அத்தியாயம் – 21
அன்றைய பொழுதினை அப்படியே முடிவில்லாமல் நீட்டித்துக் கொண்டே போக மாட்டோமா என்றிருந்தது அங்கிருந்த ஒரு ஜோடிக்கு. யார் கண் பட்டதோ அந்த சூழ்நிலை ஒன்றிரண்டு மணி நேரத்தில் அப்படியே உல்ட்டாவானது. அதன் தொடக்கமான முதல் நிகழ்ச்சியும் அப்போதே உருவானது.
‘ஐயோ அவினாஷைப் பிரிஞ்சு கிளம்பணுமே’ என்று செம்பருத்தியும்
‘ஏன் இவள் கிளம்பணும்னு சொன்னா மனசு வலிக்கிறாப்புல இருக்கு? இந்த உணர்வுக்குப் பேரு என்ன?’ என்று குழப்பத்தில் அவினாஷும்
இவனுங்களுக்கு எல்லாம் சொன்னாப் புரியாது. 90ஸ் கிட்ஸ்கு வாழ்க்கை தரணும்னா நானே ஏதாவது அதிசயத்தை நிகழ்த்தினாத்தான் உண்டு என்று கடவுளும் நினைத்ததால்
‘டக் டக்’ என்று குதிரையின் குழம்படி ஒலித்தது.
இது அவளோட நடை இல்ல. அவினாஷ் கூடவே எப்போதும் இருப்பாளா? என்று செம்பருத்தி எரிச்சல் உணர்வோடு நிமிர்ந்து பார்க்க, அவளை விட பன்மடங்கு முகம் முழுவதும் மிளகாயைத் தடவி விட்டது போன்ற எரிச்சலுடன் அவினாஷ் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின்னால் இருந்த வாசல் வழியாக அவர்களை நோக்கி வந்தாள் காவ்யா.
“இதுதான் நீங்க சொன்ன முக்கியமான வேலையா அவினாஷ்” என்றாள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.
“எஸ்.., காவ்யா”
“எது, அவ்வளவு முக்கியமான மீட்டிங்கை மிஸ் பண்ணிட்டு இந்தக் கூலி…க்… வொர்கர்ஸ் கூட பார்ட்டி பண்ணிட்டு இருக்குறது பொறுப்பில்லாத்தனமா தோணலையா?” காவ்யா இவ்வளவு கடுமையாக அவினாஷிடம் பேசியதில்லை. ஆனால் அவன் எதிரே அமர்ந்திருந்த பெண் அவளது உள்ளத்தை ஆட்டுவித்து அப்படிப் பேசத் தூண்டினாள்.
எப்படி? இது எப்படி சாத்தியம்? தேடித் தேடி கொஞ்சம் மக்காகவும், அழகு குறைவாகவும் இருக்கும் பெண்ணைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால். இந்தக் காக்கா மயிலாக மாறி நிற்கிறதே!
“தோணலை காவ்யா” நிதானமாக அழுத்தி சொன்னான் அவினாஷ்.
“இங்கிருக்குற ஒவ்வொருத்தரும் எனக்கு அவ்வளவு முக்கியமானவங்க. அவங்க கூட சில மணி நேரமாவது ஸ்பென்ட் பண்றது அவங்க அன்புக்கு நான் செலுத்தும் பதில் மரியாதை. என்னோட பொறுப்புகளில் அதுவும் ஒண்ணு. என்ன இதை வரவு செலவு கணக்கில் நீயோ உங்க அப்பாவோ எழுத முடியாது.”
அவனிடம் பதில் பேசமுடியாத கையாலாகாத்தனத்தை அங்கிருந்தவர்களிடம் காண்பித்தாள்.
“நீங்க எல்லாரும் இங்க பொறுப்பில்லாம கூத்தடிச்சுட்டு இருந்தால் அபிராமை யார் பாத்துப்பாங்க?”
“அய்யாதான் எங்களைப் போயிட்டு வர சொன்னார்” என்றாள் ஓவியா.
