Tamil Madhura யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 1

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 1

செல்லம் – 01

 

“ஹாய் செல்லம்!”

 

பார்கவியின் அகராதியில் பிடிக்காத இரு சொற்கள் என்றால் இதைத்தான் சொல்வாள். எத்தனை இயல்பாக இந்த வார்த்தையை சொல்லி விடுகிறார்கள். ஆனால் யாரால்? யாருக்கு? எச்சந்தர்ப்பத்தில்? இதனை உபயோகிக்க வேண்டும் என்பதில் தானே அதன் அர்த்தமே தங்கியுள்ளது. மாறாக விளையாட்டாக உபயோகிக்கும் போது அதன் விளைவு..??

 

தன்னை மீறி நெடியதொரு பெருமூச்சை வெளியேற்றியவாறே மனதில் எழுந்த சிந்தனைகளை புறம் தள்ளித் தனது வேலையைக் கவனிக்கலானாள் பார்கவி. 

 

அந்த மாநகரில் மூன்று தளங்களில் வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், வீடு சுத்தம் செய்யும் பொருட்கள், பரிசுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் என்று பல்வேறு அம்சங்களுடன் பெரியதொரு பிரதேசத்தில் அமைந்திருந்தது அந்தப் பிரபல பல்பொருள் அங்காடி. ஒரே இடத்தில் தேவையான அனைத்தையும் வாங்கி விட முடியும் என்பதால் மாதம் இரு ஞாயிற்றுக் கிழமைகள் இங்கே வந்து தேவையானவற்றை வாங்கிச் செல்வது அவள் வழக்கம். 

 

வீட்டுக்குத் தேவையான பொருட்களை எடுத்துத் தள்ளு வண்டியில் போட்டுக் கொண்டிருந்த போதுதான் அவளுக்கு இந்த அழைப்புக் கேட்டு அவள் மனதைக் கலைத்தது. அதைக் கணக்கெடுக்காது தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டே அடுத்த பகுதியை நோக்கிச் சென்றாள். காதில் விழுந்த வார்த்தைகள் தந்த கசப்பு அந்த இடத்தில் நின்று மேலும் அவர்கள் உரையாடலைக் கேட்கும் மனமற்று அந்த இடத்தை விட்டே அவளை உடனடியாக ஓட வைத்தது.

 

ஆனாலும் அன்று விதி அவளை விடுவதாக இல்லை போலும். 

 

“ஹேய் செல்லம்.. உண்மையாவே நீதானா இது? பார்த்து எத்தனை வருசம் ஆச்சு.. எப்பிடி இருக்கிறாய் டார்லிங்? என்ன இப்பிடி மெலிந்து போனாய்.. அடையாளமே தெரியேல்ல பேபி.. எப்பிடி இருந்த பாருக்குட்டி இப்பிடி ஆகிட்டாளேயென்று யோசிச்சுக் கொண்டே வந்தன்.. 

 

அதுசரி.. உன்ர புருசர் எங்க? என்ன கையில ஒண்டும் இடுப்பில ஒண்டுமாய் இருப்பாய் என்று பார்த்தால் தனியாக நிக்கிறாய்.. ஆ.. புருசரையும் பிள்ளைகளையும் வீட்டில விட்டிட்டு நீ மட்டும் தனியாக வந்து ஜாலியாக ஷொப்பிங் செய்யிறாய் போல.. நடத்து.. நடத்து..”

 

அவளின் தள்ளு வண்டியை இழுத்துப் பிடித்து நிறுத்தியவாறே ஆயிரம் கேள்விகளோடு அவள் முன்னால் வந்து நின்றான் அவன். எரிச்சலோடு முன்னால் வந்து நின்றவனைப் பார்த்தாள் பார்கவி.

 

“யாரு மிஸ்டர் நீங்கள்? கொஞ்சம் வழி விட்டீங்கள் என்றால் நான் தேவையானதை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போக வேணும்..”

 

அவனை இதுவரை பார்த்தேயிராதவளாய் பதிலிறுத்தவளைப் பார்த்துச் சற்றே குழம்பினான் அந்த ஆடவன்.

 

“நீ.. நீங்க பாரு தானே.. பார்கவி தானே.. ஒரு அஞ்சாறு வருசம் முந்தி இதே சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தீங்களே..”

 

“நான் எந்த ஒரு சூப்பர் மார்கெட்டிலயும் வேலை பார்க்கேல்ல.. இப்ப வழியை விடுறீங்களா மிஸ்டர்..”

