Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18

அத்தியாயம் – 18

 

வினாஷ் விமானப்பயணத்தின் முடிவில் டோக்கியோவில் இறங்கியபோது மிகுந்த களைப்புடன் காணப்பட்டான். அவனுக்கு ஓயாத வேலைகள். அவனது வேலைகளைப் பார்ப்பதுடன் சேர்த்து அபிராமின் தொழிலையும் கவனிக்க வேண்டும். இது அதிக சுமைதான். ஆனால் சுமையைத் தாங்கும் வயதுதானே இது. 

 

அவினாஷ், அம்மா மந்தாகினியின்  பின்னாலேயே சுற்றிக் கொண்டு அவரது வார்த்தைகள் மூலமே உலகை இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் அபிராமிற்கு நேர் எதிர் குணாதிசயம் கொண்டவன். 

 

அபிராமிற்கு பணம் பஞ்சமே இல்லை. அன்னையின் அருகாமையும் அன்பும் தாராளமாகக் கிடைத்தது. தந்தையின் அன்பும் கூட, அது குறைந்தது அல்லது அபிராம் குறைத்துக் கொண்டது அவர் மேல் ஏற்பட்ட கோபத்தினால் மட்டுமே. இன்னமும் வீரபாகு ஒரு நாயைப் போல அவன் அன்புக்கு ஏங்கி கொண்டுதான் இருக்கிறார். இவன்தான் அவரை சந்திக்கவே மறுக்கிறான். 

 

அவினாஷுக்கோ எல்லாம் ரேஷன் முறையில்தான். பாகமங்கலம், நாகமங்கலம் குடும்பத்தினர் அனைவரும் உறவினர்கள் என்றாலும் அவனது தாய் குறிப்பிட்ட வயதில் தனது தனித்தன்மையை நிரூபிக்க விரும்பினார். அவரது கல்வித்தாகம் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு என்று விரிவடையச் செய்தது. இப்போது மும்பையில் ஒரு பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியராய் பணி புரிகிறார். 

 

பாகமங்கலம் நாகமங்கலம் பெண்கள் பலருக்கு இதெல்லாம் வியப்பாகவே இருக்கும். பொம்பளை எப்படி வீட்டுக்காரரை விட அதிகம் படிக்கலாம்? வேலைக்குப் போகணும்னு அவசியமா என்ன? இந்த வேலையை ஒரு ஆண்மகனுக்குத் தந்தா ஒரு குடும்பமே சாப்பிடும். ஒரு வேலை வாய்ப்பைத் தட்டிப் பறிச்சுட்டா… என்றெல்லாம் அவர்கள் நாக்கு நீளும். அதனாலேயே உறவினர்களைச் சந்திக்க அவர் ஊருக்கு வருவதே இல்லை. 

 

ஆனால் இவனுக்கோ அந்த ஜமீனின் குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறது. “இந்த பாரு அவி. இதை சரி படுத்த வேண்டிய பொறுப்பு உன்னுது. நீ பாட்டுக்கு நட்டாத்தில் விட்டுடாதே… “ என்று ஆதவனும் கேட்டிருந்ததால் முக்கியமாக அவனது தாத்தாவும் கேட்டிருந்ததால் அவனால் அதனை மீற முடிந்ததில்லை. 

 

அவன் அன்னை மங்கையர்க்கரசி மட்டும் அவனிடம் “அவி, அந்தக் குடும்பத்தில் இருந்தாலும் நீ அவங்க சொகுசுக்குப் பழகிடாதே. நம்ம குடும்பம் மும்பையில் இரண்டு படுக்கை அறையில் வசிக்கும் ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் என்பதை உன் மனசில் இருந்து அழிக்கவே கூடாது” என்று அழுத்திச் சொல்லி இருந்தார். எப்படி முடியும்? அவனது சிறுவயதில் மிகச் சிறு வீடுகளில் இருந்திருக்கின்றனர். பாத்ரூமிலிருந்து எட்டிப் பார்க்கும் கரப்பான் பூச்சிகளைக் கண்டாலே பயம் அவனுக்கு. வேகமாக வேலையை முடித்துவிட்டு ஓடி வந்துவிடுவான். 