“உங்கய்யா ஆயிரம் சொல்லுவார். ஏற்கனவே ஒரு தடவை கையைக் கிழிச்சு சூசைட் அட்டெம்ப்ட் அதிலிருந்து நாங்க காப்பாத்தி கவுன்சிலிங் கொடுத்து தேத்தி இருக்கோம். யாரும் கவனிக்கலைன்னா போதையைத் தேடுவாறு உங்கய்யா. பொண்ணு யாராவது கிடைச்சா அவ கூட மஜா. அதுனாலதான் ஊரெல்லாம் தேடி அசிங்கமா ஒரு பொண்ணை வேலைக்கு அனுப்பிச்சது…” அதற்கு மேல் அவள் தொடர முடியாதபடி
“ஸ்டாப் இட் காவ்யா… இது என்னோட விருந்து. என் விருந்தினர்களை நீ அவமதிக்கிறதை நான் பொறுத்துட்டு இருக்க முடியாது” என்றான் கடுமையான குரலில்.
“என்னோட பொறுப்பை அவமரியாதையா நினைக்கிறிங்க அவினாஷ். கூடிய விரைவில் அதுக்கான பலனை பார்ப்பிங்க. அபிராமை இவங்க இப்படி விட்டுட்டு வந்திருக்கக் கூடாது”
சச்சரவை மேலும் வளர்க்க விரும்பாமல் “நாங்களும் இப்ப கிளம்பிட்டோம்மா… நன்றி அவினாஷ் தம்பி” என்றபடி சேச்சி கிளம்பிவிட்டார். சத்தம் எழுப்பாமல் அவரைத் தொடர்ந்தனர் அனைவரும்.
“இதென்ன பிஹேவியர் காவ்யா? ஒரு நாள் கூட எங்கேயும் போகாம நம்ம குடும்பம்தான் அவங்க குடும்பம்னு வாழுறவங்க சேச்சி. அவங்க பிறந்தநாள் கொண்டாட்டத்தை யூ ஜஸ்ட் ஸ்பாயில்ட் இட்” என்று அடிக்குரலில் காவ்யாவிடம் சீறினான்.
“அவினாஷ் தம்பியாமே. ஒரு சமையல்காரிக்கு நீங்கள் கொடுக்குற இடமா இது. கரகாட்டக்காரிக்கும் நீங்க தம்பியா? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உறவு, அளவுக்கு மீறின உரிமை வேற. புது வேலைக்காரி செம்பருத்திக்கு நீங்க யாரு அண்ணனா இல்லை தம்பியா? சே உங்களுக்குத் தராதரம் தெரியல அவினாஷ். நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க எங்க கிளம்புறிங்க?”
“நீ சொன்னதும்தான் நினைவுக்கு வந்தது அவங்க எல்லாரும் என் உறவுக்காரங்கல்ல எப்படி அக்காவையும், அக்கா மகளையும் எப்படித் தனியா அனுப்புறது. இந்த மாமா வீடு வரைக்கும் கூட போயி விட்டுட்டு வந்துடுறேன்”
கொதித்தாள் காவ்யா “வீடு வரைக்கும் என்ன வீட்டுக்குள்ள கூடப் போய்த்தான் பாருங்களேன். அங்க இருக்கவன் படியேற விடுவானான்னு நானும் வெளியே நின்னு வேடிக்கை பார்க்க வரேன்”
அவளை தீர்க்கமாய் பார்த்த அவினாஷ் “அந்த வீட்டுக்குப் போக எனக்கு யாரோட அனுமதியும் தேவை இல்லை. அந்த வீட்டில் இருக்கறவங்களுக்குத் தான் என் அனுமதி தேவை. நீயும் அதை உணர்ந்து நடந்துக்கோ. இன்னொரு முறை என் விருந்தாளிகளை அவமானப் படுத்தின, நான் சும்மா இருக்க மாட்டேன். என் நட்பு வேணும்னு நீயும் உங்கப்பாவும் நினைச்சிங்கன்னா என்னைக் கட்டுப்படுத்த நினைக்காம தள்ளி நின்னு பழகிக்கிறது நல்லது” என்றான் தெளிவாக.
அந்த அறையின் கதவை அறைந்து சாத்திவிட்டு தனது வேக நடையில் இறங்கி கார் பார்க்கிங் இடத்திற்கு சென்றான். இதென்னது பிள்ளையார் பிடிக்கக் குரங்காகி விட்டது, அவினாஷை ஓட்டமும் நடையுமாகத் தொடர்ந்தாள் காவ்யா.
“கோபன் நில்லு, நானும் உங்க கூட வரேன்” என்றான் அவினாஷ்.
