Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 19

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 19

அத்தியாயம் – 19

மாலை நேரக் கல்லூரியில் செம்பருத்தியுடன் பயிலும் ஜோஸி அவளிடம் ரகசியமாய் கேட்டாள்.

“உண்மையை சொல்லு அந்த குக் ராஜாவோட கீப் தானே?”

மேனேஜர் – டைப்பிஸ்ட், எம்டி – செக்ரெட்டரி, டாக்டர்-நர்ஸ், எஜமானன்-வேலைக்காரி  என்று வரும் செய்திகளைப்  படித்தும் அது போன்ற ஒன்றிரண்டு சம்பவங்களைக் கேட்டும் இப்படித்தான் நடக்கும் என்ற ஊகத்திற்கு வந்திருக்கும் பெண்களை என்ன செய்ய முடியும்?

“சே சே! லீலாம்மா அப்படியெல்லாம் இல்லை. அவங்க ரொம்ப நல்லவங்க தெரியுமா!” அவசரமாய் மறுத்தாள்.

“நான் கெட்டவங்கன்னா சொல்றேன். உங்க லீலாம்மா ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க. அவங்களும் சரி அவங்களைக் கல்யாணம் பண்ணி வச்ச வீட்லயும் சரி எல்லாரும் பரம்பரை பரம்பரையா ராஜாங்கத்தில் வேலை செய்றவங்க. இவங்க செம்ம அழகா இருப்பார்களாம். நிஜம்தானே”

“நிஜம்தான். ஆனாலும் அவங்களுக்கு எத்தனை வயசாச்சு. இப்ப போயி இப்படி பேசிகிட்டு”

“உங்க ராஜா மட்டும் குமரனா? லீலாம்மாவை விட பத்து வயசாவது அவர் பெரியவராத்தானே இருப்பார். உங்க பெரிய ராஜா வேற ஒண்ணுக்கு ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டவர். சின்ன வயசில் இவங்க மேலயும் ஆசை பட்டுட்டார்.  ராஜா ஆசைப்படும்போது வேலைக்காரியால மறுக்க முடியுமா? 

இந்த தொடர்பு தெரிஞ்சதும் தட்டிக் கேட்ட அவங்க தம்பியைக் கொன்னுட்டு, அந்தப் பழியை அவங்க வீட்டுக்காரர் மேல போட்டு ஜெயிலுக்கு அனுப்பிட்டாராம். லீலாம்மாவை இங்கயே கூட்டிட்டு வந்துட்டாராம்”

“இவ்வளவு விவரமும் உனக்கு எப்படித் தெரியும்?”

“என் வீட்டுக்காரர் ஜெயிலர். அவரு இப்பத்தான் கண்ணூர் ஜெயிலில் ஜாயின் பண்ணார். அங்க இருந்த ஆயுள் கைதி ஒருத்தர் சொன்னாராம். அவருதான் லீலாம்மாவோட கணவராம்”

“இதெல்லாம் என்னால நம்ப முடியல ஜோஸி. எனக்குத் தெரிஞ்சவரை அந்த வீட்டில் இருக்குற எல்லாரும் நல்லவங்க”

“நீ ரொம்ப நல்லவ செம்பருத்தி. அதனால எல்லாரையும் நம்புற. அந்த வீட்டு ஆம்பளைங்க சரியில்லை. அதனால நீயும் பத்திரமா இருந்துக்கோ”

“ரொம்ப நன்றி ஜோஸி. எனக்கெல்லாம் நீ நினைக்கிற மாதிரி பிரச்சனை வராது”

“என்னடி வராது? உன் அழகான கண்ணையும், பூ மலர்ந்த மாதிரி மனசு விட்டு சிரிக்கிற சிரிப்பையும் பாக்குற எல்லாருக்கும் உன்னைப் பிடிக்கும் செம்பருத்தி”

“என்னோட உருவத்தைப் பார்த்தும் இப்படி சொல்ற”

“என்ன உருவம்? முன்னாடி கொஞ்சம் குண்டா இருந்த, இப்ப இளைச்சு, சுருட்டை முடியோட எவ்வளவு லட்சணமா இருக்க தெரியுமா? பசங்க எல்லாரும் எதுக்கு உன்கிட்ட வந்து வந்து பாடத்தில் டவுட் கேட்டு பேசுறாங்கன்னு நினைக்கிற? வாஷவுட் ஆன வானரங்களுக்கு ஏதோ படிப்பில் திடீருன்னு அக்கறை வந்திருச்சாக்கும்”

இந்த செய்தியெல்லாம் செம்பருத்திக்குப் புதிது. என்ன நடக்கிறது? ஒரு ஃபேரி காட் மதர் திடீரென்று அவளது கண்முன் தோன்றி எல்லாவற்றையும் மாற்றி விட்டாரா என்ன!