 

அதன்பின் தாத்தாவின் வற்புறுத்தலால் அவினாஷ் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தது பாகமங்கலம் குடும்பத்தினரின் ரெசிடென்ஷியல் பள்ளியில்தான். அவினாஷ் வீட்டினைப் பொறுத்தவரை குடும்பத்தினர் தாய்,தந்தை, மகன், தாத்தா நான்கு  பேரும் நான்கு திசையில் பயணிப்பவர்கள். ஏதாவது நாள் கிழமையில், விடுமுறையில்  சந்தித்துக் கொள்வார்கள். ஆனால் தூரம் அவர்களது அன்பைக் குறைக்கவில்லை. அடிக்கடி டெலிபோனில் உரையாடி தகவல்களைப் பரிமாறிக் கொள்வார்கள். 

 

எப்பொழுதும் வேலை வேலை என்று ராட்சச உழைப்போடு இருக்கும் தாய் தந்தையர் தர முடியாத நேரத்தை அந்த இடைவெளியை ஈடு செய்தவர் அவினாஷின் தாத்தா. அவரைப் போன்ற கள்ளம் கபடம் இல்லாத மனிதரைப் பார்ப்பது அபூர்வம். அவர் மண்ணுலகை விட்டு மறைந்த போது மிகவும் மன வேதனையுடன் இருந்தான். 

 

“அவினாஷ் கண்ணா  தாத்தா வேறெங்கேயும் போகல… அந்த வானத்தில் பறந்து போயி சாமிகிட்ட உக்காந்து நட்சத்திரமா ஜொலிக்கிறார்”

 

“போங்கம்மா… தினமும் எத்தனை பேரு செத்துப்போறாங்க. அவங்க எல்லாரும் மறுபடியும் பிறப்பாங்கன்னு சொல்றாங்களேம்மா?”

 

“சாமி நம்ம செஞ்ச நன்மை தீமை எல்லாத்தையும் பார்த்துட்டு ரெண்டு கேள்வி கேட்பார். நீ வாழ்ந்த வாழ்க்கைல நீ சந்தோஷமா இருந்தியா? ரெண்டாவது கேள்வி நீ மத்தவங்களை புண்படுத்தாத வாழ்க்கையை வாழ்ந்தியா? இந்த ரெண்டு கேள்விக்கும் ஆமாம்னு சொல்ல முடியுற அளவுக்கு வாழ்க்கை வாழ்ந்தவங்கதான் நட்சத்திரமா ஜொலிக்க  முடியும். முடியாதவங்க ஆமாம்னு சொல்ற வரை மறுபடியும் மறுபடியும் பிறப்பாங்க”

 

ஆசிரியராய் நல்லொழுக்கத்தை போதிக்கும் அவனது தாயார் அவனிடம் சொன்ன இந்தத் தகவல் அவன் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. தன்னைச் சேர்ந்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அவனது வாழ்க்கையின் குறிக்கோள், லட்சியம் எல்லாம். அதனாலேயே அபிராம் எத்தனை முறை தூற்றினாலும் வெட்கம் மானம் பார்க்காமல் ஓடி ஓடிச்  சென்று அவனுக்கு உதவுகிறான். 

 

அவினாஷ் டோக்கியோவில் ஜன சந்தடி மிகுந்த அந்த ரயில் நிலையத்தில் இறங்கியதும் முதலில் மிகுந்த களைப்பாக உணர்ந்தான். அவன் தங்க வேண்டிய கேப்ஸியூல் ஹோட்டல் அருகிலேயே இருந்தது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. 

 

பொதுவான கழிவறை, குளியலறை ரிசப்ஷன் இது தவிர உணவறை, இலவச உணவு, பொது நூலகம், பொதுத் தொலைகாட்சி, பார் ஒன்று என்று சகல வசதிகளுக்கும் குறைவில்லாமல் இருக்கும். கட்டணத்தைப் பொறுத்து வசதிகளும் சேவைகளும் அதிகமாகக் கிடைக்கும். சிலவற்றில் ஆபிஸ் மீட்டிங் ஹால் கூட உண்டு. நமக்குக் கடினமாகத் தோன்றுவது படுக்கை வசதிதான்.  நாம் ரயிலில் உறங்கும் பெர்த்தை  விட சற்று பெரிதான செவ்வக அலமாரி போன்ற ஒன்று. அந்தக் கூண்டுதான் படுக்கை. அதில் லைட், ஏசி போன்ற வசதிகளும் உண்டு. 