“நீங்களா… அய்யாவுக்கு… “ திணறினான். வராதே எங்க அபிராம் அய்யாவுக்குப் பிடிக்காது என்று சொல்லிவிட முடியுமா?
“ஏன் நான் வரக்கூடாதா? உங்கய்யா கெட் அவுட் சொல்லிடுவாரா?”
“ஐயோ அப்படியெல்லாம் இல்ல அவினாஷ். தம்பி உக்கார இடத்தை விட்டுட்டு ஓவியா பின்னாடி வந்து உக்காந்துக்கோ.”
அவர்கள் வந்தது சிறிய வண்டிதான். இப்போது அவினாஷும் வருவதென்றால் ஓவியாவை பின் இருக்கையில் மடியில்தான் உட்கார வைக்க வேண்டும்.
முன்னிருக்கையில் கோபன், லவங்கம் மற்றும் அவினாஷ். பின்னிருக்கையில் சேச்சி, காளியம்மா, ஓவியா, செம்பருத்தி என்று தீர்மானமானதும் ஒரு குரல் இடையிட்டது.
“நானும் உங்க கூட வர்றேன்” காவ்யாதான் அது.
“நீங்களா?” என்றான் கோபன். இதென்னடா சோதனை. இத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்திருந்தால் பெரிய வண்டியாக எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம்.
“ஏன்? நான் வந்ததில்லையா?”
“அப்படி சொல்லலைம்மா”
“மந்தாகினி என் அத்தை. அபிராம் என்னோட அத்தை மகன்னு உங்களுக்கு நினைவு படுத்துறேன்”
செம்பருத்திக்கு ஒரே அதிர்ச்சி. “சாரோட முறைப் பொண்ணா?” என்று சேச்சியிடம் மெதுவாக கேட்க…
“தூரத்து சொந்தம். தூரம்னா ஒரு ஆயிரம் கிலோமீட்டராவது இருக்கும்” என்றார் சேச்சி கிண்டலாக.
மேலும் “அவங்கப்பா சுகுமாரன் மந்தாகினி அம்மாவுக்கு தூரத்து உறவு முறை. அண்ணன்னு கூப்பிடுவாங்க” என்று தகவல் சொன்னார்.
ஓ அதனால் வந்த உரிமையா? வேலை செய்யும் நபர்களை துச்சமாக மதிக்கும் தன்மை வேறு இருக்கிறது. ஒரு வேளை ராஜகுடும்பமோ? இருக்காது, மந்தாகினி சாதாரண குடும்பத்துப் பெண் என்று தானே சொல்கிறார்கள்.
இந்தக் குடும்பத்தில் இருக்கும் உறவு முறைகளைப் பற்றி இப்போதுதான் கொஞ்சம் புரிகிறது. அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே…
“செம்பருத்தி கொஞ்சம் இறங்கு” என்றாள் அதிகாரமாக.
ஒன்றும் புரியாமல் காரிலிருந்து இறங்கிய செம்பருத்தியின் கைகளில் ஒரு நூறு ரூபாய் தாளைத் திணித்து விட்டு.
“பஸ்ல ஏறி வந்துடு” என்று சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டாள்.
“நானும் அக்கா கூட வர்றேன். இறக்கி விடுங்க” என்று அடம்பிடித்த ஓவியாவிடம்.
“ஏன் உங்கக்காவுக்கு விவரம் தெரியாதாக்கும். இந்நேரத்துக்கு ஊருல இருக்குற பாதி பேரைத் தெரிஞ்சு வச்சிருப்பா” என்று சொல்லியதைப் பொறுக்க முடியாது.
“ஸ்டாப் இட் காவ்யா. ரொம்ப தப்பா பேசுற நீ” என்று சீறிவிட்டு வண்டியிலிருந்து இறங்கினான் அவினாஷ்.
“என்ன தப்பா சொல்லிட்டேன். இவ்வளவு நாளா இந்த ஊரில் யாரும் தெரியாமலா இருக்கும்?”
“விடுங்க சார். அவங்களை மாதிரியே என்னையும் நினைச்சுட்டாங்க போலிருக்கு. நான் உங்க அளவுக்கு வேகம் இல்ல மேடம். கொஞ்சம் ஸ்லோதான்” என்றாள் செம்பருத்தியும் போலிப் பணிவுடன்.
கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
பின் இருக்கையில் ஒரு ஜன்னலுக்கருகே தாராளமாக காவ்யா அமர்ந்திருக்க, அவள் அமர இடம் விட்டுவிட்டு காளியம்மா அவள் மேல் படாமல் ஒரு இன்ச் இடைவேளை விட்டு சேச்சியை இடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, சேச்சியோ காரின் கதவிற்கும் காளியம்மாவிற்கும் இடையே தனது ஆஜானுபாகுவான உடலைக் குறுக்கிக் கொண்டிருக்க, இருவரும் சேர்ந்து அழுத்தியதில் கை கால்கள் கூட அசைக்க முடியாமல் ஓவியா பரிதவித்துக் கொண்டிருந்தாள்.
“இதென்ன காவ்யா. நீ உன் காரில் வரக்கூடாதா?”
“நீங்கதானே அவினாஷ் சொன்னிங்க இவங்க உங்க பாமிலின்னு உங்க குடும்பம் எனக்கும் குடும்பம் தானே. நான் இவங்க கூட இந்தக் காரில்தான் போறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன்”
அவளை தீர்க்கமாகப் பார்த்தவன் “ஓகே நீ தீர்மானம் பண்ணிட்டா தடுக்க நான் யாரு? அதுவும் அபிராமோட உறவுக்கார பொண்ணு வேற. பட் சின்ன சேஞ்ச் மட்டும் பண்ணுறேன். சேச்சி நீங்க முன் சீட்டுக்கு வாங்க”
அவினாஷ் இறங்கிக் கொண்டு முன் சீட்டில் சேச்சியை அமர வைத்தான். பின் சீட்டில் மூவர் மட்டுமே இப்பொழுது.
“கோபன் இவங்க எல்லாரையும் பத்திரமா வீட்டில் கொண்டு போயி சேர்த்திடு”
“அவினாஷ் அப்ப நீங்க?” கிரிச்சிட்டாள் காவ்யா.
“நானும் செம்பருத்தியும் ஜாலியா பஸ்ஸில் வர்றோம். பை”
கோபத்தில் தணலாக மாறிய காவ்யாவின் முகத்தைக் கண்டு அனைவருக்கும் உள்ளூர மகிழ்ச்சியே. ஒரு நல்ல பெண்ணை என்னென்ன வார்த்தைகள் பேசிவிட்டாள். இவளுக்குத் தேவைதான்.
அவள் மறைந்ததும் “ஐ ஆம் சாரிம்மா. காவ்யா நாக்கை கண்ட்ரோல் பண்ணவே முடியறதில்லை”
“சே சாரி எல்லாம் அவசியமே இல்லை. காவ்யா பேசுனத்துக்கு அவங்கதான் பொறுப்பு. ரொம்பல்லாம் பொறுத்துக்க மாட்டேன். கண்டிப்பா பதிலடி கொடுப்பேன். அதுக்காக கோச்சுக்க கூடாது”
“கோச்சுக்குறதா… நான் இந்த அக்கினி நட்சத்திரம் சண்டையை என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்”
“சரி கிளம்பலாமா?”
“எங்க?”
“வீட்டுக்குத்தான். இப்ப கிளம்புனாத்தான் பஸ் பிடிச்சு போக சரியா இருக்கும்”
“அது இன்னொரு நாள். இன்னைக்கு டோண்டோடையிங்” விரித்துக் காண்பித்த கையில் சாவி.
“இன்னொரு கார் இருக்கா?”
“என் பைக். அதில்தான் போகப் போறோம்” என்று சொல்லியதும் செம்பருத்திக்கு மனதில் ஆயிரம் ரோஜாக்கள் பூத்தது. ஆனால்…
“என்னாச்சு… பைக்கை மெதுவாவே ஓட்டிட்டு போறேன்”
“இல்லை மழை வர மாதிரி இருக்கே”
“ரெயின் கோட் எடுத்துக்கலாம்”
அடுத்த சில வினாடிகளில் இரண்டு பறவைகளும் சிறகை விரித்து பறக்கத் தொடங்கின. மெல்லிய சாரல், நல்ல குளிர் காற்று, மனதுக்கு நெருக்கமானவன் மிக மிக அருகில் தொட்டுவிடும் தொலைவில். இதை விட சொர்க்கம் என்ன பெரிதாகத் தந்துவிடப் போகிறது.
