Tamil Madhura சுகமதியின் இரவும் நிலவும் சுகமதியின் ‘இரவும் நிலவும் – 2’

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 2’

இரவும் நிலவும் – 2

 

ஒரு அரசனின் தோரணை என்ற வர்ணனை நவநீதனுக்கு அத்தனை பொருத்தம்! அவனது நடையும், அவன் அமர்ந்திருந்த தோரணையும் அத்தனை எழிலாய், கம்பீரமாய் இருந்தது.

 

அவன் அலுவலகத்திற்கு வரும்போதே சுபிக்ஷா எதிர்கொண்டு வரவேற்றாள். மலர் கொத்து வாங்கி பரிசளித்து வரவேற்க அவளுக்கும் ஆசை தான்! ஆனால், தனது அதிகப்படியான ஆர்வம் வெளிப்பட்டு விடுமோ என அடக்கி வாசித்தாள். அவனைப் பார்த்தபிறகு நல்லவேளை வாங்கவில்லை என்றும் தோன்றிற்று!

 

நவநீதனின் ஓவியங்களை ரசித்தபோது சற்று வயதானவராக இருக்கலாம் என்று அனுமானித்திருந்தாள். கிட்டத்தட்ட ஒரு தலைமுறை மூத்தவரை எதிர்பார்த்தவள், இளம் வயதினனை எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்து வியந்த மனதை உடனேயே அடக்கிக்கொண்டு இன்முகமாக அவனை வரவேற்றாள்.

 

இவள் சொன்ன “குட் மார்னிங்” வாழ்த்திற்கு மெல்லிய தலையசைப்பு மட்டும் தான் அவனது பதில்.

 

மீட்டிங் அறைக்கு அழைத்துச் சென்று, அவன் என்ன அருந்துகிறான் என விசாரித்து வரவழைத்து என அவனைப் பார்த்து பார்த்து உபசரித்தபோதும் பார்மாலிட்டிக்கு ஒரு நன்றியோ, மருந்துக்குச் சிறு புன்னகையோ கூட இல்லை.

 

அதிசயித்து பார்த்தாள் பெண்! நிறைய கஷ்டமர்ஸ் கூட இப்படி தானே இருக்காங்க… பெரிய மனுஷ தோரணை போல இருக்கு என தனக்குள் பரிகசித்துக் கொண்டாலும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

 

பேச்சு அவர்களின் தற்போதைய பிராஜெக்ட் பற்றியும், என்ன மாதிரியான ஓவியங்கள் பொருந்தும் என்பது குறித்துத் தொடங்க, நவநீதனின் முத்துக்கள் கொஞ்சம் உதிர்ந்தது.

 

அதன்பிறகு அவர்களது சந்திப்புகள் எல்லாம் தொழில் நிமித்தமாக மட்டுமே! அவனது அதிகப்படி ஆர்வம் காட்டாத தன்மையும், தான் உண்டு தன் வேலையுண்டு இருக்கும் ரகமும், அசாத்திய பொறுமையும் அவன்மீது அவளுக்கு நல்லெண்ணத்தை விதைக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்!

 

இரண்டு, மூன்று முறை பொதுவான சந்திப்பிற்குப் பின்னர், “கல்யாண மண்டபம் ஒன்னு வொர்க் பண்ணிட்டு இருக்கேன் நவநீதன் சார். நீங்க வந்து ஒருமுறை பார்த்துட்டு எந்தமாதிரி ஓவியங்கள் பொருத்தமா இருக்கும்ன்னு சஜ்ஜஷன் சொல்லுங்களேன்” என்று கேட்டிருந்தாள்.

 

“ஸுயூர்…” என்று வழக்கம்போல ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவன், ஒரு நொடி மௌனத்தின் பின், “அந்த சார் வேண்டாம் சுபிக்ஷா” என்றான் கணிக்க முடியாத முகபாவத்துடன்.

 

பிதுங்கத் துடித்த கீழுதட்டை மரியாதை நிமித்தம் வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டாள். என்ன ஒரு முன்னேற்றம்! அதிக வார்த்தைகள் கோர்த்தது மட்டுமல்ல அவளது பெயரையும் உச்சரித்து விட்டானே!

 

மறுநாள் அவள் வேலை செய்து கொண்டிருந்த போது நவநீதன் அந்த திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்.

