இரவும் நிலவும் – 3
சுபிக்ஷா மௌனமாகவே இருந்தாள்.
அதை அவன் மதிப்பதாக இல்லை. “எப்படி வீட்டுக்கு போவேன்னு கேட்டேன்” என்றான் மீண்டும் அழுத்தமாக.
அவனை அண்ணாந்து பார்த்தவள், “டாக்ஸி பிடிச்சு போயிப்பேன்” என்று அவனை விட அழுத்தமாகப் பதில் சொன்னாள்.
“மண்ணாங்கட்டி…” என எரிச்சலோடு முணுமுணுத்தான் அவன்.
இவன் ஏன் இப்படி இருக்கிறான் அவள் முகம் வாடிப்போனது. என்ன ஆச்சு? மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்? எப்பொழுது சரியாகுமாம்? ரொம்பவும் வலிக்குதா? இதுபோன்ற அக்கறையான விசாரிப்புகள் தான் யாராக இருந்தாலும் செய்வார்கள். இவனானால் வந்ததிலிருந்து கத்திக் கொண்டே இருக்கிறான். போயும் போயும் இவனைத்தான் எனக்குப் பிடிக்கிறதாக்கும் என்று யோசித்துக் கொண்டே போனவள், எண்ணங்களின் போக்கில் திகைத்து விழித்தாள்.
பிடித்திருக்கிறதா? இவனையா? எப்படி? எப்போதிருந்து? என்ன தெரியும் இவனைப்பற்றி என்று இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? குளத்திற்குள் கல் எறிந்த குழப்பம் அவளுக்குள்.
அவளுள் மௌனமாய் காதல் நிரம்பிக் கொண்டிருப்பது அவளுக்கே புரியவில்லை! ஒருவேளை புரிந்து கொள்ளுமளவு நிரம்பவில்லையோ என்னவோ!
“நான் போய் கார் கொண்டு வரேன். டாக்ஸி, ஆட்டோன்னு எதையும் இழுத்து வைக்காத” கடுப்புடன் அவன் கூற, போடா என்ற அலட்சிய பார்வை தான் அவளிடம்.
வலி ஒருபுறம், வெகு சமீபத்தில் சந்தித்த இவன்மீது படர்ந்த நேசம் மறுபுறம் என அவளை வதைப்பதில், அவனை விடவும் எரிச்சலான மனநிலையில் அவள் இப்போது இருந்தாள்.
அவளின் அலட்சியம் புரிந்துவிட அவனுக்குச் சினம் ஏறியது. “எழுந்திரு முதல்ல. எங்க வீடு பக்கத்துல தான் இருக்கு. வீட்டுக்கு போயிட்டு அங்கிருந்து கார் எடுத்துட்டு போயிக்கலாம்” என்றான் அதட்டலாக. அவனது அதட்டலில் ஒருநொடி விழித்தாலும், உடனேயே சிறு முறைப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“இப்ப எழுந்திருக்க முடியுமா முடியாதா?” அவன் பல்லைக் கடிக்க, அவசரமாகச் சுற்றிலும் நோட்டம் விட்டாள். பல ஜோடி விழிகள் சுவாரஸ்யமாக இவர்களது பஞ்சாயத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.
எதுக்கு இப்படி அட்டகாசம் செய்யறான் என்று கடுப்புடன் எண்ணியவள், இவன் விடப்போவதில்லையோ என்று புரிந்து, மெல்லிய பெருமூச்சோடு மெதுவாக எழுந்து கொண்டாள். அவசரமாக நெருங்கி வந்தவன் அவளை ஒருபுறம் பிடித்துக் கொள்ள, இவனுக்குக் கொஞ்சம் கூட தயக்கமே இருக்காதா என அவள் மனம் அலுத்துக் கொண்டது.
அவளுக்குக் கூச்சமாக இருக்கும் என்ற எண்ணம் கூட இல்லாமல் அப்படி அரவணைத்தபடி பிடித்திருந்தான்.
மெதுவா நடந்தாலும் நானே நடந்துப்பேன் என அவளது மனம் உதடு பிதுக்கிச் சிணுங்கியது. அவனிடம் சொல்லவா முடியும்? அதற்கும் கத்துவான்! இன்று இவனுக்கு என்னதான் ஆயிற்றோ! மனதிற்குள் புலம்பியபடி, அவன் இழுத்த இழுப்புக்கு நடக்க தொடங்கினாள். ஏதோ நடை பழகும் சிறுகுழந்தை போல நடக்க முயற்சி மட்டுமே அவளது! மற்றபடி நடத்திக் கூட்டிச்செல்வது சாட்சாத் அவனே தான்!
நினைவு வந்தவன் போல, “ஆமா மாத்திரை எல்லாம் வாங்கிட்டியா?” என்று கேட்க,
“அதெல்லாம் வீட்டு கிட்ட இருக்க மெடிக்கல் ஷாப்ல வாங்கிக்கிறேன்” என்றாள் சன்ன குரலில்.