“நீ கிளம்பலையாக்கா?” ஓவியா உலுக்கியதும்தான் நினைவுலகத்திற்கு வந்தாள். 

“இதோ வந்துட்டேன். யாரெல்லாம் போறோம்?”

“நீ, நான், எங்கம்மா, சேச்சி, கார் ஓட்ட கோபன் அண்ணன் அப்பறம் லவங்கம் மாமா”

“பாலா அண்ணன் வேற ஊருக்குப் போயிருக்காரே. கோபனும், லவங்கமும் நம்ம கூட வந்துட்டா வேற யாரு அபிராம் சாரைப் பாத்துக்கிறது?”

“அபிராம் சார்தான் நம்ம போயிட்டு வர பெர்மிசன் கொடுத்திருக்கார். அரை நாள் தானே அவர் சமாளிச்சுக்குவாராம்”

“இருந்தாலும் அவரு கூட யாராவது இருந்தா நல்லது. நான் வேணும்னா இருக்கட்டுமா?”

அதெல்லாம் தேவையில்லை என்று அபிராமே சொல்லியதும் அவளும் கிளம்பிவிட்டாள். 

“சார் கூல்ட்ரிங்க்ஸ் எதுவும் குடிக்கல போலிருக்கு”

“ஆமாம், என்னவோ தோணல”

“இத்தனை பாட்டில் இருக்கே. நான் ஒண்ணு எடுத்துக்கவா?” ரொம்ப நாட்களாக ஏன் இவன் தினமும் கூல்ட்ரிங்க்ஸ் கேட்கிறான் என்று சந்தேகம் அவளுக்கு. ஒரு நாளாவது அதனைக் குடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள்.

“உனக்கு சந்தேக புத்தி ஜாஸ்தி செம்பருத்தி. இந்த பாட்டிலில் எதை வேணும்னாலும் நீயே எடுத்துக்கோ” 

அபிராமே சொன்னதும் அதில் ஒன்றினை எடுத்துக்கொண்டவள், “இன்னொன்னும் எடுத்துக்குறேன் ஓவியாவுக்கு இல்லைன்னா என்னுதைப் புடிங்கிக்குவா”

“தொலை” என்று வழி அனுப்பி வைத்தான். 

டப்பள்ளி  தேவாலயத்தின் பிரம்மாண்டத்தைப் பார்க்க இரு கண்கள் போதவில்லை செம்பருத்திக்கு. 

“அப்படியே ஹெலிகாப்டரில் பறந்து இந்த தேவாலயத்தோட அழகை ரசிக்கணும்”

தீராத ஆசைகள் இன்று ஒரே நாளில் எப்படித் தீரும். அவளுக்கு நிறைய நிறைய புதிய ஆசைகள் துளிர்விட்டன. ஆசையே வாழ்வதற்கான ஊக்க சக்தி. ஊர் சுற்றும் ஆசை, சாப்பாட்டு ஆசை, துணி மணி ஆசை இதெல்லாம் இல்லாவிட்டால் இந்த உலகம் எப்படி இயங்கும்?  அது பேராசையாகும் பொழுதுதான் அழிவு சக்தியாக மாறுகிறது.

ஊரு சுற்றல், உணவு, உடை, சம்பாத்தியம், பணம், பதவி இவை எல்லாம் ஆசைகள். ஆனால் அவினாஷை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று மனது துடிக்கிறதே. இது ஆசையா பேராசையா? ரமேஷ் அத்தானை நிச்சயம் செய்த பொழுது கூட இந்த அளவுக்கு அவளுக்கு பரபரப்பா, ஆவலோ இருந்ததில்லை. சொல்லப்போனால் அவன் விடுதியிலிருந்து அவளது வீட்டிற்கு வந்து தங்கும் நாட்களில் கூட ‘ஐயோ இவனுக்கும் இவனைப் பாக்க வர்ற பிரெண்ட்ஸ்க்கும்  டீ போட்டுக் கொடுத்தே என் வாழ்க்கை கழிஞ்சுடும் போலிருக்கே’ என்று நினைத்தே பயந்து கொண்டிருந்தாள். நல்லவேளை அந்தக் கல்யாணம் நடக்கல. 