 

எங்கிருக்கிறது என விசாரித்துத் தெரிந்து கொண்டான் தான். ஆனால், கேட்ட மறுநாளே வந்து நிற்பான் என அவள் நினைத்திருக்கவில்லை. வியப்பில் அவளின் புருவங்கள் மேலேறியது.

 

வந்தவனோ வெகு ஆர்வமாய் அவ்விடத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். நல்ல விசாலமான வெட்டிங் ஹால். மேற்கூரையில் சிறியதும், அகலமானதுமான நீளமான டிசைன்களில் பால்ஸ் சீலிங் அமைக்கப்பட்டிருக்க, அதன் இடைவெளிகளில் எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

 

முன்புறம் திருமண மேடையை தாண்டி கீழே இருந்த இடத்தில், ஓரங்களில் இரு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தது. பளீர் வெண்ணிறம் பூசப்பட்டிருந்த அவ்விரு தூண்களையும் சிறிய அரைவட்டம் போல இணைத்து பால்ஸ் சீலிங் அமைத்திருந்தனர். அதன்மேல் சீரிய இடைவெளியில் அமைத்திருந்த சிறு சிறு வட்டங்களில் ஏற்கனவே பல்புகள் பொறுத்தப்பட்டிருந்தன. ஒளிர்ந்தால் அவ்விடம் பார்க்கப் பிரமாதமாக இருக்கும் என்று தோன்றியது.

 

இருபுற பக்கவாட்டு சுவர்களிலும் வெளிர் மஞ்சள் நிறம் அடித்திருந்தனர். அந்த சுவரில் சதுர வடிவில் உள்நோக்கி வடிவமைக்கப் பட்டிருந்த பகுதிகள் பளீர் வெண்ணிறத்தில் சீரிய இடைவெளிகளில் இருந்தது. அங்கு தான் ஓவியங்களை மாட்டத் திட்டமிட்டிருக்கிறாள் என்று நவநீதன் கணித்தான்.

 

மேடையின் நடுவில் பால்ஸ் சீலிங்கில் ஏற்கனவே தேவையான விளக்குகள் சிறு சிறு அரை வட்ட வடிவில் பொருத்தப்பட்டிருக்க, அதன் இடைவெளிகளில் கிரிஸ்டல் சரங்கள் தொங்க விடப்படும் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. விளக்குகள் எரியும்போது இந்த கிரிஸ்டல் சரங்களில் அதன் ஒளி பட்டு எதிரொலித்து வெகு பிரகாசத்தை அளிக்கும்.

 

அவளின் வேலைப்பாடுகள் மிகவும் கவரும் விதமாக இருக்க, “குட் வொர்க்” என்றான் மெச்சுதலாக.

 

அவனை அதிசயம் போலப் பார்த்தவளை, “நீங்க ஒவ்வொரு முறையும் தர ரியாக்ஷன் பார்த்தா… என்னவோ பேசவே தெரியாம நான் இத்தனை நாளா இருந்த மாதிரியும், இப்ப பேச தொடங்கின மாதிரியும் இருக்கு” என்றான் அரும்ப தொடங்கிய புன்னகையுடன்.

 

அவளுக்கும் புன்னகை வந்துவிட்டது. “அதில்லை சார்… நீங்க எண்ணி எண்ணி பேசுவீங்களா?” என்று தயக்கத்துடன் இழுத்தாள்.

 

அதற்கு அவனோ, “அது ஒன்னுமில்லை முன்னாடி நான் இந்தியன் பேங்க்ல கேஷியரா வேலை பார்த்துட்டு இருந்தேன்” என சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல,

 

அவளும் சரியாக உள்வாங்காமல், “ஓஹோ…” என முதலில் கேட்டுக் கொண்டவள், பிறகு புரிந்து விடவும், “சார்…” என்றாள் பாவமாக.

 

“இந்த சாரை விட மாட்டீங்க போல”

 

“அது பழகிடுச்சு. சாரி நவநீதன்” என உடனேயே மாற்றிக் கொண்டாள்.

 

அவள் பேசும்போது அவனது விழிகள் அவளின் காதோரம் புரண்ட முடிகளிலும், காதில் அசைந்தாடிய தோட்டிலும் நிலைத்து மீண்டது. அவனுள் சில நாட்களாக ஏதோ ஓர் இனம்புரியா உணர்வு… சரியாகச் சொல்லப் போனால் இவளைப் பார்த்ததிலிருந்து என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இதயத்தின் ஏதோ ஒரு பகுதி தடுமாறுகிறது. அதை சிரமப்பட்டு கட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தான்.