“உன்னோட கொஞ்ச நேரம் இருந்தா போதும் எனக்கு பிபி ஏறறதுக்கு. ஏன் இப்படி இர்ரெஸ்பான்சிபிலா இருக்க. மருந்து சீட்டைக் கொடு” என்று சிடுசிடுத்தவன், அவளை மீண்டும் அமர வைத்துவிட்டு, மருந்து சீட்டுடன் அதை வாங்கி வருவதற்கு சென்றான்.
எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்கன்னு இவன் யோசிக்கவே மாட்டானா என அவளுக்குச் சங்கடமாக இருந்தது. இத்தனை நேரமும் ஒரு மூலையில் அமர்ந்திருந்தவள் அவன் நடக்க வைத்துக் கூட்டி வந்ததில் முன்புற இருக்கை வரிசைக்கு வந்திருந்தாள்.
அனைவரின் பார்வையும் நன்றாகவே புரிய, சிறு சங்கடத்துடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். மற்றவர்கள் பேசிக் கொள்வதுமா கேட்டுத் தொலைக்க வேண்டும்? அவளின் சங்கடம் அதிகரித்தது.
“அந்த பையனைப் பார்த்தா சாந்தமான குணம் மாதிரி தான் தெரியுது… இந்த பொண்ணுக்கு அடி பட்டிருக்கிறதை பார்த்ததும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறான். இன்னமும் ஒரு நிலைக்கு வர காணோம் பாரேன்” என கேலி பேசி இருவர் சிரித்துக் கொள்ள,
‘ஹையோ நீங்களும் உங்க அனுமானமும்… அந்த ஜீவன் எப்ப உம்மணாமூஞ்சியா இருக்கும்… எப்ப நல்லா பேசும்… எப்ப எரிஞ்சு விழும்ன்னே தெரியலை. இந்த கொஞ்ச நாளுல பல ரூபங்களை பார்த்துட்டேன். நீங்க என்னடான்னா லவ் ஸ்டோரி எழுதிட்டு…’ அவள் மனம் அவர்களை நினைத்து பரிதாபப் பட்டது.
மீண்டும் வந்தவன், அவளது மடியிலிருந்த ஹாண்ட் பேக்கை எடுத்து, அவளிடம் கேட்கக் கூட இல்லாமல் அதை திறந்து மருந்து, மாத்திரைகளை உள்ளே வைத்துவிட்டு… “பாரு இங்கே தான் வைக்கிறேன். வீட்டுக்குப் போனதும் பத்திரமா எடுத்து வெச்சுக்கோ” என்றான்.
டேய்! நான் பத்திரமா வைக்கத் தெரியாத சின்ன குழந்தையா? ஏன் இப்படி படுத்தற? அதோட அது என் ஹாண்ட் பேக்… அதை போயி என்கிட்ட கேட்காம சாவகாசமா எடுத்து யூஸ் பண்ணற… அவன்மீது கன்னாபின்னாவென்று ஆத்திரம் கிளர்ந்த போதிலும், ஏற்கனவே சுற்றம் முழுவதும் அவர்களையே கவனித்துக் கொண்டிருப்பதால் எதையும் சொல்லவோ, செய்யவோ முடியாத கையறு நிலையில் அவள் இருந்தாள்.
“சரி வா…” என்றவன் இந்தமுறை அவள் எழுந்து நிற்பதற்கும் உதவி செய்தான்.
மூச்சுக்காற்று மோதுமளவு நெருங்கி நின்றிருந்தவனிடம் தன் சங்கடத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், “நவீன் சின்ன அடிதான்…” என முணுமுணுத்தாள்.
“உன் முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கு…” என்று அதற்கும் எரிச்சல் பட்டான் அவன். சுபிக்ஷா நொந்துபோனாள். ஆக, இந்த அவதாரம் அவளின் கோலத்தைப் பார்த்த பிறகு தானா? அவளுக்கும் பேசிய இருவரைப்போல சிறியதாய் சந்தேகம் வந்து ஒட்டிக் கொண்டது.
அதில் அவள் கொஞ்சம் தளர, ஹாண்ட் பேக்கை அவனே தூக்கிக் கொண்டு அவளை வழி நடத்திச் சென்றபோது, “தாங்க நானே வெச்சுக்கறேன்…” எனக் கேட்டுப் பார்த்தாள்.
“வேணாம் வா. இது வேற வெயிட்” என அவன் தீவிரமாகச் சொல்ல, அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அது என்ன கனம் இருக்கப் போகிறது தூக்க முடியாத வண்ணம் என்பதாக!
