இரவும் நிலவும் – 7
நவநீதன், சுபிக்ஷா திருமணம் நடக்க வேண்டும் என்று அதிக முனைப்போடு செயல்பட்டது அகல்யா என்றால், ஏதாவது வழி கிடைக்காதா இந்த திருமண பேச்சிற்கு தடை சொல்வதற்கு எனத் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தவன் வருணே!
அவனுக்கு ஏனோ நவநீதனை சந்தித்துப் பேச மனம் வரவில்லை. அவன் தான் ஏற்கனவே சுபியிடம் வேண்டாம் என்று சொல்லி விட்டதாக அவள் சொன்னாளே! இப்படி இவள் பிடிவாதம் பிடிப்பதற்கு அவனை நொந்து என்ன பயன்?
ஏதோ பெரியவர்களுக்குள் பேச்சு வார்த்தை சுமூகமாக இல்லாவிட்டால் பரவாயில்லை என்று நினைத்தால், இன்றைய பெண் பார்க்கும் வைபவத்தில் இந்த அகல்யா அத்தனை ஆர்வத்தோடு வளைய வருவதும், சுபியின் பின்னால் அண்ணி அண்ணி என்று சுத்துவதும் அவனுக்கு அத்தனை எரிச்சலாக இருந்தது.
பொண்ணு பார்க்கத்தானே வந்திருக்காங்க. நானே ஆட்டத்தை கலைக்கலாம்ன்னு பார்த்தா… இவ வேற… நிஜமாலுமே அரை வேக்காடு தான் போல… கொஞ்சமாச்சும் வயசு பொண்ணா அடக்கமா, அமைதியா இருக்காளா… டையனோசரோட கை, கால் முளைச்ச குரங்கு குட்டி மாதிரி ஆடிக்கிட்டே இருக்கா என்று கடுப்பாக நினைத்துக் கொண்டிருந்தான்.
உண்மையில் அவன் பேச்சு தங்கையிடம் எடுபடவில்லை. பெற்றவர்கள் இவன் சொல்லும் காரணங்களை பெரிது படுத்தவில்லை. நவநீதனைப் பற்றி விசாரித்த வரை அவர்களுக்கு வெகு திருப்தி. குடும்பமும் நல்ல மாதிரி இருக்க… தானாகத் தேடி வந்த நல்ல சம்பந்தம் என்பதிலேயே அவர்கள் திருப்திப் பட்டுப்போயினர். ஆக இவன் பேச்சை யாரும் மதிக்கவில்லை என்பதிலேயே கடுப்பாக இருந்தவன், இப்பொழுது இவன் எண்ணத்திற்கு முற்றிலும் எதிரான ஒருத்தியைக் கண்டதும் தன்போல மொத்த கோபமும் அவளின் மேல் திரும்பிற்று.
நவநீதன் அவளிடம் மட்டுமே சற்று இணக்கமாக இருப்பதும் புரிந்துவிட, அவளைத் தனிமையில் பிடித்ததும், “ஏய் இங்க வா…” என்றான் ஏக வசனத்தில்.
அவளின் முகம் கடுத்துப் போனது. இருந்தாலும் அழைப்பது தன் வருங்கால அண்ணியின் உடன் பிறந்தவன் ஆயிற்றே என்ற மரியாதைக்கு அமைதியாக அவன் அருகே செல்ல, “இங்க பாரு… உன் பேச்சுக்கு உங்க வீட்டுல கொஞ்சம் மதிப்பிருக்கும் போல தெரியுது. எனக்கு ஒரு உதவி தேவை… உன்னால முடியும்ன்னு தோணுது…” என பீடிகை போட்டான்.
உதவி கேட்க யாரும் இப்படி அலட்டலாக அழைப்பார்களா? அகல்யா ஆராயும் பார்வையுடன் அவனை அளந்தாள்.
“லுக்… என் வீட்டுல யாருக்கும் இதைப் புரிய வைக்கவே முடியலை. பிளீஸ் நீயாச்சும் புரிஞ்சுக்க. எனக்கென்னவோ உங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிட்டா சுபி கஷ்டப்படுவான்னு தோணுது. என்னவோ எனக்கு சரியா படலை. அவர் பாரு எவ்வளவு மூடி டைப்ன்னு. வந்ததிலிருந்து என்கிட்ட ஒருவார்த்தை கூட பேசலை. என்கிட்ட மட்டுமில்லை உன்னைத்தவிர உங்க அம்மா, அப்பாகிட்ட கூட பேசி நான் பார்க்கலை. எனக்கு என்னன்னு சொல்ல தெரியலை. ஆனா என் உள்ளுணர்வு இது சரி வராதுன்னு சொல்லுது. பிளீஸ் உன் அண்ணனுக்காக பார்க்காம… கொஞ்சம் சுபியை பத்தியும் யோசி… இந்த கல்யாணத்தை நிறுத்தணும். உன்னால எதுவும் செய்ய முடியுமா?” என்று சற்றே உருகிய குரலில் யாசிப்பாக கேட்பவனைப் பார்க்கையில், அவன் கேட்பதை செய்து விட்டால் தான் என்ன என்று ஒரு நொடி அவளுக்கே தோன்றிவிட திடுக்கிட்டுப் போனாள்.