 

ஜப்பானில் இருக்கும் இடப்பஞ்சம் மற்றும் இட நெருக்கடி காரணமாக இத்தகைய கப்சியூல் எனப்படும் சின்னஞ்சிறு விடுதிகள் அதிகம். இது சற்று விலை அதிகமான லக்சுரி விடுதி. 

 

“அவினாஷ், எல்லாம் சரிதான் ஆனால் இதென்ன பெட்டில படுக்குற மாதிரி மூச்சு முட்டுதுடா. என் சொந்த சம்பாத்தியத்திலிருந்து தர்றேன். தயவு செய்து கஞ்சத்தனப்  படாம நல்ல ஹோட்டல்ல தங்குடா” என்று அவனது தந்தை சொல்லி அனுப்பி இருந்தார். 

 

இந்த முறை வேறு வழியில்லை இந்த விடுதிதான் அவன் சந்திக்க செல்லும் நபரின் அலுவலகத்திற்கு அருகில் இருக்கிறது. அதனால் இங்குதான் தங்க வேண்டும். 

 

ரிசெப்ஷனில் சென்று “அவினாஷ் நாகேந்திரன். போன வாரம்  இந்தியாவிலிருந்து புக் செய்தோம்”

 

“வெல்கம் சார். உங்களது படுக்கை நான்காம் தளத்தில் இருக்கிறது. இந்தாருங்கள் அதற்கான கீ. உங்களது உடமைகளை வைக்க வேண்டிய லாக்கர் ரூமின் சாவி இதோ”

 

லாக்கர் அறையில் சாவியைப் பெற்றுக் கொண்டு பெட்டியை அங்கு வைத்துவிட்டு, பதினைந்து நிமிடங்களில் குட்டிக் குளியல், இலகுவான உடையை அணிந்து கொண்டு, தனது அழுக்கு உடைகளை அங்கிருந்த லாண்ட்ரொமேட்டில் துவைக்கப் போட்டான். 

 

லௌஞ்சில் அமர்ந்தவுடன் அவனுக்கு தேநீர் வேண்டுமா என்று கேட்டுவிட்டு அவன் சம்மதித்தவுடன் சூடான மாச்சா க்ரீன் டீ தயாரிக்கத் தொடங்கினர். தண்ணீரை சரியாக எண்பது  டிகிரி சூடு படுத்தி, விலையுர்ந்த அந்த பச்சை நிற மாச்சா க்ரீன் டீ பொடியினை சல்லடையில் சலித்து, கப்பில் கொட்டி சரியாக ஒன்றரை நிமிடங்கள் கலக்கி நுரையுடன் அந்த பச்சை நிற பானத்தை  தேநீர் கோப்பையில் ஊற்றித் தந்தனர். 

 

நம் ஊர் சாய் போல பாலோ, சர்க்கரையோ இதில் சேர்ப்பதில்லை. சற்று கசப்பு சுவையுடன் பருக நன்றாகவே இருந்தது. அதனுடன் வாகாஷி என்ற அவர்களது இனிப்பையும் பரிமாறினர். தித்திப்பாகத்  திகட்டாமல் பாதி இனிப்புடன் இருந்த வாகாஷியும் மாட்சா க்ரீன் டீயும் அவனது களைப்பை விரட்டின.ஜப்பானியர்கள் தேநீர் தயாரிப்பதையும் அருந்துவதையும் கூட எவ்வளவு ரசித்து செய்கின்றனர் என்று வழக்கம் போல் வியந்தான். அதனால்தான் அவர்களால் அக்கறை இன்றி  ஏனோ தானோவென்று செய்யும் வேலைகளை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. 

 

அபிராமிற்கு சொந்தமான கிராம்புத் தோட்டங்கள் கன்யாகுமரியிலும் நாகர்கோவிலிலும் இருந்தன. உலகிலேயே முதல் தரமான கிராம்புகள் விளையும் மண். கிராம்பு என்பது மரத்தில் விளைவும் பூவின் மொக்கு. அத்தனை உயரத்தில் இருக்கும் அந்தப் பூ மொட்டுக்களைக் கவனமாகப் பறித்து உடைந்துவிடாமல் காயவைத்து அப்படியே தந்தால்தான் விலையும் அதிகம். 