 

“விளையாடாத பாரு.. நீதான் என்று எனக்கு நல்லாத் தெரியும்.. உன்னை மறப்பனா? நான் ராஜ்.. இங்க தானே உன்னோட வேலை செய்தனான்.. நான் உன்னைப் போல எல்லாம் மாறவே இல்லையே.. இப்பவும் அப்பிடியே அதே ஹான்ட்ஸம் ஃபோயாத்தானே இருக்கிறன். எப்பிடி என்னை அடையாளம் தெரியாமல் போகும்?”

 

“பொது இடத்தில வீணாகத் தகறாறு பண்ணாம வழியை விடுங்கோ மிஸ்டர்..”

 

“போதும் பாரு.. எத்தனை வருசமாச்சுப் பார்த்து என்று எவ்வளவு ஆசையாகக் கதைக்க வந்தன்.. இப்பிடிப் பிராங் பண்ணிட்டு இருக்கிறாய்.. ப்ளீஸ்டி..”

 

“அச்சோ.. என் பேர் பாரு இல்லை.. தள்ளுங்கோ..”

 

கூறியவள் தள்ளுவண்டியைத் திருப்பியவாறு அந்த இடத்தை விட்டு நகர முயலவும் சற்றும் சிந்தியாமல் ராஜ் அவள் கையைப் பிடித்தான். இதைக் கொஞ்சமும் எதிர்பாராத பார்கவி மறுகரத்தால் அவன் கன்னத்தைப் பதம் பார்த்தாள். அவள் கரத்தை விடுத்து அடி வாங்கிய கன்னத்தைப் பொத்திப் பிடித்த ராஜ் கோபம் துளிர்க்க அவளை முறைத்தான் இப்போது.

 

“உங்களை பார்க்க என் ப்ரெண்ட் போலவே தான் இருந்தது. அதுதான் ஏதோ குழப்பத்தில வந்து கதைச்சால் இப்பிடித்தான் பொது இடத்தில வைச்சு அடிப்பீங்களா மிஸ்..”

 

“ஓமோம்.. நீங்க தெரிஞ்சவங்க போல இருக்கு என்று வந்து கதைப்பீங்கள்.. கையைப் பிடிப்பீங்கள்.. ஆனால் அதிட விளைவுகளால பாதிக்கப்படுறது நாங்கள் மட்டும் தானே.. இதெல்லாம் உங்களுக்குச் சொன்னால் புரியாது மிஸ்டர் ராஜ்.. இனியாவது பொம்பிளைப் பிள்ளைகளோட மரியாதையாகப் பேசிப் பழகுங்கோ.. செல்லமாம்.. டார்லிங்காம்.. வந்திடுவாங்கள் கொஞ்சிக் கொண்டு..”

 

கூறியவள் மீதி வாங்க வேண்டிய பொருட்களை பற்றிய சிந்தனையும் இல்லாமல் நேராகப் பணம் செலுத்துமிடம் சென்றாள். உரிய பணத்தைக் கொடுத்து விட்டுத் தனது ஸ்கூட்டியில் பைகளை கவனமாகக் கொழுவியவள் வீடு நோக்கிச் சென்றாள். 

 

ஆனால் மனமோ அரிசி போடத் தயாரான உலை போலக் கொதித்துக் கொண்டிருந்தது. யாரை இந்த ஜென்மத்தில் பார்க்கக் கூடாது என்று எண்ணினாளோ அவனையே கண்டதில் உடல் முழுவதும் எரிந்தது. இன்னமும் நாலு அடி வைக்கத் தவறி விட்டோமே என்ற எண்ணம் தோன்ற அவனை அடித்த கரத்தை உயர்த்திப் பார்த்தாள். அடித்த கரம் இன்னமும் சிவந்து போய் வலித்தது. அடித்த அவளுக்கே இவ்வளவு வலி என்றால் அடி வாங்கியவனுக்கு எப்படி வலித்திருக்குமோ?

 

‘நல்லா வேணும்.. நானா வந்து கதைக்கச் சொன்னான்.. லண்டன் எங்கயோ போயிருந்தானே.. மறுபடியும் ஏன் இங்க வந்தவன்? என்ர நிம்மதியைக் குலைக்கவா? இப்பவும் முந்தி மாதிரியேதான் இருக்கிறான்.. இவன் எல்லாம் இந்த ஜென்மத்துல திருந்த மாட்டான் போல.. அப்பவே அப்பிடி இருந்தவன், லண்டன் போய் என்ன எல்லாம் பழகிக்கொண்டு வந்தானோ.. இவங்களையெல்லாம் நடுரோட்டில நிற்க வைச்சுச் சுட வேணும். அப்பத்தான் என்ர மனசு ஆறும்.. ”

 

மனதில் தோன்றிய பல்வேறு எண்ணங்களோடு சோர்வாய் அமர்ந்தாள் பார்கவி. 