இருவரும் வாய்விட்டு எதுவும் சொன்னதில்லை. ஆனால் கண்களின் வழியே எப்போதோ அன்பு பகிரப்பட்டு விட்டது.
செம்பருத்திக்கு நீங்க அண்ணாவா தம்பியா என்று காவ்யா கேட்ட கேள்வி உரைக்க, ஆன்சர் உனக்குக் கடுப்பாத்தான் இருக்கும். பட் ரெண்டும் இல்லை காவ்யா என்றான் அவனுக்குள்.
இருபுறமும் மெலிதாகத் தூறல் போட ஆரம்பிக்க, முதல் முறையாக இந்தப் பயணம் இப்படியே தொடர்ந்தால் என்ன என்று தோன்றியது அவினாஷுக்கு. அவனுக்கு மட்டும் தோன்றினால் போதுமா அவளுக்கு?
காதலின் கல்விச் சாலையில் அவள் கண்கள் எனும் புத்தகத்தை ஆழமாகப் பார்த்து புரிந்துக் கொள்ளும் திறன் இந்த உலகிலேயே எனக்கு மட்டும்தான் உண்டு. பல மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலியிலேயே அதைக் கண்டுபிடித்தவன் என்ற கர்வத்தில்
“சொல்லு டார்லிங்” என்றான்.
டார்லிங்கா! திகைத்தாள் செம்பருத்தி “எ… என்ன சொன்னிங்க அவினாஷ்?”
“வீட்டுக்கு சீக்கிரமா போகணுமா இல்லை மெ…..து…. வா…. போகணுமா?” என்று வேகமாகவும் மெதுவாகவும் ஓட்டிக் காண்பிக்க..
“மெதுவா போனால் நல்லாத்தான் இருக்கும். ஆனால் அபிராம் சாரைப் பார்க்கணுமே… சீக்கிரமே போகலாம்”
இருள் தோன்ற ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் வண்டியை ஓரமாக நிறுத்தினான். ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு அவளது முகத்தைப் பார்த்து திரும்பி நின்றுக் கொண்டான் “எனக்கு ஒரு கேள்வி இருக்கு. அதுக்கு பதில் தேவை”
“சொல்லுங்க”
“இந்தக் குர்த்தி உனக்கு ரொம்ப அழகா இருக்கு.ஆனால் நான் ஆன்லைனில் குர்த்தியைத் தான் தேர்ந்தெடுத்தேன். அளவெல்லாம் காவ்யாதான் பார்த்து வாங்கிட்டு வந்தாள்”
“உங்க செலெக்ஷன் சூப்பர். தேங்க்ஸ் அவினாஷ். காவ்யா என்னைக் காயப்படுத்தணும்னு நினைச்சே நிறைய நல்லது செஞ்சிருக்காங்க. கவலைப்படாதிங்க. இந்த அழகான குர்த்தியைப் போட்டுக்கணும்னே நான் அதுக்காக என்னைத் தயார் படுத்திக்கிட்டேன். ஆனால் இதைச் சொல்லவா நிறுத்துனிங்க?”
“அபிராம்னா உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல”
“ரொம்ப ரொம்ப பிடிக்கும். நல்லவர்…”
சிரித்துக் கொண்டான் “அவன் நல்லவன்னு ஒரு வயசுப் பொண்ணு சர்டிபிகேட் தர்றது இதுதான் முதல் முறை”
“ஆம்பளைங்க சர்டிபிகேட் தந்திருக்காங்களா”
“எஸ்… நான்தான் அது”
“கேள்வி முடிச்சுடுச்சா?”
“இல்லை. அபிக்கு என்னை சுத்தமா பிடிக்காது. நீ இனிமே என் கூட பேச, பழகக் கூடாதுன்னு சொன்னா என்ன செய்வ?”
ஆச்சிரியமாகப் பார்த்தாள். “அப்படியெல்லாம் சொல்லுவாங்களா என்ன?”
“அவன் சொல்லுவான். ஏன்னா அபி ஒரு முரட்டு முட்டாள்”
“திருத்தம் அழகான முரடன்”
“அதெல்லாம் நான் கேட்டேனா?” என்றான் கடுப்புடன். பொறாமை பொறாமை… லைட்டாத்தான்…… ஆனால் செம்பருத்திக்கு அதெல்லாம் கண்டுபிடிப்பதைவிட ஒரு ஒற்றுமையைக் கண்டுபிடிப்பதில் மூளை ஓவர்டைம் வேலை செய்தது.