சே இனிமேல் அவினாஷைப் பத்தி நினைக்கவே கூடாது என்று மனதில் எண்ணிக் கொண்டாலும் அவளது மேனியைத் தழுவி இருந்த அந்த ப்ளூ குர்த்தி அவனது நினைவினைப் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறதே. 

“அக்கா நம்ம எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம் வா… ” என்று அழைத்தாள் ஓவியா. அனைவருக்கும் அந்த அவுட்டிங்க் மிக மிக சந்தோஷமாக இருந்தது. 

“லீலா விழுந்துடாதே” தவறி விழ இருந்த லீலாம்மாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார் லவங்கம். 

லவங்கம்  பட்டாளத்தில் வேலை செய்தவர். ஓய்வு பெற்றதும் ஊருக்கு வந்தவருக்கு குடும்பம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. மனைவி பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்க்கை அமைத்துக் கொண்டதாகக் கேள்வி. அவரும் துக்கப்படாமல் அவர் குடும்பத்தில் செய்து வந்த வேட்டை நாய் வளர்ப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். 

மதுரைப் பக்கம் வேட்டை நாய் வளர்ப்பு என்பது ஒரு கலை. பரம்பரை பரம்பரையாக சிப்பிப் பாறை, கன்னி, ராஜபாளையம் என்று நாய் வளர்ப்பில் பி எச் டி படிக்கும் அளவிற்கு நிபுணத்துவம் பெற்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் நாய் என்று சொல்வதில்லை. பிள்ளை என்றுதான் அவற்றை அன்புடன் சொல்வார்கள். அந்தக் காலத்தில் வேட்டை நாய் வளர்த்து ஜமீன் குடும்பங்களுக்குத் தருவது இவர்கள் தொழில். ஒரு ஊரில் நாயைப் பார்க்க வருவதென்றால் பெண் பார்க்க வருவது போல வருவார்களாம். 

லவங்கத்தின் பாட்டன் பூட்டன் என்று அனைவரும் இதே தொழில்தான் செய்து வந்தனராம். வீட்டில் குறைந்தது இருபது முப்பது நாய்களாவது இருக்கும் என்பார். அதைவிட நகைச்சுவையான செய்தி அவர்களின் நாய்களில் இருந்து ஒரு குட்டியைக் கேட்க வேண்டும் என்ற ஆசையில் அவரது அக்காவை சம்பந்தம் முடிக்க வந்தார்களாம். லவங்கத்தின் தாத்தாவோ “பொண்ணைக் கூடக் கல்யாணம் பண்ணித் தாரேன். இதை சாக்கா வச்சுட்டு நாயைக் கேட்ட கல்யாணத்தை நிறுத்திப் புடுவேன்” என்றாராம். 

லவங்கம் பேசுவதை இன்று முழுவதும் கேட்கலாம். அவ்வளவு விஷயம் தெரிந்தவர். லீல்லாம்மாவைப் போல அவருக்கும் இந்த ஜமீன் குடும்பத்தில் மிகவும் நெருக்கம். 

“நீங்க ஏன் இங்க வந்துட்டீங்க மாமா?”

“வேட்டை நாய் வளர்ப்புன்னா சும்மாவா? இப்ப இருக்குற பாரின் நாய் மாதிரி கடைல சாப்பாடு வாங்கிப் போட முடியாது. நல்ல தானியம் வாங்கி வீட்டுல தனியா சமைக்கணும். அவனுங்களுக்கு கறி தனி பக்குவத்தில் செய்யனும். கட்டிப் போடுற எடம் கூட பாக்கணும் இல்லைன்னா காலு வளஞ்சுடும். தனி ஒருத்தனா நின்னு கவனிக்க முடியல. அப்பத்தான் அய்யா இங்க அரண்மனைல வீட்டை நாயை வளர்க்க ஆள் வேணும் வர்றியான்னு கேட்டு அனுப்பினார். கரும்பு தின்னக் கூலியான்னு நானும் கிளம்பி வந்துட்டேன்”

இவரும் லீலாம்மாவைப் போலவே வேலையை ரசித்து செய்கிறார். 

“நம்ம எல்லாரும் இங்க வந்துட்டோமே.. அபிராம் சாரை யாரு பாத்துக்குவா?”

“நம்ம புள்ளைங்க நாலு பேரையும் அவுத்து விட்டுட்டு வந்திருக்கேன். ஒரு ஈ காக்காவை எல்லைக்குள்ள விடமாட்டானுங்க”

மீசை முறுக்கினார் லவங்கம். இருந்தாலும் வயிற்றைப் பிசைந்தது செம்பருத்திக்கு. 