 

பல்பொருள் அங்காடியில் நின்றவனோ தனது கைத் தொலைபேசியில் முகப் புத்தகத்தை எடுத்தான். அங்கு புகைப்படத் தொகுப்பிற்குச் சென்று ஆறு வருடங்களுக்கு முன்பு எடுத்த அந்த சூப்பர் மார்கெட்டின் ஆண்டுவிழா புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

இப்போது பார்த்ததை விடக் கொஞ்சம் அதிக எடையோடு அமுல் பேபியாகச் சிரித்துக் கொண்டு நின்றது பார்கவியேதான். 

 

“ஹேய் பாருக் குட்டி.. நீ பொய் தானே சொல்லியிருக்கிறாய்.. என்னோட விளையாடிப் பார்க்கிறாயே.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.. ஆனால் பொது இடத்தில வைச்சு அடிக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்டி.. நல்லகாலம் ஒருத்தனும் பார்க்கேல்ல என்றதால என்ர மானம் தப்பிச்சுது.. 

 

ஆனாலும் என்ன அடி சாமி..? கொஞ்சம் என்றால் ரெண்டு பல்லு கழண்டு கீழ விழுந்திருக்கும் போல.. இப்பவும் விரல் அடையாளம் பதிஞ்சுதான் இருக்கும் என்று நினைக்கிறன்.. ஆனால் நீ இப்படியெல்லாம் கோபப்படுற ஆள் இல்லையே.. சின்ன விசயத்துக்குப் போய் இவ்வளவு ஆவேசப்படுகிறாய் என்றால் ஏதோ விசயம் இருக்கு.. அல்லது இவளுக்கு அக்சிடெண்ட் ஏதும் ஆகி பழசை எல்லாம் மறந்திருப்பாளோ.. அம்னீஷியா வந்து என்னை மறந்திட்டாளோ.. என்னை ஒரு வருசமாகத்தானே தெரியும் வேற.. இப்ப இவளைப் பத்தி அறிஞ்சே ஆக வேணுமே..”

 

மண்டைக்குள் ஒரு பூச்சி நுழைந்தது போல சாம்பல் நிற வஸ்தில் அரிப்பெடுக்க ஆவல் தாங்காது தனது நண்பனுக்கு அழைப்பெடுத்தான்.

 

“ஹலோ டேவிட்டு.. உனக்கு பாருவை ஞாபகம் இருக்கா? ஓமடா. எங்களோட வேலை செய்த பெட்டைதான்.. அவள் இப்ப எங்க இருக்கிறாள்? என்ன செய்யிறாள்?”

 

“…..”

 

“என்னடா சொல்லுறாய்.. சத்தியமாக நான் இப்பிடி ஒன்றை எதிர்பார்க்கேல்ல..”

 

“…..”

 

“இல்லடா.. இண்டைக்கு சூப்பர் மார்கெட்டில அவளைப் போல ஒருத்தியைக் கண்டனான். அதுதான் அவள்ட ஞாபகம் வந்துச்சு.. கேட்டனான். சரிடா.. இரவைக்குச் சந்திப்பம்.. வைக்கிறன்..”

 

அழைப்பைத் துண்டித்தவன் மனது இப்போது வெகுவாய் கனத்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு சிரித்த முகத்தோடு சுறுசுறுப்பாகத் திரியும் பார்கவி ஒரு தடவை மனக்கண்ணில் வந்து போனாள்.

 

“உனக்கு இப்படியொரு நிலை வந்திருக்கும் என்று கனவிலும் நினைக்கேல்ல பேபி.. உன்ர முகத்தில அந்தப் பழைய சிரிப்பை வர வைக்கிறது தான்டி இனி என்ர ஒரேயொரு குறிக்கோள்..”

 

பாவம் ராஜ்..! அன்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவள் சிரிப்புப் பறி போனதன் ஒரே காரணம் அவன் தான் என்று. நடந்தது எதையும் முழுமையாக அறியாமல் அவள் வாழ்க்கையைச் சீர்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தான். ஆனால் அதன் விளைவாக அவன் தாங்கிக் கொள்ள வேண்டிய அவமானங்கள் எத்தனையோ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

 

அவன் அத்தோடு விடுவதாக இல்லை. அவளோடு தொடர்பு கொள்ளும் முதல் முயற்சியாக முகப் புத்தகத்தில் அவளை தேடிப் பிடித்தான். அப்போதுதான் பார்த்தான். அவளுடைய நட்பு வட்டத்திலிருந்து அவன் நீக்கப்பட்டிருந்தான். முன்பு அவள் நட்பு வட்டத்தில் அவனும் இருந்தான். அவனுக்கு இருக்கும் ஐயாயிரம் நட்புகளில் யார் இணைகிறார்கள், யார் விலகுகிறார்கள் என்று பார்க்க அவனுக்குப் பொழுது இருந்ததும் இல்லை. அதைப் பற்றி இவன் அக்கறைப்பட்டதும் இல்லை.