 

காய வைக்கும்போது உடைந்துவிட்டால் விலை குறையும். அதனால் வருடத்தில் பிப்ரவரி மாதம் போல் தொடங்கும் அந்த வேலைக்கு நன்றாகத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களையே தேடி புக் செய்ய வேண்டும். அவர்கள் எஸ்டேட்டில் சில மாதங்கள் தங்கி சீசன் முடியும் வரை வேலை செய்துவிட்டு செல்வார்கள். 

 

தருமபுரி மாவட்டத்தில் கிராம்பு வேலைகளை செய்வதில் தேர்ச்சி பெற்ற குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் முன்கூட்டியே முன்பணம் கொடுத்து புக் செய்யவில்லை என்றால்  அம்பாநாடு, மூணாறு என்று மற்ற எஸ்டேட்டில் வேலை செய்யக் கிளம்பி விடுவார்கள். 

 

அபிராம் சற்று கவனக்குறைவாக இருந்ததால் அனுபவம் வாய்ந்த  தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. அவர்களாக இருந்தால் மரங்களில் ஏறி முதல் முறை பார்க்கும்போதே இன்னும் ஒரு வாரத்தில் வேலைகளை முடிக்க வேண்டும் அய்யா.  இல்லைன்னா பூவெல்லாம் உதிர்ந்திரும் என்று கணித்து சொல்லிவிடுவார்கள். அதனை இழந்துவிட்டார்கள். 

 

அவினாஷுக்குத் தகவல் தெரிந்து ஆட்களை ஏற்பாடு செய்து கிராம்புப் பூக்களைப் பறித்துத் தயார் செய்வதற்குள் கொடுத்த கெடு தாண்டிவிட்டது. அந்த சமயத்தில் அடித்த புயல்காற்றால் பூக்கள் உதிர்ந்து உற்பத்தியும் குறைந்து விட்டது. 

 

ஜப்பானியர்களுக்கு நேரம் முக்கியம். நேரம் தவறாமல் பிசினெஸ் நடக்க வேண்டும். அபிராம் செய்த குளறுபடியால் வழக்கமாக ஸ்பைசஸ் நேரடியாக வாங்கும் ஜப்பானிய மார்க்கெட்டில் போட்டி நிறுவனத்தில்  அவர்களது வியாபாரத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டார்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குள் அவினாஷ் சென்று மன்னிப்பு கேட்டு, தங்களது பழைய ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும். 

 

அலுவலக அறையின் சாவியைப் பெற்றுக் கொண்டு அங்கு சென்று அடுத்த நாள் மீட்டிங்கிற்கு தயாராக ஆரம்பித்தான். இப்பொழுதெல்லாம் வேலைப்பளு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அபிராம் அவனது தொழிலை அவனே கவனிக்கும் அளவுக்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றாலும் ஏதாவது ஒரு துறையிலாவது ஈடுபடுவது அவனுக்கும் நல்லது. அவனது நலத்தினை விரும்பும் இவனுக்கும் நல்லது.

 

அபிராமின்  குணாதிசயத்தில் மாற்றம் வந்திருக்கிறது என்று அங்கு நடப்பதை அவனுக்கு ரிப்போர்ட் செய்யும் பாலனும், சேச்சியும் சொல்லி இருக்கிறார்கள். அதற்குக் காரணம் செம்பருத்தியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? அவளை நினைத்த பொழுதே அவன் இதழ்களுக்குள் ஒரு சிறிய புன்னகை. அவளது கடின உழைப்பும், போர்க்குணமும் அபிராமிடமும் ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்று கணித்திருந்தான். அதனால்தான் அன்று செம்பருத்தியை செலெக்ட் செய்திருக்கிறோம் என்று சுகுமாரன் சொன்னபொழுது உடனே அவளை வேலையில் சேர்க்க எல்லா முயற்சியும் செய்தான். 

