தாள். மங்கயற்கரசியும் அந்த படுக்கையை எடுத்துவிட்டு காய்ந்த துணியால் துடைக்கப் போக, 

லீலாம்மாவும் சரியாக அங்கு வந்துவிட, அதிர்ச்சியுடன் “அம்மா நீங்களா? நாங்க பாத்துக்குறோம்மா” என்று துணியினை வாங்கிக் கொண்டார். 

 

“லீலா நாம செய்யலாம். ஆனால் ராதிகா வேண்டாம். வயசுப்பொண்ணு”

 

“அபிராமைப் பொறுத்தவரை நானும் செய்யலாம் மேடம்” என்ற ராதிகாவின் பேச்சு அவர்களுக்கு எதையோ உணர்த்த பேசாமல் அவனுக்கு வேண்டியதை செய்ய ஆரம்பித்தனர். 

 

அவனது பின்புறத்தைப் பார்த்த ராதிகா திடுக்கிட்டுப் போனாள். கணுக்காலில் இருந்து பின்புறம் வரை ஒரு கோடாக நீளமாக ஒரு இன்ச் அகலத்தில் பெயர்த்து  எடுத்ததைப் போல கிழித்த தடம். 

 

“ஐயோ இது என்னது?” பதறினாள். 

 

“பைக் ஆக்சிடெண்ட்… காப்பாத்துனதே பெரிய விஷயம்”

 

“அப்ப… “ 

 

“நடப்பார். பழையபடி மாரத்தான் எல்லாம் ஓட முடியாது” பதிலளித்தார் சேச்சி. 

 

“நாங்களும் எவ்வளவோ முன்னேற்பாடு செய்யுறோம். ஆனால் அவனோட மனசு எதைத் தேடுதுன்னே தெரியல” என்றார் மங்கை. 

 

பொழுது விடிந்து சூரியன் நன்றாக வெளிச்சத்தை வாரி வழங்கிய நேரம், கண்களைக் கஷ்டப்பட்டு விழித்த அபிராமின் முன்னே ஒரு உருவம். அது அவனது காயம்பட்ட காலில் இருந்த தடத்தை வருடிக் கொண்டிருந்தது. 

 

அபிராம் மெலிதான குரலில் சொன்னான் “ஜங்லி ராணி”

 

அந்தக் குரலைக் கேட்டதும் பெரிதாக விரிந்தன ராதிகாவின் கண்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37

அத்தியாயம் – 37   அபிராம் வளர்ந்தான். அவன் வளர வளர நாகேந்திரனுக்கும் மந்தாகினிக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது.    அதற்குக் காரணம் மங்கை என்று மந்தாகினி சொன்னாலும் மந்தாகினியின் ஆசை என்று அடித்து சொல்வார் நாகேந்திரன்.    சிலரை

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 19தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 19

அத்தியாயம் – 19 மாலை நேரக் கல்லூரியில் செம்பருத்தியுடன் பயிலும் ஜோஸி அவளிடம் ரகசியமாய் கேட்டாள். “உண்மையை சொல்லு அந்த குக் ராஜாவோட கீப் தானே?” மேனேஜர் – டைப்பிஸ்ட், எம்டி – செக்ரெட்டரி, டாக்டர்-நர்ஸ், எஜமானன்-வேலைக்காரி  என்று வரும் செய்திகளைப் 

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 20தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 20

அத்தியாயம் – 20   ‘ஐ’ என்றால் அது காந்தம் என்றால், அந்த ‘ஐ’களின் ‘ஐ’ இவன்தானா?  ‘ஐ’ என்றால் அது அன்பு என்றால், அந்த ‘ஐ’களின் ‘ஐ’ இவன்தானா?    அவினாஷ் வந்துவிட்டான், அவள் கண் முன் நின்றுவிட்டான் என்பதை