முழு பெயரையும் மென்மையாக உச்சரித்தவளிடம், “நீட்டி முழக்க வேண்டிய அவசியமும் இல்லை…” என்றான் சிறு தோள் குலுக்கலுடன்.

 

நண்பர்களைப் போலச் சுருக்கமான பெயர் அழைப்பா? பேசவே கணக்கு பார்த்தவன் இவன்தானா என்றிருந்தது சுபிக்ஷாவிற்கு.

 

“என்ன பதிலே சொல்ல மாட்டீங்கறீங்க”

 

மெலிதாக மலர்ந்த புன்னகையுடன், “நவீன், நீதன் எப்படி கூப்பிடலாம்ன்னு யோசிக்கிறேன்… உங்க நவீன ஓவியங்களால முதல் பேர் வெகு பொருத்தம் தான்… ஆனா நீதன் அப்படின்னா கருணைன்னு அர்த்தம் வருமே…” என்பவள் யோசிப்பது போலப் பாவனை செய்துவிட்டு, “உங்களை பத்தி எதுவுமே தெரியாதே ரெண்டாவது பெயர் உங்களுக்கு எந்தளவு பொருந்தும்ன்னு யோசிக்க முடியலையே…” என்று கையை விரித்து பாவனையாக சொல்ல, சில நொடிகள் அவளிலேயே தன் பார்வையைப் பதித்தவனின் விழிகளில் ரசனை பாவம் அதிகமாகவே இருந்தது.

 

அந்த பார்வையின் வீரியம் மெல்லிய தடுமாற்றத்தைத் தந்ததோடு, கன்னங்களும் சூடேறுவது போல சுபிக்ஷா உணர்ந்தாள்.

 

“என்ன?” என்று எடுப்பாகக் கேட்க நினைத்தாலும் முடிந்தால் தானே!  அவளின் பேச்சுக்களை மொத்தமாகப் பெயர் தெரியாத ஏதோ ஓர் அலை அடித்துச் சென்று கொண்டிருந்தது. அதிலிருந்து தன் பேச்சை மீட்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.

 

அதற்குள் மீண்டும் ஒரு பெரிய அலை போல அவன் குரல் கேட்டிருந்தது. “என்னைப்பத்தி தெரிஞ்சுக்கணுமா?” என்ற ஆழ்ந்த குரலில் அவளது விழிகளை ஊடுருவிய வண்ணம்.

 

இவன் கண்கள் ஏன் இப்படி அநியாயத்திற்குச் சிரிக்கிறது? பிரயத்தனப்பட்டு மீட்கத் தொடங்கிய பேச்சை, மொத்தமாகத் தொலைத்திருந்தவள், என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தாள்.

 

அவளைப் பாடுபடுத்தியவனோ சிறு தலையசைப்பில் அவளிடம் விடைபெற்றுச் சென்று விட்டிருந்தான். அவள் தலையும் தன்னைப்போல ஆடி அவனுக்கு விடை கொடுத்தது.

முதல் மாடியில் இருக்கும் தன் அறை பால்கனியில் நின்றபடி இரவையும் நிலவையும் ரசித்துக் கொண்டிருந்தான் நவநீதன்.

 

அவனுடைய உலகம் புதுவகையானது. அதில் எல்லாமே அவன் மட்டும் தான்! இதுவரை யாரையும் அவன் அனுமதித்தது இல்லை! அனுமதிக்கத் தோன்றியதும் இல்லை. அதோடு இதுவரையும் தனக்கான எல்லையைத் தாண்டி அவன் சென்றதே இல்லை. அந்த எல்லையை தனக்குத்தானே வகுத்தவனும் அவன் மட்டுமே தான்!

ஆனால், சுபிக்ஷா என்ற பெண் அவன் வாழ்வில் வந்ததிலிருந்து சிறு சலனம்! அனைவரையும் போல அவளையும் தள்ளி நிறுத்த தான் ஆரம்பத்தில் முயன்றான். ஆனால், ஏதோ ஓர் ஈர்ப்பு விசை அவளை நோக்கி இழுப்பதாக அவனுக்குத் தோன்றியது. இது எங்குக் கொண்டு போய் முடியும் என்று அவனுக்கு தெரியாமலில்லை. அதனாலேயே வெகு கவனமாகத்தான் இருந்து வந்தான்.