அண்ணன் திருமணத்திற்குச் சம்மதித்து இத்தனை தூரம் வந்தது எவ்வளவு பெரிய விஷயம்? இப்பொழுது போய் பின்வாங்குவதா? அதுவும் அண்ணன் என்ன குடிகாரனா? கெட்டவனா? அவனிடம் ஏதோ சிறு குறை… அதுவும் தனியாகவே இருப்பதால்… இனி அண்ணி வந்தால் சரியாகி விடாதா? அவனுக்கும் ஒரு குடும்பம் என்று அமைந்தால், அவன் தனிமை தனிமை என்று தன்னை சுருக்கிக்கொள்வதும், அடிக்கடி ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வதும், ஓவர் பொசசிவ்வாக இருப்பதும் மாறி விடாதா?
எதிரில் இருப்பவன் கலங்குவதும் வருத்தம் தர, “இல்லை நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை அண்ணா அண்ணியை நல்லா வெச்சுப்பாங்க. ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க. நீங்க கவலையே பட வேண்டாம்” என அவனுக்கு நம்பிக்கை ஊட்டினாள்.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஆயிற்று அவளின் பதில். “உனக்கெல்லாம் சொன்னா புரியாதா? யார்கிட்டயும் எதுவும் கேட்டு நின்னு எனக்கு பழக்கமே இல்லை. என் தங்கச்சிக்காக உன்கிட்ட கேட்டு நிக்கிறேன். நீ இப்படி சொல்லற?” குரலே உயராமல் அவன் உருமலாகப் பேச, அவள் திடுக்கிட்டுப் போனாள்.
இதுவரை யாரும் அவளிடம் கோபமாகவோ அதட்டியோ பேசியதே இல்லை. மேற்கொண்டு அங்கேயே நின்று பேசினால் ஏதாவது ரசாபாசம் ஆகிவிடும் என்று தோன்றியபோதும், என்ன சொல்லி அங்கிருந்து விலக என்று புரியாமல் பரிதவித்தாள்.
அதற்கும் வருண் அதட்டினான். “சும்மா நடிக்காத… ஏழு கழுதை வயசாயிடுச்சு. இன்னும் பச்சைப் பிள்ளை மாதிரி லுக்கு. உன் வீட்டுல முதல்ல உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க வேண்டியது தானே… உன் அண்ணனுக்கே தான் பண்ணனுமா? அதுசரி உன்னை மாதிரி அரை வேக்காட்டை எவன் கட்டிக்குவான்?
உங்க அண்ணனுக்கு பொண்ணு கொடுக்க ஒரு இழுச்சவாயி குடும்பம் கிடைச்ச மாதிரி உனக்கும் மாப்பிள்ளையா வர ஒரு மாங்காய் மடையன் வேணுமே…” ஏதோ வெளியில் கொட்ட முடியாத ஆதங்கமும், ஆத்திரமும் அன்றுதான் பார்த்த ஒரு பெண் என்ற எண்ணம் இல்லாமல், அவள் மனதை நோகடிக்கிறோம் என்றும் இல்லாமல் அவளை வருத்த பேசிக்கொண்டிருந்தான்.
அகல்யாவின் முகம் ரத்த பசையற்று வெளிறிப் போயிற்று. திருப்பி அடிக்க சக்தி இல்லாதவர்களை நோகடிப்பது ஒன்றும் புதிதல்லவே! என்ன அவளுக்கு அவ்வித வலிகளை அனுபவித்து பழக்கம் வேறு இல்லை. அடிபட்ட சிறு கன்றாய் துடித்தவள், தன் வேதனையைக் காட்டப் பிடிக்காமல் தலையை குனிந்தவாறே அமைதியாய் விலகிப் போனாள்.
வருணுக்கு இப்பொழுதுதான் தான் வீசிய வார்த்தைகளின் வீரியம் உரைத்தது. சிறு பெண் அவளிடம் போய்… தன் நெற்றியில் அறைந்து கொண்டான். கூடக்கூடச் சண்டை போடக் கூட தோன்றாமல், தலை கவிழ்ந்து அவள் சென்ற தோற்றம் வேறு நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்தது.
