இரவும் நிலவும் – 4
காலில் அடிபட்டு வீட்டில் ஓய்வாகக் கிடந்த இந்த இரண்டு வார கால கட்டத்துக்குள் பூமி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கிறதோ என்று சுபிக்ஷாவிற்கு பலத்த சந்தேகம் வந்து விட்டது.
அந்தளவு பழைய மாதிரி உம்மணாமூஞ்சியாக மாறியிருந்தான் நவநீதன். சாந்தத்தின் மறுபதிப்பு, அமைதியின் திருவுரு, அடக்கத்தின் சிகரம் என்று சொல்லும்படியாக இருந்தது அவன் செய்கைகளும், தோற்றமும்!
அவன் எப்பொழுதுமே இப்படித்தான் என்றாலும் இடையில் ஓரிரு முறை நன்றாக நடந்து கொண்டிருந்தவன் ஆயிற்றே! அவனது மாற்றம் விரும்பத்தக்க விதமாக இருக்க, சரி இவன் புதிதாக சந்திப்பவர்களிடம் தான் அமைதி போல… ஓரளவு நன்றாகப் பழகிய பிறகு மெல்ல மெல்ல நன்கு பேசுவான் போல என்றுதான் சுபிக்ஷா நினைத்திருந்தாள்.
அதிலும், முத்தாய்ப்பாய் அன்று மருத்துவமனையில் சந்தித்தபோது பேசினான் என்று சொல்வதை விட, திட்டி தீர்த்தான் என்று சொன்னால் மிகமிக பொருத்தமாக இருக்கும். அதில் முழுக்க முழுக்க அவள் உணர்ந்ததும், அனுபவித்ததும் அவனது அக்கறையை மட்டுமே! அப்பேர்ப்பட்டவன் இப்பொழுது பழையபடி மௌன விரதம் இருப்பது ஏன் என்று அவளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை.
அன்று இவன் பாட்டிற்கு வீட்டில் விட்டுவிட்டு சென்று விட்டான். அன்னையைச் சமாளிப்பதற்குள் அவள் எத்தனை திணறிப் போனாள். அவன் யார், எப்படித் தெரியும், எத்தனை நாட்களாக பழக்கம், அவனை ஏன் அழைத்தாள் என்று மொத்த விவரங்களையும் பிட்டு பிட்டு வைத்து… “எப்பவும் ரொம்ப அமைதிம்மா. அதிகமா யார்கிட்டயும் பேச மாட்டாரு. இன்னைக்கு மனுஷன் ஏதோ கோபத்துல இருந்திருப்பாரு போல… நான் போன் பண்ணி வர சொல்லி மாட்டிக்கிட்டேன்” எனப் பாவமாகச் சொல்லி முடித்தாள்.
அவளை கூர்ந்து பார்த்த அன்னை, “பேசவே செய்யாத பையன் என்கிட்ட வந்து உன்னை திட்டிட வேண்டாம்ன்னு அத்தனை தூரம் பேசிட்டு போறான்” என மகளை ஆழம் பார்த்தார்.
அன்னை சொன்ன விஷயம் உவகையைத் தந்தபோதும் முகத்தில் அதை இம்மிகூட காட்டாதிருக்க சிரமப்பட்டுப் போனாள். ஆனாலும் முகம் பொலிவுற்று விட்டது அவளையும் அறியாமல்.
கன்னத்தை தேய்க்க வேண்டும் போல எழுந்த ஆவலை அடக்கி, “எனக்கும் தெரியலைம்மா…” என்று திணறலாகச் சொன்னவள், தலையைக் குனிந்தபடி, “ரொம்ப நல்ல மாதிரி தான்ம்மா” என முணுமுணுத்தாள்.
இறுதி வார்த்தைகளைக் கேட்காதது போலப் பாவித்து, “கண்டதையும் யோசிக்காம தூங்கி ரெஸ்ட் எடு…” என்றுவிட்டுப் போனாள் அன்னை. இதயம் தொண்டைக்குழியில் வந்து துடிப்பது போல உணர்ந்தாள் சுபிக்ஷா.
அதன்பிறகு, இரண்டு வாரங்கள் அவளுக்கு முழு ஓய்வு தான். சும்மா இருக்கும்போது மனத்திற்கினிய யோசனைகள் அவளை ஆக்கிரமித்தன. அவளுள் மௌனமாய் நிரம்பிக் கொண்டிருந்த காதல் தன் வேலையை செவ்வனே செய்ததன் விளைவு!