ஆனால், இன்று அவனையும் அறியாமல் சில அடிகளை எடுத்து வைத்திருந்தான். தன் வாழ்வின் புதிய அத்தியாயத்தை ஏற்க முடியாமல், வெகுநேர எதை எதையோ யோசித்த வண்ணம் கால்வலிக்க நின்றவன் உறங்க வருவதற்கு வெகுநேரம் பிடித்தது.

கால தாமதமாக உறங்கியதாலோ என்னவோ விழிப்பும் விடியலில் இல்லை. அதை நினைவு படுத்தவோ, எழுப்பி விடவோ அந்த வீட்டில் யாரும் இருந்தால் தானே! அந்த வீட்டில் வசிக்கும் ஒரே ஜீவன் அவன் மட்டும் தான்! பெற்றோர்கள், தங்கை என அவனுக்கென குடும்பம் இருந்தாலும் அவனது வாசஸ்தலம் தனியாகத்தான். அவனது தனிமையில் யாரையும் இணைத்துக் கொள்ள அவனுக்குப் பிடிப்பதில்லை!

இந்த வரையறைக்குள் மனைவி என்ற உறவு எங்கனம் பொருந்தும்? பொருத்திப்பார்க்கப் பெருமுயற்சி எடுக்கும் நவநீதன் அடையப்போகும் பேறு என்னவாக இருக்கும்? மனைவி என்ற உறவுக்கு வலிகளும் வேதனைகளுமே மிதமிஞ்சி இருக்கப் போகிறது.

சோம்பலோடு எழுந்தவனுக்கு எதையுமே செய்யப் பிடிக்கவில்லை! மீண்டும் ஒரு குட்டி உறக்கம் போடலாம் என்ற எண்ணத்திலிருந்தவனை கைப்பேசியின் அழைப்பு தடுத்தது. சுபிக்ஷா தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.

பொதுவாக குறுஞ்செய்தி அனுப்பி அனுமதி கேட்ட பிறகே அழைப்பாள். இன்று என்ன என்ற யோசனையோடே அழைப்பை ஏற்க, “வீட்டிலேயா இருக்கீங்க…” என்றாள் மென் குரலில்.

தன்போல எரிச்சல் வந்தது. அதெல்லாம் இவளுக்கு எதுக்கு என்பதாக! “ஹ்ம்ம்…” என்று மட்டும் சொன்னான் எரிச்சலை அடக்கியபடி. அவனது எரிச்சல் அவளுக்கு புரியவில்லை.

அதே மென்குரலில், அவன் ஏரியாவில் இருக்கும் மருத்துவமனையின் பெயர் ஒன்றைச் சொல்லி, அங்கு வர முடியுமா என்று அவள் கேட்டதும், அவனுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது.

“ஹாஸ்பிட்டலா…? என்ன? என்ன ஆச்சு?” என்றான் பதற்றத்துடன்.

“இல்லை… பயப்படற மாதிரி எதுவும் இல்லை… கொஞ்சம் வாங்களேன் பிளீஸ்…” என்றாள் மீண்டும் மெதுவான குரலில்.

மெதுவான குரலா? இல்லை சோர்வில் அப்படிப் பேசுகிறாளா? அதற்கு மேல் அவனால் தாமதிக்க முடியவில்லை. உடனே அவசரகதியில் கிளம்பி அவள் சொன்ன மருத்துவமனைக்கு விரைந்திருந்தான்.

வலது காலில் பெரிய கட்டுடன் சோர்வாக ரிசெப்ஷன் ஹாலில் அமர்ந்திருந்தாள். அவளது கோலத்தைப் பார்த்ததும் எரிச்சல் தான் வந்தது.

“எங்கே விழுந்து வெச்ச?” என்றான் கோபத்துடன். நவீனின் ஆத்திர குரல் கேட்டு பதறியடித்துக் கொண்டு சுபிக்ஷா திரும்பினாள்.

அம்மாவின் வசவுக்குப் பயந்து இவனை அழைத்தால்… இவன் என்ன அதற்கும் மேல் இருப்பான் போல… என மிரண்டு விழித்துக் கொண்டிருந்தாள் சுபிக்ஷா.

அவளின் பார்வையில் என்ன உணர்ந்தானோ… “சாரி…” என்றவன், அப்பொழுதும் இயல்புக்குத் திரும்பவில்லை என்பதை அவனது இறுக்க முகமே சொன்னது.