அமைதியாகச் செல்பவளின் பின்னேயே அவனது பார்வை தொடர்ந்தது. வாஷ் ரூம் சென்றுவிட்டு வெகுநேரம் கழித்து வெளியே வந்தவளின் முகத்தில் பொலிவே இல்லை. அத்தனை நேரமும் முகம் கொள்ளாமல் இருந்த புன்னகையும் இல்லை. அழுதிருப்பாள் போல! அழுது வீங்கிய விழிகளை யாருக்கும் காட்ட விருப்பமில்லாமல் தரையிலேயே அவளது பார்வை பதிந்திருந்தது.
அவளின் தோற்றம் அவனை வெகுவாக அசைத்துப் பார்த்தது. தான் பேசியது மிகவும் அதிகப்படி என காலதாமதமாக உணர்ந்து வருந்தினான். என்னவோ எல்லாமே கையை மீறி போவது போல உணர்ந்தவனுக்கு இனி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று புரிந்து போயிற்று!
பெண் பார்க்கும் படலம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நடந்து முடிந்து விட்டது. சுபிக்ஷாவிற்கு பெரும் படபடப்பு தான்! அன்று ஏதோ ஒரு உந்துதலில் நவீநீதனிடம் அப்படி பேசிவிட்டு வந்துவிட்டாள். ஆனால், இப்பொழுது அவனை எதிர்கொள்ளத் துணிவே இல்லை. கூடவே, வேறு வழியில்லாமல் தான் இந்த திருமணத்திற்குச் சம்மதித்தானா என்ற கலக்கம் வேறு அவளை ஒருபக்கம் அரித்துக் கொண்டிருந்தது.
கலக்கம் தீர்க்க வேண்டியவன் நவநீதன் தானே!
நிச்சயதார்த்தம் எளிமையாக வைத்துக் கொள்வதாகப் பெரியவர்களால் பேசி முடிவெடுக்கப்பட்டிருக்க, திருமணமும் இன்னும் மூன்று மாதங்களில் என்று ஏற்பாடாகியிருந்தது.
ஆனால், அவனிடம் பேசவே தைரியமற்றவளாய் சுபிக்ஷா இருந்தாள். நவநீதனும் பெரிதாக எந்தவித முயற்சியையும் முன்னெடுக்கவில்லை. அது அவனது இயல்பு தான்… ஆனால், நேசம் கொண்ட மனமும், அவன் கட்டாயத்தில் தான் சம்மதித்தானா என்று அச்சம் கொண்ட மனமும் ஆறுதலுக்காக அவனது ஈடுபாட்டைச் சற்று எதிர்பார்த்தது.
நிச்சயதார்த்தம், திருமணத்திற்கான உடை தேர்வுகள், நகை தேர்வுகள், அழைப்பிதழ் தேர்வு என ஒன்று கூட பல வாய்ப்புகள் இருந்தபோதிலும், நவநீதன் நிச்சயதார்த்தத்திற்கு வந்ததோடு சரி… அதன்பிறகு, இவளது திருமண உடைகள் அனைத்தும் தேர்வானதும் கடைக்கு வந்தவன், அவளது உடைகளுக்குத் தக்க அவனுக்கான உடைகளை அவனுடைய அசிஸ்டண்ட் வினோதனுடன் சேர்ந்து தேர்ந்தெடுத்து விட்டு, அந்த வேலை முடிந்ததும் கிளம்பியும் விட்டான்.
உண்மையில் அவனால் அவனது பெற்றோரோடு இருக்க முடியாது. ஆக, அவர்களைத் தவிர்த்தவனுக்கு இது சுபிக்ஷாவையும் தவிர்ப்பது போல என்று அந்த நேரத்தில் உரைக்கவில்லை.
அவனது செய்கைகளால் மனம் வாடி நின்றதென்னவோ மணப்பெண் தான்!
இவளின் வருத்தம் வருணுக்கும் புரிய, நான் சொன்னா யாரு கேட்கிறாங்க என்று பெருமூச்சோடு இருந்து விட்டான். சரி சமாதானமாக ஏதாவது பேசலாம் என்று பார்த்தால் கூட, சுபிக்ஷாவின் வாடி வதங்கிய முகம் மற்றவர்கள் இருக்கிறார்களே என்ற எண்ணத்தில் சீக்கிரம் பழைய தோற்றத்திற்கு வந்து விடுகிறது. இவளுக்கு இப்படி தன் மனதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன என்று எரிச்சலாகக் கூட வந்தது. என்ன காதலோ என்று கடுப்பாக எண்ணிக் கொள்வான்.