இதுபோல ஏதேதோ மாயங்கள் செய்து கொண்டே இருக்கிறானோ… அதனால் தான் எனக்கு அப்படி எல்லாம் யோசனை போகிறதோ? என்ற தீவிர ஆராய்ச்சி அவளுக்குள்.
முன்பும் இதுபோல ஏதோ செய்தான். அவளுக்கு அன்று மிகவும் தலைவலியாக இருந்தது. இவனோடு ஒரு மீட்டிங் இருக்க, ஐந்து மணிக்கு வருவதாகச் சொன்னவன் தாமதித்துத் தான் வந்தான். அந்த வேலை சற்று முக்கியமானது. நவீன் வேறு வெளியூர் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் அன்றே பேசிவிடும்படி, எம்.டி., கூறியிருந்தார்.
அதற்காக, இவன் தாமதித்து வந்தபோதிலும் இவள் காத்துக் கொண்டிருக்க, நேரம் செல்ல செல்ல சோர்வும் தலைவலியும் படுத்தி எடுத்தது.
நவநீதன் தாமதித்து வந்தவன், இவளை சில நொடிகள் ஊன்றி பார்த்துவிட்டு, “சாரி நேரத்துக்கு வர முடியலை. மீட்டிங் நாளைக்கு வெச்சுக்கலாமா?” என்று கேட்டான்.
புரியாமல் விழித்த சுபிக்ஷா, “நாளைக்கு நீங்க பெங்களூர் போறதா சொன்னாங்க…” என இழுத்தபோது, “மதியத்துக்கு மேல தான் கிளம்பறேன். நாம மார்னிங் மீட்டிங் வெச்சுக்கலாம்” என்றவன், “டையர்டடா இருப்பீங்க போல… இன்னைக்கு நானே உங்களை டிராப் பண்ணிடறேன்” என்று சொல்லி வீட்டிற்கும் அழைத்துச் சென்றான்.
அன்றைய அவனின் அக்கறையில் அவளுக்கு மிகவும் நெகிழ்ச்சி தான்! அடுத்த இரண்டு நாட்கள் அடிக்கடி இந்நிகழ்வை நினைத்துக் கொண்டே இருந்தாள். அந்தளவு அவளை அவனது செய்கை பாதித்திருந்தது.
யோசித்துக் கொண்டே பயணித்ததில் மருத்துவமனையிலிருந்து அவனது வீடே வந்திருந்தது. சலனமே இல்லாமல் சிறுபிள்ளையைப் பார்த்துக் கொள்வது போலத் தான் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தான். அதில் அவளுக்குத் தடுமாற்றம் கூடிக்கொண்டே போனது.
இப்பொழுதும் மெல்ல அவளை இறக்கி நிற்க வைத்தவன், வேகமாகப் போய் வீட்டைத் திறந்து காரின் சாவி எடுத்து வர போனான். சற்று பெரிய வீடுதான்! ஆனால், ஏன் பூட்டி இருக்கிறது? கூட யாரும் இல்லையா? இல்லை பெற்றவர்கள் வேலைக்கு போயிருக்கிறார்களா?
ச்சு… ஒரு பார்மாலிட்டிக்காக வீட்டிற்குள் அழைத்திருக்கலாம். ஏதாவது பேமிலி போட்டோ பார்த்திருந்தால், அவன் குடும்பத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று புரிந்திருக்கும். தாராளமாகப் பெருமூச்சை வெளியிட்டாள்.
அதற்குள் அவன் காரோடு வந்துவிட, மெல்ல நடந்து அவள் ஏறப் போவதற்குள், “இரு… இரு…” என அவன்புற கதவை திறந்து வேகமாக வந்தவன், மறுபக்க காரின் கதவைத் திறந்து, அவளின் காலுக்கு அசைவு கொடுக்காத வண்ணம் அவளை மெல்ல ஏற்றி விட்டான்.
கூச்சம் வந்தபோதும், பேச்சுக்கும் செய்கைக்கும் சம்பந்தமே இல்லை என நினைத்துப் புன்னகைத்துக் கொண்டாள்.
அதே இலகுவான மனநிலையோடு, காரில் பயணிக்கும் போது, “உங்க வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க நீதன்” என்று அவனைப்பற்றி அறியும் ஆவல் உந்த கேட்டிருந்தாள்.
நொடியில் பாறையென இறுகிப் போனது அவன் முகம். அந்த தாடையின் இறுக்கமும், விழிகளின் சிவப்பும்… இப்ப என்ன தப்பா கேட்டுட்டேனாம் என அவளை மிரள வைத்தது.
அவனோ இறுகிய குரலில், “அதெல்லாம் எதுக்கு கேட்கிற?” என்றிருந்தான்.