“என்ன ஆச்சு?” என்றான் கட்டுப்படுத்திய எரிச்சலுடன்.

“இன்டோர் பிளாண்ட்ஸ் வாங்க தேன்மலர் நர்ஸரி வந்திருந்தேன். அங்கே… அங்கே… ஒரு தொட்டி… நான் கவனமா தான் வந்தேன். அது எப்படி விழுந்துச்சுன்னே தெரியலை…” என்று விளக்கம் சொல்லிவிட்டு,

“அப்பாவும், அண்ணாவும் சென்னைக்கு ஒரு வேலை விஷயமா போயிருக்காங்க. அம்மா பயப்படுவாங்க. என்னோட கார்ட் கொண்டுவர மறந்துட்டேன். அதுதான் இங்கே பக்கத்துல நீங்க இருக்கீங்கன்னு…” தயக்கத்தோடு அவனை அழைத்த காரணத்தைக் கூறினாள்.

அவனை ஏன் அழைத்தாள் என்று இன்னமும் அவனுக்கு விளங்கவில்லை. “என்னன்னு தெளிவா சொல்லு… உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போகணுமா? போன் பண்ணும்போதே தெளிவா சொல்லியிருக்க வேண்டியது தானே கார் எடுத்துட்டு வந்திருப்பேன். இப்ப பைக்ல தான் வந்தேன்” என எரிச்சல் பட்டவன், “இரு போயி கார் கொண்டு வரேன்…” என திரும்பப் போகவும்,

“நவீன்…” என்று சோர்வாக அழைத்தாள்.

“ம்ப்ச்… என்ன?” அலுப்புடன் அவன் கேட்க, “இங்கே பே பண்ண என்கிட்ட மணி இல்லை. உங்க அக்கவுண்ட் நம்பர் சொன்னா வீட்டுக்கு போயி டிரான்ஸ்பெர் பண்ணிடறேன்…” என்றாள் சோர்வான குரலில் வலியில் சுருக்கிய முகத்துடன்.

அவளிடமிருந்து பில்லை வெடுக்கெனப் பிடுங்கியவன் அதைக் கட்டிவிட்டு வந்தான். “அந்த நர்ஸரி காரனுங்க வரலையா?” என்று கடுப்புடன் கேட்க, “அங்கே வேலை செஞ்சவங்க தான் ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்தாங்க…” என்றாள் முணுமுணுப்பாக.

“இப்ப எப்படி வீட்டுக்கு போவ?”

இவன் ஏன் இப்படி நக்கல் செய்கிறான்? நான் என்ன வேண்டுமென்றா காயப்பட்டுக் கொண்டு இங்கிருக்கிறேன் ஏற்கனவே வலியில் இருந்தவளுக்கு அவனது ஒட்டாத தன்மை கடுப்பை தந்தது. நேற்று இன்முகமாகப் பேசியவன் இவன்தானா எனச் சந்தேகம் கூட வந்தது.

— தொடரும்…

1 thought on “சுகமதியின் ‘இரவும் நிலவும் – 2’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 7’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 7’

இரவும் நிலவும் – 7   நவநீதன், சுபிக்ஷா திருமணம் நடக்க வேண்டும் என்று அதிக முனைப்போடு செயல்பட்டது அகல்யா என்றால், ஏதாவது வழி கிடைக்காதா இந்த திருமண பேச்சிற்கு தடை சொல்வதற்கு எனத் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தவன் வருணே!  

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 4’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 4’

இரவும் நிலவும் – 4   காலில் அடிபட்டு வீட்டில் ஓய்வாகக் கிடந்த இந்த இரண்டு வார கால கட்டத்துக்குள் பூமி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கிறதோ என்று சுபிக்ஷாவிற்கு பலத்த சந்தேகம் வந்து விட்டது.   அந்தளவு பழைய மாதிரி உம்மணாமூஞ்சியாக

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 10’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 10’

இரவும் நிலவும் – 10 தனிமை விரும்பி என்று தன்னாலேயே வரையறுக்கப்பட்டு… சொந்த மனைவிக்கே தனியறை தந்து விலகி நிற்கும் கணவனை எத்தனை நாட்களுக்கு ஒரு மனைவியால் பொறுத்துப் போக முடியும்?   என்னதான் சுபிக்ஷாவிற்கு நவநீதன் மீது கடலளவு நேசம்