தஞ்சாவூர் மாநகரில் அமைந்திருந்தது தனராஜனின் இல்லம். காலை நேர பரபரப்பில் அனைவரும் மூழ்கியிருக்க, சுபிக்ஷா மட்டும், வீட்டின் நடுவே வைக்கப்பட்டிருந்த பித்தளை உருளியில் (flower pot) புதிய நீரை மாற்றி, அதில் ஒரு சொட்டு மஞ்சளும், ஒரு சொட்டு குங்குமமும் கலந்தவள், தான் பறித்து வந்த மலர்களை நீரின் மேல் அழகாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அந்த பூக்களோடு மரிக்கொழுந்தையும் சேர்க்கக் கூடம் மணமணத்தது.
“சுபிக்ஷா…” என்ற அழைப்போடு எதிர்ப்பட்டது அவளின் அன்னை பிரேமா.
“காலையிலேயே தொடங்கிட்டியா? இந்தா இந்த பூவை தலையிலே வெச்சுக்கோ” எனச் செல்லமாக சலித்தபடி மல்லிகைச்சரத்தை அவளது கூந்தலில் சூட்டினார்.
மகள் வீட்டை அழகு செய்வது, வீட்டில் நேர்மறை எண்ணங்களும், மகிழ்வான சூழலும் நிறைந்திருக்கப் பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் அக்கறை எடுத்துச் செய்வதெல்லாம் அந்த அன்னைக்கு மகிழ்ச்சி தான் என்றபோதிலும், உணவு நேரம் கூட மறந்து செய்து கொண்டிருப்பது அந்த அன்னையின் கோபத்தைத் தூண்டிவிடும்.
“அம்மா கண்ணுக்கும், மனசுக்கும் குளிர்ச்சி மா. பாருங்க எவ்வளவு அழகா இருக்கு” என்று சொல்லி மென்மையாகச் சிரித்த மகளை முறைத்தவர், “சாப்பிட மட்டும் வந்திடாத… நேரத்துக்கு சாப்பிட்டா தான் வயிறுக்கும் குளிர்ச்சி. புரியுதா?” என்று அதட்டி விட்டுச் செல்ல, மேற்கொண்டு நேரம் கடத்தாமல் உணவு மேடைக்கு விரைந்திருந்தாள்.
அரக்க பறக்க சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்புவது அன்னைக்குப் பிடிக்காத விஷயங்களில் ஒன்று. அன்னையின் கோபத்தைத் தூண்டாதிருப்பது வரை தனக்கு நல்லது என்பது புரிந்து சுபிக்ஷாவும் சாமர்த்தியமாக நடந்து கொள்வாள்.
சுபிக்ஷா, தஞ்சையில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் இன்டீரியர் டிசைனராக வேலை செய்கிறாள். மிகவும் விரும்பி படித்த படிப்பு. மிகவும் விரும்பி செய்யும் வேலை என அந்த விஷயத்தில் அவள் பாக்கியசாலியே! இன்னும் இருபது நிமிடங்களில் அவள் அலுவலகத்திற்குக் கிளம்பியாக வேண்டும்.
உணவு மேடையிலிருந்த இட்லிகளை அவள் உண்ணத் தொடங்கும்போதே அவளின் தந்தை தனராஜனும், அண்ணன் வருணும் உணவுண்ண வந்திருந்தனர். இருவருக்கும் வரவேற்பு புன்னகையையும், குட் மார்னிங் வாழ்த்தையும் உதிர்த்தவள் மீண்டும் உணவில் கவனம் திருப்ப முயன்றாள். ஏனோ அவளால் தன் கவனத்தைத் திருப்ப முடியவில்லை!
அண்ணன் வருணையே கவனித்தபடி உணவை அளந்து கொண்டிருந்தவளின் தலையில் கொட்டு விழுந்தது. “ஸ்ஸ்ஸ் அம்மா…” என நிமிர்ந்தவள், தன் அன்னையை முறைக்கவும், அவரும் பதிலுக்கு முறைத்தார்.
சுபிக்ஷா முறைத்ததற்கும் ஒரு கொட்டு வைத்து, “பராக்கு பார்க்காம சாப்பிடு… என்னை எதுக்கு முறைக்கிற?” என்றார் பிரேமா அதட்டலாக.
தலையை தேய்த்துக் கொண்டே உணவில் கவனமானவளைப் பார்த்து, “அம்மாவுக்கும், பொண்ணுக்கும் சண்டையே ஓயாது இந்த வீட்டுல” என தனராஜன் பரிகசித்துச் சிரிக்க, பெயரளவில் சிரித்த வருண் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். தங்கை தன்னை கவனிப்பதை அவன் அறிந்தே இருந்தான். ஆனால், அவள் கேள்விகள், கோரிக்கைகளுக்கான பதில் அவனிடம் தற்போது இல்லை. ஏன் சாதகமாகப் பதில் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையும் அவனிடம் சுத்தமாக இல்லை.