ஆனால், இவள் முழு நேரமும் அவனையே நினைத்துக் கொண்டிருக்க, அவனோ வீட்டில் விட்டதோடு அவளை இம்மியும் கண்டுகொள்ளவில்லை. எப்பொழுது சரியாகும்? இப்பொழுது எப்படி இருக்கிறது? என்று எதையாவது கேட்க அழைப்பான் என சுபிக்ஷாவும் ஆவலும் ஆசையாக எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளது மொத்த எதிர்பார்ப்புகளும் பொய்த்துப் போனது அவனது நிராகரிப்பில்!
அலுவலகத்திலிருந்து அத்தனை விசாரிப்பு அழைப்புகள் வந்திருக்க, இவன் மட்டும் அழைக்கவேயில்லையே என அவளுக்குச் சோர்ந்து போனது. என்ன காரணமாக இருக்கும் என்று என்ன யோசித்தும் அவளுக்குப் புரியவில்லை. சரி நேரில் சந்திக்கும்போது பேசிக்கொள்ளலாம் என்று இருந்தவள், நெட்டித்தள்ளி நாட்களைக் கடத்தி அலுவலகத்திற்கு வந்தால், இவனது அவதாரம் அவளுக்கு எப்படி இருக்கும்?
அவனுடைய மேனேஜர் வினோதன் அவளிடம் மாட்ட, “உங்க பாஸ் என்ன பேசவே காசு கேட்பாரா” என்று எரிந்து விழுந்தாள்.
அவளை விசித்திரமாக நோக்கியவன், “என்னாச்சு மேடம்? உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் சண்டையா என்ன?” என்று வினவினான்.
“ம்ப்ச்…” என்றாள் சலிப்பாக. சண்டையோ சமாதானமோ இணக்கமோ எதற்கும் முதலில் பேச வேண்டும் அல்லவா! நெருங்கவே முடியாதபடி அவனது இறுகிய தோற்றம் அவளுக்குள் நெருப்பள்ளி கொட்டிக் கொண்டிருந்தது. என்னவோ இனம் புரியாத வேதனை, தவிப்பு!
“என்ன ஆச்சு மேடம்?” அவள் முகத்தில் படர்ந்த வேதனையைக் கவனித்தபடி கேட்டான்.
“எதுவும் பேசினா தானே சார் சண்டை போட…”
“இல்லை என்னவோ நடந்திருக்கு. நல்லா யோசிச்சு பாருங்க. அப்படி இல்லாம அவரு ஏன் இப்படி இருக்க போறாரு”
மெலிதாக முறைத்தவள், “உங்க முதலாளி எப்பவும் இப்படித்தானே சார். இதுல புதுசா என்ன இருக்கு… இருந்தாலும் ரொம்பத்தான் மூடி டைப்” என்று அங்கலாய்த்துக் கொண்டாள்.
“இருக்கலாம். ஆனா உங்க கிட்ட அவர் அப்படி இருக்க வாய்ப்பில்லை” என ஆணித்தரமாகச் சொல்லி அவர் சிரிக்க, சுபிக்ஷா புரியாது பார்த்தாள்.
அவளின் பார்வை புரிந்து, “ஒருமுறை நாங்க பெங்களூருக்கு போனோமே உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று வினவியவன், அவள் ஆமோதிப்பாய் தலையசைக்கவும்,
“நாங்க அன்னைக்கு காலையில பிளைட்ல பெங்களூர் போக வேண்டியது. ரொம்ப முக்கியமான வேலை. அவரோட பெயிண்டிங்ஸுக்கு பெரிய ஆர்டர் ஒன்னு வந்திருந்தது. அதைப்பத்தி பேச நாங்க அங்கே போகணும். முதல் மீட்டிங் அன்னைக்கு ஈவினிங் தான் அரேஞ் செஞ்சிருந்தாங்க. ஆனா உங்களுக்காக அவர் மார்னிங் பிளைட் கேன்சல் பண்ணிட்டாரு. உங்களோட மீட்டிங் முடிச்சிட்டு, அன்னைக்கு வேற எந்த பிளைட்டும் கிடைக்காம… கார் எடுத்துட்டு அத்தனை தூரம் தனியா ஓட்டிட்டு வந்தாரு. நான் முன்னாடி போனேன் இருந்தாலும், அவரால அன்னைக்கு மீட்டிங்க்கு வர முடியலை. அது ரொம்ப முக்கியமான மீட்டிங் வேற… அத்தனை அவசரமா வந்து சேர்ந்தாரு. அடுத்த நாள் தான் அவரால மீட்டிங்ஸ்ல பார்ட்டிசிபேட் பண்ணவே முடிஞ்சது. எத்தனை கேள்விகள், எத்தனை விளக்கங்கள்… இதுவரை சார் எங்கேயும் எக்ஸ்கியூஸ் கேட்டு நின்னதேயில்லை. எல்லாம் உங்களுக்காக மட்டும். எனக்கு தெரிஞ்சு அவர் இதுவரை யாருக்காவும் இந்தளவு செஞ்சதில்லை…” என்று வினோதன் சொல்லி முடிக்கும்போது, தான் என்ன உணர்கிறோம் என்றே சுபிக்ஷாவிற்கு புரியவில்லை.