“லீலாம்மா ரொம்ப அழகா இருக்கு சர்ச்சு. சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?” என்று லவங்கம் கேட்டார். 

“என்ன கேட்பேன் லவங்கம் உங்களுக்குத் தெரியாதா?”

“எங்களுக்குத் தெரியாது சேச்சி சொல்லுங்களேன்” என்றாள் ஓவியா. 

“பெரிய அய்யா நல்லாருக்கணும்னு தான் வேண்டிக்கிட்டேன். அவரு பிரச்சனை எல்லாம் தீர்ந்து அபிராமோட ஒண்ணு சேரணும். அபிராம் அய்யா மனசும் உடம்பும் சரியாகி அவருக்கு நல்ல காலம் பிறக்கணும்”

“உனக்குன்னு ஒண்ணும் வேண்டிக்கலையா லீலாம்மா?” என்றார் லவங்கம். 

“அய்யாவைத் தவிர எனக்குன்னு யாரு இருக்கா லவங்கம். நானும் தனி மரம்தான். அய்யாதான் என் தெய்வம். அவரு குடும்பம்தான் என் குடும்பம். அவரு பிள்ளைங்கதான் என் பிள்ளைங்க”

“நான் சேச்சி. நான் உங்க பிள்ளை இல்லையா?” என்றாள் ஓவியா சிணுங்கிக் கொண்டே. 

“நீதான் என்னோட கடைசி பிள்ளை. இந்த செம்பருத்தி உனக்கு அக்கா. நீங்க ரெண்டு பேரும் என் மகள்தான். என் குடும்பம் பெருசு சரியா?”

“போங்க சேச்சி. நான் சேச்சி நல்லாருக்கணும்னு வேண்டிக்கிட்டேன். அக்கா நீயும் அப்படித்தானே வேண்டிக்கிட்ட?” செம்பருத்தியின் ஆமாம் என்ற தலை அசைப்பைப் பார்த்த பின் “நீங்க என்னடான்னா பெரியய்யா வீட்டை மட்டும் நல்லாருக்கணும்னு வேண்டிருக்கிங்க. அவரு மேலதான் உங்களுக்கு லவ்வு சேச்சி”

“ஆமாண்டி. பெரியய்யா மேல எனக்கு பயங்கர லவ்வு. ஏன்னா நான் பிரச்சனையில் இருந்தப்ப எல்லாம் அவர்தான் காப்பாத்தினார். ஆனால் அதுக்காக உங்களை எல்லாம் மறந்துட்டேன்னு சொல்லாதிங்க மனசு கஷ்டமா இருக்கு”

“சரி சொல்லல. நீங்க என்ன வேண்டிக்கிட்டீங்க லவங்கம் மாமா?” மனதில் பட்டதை உடனே கொட்டிவிடும் ஓவியாவும் லவங்கத்திடம் கேட்க 

“லீலாம்மா இப்ப மாதிரியே எப்பவும் சந்தோசமா இருக்கணும். நிறைய ஆயுசை குடு ஏசுசாமின்னு கேட்டேன்”

அவரைப் பார்த்த லீலாம்மா சேச்சியின் கண்களில் நீர் “இந்த பொறந்த நாள்தான் எனக்குன்னு வேண்டிக்க சொந்தங்கள் கிடைச்சிருக்கு”

“சரி நம்ம கிளம்பலாமா? இன்னைக்கு கொச்சி ஹோட்டலில் நமக்குன்னு லஞ்சு ஏற்பாடு பண்ணிருக்காங்களாம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். 

அவர்கள் முன்னால் வேகமாய் சென்றுவிட, லீலாம்மா இறங்க உதவி செய்தபடி லவங்கம் சொன்னார் “இந்த பொறந்தநாள் மட்டும் இல்ல லீலா பல வருஷங்களா உன் பொறந்தநாள் அன்னைக்கு இனியாவது நீ சந்தோசமா இருக்கணும்னு தான் சாமி கும்முட்டுட்டு இருக்கேன்”

ஏற்க்கனவே லவங்கத்தின் அக்கறையை உணர்ந்திருந்தாலும் மனசெல்லாம் இனிப்பாய் இனித்தது லீலாம்மாவுக்கு. 

அடுத்தபடியாக அதிர்ச்சி காத்திருந்தது செம்பருத்திக்கு. உணவகத்தில் அவர்கள் அனைவருக்கும் டேபிள் ரிசெர்வ் செய்யப்பட்டு ஸ்பெஷல் உணவு வகைகள் சமைக்கப் பட்டிருந்தன. 