பாரு நான் சொன்னேன் தானே? என்ற அலட்சிய பார்வையை அகல்யா மீது வீசத் தோன்றும் தான்! இருந்தும் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொள்வான். அவளும் இப்பொழுதெல்லாம் இருக்குமிடமே தெரிவதில்லை. அப்படியொரு சாந்தமாக மாறி விட்டாள்.
“ஏன் அமைதியாவே இருக்க?” என சுபிக்ஷா விசாரித்துப் பார்த்தாள். பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பினாள்.
அவர்களின் அன்னை பிரேமா கூட, “பொண்ணு பார்க்க வந்தபோது துருதுருன்னு இருந்தியே மா? இப்ப என்ன மௌன விரதம் எதுவும் இருக்கியா?” என பாசமாகக் கன்னம் வருடிக் கேட்டு பார்த்தார்.
“அதெல்லாம் இல்லை ஆன்ட்டி…” எனப் பொலிவே இல்லாமல் புன்னகைத்தவளைப் பார்க்க, அவனுக்கு இன்னும் தான் எரிச்சல் கூடியது.
நான் திட்டி ரெண்டு மாசம் இருக்கும். இன்னும் இவளுக்கு வருத்தமா இருக்குதாக்கும் என வருண் கடுப்பாக நினைத்துக் கொண்டாலும் வெளியில் எதையும் காட்டிக்கொள்வதில்லை. எத்தனை மாதங்கள் ஆன போதும் வீரியமிக்க வார்த்தைகள் அமிலம் ஊற்றிய காயங்களைப் போலத்தானே! அதன் தடயம் என்றேனும் மறையக்கூடுமா?
வருணின் வார்த்தைகள் அவளுக்குக் கொடுத்த வலி ஏராளம்! அதிலிருந்து அவளால் என்ன முயன்றும் மீளவே முடியவில்லை. இத்தனை நாட்களும் சிறு பிள்ளையாய் வளைய வந்தவளுக்கு, அப்படி இருப்பதே பிழை போல என்ற எண்ணத்தை விதைத்து விட்டான் அவன்.
அப்பொழுதிலிருந்து அவளது பேச்சு வெகுவாக குறைந்து விட்டது. அவளுடைய துள்ளலும் புன்னகையும் கூட! பெற்றவர்கள் கூட, அவளின் மாற்றம் பார்த்து, “அண்ணனுக்கு கல்யாணம்ன்னு வந்ததும் தங்கச்சியும் பெரிய மனுஷி மாதிரி ஆயிட்டாளே” என்றவாறு கருத்துச் சொல்லியிருக்க, ஆக நாம் ஆள் மட்டும் தான் வளர்ந்திருக்கிறோம்; செய்கையில் முன்னேற்றமே காட்டாமல் இருக்கிறோம் போல… என எண்ணிக் கொண்டவள், தனது நடவடிக்கைகளை அப்படியே தொடர்ந்தாள்.
தாலி வாங்க சென்றபோது நவநீதன் வரவே இல்லை. இந்தமுறை சுபிக்ஷா முகம் வாடியதும் அகல்யாவை வருண் தீயாய் முறைத்தான். இதுதான் உங்க அண்ணன் என் தங்கச்சியை சந்தோஷமா பார்த்துக்கிற லட்சணம் என அவளைப் பார்வையாலே குற்றம் சாட்டினான்.
அம்மா, அப்பா வராமல் இருந்தால் முறையாக இருக்காது. பல கேள்விகள் வரும். அண்ணன் வரவில்லை என்றால் சமாளித்துக் கொள்ளலாம் என்றுதான் அகல்யா நினைத்தாள். ஏனென்றால், அண்ணனுக்குப் பெற்றவர்களோடு இருப்பது பிடிக்காதே! ஆக அவன் வரவே மாட்டான்… அதனால் அவனுடைய பெயிண்டிங் எக்ஷிபிஷன் இருப்பதைச் சாக்காக ஒவ்வொரு முறையும் சொல்லிச் சமாளித்து வருகிறாள். ஆனால், முறைத்து நிற்பவனிடம் உண்மை காரணத்தையும் விளக்க முடியாது. இந்த காரணத்தையும் சொல்லிச் சமாளிக்க முடியாது என இயலாமையாக நினைத்தாள்.
இப்பொழுது அவளுக்கும் அந்த அச்சம் வந்துவிட்டது. அண்ணனும், அண்ணியும் நல்லபடியாக வாழ வேண்டுமே என்று! அகல்யா சூழலைச் சமாளிக்க முடியாமல் வெகுவாக கலங்கிப் போனாள்.
Nice