இதற்கும் அன்று அவனிடம் கேட்டாளே! அவன் தானே மதியம் தான் கிளம்புகிறோம் என்று சொன்னான்? இப்படிப் பொய் சொல்லியிருக்க வேண்டுமா? அதன்பின் அவனுக்கு தானே அத்தனை சிரமம்! அவள் மனம் அவனின் பால் உருகியது.
அவளது கண்கள் கூட லேசாகக் கலங்கத் தொடங்கியிருக்க, “மேம்… நீங்க ஸ்ட்ராங்ன்னு நினைச்சேன்…” என சொல்லி வினோதன் மென்மையாகச் சிரித்தான்.
‘என்னோட வீக்னெஸ், ஸ்ட்ரென்த் எல்லாமே நவநீதன் மட்டுமா எப்படி மாறிப் போனான்?’ அவளுக்கே புரியாத குழப்பம் ஒன்று பேரலையாய் அவளைச் சுருட்ட, அந்த நொடி அவள் முழுவதுமாக உணர்ந்து கொண்டாள் அவளின் மனதை! அதன் ஆசையை! எதிர்ப்பார்ப்பை! அவனைத்தாண்டி எதையும் யோசிக்க முடியாத தன் நிலையை!
வினோதனிடம், “நான் ரொம்ப ஸ்ட்ராங் எல்லாம் இல்லை…” என சுபிக்ஷா புன்னகைக்க, அவனது முகம் ஒருநொடி இருண்டது.
உடனேயே அவன் தன்னை மீட்டுக் கொண்டாலும் அவள் கண்டுகொண்டாள். “என்ன சார்?” என அவள் குழப்பமாகக் கேட்க,
“எனக்கு தெரிஞ்சு அவர் யாருக்கும் இவ்வளவு தூரம் செஞ்சதில்லை சொன்னேன் இல்லை… அதுல அவங்க குடும்பமும் அடக்கம் மேடம்!” என வினோதன் நிறுத்த,
ஆக நவீதனின் குடும்பம் இருக்கிறது தான்! பிறகு ஏன் அன்று விசாரிக்கும்போது அந்தளவு இறுகி இருந்தான்! குழப்ப மேகங்கள் சூழ வினோதனை ஏறிட்டாள்.
“ஆமா மேடம் அவருக்கு அம்மா, அப்பா, தங்கை எல்லாம் இருக்காங்க. எல்லாரும் இதே தஞ்சையில தான் இருக்காங்க. எனக்கும் எதிர்பாராம தான் அவங்க இருக்கிறது தெரிய வந்தது… ரொம்ப பாசமான குடும்பம். இன்னும் சொல்லப்போனா சாரோட பாசத்துக்காக ஏங்குற குடும்பம்ன்னு சொன்னா வெகு பொருத்தமா இருக்கும்” ஏதோ புரியாத கதையைக் கேட்பவள் போல, மலங்க விரித்தபடி வினோதன் சொல்லிக்கொண்டிருந்ததை சுபிக்ஷா கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ஒருமுறை சாரோட என்னை பார்த்தாங்க. சார் தான் இன்ட்ரோ குடுத்தாரு. என்னவோ கூட படிச்சவங்களை இன்ட்ரோ தர மாதிரி தான் அவர் முகம் இருந்ததுன்னா பார்த்துக்கங்களேன்… ஆனா அவங்க குடும்பம் அப்படியே நேர் எதிர்! ரொம்ப ஆசையும் பாசமும் அவங்ககிட்ட இருந்தாலும், சார் என்ன சொல்லுவாரோன்னு பயமும் நிறைய இருக்க… அவர்கிட்ட அதிகம் அவங்க நெருங்கலை. ஆனா அதுக்கான ஏக்கத்தை அவங்க கண்ணுல பார்த்தேன். என்கிட்ட நல்லபடியா பேசி அப்பவே என் நம்பர் வாங்கி வெச்சுட்டாங்க. அடிக்கடி சாரை பத்தி விசாரிச்சுட்டே இருப்பாங்க. சமீபத்துல உங்களைப் பத்தி கூட கேட்டாங்க…” என அவன் சொன்னபோது,
என்னைப்பத்தி நவீன் எதுவும் சொல்லி இருப்பாரோ இன்பமாக அதிர்ந்தது அவளது மனம். “என்னைப்பத்தி அவங்களுக்கு என்ன தெரியும்? எப்படி?” அவள் படபடப்புடன் கேட்க, “எங்கேயோ உங்க ரெண்டு பேரையும் பார்த்திருப்பாங்க போல…” என்று வினோதன் பதிலளித்தான்.