“வாங்க, வாங்க” என்று வரவேற்ற மேனேஜர் அனைவரையும் சென்று அமர வைத்தார். அவர்களுக்குப் பரிமாற மூன்று நபர்களை ஏற்பாடு செய்திருந்தனர். அன்றைய ஸ்பெஷல் மகராஜா லஞ்ச். ஒரு மேஜையை மறைக்கும் அளவிற்கு பெரிய  தாமிரத் தட்டு. அதில் குட்டி குட்டியாய் கிண்ணங்கள். 

வடநாட்டு அரசர்கள்  குடும்பத்தில் இப்படித்தான் ஒரே தட்டில் அனைவரும் உண்ணுவார்களாம். தாம்பாளத்தட்டில் கைகழுவ சொன்னதே அவர்களுக்கு வியப்பாக இருந்தது. 

சேச்சியின் விருப்பப்படி அன்று சைவ உணவு. 

கேசர்  ஸ்ரீகண்ட், ஹல்வா என்று  இனிப்புடன் தொடங்கிய உணவு, ரொட்டி, தெப்லா, ஃபுல்கா, பைங்கன் கட்லட், ஆலூ, பன்னீர், சுவீட் கடி, சோயா பிரியாணி  என்று முப்பது நாற்பது வகைகளாக விரிந்தது. அப்படி ஒரு விருந்தினை செம்பருத்தி சுவைத்ததில்லை. 

உணவினை முடித்ததும் அந்த அறையே இருளில் மூழ்கியது. “ஹாப்பி பெர்த் டே டூ  யூ” என்ற பாடல் ஒலிக்க, அனைவரும் எதிர்பாராத வண்ணம் பெரிய கேக்கினை ஏந்தியபடியே  ஒரு உருவம் உள்ளே வந்தது. கேக்கினை மேஜை மேல் வைத்ததும் விளக்கு எரிய  அந்த உருவம் 

“ஹாப்பி பெர்த்டே லீலாம்மா டார்லிங்” என்றபடி அவரை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்தினைத் தெரிவித்தது. 

“அவினாஷ்… எப்ப இங்க வந்த?”

“உங்களுக்கு இது முக்கியமான நாள் இல்லையா. உங்களுக்கு வேண்டியதை செஞ்சுத்தர்ற  பொறுப்பை பெரியய்யா என்கிட்டே கொடுத்திருக்கார்”

“நன்றி மோனே” சேச்சி கலங்க. 

“டார்லிங், நான் இருக்கிறப்ப நீங்க கலங்கலாமா?” என்று அணைத்துக்  கொண்ட அவினாஷின் கண்கள் அப்படியே மெதுவாகத் திரும்பி சாதாரணமாகப் பார்ப்பதை போல செம்பருத்தியைப் பார்த்தது. அவனது இதழ்களில் ஒரு ஸ்நேகப் புன்னகை அவனது புருவங்கள் உயர்ந்து எப்படி இருக்க? என்று கேட்டது. 

செம்பருத்தியின் விழிகளை உரசிச் சென்ற அவனது பார்வை அவளது மனதில் வண்ண வண்ண மத்தாப்புக்களைக்  கொளுத்தி  மனதை மகிழ்ச்சியில் சிதறடித்தது. .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18

அத்தியாயம் – 18   அவினாஷ் விமானப்பயணத்தின் முடிவில் டோக்கியோவில் இறங்கியபோது மிகுந்த களைப்புடன் காணப்பட்டான். அவனுக்கு ஓயாத வேலைகள். அவனது வேலைகளைப் பார்ப்பதுடன் சேர்த்து அபிராமின் தொழிலையும் கவனிக்க வேண்டும். இது அதிக சுமைதான். ஆனால் சுமையைத் தாங்கும் வயதுதானே

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 2தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 2

அத்தியாயம் – 2    வக்கீல் உறுதியாகச் சொல்லிவிட்டார்    “இந்த வழக்கு கோர்ட்டிலேயே நிக்காதும்மா… “   “எப்படி சார்… முப்பது லட்சம் தந்திருக்கோம். பொன் விளையும் நிலம் எல்லாம் வித்துத்தான் கொடுத்தோம். ஊருக்கே அது தெரியும். வாங்கினவங்கதான் நன்றி

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 16தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 16

அத்தியாயம் – 16   விடியலில் எழுந்த செம்பருத்தி அவளது டைரியில் சம்பவங்களை எழுதிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சோதனைகள் அவற்றை கடந்த விதம் எல்லாம் அதில் பதிக்கப் பட்டிருந்தன.    பின் ஒரு காலத்தில் நான் சுயசரிதை எழுதினா