 

‘சைனா மாடல் செல்போன்தான் சார் என்கிட்டே இருக்கு. நீங்க வித்தா கூட ஒன்னும் காசு கிடைக்காது’. என்று அப்பாவியாய் அவள் சொன்னதை நினைவில் வைத்து  

“செம்பருத்திக்கு  லேட்டஸ்ட் மாடல் புது செல்போன் ஒண்ணு முதலில் தாங்க. நம்மால எப்ப வேணும்னாலும் தொடர்பு கொள்ள முடியணும்”. என்றான். 

 

அவள் சென்றதிலிருந்து அபிராமின் செயல்களில் ஓரளவு மாற்றம் தெரிகிறது. ஓவியாவையும் செம்பருத்தியையும் படிக்க வைக்கிறான். அவ்வப்போது பாடம் எல்லாம் சொல்லித் தருகிறானாம். இதெல்லாம் முன்னேற்றமே. இருந்தாலும் சமீப காலமாக அபிராமின் உடல்நிலை குறித்த தகவல்கள் அவனைக் கவலைப்பட வைத்தது. இந்தப் பின்னடைவுக்கு என்ன அல்லது யார் காரணமாக இருக்கும் என்று தெரியவில்லை. மருத்துவர்களிடம் டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறான். இந்த வேலை முடிந்ததும் கொச்சி சென்று அதனை கவனிக்க வேண்டும். 

 

றவே இல்லை உறக்கம்

அதற்கும் இல்லை இரக்கம்

இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல் 

இடையில் நின்றாயே இது நியாயமா?

 

பெட்டியைத் திறந்து துணிகளை அடுக்கி வைத்தவள் அதன் அடியில் பத்திரமாய் ஒளிந்திருந்த ப்ளூ நிற குர்த்தியைப் பார்த்து கேள்வி கேட்டாள். 

 

அவனைப் பற்றித் தானாகக் கேட்காவிட்டாலும் அவளது காதில் வந்து விழுந்த செய்திகள் அவினாஷ் இந்த வீட்டிற்கு எந்த அளவுக்கு இன்றியமையாதவன் என்று சொன்னது. அதில் ஒன்று அபியின் தற்கொலை முயற்சியின் போது அவினாஷ் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் காப்பாற்றியது. 

 

அபிராம் கால்கள் முறிந்து சற்று நடக்கலாம் என்ற நிலை வந்த பொழுது முதலில் செய்தது தற்கொலை முயற்சிதான்.  ஆப்பிள் வெட்டும் கத்தியை எடுத்து மணிக்கட்டை அறுத்துக் கொண்டான். அவினாஷ் கிராம்புத் தோட்டம் எஸ்ப்போர்ட் விஷயமாக அபிராமின் கையெழுத்து வேண்டும் என்று கேட்க, கையெழுத்தினைப் பெறச் சென்ற கோபன் ரத்தவெள்ளத்தில் மிதந்த அபிராமைப் பார்த்து கத்த, உடனடியாக பக்கத்தில் இருந்த க்ளினிக்கிலிருந்து டாக்டர் டீம் ஆம்புலன்ஸுடன் வந்தது. முதலுதவி தந்துக் கொண்டிருக்கும்போதே புயல் வேகத்தில் வந்த அவினாஷ் அபிராமைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தான். மருத்துவர்கள் குழு அவனது உயிரை எமனின் வாயிலிருந்து மீட்டது. 

 

அவினாஷின் சாகசங்களை மற்றவர்கள் வாயிலாகக் கேட்கக் கேட்க அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் செம்பருத்திக்கு அதிகரித்துக் கொண்டே சென்றது. 

 

எத்தனை நாளா உங்களைப் பார்க்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன் அவினாஷ். அவி, அவின்னு சொல்லியே ஆவியா போய்டுவேன் போலிருக்கு. மனதுக்குள் புலம்பியவளிடம். 

 

“அக்கா சூப்பரா இருக்கு இந்த குர்த்தி. இதையெல்லாம் விட்டுட்டு ஏன் இப்படி எல்லாப்பக்கமும் கீழ தொங்குற துணியைப் போர்த்திட்டு ஆவியாட்டம் சுத்துற” டைமிங்கான கேள்வியுடன் அந்த குர்த்தியை கையில் பிடிங்கிவிட்டு சொன்னாள் ஓவியா. 