“தஞ்சாவூர்லயே இருந்துட்டு ஏன் அவங்க எல்லாம் ஒன்னா இருக்கறதில்லை… எதுக்காக இவரோட பாசத்துக்காக ஏங்கணும்?” குழப்பமாக சுபிக்ஷா கேட்க,
“எனக்கு அதுபத்தி எதுவும் தெரியாது மேடம். சாரோட பழகின கொஞ்ச நாளிலேயே உங்களால புரிஞ்சிருக்க முடியும். அவர் கொஞ்சம் இல்லை இல்லை… நிறையவே ஒதுங்கி இருக்கிற டைப் தான்! ரொம்ப தனிமையை விரும்புவார். எனக்கு தெரிஞ்சு அவர் பிரண்ட்ஸ், பேமிலி, ரிலேட்டிவ்ஸ்ன்னு யாரோடையும் டைம் ஸ்பெண்ட் பண்ணினது இல்லை… அவர் முதல் முதல்ல ஒருத்தருக்கு முக்கியத்துவம் தராருன்னா அது உங்களுக்கு மட்டும் தான்! நான் அவரோட வேலைக்குச் சேர்ந்த இந்த மூணு வருஷத்துல… உங்களுக்கு தந்த இம்பார்ட்டன்ஸ் வேற யாருக்கும் தந்ததே இல்லை மேடம்…” கொஞ்சம் உருக்கமாகத் தான் வினோதன் இதைக் கூறினான்.
நவநீதனின் வாழ்வியல் முறை… அதில் புதைந்து கிடக்கிற குழப்பம்… எல்லாம் அவளுக்கும் வருத்தத்தைத் தான் தந்தது! இவன் ஏன் இப்படி இருக்கிறான்? இவனுக்குள் ஏதாவது வேதனை மறைந்து இருக்குமா? என்னிடமாவது மனம் திறப்பானா? மனதோடு வினாக்கள் எழ, குழப்பம் சுமந்தது அவளது முகம்.
“அவரோட வாழ்க்கை இனியாவது நல்லபடியா அமையணும் மேடம். என்னவோ அது உங்களால முடியும்ன்னு தோணுது…” எதிர்பார்ப்பும், ஆவலும், ஆசையுமாகக் கேட்டவன் அவளிடமிருந்து விடை பெற்றான்.
புரியாத குழப்பத்தில் ஆழ்ந்தாள் சுபிக்ஷா.
இரண்டு கைகள் தட்டினால் தானே ஓசை எழுப்ப முடியும்? நவநீதன் தன்னிடம் அக்கறை காட்டியது எந்தளவு நிஜமோ அதேயளவு நிஜம் தானே அவன் இப்பொழுது விலகி இருப்பதும்! அவன் எனக்காகத் தந்த சலுகை காதல் இருந்தால் மட்டும் தான் சாத்தியமா? இல்லை நட்பில் கூட சாத்தியப்படுமா? அவளுக்குக் காதலாகத் தோன்றுவது அவனுக்கு நட்பாக மட்டும் தோன்றியிருந்தால்?
இப்பொழுது நவநீதனை எப்படி நெருங்குவது? அவனது மனதில் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது?
புரியாத குழப்பத்திலும், நவநீதனை எந்த வகையிலும் நெருங்க முடியாத தவிப்பிலும் அவள் இருந்தபோது தான், அவளைக் கவனித்த வருண் அவளிடம் தூண்டி துருவியது. ஏற்கனவே அவளது காலில் அடிபட்டிருந்தபோது நடந்த சம்பவங்களை பிரேமா கூறியிருக்க, அதிலிருந்தே தன் விசாரணையைத் தொடங்கியிருந்தவனிடம், மறுக்க முடியாமல் அனைத்தையும் தமையனிடம் தெரிவித்திருந்தாள் சுபிக்ஷா.
Nice