“போங்க பா. அதை அம்மாகிட்ட சொல்லுங்க… என்கிட்ட சண்டை போடாம இருக்கட்டும். நான் எல்லாம் சமத்து” என்றாள் சுபிக்ஷா ரோசத்துடன்.
“அதை நாங்க சொல்லணும்” என்றபடி பிரேமா வரவும், உடனே பேச்சிலிருந்து ஜகா வாங்கியவள், உணவில் கவனமானாள். மீண்டும் யார் கொட்டு வாங்குவது?
அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் அவரவர் அலுவலுக்குப் புறப்பட, தந்தை கிளம்பியதும் பின்தங்கிய வருண், இளையவளிடம், “அண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் விசாரிக்க, யோசிக்க எல்லாம் டைம் வேணும்டா” என்றான் தயக்கமாக. அவளின் காத்திருப்பும், எதிர்பார்ப்பும் புரியவும் அவளிடம் விளக்கம் சொல்லத் தோன்றியது போலும்!
“அச்சோ! அவசரம் எல்லாம் எதுவும் இல்லைண்ணா. நீங்க எப்ப முடிவை சொல்ல போறீங்கன்னு கொஞ்சம் ஆர்வம் மட்டும் அவ்வளவு தான்… நீங்க நிதானமா யோசிச்சு அப்பறமா உங்க முடிவை சொல்லுங்கண்ணா. வீட்டுல கூட நீங்க தான் பேசணும்” என்றாள் அன்பு வற்புறுத்தலாய்.
வருணிற்குப் பிரச்சனையே அதுதான்! தங்கை சொன்ன விஷயத்தை இன்னும் அவனாலேயே அங்கீகரிக்க முடியவில்லை. அதுவே நூறு சதவீதம் உறுதி என்று சொல்வதற்கில்லை. அப்படி இருக்கும்போது சுபிக்ஷா சற்று அதிகப்படியாக ஆசையும், எதிர்பார்ப்பும் வைத்திருக்கிறாளோ என்னும் அச்சம் எழுந்தது.
மனதில் சூழ்ந்த அச்சத்தோடே, “அதுக்கு முதல்ல என் முடிவு உறுதி ஆகணும் சுபி” என்றான் வருண் சற்று அழுத்தத்துடனும், கண்டிப்புடனும். அதுவே சுபிக்ஷாவின் முகத்தை வெகுவாக சுண்டச் செய்திருந்தது.
வாடியவளின் முகத்தைப் பார்த்து, “அண்ணன் உனக்கு நல்லதுன்னு தோணினா தானேம்மா ஒத்துக்க முடியும்” என்றான் தன் கடமையை விளக்கி.
“எனக்கு நவனீதனை ரொம்ப பிடிச்சிருக்குண்ணா” என்று சுபிக்ஷாவும் அண்ணனிடம் வலியுறுத்திக் கூறினாள். அவள் குரலில் பிடிவாதமும், அழுத்தமும் நிறைந்திருந்தது. அது நவனீதன் என்ற மனிதனை தன் வாழ்வில் இழக்கக்கூடாது என்னும் ஆசையால் வந்திருந்தது.
பிடிவாதத்திற்கு வளைந்து கொடுக்கும் சமயமோ, விஷயமோ இதுவல்லவே! “உன் விருப்பம் மட்டும் பார்க்கும் நிலையில் நான் இல்லைம்மா. உனக்கு எது நல்லதுன்னு பார்க்கும் கடமையும் எனக்கு நிறைய இருக்கு. பிளீஸ் கொஞ்சம் டைம் கொடு” என்று தானும் பதிலுக்கு அழுத்தம் திருத்தமாகச் சொன்னவன் அவளிடம் விடைபெற்று அலுவலகம் கிளம்பினான்.
சுபிக்ஷா யோசனையோடு நின்று விட்டாள். அண்ணனிடம் சம்மதம் வாங்குவது எளிதாக இருக்கும் என்றுதான் அவனிடமிருந்து தொடங்கினாள். இப்பொழுது அவனே காலம் தாழ்த்துவதோடு, நம்பிக்கையின்றி பேசவும் மனதில் மெல்லிய அச்சம் படர்ந்தது அவளுக்கு.
சோர்ந்த தோற்றத்தோடு உள்ளே வந்தவளை, “அண்ணன் என்ன சொல்லிட்டு போறான்?” என்று எதிர்கொண்டார் பிரேமா.