 

“கொஞ்சம் சிறுசா இருக்கும். அதுதான் பிரிக்க முடியுமான்னு பாக்குறேன்”

 

“லார்ஜ் சைஸ் தானே? உனக்கு சரியா இருக்கும். உனக்கு பத்தலைன்னா எனக்குத் தந்துடு, நான் போட்டுக்குறேன். ஹப்பா! ட்ரெஸ் என்ன கலருப்பா… பரவால்ல உனக்கு நல்ல டேஸ்ட் “

 

‘என்னை சுத்தி இருக்கிறவளுங்க எல்லாருக்கும் இந்தக் குர்த்தி மேலவே கண்ணு. இதையே காப்பாத்தி வச்சுக்க முடியலைன்னா எப்படி’ மனதுக்குள் அலுத்தபடி 

 

“இல்ல, இல்ல எனக்கு சரியா இருக்கும். ஏதாவது பண்டிகை அன்னைக்குப் போட்டுக்குறேன்”

“இன்னைக்குத்தான் பண்டிகை. போட்டுக்கோ”

 

“நீ எல்லா பரிட்சைலயும் பாசானதையே எங்களைப் பண்டிகையா கொண்டாட சொல்றியா?”

 

“இல்லையா பின்ன? நான் பன்னெண்டாவது பாஸானதும் ஒரே வாணவேடிக்கை போட்டுட்டு, டான்ஸ் ஆடிட்டே போயி காலேஜுல சேரப் போறேன் பாரேன்”

 

“சரி அன்னைக்குப் போட்டுக்குறேன்”

 

“ஹே இன்னைக்கு நம்ம எடப்பள்ளி தேவாலயத்துக்குப் போறோம். ஆசியாவிலேயே பெரிய சர்ச். அங்க போயி சாமி கும்மிட்டுட்டு, சாப்பிட்டுட்டு சாய்ந்தரம்தான் வீட்டுக்கு வர்றோம்”

 

“என்னடி ஸ்பெஷல் இன்னைக்கு”

 

“டன்டடாய்ங்… சேச்சியோட பிறந்தநாள்”

 

“நிஜம்மாவா? சொல்லவே இல்லையே… ஏதாவது ப்ரசென்ட வாங்கிருக்கலாமே”

 

“ஆமாம்கா… இந்த சேச்சி சொல்லவே இல்லை. கொண்டாட மாட்டேன்னு ஒரே அடம்”

 

“நம்ம எதுக்கு இருக்கோம் கொண்டாடிடலாம்” என்று சொன்ன பொழுதே அவளது வகுப்பில் ஒருத்தி 

 

“ஹே செம்பருத்தி, உங்க வீட்டில் இருக்கும் குக் அந்த லீலாம்மா உங்க பெரிய ராஜாவோட கீப்பாமே. அது நிஜம்தானா?” என்று கேட்டது மின்னி மறைந்தது. 

1 thought on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40

அத்தியாயம் – 40 மடத்தில் அமர்ந்து கிறுக்குசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் நாகேந்திரனும் மங்கையும்.  “குழந்தை உன் பேரு என்னடாப்பா?” “அவினாஷ்” “எங்கப்பன் மலையாண்டியோட அப்பன் சடையாண்டி பேரை வச்சிருக்கியா நீ?” என்று சிரித்தார்.  மனம் அமைதியைத் தேடும்போதெல்லாம் ஆண்டியப்பனின் கோபம்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 8தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 8

அத்தியாயம் – 8    ஜாம்நகர் ட்ரெயின் சற்று பழசாகத்தான் இருந்தது. ஜன்னல் கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து, கழிவறைக் கதவுகள் கூட அப்படித்தான். முதல் வகுப்பு என்பதால் சற்று சுத்தமாக இருந்தது. இதுவே மற்ற வகுப்புக்களுக்கும் இருக்குமா என்பது சந்தேகம்தான்.   

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 7தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 7

அத்தியாயம் – 7    எர்ணாகுளம் செல்ல முதல் வகுப்பில் ட்ரெயின் டிக்கெட் எடுத்து தந்திருந்தார்கள். பயணத்திட்டம் ஒன்றும் அப்படி சோர்வு தரும் விஷயமாகத் தோன்றவில்லை செம்பருத்திக்கு.    திருநெல்வேலியிலிருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு செல்லும் தொடர்வண்டியில் காலை 8 மணிக்குக் கிளம்பினால்