 

பார்கவிக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று எண்ணி அவளது பெயரை மெசெஞ்சரில் தேடி எடுத்தான். உள்ளே சென்று பார்த்தால் ஆறு வருடங்களுக்கு முன்பு அவன்,

 

‘ஹாய் செல்லம்!”

 

என்று போட்ட ஒரு குறுஞ்செய்திதான் இருந்தது. அதற்கு அவளிடமிருந்து எந்தப் பதிலும் வந்திருக்கவில்லை. மறுபடியும் அவளுக்கு நட்பு அழைப்பு விடுத்தவன் மறுபடியும், 

 

‘ஹாய் செல்லம்’ 

 

என்றொரு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டான். அதன்பின்னர் தான் எங்கிருக்கிறோம் என்று பார்த்தவன்,

தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான்.

 

இங்கு பார்கவியின் வீட்டிலோ அவள் இரவுச் சமையல் பற்றிய சிந்தனையுமின்றி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அருகிலிருந்த கைப்பேசியில் வந்த சிறு ஒலியில் அதனை எடுத்துப் பார்த்தாள். முகப்புத்தகத்திலிருந்து தான் புதிய அறிவுறுத்தல் ஒன்று வந்திருந்தது. திறந்து பார்த்தாள். 

 

‘மனோ ராஜ் உங்களுக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார்’

 

என்ற செய்தியைக் கூறியது. மெசேஜ் ரிக்குவெஸ்டிலும், 

 

“ஹாய் செல்லம்”

 

என்று ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. உடனடியாக அவனை முகப்புத்தகத்திலும் உள்பெட்டியிலும் தடைசெய்தாள். இருந்தும் அவன் தொடர்பு கொண்டதை எண்ணிப் பார்கவிக்கு இப்போது கோபத்தை விட அழுகைதான் வந்தது. 

 

“ஏன்டா இப்பிடிப் பண்ணுறாய்? ஒரு தடவை நீ என்ர வாழ்க்கையோட விளையாடினது போதாதா? மறுபடியும் எதற்கு இப்ப என்னைத் தொல்லை செய்யிறாய்? நானே இப்பத்தான் கொஞ்சமாவது நல்ல படியாக வாழத் தொடங்கியிருக்கிறேன். ஆனால் அது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை போல.. மறுபடியும் உன்னை சந்திக்க வைச்சிருக்கிறார்.. உனக்கு எல்லாமே விளையாட்டு.. ஆனா எனக்கு வாழ்க்கை.. கடவுளே இனியாவது அவனை என்ர முகத்தில முழிக்க விடாமல் பண்ணு..”

 

மனதில் உள்ளதை வெளியே சொல்லவும் ஆளில்லாத அந்தப் பேதைப்பெண் வாய் விட்டுக் கதறி அழுது விட்டு அந்த ஸோபாவிலேயே படுத்துத் தூங்கி விட்டாள்.

 

வருகின்ற விடியல் அவள் வாழ்வில் ஒளியேற்றுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 10யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 10

செல்லம் – 10   அன்றிரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டாள் பார்கவி. வரதர் ஐயா கூறிச் சென்றதும், அன்று மனோராஜ் கேட்டதுமே சிந்தையில் சுழன்று கொண்டிருந்தது. கதை வாசித்தோ, பாடல்கள் கேட்டோ, பேஸ்புக்கை நோண்டியோ எந்த வேலையிலும் மனம் ஈடுபட

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 5யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 5

செல்லம் – 05   அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது பார்கவிக்கு. வேலைக்குத் தயாராக இன்னமும் நிறையவே நேரம் இருந்தது. கைப்பேசியை எடுத்தவள் முகப் புத்தகத்தை வலம் வந்தாள். அவள் தொடராக வாசிக்கும் சில கதைகளின் அத்தியாயங்கள் வந்திருக்கவே அதை வாசித்தவள்,

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 8யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 8

செல்லம் – 08   அந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்குப் பிறகு கடையில் வேலை நெட்டி முறித்தது எல்லோருக்கும் என்றால் மிகையல்ல. ஸ்டோக்கில் தூங்கிக் கொண்டிருந்த உடைகள் எல்லாவற்றையும் தரம் பிரித்து அடுக்கியதிலேயே பார்கவிக்கு நேரம் போவது தெரியவில்லை. ஸ்டோர் ரூமே கதியாகக்