“ஒன்னும் இல்லைம்மா… சும்மா தான்…” என்று சொன்ன மகளின் முகம் வாடியிருப்பதை அன்னை கண்டுகொண்டாள்.
மகளின் தாடையைப் பாசமாகத் தடவி, “ஒன்னும் பிரச்சனையில்லையே…” என்று ஆதுர்யமாக கேட்கவும், கலங்கத் தொடங்கிய விழிகளைச் சிரமப்பட்டு கட்டுப்படுத்தியவள், “அதெல்லாம் எதுவுமில்லைம்மா…” என கண்சிமிட்டிச் சொல்லிவிட்டு, “சரிம்மா ஆபிஸ் போயிட்டு வந்திடறேன். நேரமாயிடுச்சு” என சொல்லிக் கிளம்பியிருந்தாள். என்னவோ சரியில்லை என்று அன்னையின் மனம் உறுதியாக நம்பியது.
ஆனால், இருவருமே அழுத்தக்காரர்கள். என்ன துருவிக் கேட்டாலும் விஷயத்தைக் கறக்க முடியாது. மெல்லிய பெருமூச்சோடு பிரேமா தன் வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டார்.
சுபிக்ஷாவிற்கு மனம் கலக்கமாகவே இருந்தது. இதில் அண்ணன் இந்தளவு யோசிக்க என்ன இருக்கிறது? எனப் புரியாமல் வெகுவாக குழம்பினாள்.
நவனீதன் அவள் அறிந்த வரையிலும், மிகவும் நல்ல பழக்க வழக்கங்களை உடையவன். தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவன். அனாவசியமாக ஒரு வார்த்தை பேசி கூட அவள் பார்த்ததில்லை. அவளிடம் மட்டுமில்லை. மற்றவர்களிடமும் தான்! கெட்ட பழக்கங்கள் கொண்டவன் போலும் தெரியவில்லை. மிக மிகக் கண்ணியமானவனும் கூட… இன்னும் அண்ணன் மறுக்க என்ன காரணம் இருக்கிறது? புரியவேயில்லை அவளுக்கு!
நவனீதனின் அறிமுகமே அவளுக்கு அவனின் ஓவியங்கள் மூலம் தான். அவள் டிசைன் செய்யும் வீடுகள், ஹோட்டல்கள், அலுவலகங்களில் எல்லாம் அறைக்குத் தகுந்த வண்ணம் கொடுப்பது எப்படி அவளுக்கு முக்கியமோ, அதற்கு இணையான முக்கியமானது கஸ்டமர்களின் ரசனைக்கேற்ப, அந்தந்த அறைகளுக்குப் பொருத்தமான ஓவியங்களும்.
ஆரம்பத்தில் ஓவியங்களுக்காக வெகுவாக அழைத்துத் திரிந்து, அதிக மெனக்கெட்டு, நேரம் செலவழித்து வந்தவளின் பார்வையில் ஒரு ஓவியக் கண்காட்சியில் விழுந்தது தான் நவனீதனின் ஓவியங்கள்.
அவளும் ஓவியங்களின் ரசிகை தான். பலதரப்பட்ட ஓவியங்களை ரசித்திருக்கிறாள். ஆனால், அவனின் ஓவியங்களைப் பார்த்து வெகுவாக பிரமித்துப் போனாள். ஓவியங்களின் நேர்த்தியும், அழகும் அவளை அத்தனை மயக்கியிருந்தது.
எப்பொழுதுமே கஸ்டமர்களின் விருப்பத்திற்கேற்ப ஓவியங்களைத் தேர்ந்தெடுப்பவள் என்பதால், மறுநாள் தன் ஹோட்டல் பிராஜெக்ட் தொடர்பான ஆட்களுடன் வந்து அந்த கண்காட்சியிலிருந்த ஓவியங்களை அவர்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்தாள்.
அவர்களுக்கும் நவனீதனின் ஓவியங்கள் பயங்கர திருப்தி. விலை சற்று கூட அமைந்ததைப் பற்றிக் கூட அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இரண்டு நாட்கள் தொடர்ந்து வந்தும் நவனீதனை அவளால் பார்க்க முடியாமல் போயிருக்க, விழா ஒருங்கிணைப்பாளரிடமே நேரடியாகச் சென்று கேட்டுப் பார்த்தாள்.
இங்கு இரண்டு நாட்கள் கண்காட்சிக்கு ஏற்பாடாகியிருந்தது. அவருக்குப் பதிலாக அவருடைய மேனேஜர் கவனித்துக் கொள்வார் என்ற தகவலை மட்டும் அவர் சொல்லவும், இவள் அடுத்து நேரடியாக அந்த மேனேஜரிடம் சென்று நின்றாள்.