“இல்லைதான். ஆனால் உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை அவினாஷ்”
“எனக்கும் அவனுக்குமா? சூரியனும் சந்திரனும் மாதிரி நாங்க ரெண்டு பேரும். அப்படி என்ன ஒற்றுமை?”
“இதே மாதிரிதான் அபிராம் ஒரு நாள் என்கிட்டே நீ யாரு தேர்ந்தெடுத்து வேலைக்கு சேர்ந்திருந்தாலும் பரவால்ல, இனிமே எனக்கு மட்டுமே உண்மையா இருக்கணும்னு சொன்னார். உங்க கேள்விக்கும் அவர் கேள்விக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?”
“இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். நீ என் கேள்விக்கு பதில் சொல்லு”
“உங்ககிட்ட பேசவேண்டாம்னு அபிராம் சொன்னால் காரணம் கேட்பேன். உங்களுக்காக அபிராம் சார்கிட்ட வாதாடுவேன். சண்டை போடுவேன்”
“நான் அவனுக்குப் பிடிக்காதது நிறைய செஞ்சிருந்தா”
அவனை ஆழ்ந்து பார்த்தவள் “அவருக்கு பிடிக்காததா இருக்கலாம். ஆனால் அவருக்கு நல்லது மட்டுமே செஞ்சிருப்பிங்கன்னு மனப்பூர்வமா நம்புறேன் அவி”
அவன் முகம் பெரிதாக மலர்ந்தது. அவளது கரங்களைப் பற்றிக் கொண்டவன் “தேங்க்ஸ், தேங்க் யூ சோ மச் டியர்” என்றான் முகம் கொள்ளா பூரிப்புடன்.
“இதுக்கு ஏன் தேங்க்ஸ்”
“போகப் போகப் புரியும்”
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டியர் சொன்னானா? சேச்சியை டார்லிங்னு சொன்னான். அப்ப அவங்க மேல லவ்வா? மேல்தட்டுக் குடும்பத்தில் பெண்களை எல்லாம் டார்லிங், டியர்னு கூப்பிடுவாங்களா? எங்களை எல்லாம் இப்படி கூப்பிட்டா பொண்டாட்டியையும் காதலியையும் எப்படிக் கூப்பிடுவானுங்க? ஒரு பக்கம் குழப்பி அடித்தது செம்பருத்திக்கு.
இருவரையும் சுமந்து கொண்டு பக்கத்தில் இருக்கும் சிறிய சாலைகளில் புகுந்து புறப்பட்டது அந்தக் காதல் ரதம்.
“இன்னைக்கு அபிராமைப் பார்க்க வீட்டுக்கு வரப்போறேன் செம்பருத்தி”
“உங்களை கெட் அவுட் சொல்லிட்டா… “
“நீ தான் இருக்கியே எனக்காக சண்டை போட”
அங்கே வண்டி நின்றபோது, வீடே பரபரப்பாக இருந்தது.
“டாக்டர் முதலுதவி தந்துட்டு இருக்கார். சரியான நேரத்தில் அபிராம் ஐயாவைக் காப்பாத்திட்டோம்யா” என்றான் தோட்டக்காரன்.
பைக்கை அப்படியே கீழே போட்டுவிட்டு “அபிராமுக்கு என்னாச்சு ? “ என்றபடி வேகமாய் இரண்டிரண்டு படியாகத் தாவி ஏறி ஓடினான் அவினாஷ்.
“ட்ரக்ஸ். நம்ம காவலை மீறி சப்ளை பண்ணிருக்காங்க. இவதான், இவதான் எல்லாத்துக்கும் காரணம்” செம்பருத்தியைக் காட்டிக் கிறீச்சிட்டாள் காவ்யா.
நானா? அபிராமுக்கு நான் போதை மருந்து தந்தேனா? தன் மீது அநியாயமாக பழி சுமத்தப்பட்டதின் காரணம் புரியாமல் திகைத்து நின்றாள்.
காவ்யாவோட வேலையா இருக்குமோ?
Cute and very nice episode
superrrr. apo romba perusa avi edho panirupanga polaye.bt sembaruthiya purinjukanum….
Interesting.. nice epi mam..