அதில் முகம் வாடியவள், “இ… இல்லை… வீட்டுல யாரையும் காணோம். பூட்டி இருந்தது… அதுதான் சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்…” என்றாள் தயக்கத்துடன். பூட்டிய வீட்டைக் கவனித்தவள், சுற்றிலும் இருந்த துப்புரவு செய்யாத இடத்தையும் சற்று கவனித்திருந்தால் அவளாகவே அனுமானித்திருக்க முடியும். அவள் தான் அவன் வீட்டினுள் அழைக்கவில்லையே… குடும்ப புகைப்படம் பார்த்திருப்பேனே… என அங்கலாய்த்து அல்லவா நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தாள்.
“அந்த வீட்டுல நான் மட்டும் தான் இருக்கேன்…” இறுக்கம் குறையாமல் வந்தது நவநீதனின் பதில்.
சுபிக்ஷாவிற்கு இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்று புரியவில்லை. அந்த வீட்டில் அவன் மட்டும் என்றால்… அவன் குடும்பத்தில் ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா? இருந்தால் அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்? வெளியூரில் வசிப்பவர்களாக இருப்பார்களோ? இல்லை ஒருவேளை பெற்றவர்களை இழந்தவனோ? இறுதியாக எண்ணம் பயணித்த திசையில் மனம் வேதனை கொள்ள… அப்படி இருக்கக் கூடாது கடவுளே என அவசர பிரார்த்தனை செய்தாள்.
அதனால் தான் இத்தனை இறுக்கமாக இருக்குமோ? பரிதாபம் எழுந்தது அவளுக்கு!
இன்னைக்கு நேரமே சரியில்லை. இவன் கோபப்பட்டுட்டே இருக்கான். என்ன டென்ஷன்ல இருந்தானோ பாவம்… என எண்ணியவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை அவனது சமீபத்திய டென்ஷன் அவள் தான் என்று!
வீட்டிற்கு வந்தவன் பொறுப்பாக அவளை உள்ளே அழைத்துச் செல்ல, பிரேமா மகளின் நிலையைப் பார்த்துப் பதறி விட்டார். “எங்கேடி விழுந்து வெச்ச?” அவன் கேட்ட அதே கேள்வி! அதே தோரணை! நொந்தே போனாள் சுபிக்ஷா.
அவள் பாவமாக விழிக்க மகளை முறைத்தபடியே புதியவனிடம் திரும்பியவர், “ரொம்ப தேங்க்ஸ் சார். விடுங்க நான் பாத்துக்கிறேன்” எனச் சொல்லி அவளைத் தான் தாங்கி பிடிக்க முயற்சிக்க, “பரவாயில்லை ரூம் எங்கேன்னு சொல்லுங்க. அங்கேயே விட்டுடறேன்…” என அறிவு மிகுதியில் அவன் பேசினான். இந்தமுறை நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்தாள் சுபிக்ஷா.
பிரேமாவால் சண்டையிடவா முடியும்? மகளும் வேறு பரிதாபமாக விழித்துக் கொண்டிருக்க, புதியவன் கிளம்பட்டும் என்று நினைத்துக் கொண்டவர், முன்னே சென்று அறையைக் காட்ட, அவளது அறையின் படுக்கையிலே விட்டான் அவன். அவளுக்குத்தான் மிகவும் தர்ம சங்கடமாக இருந்தது.
இவனோடு இத்தனை நெருக்கத்தில் நடந்து வருபவளை வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டும், முறைத்துக் கொண்டும் நிற்கும் அன்னையை என்ன சொல்லிச் சமாளிப்பது என அவளுக்குத் தெரியவில்லை.
அவனோ அதைப்பற்றி எல்லாம் இம்மியும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. அவளை அமர வைத்துவிட்டு, மருந்து மாத்திரைகளை எடுத்து அருகிலிருந்த டேபிளில் எடுத்து அடுக்கினான்.
“பார்த்து இரு…” ரோபோ போலச் சொல்லிவிட்டுப் போனவன்,
அவளின் அன்னை பிரேமாவிடம் போய் நடந்ததை விளக்கிக் கூறிவிட்டு, “ரொம்ப டையர்டா இருப்பா போல… வலியில முகத்தையும் சுழிச்சிட்டே இருக்கா… தூங்கி எழட்டும். அப்பறம் விசாரிச்சுக்கங்க. எதுவும் திட்டிடாதீங்க அதுக்கும் முகத்தை சுருக்கிக்கறா” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.
ஏதாவது சாப்பிட்டு விட்டுப் போகும்படி பிரேமா வற்புறுத்த அவன் மறுத்து விட்டு வெளியேறிவிட்டான்.
சுபிக்ஷா, அம்மாவின் கேள்விகளுக்குப் பயந்து தூங்குவது போலப் பாசாங்கு செய்ய தொடங்கியவள், அசதியில் உண்மையிலேயே தூங்கியிருந்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் கனவின் பெரும் பகுதியை ஆக்கிரமித்தவன் நவநீதனே!
Nice