தன் தொழில் தேவையைச் சொல்லி, அதற்குத் தகுந்தாற்போல் வரைந்து கொடுக்க முடியுமா என்று மேனேஜர் வினோதனிடம் விசாரிக்க, நவநீதனிடம் கலந்தாலோசித்து விட்டு சொல்வதாகப் பதில் சொன்னான் அவன்.
மறவாமல் சொல்லுங்கள் என்று சொல்லி தனது விசிட்டிங் கார்டை கொடுத்தவள், “உங்க சாரோட கான்டேக்ட் நம்பர் கிடைக்குமா?” என்று கேட்க, “அவர் சொல்லாம ஷேர் பண்ண முடியாது மேம்” என்று சொல்லி மறுத்து விட்டான்.
அப்பொழுதும் விடாமல், “அப்ப அவர்கிட்ட கேளுங்க சார்” என்று இவள் நிற்க, “மேடம்… இங்கே நான் மட்டும் தான் கவனிச்சிட்டு இருக்கேன்… என்னால மத்த விஷயத்துக்கு நேரம் செலவு பண்ண முடியாது. பிளீஸ்…” என்று இன்முகத்தோடு துரத்திவிட, மேற்கொண்டு அவளால் வற்புறுத்த முடியவில்லை.
“மறக்காமா என் கார்ட் தந்திட்டு என்னோட கோரிக்கையையும் சொல்லிடுங்க சார்” என்று சொல்லிவிட்டு வந்தவளுக்கு, அந்த மேனேஜர் செய்த ஆர்ப்பாட்டத்தில், பேசிய விதத்தில் நவனீதனிடமிருந்து அழைப்பு வரும் என்ற எண்ணமே துளிகூட இல்லை.
ஆனால், நல்ல வேளையாக இரு தினங்களில் அந்த மேனேஜரிடமிருந்து நல்ல செய்தியோடு அழைப்பு வந்து சேர்ந்தது.
“சார், நிஜமாவா சொல்லறீங்க?” ஆச்சரியத்தில் விழி விரிந்து உச்சந்தலையைத் தொடும் உணர்வு அவளுக்கு.
“ஆமாம் மேம். சார் சரின்னு சொல்லிட்டாங்க”
“ரொம்ப ரொம்ப சந்தோசம். தேங்க்ஸ் எ லாட் வினோதன் சார்”
“சாருக்கு முக்கியமான கமிட்மென்ட் இருக்கு. இந்த வாரம் முழுக்க பிஸி. அடுத்த வாரம் ஒரு மீட்டிங் அரேஞ் செய்ய சொன்னாரு”
“கண்டிப்பா… கண்டிப்பா… மண்டே ஓகேவா இருக்குமா? மார்னிங் ஆபிஸ் வந்திட சொல்லறீங்களா?”
“சரி மேம். இன்பார்ம் பண்ணிடறேன்” என்று சொன்ன வினோதன், திரும்பவும் அழைத்து “காலையில பதினோரு மணிக்கு கன்பார்ம் பண்ணிக்கலாம் மேம். சார் ஓகே சொல்லிட்டாரு” என்ற தகவலையும் தந்திருந்தான்.
வார்த்தைகளால் விவரிக்கவே முடியாத படபடப்பும், எதிர்பார்ப்பும் சுபிக்ஷாவிடம். ஏன் இத்தனை தூரம் எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை. எப்போதடா திங்கட்கிழமை வரும் என்று எதிர்பார்த்தது போய், திங்கட்கிழமை வந்ததும் அத்தனை பதற்றம், தடுமாற்றம்!
சிறு வேலையில் கூட அத்தனை பிசகினாள். அவளுக்கே சிரிப்பு வந்துவிட்டது. இது சரியே இல்லை என தன்னைத்தானே கடிந்து கொண்டு பதினோரு மணியை வெகுவாக எதிர்பார்த்தாள். கடிகார முள் நகர மறுப்பதாய் தோன்றியது அவளுக்கு!
ஒருவழியாக பதினோரு மணிக்கு நவனீதன், வினோதனோடு வந்துசேர, தன் அதிகப்படி ஆர்வத்தை மூட்டை கட்டி வைப்பதற்குள் மூச்சு முட்டிப் போனது பெண்ணவளுக்கு!
வந்தவனோ ஒரு வார்த்தை பேசவும் கணக்கு பார்க்கும் ரகம்! இதென்ன இப்படியொரு அமைதி பிடிபடவே இல்லை அவளுக்கு. அது அலட்சியமா… சாந்தமா… எனப் புரியாமல் குழம்பியது அவளது மனம்.
— தொடரும்…
Nice